அன்பின் இனிய நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதோர் வாசகத்துடன் துவங்கலாம்.
கவலை நம் சவப்பெட்டிக்கு ஒரு ஆணி சேர்க்கிறது. கலகலவெனும் சிரிப்பு ஓர் ஆணியைக் கழற்றுகிறது – பீட்டர்.
*****
சென்ற வாரம் இதே நாளில் “அமேசான் தளத்தில் மின்னூல்கள்வெளியிடுவது எப்படி?” என்ற பதிவினை எழுதி வெளியிட்டது நினைவில் இருக்கலாம். அந்தப் பதிவு உங்களில் சிலருக்கேனும் பயன்தரும் விதமாக இருந்திருக்கும் என நம்புகிறேன். அதன் தொடர்ச்சியாக, இந்த வாரமும் அமேசான் தளத்தில் மின்னூல் வெளியிடும் முன்னர் கவனிக்க வேண்டிய சில விஷயங்களைப் பார்க்கலாம். அமேசான் தளத்தில் மின்னூல் வெளியிட உங்கள் ஆக்கங்களை Word Document-ஆக சேமித்து தரவேற்றம் செய்ய வேண்டியிருக்கும் என்பதை சென்ற வாரத்தில் சொல்லி இருந்தேன். Kindle Direct Publishing தளமான WWW.KDP.AMAZON.COM தளத்தில் உங்கள் ஆக்கங்களை .doc/.docx Format-ஆக மட்டுமே தரவேற்றம் செய்ய வேண்டும் என சொல்லி இருந்தது நினைவில் இருக்கலாம். அப்படி நீங்கள் உங்கள் ஆக்கங்களை Word Document-ஆக சேமிக்கும்போது செய்ய வேண்டிய சில விஷயங்களை இந்தப் பதிவின் வழி பார்க்கலாம்.
கிண்டில் கருவிகள் மற்றும் அலைபேசி போன்றவற்றில் உங்கள் மின்னூல் கருப்பு வெள்ளையாகவே வரும். அதனால் விதம் விதமான வண்ணங்களில் உங்கள் எழுத்தினை எழுதுவதைத் தவிர்க்க வேண்டும். அதே போல எல்லா எழுத்துகளும் ஒரே அளவில் வைப்பது நல்லது. நீங்கள் எதையாவது குறிப்பிட்டுக் காண்பிக்க விரும்பினால் Bold செய்யலாம்!
ஒரு பக்கத்தில் தட்டச்சு செய்து முடித்து, உங்கள் அடுத்த வரி அடுத்தப் பக்கத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும் எனில் பொதுவாக பலர் செய்யும் வழி தொடர்ந்து அடுத்த பக்கம் வரும் வரை Enter தட்டிக் கொண்டே இருப்பது – இதை கிண்டிலில் மின்னூலாக வெளியிடும் File-இல் கண்டிப்பாகச் செய்யக் கூடாது – இப்படிச் செய்வதால் உங்கள் நூலில் பல இடங்களில் காலி பக்கங்கள் வரும். இது படிப்பவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கும். இதனை எப்படிச் செய்யலாம்? சொல்கிறேன்.
அப்படி நீங்கள் அடுத்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்க நினைக்கும் போது முதல் பக்கத்தில் எந்த இடத்தில் எழுதி முடித்தீர்களோ, அந்த இடத்தில் “Ctrl” key-ஐ அழுத்திக் கொண்டு ஒரு முறை “Enter” Key-ஐத் தட்டினால் போதுமானது – Page Break உருவாகி அடுத்த வரி அடுத்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கும்.
ஒரு புத்தகத்தினை உருவாக்கும் போது முதல் பக்கத்தில் உங்கள் புத்தகத்தின் தலைப்பு, உங்கள் பெயர், ஏதாவது ஒரு படம் வரும் விதமாகச் செய்யலாம். அடுத்த பக்கத்தில் புத்தகத்தினைப் பற்றிய ஒரு முன்னுரை சேர்க்கலாம். முடிந்தால் வேறு நண்பர்களிடமிருந்து புத்தகத்திற்கான ஒரு மதிப்புரை வாங்கி சேர்க்கலாம். இதெல்லாம் உங்களில் சிலருக்குத் தெரிந்த விஷயமாக இருக்கலாம். ஆனாலும் இங்கேயும் சொல்வது தெரியாதவர்களுக்காக.
