அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
அன்புக்காக ஏங்கி அவமானப்படுவதை விட, அனாதையாகவே வாழ்ந்து விடலாம்!
ஜோஹிந்தர்! எப்போதுமே துருதுருவென அங்கேயும் இங்கேயும் சென்று கொண்டே இருக்கும் ஒரு மனிதர். ஒரு இடத்தில் அவரை நிற்க வைப்பது மிகவும் கடினம். எப்போதுமே ஏதாவது ஒரு காகிதத்தைக் கையில் வைத்துக் கொண்டு அலுவலகத்தின் ஏதோ ஒரு மாடியில், ஏதோ ஒரு தாழ்வாரத்தில், ஏதோ ஒரு அறையில் அவரை நீங்கள் பார்த்து விட முடியும். ஒவ்வொரு நாளும் அவர் அலுவலகத்திற்கு வந்திருக்கிறாரா இல்லையா என்பதை தெரிந்து கொள்வது கடினமே இல்லை! ஏனெனில் அனைத்து அறைகளுக்கும் ஒரு முறையாவது ஒவ்வொரு நாளும் சென்று வந்து விடுவார் – வேலை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அவர் அப்படிச் சென்று வருவது என்றுமே நின்றதில்லை.
ஜோஹிந்தர் ஒரு தனிக்கட்டை! சற்றே மனநிலை சரியில்லாதது போலத் தோற்றம். சிறு வயதிலேயே பெற்றோர்களை இழந்து, தனது ஒரே அண்ணனின் அரவணைப்பில் வளர்ந்தவர். அப்பா – அம்மா இல்லாததால் அவரை கவனித்துக் கொள்பவர் யாருமில்லை. அண்ணன் எவரிடமோ சொல்லி வைத்து அரசாங்கத்தில் ஒரு தற்காலிக வேலையை வாங்கித் தர, ஓரிரு வருடங்களில் அந்த வேலையே நிரந்தரமானது. சம்பளம் வருகிறதே தவிர அதை வைத்து, தனக்கென்று ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவோ, வேறு ஏதேனும் செய்து கொள்ளவோ தெரிந்ததில்லை ஜோஹிந்தருக்கு. அப்பா-அம்மா இல்லாததால் எல்லாமே அண்ணன் தான்!
அண்ணன் ஒரு அளவுக்கு நல்லவனாக இருந்தாலும், அவருக்குத் துணையாக வந்த மனைவி அப்படி ஒன்றும் நல்லவர் அல்ல! ஜோஹிந்தரை வீட்டில் வைத்துக் கொண்டிருப்பதே அவர் மாதா மாதம் கொண்டு வந்து தரும் சம்பளத்திற்காக மட்டுமே! அப்போதெல்லாம் பணமாகவே சம்பளம் வந்து கொண்டிருந்தது. கடந்த பத்து, பன்னிரெண்டு ஆண்டுகளாகத் தானே வங்கியில் நேரடியாக சம்பளம் வரவு வைக்கப்படுகிறது. மாதத்தின் கடைசி நாளில் சம்பளம் பணமாகவே தருவார்கள். சரியாக, மாதத்தின் கடைசி நாள்/சம்பள நாளன்று ஜோஹிந்தரின் அண்ணன் மனைவி அலுவலகத்திற்கு வந்து விடுவார் – சம்பளம் வாங்கியதும், ஜோஹிந்தரிடமிருந்து அதை வாங்கிக் கொண்டு, சகூட்டரில் (ஆட்டோ!) வீட்டிற்குச் சென்று விடுவார். ஐந்து ரூபாய் பேருந்துச் செலவுக்கு மட்டுமே ஜோஹிந்தரிடம் இருக்கும் – சம்பள நாளன்று கூட!
