திங்கள், 16 ஜூலை, 2018

ராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கரிலிருந்து உதய்பூர் – மதிய உணவு - சேவ் டமாட்டர் – ஒரு குழப்பம்



ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 6

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


ராஜஸ்தான் என்றதும் நினைவுக்கு வரும் தலைப்பாகை....
புஷ்கரிலிருந்து உதய்பூருக்கு...



பயணித்த போது பார்த்த ஒரு இடம் - 
ஜெயின் வழிபாட்டுத் தலமாக இருக்கலாம்!

புஷ்கரிலிருந்து உதய்பூருக்கு...
 

புஷ்கர் நகரில் பிரஹ்ம சரோவர், பிரஹ்மா கோவில், ரத்னகிரி மலையுச்சியில் அமைந்திருக்கும் சாவித்ரி கோவில் ஆகிய இடங்களைக் கண்ட பிறகு எங்கள் பயணம் உதய்பூர் நோக்கித் தொடர்ந்தது. அஜ்மேர் மாவட்டத்திலிருக்கும் புஷ்கர் நகரிலிருந்து உதய்பூர் கிட்டத்தட்ட 300 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. சுமார் ஐந்து மணி நேரம் பயணிக்க வேண்டியிருக்கும். முதல் நாள் இரவு தில்லியிலிருந்து புறப்பட்ட நாங்கள் காலை நேரத்தில் எதுவும் சாப்பிடவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். புஷ்கரிலிருந்து புறப்பட்ட போதே மதிய உணவு உட்கொள்ளலாம் என்றால் சரியான உணவகம் கிடைக்கவில்லை. அதனால் நெடுஞ்சாலையில் சென்று பார்த்துக் கொள்ளலாம் என தொடர்ந்து பயணித்தோம்.


நெடுஞ்சாலைக் காட்சி ஒன்று.....

புஷ்கரிலிருந்து உதய்பூருக்கு...


ஃபோட்டோ தானே புடிச்சுக்கோ புடிச்சுக்கோ...
கண்டுகொள்ளாமல் அமர்ந்திருந்த பைரவர்..
புஷ்கரிலிருந்து உதய்பூருக்கு...



கண்களைக் கவர்ந்த கருப்பு வண்ணப் பானைகள்....
புஷ்கரிலிருந்து உதய்பூருக்கு...

 

அஜ்மேர் உள்ளே செல்லாமல் புறவழிச் சாலையில் பயணித்த போது அஜ்மேர் தாண்டிய பிறகு, ஒரு உணவகம் தென்பட வண்டியை நிறுத்தி, உணவு இருக்கிறதா எனக் கேட்க, அந்த ஊழியர் மேலே சென்று வேறு ஒருவரைக் கேட்ட பிறகு உணவு இல்லை என்றார். அங்கே இருந்த கருப்பு நிற மண் பானைகள் மனதைக் கவர, அவற்றை படம் பிடித்துக் கொண்டேன். கூடவே ஒரு பைரவர் ஹாயாக அமர்ந்திருக்க அவரையும் படம் பிடித்தேன். ஃபோட்டோ தானே, புடிச்சிக்கோ என்று அவர் கண்டும்காணாது அமர்ந்திருந்தார். மேலும் பயணித்து, Rupali Midway Restaurant என்ற உணவகத்தின் பதாகை பார்த்த போது வண்டியை அங்கேயே நிறுத்தச் சொன்னோம்.  அங்கே எங்களுக்கான உணவு கிடைக்கும் என்று தோன்றியது.


உணவகத்திலிருந்து பெரிய பூஜாடியும், அதிலிருந்த ஓவியமும்...

புஷ்கரிலிருந்து உதய்பூருக்கு...
 

என்ன இருக்கிறது எனக் கேட்க, வரிசையாக பட்டியலைச் சொன்னார். தவா ரொட்டி இருக்கிறதா எனக் கேட்க அதுவும் இருக்கிறதாகச் சொல்லவே உணவு அங்கேயே உண்ண முடிவு செய்தோம். பொதுவாக தந்தூரி ரொட்டி தடிமனாக இருப்பதால் பலருக்கும் பிடிப்பதில்லை. தவா ரொட்டி எனும் இரும்புத் தவாவில் செய்யும் ரொட்டி தான் பிடிக்கிறது. கடாய் பனீர், Bபிண்டி ஃப்ரை, தால் தdட்கா, தவா ரொட்டி மற்றும் இன்னும் ஒரு சப்ஜி – அவர் சொன்னது எங்களுக்கு சேம் டமாட்டர் எனக் கேட்டது! சேம் என்றால் அவரை – அவரைக்காயும் தக்காளியும் சேர்த்து செய்யும் நம் ஊர் பொரியல் போல செய்வார் போலும் என்று நினைத்தோம் – உணவகத்தின் பின்னாலேயே தோட்டம் இருக்கிறது – அங்கேயிருந்து தான் காய்கள் பறித்துக் கொள்வோம் என்று உணவகத்தின் உரிமையாளர் சொல்ல, ஆஹா அப்போது பறித்த காய்கறியில் சமைக்கப் போகிறார்கள் என ஆர்வத்துடன் காத்திருந்தோம்.


