காஃபி வித் கிட்டு – பகுதி 77
அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.
இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:
அன்பு அனைத்தையும் அழகாகக்
காட்டும்; நம்பிக்கை அனைத்தையும் நல்லதாகக் காட்டும்; உழைப்பு அனைத்தையும் உயர்வாகக்
காட்டும்; இயற்கை அனைத்தையும் இறைவனாகக் காட்டும்; வாழ்க்கை அனைத்தையும் வாய்ப்பாகக்
காட்டும்!
இந்த வாரத்தின் ரசித்த
விளம்பரம்:
இது ஒரு தேநீர் விளம்பரம் – Wagh Bakri என்று ஒரு தேநீர். தமிழகத்தில் கிடைப்பதாகத் தெரியவில்லை. வடக்கில் இருக்கிறது. ஒன்றிரண்டு முறை வாங்கி சுவைத்திருக்கிறேன். அவர்களின் இந்த விளம்பரம் – தனது வேலையில் மூழ்கி, மனைவியைக் கவனிக்காத ஒருவரை, விட்டு விலகிச் செல்லும் மனைவி! பிறகு என்ன நடக்கிறது என்பதை விளம்பரம் வழி சொல்லி இருக்கிறார்கள். பாருங்களேன்.
அவள் பறந்து போனாளே:
சில
நாட்களுக்கு முன்னர் அணிலுடனான எனது கொஞ்சல் பற்றி ஒரு பதிவில் எழுதி இருந்தேன். படிக்காதவர்கள்
இங்கே படிக்கலாம். எழுதிய இரண்டு மூன்று நாட்களிலேயே ஊடல் தொடங்கி
விட்டது. குரல் கம்மியிருந்தது. ”என்னப்பா இது நம்ம கொஞ்சலை ஊர் முழுக்கவா தம்பட்டம்
அடிப்பே?” என்று கேட்டதோ? இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்த அணில் வருவதே இல்லை! அது அமைத்த கூடு போன்ற அமைப்பு இன்னமும் அதற்காகக்
காத்திருக்கிறது! ஆனால் அணில் தான் வரவே இல்லை! ஒரு நாள் மாலையில், மேல் வீட்டிலிருக்கும் நண்பரின்
மனைவி “அணில் இப்பல்லாம் வருதா?” என்று கேட்டு விட்டு, சொன்ன தகவல் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது! அவர்கள் கேட்ட அன்று, அவர் பார்த்ததாகச் சொன்ன காட்சி
அப்படி – ஒரு காகம் அணிலைக் கொத்திக் கொண்டு பறந்து சென்ற காட்சி! அது என் ஜன்னலில் இருந்த அணிலாக இருக்காது என்று
மனதைத் தேற்றிக் கொண்டேன் – இரண்டு நாட்கள் முன்பிலிருந்தே வருவதில்லையே – அதனால் காகம்
கொத்தி எடுத்துச் சென்ற அணில் என் ஜன்னலில் இருந்த அணிலாக இருக்காது என்று மனதைத் தேற்றிக்
கொள்வதைத் தவிர வேறு வழி! “அவள் பறந்து போனாளே… என்னை மறந்து போனாளே” என சோக கீதம்
ஒலித்துக் கொண்டிருக்கிறது என் கணினி வழி!
Bபுல்Bபுல் பறவையும் சிட்டுக்
குருவியும்:
எங்கள்
பகுதியிலேயே இருக்கும் நண்பரின் வீடு தரைத் தளத்தில் – அதனால் சுற்றிலும் தோட்டம் அமைத்திருக்கிறார்கள்.
