செவ்வாய், 28 ஜூலை, 2020

காற்றில் கரைந்த மாயமென்ன – நிர்மலா ரங்கராஜன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

தனக்குத் தெரிந்ததை தெரியும் என்றும், தெரியாததை தெரியாது என்றும் அறிவது தான் அறிவு – கன்ஃபூசியஸ்.

இன்றைக்கு நம் பதிவில் காணப்போவது தில்லியிலிருந்து திருமதி நிர்மலா ரங்கராஜன் அவர்களின் எழுத்தில்! அவருக்குத் தெரிந்த ஒருவருக்குக் கிடைத்த அனுபவங்களை இங்கே எழுதி இருக்கிறார். படித்துப் பாருங்களேன் - வெங்கட் நாகராஜ், புது தில்லி. 

******

காற்றில் கரைந்த மாயமென்ன...


”கண்ணுங்களா, இனிமேல, இன்னும் கொஞ்ச நாளைக்கு, நீங்க ரெண்டு பேரும் தான். இந்த வீட்டில இருக்கப் போறீங்க! ஒருத்தருக்கு ஒருத்தர் அனுசரித்து நடந்துக்கணும், பார்த்து சூதானாமா நடந்துக்கணும் லதா! மாப்பிள்ளை ஆஃபீஸ் போனப்பறம் தனியா இருக்கணும் இல்லையா, பயப்படாம தைரியமா இருக்கணும்மா!” என்று பலமுறை சொல்லிய பிறகு தான், புதிய வீட்டில் சம்பிரதாய முறைப்படி குடித்தனம் வைக்க வந்த பெரியவர்கள் அனைவரும், தமிழகத்திற்குச் சென்றார்கள்! 

அதன் பிறகு, அந்த வீட்டில் லதாவும் அவளது கணவன் ராஜ் மட்டுமே. ஊரில், கூட்டுக் குடும்பமாக இருந்த லதாவுக்கு, இங்கே எல்லாமே கணவன்தான் என்றாகிவிட்டது. கணவனுக்கும் விடுப்பு முடிந்து அலுவலகம் செல்ல வேண்டிய கட்டாயம். முதல் நாளே, வீட்டில் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு அலுவலகம் புறப்பட்டார். கணவன் அலுவலகம் சென்ற பிறகு புத்தகமும் டேப் ரெக்கார்டரும் தான் பொழுது போக்கு அவளுக்கு. தலைநகர் தில்லியின் அந்த வீட்டில் குடித்தனம் வந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆயிற்று. 

அருகில் இருக்கும் இரண்டு நண்பர்கள் குடும்பத்தினரை லதாவிற்கு அறிமுகம் செய்து வைத்தார் ராஜ். நண்பர்களின் இரண்டு பிள்ளைகளும், அவர்களோடு பக்கத்து வீட்டில் வசிக்கும் பிள்ளைகளும் சேர்ந்து நான்கு ஐந்து குழந்தைகள் லதாவை தேடி தினமும் வருவார்கள். இவளும் அந்த குழந்தைகளுக்கு கதை சொல்வதும், அவர்களோடு விளையாடுவதும் என்று இருக்க, அந்தப் பிள்ளைகள் நல்ல நண்பர்களாகி விட்டனர். ஒவ்வொரு நாள் மாலையும் ராஜ் அலுவலகம் முடிந்து வந்த பிறகு, அன்று முழுவதும் நடந்த விஷயங்களை இருவரும் பேசிக்கொள்வார்கள். இப்படியே நல்ல விதமாகவே, மகிழ்ச்சிகரமாக நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. 