மோdடா வாங்கிட்டுப் போங்களேன்....

புஷ்கரிலிருந்து உதய்பூருக்கு...
 

மற்ற உணவகங்கள் போல அல்லாமல், அப்போதைக்கு அப்போது உணவு தயாரிக்கிறார்கள் – தேவையான பொருட்கள் தயாராக இருக்க, புதியதாக தயாரிக்கிறார்கள். அரிந்து வைத்திருந்த வெண்டைக்காயை [Bபிண்டி] பொரித்து தயாரிப்பதைப் பார்க்க முடிந்தது. சரி உணவு தயார் ஆவதற்குள் கொஞ்சம் தோட்டம் பக்கம் பார்த்து வருவோம் என குழுவினரில் சிலர் வெளியே சென்றோம். தோட்டத்தில் அவரை இருக்கிறதா எனத் தேடினால் தெரியவில்லை. சரி உள்புறம் இருக்குமாக இருக்கும் என்று வேடிக்கைப் பார்ப்பதைத் தொடர்ந்தோம். மோடா என அழைக்கப்படும் இருக்கைகளை விற்பனைக்கு வைத்திருந்தார்கள். வண்டிகளுக்கு திருஷ்டிக் கயிறு கட்டும் பழக்கம் ராஜஸ்தானிலும் உண்டு. உணவகத்தின் அருகில் நிறைய திருஷ்டிக்கயிறு விற்பனைக்கு வைத்திருந்தார்கள்.


கருமமே கண்ணாயினார்....  
தவா ரொட்டி தயாரிக்க ரெடியாகும் உணவகச் சிப்பந்தி....

புஷ்கரிலிருந்து உதய்பூருக்கு...
 

காட்சிகளைப் பார்த்து சில பல படங்கள் எடுத்த பிறகு உணவகத்திற்குள் நாங்கள் செல்வதற்கும் எங்களுக்கான உணவு தயாராகி வருவதற்கும் சரியாக இருந்தது. இருக்கைகளில் அமர்ந்து கொள்ள உணவகத்தின் உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் வேகவேகமாக எங்களுக்கான உணவைக் கொண்டு வந்தார்கள். தவா ரொட்டி சுடச் சுட வந்தது. கடாய் பனீர், dhதால், Bபிண்டி ஃப்ரை, சலாட், chசாச்ch என அழைக்கப்படும் மோர் என அனைத்தும் வந்தது. சேம் டமாட்டர் இன்னும் வரவில்லையே என யோசித்தபோது, வந்தது. ஆனால் நாங்கள் நினைத்த அவரைக்காய்-தக்காளி சேர்த்து செய்த சப்ஜி இல்லை! வந்த சப்ஜி – சேவ் டமாட்டர்! ராஜஸ்தானின் ஒரு பிரபல உணவு அது – சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள பயன்படுத்தப்படும் சப்ஜி!


சேவ் டமாட்டர்....
ராஜஸ்தானின் பாரம்பர்ய உணவில் ஒன்று....

புஷ்கரிலிருந்து உதய்பூருக்கு...
 

சேவ் என்றால் கடலை மாவில் செய்யப்படும் காரா சேவ் போன்ற ஒரு தின்பண்டத்தினை வதக்கிய தக்காளியுடன் சேர்த்து செய்யப்படும் சப்ஜி! ராஜஸ்தானில் பிரபல உணவு அது! மேலே இருப்பது தான் சேவ் டமாட்டர். எதையோ நினைத்தால் வந்தது வேறு ஒன்று! அதுவும் நன்றாகத் தான் இருந்தது என்றாலும் பார்க்கும் போது கொஞ்சம் அருவருப்பாக இருந்தது சிலருக்கு! நறுக்-மொறுக் என சிலவும், சில ஊறி சொதக்-சொதக் எனவும் இருப்பதால் சாப்பிட நிறைய பேருக்கு பிடிக்காது என்றும் சொல்லலாம். ஆனால் அவர்கள் ஊரில் இது பிரபலம்! உணவகத்தின் உரிமையாளர் வேறு, எங்கள் ஊர் பிரபல உணவான சேவ் டமாட்டர் எப்படி இருக்கிறது என்று கேட்க, ஹிஹி நல்லாவே இருக்கு என்று பொய் புன்னகை புரிந்தோம்.