அனைத்தும் ”அமித்” கைவண்ணம். எந்தச் செடியை
வைத்தாலும் வளர்ந்து விடும்! அமித் பற்றி ஏற்கனவே என் பக்கத்தில் ஒரு பதிவு எழுதி இருக்கிறேன்
– அது அமித்தின் ஓவியம் வரையும் திறன் பற்றி! இங்கே அப்பதிவினை படிக்கலாம்! தோட்டத்தில்
இருக்கும் செடிகளில் அவ்வப்போது பறவைகள் கூடு கட்டி அபிவிருத்தி செய்கிறது. அவ்வப்போது அதனை படம் எடுத்து அனுப்புவார்கள். நானும்
சென்று ஒன்றிரண்டு படங்களை எடுத்தேன். Bபுல்Bபுல்
பறவையின் முட்டைகளும் சிட்டுக் குருவியின் கூடும் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். சின்னஞ்சிறிய சிட்டுக் குருவியின் கூடும் மிகச்
சிறியது! அதனை குருவி அமைக்கும்போது, வீட்டினுளிருந்து ஜன்னல் வழி சப்தமில்லாமல் அமர்ந்து
பார்த்துக் கொண்டிருப்பது ஒரு நல்ல பொழுதுபோக்கு!
பின்னோக்கி – எறும்பீஸ்வரர்
திருக்கோவில்:
2012-ஆம்
ஆண்டின் இதே நாளில் எழுதிய பதிவு திருச்சி நகரிலிருக்கும் எறும்பீஸ்வரர் கோவில் பற்றியது. அப்பதிவிலிருந்து சில வரிகள் இங்கே!
தாரகாசுரன் என்ற அரக்கன் தேவர்களை மிகவும் துன்பப்படுத்த, அவர்களும், நாரதரிடம் சென்று அரக்கனின் கொடுமைகளில் இருந்து மீள வழி சொல்லும்படி வேண்டினர். நாரதர் இத்தலத்திற்குச் சென்று சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கு மலர் சாற்றி வழிபட்டு அவரிடம் முறையிடும்படி ஆலோசனை கூறவே, தேவர்களும் அசுரன் கண்ணில் படாமல் இருக்க எறும்பு உருவமெடுத்து இறைவனை வழிபட வந்தனர். லிங்கத் திருமேனி மிகவும் வழுவழுவென இருந்ததால் எறும்பு உருவில் இருந்த தேவர்கள் அதன் மீதேறி மலர் சாற்றி வழிபட மிகவும் சிரமப்பட்டனர். இறைவன் அவர்கள் சிரமத்தைப் பார்த்து தனது லிங்க உருவை சற்றே சாய்வான எறும்புப் புற்றாக மாற்றிக் கொண்டார். தேவர்கள் பூஜித்த பிறகு, தாரகாசுரனை அழித்து தேவர்களைக் காத்ததோடு எறும்பீஸ்வரர் என்றும் பெயர் பெற்றாராம்.
முழுப்பதிவும் படிக்க ஏதுவாய் சுட்டி
கீழே...
தில்லியின் உணவு – ஒரு காணொளி:
தலைநகர் தில்லியின் பழைய தில்லியில் இருக்கும் சாந்த்னி சௌக், chசாவ்டி பஜார் பகுதிகள் தில்லியின் பாரம்பரிய உணவு வகைகளுக்கு மிகவும் புகழ் பெற்றது! நீங்கள் அசைவ உணவு உண்பவராக இருந்தால் இந்தப் பகுதிகளில் ரமதான் சமயத்தில் சென்றால் விதம் விதமான அசைவு உணவுகளைச் சுவைக்க முடியும். ஐயா, நான் அசைவம் சாப்பிடமாட்டேன் என்று சொல்பவர்களுக்கும் இந்தப் பகுதியில் நிறைய உணவு வகைகளைச் சுவைக்க வழி உண்டு. அந்தப் பக்கம் செல்லும்போது சில வகை உணவுகளைச் சுவைத்ததுண்டு. இந்தச் சமயத்தில் அங்கே செல்ல முடிவதில்லை என்பதால் அங்கே சென்று சில உணவுகளை உண்டு ரசிக்க முடியவில்லை. சூழல் சரியானதும் அங்கே நிச்சயம் செல்வேன் – சுவைத்த உணவு பற்றி உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன். இன்றைக்கு ஒரு காணொளி – ஆங்கிலத்தில்! ஒரு பெண் இந்த இடத்தில் இருக்கும் சில உணவு வகைகளை காணொளியாக பகிர்ந்து இருக்கிறார் – பாருங்களேன்!
நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்...
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
பாடல் பெற்ற எறும்பீஸ்வரர் கோயில் பல முறை சென்றுள்ளேன். அங்கு ஒரு மறக்கமுடியா நிகழ்வு. ஒரு முறை அக்கோயிலுக்குச் சென்றபோது ஒரு பெரியவரிடம் சில கோயில்களைப் பற்றிக் கூறி அவை பாடல் பெறாத தலங்களாக உள்ளனவே என்றதற்கு அவர், அவ்வாறு கூறாதீர்கள். அதற்கான பாடல்கள் கிடைக்கவில்லை என்று கூறி சைவ சமயத்தின் பெருமையையும், தேவாரத்தின் சிறப்பையும் உயர்த்தினார். மறக்கமுடியாதது.
பதிலளிநீக்குஎறும்பீஸ்வரர் கோவிலில் உங்களுக்குk கிடைத்த அனுபவம் மெய்சிலிர்க்க வைக்கிறது. நீங்கள் சந்தித்தவர் சரியாகவே சொல்லியிருக்கிறார். தங்களது வருகைக்கும் மேலதிகத் தகவல்களுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குகதம்பம் ரசிக்கும்படி இருந்தது.
பதிலளிநீக்குஇப்போல்லாம் வீட்டின் அருகில் ஒரு மயில் வருது. எனக்கு உடனே தில்லி நினைவுதான் வருது.
காணொளி பிறகு பார்க்கணும்.
கதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன். இங்கேயும் இரண்டு மூன்று நாட்களாக குடியிருப்பு வளாகத்திலேயே மயில் வருகிறது. காணொளி முடிந்தபோது பாருங்கள். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நீக்குஇந்த ஊரிலும் விவி புரம் தெரு என்ற இடத்தில் ஏராளமான சாப்பாட்டுக் கடைகள் உண்டு. வட இந்திய உணவு, இனிப்பு வகைகள், பஜ்ஜிக் கடைகள், தோசை வகைகள், சேவை, கரும்புச்சாறு, மில்க் ஷேக் வகைகள் என்று ஏகப்பட்டவை வரிசைகட்டி உண்டு.
பதிலளிநீக்குஃபுட் ஸ்ட்ரீட் என்பதே குடும்பமாகச் சென்று மாலைநேரத்தை இனிமையாகச் செலவழிக்க வைக்கும்.
ஒவ்வொரு ஊரிலும் உணவுக்காகவே சில வீதிகள் அமைந்திருப்பது நல்ல விஷயம். உங்கள் ஊரிலும் அப்படி இருப்பதில் மகிழ்ச்சி. குடும்பத்துடன் சென்று இந்த மாதிரி புதுவித உணவுகளை ருசிப்பது ஒரு சிறப்பான விஷயமே. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்குஅணில் விரைவில் வந்து விடட்டும்...சாவ்டி பஜாரில் தான் எத்தனை வகைகள்...!
பதிலளிநீக்குஅணில் மீண்டும் வந்தால் மகிழ்ச்சியே தனபாலன். சாவ்டி பஜார், சாந்தினி சவுக் பகுதிகள் மிகவும் புராதனமான, சிறப்பான இடம் தான். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நீக்குஅடடா? அணில் இப்போதெல்லாம் வருவதில்லையா? நான் அந்த விஷயத்தைக் கவனிக்கவே இல்லை. ஒன்றும் ஆகி இருக்காது என்று நம்புவோம். இங்கேயும் ஓர் அணில் பிள்ளை மேலிருந்து கீழே விழுந்து அம்மா அணில் கத்தோ கத்துனு கத்தி ஒரே அமர்க்களம் ஒரு நாள் முழுவதும். அப்புறம் அது எப்படியோ அம்மாவிடம் சேர்ந்துவிட்டது போலும்.
நீக்குஅந்தப் பதிவு எழுதிய இரண்டு நாட்களில் இருந்து வருவது இல்லை. மீண்டும் வரும் என்று நம்பிக்கை தான். பார்க்கலாம். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. வாசகம் நன்றாக உள்ளது. நானும் ரசித்தேன்.
