புதன், 25 ஜூலை, 2018

ராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – சாஜன்கட்[ர்] – மலையுச்சியில் மாளிகை



ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 10

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


சாஜன்கட் மாளிகை [அ] மழைக்கால மாளிகை...
உதய்பூர் நகரிலிருந்து...
 


உதய்பூர் நகரின் ஒரு பகுதி - பறவைப் பார்வையில்...

சாஜன்கட் மாளிகை [அ] மழைக்கால மாளிகை...

உதய்பூர் நகரிலிருந்து..

சாஜன்கட்[ர்] உயிரியல் பூங்கா பார்த்த பிறகு நண்பர் கஜேந்திராவும் அவரது பால்ய நண்பரும் எங்களை ஓரிடத்தில் நிற்க வைத்துவிட்டு எங்கோ சென்றார்கள். அவர்கள் சென்ற நேரத்தில் நாங்கள் சில படங்கள் எடுத்துக் கொண்டும், பேசிக் கொண்டும் நின்றிருந்தோம். நண்பர்கள் வந்து சேர்ந்தார்கள் - Bபன்ஸ்dhதாரா மலை உச்சியில் அமைந்திருக்கும் ஒரு அரண்மனை/ மாளிகையைப் பார்க்கச் செல்ல ஏற்பாடுகள் என்ன என்பதை தெரிந்து கொண்டு வந்தார்கள். மலையடிவாரத்திலிருந்து அமைந்திருக்கும் சாலை வழியே மலையுச்சிக்குச் செல்ல வேண்டும். எங்கள் வாகனம் பெரியது என்பதால் மலையுச்சிக்கு அதில் செல்ல முடியாது என்று ஓட்டுனர் ஜோதியிடம் பேசிய போது சொல்லிவிட்டார். கீழேயிருந்து மேலே செல்ல சில வாகனங்கள் உண்டு என்றாலும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகம் இருந்ததால் சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.




மாளிகை நோக்கிய மலைப்பாதை பயணத்தில்.....

உதய்பூர் நகரிலிருந்து...


சில நிமிடங்கள் காத்திருந்த பிறகு இரண்டு வாகனங்களில் [ஜீப்] மலையுச்சி நோக்கிச் சென்றோம். மலைப்பாதையில் பயணிப்பது ஒரு சுகானுபவம். குறுகிய சாலையாக/வளைவுகளாக இருந்ததைப் பார்த்தபோது, எங்கள் வாகனமாகிய டெம்போ ட்ராவலரில் செல்லாதது நல்லது என்பது புரிந்தது. நாங்கள் வாகனத்தில் பயணிக்க, பலர் கீழேயிருந்து மலையுச்சிக்கு இயற்கைக் காட்சிகளை ரசித்தபடி நடந்தே செல்வதைப் பார்க்க முடிந்தது. அப்படிச் செல்வது தான் சரியாக இருக்கும் என்றாலும் அதற்கு சில நாட்கள் அங்கே தங்க வேண்டியிருக்கும்! சாலையின் ஒரு ஓரத்தில் கீழேயுள்ள உயிரியல் பூங்காவின் சுற்றுப் புறச் சுவர் தொடர்ந்து வருகிறது! சில சமயங்களில் விலங்குகள் தப்பித்து விட முயற்சி செய்யும் என்பதால் சற்றே உயரமான மதில் சுவர் தான்!


மலைச்சிகரங்களைத் தொடும் மேகக் கூட்டங்கள்....
சாஜன்கட் மாளிகை [அ] மழைக்கால மாளிகை...

உதய்பூர் நகரிலிருந்து...



மலையுச்சியிலிருந்து உதய்பூர் நகரமும் பிச்சோலா ஏரியும்
சாஜன்கட் மாளிகை [அ] மழைக்கால மாளிகை...

உதய்பூர் நகரிலிருந்து...


