வியாழன், 2 ஜூலை, 2020

வித்தியாச அலாரம் - அலட்சியப் போக்கு... - மனிதர்கள்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம்.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் துவங்கலாம் வாருங்கள்.

தடம் பார்த்து நடப்பவன் மனிதன்.  தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் - ஃபிடல் காஸ்ட்ரோ...

வித்தியாச அலாரம்:

காலை நேரத்தில் அலாரம் வைத்து எழுவது நம்மில் பலருக்கும் இருக்கும் பழக்கம் தானே... சிலருக்கு மட்டுமே தினம் தினம் அப்படி அலாரம் வைத்துக் கொள்ள அவசியமில்லாமல் சரியான நேரத்தில் விழிக்கும் பழக்கம் இருக்கிறது. எனக்கு எங்கேயாவது காலை நேரத்தில் புறப்பட வேண்டும் என நினைத்துக் கொண்டு படுத்தால் சரியான நேரத்தில் விழிப்பு வந்து விடும் - அப்படி நினைத்துக் கொண்டு அலாரம் வைத்துக் கொள்ளாமல் அவதிப்பட்டதும் உண்டு என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.  பொதுவாக அலுவலக நாட்கள் எனில் மூன்று அலாரம் வைத்துக் கொள்வேன் - 06.00, 07.00, 08.00 என மூன்று அலாரம். காரணம் பல சமயங்களில் முதலாவது அலாரம் அடிக்கும்போது, “ஆறு மணி தானே, இன்னும் கொஞ்சம் தூங்கலாம் எனத் தூங்கி மிகவும் தாமதமாக எழுந்து அலறி அடித்து எழுந்து, அவசர கதியில் வேலைகளை முடித்து அலுவலகம் சென்ற அனுபவங்கள் உண்டு என்பதால். சரி எதற்காக இந்த அலாரம் நினைவுகள் என்ற கேள்வி உங்களுக்கு வந்திருக்கும்.  சொல்கிறேன். 



சமீப நாட்களாக, அலாரம் வைத்துக் கொள்ள அவசியமே இல்லாதது போல ஒரு நிகழ்வு நடக்க ஆரம்பித்திருக்கிறது.  தினமும் சரியாக ஆறு மணி சமீபம் சப்தமாக பாடல் ஒலித்த படி ஏதோ ஒரு வாகனம் வீட்டருகே இருக்கும் பிரதான சாலை வழி பயணிக்கிறது - 2000 PMPO அளவு ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை தனது வாகனத்தில் பொருத்தி வைத்திருக்கிறார் போலும் அந்த வாகன உரிமையாளர்.  சரியாக காலை 07 மணி அளவில் மீண்டும் அதே வாகனம் - அதே அளவு அதீத அளவு சப்தத்தோடு பாடல் ஒலித்தபடியே திரும்பும்.  அதனால் இரண்டு அலாரம் வசதி எனக்கு!  பல நாட்கள் யார் இந்த மனிதர் - எதற்காக இப்படி அதீத ஒலியில் பாட்டிசைத்தபடி செல்கிறார் என படுத்தபடியே வியந்ததுண்டு.  ஒரு நாள் எப்படியாவது அந்த வாகனம் செல்லும் நேரம் பார்த்து விடுவது என காலையிலேயே எழுந்து பால்கனி ஜன்னல்களை திறந்து வைத்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டே காத்திருந்தேன்.  சிறிது தூரத்தில் அந்த வாகனம் வரும்போதே பாட்டொலி கேட்டது.  தயாராக இருந்தால் அந்த வித்தியாச மனிதரின் வாகனத்தின் நிறம் கூட வித்தியாசம் தான். 