தேனீர் விளம்பரம் ஒரு படம் மாதிரி அழகாக உள்ளது.அதில் நடித்தவர்களும் இயல்பாக செய்துள்ளனர்.
அணில் பற்றி சொன்னவுடன் எனக்கும் கவலையாக இருந்தது. நம்முடன் பழகிய எதுவும் பிரிந்து விட்டால் கொஞ்ச நாட்கள் மனது தேடும். அந்த அணிலுக்கு எதுவும் நேராமல்,மீண்டும் அதன் அடைக்கல இடத்திற்கு ஒரு தடவையாவது வந்து உங்களுடன் பேசி விட்டு சென்று விட வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன்.
பறவைகளின் கூடுகள் மிக அழகாக இருக்கின்றன. அவற்றிற்குத்தான் என்ன ஒரு பொறுப்புணர்ச்சி. அழகாக தன் வீட்டை அமைத்துக் கொண்டுள்ளது. அமித் பற்றி ஏற்கனவே தங்கள் பதிவு வாயிலாக தெரிந்து கொண்டிருக்கிறேன். அவரின் கைவண்ணம் அனைத்தும் அழகாகத்தான் உள்ளது. அவருக்கும் என் மனமுவந்த பாராட்டுகள்.
பின்னோக்கி சென்று பார்த்து விட்டு வந்தேன். சிவதரிசனம் மனதிற்கு அமைதியை தந்தது. இப்போது அதை பகிர்ந்து பார்க்க வைத்திருப்பதற்கும் நன்றிகள்.
உணவுப்பற்றி கூறியுள்ள விபரங்கள் சிறப்பாக உள்ளது. அதன் காணொளியை பிறகு பார்த்து ரசிக்கிறேன். இன்றைய காஃபி வித் கிட்டு அனைத்தும் அருமையாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இனிய காலை வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. வாசகமும் பதிவின் பகுதிகளும் உங்களுக்கும் பிடித்து இருந்ததில் மகிழ்ச்சி.
நீக்குபதிவின் அனைத்து பகுதிகளையும் ரசித்து, நீண்ட கருத்துரை வழங்கிய உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி.
வாசகம் அருமை.
பதிலளிநீக்குஅணில் அப்டேட் மிக மிக மிக வருத்தமாய் இருக்கிறது. நீங்களா தை ஆரம்பித்ததும் சமீபத்தில் வாட்ஸாப்பில் பரவி வரும் அணில் தண்ணீர் கேட்கும் காணொளி அப்ற்றி சொல்லப் பிகோகிறீர்கள் என்று நினைத்தேன்.
இன்று அதிசயமாக விளம்பரம் உடனே பார்த்து விட்டேன். நன்றாய் இருந்தது. நமக்கு நமக்கு என்று எங்கும் ஒரு பொருள் / ஒருவர் கிடைக்கும்வரைதான் அலைச்சல், ஏக்கம் எல்லாம்... கிடைத்த உடன் ஒரு அலட்சியம் வந்து விடுகிறது. மறுபடியும் இழந்து விடுவோமோ என்கிற ஒரு சிறு அதிர்ச்சி தேவையாய் இருக்கிறது அதைப் பாதையில் திருப்ப...
உணவு காணொளி ரசித்தேன். எப்பவுமே சுவாரஸ்யமான சப்ஜெக்ட் ஆச்சே!
இன்று என்ன Fonts ஒன்றன் மேல் ஒன்று ஏறிக்கொண்டு நான் வெளியிடும் சில படைப்புகள் போல இருக்கு!
பின்னோக்கிய பதிவில் மறுபடியும் என்னை அந்தப் பெயரே கவர, கீழே பார்த்தல் என் பழைய பின்னூட்டமும் அதுவே!
வாசகம் உங்களுக்கும் பிடித்து இருந்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குஅணில் கொஞ்சம் கவலை அளித்தது தான். ஆனால் என்ன செய்ய முடியும்?
