சனி, 17 ஆகஸ்ட், 2019

காஃபி வித் கிட்டு – ஐந்தாயிரம் – கவிதை – குறட்டை – ஏட்டா பயணம்



காஃபி வித் கிட்டு – பகுதி – 41

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

நேற்று நடந்தவற்றை உங்களால் மாற்ற முடியாது. நாளை நடப்பதைத் தடுக்க முடியாது. இன்றைய பொழுதில் இக்கணத்தில் வாழுங்கள். அது தான் எல்லாத் துன்பங்களுக்கும் ஒரே தீர்வு – புத்தர்.

கோரா கேள்வி பதில்கள் - ஸ்வாரஸ்யம்:

கேள்வி: என்னிடம் ஐந்து ஆயிரம் ரூபாய் இருக்கிறது. அதைப் பெரிய தொகையாக மாற்ற நான் என்ன செய்ய வேண்டும்?

பதில்: 29,75,000

அதாவது 29 லட்சத்து 75 ஆயிரமாக என்னால் அதை மாற்ற முடியும். நான் அறிந்தவரை உங்கள் ஐயாயிரம் ரூபாய்க்கு மிக அதிகமான தொகை அவ்வளவுதான்.

எப்படி?

உங்கள் பணத்தை நான் இரானியன் ரியால் கரன்ஸியாக மாற்றித் தந்துவிடுவேன்! (1 ரூ = 595 இரானியன் ரியால்).

படித்ததில் பிடித்தது – கவிதை - திரு மகுடேஸ்வரன்:



முன்னொரு காலத்தில்
இப்புவிக்கோளம்
அடர்வனமாய் இருந்தது.

அக்கானகத்தில்
உன்னினத்தார் ஏறியாடாத
கனிமரங்களே இல்லை.

பிறகு
காடுகள் அழிந்து
கனிமரங்கள் அருகி
உன் இனத்தொகுதி
சுருங்கிற்று.

பல்லுயிர்க்கோளத்தில்
தான்விழுங்கி மனித இனம்
எங்கெங்குமாய்
நீக்கமற நிறைந்தது.

விளையும் பழங்கள்
அனைத்தையும்
பறித்து விற்றான்.

நீருக்கு
அணையிட்டு நிறுத்தி
ஆற்றின் நெடுவழியில்
காத்திருப்போர்
தொண்டை வறளச் செய்தான்.

குவளைக்குள் அடைத்து
பறவைக்கும் சொட்டுநீர்
இல்லை என்றான்.

உயிர்களெல்லாம்
உணவுக்கும் நீருக்கும்
அல்லாடின.

பயிர்களெல்லாம்
விதை மிஞ்சாது அழிந்தன.

மனிதர் கண்ணில்
பட்டவை எல்லாம்
தன்னியல்பு மறந்து
பிச்சையெடுத்தன.

அவனுடைய வேலையே
இன்னொருவரைப்
பிச்சையெடுக்க வைத்தல்தான்.

யானையே
தப்ப முடியாதபோது
நீதான் என்செய்வாய்...!

உயிருக்கு அஞ்சாமல்
ஒரு கொய்யாக் கீற்றுக்குக்
கையேந்தி இரந்து
நிற்றலைத் தவிர.

இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம் - குறட்டை:  
குறட்டை – விதம் விதமான குறட்டை விடும் சிலரைப் பார்த்ததுண்டு. இந்தப் பெண்மணியும் பாவம் – ஐந்து விதமான குறட்டை விடும் கணவரிடம் பாடுபடுகிறார். அவருடைய தேவை என்ன? பாருங்களேன்!



இந்த வாரத்தின் ரசித்த நிழற்படம்:



2010-ஆம் ஆண்டு தலைநகர் தில்லியில் உலா வந்த போது எடுத்த ஒரு நிழற்படம் – குதுப்மினார் பகுதியில் எடுத்தது! இடிபாடுகளுடன் கூடிய இதனால் என்ன பலன் என்று நினைக்கலாம் – சற்றே உன்னிப்பாகப் பாருங்கள் - எத்தனை புறாக்களுக்கு புகலிடம் அளித்திருக்கிறது இந்த இடம்!

பின்னோக்கிப் பார்க்கலாம் வாங்க:

இதே வாரத்தில் 2010-ஆம் ஆண்டு எழுதிய ஒரு பயணம் பற்றிய பதிவு. இப்போது பதிவுலகில் இருக்கும் பலரும் இந்தப் பதிவினை படித்திருக்கவில்லை – ஸ்ரீராம் உட்பட! உத்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு ஊருக்கு அடிக்கடி சென்று வந்ததைப் பற்றிய பதிவு இது! படிக்காதவர்கள் படித்துப் பார்க்கலாமே!


நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

20 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

    இன்றைய நிமிஷத்தில் வாழ்வோம் அருமையான வாசகம் இதை நாமே நமக்குச் சொல்லிக் கொண்டாலும் சில சமயங்களில் பழைய நினைவுகளுக்கு மனம் செல்கிறது. நல்லதாக இருந்தால் இன்பம். இல்லையேல் உணர்ச்சிகளின் பெருவெள்ளம் ஹா ஹா. ஆனால் அதிலிருந்து பிறப்பதுதான் கதைகளே இல்லையா ஜி..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கீதாஜி.

      உணர்ச்சிகளின் பெருவெள்ளம்! உண்மை தான். அந்த வெள்ளத்தில் பலரும் தத்தளிப்பது இயல்பு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. கோரா பதில் ஹா ஹா ஹா ஹா....ஸ்வாரஸ்யமான பதில்...காமெடி!!

    மனிதர் கண்ணில்
    பட்டவை எல்லாம்
    தன்னியல்பு மறந்து
    பிச்சையெடுத்தன.

    அவனுடைய வேலையே
    இன்னொருவரைப்
    பிச்சையெடுக்க வைத்தல்தான்.//

    மகுடேஸ்வரன் அவர்களின் கவிதை வரிகள் செம. இந்த வரிகள் யதார்த்தம்...மனிதன் சுயநலவாதி! பேராசை பிடித்தவன் என்பதை அழகாகச் சொல்லிவிட்டார்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோராவில் இப்படி சில ஸ்வாரஸ்யங்கள் உண்டு! பல தேவையற்றவை என்றாலும் இப்படியான ஸ்வாரஸ்யங்கள் காரணமாக இன்னும் தொடர்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  3. புகைப்படம் செம செம வெங்கட்ஜி!!!
    புறாக்களையும் காண முடிகிறது. அசாத்தியமாக இருக்கிறது ஜி படம். மிகவும் ரசித்தேன்..எதுவுமே வீண் இல்லை அதற்கு ஏதேனும் பயன்பாடு இந்தப் பூமியில் இருக்கும் என்பதை இயற்கை பல விதங்களின் நமக்குப் பாடம் எடுத்துக் கொண்டே தான் இருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /எதுவுமே வீண் இல்லை. அதற்கு ஏதேனும் பயன்பாடு இந்தப் பூமியில் இருக்கும்// 100% உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  4. காணொளியும், ஏட்டா பயணங்களும் பார்த்துவிட்டு வருகிறேன் ஜி. இன்று ப்ழைய பதிவுகளையும் வாசித்துவிடலாம் என்று நினைக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முந்தைய பதிவுகள் - முடிந்த போது வாசித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள் கீதாஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. //யானையே
    தப்ப முடியாதபோது
    நீதான் என்செய்வாய்...//

    கவிதை வரிகள் ஸூப்பர்.
    குறட்டை விடும் மனிதர்களால் பிறரும் பாவம், அவர்களும் பாவம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறட்டை விடும் மனிதர்கள் - பாவம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  6. அனைத்து பகுதிகளும் அருமை...

    குறட்டை காணொளி யம்மாடி...!

    ரசித்த வாசகம், அடுத்த பதிவின் படமாக வைத்துள்ளேன்...! வியப்பு...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த பதிவின் படமாக! மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  7. காலம்பரயே வந்தேன். ஆனால் கருத்திட முடியவில்லை. தொலைபேசி அழைப்பு வந்து விட்டது. பின்னர் வீட்டு வேலைகள். கோரா பதில் அருமை! படங்கள் எல்லாமும் அருமை. புறாக்களின் புகலிடம் மனதைக் கவர்ந்தது, மகுடேஸ்வரன் கவிதை அப்பட்டமான உண்மை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளியை மத்தியானமாப் பார்க்கணும். :)

      நீக்கு
    2. இன்றைய காஃபி வித் கிட்டு மிக அருமை. கோரா சூப்பர்.
      மகுடேஸ்வரனின் கவிதை வரிகள் யதர்த்தம்.

      முதுமலை சாலைகளில் பிச்சை எடுக்கும் யானையைப் பார்த்தும் மனம் நொந்தது நினைவுக்கு வருகிறது.

      புறாக்கள் சாமர்த்திய சாலிகள் .
      அந்தப் படம் மிகச் சிறப்பு.
      வாழ்த்துகள் வெங்கட்.

      நீக்கு
    3. தொலைபேசி அழைப்பு - :) சில சமயங்களில் வேறு வேலைகள் வந்துவிட்டால் படிப்பதை பாதியில் நிறுத்த வேண்டியிருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
    4. காணொளி - முடிந்த போது பாருங்கள் கீதாம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    5. உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி வல்லிம்மா... பயணம் இனிதே முடிந்திருக்கும் என நி நினைக்கிறேன். உங்கள் பதிவுகள் இனிமேல் தான் படிக்க வேண்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. ரசித்த வாசகம் அருமை.
    கவிதை, படங்கள், பழைய பதிவு அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....