புதன், 4 ஜூலை, 2018

ராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்



மழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்... 


ராஜஸ்தான் மாநிலம் என்றாலே பெரும்பாலானவர்களுக்கு அந்த மாநிலத்தின் அதீத வெயிலும், பாலைவனமும் ஒட்டகங்களும் தான் நினைவுக்கு வரும். வெயில் மட்டுமே அதிகமாக இருக்கும் என்றல்ல, குளிரும் அதிகம் தான். ஆனால் வெயில் காலத்திலும் சற்றே குளிர்ச்சியாக இருக்கும் இடங்கள் இந்த மாநிலத்தில் உண்டு என்பது தெரியுமா? ராஜஸ்தான் – ராஜ்புத் ராஜாக்கள் பலர் ஆண்டுவந்த இடம் என்பதால் ராஜஸ்தான் என்ற பெயர் வந்ததோ? ராஜஸ்தான் மாநிலத்தின் ஒரு சில இடங்களுக்கு – குறிப்பாக தலைநகரான ஜெய்பூருக்கு முன்னரே சென்றிருந்தாலும் வேறு மாவட்டங்களுக்குச் சென்றதில்லை.  சென்ற ஆகஸ்ட் மாதம் – சுதந்திர தினத்தினை ஒட்டி நான்கு நாட்கள் ஒன்றாக விடுமுறை கிடைக்க, ராஜஸ்தான் பயணிக்கத் திட்டமிட்டோம்.


 புஷ்கர் அருகே கிராமத்துப் பெண்கள் - தண்ணீர் சுமந்து செல்லும் காட்சி..

தலைநகரில் நான் தங்கியிருக்கும் பகுதியில் இருக்கும் தமிழ் நண்பர்கள் அவரவர் குடும்பத்துடன் வருவதற்குத் தயாராக நானும் தயாரானேன். எப்போதும் போல ஓட்டுனர் நாகஜோதி என்கிற ஜோதியிடம் ராஜஸ்தான் பயணம் இந்தத் தேதிகளில் செல்ல வேண்டும் – தயாராக இருங்கள் எனச் சொல்லிவிட்டோம். அவர் தனக்கு வேறு குழுவினரோடு செல்ல முன்னரே சொல்லி விட்டார்களே எனச் சொல்ல, சரி பிறகு சென்று வரலாம் – நீங்கள் வந்தால் பயணம் – இல்லையேல் இல்லை என்று முடிவாகச் சொல்ல, மற்ற குழுவினருக்கு வேறு வண்டியை ஏற்பாடு செய்து கொடுத்து, எங்களுடன் பயணிக்கத் தயாரானார். நாங்களும் தயாரானோம்.


ரெடிமேட் தொப்பியில் ஒரு புகைப்படம்
பேரம் பேசினால் ஐம்பது ரூபாய்க்கு கிடைக்கும்!

ராஜஸ்தானில் சில இடங்களுக்குப் பயணிப்பதாகத் திட்டம் – எந்தெந்த இடங்கள், அங்கே என்ன பார்க்கலாம் என்பதை எல்லாம் வரிசையாகச் சொல்லப் போகிறேன் – அதற்கு முன்னர் சில விஷயங்கள்! எந்த ஒரு பயணமாக இருந்தாலும் சரி, சரியான திட்டமிடல் மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது. குறிப்பாக, குடும்பத்தினருடன் செல்வதென்றால் தங்குமிடம் சரியானதாக இருக்க வேண்டும், தேவையான வாகன வசதிகள் – இரயில்/விமானம் முன்பதிவு ஆகியவை ரொம்பவே கவனமாகச் செய்ய வேண்டியவை. சிலர் கடைசி நேரம் வரை இதைப் பற்றிக் கவலைப்படாது பயணம் செய்யும் போது திண்டாடுவார்கள். தேவையான/உபயோகப்படுத்தும் மருந்துகளையும் எடுத்துக் கொள்வது மிக முக்கியம்.


புஷ்கர் நகரமும் புஷ்கர் சரோவரும் - 
மலையுச்சியில் இருக்கும் சாவித்ரி மாதா கோவிலிலிருந்து..