இல்லற வாழ்வில் சந்தோஷம் அதிகரிக்கும் விதமாக, லதா கருவுற்று இரண்டு மாதங்களாகி இருந்தன. ஒருநாள் இரவு நல்ல தூக்கம், அப்போது யாரோ அருகில் வந்து அவளை வருடுவது போன்ற ஒரு உணர்வு லதாவுக்கு. திடுக்கிட்டு கண்விழித்துப் பார்க்க, ஏதோ நிழல் போன்று ஒரு உருவம் அவள் படுத்து இருந்த இடத்திலிருந்து மெதுவாக நகர்ந்து செல்கிறது. கனவோ அல்லது பிரமையோ என்று கண்களைக் கசக்கி மறுபடியும் பார்க்கிறாள். ஏதோ ஓர் உருவம், காற்றிலே கரைந்து செல்வது போல தெரிய, பயத்தில் நெஞ்சே அடைத்து விடும் போல் இருந்தது. பயத்துடன் கணவனை எழுப்பி அந்தக் காட்சியைக் காண்பிக்க, அவருக்கும் அதே அதிர்ச்சியான நிலைதான். 

என்னவென்று இருவரும் உணரும் முன்பே அந்த உருவ,ம் அருகில் இருந்த ஜன்னல் வழியாக மெதுவாக தவழ்ந்து வெளியேறிவிட்டது. பயத்தில் இருவரும் உறைந்து போய், மின் விளக்கை உயிரூட்டி, உருவம் போன இடத்தை பார்க்க, அங்கு எதுவும் தெரியவில்லை. அந்த வீடு இரண்டு பக்கம் ஜன்னலை கொண்டது. படுக்கை அறை ஜன்னல் வழியாக அந்த உருவம் வெளியேறியது! எகிறி குதிக்கவும் இல்லை பாய்ந்து ஏறவும் இல்லை. மிக மென்மையாக ஒரு புகை மண்டலம் தவழ்ந்து போவதைப் போல அந்த ஜன்னலை அது கடந்து சென்றது. அந்த ஜன்னல் வழியாக வெளியே சென்றால் அதன் பிறகு செல்ல வேறு வழி எதுவும் கிடையாது . ஏனென்றால் அந்த இடம் ஒரு சிறிய செங்குத்தான திறந்த வெளி. மின்தூக்கி வைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடம் அது. எனவே வெளியேற வாய்ப்பில்லை. எங்கே சென்றிருக்கும் என்று யூகிக்கவும் முடியவில்லை. மாயமாகி விட்டது.

அதன்பிறகு அன்றைய இரவு, லதா, ராஜ் இருவருக்குமே தூக்கமில்லை. காற்றில் கரைந்து போன அந்த உருவத்தினைப் பற்றிய சிந்தனை மட்டுமே விரவியிருந்தது மனதில். ஆவி, பேய், பிசாசு எல்லாம் ஏமாற்று கதை என்று ஏளனம் பேசும், அவர்களது இளம் வயது அது என்றாலும், இப்படி ஒரு நிகழ்வினை நேரில் பார்த்த பிறகு அவர்களால் ஏமாற்றுக் கதை என நினைக்க மனம் ஒப்பவில்லை! பயம் கலந்த ஆச்சரியத்துடன், இந்த நிகழ்வு உண்மைதானோ என்று, எதையும் நம்ப முடியாமல் திரும்பத் திரும்ப அதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர். 

சரி இப்படியே பேசிக்கொண்டிருந்தால் தூங்க முடியாது! எனவே இந்தச் சம்பவத்தை இத்தோடு மறந்து விடவேண்டும் என்று நினைத்து அதைப்பற்றி தொடர்ந்து பேசுவதை நிறுத்திக் கொண்டனர். மறுநாள் எப்போதும் போல ராஜ் அலுவலகம் சென்றுவிட, லதாவால் நடந்த சம்பவத்தினை மறக்க இயலவில்லை! மனதுக்குள் ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது! காற்றில் கரைந்த உருவம், மனதை விட்டு கரையவே இல்லை! ஆனால் கரைந்தது மற்றொன்று! 