”ஆண்களுக்கு கலர் பார்க்கத் தெரியாது” என்று எனக்குத் தோன்றுவதுண்டு - கலர் பார்க்கத் தெரியாதா என வேறு எதையாவது நினைத்துக் கொண்டு வம்புக்கு இழுக்க வேண்டாம் - நான் சொல்வது நிறங்களை அடையாளம் கண்டுகொள்வதைப் பற்றி - எங்களுக்கெல்லாம் தெரிந்தது வானவில்லின் ஏழு வண்ணங்கள் போல மிகக் குறைந்த அளவே - பிங்க் என்பதிலேயே எத்தனை வகைகளைச் சொல்கிறார்கள் பெண்கள்!  சரி எதையோ சொல்ல வந்து கலர்களுக்குச் சென்று விட்டேன் - மீண்டும் வருவோம் அந்த அலாரம் மனிதரின் கதைக்கு!  அந்த மனிதர் வந்த வாகனத்தின் நிறமும் வித்தியாசம் தான் - மஞ்சளும், ஆரஞ்சும் கலந்த மாதிரி ஒரு வண்ணம் - அதற்கான பெயரைச் சொல்ல எனக்குத் தெரியவில்லை!  ஜன்னல் கதவுகளைக் கீழே இறக்கி, பாடலை அதீத அளவில் ஒலிக்க விட்டு வேகமாகச் செல்கிறார்.  அவர் செல்வது எங்கள் வீட்டின் அருகே இருக்கும் தால்கட்டோரா பூங்காவிற்கு - நடைப்பயிற்சிக்குச் செல்கிறாராம்!  சரியாக ஒரு மணி நேரத்திற்குப் பிறகு வீடு திரும்புகிறார்!  சில நாட்கள் தொடர்ந்து கவனித்ததில் தெரிந்து கொண்டது இது! 

இந்த அலாரம் வந்ததிலிருந்து நான் அலைபேசியில் அலாரம் வைப்பதை நிறுத்தி விட்டேன்! அதான் சரியான நேரத்தில் இந்த அதீத ஒலி அலாரம் இருக்கிறதே! 

அலட்சியப் போக்கு: 

சமீபத்தில் எனக்குத் தெரிந்த ஒருவருக்கு கொரோனா தொற்று - “முஜே குச் நஹி ஹோgகா..” என்று சொல்லிக் கொண்டு திரிந்தவர் இந்த நபர்.  அதாவது எனக்கு ஒன்றும் ஆகாது - என் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்று சொல்லிக் கொண்டு முகக் கவசத்தினைக் கூட, கடமைக்காக காதில் மாட்டி, தாடைக்கு அணிந்திருப்பார்.  அவருக்கு, தொற்று ஏற்பட பதினான்கு நாட்கள் தனிமைபடுத்தப் பட்டார் - வீட்டிலேயே! முறைப்படி பதினான்கு நாட்களுக்குப் பிறகு மீண்டும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் - இரண்டு முறை Negative என்று பரிசோதனையில் தெரிந்தால் மட்டுமே மீண்டும் அவரது வேலைகளைத் துவங்கலாம் என்கிறது அரசின் அறிவுரை.  அவர் பதினான்கு நாட்கள் முடிந்து மருத்துவமனைக்குச் செல்லவே இல்லை. பரிசோதனையும் செய்து கொள்ளவில்லை.  அலுவலகத்திற்குச் செல்ல ஆரம்பித்து விட்டார்.  அலுவலகத்தில் பார்த்த அனைவருமே தள்ளி நின்று அவர் நலம் விசாரிக்க, அவரோ நெருங்கி நெருங்கி வந்து சர்வ அலட்சியமாகச் சொல்கிறார் - தான் மீண்டும் பரிசோதனை செய்து கொள்ளாதது பற்றி.  கூடவே சொன்ன விஷயம் இன்னும் அதிர்ச்சியைத் தந்தது. 