அடுத்து ஒரு சிறப்புத் தகவல் – உங்கள் புத்தகத்தில் – உதாரணத்திற்கு பத்து பதினைந்து கதைகளை இணைத்து மின்னூல் வெளியிடுகிறீர்கள் என வைத்துக் கொள்வோம் – ஒவ்வொரு கதையின் ஆரம்பத்தில் தலைப்பு வைப்பீர்கள் அல்லவா? அதனை சாதாரணமாக தட்டச்சு செய்த பிறகு அந்த முழு தலைப்பையும் தேர்வு செய்து “Heading 1” என்று மாற்ற வேண்டும். ஒவ்வொரு தலைப்பையும் இப்படி Heading 1 என்று வைப்பது எதற்காக என்பதையும் சொல்கிறேன். (படம் கீழே)
உங்கள் மின்னூலின் ஆரம்பத்தில் ”பொருளடக்கம்” என்ற பக்கத்தினை உள்ளீடு செய்து கதைகளுக்கான தலைப்புகளை தானாகவே சேர்க்க இது வழி செய்யும். அதை எப்படிச் செய்வது என்பதையும் பார்க்கலாம். பொருளடக்கம் என்று தலைப்பிட்ட வரிக்குக் கீழே ஒன்றிரண்டு வரிகள் இடைவெளி விட்டு Cursor-ஐ வைத்து, உங்கள் Word Document-ல் References என்று மேலே இருக்கும். அதைச் சுட்டினால் கீழே இருக்கும் படி வரும்.
அதில் Table of Contents என்று இருப்பதைச் சுட்டினால், கீழே
உள்ள படி வரும். அதில் செய்ய வேண்டியது
என்ன?
கடைசியில் Insert Table of Contents என்று இருப்பதைச் சுட்டுங்கள். அதைச் சுட்டும்போது கீழே உள்ள படி வரும்.
அதில் Show Page Numbers என்பதை “Untick” செய்து விடுங்கள். கீழே Show levels என்று இருப்பதில் ”3” என்று இருப்பதை “1” என்று மாற்றி விடுங்கள். இப்படிச் செய்த பின்னர் “OK” என்பதை அழுத்தினால், “பொருளடக்கத்தின் கீழே உங்கள் அனைத்து தலைப்புகளும் வந்து விடும். இந்த மாதிரி செய்வதில் ஒரு வசதி இருக்கிறது. கிண்டிலில் படிக்கும் போது பொருளடக்கம் பக்கத்தில் வரும் வாசகர் தான் படிக்க நினைக்கும் தலைப்பின் அருகே சென்று “க்ளிக்” செய்தால், நேரடியாக அந்தப் பக்கத்திற்குச் செல்ல முடியும்.
உங்கள் தலைப்பிற்கான லிங்க் சரியாக இருக்கிறதா என்பதையும் நீங்கள் சரி பார்க்கலாம். உங்கள் Word File-ல் பொருளடக்கம் பக்கத்தில் “Ctrl” key-ஐ அழுத்திக் கொண்டு நீங்கள் சுட்டினால், சரியாக அந்தப் பக்கத்திற்கு நீங்கள் செல்ல முடியும். அப்படி வந்தால், நீங்கள் இந்த வழியைச் சரியாகச் செய்து முடித்து இருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாம். தலைப்புப் பகுதிகளில் ஏதேனும் மாற்றம் செய்தீர்கள் என்றால் கடைசியாக ஒரு முறை “References” என்பதை க்ளிக் செய்து, அதன் கீழே Update Table என்பதைச் சுட்டினால் நீங்கள் செய்த மாற்றங்கள் பொருளடக்கத்தில் தானாகவே மாறி விடும்.