மலையுச்சியில் அமைந்திருக்கும் இந்த சாஜன்கட்[ர்] மாளிகைக்குச் செல்ல நுழைவுக் கட்டணம் உண்டு. கேமிரா கட்டணமும் உண்டு. உயிரியல் பூங்காவிற்கான கட்டணம் தவிர இதற்கும் தனிக்கட்டணம் தர வேண்டும். நுழைவுக் கட்டணம், கேமரா கட்டணமாக மொத்தம் 900 ரூபாயும், மேலே சென்று கீழே திரும்ப வாகனக் கட்டணமாக 1350 ரூபாயும் கொடுக்க வேண்டியிருந்தது. வாரத்தின் எல்லா நாட்களிலும் காலை 09 மணி முதல் மாலை 04.30 மணி வரை திறந்திருக்கும் இந்த இடத்திற்கு சாஜன்கட்[ர்] மாளிகை என்றும் மழைக்கால மாளிகை என்றும் இரண்டு பெயர்கள் உண்டு. மலையுச்சியில் இப்படி ஒரு மாளிகையை யார் கட்டியது, எதற்காக என்ற தகவல்களையும் பார்க்கலாம்! இந்தப் பகுதியை ஆண்ட ராஜாக்களும், மற்ற ராஜாக்கள் போலவே தங்கள் வாழ்க்கையை நன்கு அனுபவித்து இருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம் இந்த சாஜன்கட் மாளிகை!


மன்னா.... உங்களுக்காக ராணி உப்பரிகையில் காத்திருக்கிறார்....
சாஜன்கட் மாளிகை [அ] மழைக்கால மாளிகை...

உதய்பூர் நகரிலிருந்து...



மார்பிள் தூண்களில் அழகிய வேலைப்பாடுகள்...
சாஜன்கட் மாளிகை [அ] மழைக்கால மாளிகை...

உதய்பூர் நகரிலிருந்து...


1874 – 1884 ஆம் ஆண்டுகளில் இந்த மேவார் பகுதியை ஆண்டு வந்த ராஜாவின் பெயர் மஹாராணா சாஜன் சிங். இந்தப் பகுதியில் மேகங்களைப் படித்து வானிலையை ஆராய்ச்சி செய்வதற்கு மலையுச்சியில் ஒன்பது மாடிகள் கொண்ட ஒரு கட்டிடத்தினைக் கட்ட ஆசைப்பட்டாராம் மஹாராணா சாஜன் சிங். ஆனால் அவர் இந்த மாளிகையைக் கட்ட ஆரம்பித்த வருடமான 1884-லிலேயே இறந்து விட்டார். பத்து வருடங்களே மேவார் பகுதியினை ஆண்டாலும், தனது ஆட்சிக் காலத்தில் நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறார் சாஜன் சிங். கல்வி, மருத்துவம், விவசாயம், வனத்துறை என பல துறைகளிலும் இவரது வேலைகள் சிறந்து விளங்கின. உதய்பூர் நகரின் பிச்சோலா ஆற்றினை தூர் வாரி நகரின் தண்ணீர் தேவைகளை சரியாகச் செய்ததும் இவரது நல்ல செயல்பாடு.


மலைச்சிகரங்களும் மேகக் கூட்டங்களும்....
சாஜன்கட் மாளிகை [அ] மழைக்கால மாளிகை...

உதய்பூர் நகரிலிருந்து...



என்ன வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள் என்ற சிந்தனையுடன்...
சாஜன்கட் மாளிகை [அ] மழைக்கால மாளிகை...

உதய்பூர் நகரிலிருந்து...


அவரைத் தொடர்ந்து மேவாரின் மன்னராக வந்த ஃபதே சிங் சாஜன் சிங் அவர்களால் தொடங்கப்பட்ட மாளிகையைக் கட்டி முடித்தார் – ஆனால் வானிலை ஆராய்ச்சி மையமாக இல்லாமல் மழைக்கால மாளிகையாக மட்டுமே இருந்தது – சாஜன் சிங் அவர்களின் பெயரால் சாஜன் சிங் மாளிகை எனவும், மழைக்கால நேரத்தில் இங்கே தங்கி, மழைக்கால மேகங்களை ரசிக்கவும் பயன்படுத்தியதால் மழைக்கால மாளிகை எனவும் அழைக்கப்பட்ட இந்த மாளிகை பிரம்மாண்டமாக இன்றைக்கும் நிலைத்து நின்று கொண்டிருக்கிறது. இந்த மாளிகையிலிருந்து பார்க்கும்போது ஆரவள்ளி மலைத்தொடர்களையும், மலைச்சிகரங்களைத் தொட்டுத் தழுவிச் செல்லும் மேகக் கூட்டங்களையும் ரசிக்க முடியும். மாளிகையின் உள்ளே மேவார் மன்னர்கள் பயன்படுத்திய பொருட்களும் அவர்களுடைய ஓவியங்களும் இருக்கிறது. மாளிகையின் பின்புறத்திற்குச் சென்றால் மலைச்சிகரங்களை ரசிக்க நல்ல வசதி இருக்கிறது.