மருத்துவமனையில் மருத்துவரை அழைத்து மீண்டும் சோதனை செய்து கொள்ள வரவேண்டும் என்று இவர் சொன்ன போது, ”இங்கே வந்து மீண்டும் தொற்று ஏற்படவா? வேண்டாம், உங்களுக்கு எந்தவித தொற்றின் தடயமும் இல்லாவிட்டால் வர வேண்டாம் - வீட்டிலேயே இருங்கள் - இன்னும் பதினான்கு நாட்களுக்கு வீட்டில் இருந்தால் போதும் - சோதனை அவசியம் இல்லை” என்று மருத்துவரே சொல்லி விட்டார் என்று சொன்னார் அந்த நபர்.  சரி சோதனை வேண்டாம் என்று சொன்னதைக் கடைபிடித்த நீங்கள், இன்னும் பதினான்கு நாட்கள் வீட்டிலிருங்கள் என்று சொன்னதை மட்டும் ஏன் கடைபிடிக்காமல் அலுவலகத்திற்கு வந்து விட்டீர்கள் என்று கேட்ட போது அவர் கூலாகச் சொன்ன பதில்....  வேறென்ன!  “முஜே குச் நஹி ஹோgகா!”  அதாவது எனக்கு ஒன்றும் ஆகாது! 

ஆஹா..... (அ)லட்சியவாதியே.... உங்களுக்கு ஏதும் ஆஹாது என்று சொல்லிக் கொண்டே இருந்த உங்களுக்கே தொற்று வந்து விட்டது.  அதை அடுத்தவர்களுக்கும் ஏன் கொடுக்க நினைக்கிறீர்கள் என்று அவரை யார் கேட்பது?  இந்த நபரைப் போலவே பலரும் இருக்கிறார்கள் - அதீத அலட்சியம் - எனக்கு ஒண்ணும் ஆஹாது என்று சுற்றிக் கொண்டிருப்பதால் மற்றவர்களுக்கும் தொற்றைக் கொடுத்துக் கொண்டிருப்பவர்களை என்ன சொல்லித் திருத்த?  அவர் இப்படி இன்றால் இன்னும் சிலர் தனக்கு வந்து விட்டது - அதனால் நான் தனிமையாக ஏன் இருக்க வேண்டும் - என்னால் அடுத்தவர்களுக்கும் தொற்று பரவினால் எனக்கென்ன என்று கேட்டுக் கொண்டு திரிகிறார்கள்.  இவர்களை என்ன சொல்லிக் கட்டுப்படுத்த!  நேரடியாகவே அப்படி சிலரிடம் இருந்து வந்த வார்த்தைகளைக் கேட்டு மன வருத்தம் மட்டுமே மிச்சம். 

இப்படியும் சிலர்!  வேறென்ன சொல்ல?

இந்த நாளின் சிந்தனைகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இந்த நாளின் பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.  தொடர்ந்து சந்திப்போம்.... சிந்திப்போம்....

நாளை வேறு ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை...

நட்புடன்

வெங்கட் நாகராஜ்
புது தில்லி.

50 கருத்துகள்:

  1. தடம் பார்த்து நடந்தாலே
    நாம் நடந்த தடம் -
    தன்னால் பதிந்து விடும்
    இத் தரணியில்!...

    நலம் வாழ்க!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலமே விளையட்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  2. // எனக்கு ஒன்றும் ஆகாது..//

    இப்படிச் சொல்லிக் கொண்டுதான் நிறைய ஆட்கள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இப்படிச் சொல்லிக் கொண்டு தான் நிறைய ஆட்கள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்....// உண்மை துரை செல்வராஜூ ஐயா. இன்றைய பதிவில் சொன்ன சம்பந்தப்பட்ட நபரின் அறையிலிருந்த அத்தனை பேருக்கும் தொற்று! அவர் அறையில் இருந்த ஒரு இளைஞி - இரண்டாம் முறையும் பரிசோதனையின்போது தொற்று இருந்தது தெரிய கதறி அழுதாள் - அவளைத் தேற்ற ஒருவராலும் முடியவில்லை!

      நீக்கு
    2. படிக்கும் போதே மனம் பதறுகிறது. அந்த அலட்சிய மனிதர் மீது பாதிக்கப்பட்டவர்கள் கிரிமினல் கேஸ் போடவேண்டும்‌

      நீக்கு
    3. அல்லது பாதிக்கப்பட்டோரின் மருத்துவ செலவுகளை அவர் ஏற்கவேண்டும்.

      நீக்கு
    4. பதறும் விதமாகத் தான் நடந்து கொள்கிறார்கள்.