மின்னூலின் கடைசியில் உங்களைப் பற்றிய குறிப்புகளைச் சேர்க்கலாம். அல்லது நன்றியுரை சேர்க்கலாம் – இதெல்லாம் உங்கள் விருப்பம். போலவே Word File-ல் Auto Spell Check இருந்தால் அதனை மாற்றி விடுங்கள். நண்பர் நீச்சல்காரன் அவர்களின் ”வாணி” பயன்படுத்தி பிழைகள் இருந்தால் நீங்கள் மாற்றிக் கொள்ள முடியும். Spelling Mistakes இருந்தால் கிண்டிலில் பதிவு செய்யும்போது தவறென்று ஏற்றுக் கொள்ள மறுத்தாலும் மறுக்கலாம்! அதனால் Auto Spell Check எடுத்து விடுவது நல்லது.
பக்க எண் (Page Number) உள்ளீடு செய்வது அவசியமா? என்பது
உங்கள் கேள்வியாக இருந்தால் பதில் அவசியம் இல்லை என்றே சொல்வேன். நீங்கள் Word
File சேமிப்பது A4 அளவில். கிண்டில்,
அலைபேசி போன்ற படிக்கப்படும் கருவியைப் பொறுத்து பக்கத்தின் அளவு மாறுவதால் பக்க
எண் உள்ளீடு செய்வது அவசியமில்லை.
இந்த வழி வகைகள் உங்களில் சிலருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம். இது தெரியாதவர்களுக்கானது. இந்த வழி வகைகளில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் கேளுங்கள். தெரிந்த வரை பதில் சொல்கிறேன்.
சரி இந்த வாரம் நான் வெளியிட்டிருக்கும் மின்னூல் பற்றிய தகவலையும் உங்களுக்குச் சொல்லி விடுகிறேன். இந்த வாரம் “கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை” என்ற தலைப்பில் சபரிமலைக்குச் சென்று வந்த அனுபவங்களைத் தொகுத்து ஒரு மின்னூலாக வெளியிட்டு இருக்கிறேன். அந்த மின்னூலை கீழேயுள்ள சுட்டி வழி தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
இதுவரை வெளியிட்ட அனைத்து மின்னூல்களுக்கான சுட்டி கீழே….
பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பின்னூட்டம் வழி சொல்லுங்கள்! இந்தப் பதிவில் சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். நாளை வேறொரு பதிவுடன் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி.
வெளியிட்டிருக்கும் மின் நூலுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவாசகம் அருமை.
பதிவில் சொல்லி இருப்பது உபயோகமான விஷயம். நான் இன்னும் இதில் எதையுமே கற்றுக்கொள்ளவில்லை. நீங்கள், தனபாலன் எழுதுபவற்றை படித்து வருகிறேன். அவ்வளவே!
வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குமின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி.
பதிவு சிலருக்கேனும் உபயோகமாக இருந்தால் நல்லதே!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அருமை... இன்றைக்கு பலருக்கும் உதவும்...
பதிலளிநீக்கு33 வருடங்களுக்கு முன்னால், (Madras - B&C Mills) முதன்முதலில் கணினியில் தொடங்கியதே WordStar தான்... சொல்லிக் கொடுத்தவர் சொல்வதை பக்கம் பக்கமாக கையால் எழுதியதும், அவர் சொல்லாத தவறுகளை எல்லாம் வேண்டுமென்றே செய்து கற்றுக் கொண்டதும் ஞாபகம் வருகிறது... இதன்பின் தான் இதேபோல் Lotus 123 கற்றுக் கொண்டேன்... அன்றைக்கு சில மாதங்களில் பிரிண்டர் கொடுத்தவுடன், அன்றிலிருந்து இன்றுவரை எழுதும் பழக்கமே போய் விட்டது எனலாம்...