சம்பவம் நடந்த இரண்டு நாட்களில் , வீட்டில் தனியாக இருக்கும்போது லதாவுக்கு வயிற்றில் லேசான வலி. தனது உடலில் ஏதோ ஒரு மாற்றம் உண்டாவதை அவளால் உணர முடிந்தது. தனியாக இருப்பதால், யாரிடமும் அதைப் பற்றி ஆலோசனை கூட கேட்க முடியவில்லை! அப்போதெல்லாம் ஃபோன் வசதி கூட கிடையாதே. கணவர் ராஜ் அலுவலகத்திலிருந்து வரும் வரை காத்திருக்க வேண்டி இருந்தது. உடனே மருத்துவரிடம் செல்ல, அங்கே மருத்துவர் ராஜலக்ஷ்மி, லதாவை பரிசோதித்து சொன்ன விஷயம் – ”சாரிம்மா, கர்ப்பம் க(ரை)லைஞ்சுடுச்சும்மா! எதுக்கும் பரிசோதனை செய்து விடலாம்”. 

சிகிச்சைகள் முடிந்த பிறகு மாதிரியை ஆய்வுக்கு அனுப்பி வைக்க, முடிவு வந்த பின்னர் டாக்டரின் கணிப்பு சரியாகவே இருந்தது – ”பயத்தினால்/அதிர்ச்சியால் தான் இப்படி ஆனது” என்று முடிவு சொல்லப்பட்டிருந்தது . பயம் எத்தகைய தன்மை உடையது என்பதை லதாவும், ராஜும் அப்போது முழுவதும் உணர்ந்தனர். உடனடியாக அவர்கள் செய்த வேலை, அந்த வீட்டினைக் காலி செய்து கொண்டு நண்பர்கள் இருக்கும் குடியிருப்பிலேயே குடியேறியது தான்! காற்றிலே கரைந்த உருவத்தினை இன்றளவும் லதாவினால் மறக்க முடியவில்லை! 

இது ஒரு உண்மையாக நடந்த சம்பவம் என்பதையும் இங்கேயே சொல்லிவிடுகிறேன். 

என்ன நண்பர்களே, இந்த நாளின் பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வழி சொல்லுங்களேன். 

மீண்டும் வேறு ஒரு பதிவின் வழி சந்திக்கும் வரை…

நட்புடன் 


நிர்மலா ரங்கராஜன் 
புது தில்லி.

42 கருத்துகள்:

  1. முதுகில் சில் என்று உணர வைக்கும் அனுபவம்.  ஆனால் அந்த சம்பவத்துக்கு விளக்கம் எதுவும் இல்லை.  யாரால் சொல்ல முடியும்?  இல்லையா?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளக்கம் சொல்ல முடியாத நிகழ்வுகள் தான் இவை போன்றவை. எனக்கும் சில அனுபவங்கள் உண்டு ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. இளங்காலை...
    அனைவருக்கும் இனிய நாளாக மலரட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  3. மனதைக் கலக்கி விட்டது இன்றைய பதிவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் துரை செல்வராஜூ ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. வாசகம் அற்புதமான கருத்து ஜி

    இந்நிகழ்வு உண்மையோ, பொய்யோ கர்ப்பமான தொடக்கத்தில் ஒரு பெண் இக்காட்சியை கண்டால் இதுதான் நிகழும் என்பது உண்மை.

    இப்பொழுது அந்த தம்பதிகளுக்கு குழந்தை இருக்கிறதா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      நடந்த சம்பவம் தான் கில்லர்ஜி. அவர்களுக்கு இப்போது இரண்டு குழந்தைகள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. இவ்வாறு நடக்க வாய்ப்புண்டு. படித்ததும் மனம் சற்றே கனத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவ்வாறு நடக்க வாய்ப்புண்டு - ஆமாம் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. சில்லிடவைக்கும் அனுபவம். இருவரும் பார்த்திருக்கின்னறனர். பிரமையாக இருக்க முடியாது.

    என் பெரியப்பா பையன் தில்லியிலேயே பிறந்து வளர்ந்தவன். அவன் பதின்ம வயதில் நண்பர்களோடு தில்லியில் பழங்கால சமாதிகள் இருந்த இடத்துக்குச் சென்றபோது ஒரு வாளை எடுத்துவந்தானாம். ஒவ்வொரு நாளும் அதன் எடை அதீதமானவுடன் பயந்துபோய் திரும்ப வாளை வீட்டிலிருந்து வெளியே தூக்கி எறிந்துவிட்டேன் என்று சொன்னான். கேட்க கதை போல இருந்தாலும் அவனுக்கு நிகழ்ந்தது எனப் புரிந்துகொள்ள முடிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரமையாக இருக்க முடியாது - அதே தான்.