ஆஹா விளம்பரம் பார்த்து விட்டீர்களா? உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
எழுத்துரு எனக்கு சரியாக வருகிறது. மீண்டும் சரி செய்து பார்க்கிறேன் தகவலுக்கு நன்றி.
முந்தைய பதிவில் உங்களுடைய கருத்தை மீண்டும் சென்று பார்த்து வந்ததற்கு நன்றி.
அணில் மீண்டும் வருமென்று நம்புங்கள்.
பதிலளிநீக்குகதம்பம் அருமை ஜி
காணொளி இரண்டாவது கண்டேன்.
அணில் மீண்டும் வரும் என்று நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை.
நீக்குகதம்பம் உங்களுக்கும் பிடித்து இருந்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி. முதலாவது காணொளியும் நன்றாகவே இருக்கிறது முடிந்தால் பாருங்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நல்ல வாய்ப்புகளே வையகத்தை
பதிலளிநீக்குசொர்க்கமாகக் காட்டும்....
நலம் வாழ்க...
நலமே விளையட்டும் துரை செல்வராஜூ ஐயா. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நீக்குஒவ்வொரு முறையும் தஞ்சையிலிருந்து திருச்சி செல்லும்போது அந்த தனியாய் தவமிருக்கும் எறும்பீஸ்வரர் கோவிலுள்ள மலை என்னை மிகவும் ஈர்க்கும். ஆனாலும் கால் வலி காரணமாக, ஏற பயந்து இதுவரை சென்றதில்லை. ஆனால் அதற்குள் இத்தனை சுவாரஸ்யங்கள் இருப்பது தெரிந்து ஆச்சரியமடைந்தேன். அத்தனை அதிகம் விளம்பரமில்லாத கோவில்!
பதிலளிநீக்கு'அமித் ' ஓவியங்களை சுட்டியில் சென்று பார்த்தேன். பென்சில் ஓவியங்கள் அழகாய் வரைந்துள்ளார். பின்னால் மிகப்பெரிய ஓவியராக வருவார்!
ரசித்த வாசகம் என்றுமே ரசிக்கப்படும் வாசகங்கள் தான்!
இந்த சாலையோரக்கடைகள் தரும் உணவு மிகவும் சுவாரஸ்யமாக சுவையாக இருக்கும். அடிக்கடி நான் யுடியூபில் பார்ப்பது இவைகளைத்தான்! இந்த சாந்தினி செளக் வீடியோவும் நன்றாக இருந்தது! ரபடி மதுரா கிருஷ்ணன் கோவில் வாசலில் சிறு மண் குடுவையில் சாப்பிட்டிருக்கிறேன். அந்த சுவை இன்னும் நாக்கில் உள்ளது!! அது போல வேறு எங்கும் சாப்பிட்டதில்லை!!
எறும்பீஸ்வரர் கோவில் அத்தனை உயரம் இல்லை. சுலபமாகவே சென்றுவிடலாம். அடுத்த முறை வாய்ப்பு கிடைத்தால் சென்று வாருங்கள் மனோ சாமிநாதன் மேடம்.
நீக்குஅமைத்தும் பென்சில் ஓவியங்கள் உங்களுக்கும் பிடித்து இருந்ததில் மகிழ்ச்சி. வாய்ப்பு கிடைத்தால் பெரிய ஓவியராக அவர் வர முடியும் என்பதில் சந்தேகமில்லை.
சாலையோர உணவுகள் எனக்கும் பிடித்தமானவையே. மதுரா நகரில் ரப்டி மிகவும் பிரபலம். அதுவும் பால்பேடா ரொம்பவே சுவையாக இருக்கும். எப்போது சென்றாலும் சாப்பிடாமல் வருவதே இல்லை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வாசகம் அருமை.
பதிலளிநீக்குகதம்பம் மிக அருமை.
காணொளி மிக அருமை. கூட இருக்கும் போது அருமை தெரியாது, பிரிவில்தான் ஒருவரின் அருமை தெரியும்.
உணவு காணொளியும் நன்றக இருக்கிறது அந்த பெண் உணவை ரசித்து ருசித்து சாப்பிடுவதும் , பிடிக்காத உணவை சாப்பிடும் அவர் முகபாவங்கள் நன்றாக இருக்கிறது.