      /கிரிமினல் கேஸ் போட வேண்டும்/ - எத்தனை பேர் மீது போடுவது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கௌதமன் ஜி.

      நீக்கு
    5. //மருத்துவ செலவுகள் ஏற்க வேண்டும்// இது செய்யலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கௌதமன் ஜி.

      நீக்கு
  3. சில சமயங்களில் அந்த வண்டிக்காரர் வராமல் போனால் நம் ஆபீஸ் வேலை அலாரமும் கெட்டு விடுமே...   ஆனால் நீங்கள் சொல்வதுபோல நமக்கு அந்த நேரத்துக்கு சரியாய் விழிப்பு வந்து விடுவதென்னவோ உண்மைதான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரும்பாலும் வண்டிக்காரர் வந்து விடுகிறார். ஒரு சில நாட்கள் அவர் வந்தும் நான் தூங்கி விடுவதும் நடக்கிறது! :)

      சரியாய் விழிப்பு வந்து விடுவதென்னவோ உண்மை தான் - ஆமாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. அலுவலக நண்பர் செய்வது தவறு.  அவர் தனக்குத்தானே கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.  ஆனால் தமிழ்நாட்டிலும் சிலர் பதினான்கு நாட்கள் தனிமைபப்டுத்தலுக்குப் பின் தேவை என்று உணர்ந்தாள் நெகட்டிவ் சோதனை, இல்லாவிடில் வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள் என்கிறார்கள்.  ஒரு மருத்துவரே அப்படி சோதனை செய்யாமல் பணிக்குச் செல்வதைப் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. அவரிடம் எடுத்துச் சொல்லியும் அவருக்குப் புரியவில்லை.

      மீள் சோதனை அவசியம் இல்லை என்று சொல்வதும் நடக்கிறது - பல இடங்களில்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. அன்பு வெங்கட் இனிய காலை வணக்கம்.
    தடம் ப்திப்பதும், சங்கடம் கொடுக்காமல் இருப்பதுமே லட்சியமாக இருக்க வேண்டும்.
    உங்கள் அலார்ம் இந்த சங்கீதமாக அமைந்தது
    மகிழ்ச்சிதான்.
    ஆனால் தான் Noise pollution செய்வது அவருக்குத் தெரிந்திருக்குமோ?

    அந்தக் கொரோனா மனிதரை நினைத்தால் மிக சங்கடமாக இருக்கிறதே தில்லி நகரைப்
    பற்றி வரும் செய்திகளுக்கு
    இவரும் ஒரு காரணமோ. இப்படிக்கூட
    ஒரு ஜீவராசியா.
    இறைவன் தான் மற்றவர்களைக் காக்க வேண்டும்.
    நல்ல நாளுக்கான வாழ்த்துகள் மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் வல்லிம்மா.

      வாசகம் - பிடித்ததில் மகிழ்ச்சி.

      சங்கீத அலங்காரம் - :) ஒலி மாசு தான் அது!

      சில நேரங்களில் சில மனிதர்கள் - இப்படித்தான் அந்த மனிதரும் நடந்து கொள்கிறார் மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. அலாரம் விஷயம் சரியே. உடல் கடிகை (ஹி ஹி body clock) என்று சொல்வார்கள். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக காலை ஐந்து மணிக்கு முன்னர் எழுந்து விடுவேன். இப்போதெல்லாம் நாலு மணிக்கு!
    அலட்சிய கொரானா மனிதர்கள் பற்றி ஒரே வார்த்தை : விதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடல் கடிகை - ஹாஹா.... அதிகாலை நேர விழிப்பு நல்லதே! இரவு சீக்கிரம் படுத்துவிடுவதும்! ஆனால் பல சமயங்களில் இது எனக்கு அமைவதில்லை!

      விதி - சரியாகச் சொன்னீர்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கௌதமன் ஜி.