வயது ஏற ஏற ஜோஹிந்தரின் உடலில் நிறைய பிரச்சனைகள்! அண்ணன் அவரது மனைவி ஆகியோருக்கும் உடல் உபாதைகள்! ஜோஹிந்தரை உடல் நலமில்லாதபோது யார் பார்த்துக் கொள்வது என்பதே பெரிய கேள்வியாக இருந்தது அந்த வீட்டில்! சம்பளம் முழுவதும் வாங்கிக் கொண்டவர்கள் ஜோஹிந்தருக்குத் தந்தது இருக்க இடமும், உணவும், திருநாள் சமயங்களில் ஒன்றிரண்டு உடைகளும் தான்! மற்ற எல்லாம் அண்ணனின் குடும்பத்திற்காகவே பயன்படுத்தினார்கள் – அண்ணன் வாங்கிக் கொடுத்த வேலையால் தானே அந்த சம்பளமே ஜோஹிந்தருக்குக் கிடைக்கிறது என்பது அண்ணனின் மனைவியின் வாதம்! ஏதோ வாழ்க்கை அப்படியே ஓடிக் கொண்டிருக்க ஜோஹிந்தரின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வந்தது. ஒரு நிலையில் தினம் தினம் சகூட்டரில் தான் அலுவலகம் வர வேண்டியிருந்தது! அதற்கெல்லாம் செலவு செய்ய அண்ணி தயாராக இல்லை! எப்படியோ தட்டுத் தடுமாறி வந்து கொண்டிருந்தார் ஜோஹிந்தர். மிகவும் முடியாத நிலையில் ஓய்வூதியம் வருமே, அதை வைத்துப் பிழைத்துக் கொள்ளலாம் என அவரை விருப்ப ஓய்வு எடுக்க வைத்தார்கள் அலுவலகத்தினர்.
ஜோஹிந்தர் வீட்டிலேயே இருந்தார். மாதா மாதம் ஓய்வூதியம் வங்கியிலிருந்து எடுப்பதற்காக வரும்போது பார்ப்பது தான். ஓடிக் கொண்டே இருந்தவரை தட்டுத் தடுமாறிய நடையில் பார்க்க மனதிற்கு ஒப்பவில்லை. இதற்கிடையில் அண்ணனும் மரணமடைய, அண்ணியும் அவர் மகன்களுமாகச் சேர்ந்து ஜோஹிந்தரைக் கவனிப்பதே இல்லை. மாதத்திற்கு ஒரு முறை வங்கிக்கு பணம் எடுக்க அழைத்து வருவதோடு சரி. இருக்கும் பணத்தினை எல்லாம் வாங்கிக் கொண்டு, எங்களால் இனிமேல் பார்த்துக் கொள்ள முடியாது என ஒரு காப்பகத்தில் விட்டுவிட்டார்கள். அப்படி விட்ட பிறகும், வங்கியில் சேரும் பணமெல்லாம் எடுத்துக் கொள்வது அண்ணியும், அவரது புதல்வர்களும் தான்! டெபிட் கார்ட் போன்றவை அண்ணன் குடும்பத்தாரிடமே இருந்தது. மாதா மாதம் அவருக்குக் காப்பகத்தில் கட்ட வேண்டிய தொகை மட்டுமே செலுத்துகிறார்கள். மற்ற எல்லாம் இவர்கள் அனுபவிக்கிறார்கள்.
ஒரு முறை வங்கியில் பார்த்தபோது, “சாப், நல்லா இருக்கீங்களா?” என்று கேட்டவரிடம், “நான் நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க?” என்று கேட்ட போது, அக்கம் பக்கம் யாரும் இல்லை என்பதைப் பார்த்து விட்டு, “ஏதோ இருக்கேன் சாப்! எனக்கு யாருமே இல்லைங்கோ!” என்று சொன்னபோது அவர் கண்களின் ஓரங்களில் கண்ணீர் துளிகள்! அண்ணன் மகன் அருகில் வர, கைக்குட்டைகளால் கண்ணீரைத் துடைத்தபடியே சொன்னார் “நான் நல்லா இருக்கேன் சாப்! இவங்க தான் என்னை பார்த்துக்கறாங்க!”
பணம் மட்டும் இருந்து விட்டால் போதும் என நினைப்பவர்கள் பலர் உண்டு. பணம் மட்டுமே பெரிய விஷயமல்ல! அன்பு செலுத்த ஒருவருமே இல்லை என்ற நிலை யாருக்குமே வரக்கூடாது! என்னைப் பொறுத்த வரை ஜோஹிந்தருக்கு நல்ல வழி கிடைக்க ஒரே வழி தான் – ஆண்டவன் அவரை அழைத்துக் கொள்ளும் நாள் தான் அவருக்கு மகிழ்ச்சி! எத்தனை பிரச்சனைகளோடு மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் நாம் அனைவருமே நமக்கு மட்டுமே பிரச்சனைகள் இருப்பதாக நினைத்துக் கொண்டு வருத்தத்தில் உழல்கிறோம். “நமக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு!” என்ற பாடல் வரிகளை நினைத்துக் கொண்டால் நம் பிரச்சனைகள் ஒன்றுமே அல்ல என்பது புரியும்!
