செவ்வாய், 14 ஜூலை, 2020

கதம்பம் - முகநூல் - பால்கனித் தோட்டம் - ஆதியின் அடுக்களையிலிருந்து


நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.


எதிர்பார்ப்புகள் நிறைந்த பயணங்களும், எதிர்பாராத சந்திப்புகளும் எல்லையற்ற மகிழ்ச்சியை தரக்கூடியவை.

ஊரடங்கு – 1 – 7 ஜூலை 2020:


முகநூலில் பதிவு எழுதுவது குறைந்திருக்கிறது. நேரம் சரியாக இருக்கிறது. மகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நேரம் மாறிவிட்டதால் அதற்குத் தகுந்தாற்போல் காலை உணவு, இடையில் ஒரு ப்ரேக் விடும் போது குடிக்க மோரோ, பழங்களோ ஏதேனும் ஒன்று. பின்பு மதிய உணவு. சற்று நேரம் ஓய்வெடுத்தால் மாலை தேநீர். பின்பு மேத்ஸ் ட்யூஷன் :)


மாலை நேரம் தான் கணினி என் வசம் இருக்கிறது. இரவு உணவு தயார் செய்யும் முன்பு கிடைக்கும் இரண்டு மணிநேரங்களில் என் அடுத்த மின்னூலுக்காக டைப் செய்து கொண்டு வருகிறேன். தயார் செய்ய வேண்டிய வேலைகள் நிறையவே இருக்கிறது. பின்பு எடிட்டிங்கும் செய்யணும் :)


எங்கேயும் வெளியே செல்லவில்லை. இடையில் இரண்டு முறை மாமனார் மாமியாரை பார்த்து வந்தேன். செல்லும் வழியெங்கும் எங்களைப் போல ஓரிருவரைத் தவிர முகக்கவசம் அணியாத முகங்கள் தான் :( இடைஞ்சலாக இருப்பதாகவும், அழகை மறைப்பதாகவும் நினைக்கின்றனர் போலும்! இதையெல்லாம் விட உயிர் முக்கியமாகப் படவில்லை போலிருக்கிறது!


இங்கே ஒரு தோழியின் குழந்தை தன் அம்மாவையும், அப்பாவையும் அழுத்தம் திருத்தமாக பேர் சொல்லித் தான் அழைக்கிறானாம். தோழி என்னிடம் சொன்னதும், நானும் ரோஷ்ணி அப்படித்தான் சில வருடங்கள் வரை என்னை 'புவனா' என்று பேர் சொல்லித் தான் அழைத்தாள் :) பின்பு அவளாகவே மாற்றிக் கொண்டாள் என்றும் சொன்னேன் :) ஆனால் 'அப்பா' என்றுமே அப்பா தான் :)


மகளின் ப்ளே ஸ்கூல் அனுபவங்கள் பற்றி என் ப்ளாகில் தொடராக எழுதியிருக்கேன். லிங்க் கீழே. முடியும் போது வாசிக்கலாம்.


எம் ஃபார் மோங்க்கி


அம்மாக்களிடம் கோபம், சண்டை, கொஞ்சல் என்று எல்லாவற்றையும் வெளிப்படுத்த முடிகிறது :) அப்பா சொன்னால் மறுபேச்சு இல்லாமல் செய்ய முடியும். அதே அம்மா காட்டுக்கத்தலாக கத்தினாலும் பதிலே வராது :)

பால்கனி தோட்டம் - 11 ஜூலை 2020: 


தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கனமழை என்று செய்திகளில் சொன்னதால் திருவரங்கமும் அதில் தான் இருக்கு என்று மெய்ப்பிக்கும் விதமாய் நேற்று இரவும், இதோ இப்பதிவை எழுதிக் கொண்டிருக்கும் இவ்வேளையிலும் மழை பெய்து குளிர்விக்கிறது. மாதம் மும்மாரி இல்லாவிட்டாலும், ஒரு மாரியாவது வேண்டும்!!


பால்கனி தோட்டம்!



