வியாழன், 9 ஜூலை, 2020

கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சிப் பேசக் கூடாதா...

அன்பின் நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம். இந்த நாளை ஒரு பொன்மொழியுடன் ஆரம்பிக்கலாம் வாங்க!

வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை - சாமுவேல் பட்லர். 

*****


சில நாட்களாக தினம் தினம் காலையில் அவளுடனான கொஞ்சல் அதிகமாகவே இருக்கிறது.  அவள் என் இல்லம் வரும் நேரமெல்லாம் அவளைக் கொஞ்சுவதிலேயே நேரம் போகிறது. கூடவே கொஞ்சம் பயமும்! நான் அவளைக் கொஞ்சுவது மற்றவர்களுக்குத் தெரிந்து விட்டால்! அதுவும் வீட்டில் தனியாக இருக்கும் நான் இப்படி காலையிலும் மாலையிலும் கொஞ்சிக் கொஞ்சிப் பேசினால்... கேட்பவர்களுக்கு என்ன தோன்றும் - இப்படி நினைத்தாலும் கொஞ்சலை நான் இன்னும் நிறுத்தவில்லை! எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்! என்ற அசட்டு தைரியம் தான்! இன்னும் அதிகமாகவே அவளைக் கொஞ்சிக் கொண்டிருக்கிறேன்.  இன்னமும் அவளிடம் பெயரைக் கூடக் கேட்கவில்லை! கேட்டாலும் அவள் என்ன சொல்லிவிடவா போகிறாள்! நான் கொஞ்ச, அவள் கெஞ்ச! இப்படியே நாட்கள் நகர்கின்றன!  

ஹலோ... என்னங்க... இது யாரோட வலைப்பூ... இந்த மாதிரி இதுவரை இங்கே ஒன்றுமே இப்படி எழுதியதில்லையே? "என்னடா நடக்குது இங்கே?” என்று வடிவேலு மாதிரி கேள்விக் கணைகளுடன் நீங்கள் பாய்வதற்குள் விஷயத்திற்கு வந்து விடுகிறேன்.  

”உன் சமையலறையில்  நான் உப்பா, சர்க்கரையா?” என்ற பாடலுடன் காலை, மாலை வேளைகளில் சரியாக வந்து விடுகிறாள் அவள்! 

எனக்கு அவளைக் கண்டால் பிடித்திருந்தாலும், கொஞ்சம் உள்ளூர ஒரு பயமும் இருக்கிறது. சரியாக சமையல் நேரத்தில் வருவதால் வரும் பயம்!  எங்கே உணவைக் கேட்டு விடுவாளோ என்ற பயமல்ல!  எங்கே அவள் வேகத்தில் உள்ளே வந்து குதித்து சூடாக இருக்கும் சப்பாத்திக் கல்லில் விழுந்து விடுவாளோ என்ற பயம் தான்! இன்னமும் அவள் யாரென்று கூறாமல் இருப்பது நல்லதல்ல! சொல்கிறேன். 



சில நாட்களாக ஒரு அணில் என் சமையலறை ஜன்னலில் தான் காலை மாலை நேரங்களில் வசிக்கிறது.  இரவுப் படுக்கையும் அங்கேயே தான். எங்கள் சமையலறையில் இரண்டு ஜன்னல்கள் - ஒன்று கம்பிவலை ஜன்னல் மற்றொன்று கண்ணாடி ஜன்னல்! கண்ணாடி ஜன்னல் சற்றே திறந்திருக்கும். கம்பிவலை ஜன்னலில் ஒரு பெரிய திறப்பு - Exhaust Fan இருப்பதால்! இரண்டுக்கும் இடையே இருக்கும் இடைவெளியில் வந்து இந்த அணில் குடும்பம் நடத்துகிறது.  ஜன்னலின் கட்டி வைத்திருந்த துணியைக் கடித்துப் போட்டு, வெளியிலிருந்து நார்களையும் கொண்டு வந்து அதன் மீது போட்டு மெத்தையாக்கிக் கொண்டு அங்கே அதன் குடித்தனம்.  நான் சமையலறை ஒளிவிளக்கை போட்டால் போதும் ஒரு குரல் கொடுப்பாள் - நான் இங்கே இருக்கிறேன் என்று! நான் உடனே எனது கொஞ்சலைத் தொடங்கி விடுவேன்.