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மூன்று மாவட்டங்களுக்குச் செல்வதாக எங்கள் திட்டம் – அஜ்மேர், உதைப்பூர் மற்றும் ஜோத்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள சில இடங்களுக்குப் பயணிக்கத் திட்டமிட்டவுடன் தங்குமிடம் பற்றிய தேடல் துவங்கியது. மத்திய அரசின் நல்ல சில தங்குமிடங்கள் உண்டு – அங்கே தங்கினால் எங்களுக்கு குறைவான கட்டணம் தான். அதனால் உதைப்பூரில் அப்படி இருந்த தங்குமிடம் ஒன்றில் இரண்டு தினங்கள் தங்குவதற்கு ஆறு அறைகளை – இரண்டு நான்கு படுக்கைகள் கொண்ட அறை, மற்ற நான்கும் இரு படுக்கைகள் கொண்ட அறை – முன்பதிவு செய்தோம் – நாங்கள் மொத்தம் 13 பேர் – ஐந்து குடும்பங்கள் மற்றும் நான்! ஜோத்பூரிலும் நண்பர் மூலம் தங்குமிடம் ஏற்பாடு செய்திருந்தோம்.


புஷ்கர் நகரில் மலைமீது மரத்தில் அமர்ந்திருந்த முன்னோர்களின் குடும்பம் ஒன்று...

தங்குமிட ஏற்பாடு, பயணத்திற்கான வாகன ஏற்பாடு ஆகிய இரண்டும் சரியாக அமைந்துவிட, ராஜஸ்தான் நோக்கிய எங்கள் பயணத்திற்காகக் காத்திருந்தோம். நாங்கள் புறப்பட வேண்டிய நாளும் வந்தது. வெள்ளிக்கிழமை என்பதால் அலுவலகம் சென்று திரும்பிய பிறகு இரவு எட்டு மணிக்கு மேல் தலைநகரிலிருந்து புறப்படத் திட்டம் – பகலில் அலுவலகம் சென்று வந்த அலுப்பு தீர குளித்து விட்டு முதுகுச் சுமையோடும், கவச குண்டலத்தோடும் – அதாங்க, என்னுடைய Canon DSLR-உடனும் பயணத்திற்காக, பயணிக்கப் போகும் வாகனத்திற்காக, ஓட்டுனர் ஜோதியின் வருகைக்காகக் காத்திருந்தோம். அனைவரும் ஒரே இடத்திற்கு வந்துவிட்டால் நல்லது என்பதால் எங்கள் வீட்டின் அருகே வரச் சொல்லி இருந்தோம்.  அனைவருமே வந்து காத்திருக்க, வாகனத்துடன் ஜோதி வருவதற்குத் தாமதமானது!


அப்பாவின் இசைக்குத் தகுந்தாற்போல் நடனமாடிய சிறுமி.. 

ஆரம்பமே தாமதமாகிறதே என்ற எண்ணத்துடன் காத்திருக்க, ஜோதி வந்து சேர்ந்தார். வழியெங்கும் வாகன நெரிசல் என்பதால் கொஞ்சம் நேரமாகி விட்டது என்றார் – ஒரு மணி நேரத்திற்கும் மேல் காத்திருக்க வேண்டியிருந்தது! உடைமைகளை பின்புறத்தில் வைத்து விட்டு, அனைவரும் வாகனத்தில் அமர்ந்து கொண்டோம். நேராக எங்கள் பகுதியில் அமைந்திருக்கும் திருப்பதி தேவஸ்தானத்தின் கோவில் முன்னர் வாகனம் நின்றது. அதற்குள் கோவில் மூடிவிட, வெளியியிலிருந்தே வேங்கடவனை வணங்கி, இரவு உணவுக்கான நேரமாகிவிட்டதால், அங்கேயே அமர்ந்து, ஏற்கனவே சமையல் கலைஞரிடம் சொல்லி வாங்கி வைத்திருந்த இரவு உணவை உட்கொண்டோம். வழியில் எங்காவது நிறுத்தி தேநீர் அருந்தினால் போதும்! ஆரம்பமே உணவுடன் தான்!


ஒரு இசைக் கலைஞர்...

முதலில் போகப் போவது அஜ்மேர் மாவட்டத்தில் உள்ள புஷ்கர்! புஷ்கரில் நடக்கும் ஒட்டக சந்தை, இந்தியாவில் மட்டுமல்ல, உலகமெங்கும் புகழ்பெற்ற ஒன்று. அந்த புஷ்கர் நகரத்திற்குத் தான் நாங்கள் முதலாகப் பயணிக்கப் போகிறோம். தலைநகர் தில்லியிலிருந்து கிட்டத்தட்ட 420 கிலோமீட்டர் பயணம் – குறைந்தது எட்டு மணி நேரம் பயணம் - அதுவும் இரவு நேரப் பயணம்! வண்டி புறப்பட்ட சில நிமிடங்களில் பின் இருக்கைகளில் குறட்டை சப்தம் – நான், ஓட்டுனர் மற்றும் இன்னுமொரு நண்பர் தவிர அனைவரும் உறங்க ஆரம்பித்தனர். ஓட்டுனர் ஜோதியுடன் நானும் நண்பரும் பேசியபடியே வர, மெல்லிய ஒலியில் தமிழ் பாடல்கள் ஒலிக்க பயணம் இனிதாகத் துவங்கியது!