இன்றைக்கு சில எழுத்துருக்களை கண்டு, இப்படி எல்லாம் எழுதினோமோ என்று ஏக்கமும் வருவதுண்டு... அன்றைக்கு Lotus-ல் செய்த சில நுட்பங்கள் தான், இன்று வலைப்பூவில் சில தொழினுட்பங்கள் செய்ய உதவியும், செய்ய முடியும் எனும் நம்பிக்கையும் தருகிறது...
இதற்கெல்லாம் காரணம் சொல்லி தந்தவர்... அவர் பெயரே உதவி தான்... அவர் F1 (key)
பதிவு சிலருக்கேனும் பயன்பட்டால் மகிழ்ச்சியே தனபாலன்.
நீக்கு90-களில் கணினி பயன்படுத்தத் துவங்கினேன். நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டே இருப்பது அப்போதிலிருந்தே துவங்கியது.
சொல்லித் தந்தவர் பெயரே உதவி - :)
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
மூன்று தினங்கள் முன்பு என்னிடம் அலைபேசியில் பேசியவைகள் இன்று பதிவாக, எளிமையாக அனைவருக்கும் பயனாக இருக்கும்.
பதிலளிநீக்குமின்நூல்கள் இன்னும் தொடர வாழ்த்துகள் ஜி
ஆமாம் ஜி. உங்களுக்குச் சொன்ன விஷயங்கள் தான். அதற்கு முன்பே பதிவினை தட்டச்சு செய்து வைத்திருந்தேன்.
நீக்குமின்னூல்கள் - வாழ்த்தியமைக்கு நன்றி. நீங்களும் தொடர்ந்து மின்னூல்கள் வெளியிட வாழ்த்துகள் கில்லர்ஜி.
புத்தகம் வெளியிட விரும்புவர்களுக்கு ரொம்ப உதவும். நல்ல பதிவு
பதிலளிநீக்குசிலருக்கேனும் உதவியாக இருந்தால் மகிழ்ச்சியே அபயா அருணா ஜி.
நீக்குவெங்கட்ஜி மிக மிக பயனுள்ள குறிப்புகள்.
பதிலளிநீக்குநானும் கணினியில் ஒவ்வொன்றாகக் கற்றுக் கொண்டே இருக்கிறேன் ஜி. சிலது டிடி தளம், மற்றும் இப்ப உங்கள் வழியாகவும்
ஒருவருடத்திற்கு முன்பு இதில் சிலது செய்து சும்மா கிண்டிலில் புத்தகம் வெளியிடுவது பற்றி தெரிந்து கொள்ள உள்ளே சென்று வங்கிக் கணக்கு அது கேட்டதும் பின்னாடி வந்துவிட்டேன்!!!!!
பொருளடக்கம் பற்றி அறிந்து கொண்டேன் ஜி. எல்லாமே குறித்துக் கொண்டுவிட்டேன் ஜி. மிக்க மிக்க நன்றி வெங்கட்ஜி.
கீதா
பயனுள்ள குறிப்புகள் - நன்றி கீதாஜி.
நீக்குகற்றுக் கொள்வதற்கு எல்லையேது. தினம் தினம் ஏதோ ஒன்றை புதிதாக கற்றுக் கொள்ள முடிகிறது.
நானும் கிண்டிலில் பதிவு செய்தது 2018! ஆனால் சமீபத்தில் தான் இங்கே தொடர்ந்து இயங்க முடிந்திருக்கிறது.
பொருளடக்கம் - பயனுள்ளதாக இருந்தால் மகிழ்ச்சியே.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பயனுள்ள பதிவு ஐயா
பதிலளிநீக்குகிண்டிலில் வெளியிடப்பெற்ற எனது முதல் ஐந்து புத்தகங்கள், பேஜ் பிரிக்கர் செய்யாமலேயே வெளியிட்டுவிட்டேன். தெரியவில்லை. பின்னர்தான் கற்றுக் கொண்டேன்.
