திங்கள், 5 ஆகஸ்ட், 2019

டிஜிட்டல் கேண்டீன் – கீதா கல்யாணம் – கிண்டில் வாசிப்பு




அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

உலக வரைபடத்திலுள்ள மூலை முடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறீர்களா, ஒரு நூலகத்துக்குச் செல்லுங்கள்டெஸ்கார்டஸ்.

சமீபத்தில் கிண்டில் வாங்கியது பற்றி ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை… என்ற பதிவில் எழுதி இருந்தேன். கிண்டில் வந்ததும் முதலில் தரவிறக்கம் செய்தது பொன்னியில் செல்வன் பகுதி 1 தான். சமீபத்தில் கிண்டிலில் படித்த இரண்டு புத்தகங்கள் பற்றி இன்றைக்கு இங்கே பார்க்கலாம். இது விமர்சனம் அல்ல என்பதை முன்கூட்டியே சொல்லி விடுகிறேன்.

டிஜிட்டல் கேண்டீன் – இரா முருகன்:



கல்கி வார இதழ் மற்றும் தமிழ் ஹிந்தி நாளிதழ் ஆகிய இரண்டிலும் இரா. முருகன் அவர்கள் எழுதி வெளியான அறிவியல் கட்டுரைகளை தொகுத்து டிஜிட்டல் கேண்டீன் என்ற பெயரில் மின்னூலாக வெளியிட்டு இருக்கிறார்கள். முகநூலில் எதையோ பார்த்துக் கொண்டிருந்த போது தற்செயலாக – இந்தப் புத்தகம் விலையில்லாமல் அன்றைய ஒரு நாள் மட்டும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் எனப் பார்த்த உடன் தரவிறக்கம் செய்து படித்த புத்தகம். இவரது சில கட்டுரைகளை முன்னரே படித்திருக்கிறேன் என்பதாலும் தரவிறக்கம் செய்து கொண்டேன். அறிவியல் கட்டுரைகளை எளிதாக எழுதுவது ஒரு கலை. அது இவருக்கு நன்கு வருகிறது. பல புதிய விஷயங்களை இந்தப் புத்தக வாசிப்பின் மூலம் தெரிந்து கொண்டேன். “பூவெல்லாம் ஏலம் கேட்டுப் பார்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையிலிருந்து சில வரிகள்…

“பறித்த 24 மணி நேரத்துக்குள் ஆம்ஸ்டர்டாம் நகரை அடைந்து, தினசரி 3 கோடி மலர்கள் ஏலம் கேட்கப் படுகின்றன.”

”மலர் உற்பத்தியாளர்கள் 6000 பேர் இணைந்து எழுப்பி நிர்வகிப்பது ஆல்ஸ்மீர் பூச்சந்தை. அங்கே, மாபெரும் திரையரங்குகள் போல் வரிசையாக இருக்கைகள் அமைந்த மலர் ஏல மண்டபங்கள் உண்டு. அவற்றில் ஏலம் கேட்க வந்த, விற்க வந்த வணிகர்கள் சாரிசாரியாக அமர்கிறார்கள்.”

”பூ ஏல அமைப்பை இயக்கும் மென்பொருள், ஒவ்வொருவர் முன்னும் நான்கு மொழிகளில் தொடு திரையில் விரிகிறது. ஒவ்வொரு மலர் குவியல் ஏலத்தின் போதும், என்ன மலர், அளவு எவ்வளவு, அதிக பட்ச விலை ஆகியவை திரையில் தெரியும். எல்லாமே கணினி மென்பொருள் மூலமாகத் தான்.”

”சில நொடிகளில் விலை படிந்து டன் கணக்கில் விமானங்கள் மூலம் அமெரிக்கா, ஃப்ரான்ஸ், பிரிட்டன், கென்யா என பல நாடுகளையும் விரைவாக அடைந்து மொத்த, சில்லரை விற்பனைக்கு வருகின்றன.”