மேவார் மன்னர் சாஜன் சிங் அவர்கள்...
சாஜன்கட் மாளிகை [அ] மழைக்கால மாளிகை...

உதய்பூர் நகரிலிருந்து...




ஆம்பல்... ஆம்பல்...

சாஜன்கட் மாளிகை [அ] மழைக்கால மாளிகை...

உதய்பூர் நகரிலிருந்து..


மலைச் சிகரங்களில் தழுவிச் சென்ற மேகக் கூட்டங்களோடு படங்கள் எடுத்துக் கொண்ட பிறகு மாளிகையின் முன்புறம் அமைந்திருக்கும் சிறு பூங்காவினையும் பார்த்தோம். அங்கே பார்த்த ஆம்பல் மலர் தான் வலைப்பூவின் முகப்புப் படமாக இருக்கிறது. அங்கிருந்து உதய்பூர் நகர் முழுவதையும், நகரில் இருக்கும் பிச்சோலா ஏரியையும் ரசிக்க முடியும். காட்சிகளைக் கண்டு ரசித்தபடியே சில நிமிடங்கள் அங்கே இருந்தோம். மலையுச்சியை விட்டு கீழே வர மனமே இல்லை. எங்கள் மனநிலைக்குத் தகுந்த மாதிரியே மலையுச்சியில் சில நிமிடங்கள் அதிகம் இருக்க நேர்ந்தது. குறுகிய மலைப்பாதையில் வந்த வாகனங்கள் குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தி இருக்க, மலையுச்சியில் வாகன நெரிசல் – அனைத்தையும் சரி செய்ய சிறிது நேரம் எடுத்தது.




பிச்சோலா ஏரி - ஒரு பறவைப் பார்வை....
சாஜன்கட் மாளிகை [அ] மழைக்கால மாளிகை...


உதய்பூர் நகரிலிருந்து.. 



மலைப்பாதையில் வரும் வாகனம் ஒன்று - பறவைப் பார்வையில்..
சாஜன்கட் மாளிகை [அ] மழைக்கால மாளிகை...


உதய்பூர் நகரிலிருந்து..


கீழே செல்ல ஏற்கனவே வாகனத்திற்கு கட்டணம் கொடுத்திருந்தாலும், வாகனங்களுக்காகக் காத்திருந்த மக்கள் கூட்டத்தில் எங்கள் வாய்ப்பு எப்போது வரும் எனச் சொல்ல முடியாமல் இருந்தது. சரியான வரிசை எல்லாம் இல்லை. யார் முண்டியடித்துச் செல்கிறார்களோ அவர்கள் வாகனத்தில் செல்ல முடியும். குழுவினர் அனைவரும் இப்படி முண்டியடித்துச் செல்வது நிச்சயம் முடியாத ஒன்று. மலையடிவாரத்திலிருந்து வந்த வாகன ஓட்டிகள் சிலர் காசு வாங்கிக் கொண்டு கீழே விட சம்மதிக்க, இரண்டு வாகனங்களில் கீழ் நோக்கிச் சென்றோம். அதற்குத் தனியாக நூறு நூறு ரூபாய் தரவேண்டியிருந்ததாக நினைவு. மலையடிவாரத்தில் இடம் நிறைய இருந்தாலும், மலையுச்சியில் இருக்கும் இடம் குறைவு. அங்கே வாகனங்களை நிறுத்தி வைக்க சரியான ஏற்பாடு இல்லை. வரும் மக்களும் ஒழுங்கினைக் கடைபிடிப்பதில்லை – அப்படி இருந்துவிட்டால் நாம் இந்தியர்களே இல்லையே!