என்ன நண்பர்களே, இந்த நாளின் பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வழி சொல்லுங்களேன். மீண்டும் வேறு ஒரு பதிவின் வழி சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி.
மனம் கலங்க வைக்கும் மனிதர். இறைவன் இப்படியானவர்களையும் பூமிக்கு அனுப்பி, மற்றவர்களின் கருணையையும் அன்பையும் சோதிக்கிறான். பெரும்பாலானவர்கள் இந்த விஷயத்தில் இறைவனிடம் தோற்றே போகிறார்கள்.
பதிலளிநீக்கு//“ஏதோ இருக்கேன் சாப்! எனக்கு யாருமே இல்லைங்கோ!”// - இதில் ஜோஹிந்தர் கொஞ்சம் அப்பாவி (அஜாமாடம்னு நாங்க சொல்லுவோம்). அப்படி இருக்கும்போது அவருடைய அண்ணன் இன்னும் பொறுப்புடன் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. எனக்குத் தெரிந்தவர், அவர் தம்பி திருமணத்துக்குப் பிறகும் தன் குடும்பத்துடனேயே ஒட்டிக்கொண்டு இருப்பது, எதற்கும் தன்னையே எதிர்பார்ப்பது இவையெல்லாம் கண்டு, அவருக்குத் தனிக்குடித்தனம் வைத்து, உன் குடும்பத்தை நீயோ இல்லை உன் மனைவியோதான் பொறுப்பா நடத்தணும், எங்க வீட்டுக்கு எப்பவாவது சாப்பிட வா, ஆனால் உன் ஃபேமிலி தனி என்று சொல்லிவிட்டார். என்னிடம், தான் இப்படி கடுமையாக இல்லாவிட்டால், இவனுக்கு என்று பொறுப்பு வராது, எத்தனை வருடங்கள்தான் என்னையே நம்பும்படி வைப்பது என்றார். அவர் செய்தது நல்ல செயலாக எனக்குத் தோன்றியது.
நீக்குஎழுத்தாளர் வல்லிக்கண்ணன்(?) - தன் அண்ணன் வீட்டிலேயே இருந்துவிட்டார் (திருமணம் செய்துகொள்ளாமல்). அண்ணி, இவரை, தாய் போல் காப்பாற்றிவந்தார் எனப் படித்திருக்கிறேன்.
மனம் கலங்கித் தான் போகிறது இப்படியான மனிதர்களைப் பார்க்கும்போது ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
சில பிரச்சனைகள் அவருக்கு உண்டு தான் நெல்லைத் தமிழன். அதனால் அப்பாவியாகவே இருந்து விட்டார் போலும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கொடுமை ....பாவம் ஜோஹிந்தர்
பதிலளிநீக்குபாவம் தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுப்ரேம் ஜி.
தனக்கென்று ஒரு குடும்பத்துனை அவசியம் என்பதை உணர்த்தியது. மேலும், நாடுமுழுவதும் பெரும்பாலும் அண்ணன்/தம்பி மனைவியானவள் மனிதாபிமானம் இல்லாமல் நடந்துகொள்வதை உனரமுடிந்தது. இந்த நிலை மாற வேண்டும், இந்த சம்பவம் ஒரு பாடமாக அமையும்.
பதிலளிநீக்குமனிதாபிமானம் அற்ற பலர் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரங்கராஜன் ஜி.
கதைக்கு பொருத்தமான வாசகம் தொடக்கத்திலேயே இருக்கிறது.
பதிலளிநீக்குமனம் கனக்க வைத்த கதை (?)
உண்மை நிகழ்வு தான் கில்லர்ஜி!
நீக்குவாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அண்ணனின் மகன்களில் ஒருத்தன் கூடவா மனிதனாக இல்லை...? பணப் பேய்கள்...
பதிலளிநீக்குபணப் பேய்கள் - சரியான வார்த்தைப் பிரயோகம் தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மனம் கலங்குகிறது...
பதிலளிநீக்குஇப்படியான மனிதர்களுக்கு வெட்கம் இருப்பதே இல்லை...
