செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

பெத்த மனம் பித்து…



நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இந்த நாளின் காலையில் உங்களை இப்பதிவின் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த நாளை இனியதொரு பொன்மொழியுடன் துவங்கலாம்…

பணிவுடன் பழகாதவனும், நாணத்தகும் செயல்களில் இருந்து விலகிக் கொள்ளாதவனும் உண்மையான மனிதனாக மாட்டான்நபிகள் நாயகம்


படம்: இவர் ஓம் பால் இல்லை! ஒரு குறியீடாக மட்டும்...

சூரஜ்… மூன்று பிள்ளைகளுக்குத் தகப்பன் – மூன்றில் முதல் இரண்டுமே பெண் பிள்ளைகள் – சில வருடங்களில் திருமணம் செய்து வைக்க வேண்டி இருக்கும் – வட இந்தியர்கள் பெண்ணுக்குப் பதினெட்டு வயது வருவதற்கு முன்னரே கூட திருமணம் செய்து வைத்து விடுவது வழக்கமாயிற்றே! சூரஜின் தந்தை ஓம் பால்… இரண்டு பேரையுமே நான் அறிந்திருந்தேன். இருவருக்குமே எனது அலுவலகத்தில் தான் வேலை – ஓம் பால் சில வருடங்களுக்கு முன்னர் பணி ஓய்வு பெற்றுவிட்டார். சமீபத்தில் ஓம் பால் அவர்களைப் பார்த்தேன் – அலுவலக வளாகத்தில் இருக்கும் வங்கிக்கு வந்திருந்தார். என்னைப் பார்த்ததும் வேகவேகமாக வந்து வணக்கம் சொன்னார். நான் இருந்த பிரிவிலேயே சில வருடங்கள் இருந்ததால் மரியாதையுடன் பேசுவார். தள்ளாத வயதில் எதற்கு வருகிறீர்கள், உங்கள் மகனை அனுப்பி இருக்கலாமே, சூரஜ் ஓய்வு பெற இன்னும் சில வருடங்கள் ஆகுமே என்று கேட்க, கண்களைக் கசக்கியபடியே பேச ஆரம்பித்தார் ஓம் பால் - சூரஜ் இன்னும் சில கழிந்து தான் பணி ஓய்வு பெறுவான் – அது வரை உயிருடன் இருந்தால்!

ஓம் பால் என்னோடு பேசும்போதெல்லாம் சொல்வார் – சூரியனைப் போன்று என் மகன் வாழ்க்கை பிரகாசமாக இருக்க வேண்டும் என்று நினைத்து தான் அவனுக்கு சூரஜ் எனப் பெயர் வைத்தேன். பெரிதாக படிப்பு ஏறவில்லை. எப்படியோ +2 வரை தேர்ச்சி பெற்ற சூரஜ்-க்கு எங்கள் அலுவலகத்தில் கெஞ்சிக் கூத்தாடி தற்காலிக வேலை வாங்கிக் கொடுத்தார் ஓம் பால். அப்போதெல்லாம் இப்படி தற்காலிக வேலையில் சேர்ந்து நான்கு ஐந்து வருடங்கள் பணிபுரிந்தால் நிரந்தரமாக்கப்படும் வசதி இருந்தது அரசுப் பணியில் – பெரும்பாலும் கடை நிலை ஊழியர் பணி தான். சூரஜ் பணியில் சேர்ந்து ஆறு வருடங்களுக்குப் பிறகு நிரந்தர அரசு ஊழியர் ஆனார். ஓம்பால் காலாகாலத்தில் அவருக்குத் திருமணமும் செய்து வைத்தார். வேலை இருக்கிறதா, நிரந்தரமா இல்லையா, எனப் பார்க்காது இங்கே இப்படி மகன்களுக்குத் திருமணம் செய்து வைப்பது சாதாரண நிகழ்வு! வரப் போகும் பெண்ணைப் பற்றியோ, அவர்கள் வாழ்க்கை பற்றியோ எந்தக் கவலையும் இல்லை – எல்லாம் ஊpபர்வாலா dhதேக்லேஹா! [மேலே இருப்பவன் பார்த்துக் கொள்வான்] என்ற கொள்கைதான்!