”என்ன இன்னிக்கு சீக்கிரமே வந்துட்ட போல! பகல் முழுவதும் சப்தமே இல்லையே” என்றால் மீண்டும் ஒரு சத்தம்! என்ன பதில் சொல்கிறாள் என எனக்குப் புரிந்தால் தானே! அவள் சொல்வது புரிகிறதோ இல்லையோ தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறேன் - “இன்னிக்கு என்ன சாப்பிட்டடா செல்லம்? இங்கே இன்னிக்கு இந்த சமையல்!  அது சரி ஓட்டை வழியா உள்ளே வந்து குதிச்சுடாத! அடுப்பு எரிஞ்சுட்டு இருக்கு! பார்த்து உன் இடத்திலேயே இரு! உள்ளே வந்தா நான் பொறுப்பு இல்ல பார்த்துக்கோ! கல்லு சூடா இருக்கு! பட்டா பழுத்துடும்! உன்னைப் பார்த்துக்கிட்டே நானே சூடு போட்டுக்கிட்டேன் விரல்ல! எனக்கே தாங்கல! உனக்குத் தாங்குமா? தாங்காது! ”அபிராமி அபிராமி!” என்று மட்டுமே சொல்லவில்லை! அது தான் பாக்கி!  

தினம் தினம் காலை மாலை வேளைகளில் சமைக்கும்போது, அணிலுடனான கொஞ்சல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.  விரைவில் ஜன்னல் இடைவெளியில் குட்டி போடலாம் என்று தோன்றுகிறது. இல்லை குட்டியெல்லாம் இங்கே போட வசதி பத்தாது! சும்மா கொஞ்ச நாள் இருந்துட்டுப் போகலாம்னு தான் வந்தேன் என சொல்லிவிட்டுப் போவாளோ என தெரியாது! பார்க்கலாம்! இரண்டு நாட்கள் முன்னர் இரவு பத்தரை மணிக்கு மேல் சமையலறைக்குச் சென்று தண்ணீர் குடித்தபோது ஜன்னல் கம்பியொன்றில் படுத்து ஒய்யாரமாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். நான் வந்த சப்தம் கேட்டு கொஞ்சமாக கண் விழித்துப் பார்த்து “நீ தானா? நான் யாரோன்னு பார்த்தேன் - சரி எங்க வந்த? தண்ணி குடிச்சுட்டு கிளம்பு! சும்மா பேசிட்டே இருக்காத! நான் தூங்கணும்னு” அவள் சொல்ல, நானும் சரிடா என்று சப்தமில்லாமல் நகர்ந்தேன்! 

இன்னும் எத்தனை நாள் என் கொஞ்சல் தொடரப் போகிறது எனத் தெரியவில்லை.  கம்பிவலைக்குப் பின்னால் இருப்பதால் அவளை - அந்த அணில் செல்லத்தினை படம் பிடிக்க முடியவில்லை. அதுவும் எதிர் புறமும் சமையலறை ஜன்னல் உண்டு! அங்கே இருப்பவர்கள் நான் படம் பிடிப்பதைக் கண்டு சண்டைக்கு வரக்கூடும்! அதனால் படம் எடுக்க அதிகம் முயற்சிக்கவில்லை! அலைபேசியில் எடுத்த படம் அவ்வளவு திருப்தி தரவில்லை! அதனால் வலையிலிருந்து எடுத்த படம் இங்கே சேர்த்திருக்கிறேன்!  

என்ன நண்பர்களே... இன்றைய பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களைப் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். நாளை வேறு ஒரு பதிவுடன் சந்திப்போம்... சிந்திப்போம்... 

நட்புடன்

வெங்கட் நாகராஜ்
புது தில்லி. 

36 கருத்துகள்:

  1. உங்களுக்குள் நல்ல அண்டர்ஸ்டேண்டிங் இருக்கிறது என்று தெரிகிறது!  நன்றாயிருக்கட்டும் அந்த அணில்.  தனியாயிருக்கும் உங்களுக்கு கம்பெனி தருகிறதே...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல அண்டர்ஸ்டேண்டிங் - :) இப்போதெல்லாம் அணில் பயப்படுவதில்லை ஸ்ரீராம். பழகிவிட்டது போலும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. எங்கள் வீட்டிலும் இதுபோல் அணிலுக்கும் எமக்குமான நட்பு இருந்திருக்கிறது...

    வாழ்க அணில்... வளர்க நட்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் அணிலுடன் நட்பு - மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. முப்பது வருடங்களுக்கு முன்பு நண்பரொருவர் அணில் வளர்த்தார்.

    வீட்டுக்குள் நுழைந்ததும் செல்லம் வாங்க எங்கே இருக்கீங்க ?

    என்று குரல் கொடுப்பார். எங்கு இருக்குமோ தெரியாது சப்தம் கேட்ட மறுநொடி ஓடி வரும் இவர் கையிலெடுத்து கொஞ்சுவார்.

    நான் தொடமாட்டேன் பார்த்து ஆச்சர்யப்படுவேன், அவரும் ஊர்க்கதை எல்லாம் அணிலுடன் பேசுவார்.

    அவருடைய பெயர் முருகன். பழைய நினைவுகளை கிளறி விட்டது உங்கள் பதிவு.