வீட்டைச் சுற்றி தோட்டம், கோலமிட்டு விளக்கேற்றி வழிபட துளசி மாடம், வாசலில் திண்ணை, கூடத்தில் ஒரு ஊஞ்சல் என்று மனதில் சின்னஞ்சிறு ஆசைகள் இருந்தாலும் சிறுவயது முதல் இப்போது வரை அடுக்குமாடி குடியிருப்புகளில் தான் வசிக்கிறேன்..அதனால் அதற்கேற்ற வாழ்வு முறை தான் 

ஆனாலும் விடுவதில்லை  இருப்பதிலேயே எளிதானது வெந்தயக்கீரை வளர்ப்பு தான் என்று நினைக்கிறேன்..நம்ம பால்கனியின் உள்ளே வெயில் சரியாக வராததால் இதற்காக மிக மிகக் கவனமாக பார்த்து செய்ய வேண்டியதாய் இருந்தது. காய்கறி கழிவுகளால் மண்ணை உயிரூட்டி, வெயில் படுமாறு உயரமான இடத்தில் வைத்து, தேவைக்கேற்ப தண்ணீர் தெளித்து பாதுகாத்துள்ளேன்!


இன்னும் கொஞ்ச நாள் விட்டிருக்கலாம். ஆனால் ஒரு சில கீரைகள் சாய்ந்து விட்டன. அதனால் இன்றே அறுவடை செய்தாச்சு. நிஜமாகவே மனதில் ஒரு உற்சாகம், மகிழ்ச்சி, பெருமிதம் கிடைத்தது அடுத்ததாக கொத்தமல்லி போடலாம் என்று நினைக்கிறேன் 


செய்து பார்த்த பதார்த்தங்களின் படங்கள் நிறைய இருக்கு. பதிவின் நீளம் கருதி இப்பதிவில் வேண்டாம் என சேர்க்கலை  உங்கள் கருத்துகளையும் தாராளமாக சொல்லுங்களேன்.


ஆதியின் அடுக்களையிலிருந்து - 13 ஜூலை 2020:


பரிசோதனைகள் சில! 


பாதாம் மிக்ஸ்!



பாலில் கலந்து ருசிக்கக்கூடிய பாதாம் பால் மிக்ஸை வீட்டிலேயே முயற்சித்து பார்த்தேன். நன்றாகவே உள்ளது. செய்வதும் எளிது தான். கடைகளில் வாங்குவதை விட சுத்தமானது!


Healthy cake!

(No maida! No white sugar! No butter! No oven!)




கோதுமை மாவும், நாட்டுச் சர்க்கரையும் சேர்த்து செய்தது. நல்ல ருசியாகவும், மிருதுவாகவும் இருந்தது. மகள் தான் மாவுக் கலவையை தயார் செய்தாள்.


ரவை குழிப்பணியாரம்!




காலைநேரச் சிற்றுண்டிக்கு ஏற்றது. சட்டென்று செய்து விடலாம். நான்ஸ்டிக் கல் எதற்கு? ஓரிரு வருடத்தில் கோட்டிங் போய்விட்டால் பயன்படாது. உடலுக்கும் கெடுதல் அல்லவா? இரும்புக்கல்லை வாங்கி பழக்கி விட்டால் தலைமுறை தாண்டியும் பயன்படும்.


கோதுமை ரவை புட்டு!




அரிசிமாவு, ராகி மாவு, கோதுமை மாவு என எல்லாவற்றிலும் புட்டு சுவைத்திருக்கிறேன். இம்முறை உப்புமா செய்யும் கோதுமை ரவையில்!


துண்ட மாங்காய்!




மாம்பழ சீசனே முடியப் போகிறது. எதேச்சையாக கிளிமூக்கு மாங்காய் கிடைக்கவே துண்டங்களாக நறுக்கி உப்பு காரம் சேர்த்தேன். 


எல்லாவற்றையும் கண்களால் ருசித்துப் பாருங்களேன்.


என்ன நண்பர்களே, இந்த நாளின் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே!


மீண்டும் சந்திப்போம்… சிந்திப்போம்…


நட்புடன்


ஆதி வெங்கட்.

34 கருத்துகள்:

  1. வாசகம் உண்மையையும் சொல்கிறது...   பதிவு எதைப்பற்றி பேசப்போகிறது என்பதையும் கோடி காட்டுகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. அனைத்தையும் ரசித்தேன்.   பள்ளி செல்ல முடியாத நிலையில் ஆன்லைனில் பிஸியாகி விட்டார் போலும் ரோஷ்ணி.   வாழ்க..