எறும்பீஸ்வரர் கோயில் சின்ன வய்டஹில் பார்த்தது, எத்தனையோ முறை அந்த கோவிலை கடந்து சென்று இருக்கிறேன், ஆனால் நேரம் ஒதுக்கி போக முடியவில்லை.
வாசகமும் பதிவின் பகுதிகளும் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மிக்க மகிழ்ச்சி கோமதி அம்மா. பிரிவில் தான் ஒருவரது அருமை தெரியும் என்பது உண்மைதான்.உணவு பற்றிய காணொளி உங்களுக்கும் பிடித்து இருந்ததில் மகிழ்ச்சி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நீக்குஎறும்பீஸ்வரர் கோயில் போனதில்லை, எழுத்துக்கள் நடுவில் ஒரு பத்தி தவிர்த்து (எறும்பீஸ்வரர் கோயில் புராணம்) மற்றவை எழுத்துகள் ரொம்பவே போல்டாக அமைந்திருப்பதோடு ஒன்றன் மேல் ஒன்றாக வந்திருக்கின்றன. ஒரு வேளை என் கணினி வழி இப்படி இருக்கானு தெரியலை.
பதிலளிநீக்குஅந்தக் கோவிலுக்கு நான் ஒரு முறைதான் சென்றிருக்கிறேன். எழுத்துக்கள் எனக்கு சரியாக தெரிகின்றன. ஸ்ரீராமும் இதேபோல் சொல்லியிருக்கிறார். பார்க்கிறேன் கீதாம்மா.
நீக்குமுதல் காணொளி அருமை. இதைப் பார்த்ததும் இங்கே ப்ரூக்பாண்ட் தேநீருக்கு வரும் விளம்பரம் நினைவில் வந்தது. பிள்ளை அம்மாவிடம் தான் ஓர் பெண்ணோடு சேர்ந்து வாழ்வதாய்ச் சொல்வான். அந்தப் பெண் தேநீர் கொடுப்பாள். பிள்ளை எப்படி இருக்குனு கேட்க அம்மா "பரவாயில்லை" என்பாள். அந்த விளம்பரம் வந்தாலே பார்க்கப் பிடிக்காது. இவங்களே திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்வதை ஆதரிக்கிறார்களே என்று தோன்றும்.
பதிலளிநீக்குநானும் அந்த காணொளி பார்த்திருக்கிறேன். அவ்வளவாக பிடிக்காது. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
நீக்குஉணவுக் காணொளியைப் பின்னர் பார்க்கணும்.
பதிலளிநீக்குமுடிந்தபோது காணொளி பாருங்கள் கீதாம்மா. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நீக்குஅருமையான கதம்பம். ஒரே ஒருமுறைதான் தில்லி வந்திருக்கிறேன் ஆனால் உணவை ரசித்துச் சாப்பிட உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. வந்த அன்று தொடங்கிய காய்ச்சல் போகும்வரை சரியாகவில்லை. ரூட் கெனால் பண்ணிட்டுப் போனதால வாய் வீங்கி வலிச்சது. ருசி நல்லா இருந்தது. பிடிச்ச டிஷ்தான் இருந்தது. ஒரு நல்ல அனுபவத்தை இழந்துவிட்ட வருத்தம்.
பதிலளிநீக்குகதம்பம் உங்களுக்கும் பிடித்து இருந்ததில் மகிழ்ச்சி அபிநயா.
நீக்குதில்லி வந்தும் பிடித்ததை சாப்பிட முடியாமல் போனது வருத்தமே. அதனால் என்ன பரவாயில்லை. அடுத்த முறை வரும்போது சொல்லுங்கள். நிச்சயம் பலவித உணவுகளை ருசிக்கலாம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இரண்டு வீடியோக்களும் அருமை. சாய் வித் கிட்டு :)
பதிலளிநீக்குசற்றே இடைவெளிக்குப் பிறகு தங்களது வருகை! மகிழ்ச்சி
நீக்குநன்றி தேனம்மை சகோ.