அலமேலு….
அலமேலு போல வருமா… அவளோட கைப்பக்குவம், நறுவிசு, சுத்தம் இதெல்லாம் வேறு
யாருக்குமே வராது… அவ ரசம் வைச்சு சாப்பிடணும்… ரசம் கொதிக்கும்போதே அதன் சுவை
நாசி நரம்புகளில் ஏறும்… தெருவே அலமேலு மாமி ரசம் வைக்கறாங்கன்னு தெரிஞ்சுக்கும்.
அப்படி ஒரு ரசம் வைப்பா அலமேலு… நினைவுகளில் மூழ்கினார் ராமு தாத்தா.
ராமு
தாத்தா – அலமேலு பாட்டி கதை கேட்கும் ஸ்வாரஸ்யத்துடன் காத்திருந்தேன் நானும். ராமு
தாத்தா கிட்ட தான் கணிதப் பாடம் கத்துக்க என் பொண்ணு போயிட்டு இருந்தா. வயது
எண்பதுக்கு மேல் என்றாலும் இன்னிக்கும் தாத்தா ட்யூஷன் எடுத்துட்டு இருக்காரே.
நான் கூட இத்தனை வயசுக்கு அப்புறம் தாத்தாவுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? நிம்மதியா
ஓய்வெடுக்கலாமேன்னு நினைத்தது உண்டு. அரசாங்கத்திலிருந்து ஓய்வு பெற்றவர் என்பதால்
ஓய்வூதியமும் வருமே? அப்படி வந்தும் போதலையா என்ன? வீட்டுல தாத்தா பாட்டி மட்டும்
தானே? அவருக்கு பசங்க யாரும் இல்லையோ? இல்லை இருந்தும் இப்படி தனியா இருக்கட்டும்னு
விட்டுட்டாங்களோ? இப்படி நிறைய கேள்விகள் எனக்குள் உண்டு. ஒரு சில
கேள்விகளுக்காவது இன்றைக்கு விடை பெற்றுவிடவேண்டும் என்ற எண்ணத்தில் நான்
காத்திருந்தேன்.
அலமேலு
மாமி கோவிலுக்கு போயிருந்த நேரத்தில் தான் நான் அங்கே தாத்தாவுடன் பேசிட்டு
இருந்தேன். மாமி இருந்தா இந்த மாதிரி சுலபமா தாத்தோவோட பேசிட முடியாது! மாமாவும்
ஒரு சிரிப்பில் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் மழுப்பிடுவார்! மாமியின் ஒவ்வொரு
பார்வைக்கும் அர்த்தம் அவருக்கு அத்துப்படி! எத்தனை வருட தாம்பத்தியம்
அவர்களுடையது! ”எல்லாரும் என்னை Henpecked Husband-னு நினைச்சுண்டு இருக்கா… ஆனா
எனக்கு தானே தெரியும். அவ இல்லாம நான் இல்லைன்னு”. என்னோட ஒவ்வொரு விஷயத்திலும்
பார்த்துப் பார்த்து சரி செய்தது அலமேலு தானே. என்னிடம் இருந்த பல குறைகளைச் சரி
செய்யாம விட்டிருந்தா இப்படி இன்ப மயமான வாழ்க்கை அமைஞ்சிருக்குமா என்ன? இந்த இன்ப
மயமான வாழ்க்கைக்கு ஹென்பெக்டா இருக்கறதுதான் வழின்னா அப்படி இருக்கறதுல தப்பே
இல்லடா…
கல்யாணத்துக்கு
முன்னாடியே எனக்கு அரசாங்க வேலை. வெள்ளைக்கார பாஸ்… அவனுங்களோட பழகிப் பழகி
எனக்கும் சிகார், மதுன்னு எல்லா பழக்கமும் இருந்தது. கல்யாணத்துக்கு முன்னாடி
ஊதாரித்தனமான செலவு தான். நாளைக்கு வேணும்னு சேர்த்து வைக்கற பழக்கமே எனக்குக்
கிடையாது. எல்லாமே ஆடம்பரம் தான். இருக்கற வரைக்கும் செலவு பண்ணுவோம், நாளைக்குக்
கதையை நாளைக்கு பார்த்துக்கலாம்னு ஒரு சித்தாந்தம் எனக்கு. அரசாங்க வேலையில
இருந்ததால, ஜமீந்தாரா இருந்தவர் வீட்டுல இருந்து பெண் எடுத்தாங்க எங்க வீட்டுல.