ராஜஸ்தானில்... இப்படி மீசை வைக்க ஆசையுண்டு...

இரவு நேரத்திலும் சில தலைநகரப் பெண்கள் இருசக்கர வாகனங்களில் தன்னிச்சையாக உலவிக் கொண்டிருந்தார்கள்! அதுவும் மூன்று பெண்கள் ஒரே வாகனத்தில் தலைக்கவசம் ஏதுமின்றி வேகமாகச் சென்று கொண்டிருந்தார்கள்! Enjoying their day or rather night out! தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்தோம். வழியில் எங்கே நிறுத்தினோம், கிடைத்த தேநீர் எப்படி இருந்தது போன்ற மற்ற விஷயங்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன்!

பயணம் நல்லது! ஆதலினால் பயணம் செய்வோம்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

32 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி...

    ராஜஸ்தான் போக ரெடியாக உங்க கூட வந்தாச்சு!!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. ராஜஸ்தான் என்றால் எனக்கு அந்தத் நீங்கள் சொல்லியிருக்கும் விஷயங்களோடு தலைப்பாகையும் நினைவுக்கு வரும்!

    குட்மார்னிங் வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். தலைப்பாகையும் நினைவுக்கு வரும் விஷயங்களில் ஒன்று தான்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. பரவாயில்லை, டெல்லியில் காந்தி கனவு கண்ட ராஜ்ஜியம் வந்துவிட்டது போல...!

    நல்ல திட்டமிடலுடன் பயணம் தொடங்கி இருக்கிறது. சில சமயங்களில் நாம் தாமதம் என்று நினைத்தது பின்னர் "அதுவே நல்லதாய் போச்சு" என்கிற மாதிரி ஆகும்!

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில சமயங்களில் நாம் தாமதம் என்று நினைத்தது பின்னர் அதுவே நல்லதாய் போச்சு என்கிற மாதிரி ஆகும். உண்மை தான். “எல்லாம் நல்லதற்கே” என்று இருந்துவிட்டால் துன்பமேது.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. ஆஹா ராஜஸ்தான் மீசைக்காரர் ஸூப்பர் ஜி நானும் தொடர்ந்து வருகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு மீசைக்காரருக்கு பிடித்ததும் மீசைக்காரர்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  5. ராஜஸ்தான் என்றதும் நினைவிற்கு வருகின்ற புஷ்கரைக் கண்டேன், பறவைப்பார்வையில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பறவைப் பார்வையில் புஷ்கர்.... ஆமாம். மலை மீதிலிருந்து தெரியும் நகரம் அழகு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  6. தொடர்கிறேன். ராஜஸ்தான் அறியாத இடங்களைக் காண.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து வருகிறேன் என்பது கேட்டு மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  7. சரி, சரியான திட்டமிடல் மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது. குறிப்பாக, குடும்பத்தினருடன் செல்வதென்றால் தங்குமிடம் சரியானதாக இருக்க வேண்டும், தேவையான வாகன வசதிகள் – இரயில்/விமானம் முன்பதிவு ஆகியவை ரொம்பவே கவனமாகச் செய்ய வேண்டியவை. சிலர் கடைசி நேரம் வரை இதைப் பற்றிக் கவலைப்படாது பயணம் செய்யும் போது திண்டாடுவார்கள். தேவையான/உபயோகப்படுத்தும் மருந்துகளையும் எடுத்துக் கொள்வது மிக முக்கியம்.//

    யெஸ் யெஸ் ஜி அதுவும் குடும்பத்துடன் எனும் போது திட்டமிடல் மிக மிக முக்கியம்....

    அடுத்து அறிய ஆவலுடன் தொடர்கிறோம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியான திட்டமிடல் இல்லாவிட்டால் கொஞ்சம் கஷ்டம் தான். இதை நான் உணர்ந்திருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  8. படங்கள் மீண்டும் இதில் இடம்பெற்றதால் படித்த பதிவோ என்று நினைப்பு வந்து விட்டது.ஆறு படங்கள் போன பதிவில் இடம்பெற்றவை.