      நீக்கு
  7. வாசகம் அருமை ஜி

    சிலர் இப்படியும் உண்டு நமக்கு வந்ததுபோல் மற்றவர்களுக்கும் வரட்டும் என்று அதே நபர்கள் தனக்கு லாட்டரியில் பரிசு விழுந்தால் பிறருக்கும் விழட்டும் என்று நினைப்பதில்லையே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // லாட்டரியில் பரிசு...//

      இதற்குத் தான் கில்லர் ஜி வேண்டும் என்பது!...

      நீக்கு
    2. வாசகம் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      லாட்டரியில் பரிசு விழுந்தால் - ஹாஹா.. அது தனக்கு மட்டுமே சொந்தம்!

      நீக்கு
    3. இதற்கு தான் கில்லர்ஜி வேண்டுமென்பது! ஹாஹா. அதே தான் துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  8. வாசகம் மிக அருமை ஐய்யா.
    கொரானாவால் ஏர்ப்பட்ட தனிமையை டிப்பிரெஷனை கையாளும் ஒரு சாமான்யனின் செயலாகத்தான் இந்து அலட்சியப் போக்கை நான் பார்க்கிறேன்.
    தொற்றை கட்டுப்படுத்துதல், பொருளாதாரத்தை நிலைநிறுத்துதல், மனிதர்களின் உளச்சிதைவுகளை கையாளுதல் என பலதரச் சவால்கள் நம் முன் பூதாகாரமாய் நிர்க்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      தன்மையை, டிப்ரஷனை கையாளும் ஒரு செயல் - இருக்கலாம்.

      பூதாகாரமான பிர்ச்சனைகள் நம் முன்னே - உண்மை தான். விரைவில் விடியல் வரட்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அரவிந்த்.

      நீக்கு
  9. ஆகா... அந்த சேவல் மனிதருக்கு வாழ்த்துகள்...!

    எனக்கு ஒன்றும் ஆகாது - இது போன்ற மனிதர்களால் சென்ற வாரம் எங்கள் ஏரியாவிலும் தொற்று...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேவல் மனிதர் - ஹாஹா... நல்ல பெயர் !

      எனக்கு ஒன்றும் ஆகாது - என்று இருக்கும் மனிதர்கள் நிறைய பேர் - உண்மை தான் தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. அலாரம்.... ஹா ஹா... எனக்கு மொபைலில் பாடல்கள் அல்லது பக்தி போன்றவை ஒலிக்க நடக்கும் நபர்களைக் கண்டாலே பிடிப்பதில்லை. அவர்களது விருப்பம் எதுவாக இருந்தாலும் ஹெட்செட் போட்டுக்கொள்ளவேண்டியதுதானே, எதற்கு ஆல் இண்டியா ரேடியோ நிலையத்தை அவர் நடத்தணும்னு நினைப்பேன் இதுல அலாரமா?

    அலாரம்னு சொல்லும்போது, நான் 5 அலாரம் வைத்துக்கொள்வேன். (காலைல கொஞ்சம் சுகமாக எக்ஸ்ட்ரா அரை மணி தூங்க ஆசைவரும். அதனால், 3, 3 1/2, 4, 4 1/2 அப்புறம் இவை எல்லாம் மறந்துவிட்டால் 5 1/2 என்று வைத்துக்கொள்வேன். 4 1/2 மணிக்கு எழுந்துகொள்வேன். ஆனால் நினைவாக 5 1/2 (அல்லது சில சமயம் 5) அலாரத்தை அணைப்பேன். அணைக்க மறந்தால் மத்த எல்லாருக்கும் பெரிய தொந்தரவாக இருக்கும். மான்செஸ்டரில் இதுபோல ஒரு தடவை காலை 4 மணிக்கு அலாரம் வைத்துவிட்டு தூங்கிவிட்டேன். அலாரம் எனக்குக் கேட்கலை. ஆனால் ஹோட்டல் ரிசப்ஷனிலிருந்து ஆள் வந்து, காலைல அலாரம்லாம் வைத்தால் மத்த கஸ்டமர்கள் நிம்மதியாகத் தூங்க முடியாது என்று சொல்லிவிட்டுப் போனார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆல் இண்டியா ரேடியோ நிலையத்தை அவர் நடத்தணுமா - ஹாஹா! நல்ல கேள்வி நெல்லைத் தமிழன். பலர் இப்படி இருக்கிறார்கள். பூங்காவில் நடக்கும்போது கையில் ப்ளூ டூத் ஸ்பீக்கருடன் நடந்த ஒருவரிடம் பலர் சொல்லிப் பார்த்து விட்டார்கள் - அவர் திருந்துவதாக இல்லை!

