புதன், 22 ஜூலை, 2020

வாசிப்பனுபவம் – யதி – இரா. அரவிந்த்

அன்பின் இனிய நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம்.  இந்த நாளினை நல்லதொரு வாசகத்துடன் துவங்கலாம் வாருங்கள். 

 

புதையல்களைக் கண்டுபிடிக்க வெகு தொலைவு பார்க்க வேண்டியதில்லை. ஒவ்வொரு முறையும் நூலகத்தைப் பார்வையிடும்போது அவற்றைக் கண்டுபிடிக்கிறேன். 

 

*****

 

இந்த வாரத்தின் வாசிப்பனுபவமாக நண்பர் இரா. அரவிந்த் அவர்களின் அனுபவம் – யதி – திரு பா. ராகவன் அவர்களின் எண்ணத்தில் உருவான இந்த நூல் பற்றிய வாசிப்பு அனுபவத்துடன் நம்மிடையே வந்திருக்கிறார், நண்பர் அரவிந்த்.  திரு பா. ராகவன் அவர்களின் சில நூல்களை நானும் வாசித்ததுண்டு. இந்த நூலை நான் தரவிறக்கம் செய்து வைத்திருக்கிறேன் என்றாலும் இது வரை வாசிக்க இயலவில்லை. வாசிக்கத் தோன்றியிருக்கிறது – அரவிந்த் எழுதியுள்ள வாசிப்பனுபவத்தினை படித்த பிறகு.   அமேசான் தளத்தில் மின்னூலாகவும், அச்சுப் பிரதியாகவும் கிடைக்கிறது. மின்னூல் விலை ரூபாய் 299/-. அச்சுப் பிரதி எனில் ரூபாய் 799/-. புத்தகங்களின் விலை பார்க்கும்போது சில சமயங்களில் பயமாகவும், வாங்குவதற்கு தயக்கமாகவும் இருக்கிறது என்பதையும் இங்கே சொல்ல வேண்டும்.  புத்தக வாசிப்பனுபவத்தினை நண்பர் இரா. அரவிந்த் அவர்களின் வார்த்தைகளில் படித்து இரசியுங்கள் – வெங்கட் நாகராஜ், புது தில்லி.    

 

*****

 

யதி: துறவிகளையே தோற்கடிக்கும் இல்லத் துறவி.

 

சிறு வயதிலிருந்தே நாம் ஆச்சரியமாகவும் புதிராகவும் காண்பது துறவிகளை அல்லது சாமியார்களையே.

கடவுளிடம் அதீத பக்தி கொள்ளுதல், பெரும் பொருளியல் இழப்பை சந்தித்தல், காதல் தோல்வி அடைதல், குடும்பக் கஷ்டங்களைத் தாங்க முடியாமை போன்றவை துறவை தேர்ந்தெடுப்பதற்கான பொதுவான காரணங்களாகச் சொல்லப்படுகிறது.

 

யாராலும் முழுமையாகப் புரிந்துகொள்ள இயலாத நம் அக ஓட்டம், மேற்ச்சொன்ன காரணங்களுக்கு அப்பாலும், பல்வகை காரணிகளால் துறவை தேர்ந்தெடுக்கக் கூடும் என்பது ஆச்சரியமான உண்மை.

 

அப்படி, பல விசித்திரமானக் காரணங்களால் துறவை தேர்ந்தெடுத்த நால்வரைக் கொண்டு துறவுலகின் பல்வகை அம்சங்களை விளக்குவதோடு அதையும் கடந்த உண்மையான துறவை எடுத்துக்காட்டுவதே, பிரபல எழுத்தாளரும், திரைப்பட மற்றும் தொலைக்காட்சித் தொடர் வசனகர்த்தாவுமான திரு பா. ராகவன் அவர்களின் "யதி" என்ற புதினம்.

 

திருவிடந்தையில் ஒரு எளிய நடுத்தர பிராமண குடும்பத்தின் புதல்வர்களான விஜய்,  வினய், வினோத், விமல் நால்வரும் அக்குடும்ப வரலாற்றைக் கூறும் ஒரு நாடிச் சுவடி வரிகளுக்கேற்ப வரிசையாகத் துறவியாகிவிட, பெற்றோரும் அவர்கள் மாமாவும் துன்பத்தில் தவிக்கின்றனர்.