    உங்களது நட்பும் தொடரட்டும் வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழைய நினைவுகளை மீட்டெடுக்க இந்தப் பதிவு உதவியதில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. அணில் உடனான கொஞ்சல் பேச்சுக்கள் நன்றாக உள்ளது. அதற்கும் மனிதர்களின் பேச்சுக்கள் சீக்கிரமாகவே புரிந்து விடுமென நினைக்கிறேன். (நீங்கள் சமையல் செய்யும் போது பார்த்து வைத்துக் கொண்டு வெகு விரைவில் அதுவும் ஒரு சமையல் ரெசிபி எழுதி தரப்போகிறது. ஹா.ஹா.ஹா.) எப்படியோ நீங்கள் வீட்டிலிருக்கும் போது, (அதுவும் தனியாக சமையல் செய்யும் போது) உரையாட நல்ல நட்பு கிடைத்திருக்கிறது.

    வலையுலகில் (அனுஷ், தமனா) போட்டியில்லாத நயன்தாரா படம் மிகவும் அழகாக இருந்தது.:) வலையில் எடுத்த அணிலும் அழகு. உங்கள் பேச்சுகளை ரசித்தபடி ஜன்னல் வலையிலிருக்கும் அணிலின் படமும் இருந்திருந்தால் இன்னமும் அழகாக இருந்திருக்கும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      சமையல் செய்யும் போது உரையாட நல்ல நட்பு - உண்மை தான்.

      சமையல் ரெசிபி எழுதி தரப் போகிறது - ஆஹா... அதையும் பதிவு செய்து விடலாம்!

      போட்டியில்லாத நயன்தாரா - :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. அட்டே, வெங்கட் பதிவா இது. இனிமையாக இருக்கிறது. அணிலழகியின் துணை இனிமை. அந்த எக்ஸாஸ்ட் ஃபான் போடமுடியாதே.. அது பத்திரமாக இருக்கட்டும் குழந்தையும் குட்டியோடு நன்றாக இருக்கட்டும் இங்கே முயல்களும் அணில்களும் நிறைய வரும. நல்ல தோழர்கள். உங்கள் நேரங்கள் இனிதாகட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு இனிமையாக இருக்கிறது என்று தெரிந்து மகிழ்ச்சி வல்லிம்மா...

      அணிலழகி இருப்பதால் எக்ஸாஸ்ட் ஃபேன் போடுவதில்லை.

      நேரங்கள் இனிதாகட்டும் - அது தானே தேவை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. ரசித்தமைக்கு நன்றி அப்பாவி தங்கமணி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. அணிலிடம் உரையாடல் மிகவும் ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசித்தமைக்கு நன்றி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. அருமையான கொஞ்சல் .😃😃😃 அணில் செல்லத்துக்கு பேர் வைக்கலாமா.குட்டுguddu😄 அணில் ரொம்ப துறுதுறுப்பு முடிந்தால் அடுப்பை தள்ளி வைத்து கொள்ளுங்களேன்.

    பதிலளிநீக்கு
  10. அணில் செல்லத்துக்கு Guddu என்று பெயர் சூட்டல்! ஆஹா! மகிழ்ச்சி. பெயர் சூட்டு விழா எடுக்கலாம் என்றால் சூழல் சரியல்ல! பிறகு வைத்துக் கொள்வோம்.

    முடிந்த வரை தள்ளியே வைத்திருக்கிறேன் அடுப்பை.

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நுஸ்ரத் சலீம் ஜி.

    பதிலளிநீக்கு
  11. உயிர்களிடத்து அன்பு வேண்டும் தெய்வம் உண்மை என்று தானறிதல் வேண்டும்.
    உங்கள் பதிவை படிக்கும் போது இதுவே நினைவு வருகிறது.
    அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார் ராஜசேகர் ஜி.

      நீக்கு
  12. தம்பி மகள் கல்யாணவீட்டில் மண்டபத்தை சுத்தம் செய்யும் குடும்பத்து சிறுவன் அணிலுடன் விளையாடிக் கொண்டு இருந்தான். அவன் கூப்பிட்டால் ஓடி வருவது அவன் மேல் விழுந்து புரண்டு விளையாடுவது எல்லாம் செய்தது.முகநூலில் முன்பு போட்டேன்.

    எங்கள் வீட்டில் அணில் பிள்ளை பெற்றது. அணிபிள்ளை செல்லபிள்ளையாக வலம் வந்தது கொஞ்ச நாள். அப்போது கேமரா இல்லை.