    நீங்கள் சொல்லி இருக்கும் பண்டங்களில் என்னை மிகக்கவர்ந்தது ரவை குழிப்பணியாரம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார் பிஸியாகி விட்டாள். ரவை பணியாரம் உங்களைக் கவர்ந்ததில் மகிழ்ச்சி..தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  3. எங்கள் பால்கனி தோட்டத்தில் கீரைகள், கொத்தமல்லி, பதினா, இவைகள் வேகமாக வளர்கிறது...

    மற்ற அனைத்து பகுதிகளும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! கீரைகள் கொத்தமல்லி, புதினா என அனைத்தும் வளர்வதில் மகிழ்ச்சி சகோ..தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ..

      நீக்கு
  4. அம்மா, அப்பாவின் பெயரைச் சொல்லி குழந்தைகள் அழைப்பதை பலர் நாகரீகமாகவும், பெருமையாகவும் நினைத்துக்கொள்கிறார்கள். என்ன செய்வது? பண்பாட்டின் சரிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் சினிமாவும் சின்னத்திரையும் கற்றுக் கொடுப்பது தான்...

      நீக்கு
    2. சிறு குழந்தை தான் ஐயா.. வளரும் போது மாற்றிக் கொண்டு விடுவார்கள் என நம்புவோம்..தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  5. ஊரடங்கு தளர்வு ஆனதால் முன்பு போல் எல்லாவித காய்களும் இங்கு கிடைக்கின்றன - மாங்காய் உள்பட...

    இனிமேல் தான் ஊறுகாய் போட வேண்டும்..
    அனைத்தும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜு சார்.

      நீக்கு
  6. //அம்மாக்களிடம் கோபம், சண்டை, கொஞ்சல் என்று எல்லாவற்றையும் வெளிப்படுத்த முடிகிறது :) அப்பா சொன்னால் மறுபேச்சு இல்லாமல் செய்ய முடியும். அதே அம்மா காட்டுக்கத்தலாக கத்தினாலும் பதிலே வராது // - பசங்களுக்கு சுதந்திரம் அம்மாகிட்ட மட்டும்தான் உண்டு என்பது காரணமா இருக்கலாம். என் பையன், நான் intervene பண்ணினாலே கொஞ்சம் நெர்வஸா ஆயிடுவான் (அப்பா சொல்லியாச்சுன்னா அதை ஃபாலோ பண்ணணும் என்பதால்). ஆனா அம்மா கிட்ட அவங்க பேசும்போது, டிமாண்ட் பண்ணும்போது என் காதில் விழும். சும்மா ஏகப்பட்ட வேலை வாங்குவாங்க, டிஃபன் இது வேணும் அது வேணும் என்று டக்கென்று கேட்பாங்க. (அப்பா கிட்ட அதெல்லாம் எப்படி நடக்கும்?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..ஹா..ஹா ஒரு சில வீடுகளைத் தவிர பெரும்பாலான வீடுகளில் அப்பா என்பவர் கடுமையாக நடந்து கொள்வார்..அதனால் பிள்ளைகள் எல்லாவற்றுக்கும் அம்மாவிடம் தான் தஞ்சம் புகுவார்கள்..:) தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு
  7. முககவசம் அணிவதால் அழகு மறைக்கப்படுவது உண்மைதானோ...

    இப்பொழுது வியாபாரிகள் அதனையும் அழகுப் பொருட்களாக மாற்றி வருகிறார்கள். காரணம் இன்னும் இரண்டு வருடங்களாவது நாம் முககவசம் அணிந்தாக வேண்டும்.

    திருமணத்துக்கு சென்றால் மணமக்களை அழகாக இருக்கிறார்களா ? என்று பார்ப்பது இயல்பு.

    இப்பொழுது அவர்களும் முககவசம் அணிந்தாக வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார். இனி நாம் அணிந்து கொள்ளத் தான் வேண்டும் என்ற சூழல்.. ஆனால் ஒருசிலர் அலட்சியமாக எடுத்துக் கொள்கிறார்கள்...:(

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  8. //செய்து பார்த்த பதார்த்தங்களின் படங்கள் // - உங்க இடுகைல இந்தப் பகுதியை நான் எதிர்பார்த்துப் படிப்பேன். முடிந்தால் செய்துவிடலாம் என்ற எண்ணத்தில்.

    ரவை குழிப்பணியாரம் ரெசிப்பி லிங்க் தரலை. அது இனிப்பா காரமான்னு சட்னு தெரியலை. ஆனா இங்க குழிப்பணியாரம் போணியாக மாட்டேங்குது.