 

அந்த நால்வரும் தங்கள் அன்னை மரணம் அடைந்த போது வரும் சமயத்தில், அவர்கள் வாழ்வில் அடைந்தவை, இழந்தவை, அவர்களைத் திகைக்க வைக்கும் குடும்பத்தின் ரகசியங்கள், நாடிச் சுவடி உருவாக்கியதன் பின் உள்ள மர்மம் என பரபரப்பாகச் செல்லும் புதினம் ஆங்காங்கு வாழ்வின் பல தத்துவங்களையும் அனாயாசமாகத் தூவிச் செல்கிறது.

 

சன்னியாசிகளை, பசி, காமம் உட்பட அனைத்தையும் கடந்தவர்களாக மிரட்சியோடு பார்க்கும் நாம், இந்த நால்வகை துறவிகளின் வாயிலாக சன்னியாச உலகின் வெவ்வேறு பக்கங்களை அறிந்து அவர்களும் நம்மைப் போன்ற சதை எலும்புகளால் ஆனவர்களே என்பதை உணர்ந்து திகைக்கிறோம்.

 

நோய் உட்பட இக உலகப் பிரச்சனைகளைத் தீர்க்க அவர்களை கடவுளாகக் கருதி அணுகும் நாம் உணர வேண்டியது, 'மருந்தாக மாறத் தெரிந்த வைத்தியன் கடவுளாகிவிடுகிறான்' போன்ற நாத்திக சன்னியாசியான விமலின் ஆழ் அனுபவ கண்டடைதல்களையே.

 

ஒரு சராசரி குடும்பஸ்தன் சந்திக்கும் காமம், பொறாமை, பயம், குழப்பம் உட்பட அனைத்து சிக்கல்களும் சன்னியாசிகளிடம் அப்படியே இருப்பதை உணர்ந்து நாம் நிலை குலையும் தருணங்கள் நூலை வாசிக்கும்போது பல முறை ஏற்படுவது உறுதி.

 

கிருஷ்ண பக்தனாக மனதை ஒரு நிலையில் குவிக்கும் முயற்சியில் வெல்ல இயலாமல், காமத்தால் மாபெரும் அலைக்கழிவுகளுக்கு உள்ளாகும் வினோத், மற்றவர்களுக்குக் கிருஷ்ண மந்திரத்தை உபதேசிப்பது; தன் ஆணவம் புண்பட்டதால் கொலையையும் தயங்காமல் செய்யும் வினய், சக்தி உபாசகனாகத் தனது இறுதி இலக்கை அடையும் தருவாயில் சிறிய சந்தேகத்தால் அடையும் தோல்வி என அனைவரும் சாதாரண மனிதர்களாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

 

கையில் துளியளவு பணமோ, வங்கிக் கணக்கோ இன்றி, உலகின் பெரிய மனிதர்களின் சிக்கல்களை மதிநுட்பத்தால் தீர்க்கும் எளிய நாத்திகனாக, இக உலக சுகங்கள் அனைத்தையும்  சுதந்திரமாக அனுபவிக்கும் கதை சொல்லி விமலின் துறவு சார்ந்த தத்துவங்கள் நம் வாழ்வின் பொருள் குறித்த ஆழ்ந்த சிந்தனைகளை தூண்டுபவை.

 

அப்படிப்பட்ட அவனது சுதந்திரமான சன்னியாச வாழ்வின் அடித்தளம் கூட, புன்னகையுள் மறைந்துள்ள தன் அன்னையின் கண்ணீரை எதிர்கொள்வதன் மீதான அச்சத்தின் மீதே கட்டப்பட்டது என உணரும்போது வியப்பின் எல்லையை அடைகிறோம்.

 

'எங்கேருந்துடா அந்தப் பாசம் வரும்? லிப்ஸ்டிக்கா அது? ரத்தம்டா! நெஞ்சுலேருந்து விழற துளி’ போன்ற கேசவன் மாமாவின் உருக்கமான உணர்வுகள் தாய்மையின் வீரியத்தை நம் நெஞ்சில் விதைப்பவை.

 

ஹடயோகியாக காற்றையே வசப்படுத்தி, எங்கும் எந்த உருவத்திலும் இருக்கும் மூத்த அண்ணன் விஜய், தன் தம்பிகளுக்கு வாழ்வு முழுதும் வெவ்வேறு இக்கட்டான சமயங்களில் தக்க உதவிகளைச் செய்து, அனைத்தும் அறிந்த ஒரு மர்ம யோகியாகவே திகழ்கிறான்.