மேலிருந்து கீழே நடந்து செல்லும் சிலர்...

சாஜன்கட் மாளிகை [அ] மழைக்கால மாளிகை...

உதய்பூர் நகரிலிருந்து..




மாளிகையின் ஒரு பகுதி..

சாஜன்கட் மாளிகை [அ] மழைக்கால மாளிகை...

உதய்பூர் நகரிலிருந்து..


நேரம் இருந்திருந்தால் மலையுச்சியிலிருந்து கீழே நடந்து வந்திருக்கலாம். அப்படி நடந்து வந்தால், படங்கள் எடுக்க நிறைய வாய்ப்பும், இயற்கைக் காட்சிகளும் கிடைத்திருக்கும். வாகனத்தில் பயணித்ததில் இழந்தவை இப்படங்களும், அனுபவங்களும்!  மலையுச்சியிலும் மாளிகையிலும் நிறைய படங்கள் எடுத்தோம். அனைத்தையும் இங்கே வெளியிட முடியாது. நான் எடுத்த சில படங்களும் நண்பரின் மகள் எடுத்த சில படங்களும் இங்கே தந்திருக்கிறேன். முடிந்தால் இந்தப் படங்களை கூகுள் ஃபோட்டோஸ் பக்கங்களில் சேமித்து இணைப்பினைத் தருகிறேன். இப்போதைக்கு பதிவுக்கு சில படங்கள் மட்டும்! தேர்ந்தெடுத்து தந்திருக்கும் படங்கள் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.

பயணம் நல்லது! ஆதலினால் பயணம் செய்வோம்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

28 கருத்துகள்:

  1. ராஜா நல்ல ராஜவாழ்க்கை வாழ்ந்திருந்தாலும் மக்களையும் வாழவைத்து இருக்கின்றாரே...

    இன்றைய ஆட்சியாளர்கள் இப்படியா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்களையும் வாழ வைத்து இருப்பது நல்ல விஷயம் தான். இன்றைக்கு அரசியல் வேறு லெவலில்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  2. குட்மார்னிங் வெங்கட்ட்.

    மறுபடி தளம்...!!!

    இதோ இதோ வர்றேன்...

    ஒரு கமெண்ட் போட்டு சரி பண்ணிக்கறேன்!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா.... இப்போது தளத்தில் மாற்றங்கள் செய்த பிறகு தளம் திறப்பதில் பிரச்சனை இருக்கிறதா எனச் சொல்லுங்களேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. மலைப்பாதையின் படங்கள் அழகு.

    ஓ... இங்கு எடுத்த ஆம்பல் மலரைத்ததான் கவர் போட்டோவாக வைத்திருக்கிறீர்களா?

    மழைக்கால மாளிகை - ராஜாக்கள் வாழ்வாங்கு வாழ்ந்திருக்கிறார்கள்!

    படங்கள் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே எடுத்த ஆம்பல் மலர் தான் கவர் ஃபோட்டோ - நேற்று வரை!

      ராஜாக்களுக்கு என்ன அனுபவித்து இருக்கிறார்கள் தங்கள் வாழ்க்கையை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. மழைக்கால மாளிகை தூணில் உள்ள மலர்கள், இலைகள் வேலைப்பாடு வியக்க வைக்கிறது.
    இயற்கை எழில் கொஞ்சும் உதயபூர் பயணம் இனிமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிலும் மார்பிள் கற்களில் இப்படி வேலைப்பாடுகள் - அசத்தலான திறமை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  5. இத்தனை உயரத்தில் சாஜன்கட் மாளிகை... அசர வைக்கிறது....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்... செல்லும் பாதை, உயரத்தில் இருந்த மாளிகை என அனைத்துமே அசத்தல்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. என்ன வாழ்க்கை வாழ்ந்திருக்கின்றார்கள் என்று நீங்கள் மட்டுமல்ல, நாங்களும் எண்ணும்படி இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு

  7. மழைக்கால மாளிகை... வாவ்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  8. மாளிகையின் படங்களும் உப்பரிகைகளும் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  9. அழகு, சிங்கம் மானை போல் போல தூக்கி வீசி விளையாடுகிறதோ? ஹா ஹா ஹா.