    உங்கள் உரையாடல் , பாடல் எல்லாம் அருமை.
    நீங்கள் உறையாடுவது அதற்கு மட்டும் தானே கேட்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நீங்கள் உரையாடுவது அதற்கு மட்டும் தானே கேட்கும்!// ஹாஹா.. கொஞ்சம் சப்தமா பேசினா அடுத்தவர்களுக்கும் கேட்கலாம்! அடுக்கு மாடி குடியிருப்பு - பக்கத்திலேயே வீடுகள் என்பதால்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  13. வாசகம் மிக அருமை, முழு தகவல் அணைத்தையும் வைத்து தெரிய வாய்ப்பு இல்லை.
    மயில் குயில் என்று பெயர் வைத்தால் கண்டுபிடித்துவிடுவார்கள் என இப்போது அணில் என பெயர் வைத்து கொஞ்சலாம் என சூப்பர் ஐடியா குடுத்துளீர்கள்.
    மிக்க நன்றி ஐய்யா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      அணில் என பெயர் வைத்து கொஞ்சலாம்! :)))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. ஹா ஹா ஹா அருமை... இப்போ புரியாது ஆனால் அணில் இடம் மாறிப் போய்விட்டால் மிகவும் கவலைப் படுவீங்கள்....

    கருணாநிதி அங்கிளின் கவிதை நினைவுக்கு வருகிறது....
    மேடைப் பேச்சு முடிந்து வீட்டுக்குப் போனேன்
    ஒருத்தி கூச்சமே இல்லாமல் ஓடி வந்து என்மீது புரண்டாள்... இன்னொருத்தி வந்து தழுவிக் கொண்டாள்
    நான் திரும்பத் தளுவவில்லை எனினும் தளுவட்டும் என விட்டிருந்தேன்....

    ஹா ஹா ஹா இப்படி வரும் அக்கவிதை... ஒன்று உறக்கம் மற்றது சோர்வோ என்னவோ எனச் சொல்லி முடிப்பார்... மொபிலில் ரைப் பண்ண முடியவில்லை முழுவதையும்... நெட்டில் கிடைக்கும் அக்கவிதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அணில் இடம் மாறிப் போய்விட்டால் - கவலைப்படலாம்! அந்த நேரம் வரும்போது அதையும் பார்த்துவிடலாம்!

      கருணாநிதி கவிதை - :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  15. எங்கள் வீட்டு மமரத்தில் அநேக அணில்கள் வாசம் நான் அவை ஏதோ கூண்டில் வாசம் செய்வதாக நினைப்பதுண்டு ஆனால் மரத்தில் எந்த கூடும் தெரிய வில்லை அவை வாசம் செய்யும் இடம்பற்றி தெரியவுமில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே பக்கத்து மரத்தில் நிறைய அணில்களும் பறவைகளும் வருகின்றன. கூடு கட்டி பார்த்ததில்லை. சமதளத்தில் தான் கூடு கட்டுகின்றன போலும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  16. உங்கள் தளத்தில் வித்தியாசமான பதிவு அண்ணா. :-)
    அணிலுக்கு பேசுவது புரியும் போல. எங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் பறவை உணவு கூண்டிற்கு அணில்கள் வரும்.. அவற்றின் அட்டகாசம் மிக அதிகம். ஒரே நாளில் தானியங்களைக் காலியாக்கி உணவு கூண்டை உடைத்தும் போட்டு விடும். என்ன செய்தும் அதனை தடுக்க முடியவில்லை.. அதனால் தொடர்ந்த ஆராய்ச்சியில் அணில் அறிவார்ந்த உயிர் என்று புரிந்து கொண்டோம். ஒரு டாக்குமென்டரி பார்த்தோம். எத்தனை தடைகள் இருந்தாலும் கண்டுபிடித்து கை தேர்ந்துவிடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வித்தியாசமான பதிவு - :) நன்றி கிரேஸ்.

      அணிலுக்கு பேசுவது புரியும் போல! - இருக்கலாம். அவற்றை நாம் அறிந்ததில்லை.

      டாக்குமென்டரி பார்க்கத் தோன்றுகிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. காணொளியின் சுட்டிக்கு நன்றி கிரேஸ். நீண்ட காணொளி - கொஞ்சம் பார்த்தேன்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  17. பொன்மொழி அருமை.

    என்னங்க, பதிவு ஒரு மாதிரியா போகுது? ம்.... இதுவும் நல்லா தான் இருக்கு....

    நமது வலைத்திரட்டி: வலை ஓலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிகரம் பாரதி.

      நீக்கு
  18. இன்னிக்கு இங்கேயும் ஓர் அணில் தான்! பாவம் குட்டி கீழே விழுந்துவிட்டது போல! அம்மாவோ அப்பாவோ தவிச்சுப் போயிடுத்து. இப்போத் தான் கொஞ்ச நேரமா சப்தம் ஓய்ந்திருக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா. இழப்பு என்பது எல்லா உயிரினங்களுக்கும் கடினமானதெே. அவற்றின் தவித்த குரல் கேட்டுக் கொண்டே இருக்கும் போது நமக்கும் தவிப்பு தான் கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....