      நிறைய நேரங்களில் இப்படி தொடர் அலாரம் தேவையாகவே இருக்கிறது.

      //மத்த கஸ்டமர்களுக்குத் தொந்தரவு// - அதானே! இரயிலிலும் இப்படிச் செய்பவர்கள் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. அலட்சிய மனப்பான்மைதான், எனக்கு ஒன்றும் வராது என்று நினைத்துக்கொண்டு, பிறருக்குத் தொந்தரவாக இருக்கும் மனிதர்களுக்கு இருக்கும். இன்றைக்குக்கூட காய்கறி வண்டிக்கு காய் வாங்கச் சென்றால் (வரிசையில் நிற்கணும். நான் 4வதாக நின்றேன்). எனக்கு முன் இருந்த பெண், மாஸ்கை தாடையில் அணிந்துகொண்டு சில பல முறை இருமினாள். எனக்கு வந்த எரிச்சலில், காயும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று கிளம்பிவந்துவிட்டேன். (நமக்குத் தெரியுமா அது சாதா இருமலா இல்லை ஸ்பெஷல் சாதாவா என்று?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அலட்சியப் போக்கு - உண்மை தான். பலரும் இப்படி இருக்கிறார்கள்.

      சாதா இருமலா இல்லை ஸ்பெஷல் சாதாவா? ஹாஹா! அதானே. கண்டுபிடிக்கவா முடியும்?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  12. கலர் பார்க்கத் தெரியாதா என வேறு எதையாவது நினைத்துக் கொண்டு வம்புக்கு இழுக்க வேண்டாம் //

    ஹா ஹா ஹா ஹா சிரித்துவிட்டேன்.

    எனக்கும் கூட மூளையில் இருக்கும் பயோ க்ளாக் சரியாக நான் தினமும் எழும் நேரத்திற்கு எழுப்பிவிட்டுவிடும். இரவு தூங்க தாமதமானாலும் சரி.

    அந்தக் கார்காரர் வராவிட்டாலும் உங்களுக்கு முழிப்பு கொடுத்துவிடும் தான்!!.

    ஜி மஞ்சளும் ஆரஞ்சும் கலந்த கலவை சன் செட் கலர் எனலாம்.

    முன்பு பெயிண்டிங்க் செய்த காலத்தில் இப்படிப் பல கலர்கள் மிக்ஸ் செய்து புது கலர் வர வைத்துப் பயன்படுத்தியதுண்டு. கணினி வந்தபிறகு அதில் ஒவ்வொரு கலர் கோம்போவுக்கும் ஒரு பெயர் உண்டு என்பதும் அறிந்தேன். நம்ம ப்ளாகர் அல்லது பெயின்டில் கூட இந்தக் கலர் மிக்ஸ் ஆப்ஷ்ன் இருக்கிறதே..கூட்டிக் குறைத்து என்று.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சன் செட் கலர் - :) இது புதுசா இருக்கு எனக்கு!

      கலர் மிக்ஸிங் ஆப்ஷன் - ஆமாம் கீதாஜி. ஆனாலும் இவை புரிபடுவதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. நானும் 5.00, 5.15, 5.32ன்னு அலாரம் வச்சிருக்கும் ஆளுதான்.

    நிஜமாவே ஆண்களுக்கு கலர் பார்க்க தெரியாதுதான். பச்சை, மஞ்சள், ப்ளூ..ன்னு முடிச்சுப்பாங்க. ஆனா, நாங்க வெளிர் பச்சை, டார்க் ஆரஞ்ச், மெஜந்தா ப்ளூன்னு ஒரே நிறத்தில் பல வகைகளை சொல்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரிசையாக அலாரம் வைத்துக் கொள்ளும் பழக்கம் பலரிடம் இருக்கிறது!