வெட்கம் இல்லாதவர்கள் இங்கே நிறைய இருக்கிறார்கள் துரை செல்வராஜூ ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மனதை வலிக்க வைக்கும் பதிவு. பெண் வேலைக்குப் போவதால் அவள் சம்பளத்துக்கு ஆசைப்பட்டு திருமணத்தை ஒத்திப்போடுவது, மூத்த மகன் என்பதற்காக அவன் தலையில் எல்லா குடும்பச் சுமைகளையும் சுமத்துவது என்று எத்தனையோபேர் கஷ்டப்படுகிறார்கள். இந்த மாதிரி சம்பவங்களைப் படிக்கும்போதுதான், சுயநலத்துடன் இருப்பது நல்லதுதான் என்று மனதில் தோன்றிவிடுகிறது. 'உறவு என்று நம்பி வாழ்க்கையை அனேகமாக தொலைத்துவிட்ட ஜோஹிந்தர் பாவம்தான்.
பதிலளிநீக்குசுயநலத்துடன் இருப்பது பல சமயங்களில் நல்லது என்று தான் தோன்றுகிறது - உண்மை தான் நெல்லைத் தமிழன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மனதை வலிக்க்ச் செய்த பதிவு. தனிமையாக வாழ்வதைவிட தனிமைபடுத்தப்படுவது மிகவும் கொடுமை. எதார்த்தமாக பேசவேண்டுமென்றால் அந்த பணப்பேய்களின் முதுமைக்காலமும் இவரைப் போல இல்லாமலிருந்தால் சரி. நாம் இந்தச் சமூகத்திற்கு என்ன தருகிறோமோ அதுதானே திரும்ப கிடைக்கும்.
பதிலளிநீக்குபணப் பேய்களின் முதுமைக் காலம் - எப்படி இருந்தாலும் ஜோஹிந்தர் இருந்து அதைப் பார்க்கப் போவதில்லை அபிநயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வெங்கட்,
பதிலளிநீக்குமனதினில் ஒரு வலியை ஏற்படுத்திவிட்டது ஜோகிந்தரின் நிலை..
பரிதாப நிலை தான் அவருடையது கோயில்பிள்ளை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மனம் கலங்க வைத்த பதிவு. ஆனால் இப்படியும் மனிதர்களைப் பார்த்துக் கொண்டு தானே இருக்கோம்.
பதிலளிநீக்குஆமாம் கீதாம்மா, இப்படியான நிறைய மனிதர்களை பார்க்க முடிகிறது இப்போது!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஜோகிந்தரின் கதை மனதை கனக்க வைத்து விட்டது.
பதிலளிநீக்குஜோகிந்தரின் காப்பக பணத்தை கொடுக்கிறார்களே அந்த வரை அவர்களை பாரட்ட வேண்டும்.
காப்பக பணத்தையாவது கொடுக்கிறார்களே - அதுதான். அதையும் நிறுத்தி விட்டால் அவர் நிலை இன்னும் பரிதாபமாகி விடும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
எப்படி எல்லாம் மனிதர்கள் இருக்கிறார்கள். ஜோஹிந்தர் மிகவும் பாவம். ஆனால் உலகில் இப்படிப் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஜோஹிந்தரைப் போல அவதிப்படுபவர்களும் இருக்கிறார்கள்.
பதிலளிநீக்குதுளசிதரன்
இரண்டு வகையிலும் மனிதர்கள் இருக்கத்தாய் செய்கிறார்கள் துளசிதரன் ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வாசகம் மிகவும் பொருத்தம் பதிவிற்கு.
பதிலளிநீக்குசரிதான் என்றும் தோன்றுகிறது.
ஜோஹிந்தர் ரொம்பவே அப்பாவி போல. அவரைப் பார்த்துக் கொள்பவர்கள் மனிதர்களா? மனம் கனத்துவிட்டது கலங்கடித்தும் விட்டது. என்னென்னவோ சொல்லத் தோன்றுகிறது.
கீதா
வாசகம் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.
நீக்குஜோஹிந்தர் போல எத்தனை எத்தனை பேர்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பாவம். இந்த பென்ஷன் மட்டும் இல்லையெனில் அவர் நிலை இன்னும் மோசாமாகிவிடும். இதுபோள் ஜோஹிந்தர்கள் இருக்கிறார்களோ?
பதிலளிநீக்குபென்ஷன் இல்லை என்றால் இன்னும் திண்டாடியிருப்பார் அவர் என்பது உண்மை தான் முரளிதரன் ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.