      உங்கள் பெரியப்பா மகனுக்கு கிடைத்த அனுபவம் - அப்பாடி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  7. பயம் காரணத்தோடோ இல்லாமலோ ஆட்டிவைக்கும் கருவையும்கலைக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  8. படித்த போதே மனதுக்கு ஒரு மாதிரி இருந்தது. சம்பந்தப்பட்டவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்! பாதிக்கப்பட்டவர்களைப்பற்றி நினைக்கும்போது ரொம்பவே பரிதாபமாக இருக்கிறது. மிக மோசமான அனுபவம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மோசமான அனுபவம் தான் மனோ சாமிநாதன் மேடம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. அமாணுஶியமான அணுபவம்.
    பிரம்மிப்பானது, நம்மால் அறிய முடியாதது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அரவிந்த்.

      நீக்கு
  10. என்னவொரு கொடுமை இது...

    இன்றைக்கு அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் போதும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொடுமை தான்.

      இன்றைக்கு மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள் அவர்கள் தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. பயமாக இருக்கிறது. அந்தத் தம்பதியருக்கு குழந்தை இருக்கிறதா? அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ஒரு குழந்தை உருவாகி அது கலைவது பெரும் கொடுமை. வாசகம் அருமை சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது அவர்களுக்கு இரு குழந்தைச் செல்வங்கள் உண்டு அபிநயா.

      வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. உண்மை கதை மனதை கனக்க வைத்து விட்டது. மனைவிக்கு மட்டும் தெரிந்து இருந்தால் அது கனவு என்று சொல்லாம் ஆனால் கண்வருக்கும் தெரிந்து இருக்கே!
    சில விஷயங்கள் நமக்கு புரிந்து கொள்ள முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல விஷயங்கள் புரிந்து கொள்ள முடியாதவை தான் கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. வெங்கட்ஜி நேற்றைய தகவலுக்கு - உங்கள் புத்தகம், உங்கள் மனைவியின் புத்தகங்களுக்கு வாழ்த்துகள்! தரவிறக்கம் செய்து கொண்டேன் உங்கள் புத்தகத்தை.

    இக்கதை உண்மையா? இருவருமே கண்டிருப்பதால் உண்மையாக இருக்குமோ?

    கொஞ்சம் பயப்பட வைக்கும் அனுபவம் தான்.

    வாசகம் அருமை

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      மின்னூல் - தரவிறக்கம் செய்து கொண்டதற்கு நன்றி.

      உண்மையாக நடந்த நிகழ்வு தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. அமானுஷ்யம்! எப்படி இப்படி என்று, இதுவரை அனுபவம் இல்லாததால் கொஞ்சம் வியப்பு. கடைசியில் என்னாச்சு அதற்குக் காரணம் என்ன என்று தெரியவில்லையோ? அருகில் யாரும் சொல்லவில்லை போலும். இவர்களும் யாரிடமும் பகிர்ந்து கேட்கவில்லையோ?

    இப்படியான பயம் பெரும்பாலும் அதுவும் பெண்ணின் மனது ரொம்பவும் மெல்லியதாக இருந்தால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு நிறையவே உண்டுதான்.