நெடுஞ்சாலையில் திருஷ்டிக் கயிறுகள் விற்பனைக்கு....
இப்படி நிறைய கடைகள் பார்க்க முடியும்...

புஷ்கரிலிருந்து உதய்பூருக்கு...
 

திவ்யமான உணவு சாப்பிட்ட பிறகு எவ்வளவு எனக் கேட்க Bill வந்தது – 14 பேர் சாப்பிட மொத்தம் 1600 ரூபாய் மட்டுமே – டிப்ஸ் சேர்த்து! நன்றாகவே சாப்பிட்டிருந்தோம் என்றாலும் குறைவான காசு தான் வாங்கி இருக்கிறார்கள் என்று தோன்ற, ஒரு முறை தொகையைச் சரிபார்த்து, பிறகு பணம் கொடுத்து வெளியே வந்தோம். அப்போது அங்கே மூன்று ராணுவத்தின் வாகனங்கள் வந்து சேர்ந்தன.  அதிலிருந்து இறங்கிய ஒரு ராணுவ வீரர் நேரே எங்களை நோக்கி வந்தார். எங்கள் வாகனத்தில் தமிழில் எழுதியிருப்பதைப் பார்த்து, எந்த ஊர் என்று விசாரிக்க வந்தாராம் – வந்தவர் பெயர் சதீஷ் – கன்னியாகுமரியைச் சேர்ந்தவர். நீங்கள் தமிழகத்தில் எந்த ஊரிலிருந்து வந்திருக்கிறீர்கள் என்று விசாரித்தார். அவரிடம் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்த பிறகு, அவரது பணியில் சிறப்புற வாழ்த்திய பிறகு எங்கள் பயணித்தினைத் தொடர்ந்தோம்.


வெட்டித் தீர்த்துட்டு தான் மறுவேலை....
தொடர்ந்து அழிக்கப்பட்டு வரும் மலைத்தொடர்....

புஷ்கரிலிருந்து உதய்பூருக்கு...
 

அங்கிருந்து புறப்பட்டபோது மதியம் 01.30 மணி. உதய்பூர் சென்று சேர எப்படியும் மாலை ஆகிவிடும். வாகனத்தில் சிலர் உறங்க ஆரம்பிக்க, நான் சாலைக் காட்சிகளைப் பார்த்தபடியே ஜோதியுடன் பேசிக் கொண்டிருந்தேன். ஆரவல்லி மலைத்தொடரை வெட்டி வெட்டி, காணாமல் செய்வது மட்டுமே எங்கள் குறிக்கோள் என்று கங்கணம் கட்டிக்கொண்டு மலையை வெட்டிக் கொண்டிருக்கிறார்கள். மார்பிள் விற்கும் பல கடைகளையும், மார்பிள் கற்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களையும் நிறையவே பார்க்க முடிந்தது. இயற்கை அன்னையின் கொடைகளை இப்படியே அழித்துக் கொண்டிருந்தால் இதன் முடிவு தான் என்ன, என்ற சிந்தனையுடன் பயணித்துக் கொண்டிருந்தேன். உதய்பூர் சென்று சேர்வதற்குள் நீங்களும் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். உதய்பூர் பற்றியும் பயணத்தில் பார்த்த விஷயங்கள் பற்றியும் தொடர்ந்து பார்க்கலாம்!

பயணம் நல்லது! ஆதலினால் பயணம் செய்வோம்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

36 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்க்ட்ஜி

    படங்கள் அட்டகாசமா இருக்கே

    கீதா

    பதிலளிநீக்கு
  2. ஜெயின் தலமாக இருக்குமோ படம் மற்றும் அந்த சாலை வாவ் போட வைக்கிறது...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதாஜி சாலைகள் நன்றாக இருப்பதால் பயணிக்கும் ஆர்வம் அதிகரிக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  3. கறுப்பு பானைகள், பைரவர் ஆஹா!! செல்லம் அழகு!

    அந்த பானை ஓவியம் செமையா இருக்கு ஜி.

    உணவு மெனு சூப்பர் அதுவும் தோட்டத்துக் காய்கள் அட!

    சேவ் டமாட்டர் ஆம் மற்றும் அங்கு பப்பட் கி சப்ஜியும் புகழ்பெற்றது இல்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பப்பட் சாதாரணமாக தேநீர் உடன் சாப்பிடும் பழக்கம் உள்ளது. சப்ஜியாக சாப்பிட்டு பார்த்ததில்லை.