தங்களது பதிவு கிண்டிலில் நூல் வெளியிட விரும்புவோர்க்கு பயனுள்ள பதிவு
நன்றி
கற்றுக்கொள்வதற்கு எல்லையே இல்லை தான். தினம் தினம் யாரிடமிருந்தாவது எதையாவது புதியதாகக் கற்றுக் கொண்டே தான் இருக்கிறோம் கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வெங்கட் சா,
பதிலளிநீக்கு“Ctrl” key-ஐ அழுத்திக் கொண்டு ஒரு முறை “Enter” Key-ஐத் தட்டினால் போதுமானது – Page Break உருவாகி அடுத்த வரி அடுத்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கும்.///
புதிய தகவல்...
ஒரு புத்தகத்தினை உருவாக்கும் போது முதல் பக்கத்தில் உங்கள் புத்தகத்தின் தலைப்பு, உங்கள் பெயர், ஏதாவது ஒரு படம் வரும் விதமாகச் செய்யலாம்.////
படத்தை நாம் எப்படி word ஃபைலில் சேர்ப்பது சார்?
copy / paste தான் செய்யனுமா?
பொருளடக்கம் எப்படி வைக்கனும் என்பதைட் தெரிந்து கொண்டேன்.
வாரத்தில் ஒரு நாள் இப்படி அமேசான் தளத்தில் மின்னூல்கள் வெளியிடுவது எப்படினு ஒரு தொடராக நீங்கள் எழுதினால் நன்றாய் இருக்கும் சார்.
புதிய தகவல் - பயனுள்ளதாக இருந்தால் மகிழ்ச்சி தான் திருப்பதி மஹேஷ்.
நீக்கு//படத்தை எப்படி Word ஃபைலில் சேர்ப்பது?// ஒன்று நீங்கள் சொன்ன காபி பேஸ்ட்! மற்றது Microsoft Word பக்கத்தில் Ribbon என்று அழைக்கப்படும் மெனு பார் இருக்கிறது அல்லவா? அங்கே Home, Insert, Page Layout என வரிசையாக இருப்பதில் Insert என்பதைச் சொடுக்கினால் கீழே உள்ள Icon-கள் Cover Page, Blank Page, Page Break என மாறி இருக்கும். அந்த வரிசையில் ஐந்தாவதாக Picture என இருக்கும். அதை க்ளிக் செய்தால், நீங்கள் விரும்பிய, உங்கள் கணினியில் சேமித்து இருக்கும் படத்தினை உள்ளீடு செய்யலாம்! புரிந்திருக்கும் என நம்புகிறேன். சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள் மஹேஷ்.
அமேசான் தளத்தில் மின்னூல்கள் வெளியிடுவது எப்படி என்று ஒரு தொடர் - எழுதலாம் - எல்லோருக்கும் தேவையிருந்தால்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹேஷ்.
மிகவும் பயனுள்ள தகவல்கள். அதுவும் படி படியாக விளக்கம் அருமை. புத்தகம் வெளியிடுவோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பதிலளிநீக்குதுளசிதரன்
தகவல்கள் சிலருக்காவது பயன்பட்டால் மகிழ்ச்சியே துளசிதரன் ஜி.
நீக்குமிகவும் பயனுள்ள பதிவு. உங்களின் அனுபவம் எங்களுக்கெல்லாம் மிகவும் அவசியமாகிறது. இந்த முறையைப் பயன்படுத்துவேன். நன்றி.
பதிலளிநீக்குபயனுள்ளதாக இருந்தால் மகிழ்ச்சியே முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குபயன்படுத்திப் பாருங்கள் - உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
'பொருளடக்கம்' உருவாக்கும் கலையை அனைவருக்கும் கற்றுக் கொடுத்ததற்கு நன்றி நண்பரே! MS Word இல் உள்ள பல அம்சங்களைப் பலரும் பயன்படுத்துவதேயில்லை. அதில் பொருளடக்கமும் ஒன்று. உண்மையில் MS Word ஐ வைத்துக்கொண்டே அருமையான அச்சுப் புத்தகங்களை உருவாக்க முடிகிறது. Pagemaker இன் தேவையே இல்லை எனலாம். சென்னையில் 'குவிகம்' பதிப்பகம் இந்தப் பாணியையே கடைப்பிடித்து சுமார் நூறு புத்தகங்களைக் கொண்டுவந்திருக்கிறது. எனவே MS Word - கிண்டில் -நூல் உருவாக்கம் பற்றி என்னென்ன சொல்லத் தோன்றுகிறதோ அவற்றை எழுதிக்கொண்டே இருங்கள். நிச்சயம் பலருக்குப் பயன்படும்.