ஆமாம். அலமேலுவோட அப்பா நிலம் நீச்சோடு, ஆள் பலமும் நிறைய இருந்த வீட்டுல இருந்து
தான் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா. அப்பவே எட்டுக்கல் பேசரி, வைரத் தோடு, கைகொள்ளா
வளையல்கள், மாங்கா மாலை, ஒட்டியாணம்னு நிறைய நகைகள் போட்டுட்டு வந்தா அலமேலு.
கொஞ்சம்
குண்டா இருந்தா இன்னும் நிறைய தங்கம் கிடைச்சிருக்கும்னு கிண்டல் பண்ணுவேன் அவளை…
போங்கோன்னா என்று முகத்தை தாடையில் முட்டிக் கொண்டு போவது அவ்வளவு அழகா இருக்கும்
தெரியுமோ? அதைப் பார்க்கறதுக்காகவே அப்பப்ப ஏதாவது இப்படிச் சொல்லி அந்தக்
காட்சியை ரசிப்பேன் தெரியுமா? பாவம் நான் வேணும்னே இப்படிச் செய்யறேன்னு கூட
அவளுக்குத் தெரியாது! மீண்டும் நினைவுகளில் மூழ்கினார் ராமு தாத்தா.
சமையல்
கட்டு பார்த்தா, சமைச்சு முடிச்சதா தெரியவே தெரியாது. அவ்வளவு சுத்தமா இருக்கும்.
சமைச்சு முடிச்சப்புறம் கூட அங்கே அவள் கைமணம் வீசிக் கொண்டிருக்கும் தெரியுமா?
மேடையெல்லாம் தொடச்சு, பாத்திரம் அலம்பி, கவுத்து, எடுத்து வைக்கறதுக்கு முன்னாடி
அதை துடைச்சு வச்சு, அப்படிப் பார்த்துப் பார்த்து வேலை செய்யறது அலமேலுவோட
ஸ்பெஷாலிடி. வீட்டுல எப்ப யாரு வந்தாலும் ஒரு தூசு தும்பு பார்க்க முடியாது.
அவ்வளவு சுத்தமா இருக்கும். படுத்து எழுந்தா உடனேயே படுக்கையைச் சரி பண்ணிட்டு
தான் அடுத்த வேலை. எல்லாத்துலயும் சுத்தமா இருக்கணும் அவளுக்கு. வீடு மட்டும்
இல்லாம, நாங்க ரெண்டு பேரும் கூட எப்பப் பார்த்தாலும் ஃப்ரெஷா இருக்கணும்னு
சொல்வா. உனக்கு ஒரு விஷயம் தெரியுமோ? என்னோட வேஷ்டி தும்பப் பூ மாதிரி இவ்வளவு
வெள்ளையா இருக்கேன்னு கேப்பாங்க… இப்படித் தோய்க்கறதுக்குக் கூட அவ கிட்டதான்
கத்துக்கிட்டேன்.
ஏனோ
தானோ எந்த வேலையும் செய்யக் கூடாது. எல்லாத்துலயும் ஒரு ஒழுங்கு வேணும். துணி
தோய்ச்சு காயப்போடுவது கூட இப்படித்தான். நீவி நீவி அழகா ஒலர்த்தி மடிச்சு எடுத்து
வச்சா அப்படி ஒரு வாசனை அந்த துணியில வரணும். இப்படி எல்லாத்துலயும் சுத்தம்.