    பதிவை படிக்க தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அம்மா. முன்னோட்டத்தில் வந்த படங்களே இதிலும் சேர்த்திருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  9. ஓட்டுனர் மற்றும் இன்னுமொரு நண்பர் தவிர அனைவரும் உறங்க ஆரம்பித்தனர். ஓட்டுனர் ஜோதியுடன் நானும் நண்பரும் பேசியபடியே வர, மெல்லிய ஒலியில் தமிழ் பாடல்கள் ஒலிக்க பயணம் இனிதாகத் துவங்கியது!//
    பயணத்தின் போது தூங்காமல் வருவது நல்லது. அதுவும் ஓட்டுனர் பக்கம் இருப்பவர் கண்டிப்பாய் தூங்க கூடாது. பேச்சு கொடுத்துக் கொண்டே வருவது நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரும்பாலான பயணங்களில் ஓட்டுனரின் பக்கத்து இருக்கை தான் எனக்கு! அதனால் பயணத்தில் தூங்குவதில்லை....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  10. ஜெயப்பூர் சென்றிருந்தபோதுஒரு ம்யூசியத்தில் வாசித்த சில வாசகங்கள் ராஜபுத்திரர்களைப் பற்றிய அபிப்பிராயத்தையே மாற்றியது வெள்ளையர்களுக்கு அடி பணிந்தவர்கள் என்னும் எண்ணம்மேலோங்கியது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிந்தைய ராஜாக்கள் பலரும் இப்படி இருந்திருக்கிறார்கள். வெள்ளையர் காலத்தில் அவர்களுக்கு வேண்டியது கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தில் தான் சில ராஜாக்கள் இருந்திருக்கிறார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  11. ராஜஸ்தான் பயணம் இனிதாகத் தொடங்கியுள்ளதே. நிறைய பேர் இல்லைஅய நண்பர்கள் குடும்பம் எனும் போது...பெரிய குழுவை மேனேஜ் செய்து போய்வருவது என்பது பெரிய விஷயம். தொடர்கிறோம் ஜி

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழுவாகப் போகும் போது சில சௌகரியங்கள்/அசௌகரியங்கள் இருக்கத் தான் செய்கிறது. இந்த முறை சென்ற குழுவில் பிரச்சனை செய்யும் ஒருவரும் இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  12. மாநிலம் மாவட்டம் இரண்டையும் குழப்புகிறீர்கள்.மாநிலம் = state, மாவட்டம்=District.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மூன்று மாவட்டங்களுக்குச் செல்வதாக எங்கள் திட்டம் – அஜ்மேர், உதைப்பூர் மற்றும் ஜோத்பூர்//
      சரியாத்தானே சொல்லி இருக்கார்??????

      நீக்கு
    2. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. எழுதி வைத்ததை அப்படியே வெளியிட்டதில் வந்த தவறு. மாற்றி விட்டேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜே.கே ஜி!

      நீக்கு
    3. தவறாகத் தான் எழுதி இருந்தேன். நீங்கள் படிக்கு முன்னர் அவர் சொன்ன பிறகு சரி செய்து விட்டேன். அதனால் உங்களுக்குக் குழப்பம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  13. ராஜஸ்தான் பயணம் இனிமையாக இருந்திருக்கும். புஷ்கரின் மால்புவா சாப்பிட்டீர்களா? மலை உச்சிக்கெல்லாம் நாங்கள் போனதில்லை. கீழே இருந்தே சரோவரில் மட்டும் பல முறைகுளித்தோம்.அங்கே உள்ள தென்ன்நிதிய பாணிப் பெருமாள் கோயிலில் உள்ள பட்டாசாரியாரிடம் உணவுக்குச் சொல்லி வைச்சுடுவோம். அங்கே தான் எப்போப் போனாலும் சாப்பிட்டிருக்கோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மால்புவா நிறைய முறை சாப்பிட்டிருக்கிறேன் -அது ஏனோ எனக்குப் பிடிப்பதில்லை. புஷ்கரில் சாப்பிடவில்லை.

      பெருமாள் கோவிலுக்கும் செல்லவில்லை. அங்கே இருந்த நேரம் குறைவு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  14. பதில்கள்
    1. ஆமாம்... ராஜஸ்தானே தான்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  15. ராஜஸ்தானும் குழந்தை நடனமும் அழகு :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை சகோ.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....