      நிஜமாகவே ஆண்களுக்கு கலர் பார்க்க தெரியாது தான் - உண்மையை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  14. உண்மைதான்
    கொரோனா எவ்வளவு கடுமையாகப் பரவியபோதும், பலர் அலட்சியமாகத்தான் நடந்து கொள்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலரின் அலட்சியப் போக்கு, தொடர் தொற்றுக்குக் காரணமாகி விடுகிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  15. எனக்கு ஒன்றும் ஆகாது//

    பற்றி சொன்ன விஷயம் முழுவதையும் 1000 மடங்கிற்கும் மேல் டிட்டோ செய்வேன் ஹா ஹா ..நிஜமாகவே ஜி மிக மிக அலட்சியமாக இருக்கிறார்கள். மட்டுமல்ல, நீங்கள் சொல்லியிருப்பது போல் மற்றவருக்கும் பரப்புகிறோமே என்ற சிந்தனையே இல்லாமல் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் கூட சமூகப் பொறுப்பு இல்லாமல். அதுவும் நீங்கள் சொல்லியிருக்கும் நபர் டூ மச்சோ டூ மச்!
    அதீத அலட்சியம் - எனக்கு ஒண்ணும் ஆஹாது என்று சுற்றிக் கொண்டிருப்பதால் மற்றவர்களுக்கும் தொற்றைக் கொடுத்துக் கொண்டிருப்பவர்களை என்ன சொல்லித் திருத்த? //

    அதே அதே ஜி!!

    எங்கள் வீட்டிலும் இப்படியானவர்கள் இருக்கிறார்கள்.

    பலரும் முகக்கவசம் கூட நாடியின் அடியில்தான் இருக்கும். அல்லது கழுத்தில்...

    திருத்தமுடியாதவர்களை என்ன சொல்ல? நீங்கள் சொல்வது போல் நாம் தான் வருத்தப்பட்டுக் கொள்ள வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமூகப் பொறுப்பு - அப்படின்னா என்ன? :(

      திருந்த விரும்பாதவர்கள் அவர்கள் - நேற்று கூட அலுவலகத்தில் அந்த மனிதர் சுற்றிக் கொண்டிருந்தார் - எவ்விதக் கவலையுமின்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  16. நல்ல பதிவு. வித்தியாசமான அலாரம் உண்மையிலேயே வித்தியாசம்தான். இப்படி பல அளட்சியமான மனிதர்களால்தான் இன்று இந்தியா நான்கு மூண்று என முன்னேரிக் கொண்டே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அலட்சியமான மனிதர்களால் இன்று இந்திய நான்கு மூன்று என முன்னேறிக் கொண்டே இருக்கிறது - உண்மை தான் ஃபெர்ணாண்டோ.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  17. சங்கீத சங்கடம்! என்ன செய்வது? சிலருக்குச் சொன்னாலும் புரியாது. ஆனால் நான் காலை சீக்கிரம் எழுந்துக்கணும் என்றால் எத்தனை மணிக்கு எழுந்துக்க நினைக்கிறேனோ அந்த நேரம் தானாக விழித்து எழுந்துடுவேன். சில நாட்கள் மெதுவாக எழுந்திருக்கலாம் என்னும் எண்ணம் இருந்தால் எதுவுமே நினைச்சுக்காமல் படுத்துடுவேன். அன்னிக்குக் காலையிலே ஐந்து மணிக்கு விழிப்பு வரும். சில சமயங்களில் நடு இரவில் தூக்கம் இல்லாமல் போய்க் காலை நாலு மணிக்கப்புறமாத் தூங்கியது உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சங்கீத சங்கடம். ஹாஹா!

      தூக்கம் ஒரு வரம் - எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை.