எல்லாத்துலயும் சுத்தம் பார்க்கிற அலமேலு, என்னையும் அப்படியே மாத்தினா. என்னோட பல
நடவடிக்கைகள் அவளால தான் சரியாச்சு. இப்படிப் பார்த்துப் பார்த்து செய்யற மனைவி
அமையறது ஒரு சுகம் டா கண்ணா… அந்த சுகம் எல்லாருக்கும் அமைஞ்சுடறது இல்லை. எனக்கு
அமைஞ்சது அதுக்கு நான் அந்த ஆண்டவனுக்கு தான் நன்றி சொல்லணும் – அலமேலு கிட்ட
சொன்னா, “போறுமே… இன்னிக்கு என்ன ரொம்ப கொஞ்சறதுன்னு” கேட்டுட்டு ஒரு சிரிப்பு
சிரிச்சுட்டு நகர்ந்துடுவா. இவ்வளவு சுத்தம் பார்க்கற அலமேலுவுக்கு கிடைச்ச மருமக…
அந்த விஷயத்தில அவளாலே ஒண்ணுமே பண்ண முடியலடா…
என்னை
மாதிரியே தான் பையனை வளர்த்தா. நல்லா படிச்சு பெரிய உத்யோகம் கிடைச்சது. நல்ல
சம்பாத்யம். நம்ம வீட்டுக்குத் தகுந்தா மாதிரி பெண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணி
வச்சுட்டா நிம்மதியா இருக்கலாம்னு சொல்லுவா அலமேலு. நாங்களும் பார்த்துட்டு தான்
இருந்தோம். தெரிஞ்சவங்க கிட்ட எல்லாம் சொல்லி வச்சுருந்தோம். ஆனால் அதுக்கெல்லாம்
அவசியமே இல்லாம போச்சு. பையனோட அலுவலகத்தில் வேலை பார்க்கற ஒரு பார்சி பொண்ணை
பிடிச்சுருக்கு, அவளை தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்லிட்டான். என்னதான்
கிராமத்துல இருந்து வந்தாலும் அலமேலு முற்போக்குவாதி.
”வாம்மா…
வந்து மகராசியா என் பையனோட குடும்பம் நடத்துன்னு” சொல்லிட்டா அலமேலு. ஆனா அந்த
மகராசிக்கும் அலமேலுவுக்கும் சுத்தமா ஒத்து வரவே இல்லை – அவ அவ்வளவு சுத்தம்!
எந்தப்
பொருளை எடுத்தாலும் வச்சது வச்ச இடம், போட்டது போட்ட இடம். எல்லா வேலைகளிலும்
ஒழுங்கே இருக்காது. சமையல் செஞ்சா அந்த சமையல்கட்டே ரணகளமா மாறி இருக்கும்.
அதையெல்லாம் சுத்தம் செய்யணும் கூட தோணாது! சமைச்சு சாப்பிட்டுட்டு பாத்திரம்
எல்லாம் அப்படியே போட்டுட்டு போயிட்டே இருப்பா மருமகள். எல்லாம் பொறுமையா
தேய்ச்சுக்கலாம். இப்ப என்ன அவசரம்னு அவ கேள்வி. அலமேலுவும் சொல்லி சொல்லி
பார்த்தா. இதெல்லாம் நமக்கு சரி வராதுப்பா, பேசாம நீங்க தனிக்குடித்தனம்
போயிடுங்கன்னு பையன் கிட்ட சொல்ல, “ஆமாம்மா… நானே சொல்லணும்னு இருந்தேன். இந்த
இடமும், வீடும், அவளுக்கு அவ்வளவா ஒத்து வரல, தனியாப் போகணும்னு சொல்லிட்டே
இருக்கா” என்று சொன்ன அடுத்த சில நாட்களில் தனிக்குடித்தனம் போனாங்க! அதில் எந்த
வித வருத்தமும் அலமேலுவுக்கு இல்லை. எனக்குத் தான் ரொம்பவே கஷ்டமா இருந்தது.
அப்ப
கூட அலமேலு, என்கிட்ட சொல்லுவா, “இப்படி தனித்தனியா இருக்கறது தாங்க எல்லாருக்கும்
நல்லது. எல்லாரையும் என்னை மாதிரியே இருக்கணும்னு நான் நினைக்கறது தப்பு தான்.