 

அவனால் கூட, காமத்தை துச்சமென தூக்கியெறிந்த இல்லத்து யோகியின் கண்களை நேரே சந்திக்க இயலாமல் வெட்கி எடுத்த இறுதி முடிவு, மொழியின் குழந்தை என்று போற்றப்படும் விமலையே சொல்லற்று கண்ணீர் விட வைக்கையில் சாதாரண வாசகர்களால் கண்ணீரால் அவளுக்கு அஞ்சலி செய்வதை விடுத்து வேறென்ன செய்து விட முடியும்?

 

'சொற்களை இறைக்காதவரை ஆளுமை கட்டப்பட்டுக்கொண்டே இருக்கிறது' என தனது ஆளுமையை பெருமையாகக் கருதும் விமல், தன் சொற்களோடு உணர்வுகளையும்  மறைத்து, பாசத்தோடு பயங்கர ரகசியங்களைத் தன் உயிரோடும் புன்னகையோடும் கொண்டு செல்லும் ஆளுமையின் பிரம்மாண்டம் கண்டு செயலற்றுப் போவதில் ஆச்சரியம் என்ன?

 

'திருவானைக்கா சொரிமுத்து, திருப்போரூர் சாமிகள், கோவளத்து பக்கிரி, ஹடயோகி விஜய் போன்ற நம் புரிதலுக்கு அப்பாற்பட்ட புதிர்களைப் பூரணங்களாகக் கருதி நம் நிம்மதியை கெடுத்துக் கொள்ளத்தான் வேண்டுமா?' என விமலோடு சேர்ந்து நம்முள்ளும் எழும் வினாவிற்கான விடையை இறுதி அத்தியாயத்தில் காணலாம்.

 

நிறைகுறைகளின் சரி விகிதக் கலவையான நம்  வாழ்வை,  நிறைகள் சார்ந்த அகங்காரமும் குறைகள் சார்ந்த குற்ற உணர்வும் இன்றி, அனைவரையும் சரி சமமாக அரவணைத்த இக்கதை அன்னையாகவும்,  அதனால் பூரண மகிவ்வை எய்திய விமலாகவும் வாழும் பக்குவம் பெறலாம்.

 

 

தினமணியில் தொடராக வந்த இப்புதினம் இப்போது கிண்டிலிலும் பின்வரும் சுட்டியில் கிடைக்கிறது.

யதி

 

நட்புடன்,

இரா. அரவிந்த்

 

*****

 

பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை, பின்னூட்டம் வழி பகிர்ந்து கொள்ளுங்கள்.   மீண்டும் வேறு ஒரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லி.

18 கருத்துகள்:

  1. புத்தகத்தலைப்பே கவர்கிறது.  படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் எழுதி இருக்கிறார் அரவிந்த்.  பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் ஐய்யா.

      நீக்கு
  2. இன்றைய விமர்சனம்
    அந்தக் கதை மாந்தர்களின் பரிமாணத்தைக் காட்டுகிறது...

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐய்யா.

      நீக்கு
  3. விமர்சனம் அருமை... மின்னூலின் இணைப்பிற்கு நன்றி ஜி...

    பதிலளிநீக்கு
  4. விமர்சனம் சிறப்பாக இருக்கிறது.
    சிலரது எழுத்துகளுக்கு முன்பு விலை ஒரு பொருட்டல்ல... என்பார்கள் உண்மைதான் போலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐய்யா.
      அருமையான நூல்.
      சீக்கிரம் வாசியுங்கள்.

      நீக்கு
  5. விமர்சனம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. நல்ல விமர்சனம். துறவிகள் பற்றிய தகவல்கள் ரசிக்கும்படி இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐய்யா. நூல் படித்தால் இன்னும் பல சுவையான தகவல்கள் கிடைக்கும்.
      தங்கள் வருகைக்கும் கருத்திர்க்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. படிக்கத் தூண்டும் விமர்சனம்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  8. புத்தகத்தைப் பற்றி மிகச் சிறப்பான விமர்சனம்...
    அருமை வாழ்த்துகள்...
    அப்படியே நம்ம எதிர்சேவையையும் வாசித்து எழுதச் சொல்லலாமே... :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....