பதிலளிநீக்குஆமாம். MS Word/Excel ஆகியவற்றில் நிறைய விஷயங்கள் பயன்படுத்தப்படுவதே இல்லை. முழு அளவும் அதைப் பயன்படுத்துபவர்கள் குறைவானவர்களே! தட்டச்சு இயந்திரம் போலப் பயன்படுத்துபவர்களே அதிகம்.
நீக்குஎழுதலாம் இன்னும் சில பதிவுகள் என்று தோன்றுகிறது. பார்க்கலாம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராய செல்லப்பா ஐயா.
பயனுள்ள பதிவு.. புத்தகத்தை வெளியிட நினைக்கும்போது உதவியாக இருக்கும். இந்த பதிவை சேமித்து வைத்துக்கொள்கிறேன்.
பதிலளிநீக்குபதிவினை சேமித்து வைத்துக் கொண்டதற்கு நன்றி. பயன்பட்டால் மகிழ்ச்சியே!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.
நல்லதொரு பகிர்வு. இதைப் படித்துப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். வேர்ட் ஃபைலே இங்கே சரியாக வரலை, முதல்லே அதைச் சரி பண்ணணும். அப்புறமாத் தான் கிண்டில் எல்லாம். நான் கிண்டிலில் கணக்கு ஆரம்பிச்சதை மத்தவங்க கிண்டல் பண்ணும் முன்னர் இதை எல்லாம் புரிந்து கொள்ளப் பார்க்கிறேன்.
பதிலளிநீக்குMS Word-க்கான CD இருக்கிறதா? இருந்தால் ஒரு முறை Uninstall செய்து மீண்டும் தரவேற்றலாம்! இல்லையெனில் என்ன பிரச்சனை என மின்னஞ்சல் அனுப்புங்கள். முடிந்தால் சரி செய்யலாம்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....
நல்ல உபயோகமான தகவல்கள் கொண்ட பதிவு.
பதிலளிநீக்குதகவல்கள் சிலருக்கேனும் பயன்பட்டால் மகிழ்ச்சி தான் பானும்மா.
நீக்குமின் நூலுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபுத்தகம் போட விரும்புவர்களுக்கு பயனுள்ள தகவல்.
வாழ்த்துக்கள் வெங்கட்.
வாழ்த்திமைக்கு நன்றி கோமதிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி
தொடக்க வாசகம் அருமை. புத்தகம் வெளியிட விரும்பும் ஆசிரியர்களுக்கு நல்ல பதிவு.
பதிலளிநீக்குவாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வாசகம் அருமை சார். மின் நூல்களை படிக்கிறேன். பெரிய மெத்தர்டாக இருக்கும் போலிருக்கே. படிக்கும்போதே பயமா இருக்கு. இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொள்ள முயல்கிறேன்.
பதிலளிநீக்குவாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அபிநயா.
நீக்குமின் நூல்களை முடிந்த போது படியுங்கள்.
சுலபம் தான் - பழகினால் சுலபமே.
அன்பு வெங்கட்,
பதிலளிநீக்குமிக மிக உபயோகமாகும் பதிவு.
எனக்கு இதைப் பயன்படுத்துவது
அவ்வளவு சுலபம் இல்லை.
ஆனால் சிறிய வயதினர் நன்றாகக் கற்று
செயல் படுத்தலாம்.
வெகு அழகாக எழுதி இருக்கிறீர்கள்.