டிஜிட்டல் நாக்கு, டிஜிட்டல் மோப்ப நாய், வங்கி-2015, உருவமில்லா பணம், மீன் வாங்கவும் மின் வர்த்தகம் என நிறைய அறிவியல் கட்டுரைகள் இப்புத்தகத்தில் உண்டு. விருப்பமிருப்பவர்கள் தரவிறக்கம் செய்து படிக்கலாம். கிண்டில் இல்லாவிட்டாலும், ஆண்ட்ராய்ட் அலைபேசிகளில் கிண்டில் மென்பொருள் தரவிறக்கம் செய்து புத்தகங்களை வாசிக்கலாம். இப்புத்தகத்தின் விலை ரூபாய் 69/- மட்டும்.

கீதா கல்யாணமே வைபோகமே – கீதா சாம்பசிவம்



எண்ணங்கள் வலைப்பூவில் எழுதி வரும் கீதாஜி அவர்களின் திருமண நிகழ்வுகளைப் பற்றி வலைப்பூவில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து மின்நூலாக வெளியிட்டு இருக்கிறார்கள். த. ஸ்ரீனிவாசன் அவர்களின் இடைவிடாத முயற்சியால் அவரது தளமான WWW.FREETAMILEBOOKS.COM மூலம் நல்ல பல நூல்களை மின்னூல்களாக வெளியிட்டு வருகிறார்கள். இந்தத் தளத்தில் சமீபத்தில் வெளியானது தான் இந்த கீதா கல்யாணமே வைபோகமே புத்தகமும். எனது மின்னஞ்சல் முகவரியை அங்கே பதிவு செய்து வைத்திருப்பதால் ஒவ்வொரு புத்தகம் வெளியானதும் மின்னஞ்சல் மூலம் தகவல் வந்து விடும். இந்தப் புத்தகம் வெளியானதும் தரவிறக்கம் செய்து கொண்டேன். ஒன்றிரண்டு நாளில் படித்தும் முடித்து விட்டேன்.

திருமணங்கள் – அவரது திருமணம் எப்படி நிச்சயம் செய்யப்பட்டது, என்னென்ன வைபவங்கள் நடந்தன, அந்த நிகழ்வுகளில் அவருக்குக் கிடைத்த அனுபவம், மறதியாகக் கழட்டி வைத்த நகைகள், பெண்பார்க்கும் நாளில் நடந்தவை, திருமண நிகழ்வுகள் என பலவற்றையும் எழுதி இருக்கிறார் இந்தக் கட்டுரைத் தொகுப்பில். பெண் பார்க்க ஆரம்பித்ததிலிருந்து குடித்தனம் வைக்கும் வரை பல நிகழ்வுகளும் இந்தக் கட்டுரைத் தொகுப்பில் உண்டு. ஆங்காங்கே சில படங்கள் சேர்த்திருந்தாலும், அவை எதுவுமே சரியாக வரவில்லை! சில இடங்களில் பிழைகளும் உண்டு. தொகுப்பினைச் சேர்க்கும்போது சரிபார்க்கவில்லை என்று தோன்றுகிறது. இப்படிச் சில குறைகள் இருந்தாலும், அந்தக் காலத்துத் திருமணம் பற்றிய பல விஷயங்களை இந்த மின்னூல் வழியே நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். இந்த மின்னூலை கணினி, அலைபேசி, கிண்டில் என மூன்றிலும் தரவிறக்கம் செய்து படிக்க வசதி உண்டு. தரவிறக்கம் இலவசமாகவே செய்து கொள்ளலாம்!

நண்பர்களே, இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவில் மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

28 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி !!!

    கிண்டில் வாசிப்பு வைபவம் தொடங்கியாச்சா! சூப்பர்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதாஜி! வாசிப்பு வைபவம் தொடங்கியாச்ச்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. அறிமுகங்கள் நன்று ஜி

    எங்கள் தள மின் அஞ்சலும் ஃப்ரீ புக்ஸ் தளத்தில் பதிந்திருப்பதால் அக்காவின் புத்தகம் பெட்டிக்கு வந்தது. தரவிறக்கம் செய்தாச்சு. வாசிக்க வேண்டும்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்... புத்தகம் வெளியானதும் தகவல் வந்து விடுவது நல்லது. முடிந்த போது வாசியுங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  3. அருமையான அறிவுரை இன்றைய வாசகம்.