    மனைவி, வெந்தயக் கீரை போட்டு குழம்பு பண்ணணும்னு சொல்லிண்டே இருக்கா. ஆனா கடைல வெந்தயக் கீரைனா அவன் பத்துபேருக்கு பண்ணும்படியா பெரிய கட்டுதான் தர்றான். விரைவில் பால்கனில நாங்களும் செடிகள் வைக்க ஆரம்பித்துடுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரவை குழிப்பணியாரம் காரம் தான்.. இன்று செய்து சுவைத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.. நன்றாக இருந்ததா என பகிர்ந்து கொள்ளவும்..விரைவில் உங்கள் வீட்டிலும் வெந்தயக்கீரை அறுவடை செய்வீர்கள் என்று நினைக்கிறேன்.. நான் அறுவடை செய்த வெந்தயக்கீரையை ஆலு மேத்தி சப்ஜியாக செய்து சுவைத்தோம்..

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு
  9. கேக் - இங்க வித விதமா பண்ணிக்கிட்டே, அதிலும் பனானா கேக் - இருக்காங்க. அதுனால ரொம்பவும் கவரலை.

    மாங்காய் ஊறுகாய் - ஓகேதான். சிவப்பா இல்லை. மாங்காயை தளிகைப்பண்ணிப் பண்ணினதுபோல இருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஷ்மீரி மிளகாய்த்தூள் என்னிடம் இல்லை.. அது போக காரம் சேர்ப்பது இங்கு குறைவே.. இதையே என் கணவர் சாப்பிட்டிருந்தார் என்றால் ”காரத்தை அள்ளிப்போட்டிருக்க” என்று தான் சொல்லியிருப்பார்...:)

      தளிகைப் பண்ணலை ...எண்ணெயில் பெருங்காயம் போட்டு திருமாரி கொட்டினது தான்!

      நீக்கு
  10. என் குழந்தைகள் யாரையும் பெயர் சொல்லி அழைத்ததில்லை. சிலர் வீட்டில் அப்பா, அம்மாவை டி, டா..போட்டு பேசுவதை பார்த்திருக்கேன். அப்படியே பத்திக்கிட்டு வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் குழந்தையும் என்னைத் தவிர யாரையும் பெயர் சொல்லி அழைத்ததில்லை..ஓரிரு வருடங்கள் தான் என்னையும்...:) மாற்றிக் கொண்டு விட்டாள்.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க ராஜி.

      நீக்கு
  11. கதம்பம் அனைத்தும் அருமை.
    முகநூலில் படித்தேன் பார்த்தேன்.
    இப்போது இங்கும் பார்த்து ரசித்தேன்.
    படங்கள் எல்லாம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..

      நீக்கு
  12. முகநூலில் முன்பே பகிர்ந்து விட்டீர்களோ? படங்கள் வெகு அழகு! //காய்கறி கழிவுகளால் மண்ணை உயிரூட்டி,// எப்படி என்று பகிர்ந்து கொள்ளுங்களேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்மா..முகநூலில் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் தான் இங்கு கதம்பமாக வரும்.. காய்கறித் தோலை மிக்சியில் ஒரு சுற்று சுற்றி மண்ணோடு கலந்து வைத்து விட்டேன்..அவை சில நாளில் மக்கி விட்டன..

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதிம்மா.

















      நீக்கு
  13. கதம்பம் நன்றாக உள்ளது துண்ட மாங்காய் நாக்கில் எச்சில் ஊற வைக்கிறது . கோதுமை ரவைப் புட்டு புது மாதிரியாக இருக்கிறதே செய்து பார்க்கணும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி.

      நீக்கு
  14. கதம்பம் மிக அருமை. உயிரை பற்றி கவலை படாமல் தோற்றத்திற்கு மதிப்பு கொடுக்கும் நபர்களை நினைக்கும்போது வேதனையாக இருக்கின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார். தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமசாமி சார்.

      நீக்கு
  15. நல்ல தொகுப்பு. முகநூலிலும் தொடருகிறேன்.

    நானும் மஃபின்ஸ் (muffins) செய்யும் போது மைதா, வெண்ணெய், சீனிக்குப் பதிலாக கோதுமை மாவு, வெல்லம், தேங்காய் எண்ணேய் உபயோகித்துதான் செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  16. அருமையான கதம்பம் மேடம். ப்லே school அனுபவத் தொடரைப் படித்துவிட்டு கருத்தைப் பகிர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபிநயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....