இப்படி சேர்ந்து இருந்து சண்டை போட்டு, மனஸ்தாபங்களோடு பிரியறதை விட நம்மளே இப்பவே
இப்படி முடிவு பண்ணி தனித்தனியா இருந்தா எந்தப் பிரச்சனையும் இல்ல. இப்ப எங்கே
போயிட்டாங்க. அவங்க வழியில அவங்க இருக்கட்டும். நம்ம வழியில நாம இருப்போம். ”உங்களுக்கு
நானு, எனக்கு நீங்க…” இப்படி நம்ம ரெண்டு பேர் மட்டும் இருந்து எவ்வளவு நாளாச்சு. ”உங்களுக்கு
நியாபகம் இருக்கா, எங்க கிராமத்து வீட்டுல நிலா வெளிச்சத்துல நீங்களும் நானும்
மட்டும் தனியா இருந்தப்ப, “ஆஹா இன்ப நிலாவினிலே”ன்னு பாட்டு பாடுவீங்களே…
இப்பல்லாம் அப்படி பாடறதே இல்லை. நான் உங்க மடில படுத்துக்கறேன்… அந்தப் பாட்டை
பாடறீங்களான்னு கேட்டா… நினைவுகளில் தாத்தா மூழ்க, நான் அப்படியே அந்தக் காட்சியை
கற்பனையில் பார்த்து ரசித்தேன்.
வாசலில்
குரல் – என்னடா அம்பி, தாத்தாகிட்ட கதை கேட்கறதே உனக்கு வேலையாப் போச்சு.
இதுக்காகவே கிளம்பி வந்துடற! சரி சரி நான் வந்ததும் கிளம்பாம கொஞ்சம் இரு, காபி போட்டு தரேன்… கோவிலுக்குப்
போயிட்டு வந்தது எனக்கும் காப்பி குடிக்கணும் போல இருக்கு, மாமாவும் இப்ப காப்பி
குடிக்கற நேரம்ன்னு சொல்லிக் கொண்டே சமையலறைக்குப் போனார் அலமேலு மாமி! ”பார்த்தியா…
இதான் அலமேலு! எனக்கு எப்ப என்ன வேணும்னு அவளுக்கு நல்லா தெரியும், அலமேலு மாதிரி
வருமா?” என்று என்னிடம் மெல்லிய குரலில், கண்ணடித்தபடியே சொன்னார் ராமு தாத்தா.
பின்குறிப்பு: இது கதையல்ல... நிஜம். எங்கள் பிளாக் பக்கத்தில் இந்தப் படம் வந்தது அல்லவா?
அந்தப் படத்திற்குத் தகுந்த மாதிரி எழுதலாம்னு சும்மா ஒரு முயற்சி தான். நிறை குறைகள் இருந்தால்
சொல்லுங்களேன்... வெங்கட், புது தில்லி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஆஹா நல்ல கதை. இந்த படத்திற்கு ஏற்ற கதை. பழைய நினைவுகளை அலசுவதே என்றும் ஒரு தனி சுகந்தான். கதையை நன்றாக சொல்லியிருக்கிறீர்கள். தாத்தா, பாட்டி போல் புரிந்து கொண்டு வாழும் வாழ்க்கையை பெற கொடுத்து வைத்திருக்க வேண்டும். இது கதையல்ல நிஜம் என்று வேறு சொல்லி விட்டீர்கள். அனைவரின் வாழ்வும் இவ்வாறாக இனிதே அமைய பிரார்த்திக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இன்று இங்கு நான்தான் அதிசயமாக முதல் கமெண்ட் போலிருக்கிறது. அதிசயங்கள் சில சமயம் இப்படித்தான் அரங்கேறி விடுகின்றன. வரும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் காலை வணக்கங்கள்.
நீக்குவாங்க கமலா அக்கா... ஆம், நீங்கள் முதல் கமெண்ட் என்பது ஆச்சர்யம்தான்!
நீக்குஇனிய காலை வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி! இன்று உங்களுடையது தான் முதல் கருத்துரை - மகிழ்ச்சி!
நீக்குஆமாம் தாத்தா பாட்டி மாதிரியான வாழ்க்கை அமைந்துவிட்டால் எல்லாம் சுகமே...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கமலா அக்கா ஆஹா இனிய ஆச்சரியம்...இன்று என்னையும் ஸ்ரீராமையும் முந்திக் கொண்டு!!!!
நீக்குகீதா
//அதிசயங்கள் சில சமயம் இப்படித்தான் அறங்கேறி விடுகின்றன// :)) உங்களுடைய மகிழ்ச்சி எங்களுக்கும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!