      பானை ஓவியம் எனக்கும் பிடித்திருந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  4. //மார்பிள் கற்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களையும் நிறையவே பார்க்க முடிந்தது. இயற்கை அன்னையின் கொடைகளை இப்படியே அழித்துக் கொண்டிருந்தால் இதன் முடிவு தான் என்ன, என்ற சிந்தனையுடன் //

    பழைய கற்கள் பாவிய கோவில்கள்கூட இப்போது மார்பிள் பதிக்கபடுகிறது இங்கு.

    தேவைகள் கூடிக்கொண்டே இருக்கிறது. இருக்கும் வரை அனுபவிக்கும் உணர்வும் இயற்கையின் கொடைகள் அழிந்து கொண்டுதான் இருக்கும்.

    படங்கள் எல்லாம் அழகு. ஒரு காலத்தில் டெல்லி போகிறீர்களா மோடா வாங்கி வாருங்கள் என்ற காலம் உண்டு.

    அப்புறம் தமிழ்நாட்டுக்கே மோடா கொண்டு வந்து வீட்டு வாசலுக்கே வந்து விற்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயற்கையின் கொடைகளை அழித்துக் கொண்டே இருப்பது கவலைக்குரிய விஷயம்.

      ஆமாம் தில்லியிலிருந்து மோடா வாங்கிக் கொண்டு செல்லும் வழக்கமாக இருந்தது. இது பற்றி தனி பதிவே எழுதலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. இராணுவவீரரின் பற்று இதுதான் தமிழ்மொழி.
    தொடர்கிறேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ்ப் பற்று.... உண்மை. இராணுவ வீரர்களுக்கு இருப்பது உண்மையான பற்று.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  7. அடடே... நம்மாளு ஒருத்தர் உட்கார்ந்திருக்கிறாரே... உணவுண்ட களைப்பு போலும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். உட்கார்ந்து கொள்ளும் ஸ்டைலுக்காகவே படம் எடுத்தேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. இப்படித் தலையில் தலைப்பாகையைச் சுற்றிக்கொண்டால் கசகசவென இருக்காதோ?!! ஹெல்மெட்டே தேவையில்லை! இதற்கு மேல் ஹெல்மெட் போட்டுத்தான் ஆகவேண்டும் என்று போலீஸ் சொல்லிவிட்டால் இவர்கள் என்ன செய்வார்கள்? இதை நீக்காமலேயே மேலே ஹெல்மெட் போட்டுக்கொள்ளவேண்டும்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைப்பாகையைச் சுற்றிக் கொண்டிருந்தால் கசகசவென இருக்காதோ.... இருக்கும். வெயில் காலத்தில் அவர்கள் அருகில் செல்வது கஷ்டமான விஷயம்! அந்த அனுபவமும் கிடைத்தது.

      தலைப்பாகை அணிந்த எவருமே ஹெல்மெட் போடுவதே இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  9. சேவ் டமாட்டரை மட்டும் படமெடுக்காமல் மற்ற ஐட்டங்களை படமெடுத்துப் போட்டிருக்கலாம்.. ஹிஹிஹி...

    அதென்ன புது வழக்கம்? ஒவ்வொரு படத்துக்கும் கீழே பதிவின் தலைப்பு? பின்னால் லேபிள் செய்யும்போது உதவும் என்றா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலே சொல்ல விட்டுப்போனது - போலீஸ் சொன்னாலும் ஹெல்மெட் போடுவதில்லை!

      சேவ் டமாட்டர் படமே இணையத்திலிருந்து தான்.

      புது வழக்கமில்லையே.... சில பதிவுகளில் முன்பும் இப்படி எழுதி இருப்பதாக நினைவு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  11. சேவ் டமாட்டர் - இதுவரை கேள்விப்படாத உணவு. நல்லாத்தான் இருக்கும் போலிருக்கு.

    உணவகத்தின் காய்கறித்தோட்டப் படம் இருக்குமோ என்று பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேவ் டமாட்டர் - நன்றாகத் தான் இருந்தது - ஒரு தடவை முயற்சிக்கலாம்.