ஓம் பால் பணி ஓய்வு பெற்ற சில வருடங்களுக்குப் பிறகு என் பிரிவில் சூரஜ்-க்கும் பணி மாற்றம் வந்தது. இரண்டு வருடங்கள் ஒரே பிரிவில் தான் இருந்தோம். தனது தந்தையும் எனக்குத் தெரிந்தவர் என்று தெரிந்திருந்த சூரஜ் என்னிடம் மிகுந்த மரியாதையுடன் தான் பழகுவார். அவ்வப்போது ஓம் பால் பற்றி விசாரிப்பதும் உண்டு. எங்கள் பிரிவில் இருந்த போதே வாரத்தில் ஒரு நாளாவது மாலை நேரத்தில் சக கடை நிலை ஊழியர்களுடன் சேர்ந்து குடிப்பதைத் தெரிந்து கொண்ட நான் ஒரு நாள் சூரஜை அழைத்து இந்தப் பழக்கம் சரியல்ல, உனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உண்டு என்பதை மறக்காதே என்று சொல்லியது உண்டு. என்னுடன் பணிபுரிந்த வேறு சிலரும் அவருக்கு அவ்வப்போது அறிவுரை கூறி அவர் குடிப்பழக்கத்தினை கட்டுக்குள் வைத்திருந்தார்கள். வாரத்தில் ஒரு நாள் மட்டும் என எங்களிடம் சொல்வார். சரி கொஞ்சம் கொஞ்சமாக அதையும் விட்டு விடவேண்டும், இல்லையெனில் உன் வேலைக்கு உத்திரவாதம் இல்லை என்று சொல்லி இருந்தோம்.

கால ஓட்டத்தில் நான் வேறு அலுவலகத்திற்கு மாற்றல் ஆகிப் போக, சூரஜ் அதே அலுவலகத்தில் இருந்தார். எங்களுக்குள் சந்திப்பே நடக்கவே இல்லை! கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் உருண்டோடிவிட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில் சேர்க்கை சரியில்லாமல் குடிப்பழக்கம் மிகவும் அதிகமாகி தினம் தினம் ஒரு பௌவா [Quarter] குடிக்கும் அளவு ஆகி அதுவும் அdhத்dhதாவில் [Half] குடிக்கும் பழக்கமாகி இருக்கிறது. ஒவ்வொரு நாளும் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்வதும், காலையிலேயே குடித்துவிட்டு அலுவலகத்திற்கு வருவதும், சண்டை போடுவதும் என குடி கொஞ்சம் கொஞ்சமாக அவரை அழிக்க ஆரம்பித்து இருக்கிறது. பெண்ணுக்குத் திருமணம் செய்வதற்கென அவர் மனைவி சிறுகச் சிறுகச் சேமித்து வைத்திருந்த பணத்தினைக் கூட திருடிக் கொண்டு போய் குடித்து அழித்து இருக்கிறார் சூரஜ். 

மனைவி, மகள்கள், மகன், பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள் என அனைவரிடமும் சண்டை. எத்தனை சொல்லியும் கேட்காமல் குடித்துக் குடித்து உடல் நிலையும் கெட்டுப் போக, மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து இருக்கிறார்கள். ஓம் பால் இவரை ஒரு De-addiction Centre-ல் சேர்த்து பதினைந்து நாட்கள் அங்கே தங்கி சிகிச்சையும், counselling-உம் முடித்து ஒரு வழியாக குடிப்பழக்கத்திலிருந்து மீண்டு சில நாட்கள் விடுமுறையில் வீட்டில் இருந்திருக்கிறார். அலுவலகத்திலும் ஓம் பால் வந்து சொல்லி, பழைய பிரிவிலிருந்து வேறு கட்டிடத்தில் இயங்கும் அலுவலகத்திற்கு மாற்றி இருக்கிறார்கள். ஆறு மாதம் கூட தாண்டவில்லை! மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக வீட்டிற்குத் தெரியாமல் குடிக்க ஆரம்பித்து பழையபடியே மொடாக் குடியராக மாறி விட்டார் சூரஜ். இந்த நிலையில் தான் ஓம் பால் என்னைச் சந்தித்தது.