    ரொமபவே ஆர்வமா இருக்கு அந்த உருவம் எப்படி வந்தது எதற்கு வந்தது? உருவமா இல்லை அருவமா? என்ன என்று பல.....நிர்மலா நீங்க ஃப்ரீயா இருந்தா வந்து விளக்கம் சொல்லிட்டுப் போங்களேன் இல்லேனா எனக்குத் தலை வெடித்திடும் போல இருக்கு ஹா ஹா ஹா ஹா....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் தான் கீதா மா.
      மனம் கலங்குகிறது. அன்பு வெங்கட் சஸ்பென்ஸுடன்
      நிறுத்தக் கூடாது.
      அதன் பிறகு நன்றாக இருந்தார்கள்
      என்று சொல்லவும்.
      பீதி கிளப்பும் உண்மைக்கதை.
      சிலிர்க்கிறது:(

      நீக்கு
    2. வணக்கம் சகோதரி
      அந்த உருவம் ஏன் வந்தது எப்படி வந்தது என்று தெரியாது. அது எழுந்து செல்லும் போது மட்டுமே பார்த்ததால் அதன் முகம் எப்படி இருந்தது என்றும் தெரியாது. ஆனால் அடிப்படையில் மனித உருவத்தை ஒத்திருந்தது.
      இந்த சம்பவம் குறித்து வெளியில் எவரிடமும் விசாரித்தால் வீட்டு உரிமையாளர் பாதிக்கப்படுவார் என்பதால் அதனை பெரிதுபடுத்தவில்லை.
      இப்போது அந்த தம்பதியினர் நலமாகவே உள்ளனர். அவர்களுக்கு ஆண் ஒன்று பெண் ஒன்று என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
      தங்களின் கருத்து பதிவிற்கு நன்றி.
      தங்கள் தலை காப்பாற்றப்பட்ட நிம்மதியில் இனிய இரவு வணக்கம்.

      நீக்கு
    3. நிர்மலா ரங்கராஜன் அவர்கள் பதில் எழுதி இருக்கிறார்கள் வல்லிம்மா/கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      பதிலுரைத்தமைக்கு நன்றி நிர்மலா ரங்கராஜன் ஜி.

      நீக்கு
  15. இதுவரை கேள்விபடாத சம்பவம். மனதிற்கு வேதனையாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    படித்து வரும் போதே ஒரு வித இனம் புரியாத பயம் நம்மை ஆட்கொள்கிறது. தம்பதிகள் இருவரும் நேரில் அதை பார்த்திருப்பதால், அதை வெறும் பிரமை என ஒதுக்கவும் முடியவில்லை. அதே சமயம் மனைவிக்கு கரு கலைந்ததினால், நிகழ்வை படித்து வருங்கால் ஒரு பீதி இன்னமும் அதிகரிக்கிறது. அந்த வீட்டில் ஏற்கனவே ஒரு அமானுஷ்ய சக்தி இருந்திருக்கும். அதுதான் தன் வீட்டில் குடியிருப்பவர்களை சமயத்தில் இப்படி தோன்றி ஆட்டுவிக்கும். படித்ததும் மனது கலங்கி விட்டது. அவர்கள் உடனே வேறு இடத்திற்கு குடிப் புகுந்தது நல்ல விஷயம். அவர்கள் நலமுடன் வாழ இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      அமானுஷ்யங்களை புரிந்து கொள்ள முடிவதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  17. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  18. கணவனும் பார்த்ததால் மனைவி சொன்னது உண்மை என்று உணரமுடிந்தது ஒருவகையில் நல்லதாகிப்போனது, இல்லையேல் மனைவிக்கு மன நோய் என முத்திரை குத்தி இருப்பார்களோ?

    திகிலாகத்தான் இருக்கின்றது கேட்கும்போதே, அனுபவித்தவர்கள் நிலையை நினைத்தால் இன்னும் உடல் சிலிர்க்கிறது அச்சத்தால்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதும் நினைத்தால் சில்லிட்டுப் போகும்தான் அவர்களுக்கு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோயில்பிள்ளை.

      நீக்கு
  19. என்ன என்று சொல்வது கவலை தரும் சம்பவம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  20. நல்லவேளையாக இருவரும் பார்த்திருக்கின்றனர். ஆனாலும் இதுவும் கொஞ்சம் கலக்கமாகவே இருக்கிறது. இதற்கு அடுத்தது ஒரு விதத்தில் வேதனை தந்தது எனில் இது இன்னொரு விதத்தில். எப்படியோ இருவரும் சுகமாகவும் குழந்தைகளுடனும் இருப்பது மனதுக்கு ஆறுதல் தருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....