கணீனி தொழில் நுட்பங்களைப் படிக்கவில்லையே
என்ற ஆதங்கம் மேலிடுகிறது.
உங்கள் மின்னூல்களுக்கு என் அன்பும் ஆசியும்.
சிலருக்கேனும் பயனுள்ளதாக இருந்தால் நல்லதே வல்லிம்மா.
நீக்குமின்னூல்கள் - வாழ்த்தியமைக்கு நன்றிம்மா.
புதிய பரிணாம வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள் வெங்கட்.
பதிலளிநீக்குவாழ்த்துகளுக்கு நன்றி கோ...
நீக்கு'MS Word' File-தயார் செய்வதற்கான குறிப்புகள் - மிகவும் பயன் தருபவை.(பயன் தருபவை என எழுதுகையில், ’பயந்தருபவை’ என வருகிறது!-ஜாக்ரதையாக இருக்கவேண்டும் போலிருக்கிறதே..)
பதிலளிநீக்குமின்னூல்கள் ‘பிரசுரமாவதற்கு’ முன்னே நீங்களே சரிபார்த்து, எடிட் செய்கிறீர்களா, இல்லை spell /grammar check-இடம் விட்டுவிடுகிறீர்களா? நாம் பக்க எண்ணைக் குறிப்பிடாவிட்டால், கிண்டில் அதுவே பக்க எண்ணைப் போட்டுக்கொள்ளுமா?
மின்னூல் வெளியிடுதலில் பொதுவாகப் புதியவர்கள் சந்திக்கும் சிக்கல்கள்/சந்தேகங்களை நிவர்த்திக்கும் வகையில், இன்னும் நீங்கள் எழுதவேண்டுகிறேன்.
நன்றிகள்.
குறிப்புகள் பயன்பட்டால் மகிழ்ச்சியே ஏகாந்தன் ஜி.
நீக்குஎடிட் நாமே செய்வதே நல்லது - வரிக்கு வரி படித்து விடுதல் நலம். கூடவே வாணி என்று என்று பிழைதிருத்தி இணையத்தில் இருக்கிறது. அதிலும் உள்ளீடு செய்து பிழையானவற்றை தெரிந்து கொள்ளலாம்.
பக்க எண் - கிண்டில் வெளியீடுகளுக்கு அவசியமே இல்லை. ஏனெனில், உங்கள் மின்னூல், படிக்கப்படும் கருவியைப் பொறுத்து தானாகவே பக்கங்களின் அளவை மாற்றிக் கொள்ளும் - அதனால் ஒவ்வொரு கருவியிலும் ஒவ்வொரு எண்ணிக்கையில் பக்கங்கள் இருக்கும்! அதனால் பக்கங்களுக்கு எண் தருவது அவசியம் இல்லை. தவிர, ஒரு நூலை படித்துக் கொண்டு வரும்போது பாதியிலே நிறுத்தி வேறு வேலைகளைப் பார்த்து மீண்டும் அந்த நூலை படிக்க நேர்ந்தால், நீங்கள் கடைசியாக படித்த பக்கத்திற்குத் தானாகவே சென்று விடும். அதுவும் ஒரு வசதி.
இந்த பதில்கள் உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏகாந்தன் ஜி.
பக்கம்பற்றி தெளிவுபடுத்தியமைக்கு நன்றி.
நீக்குதங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏகாந்தன் ஜி.
நீக்கு’கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை’ மின்னூல் வெளியீட்டுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவாசகர்கள் மனதுக்கும் மெத்தையாக, சுகம் தரட்டும்!
மின்னூல் வெளியீடு - வாழ்த்துகளுக்கு நன்றி ஏகாந்தன் ஜி.