மகனைப் பற்றி நான் கேட்டதும் பொங்கி விட்டார். எல்லா செய்திகளையும் சொல்லி “எனக்குத் தாங்கல! அவனோட பொண்ணுங்க வாழ்க்கையை நினைச்சு தான் கவலையா இருக்கு… நான் இருக்கிற வரை வர ஓய்வூதியம் வைச்சு மூணு வேளை ரொட்டி-சப்ஜி கொடுக்க முடியும். அதுக்கப்புறம்… எத்தனை நாளைக்கு வயசுக்கு வந்த பொண்ணுங்களை வீட்டுல வச்சுக்க முடியும்? ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிட்டா அந்தப் பொண்ணுங்களை யாரு கட்டிப்பா?” என்று புலம்பிக் கொண்டிருந்தார். மகனைப் பார்த்தால் கொஞ்சம் அறிவுரை சொல்லுங்கள் என்று சொன்னவரை, அலுவலக உணவகம் அழைத்துச் சென்று தேநீர் வாங்கிக் கொடுத்து ஆஸ்வாஸப் படுத்தி அனுப்பி வைத்தேன். அவராகத் திருந்தாத பட்சத்தில் என்னால் மட்டும் என்ன செய்து விடமுடியும். இருந்தாலும் பார்த்தால் சொல்லிப் பார்க்கலாம் என நினைத்து இருக்கிறேன்.

சற்று நேரம் அங்கேயே நின்று அவர் போவதை பார்த்துக் கொண்டிருந்தேன். எத்தனையோ நம்பிக்கைகளோடு வளர்த்த மகன் இப்படி குடிகாரனாக மாறி இருப்பதை நினைத்து நினைத்து நொந்து போன ஓம் பாலின் நடை அவரது வயதுக்கும் மீறி அதிகமாகவே தளர்ந்து இருந்தது…
  
நண்பர்களே, இன்றைய பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.  நாளை வேறொரு பதிவில் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

24 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.

    முதலில் ஞாயிற்றுக்கிழமைக்காக வைத்திருந்த பதிவோ? பொன்மொழி நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

      ஞாயிறு - :) மாற்றி விட்டேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. சில நேரங்களில் பெயர்ப்பொருத்தம் நேர்மாறாக அமைந்து விடும். கண்ணாயிரம் என்பார்கள். சுந்தரம் என்பார்கள்.. அதுபோல ஆகிவிட்டது போலும் சூரஜ் பெயர். அந்தப் பெயர் ஒரு அருமையான ஹிந்திப்பாடலை எனக்கு நினைவு படுத்தியது. ஏக் ஃபூல் தோ மாலி படத்தில் வரும் "துஜே சூரஜ் கஹும் யா சந்தா " பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயர் பொருத்தம் - இப்படித்தான் பல பொருத்தமற்ற பெயர்கள் கேட்டதுண்டு.

      துஜே சூரஜ் கஹூம் யா சந்தா பாடல் இனிமையான பாடல். நானும் பாடலை ரசித்ததுண்டு ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. என்னதான் இருக்கிறதோ அந்தக் குடியில்... இப்படி அடிமை ஆகி விடுகிறார்கள். என் அலுவலகத் தோழியின் கணவர் பெரிய திறமைசாலி. குடியினால் அடிமைப்படுத்தப்பட்ட அவர் சென்ற ஏப்ரலில் மறைந்தார். மரியாதை கெட்டு, உறவுகள் கெட்டு, நட்பு கெட்டு... பரிதாபம்தான். அவர்களாகத் திருந்தா விட்டால் திருத்த முடியாது. இவரும் டி அடிக்ஷன் சிகிச்சை சென்று வந்து மீண்டும் ஆரம்பித்தவர்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //என்னதான் இருக்கிறதோ அந்தக் குடியில்...// எனக்குத் தெரிந்து ஒன்றும் இல்லை!

      உங்கள் அலுவலகத் தோழியின் நிலை பரிதாபம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. அவருடைய தளர்வினை நாங்களும் உணர்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  5. //ஓம் பாலின் நடை அவரது வயதுக்கும் மீறி அதிகமாகவே தளர்ந்து இருந்தது…//

    மனக்கவலை இப்படித்தான் ஆளை மாற்றி விடும்.
    சூரஜ் தன் தகப்பன், பெண் குழந்தைகளை நினைத்து திருந்தவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனக்கவலை இப்படித்தான் ஆளை மாற்றி விடும் - உண்மை தான் கோமதிம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. குடி குடும்பத்தை கெடுக்கும் என்பதற்க்கு இது ஒரு சரியான உதாரணம். சூரஜ் சரியான பாதையில் செல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குடி குடும்பத்தைக் கெடுக்கும்! சோகம் தான் இவர்களது வாழ்க்கை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி!