ஆமாம். பொதுவாக என் பதிவில் உங்கள் கருத்துரையோ அல்லது கீதாஜியின் கருத்துரையோ தான் முதலில் இருக்கும். இன்றைக்கு கமலா ஹரிஹரன் ஜியின் கருத்துரை. கருத்துரைகள், பின்னூட்டங்கள் வந்தால் மகிழ்ச்சி தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
வாங்க கீதாஜி... இன்னிக்கு உங்கள் இருவரையும் அவர் முந்தி விட்டார்! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வணக்கம் சகோதரரே
நீக்குஇன்று காலை கொஞ்சம் சீக்கிரமாக முழிப்பு வந்து விட்டது. பார்த்தால் தங்கள் தளத்தில் முன்னதாக வருகை தரும் சகோதரர் ஸ்ரீராம், சகோதரி கீதாரெங்கன் எவரையும் காணோம். ஏற்கனவே பார்த்து மனதில் நிலைத்திருக்கும், தம்பதிகளின் படத்துடன், தங்கள் அருமையான எழுத்து நடையில் வந்திருக்கும் கதையும் படிக்க படிக்க மனதை கவர்ந்திழுத்தது. சரியென முதலில் படித்து கருத்துரை தந்து விட்டேன். என் முதல் வருகை தங்களுக்கும், ஸ்ரீராம்,கீதா ரெங்கன் அவர்களுக்கும் மகிழ்ச்சியை தந்தது எனக்கும் சந்தோஷமாக இருக்கிறது. இனியும் தொடர்ந்து கதைகளை தாருங்கள். படிக்க காத்திருக்கிறோம்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!
நீக்குகுட்மார்னிங் வெங்கட்.
பதிலளிநீக்குஇன்று பொன்மொழிக்கு விடுமுறையா?
காலை வணக்கம் ஸ்ரீராம். இன்று கதை என்பதால் பொன்மொழி இல்லை! அப்படியே ஆரம்பித்து விட்டேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அடடே... கதை (மாதிரி நிஜம்) அங்கே அனுப்பியிருக்கக் கூடாதோ... (ரொம்பப் பேராசை என்கிறீர்களோ!)
பதிலளிநீக்குஇதேபோல கிட்டத்தட்ட இந்தக் கருவில் இந்தப் படத்துக்கு நானும் ஒரு கதை வைத்திருக்கிறேன். போடநேரமில்லை!
//அங்கே அனுப்பி இருக்கக் கூடாதோ [ரொம்ப பேராசை என்கிறீர்களோ!)// அனுப்பக் கூடாது என்றெல்லாம் இல்லை ஸ்ரீராம். எழுதியதும் இங்கே பகிர்ந்து விட்டேன் அவ்வளவு தான்.
நீக்குஆஹா உங்களிடமும் இதே போன்ற ஒரு கதை உண்டா? முடிந்த போது பகிருங்கள்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
ஒரு கணவன் மனைவி இடையே என்ன பந்தம் இருக்கிறது என்பதை அவர்களிருவரும்தான் அறிவார்கள். அவர்களின் பெற்றோர் கூட புரிந்துகொள்ள முடியாத பந்தம் இருக்கும் அவர்கள் இடையே என்பது நான் என் பெற்றோர் விஷயத்தில் கண்ட அனுபவம். நன்றாயிருக்கிறதுகதை (நிஜம்)
பதிலளிநீக்குகேவாபோவுக்கு தனியா ஒன்று எழுதி அனுப்புங்களேன்!
//ஒரு கணவன் மனைவி இடையே என்ன பந்தம் இருக்கிறது என்பதை அவர்களிருவரும் தான் அறிவார்கள்// உண்மை. இதை பலரும் உணர்ந்து கொள்வதில்லை!
நீக்கு//கேவாபோவுக்கு தனியா ஒன்று எழுதி அனுப்புங்களேன்// ம்ம்ம்... பார்க்கலாம்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
ஹை வெங்கட்ஜி இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஅட! என் தாத்தா பாட்டி இங்கும் வந்துவிட்டார்களா...நல்லாவே சுற்றுப் பயணம் செய்கிறார்கள்!!
கதையா ஆஆஆஆஆஆஅ ஸ்ரீராம் பார்த்து கேட்டிருப்பாரே...