நீக்குஅனைவருக்கும் பயனுள்ள தகவல். நானும் கூட கடந்த ஆண்டு டிசம்பரில் இதையெல்லாம் கவனிக்காமல் புத்தகத்தை வெளியிட்டுவிட்டேன். பொறுமையாக படித்துப் பார்க்கும்போதுதான் பல தவறுகள் புரிந்தது. இந்த 'பொருளடக்கம்' கடந்த வாரம்தான் செய்து முடித்தேன். நாம் A4 தாளைப் பயன்படுத்துவதாலும் வாசிக்கும் கருவி வேறுபடுவதாலும் PAGE BREAK கூட இதனால் பாதிக்கப்படுகிறது. நிறைய காலி பக்கங்கள் வருகிறது. எனவே புதிய அத்தியாயத்திற்கு மட்டும் PAGE BREAK பயன்படுத்தினால் போதும். அதே மாதிரி நமது எழுத்தில் வண்ணங்கள் பயன்படுத்தினாலும் அவை கிண்டில் கருவியைத் தவிர்த்து மற்ற கருவிகளில் அதாவது கணினி, செல்பேசிகளில் வண்ணங்களில் தெரியும். இது எனது அனுபவம். பிழைத்திருத்தம் செய்ய நிறைய பேருக்கு நான்கூட நீச்சல்காரனின் வாணியைத்தான் பரிந்துரைப்பது வழக்கம்.
பதிலளிநீக்குஉங்களிடமிருந்து ஒரு உதவி.... அமேசான் கிண்டில் இணைப்பை எவ்வாறு (உங்கள் ப்ளாகில் வலது மேல் பக்கத்தில் உள்ளது போல்) நமது ப்பாளகர் தளத்தில் இணைப்பது? இந்த தகவல் கிடைத்தால் கற்றுக்கொள்ள உதவியாக இருக்கும்.
பதிவின் வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பயனுள்ளதாக இருந்தால் மகிழ்ச்சியே ஞானசேகரன் ஜி.
நீக்குஅமேசான் கிண்டில் இணைப்பை இணைக்க...
முதலில் நீங்கள் www.authorcentral.com தளத்தில் கணக்கு ஆரம்பித்து விட்டீர்களா? அப்படி இருந்தால் அமேசான் பக்கத்தில் உங்கள் பெயரைக் கிளிக் செய்யும்போது உங்கள் அனைத்து மின்னூல்களையும் காண்பிக்கும். அந்தப் பக்கத்தின் URL-ஐ Copy செய்து கொள்ளுங்கள். கீழே கொடுத்திருப்பது தான் உங்கள் URL என நினைக்கிறேன் -
https://www.amazon.in/Gnanasekaran-M/e/B08CDKWGGK?ref=sr_ntt_srch_lnk_3&qid=1594987648&sr=8-3
உங்கள் Blogger கணக்கில் நுழைந்து Layout என்பதைத் தேர்ந்தெடுங்கள். வருகின்ற பக்கத்தில் Add Gadget என இருப்பதை க்ளிக் செய்யுங்கள் - பதிவின் வலப் பக்கத்திலோ, மேலே அல்லது கீழே எங்கே வேண்டுமோ அந்த இடத்திற்குத் தகுந்தவாறு Add Gadget-ஐ க்ளிக்கினால், சில Options வரும். அதில் Image என்பதைத் தேர்ந்தெடுங்கள். வரும் பக்கத்தில் “Title" "Caption" "Link" "Image" என இருப்பதில் மேலே உள்ள URL-ஐ Link-ல் உள்ளீடு செய்யுங்கள். மற்றவையும் உங்களுக்குத் தேவையான மாதிரி நிரப்பி விடுங்கள். Image - என்ற இடத்தில் ஏற்கனவே நீங்கள் அமேசான் கிண்டில் படத்தினை தரவிறக்கம் செய்து வைத்துக் கொண்டு இணைத்த பிறகு Save என்பதை க்ளிக்கினால் போதும். அவ்வளவு தான்.
முயற்சித்துப் பாருங்கள். மேலும் தகவல் வேண்டுமெனில் தொடர்பு கொள்ளுங்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நன்றி நண்பரே.
பதிலளிநீக்குமீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எம். ஞானசேகரன் ஜி.
நீக்கு