      காய்கறித் தோட்டம் படம் எடுத்திருக்கலாம். தோன்றவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  12. எங்கள் வீட்டில் (நெல்லை) 4-5 மோடாக்கள் இருந்தன. அவை ஹிந்திப் பெயர்கள் என்று தெரியாது. மோடாக்களில் சுகமாக உட்கார்ந்துகொள்வோம் (6-10 வயதில்). அவை ஸ்டூல் சைசுக்கு இருக்கும். இன்னொன்று பெரிய ஒரு ஆள் உட்கார்ந்துகொள்ளும் சோஃபா போன்று (இருக்கை போன்று) இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மோடாக்கள் தில்லியிலிருந்து வாங்கிக் கொண்டு சென்றவர்கள் நிறையவே... பெரிய அளவிலும் கிடைத்தன. இப்போது தில்லியில் இவை கிடைப்பது அனேகமாக குறைந்து விட்டது. எல்லோரும் சோஃபாவுக்கும், Bean Bag-க்கும் மாறி விட்டார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    ராஜஸ்தான் மாநில பயணக்கட்டுரை இனிதாக நகர்கிறது. படங்கள் வழக்கம் போல் அருமையாக உள்ளது. நெடுஞ்சாலை புகைப்படம் மிகவும் அருமை. வரிசையாக உள்ள மண் பானைகள், வைரவர், மோடாகள் புகைப்படங்கள் அனைத்தும் அழகாய் உள்ளன.
    உணவின் பேர் வித்தியாசமாக இருந்தது. ஆனால் "சேவ்" என்பதை வைத்து அது வரும் முன்பே அதுவாகத்தான் இருக்கு மென்று ஊகித்தேன். சரியாக இருந்தது.

    பயணத்தில் இனி நானும் பயணிக்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  14. சேவ் டமாடர் என்றே நானும் புரிந்து கொண்டேன். :)))) அந்தக் கருப்புப் பானைகளில் ஊற்றி வைத்திருக்கும் தண்ணீரைக் குடித்தால் தொண்டைக்குழி வழியாகச் சில்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லென்று போய் வயிற்றிலும் சில்லென இறங்கும். அந்த மாதிரிப் பானைகள் இங்கே கிடைப்பதில்லை. தண்ணீரும் அங்கே இருக்கும் சுவை இங்கே தமிழ்நாட்டின் எல்லா இடங்களிலும் இருப்பதில்லை. இங்கே திருச்சியில் தண்ணீர் நன்றாக இருக்கிறது. :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில்லென்று தொண்டைக்குழிக்குள் இறங்கும் - உண்மை. அப்படியான பானைகள் இப்போதெல்லாம் கிடைப்பதில்லை. தில்லியில் முன்பு கிடைத்த சிங்கமுகப் பானைகள் கூட இப்போதெல்லாம் அரிதாகத் தான் பார்க்க முடிகிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  15. கிட்டத்தட்ட மிசல் பாவ் மாதிரியோ சேவ் டமாட்டர்? இதிலே பாவ் சாப்பிடுவதில்லை. அதுக்குப் பதிலா சப்பாத்தியோடு சாப்பிடறாங்க! :))) படங்கள் எல்லாம் அட்டகாசம். இங்கே தமிழ்நாட்டிலும் நல்ல ஓட்டல்களுக்குப் போனால் அவ்வப்போது சமைத்துக் கொடுக்கிறார்கள். அம்பத்தூரில் குமார் ரெஸ்டாரன்டில் மாடிக்குப் போனால் ரொட்டி, சப்ஜி நாம் கேட்பதை அப்போதே சமைத்துத் தருவார்கள். அண்ணாநகர் சுக்சாகர், அடையார் சங்கீதா போன்றவற்றிலும் உண்டு. தி.நகர் போக் ரோடில் ஆம்டாவாடி ஓட்டல் ஒண்ணு இருக்குனு சொன்னாங்க! அங்கேயும் இப்படிச் செய்து தருவாங்க எனக் கேள்வி! கும்பகோணத்திலும் ஓட்டல் ராயாஸுக்குப் பின்னால் இருக்கும் "சத்தார்" ஓட்டலில் நல்ல அருமையான சாப்பாடு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலதிகத் தகவல்கள் சிறப்பு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  16. படங்களும் விவரணங்களும் எல்லாமே அருமை வெங்கட்ஜி. தொடர்கிறோம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  17. கீதா: காலையில் சொல்ல நினைத்து விட்டுப் போனஒன்று அந்த ஆரவல்லி மலைகள் கட் செய்யப்ப்ட்டு வருவது மிக மிக வேதனையான விஷயம்...

    துளசி: இங்கும் பாலக்காடு-திருச்சூர் வரை செல்ல டனல் கட்டுகிறார்கள் அதற்கும் இப்படித்தான் நிறைய இயற்கை அழிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  18. நம்ம ஊரில்தான் மலையை அழிக்குறாங்கன்னா, அங்கயுமா?!

    நம்ம மக்களின் அறியாமையை நினைச்சு மனசு வேதனைப்படுது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....