    ஜெய்ப்பூரைப்பார்க்க ஸ்கொட்லாண்டின் ஒரு பகுதிபோல இருக்கு:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஞானி அதிரா.... இங்கே ஜெய்ப்பூர் எங்கே வந்தது! உதய்பூர்.... பத்து தடவை உதய்பூர் என இம்பொசிஷன் எழுதணும் சொல்லிட்டேன்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. படங்களழகு உதய் பூர் செல்ல ஆசையைத் தூண்டுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது சென்று வாருங்கள் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  11. அழகான படங்கள். ஈர்க்கின்றன. மாளிகை அழகாக இருக்கிறது. அந்தக்காலத்து ராஜாக்கள் நன்றாகவே வாழ்ந்திருக்கிறார்கள். மக்களும் என்றே தோன்றுகிறது. மலை, அங்கிருந்து நகரத்தின் அழகு எல்லாமே நன்றாக இருக்கிறது வெங்கட்ஜி. தொடர்கிறோம்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  12. ஹை வெங்கட்ஜி அந்த ஆம்பல்தான் இங்கு முகப்பில் இல்லையா!! சூப்பர்!! சிவாஜி படத்துலதானே அந்தப் பாட்டு ஆம்பல் ஆம்பல் அப்படினு வரும்!!

    மாளிகை, உப்பரிகை, மலைப்பாதை, அந்த ஏரி எல்லாமே செம அழகு ஜி! அந்த ராஜா உப்பரிகையிலிருந்த ராணியைப் பார்த்து.... ம்ம்ம்ம்ம்ம் ஆம்பல் ஆம்பல்....மவ்வால் மவ்வால்...பூம்பாவை ஆம்பல் ஆம்பல் நு பாடியிருப்பாரோ??!! ஹா ஹா ஹா

    அழகான இடம் உதய்ப்பூர்...மாளிகை ரொம்பவே ஆர்கிடெக்சர் செம அழகா இருக்கு....அது போல மலை...இயற்கை.

    //
    நேரம் இருந்திருந்தால் மலையுச்சியிலிருந்து கீழே நடந்து வந்திருக்கலாம். அப்படி நடந்து வந்தால், படங்கள் எடுக்க நிறைய வாய்ப்பும், இயற்கைக் காட்சிகளும் கிடைத்திருக்கும். வாகனத்தில் பயணித்ததில் இழந்தவை இப்படங்களும், அனுபவங்களும்! //

    யெஸ் யெஸ் இப்படிப் போகும் போது நானும் நினைப்பதுண்டு ஜி.

    அடுத்து என்னனு பார்க்கனும் தொடர்கிறோம் ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதா ஜி! அந்த ஆம்பல் மலர் தான் முகப்பில் இருந்தது நேற்று வரை!

      மலைகளில் கீழ் நோக்கி நடப்பது கொஞ்சம் சுலபம் என்பதால் எனக்கும் பிடிக்கும். நேரப் பற்றாக்குறை அந்த ஆசை நிறைவேற்றிக் கொள்ள தடை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  13. அழகான பயணம் தொடருங்கள் நண்பரே ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அஜய்.

      நீக்கு
  14. அருமையான மாளிகை! எனக்குத் தெரிந்தவரை வடமாநில அரசர்கள் மாளிகைகள், கோட்டைகள்னு நிறையக் கட்டினாங்க. ஆனால் நம் தென்னகத்திலோ கோயில்களைப் பிரம்மாண்டமாய்க் கட்டி இருக்காங்க! மற்றபடி மக்கள் பாதுகாப்பில் அவங்களும் கவனம் செலுத்தினாங்க. இங்கேயும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரம்மாண்டமான கோட்டைகள் கட்டியவர்கள் வட இந்திய அரசர்கள். நம் ஊர் அரசர்கள் கோவில்களையே கோட்டைகளாகக் கட்டியவர்கள்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....