இதோ வருகிறேன் கதை வாச்க்க
கீதா
இனிய காலை வணக்கம் கீதாஜி!
நீக்குதாத்தா பாட்டி இங்கேயும் வந்தாச்சு.... பயணம் நல்லது அதனால் பயணம் செய்யட்டும் கீதாஜி!
ஸ்ரீராம் பார்த்து கேட்கவும் கேட்டாச்சு! ஹாஹா...
வாசித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள். காத்திருக்கிறேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இளமைக்காதலை விடவும் இந்த முதுமைக்காதல்தான் எப்போதுமே இனிக்கிறது. கதையாகப் படிக்கும்போதே அவ்வளவு ரசித்தேன். நிஜம் என்று தெரிந்தபிறகு இன்னும் ஆழமாய் ரசித்தேன். ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க வெங்கட்.
பதிலளிநீக்குமுதுமையில் காதல் - இனிப்பு தான். இப்பகிர்வு உங்களுக்குப் பிடித்திருந்தது என்று அறிந்து மகிழ்ச்சி. உங்களுடைய பாராட்டுகள் மகிழ்ச்சி தந்தன.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.
அட? வெங்கட் கூட எழுதி இருக்கார்! அருமையான கதை/நிகழ்வு! இப்படியும் நடக்கும், நடக்கிறது, நடந்து கொண்டிருக்கிறது என்றெல்லாம் என்னோட அனுபவத்தில் சொல்லலாம். கிட்டத்தட்ட இப்படி ஓர் தம்பதிகளை நானும் அறிவேன். ஆனால் கதையாக்கும் அளவுக்கெல்லாம் திறமை இல்லை. வெங்கட் அழகாகக்கதையைக் கொண்டு போய்விட்டார். முடிவெல்லாம் நாமே யூகிக்கும் வகையில் கதை இப்படித்தான் அமைய வேண்டும் என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது. வாழ்த்துகள் வெங்கட்!
பதிலளிநீக்கு//அட? வெங்கட் கூட எழுதி இருக்கார்!// ஹாஹா... எதிர்பார்க்காத சமயங்களில் இப்படி சில நடந்து விடுவதுண்டு! :)))
நீக்குஉங்கள் பாராட்டுகள் மகிழ்ச்சி தந்தது கீதாம்மா...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வெங்கட்ஜி அசத்தல் கதை!!!
பதிலளிநீக்குமிகவும் ரசித்தேன் கதையை. ஹப்பா பாட்டி இருக்கிறார்!!! மனம் சமாதானம்
வெங்கட்ஜி உங்களுக்கா கதை எழுத வரலை!!??? இனி அப்படிச் சொல்லக் கூடாது ஓகேயா!!
அருமையா எழுதியிருக்கீங்க வெங்கட்ஜி. செம...பாராட்டுகள் வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்க ஜி! உங்களுக்கு மிக நன்றாகச் சொல்ல வருகிறது! மீண்டும் சொல்கிறேன் க்தை எழுதுங்க விடாதீங்க!!
கீதா
//பாட்டி இருக்கிறார்!!! மனம் சமாதானம்// வந்தவரெல்லாம் தங்கிவிட்டால்... என்பது உண்மை என்றாலும் கதையிலாவது வாழ வைப்போமே என்ற ஒரு ஆசை தான் கீதாஜி!
நீக்கு//கதை எழுதுங்க விடாதீங்க// எல்லோரும் நோட் பண்ணுங்க ப்ளீஸ்! நான் எதாவது இப்படி எழுதினால் அதற்கு கீதாஜி/ஸ்ரீராம் தான் காரணம்! :)))
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!
//இப்படி சேர்ந்து இருந்து சண்டை போட்டு, மனஸ்தாபங்களோடு பிரியறதை விட நம்மளே இப்பவே இப்படி முடிவு பண்ணி தனித்தனியா இருந்தா எந்தப் பிரச்சனையும் இல்ல. இப்ப எங்கே போயிட்டாங்க. அவங்க வழியில அவங்க இருக்கட்டும். நம்ம வழியில நாம இருப்போம். //
பதிலளிநீக்குபாட்டி சொல்வதும் சரிதான்.