      நீக்கு
  7. இந்நிலையை மாற்ற அரசால் மட்டுமே இயலும் ஜி. வருந்தி பயனில்லை எனக்கு கோபம்தான் வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மது விற்பனை மூலம் காசு கிடைக்கும் ஒரே காரணத்தால் எந்த அரசும் விற்பனையை தடை செய்யாது என்பது வருத்தமான உண்மை கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. பாவம் அந்த மனிதர்...
    அவருக்காக வருத்தம் கொள்கிறது மனசு.
    அரசு அதில்தான் வருவாய் என்று நினைத்து நகரும் போது நாம் வருந்தியும் பயனில்லைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருந்துவதில் பயனில்லை.... வருவாய் எனும் கோணத்தில் மட்டுமே பார்க்கும் அரசாங்கம்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  9. என்ன சொல்வது என்றே தெரியவில்லை. மது குடிப்பதை அரசு தடை செய்தால் ஒழிய இப்படியான குடும்பங்கள் பெருகுவதைத் தடுக்க முடியாது. பரிதாபம் தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசு தடை செய்ய வேண்டும். மக்களும் திருந்த வேண்டும். பரிதாபமான நிலை தான் கீதாம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. நம் ஊரிலேயே எத்தனை குடும்பங்கள்.
      இந்தக் குடியினால் சீரழிந்து போயிருக்கிறது.
      எமெர்ஜென்சி வந்த போது ,சந்தோஷப்பட்டவர்களில் எங்கள் வீட்டுக்கு உதவிக்கு வரும் பெண்தான்.
      நல்லா இருக்கார்மான்னு கண்ணீர் விடுவாள்.
      கடவுளே காக்க வேண்டும்.

      நீக்கு
    3. உங்கள் வீட்டுக்கு உதவிக்கு வந்த பெண் - பாவம். அரசு வருமானம் என்ற எண்ணத்தினை மட்டுமே நோக்குகிறது - அப்படி வந்தால் தான் இலவசங்களை அள்ளி வீச முடியும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா..

      நீக்கு
  10. எங்கள் அலுவலகத்தில் இதுபோல் குறைந்தது பத்து பேராவது இருந்தார்கள். பிள்ளைப் பாசத்தால் வருதி அணுஅணுவாகச் செத்தவர்கள் அவர்கள். மது தான் முக்கியக் காரணமாக இருந்தது, அவர்களின் பிள்ளைகள் விஷய்த்தில். ஒரு குடும்ப்த்தில் மகனும் மருமகளும் சேர்ந்தே குடித்துக் குட்டிச்சுவாரானார்கள். .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிள்ளைப் பாசத்தால் வருந்தி அணுஅணுவாகச் செத்தவர்கள்.... சோகம் தான்.

      மது - பல குடும்பங்களை சீரழிக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராய செல்லப்பா ஐயா.

      நீக்கு
  11. பெரியவர் பாவம். மதுபானத்தை ஒழிப்பதற்கு வழியே இல்லையோ?

    துளசிதரன்

    வெங்கட்ஜி இந்த கவுன்சலிங்க் எல்லாம் எல்லோருக்கும் வொர்க் அவுட் ஆவதில்லை. சில நாட்களில் மீண்டும் வந்துவிடுகிறது. குடிக்கு அடிமையாகிவிட்டால் அவர்கள் மண்டைக்குள் ஏதோ ஒன்று குடைந்து கொண்டே இருக்குமாமே.

    அவர்களாக உணர்ந்து திருந்தினால்தான் உண்டு என்னதான் கவுன்சலிங்க் எல்லாம் சென்றாலும்..

    பாவம் ஓம் பால். அந்தச் சிவப்பு எழுத்துகள்...அதுவரை உயிருடன் இருந்தால்...மனம் என்னவோ செய்துவிட்டது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரியவர் பாவம் தான். அவர்களாகப் பார்த்து திருந்தாவிட்டால் ஒன்றும் செய்வதற்கில்லை. அரசாங்கம் விற்பனையை நிறுத்த வேண்டும். அரசாங்க விற்பனை நின்றால் கள்ளச் சாராயம் காய்ச்சுவார்கள். அவர்களுக்கும் கடுமையான தண்டனையை தர வேண்டும். இதெல்லாம் நடக்கும் என்று தோன்றவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....