    குட்மார்னிங் வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம். இன்றைய வாசகம் உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. இரா முருகன் பேஸ்புக்கில் அவர்நது நண்பனாக என்னை ஏற்றுக்கொண்டிருக்கிறார். புகழ்பெற்ற எழுத்தாளர். அவரது மகன் சமீபத்தில் ஐபிஎல் தொடரில் கூட விளையாடினார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம். அவரது மகன் ஐ.பி.எல். தொடரில் விளையாடியது எனக்கும் தெரியும். மனைவி வழி உறவினரின் நண்பர் இரா முருகன் அவர்கள். அதனால் தெரியும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. கீதா அக்காவின் புத்தகம் நானும் இறக்கிக்கொண்டிருக்கிறேன். இன்னும் படிக்கத்தான் இல்லை. படிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது வாசியுங்கள் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. //எனது மின்னஞ்சல் முகவரியை அங்கே பதிவு செய்து வைத்திருப்பதால் ஒவ்வொரு புத்தகம் வெளியானதும் மின்னஞ்சல் மூலம் தகவல் வந்து விடும். //

    நானும் மின் அஞ்சல் தொடரும் ஆப்ஷன்கொடுத்துவிட்டேன் அங்கே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லது. ஒவ்வொரு புத்தக வெளியீடு சமயத்திலும் உங்களுக்குத் தகவல் வந்து விடும். பிடித்தவற்றை தரவிறக்கம் செய்து வாசிக்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. எங்கே பிழைனு சொல்லுங்க. நான் தொகுத்துக் கொடுக்கும்போது திருத்தினேன். அவங்களும் பிழை பார்த்தேன்னு சொன்னாங்களே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒன்றும் பெரிதாக இல்லை கீதாம்மா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. கட்டுரையின் சில வரிகளே வியப்பை தருகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  9. அருமையாக சொல்லிச் சென்ற விசயங்கள்.

    கீதா கல்யாண வைபோகமே...
    நானும் தரவிறக்கம் செய்வேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டாவது சொன்ன தளத்திலும் நிறைய புத்தகங்கள் உண்டு கில்லர்ஜி. முடிந்தபோது தரவிறக்கம் செய்து வாசிக்கலாம் - அலைபேசி வழியோ அல்லது கணினி வழியோ கூட.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. போனஜென்மத்து தம்பதிகள் இந்த ஜென்மத்திலும் இணைந்து வாழும் பேறு பெற்றவர்களைப்பற்றி படித்து கொண்டு இருக்கிறேன் வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... மகிழ்ச்சி கோமதிம்மா... ஜோசியர் சொன்னதை சரியாகக் குறிப்பிட்டு இருக்கிறீர்கள்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. கீதா சாம்பசிவம் அவர்களுக்கு இங்கும் வாழ்துகளை கூறிக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  12. கீதாவின் புத்தகத்தை வாசித்துப் பின்னூட்டமும் இட்டாச்சு.
    இந்தப் புத்தகம் பரம்பரை வழக்கங்களைப் பற்றிச் சொல்வதால் பாதுகாக்கப் படவேண்டிய ஒன்று.
    மிக எளிமையாக சுவாரஸ்யமாக எழுதி இருக்கிறார்.
    மனம் நிறை வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரம்பரை வழக்கங்களைச் சொல்லும் புத்தகம் - உண்மை வல்லிம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. பதில்கள்
    1. ஆமாம் ஐயா. வாசிப்பு நல்லது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. நல்ல அறிமுகம் ...


    இப்படி சில பல டவுன்லோட் கிண்டில் லில் காத்து இருக்கின்றன ...வாசிப்பிலேயே வெகு நேரம் செல்கிறது இப்பொழுது எல்லாம் ..

    கீதா மா புத்தகமும் தரவிறக்கம் செய்துவிட்டேன்.. இனி வாசிக்கணும்

    பதிலளிநீக்கு
  15. இப்படி வாசிப்பது மனதுக்கு மகிழ்ச்சி தருகிறது. நீங்களும் வாசிக்கிறீர்கள் என அறிந்து மகிழ்ச்சி.

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனு ப்ரேம்ஜி.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....