      நீக்கு
  18. "எனக்கெல்லாம் எதுவும் வராது! நான் ஆசிர்வதிக்கப்பட்டவர்/வள்" என்பதை நானும் நிறையக் கேட்டு நிறையப் பார்த்தாச்சு! இப்படியானவர்கள் திருந்தவே மாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியானவர்கள் திருந்தவே மாட்டார்கள் - உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  19. ஃபிடல் காஸ்ட்ரோ சொன்ன வாசகம் நன்றாக இருக்கிறது.
    அலாரம் தேவையில்லை தினம் 4.30க்கு எழுந்து கொள்வேன்.
    சில நேரம் காலை 3.30க்கு எழுப்பிவிடும். அப்புறம் தூக்கம் வராது.

    எனக்கேல்லாம் எதுவும் வராது என்று அலட்சியமாக இருக்கும் காலம் இல்லை இது.
    இப்படி இருப்பவர்களை நினைத்தால் கவலையும் கோபமும் வருகிறது.

    "வீட்டிலேயே இப்படி பயந்து கொண்டு ஏன் இருக்கிறீர்கள்?" எங்கள் வீடுகளுக்கு வாங்க என்று வேறு கூப்பிடுகிறார்கள் உறவினர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

      தூக்கம் கலைந்தால் மீண்டும் உறங்குவது கடினமே.

      /எனக்கெல்லாம் எதுவும் வராது என்று அலட்சியமாக இருக்கும் காலம் இல்லை இது/ - இதை அவர்கள் உணர்ந்து கொள்ளாமல் இருப்பது தான் கவலையே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  20. என்னதான் மீடியாவில் கரடியாக கத்தினாலும் இன்னும் விழிப்புணர்வு சிலரிடம் இல்லை என்பது உண்மையே , முன்னைக்கு இப்போ எவ்வளவோ பரவாயில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீடியாவில் கரடியாக கத்தினாலும் - அதில் தேவையில்லாததை மட்டுமே எடுத்துக் கொள்வார்கள்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி.

      நீக்கு
  21. வணக்கம் சகோதரரே

    வாசகம் அருமை. வண்டியில் பாடல் அலாரத்துடன் தினமும் செல்வது அந்த இடத்தில் வாழும் மனிதர்களுக்கு ஒரு பரோபகார செயல் என அந்த மனிதர் நினைக்கிறார் போலும்..!

    நீங்கள் சொல்வது போல் தூக்கம் ஒரு வரம். அது அனைவருக்கும் ஒரே மாதிரி கிடைப்பதில்லை. எனக்கும் இப்போதெல்லாம் இரவு தீடிரென முழிப்பு வந்து விட்டால், மறுபடி உறங்கி காலை எழும் போது தாமதமாகி விடுகிறது. இல்லையெனில் நாளை சீக்கிரமாக எழ வேண்டுமென நினைத்துக் கொண்டே படுத்தால், அந்த நேரத்திற்கு முன்பே முழிப்பு வந்து விடும்.

    தன்னைப் பற்றி பெருமை பேசுகிறவர்களை பற்றி என்ன சொல்வது? இவர்களால் மற்றவர்களுக்கும் தொந்தரவு என்பதை இவர்கள் எப்போதுதான் புரிந்து கொள்வார்களோ ? கடவுள் அனைவரையும் காப்பாற்ற சீக்கிரமாக வர வேண்டும். இதுதான் இப்போது எல்லோரின் பிரார்த்தனையும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      அலாரம் மனிதர் - பரோபகார செயல் என நினைக்கலாம்! :)

      தூக்கம் - பல சமயங்களில் நினைத்த நேரத்தில் தூங்குவதோ எழுவதோ இயல்வதில்லை.

      மற்றவர்களுக்குத் தொந்தரவு என்பதை புரிந்து கொள்வதில்லை பலரும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  22. அலார்ம் அடித்தவுடன் எழுந்து கொள்கிறவர்கள் உலகில் உண்டா? 'முஜே குச் நஹி ஹோகா' என்று சொல்லிக் கொள்வது சிலருக்கு தேவையில்லாத பெருமை! கஷ்டம் மற்றவர்களுக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அலார்ம் அடித்தவுடன் எழுந்து கொள்கிறவர்கள் உலகில் உண்டா? ஹாஹா இல்லை தான்.

      தேவையில்லாத பெருமை - அதே தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானும்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....