உண்மையை அழகான கதை வடிவில் கொடுக்க தெரிந்து இருக்கிறது.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
பாடல் பகிர்வு அருமை.
பாட்டி சொல்வதும் சரிதான்... ஆமாம்மா... சண்டை போட்டு மனஸ்தாபத்துடன் பிரிவதை விட இப்படி புரிந்து கொண்டு தனித்திருப்பதும் ஒரு விதத்தில் நல்லது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
அருமையான கதை. மிகவும் ரசித்தேன் வெங்கட் ஜி
பதிலளிநீக்குஉங்கள் கருத்துரை மகிழ்ச்சி தந்த இராமசாமி ஜி!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
//இவ்வளவு சுத்தம் பார்க்கற அலமேலுவுக்கு கிடைச்ச மருமகள்//
பதிலளிநீக்குஇதுதான் ஜி நடைமுறையில் அமைகிறது.
நடைமுறை வாழ்க்கையில் இப்படியும் உண்டு தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
மிக மிக அருமை ...
பதிலளிநீக்குரசித்து படித்தேன் ...பாட்டி சொல்லுவது என்னமோ நம்ம எல்லாருக்கும் சொல்லுவது போல ஒரு பிரம்மை ...
பல இடங்கள் ரொம்ப அழகு ....
1.குண்டா இருந்தா இன்னும் நிறைய தங்கம் கிடைச்சிருக்கும்னு
2.இப்படித் தோய்க்கறதுக்குக் கூட அவ கிட்டதான் கத்துக்கிட்டேன்.
கடைசியா ...
3.பேசாம நீங்க தனிக்குடித்தனம் போயிடுங்கன்னு பையன் கிட்ட சொல்ல, ...
இதான் நிதர்சனம் ...இதை ஒத்துக் கொண்ட மனக்களுக்கு என்றும் கசங்கல்கள் இல்லை ..
அருமை ...
ஒத்துக்கொண்ட மனங்களுக்கு கசங்கல்கள் இல்லை.... உண்மை தான் அனு ப்ரேம் ஜி!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மிகவும் ரசித்தேன்...
பதிலளிநீக்குஅருமையான பாடல்...
நீங்களும் ரசித்ததில் மகிழ்ச்சி. பாடல் நல்ல பாடல். இப்படியான பாடல்கள் இனிமை. இன்றைக்கு வரும் பாடல்கள் பலவற்றை கேட்கவே முடிவதில்லை!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
கதையல்ல நிஜம் :) அற்புதம் . அந்நியோநியமாள தம்பதிகள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்குமிக அருமையான கதை. உண்மை என்னும் போது இன்னும் மகிழ்வாயும் நெகிழ்வாயும் இருக்கிறது. அந்தப் பாட்டியின் குணாம்சம் வசீகரமானதும் கூட.
பதிலளிநீக்குஆஹா... இங்கே உங்களுடைய வருகை! மகிழ்ச்சி மணிமேகலா ஜி...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அற்புதமான கதை, பாட்டி சமையறைக்கு ஃகாபி போட போனதோடு கதையை முடித்துவிட்டீர்களே, நியாயமா? தொடரும் என்று போட்டு அவர்களின் அநுபவத்தை இன்னும் தொடர்ந்து எழுதுங்கள் நன்பரே. ரொம்ப நல்லா இருக்கு, வாழ்த்துகள் பல.
பதிலளிநீக்குதொடரும் போட்டு அனுபவத்தை இன்னும் எழுதுங்கள்... எழுதலாம்! நிறைய விஷயங்கள் உண்டு. நேரமும் காலமும் சரியாக அமைந்தால் எழுதுவேன் ரங்கராஜன் ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இப்படி சேர்ந்து இருந்து சண்டை போட்டு, மனஸ்தாபங்களோடு பிரியறதை விட நம்மளே இப்பவே இப்படி முடிவு பண்ணி தனித்தனியா இருந்தா எந்தப் பிரச்சனையும் இல்ல.
பதிலளிநீக்குஉண்மை
உண்மை
இக்காலத்திய யதார்த்தம்
யதார்த்தம்..... அதே தான் கரந்தை ஜெயக்குமார் ஐயா....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.