வியாழன், 16 ஜூலை, 2020

திருடா திருடி – பத்மநாபன்

அன்பின் நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம். இந்த நாளை ஒரு பொன்மொழியுடன் ஆரம்பிக்கலாம் வாங்க!


சந்தோஷம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட, நீ இருக்கும் இடத்தில் சந்தோஷத்தினை உருவாக்கு. உன் வாழ்க்கை நிறைவாக இருக்கும்.

***** 

இன்றைக்கு பத்மநாபன் அண்ணாச்சியின் கைவண்ணத்தில் ஒரு பதிவு. ஓவர் டு பத்மநாபன் அண்ணாச்சி – வெங்கட் நாகராஜ்.


*****

திருடா திருடி….



படம்: இணையத்திலிருந்து...


"ஏ! செகதி! அஞ்சு ரூபாய்க்கு அவியல் காய்கறி குடு" செல்லமாத்தா செகதியண்ணன் கடைக்கு முன்னால நின்னுக்கிட்டு கண்டாங்கிச் சேலையில சுருட்டி மடக்கி முடிஞ்சு வச்சுருந்த பத்து ரூவாத்தாள பிரிச்சு எடுத்து நீட்டுனாள். எங்க கன்னியாகுமரி மாவட்டத்தில இது ஒரு வசதி. அவியல் வைக்கணும்னா தனித்தனியா காய் வாங்காண்டாம்.  ஒரு அவியல் காய்கறின்னு சின்ன காய்கறிகடைகளில கேட்டா போறும். ஒரு முரியங்கா, ரண்டு கத்தரிக்கா, ஒரு துண்டு புடலங்கா, ஒருதுண்டு தடியங்கா, ஒரு வாழக்கா, ஒரு சின்ன துண்டு சேனை, நாலஞ்சு சீனியாவரக்கா! வேற என்ன காய்டே அவியலுக்கு போடணும். ஒரு காய் குறைஞ்சாலும் வியாக்கியானம் பேசுவா, அந்தக் காய் இல்லாம என்னத்த அவியலு, இந்த காய் இல்லாம என்னத்த அவியலுன்னு புளுபுளுத்துக்கிட்டே வாங்கிகிட்டு போவா. அதுவும் கடைசியில அந்த நாலு பச்சமொளகாயை போடாட்டா கடைக்காரன் செத்தான்.


"யாத்தா! அஞ்சு ரூவாய்க்கு என்னத்த அவியல் காய்கறி போட. சந்தையில ஒரு வாழக்காய் விலை என்ன தெரியுமா. சேனை என்ன விலை தெரியுமா. நீ என்னடான்னா அஞ்சு ரூவாய்க்கு அவியல் காய்கறி தான்னு வந்து நிக்க. ஒரு துண்டு தடியங்காய் போடாட்டாலும் வியாக்கியானம் பேசுவே. பத்து ரூவாய்க்கு குறைஞ்சு அவியல் காய்கறி தரமாட்டேன்னு எத்தன தடவ சொல்லியிருக்கேன்."


இப்படி ஒருகாய் கூட குறையாம வாங்கி நல்ல வளப்பமா தேங்காய அரைச்சுப் போட்டு, தேங்கெண்ணய் மணக்க மணக்க அவியல் வச்சு வக்கணையா திண்ணுப் போட்டு  கடைசியில அந்த புறங்கையை ஒண்ணு நக்கி முடிச்சாத்தான் அந்தச் சோத்துக்கு மரியாதை. என்னத்த நான் சொல்லுகது.


அதுவும் இப்படி வீட்டுல வைக்கும் அவியலை கையை நக்கிகிட்டு ஏப்பம் போட்டா, இதே அவியலை நாஞ்சில் நாட்டு கல்யாணச் சாப்பாட்டுல சாப்பிடணும்யா! அந்த அவியலுக்கு மட்டும் எப்படி இவ்வளவு ருசி வருகுண்ணு தெரியல்ல. அதுவும் இந்த தாழாக்குடி நீலகண்டபிள்ளை சமையல்னா போறும். பந்தியில ரண்டு ரவுண்டாவது அவியல் வாளி சுத்தி வரும்லா.


எங்க உள்ளூர் சமையல் வித்வான் மணியண்ணனும் அவியல் ஸ்பெஷலிஸ்ட். எங்க சித்தப்பா, வீட்டுல எப்படா விஷேசம் வரும், மணியண்ணனை சமையலுக்கு புக் பண்ணலாம்னு காத்துக்கிட்டு இருப்பாரு. எல்லாம் இந்த அவியல் ருசி பண்ணுக வேலைதான். ம்ம். ஓ! அங்க செகதியை சிவனேன்னு விட்டு விட்டு இங்க அவியல அவனேன்னு புடிச்சிட்டனோ. நம்ம செகதிகிட்டயே திரும்பிப் போவோம்.


"எலே! உள்ளதப் போடுல. வேணும்னா ரண்டு சீனியாவரக்காயை குறைச்சு போடு.  எனக்கும் அந்த எளவெடுத்துப் போவானுக்கும் எவ்வளவு வேணும்." அந்த எளவெடுத்துப் போவான் அவ புருஷன்தான். வயசாக வயசாக எங்க ஊருல புருஷன் பொஞ்சாதி பாசம் இப்படித்தான் ரொம்ப அன்னியோன்னியமா இருக்கும்.


செகதியண்ணன் அப்படி ஒரு அமைதியான மனுஷன். அவரோட அந்த அமைதியான குணத்துக்கு அந்த ஊருல அவ்வளவு நாளு கடையை நடத்தி வருகது பெரிய விஷயம். காலையில அஞ்சு மணிக்கெல்லாம் மொத பஸ்ஸை புடிச்சு வடசேரி கனகமூலம் சந்தைக்குப் போய், கடைக்கு வேண்டிய காய்கறி எல்லாத்தையும் வாங்கி சாக்குல போட்டு கட்டி, எட்டு மணிக்குள்ள திரும்பி வந்து கடையை தொறந்து வியாபாரத்த ஆரம்பிப்பாரு. வாரத்தில ரெண்டு நாளு மத்தியானம் பொண்டாட்டிகிட்ட கடையை பாத்துக்கிட சொல்லிக்கிட்டு  கோட்டாத்துக்குப் போய் கடைக்கு வேண்டிய வெஞ்சனம், கருப்பட்டி, முட்டாய், அதுவும் இந்த கல்கோனா முட்டாய் நல்ல போகும், இப்படி எல்லா ஐட்டத்தையும் வாங்கி நாலு மணிக்கு திரும்ப வருவாரு. ஒரு கடை நடத்துகது அவ்வளவு லேசுப்பட்ட காரியம் கிடையாது.


இப்படி கடுமையா உழைச்சு தானுண்டு தன் கடை(மை)யுண்டுண்ணு செகதியண்ணன் இருந்தாலும் ஒண்ணுரண்டு வில்லங்கம் புடிச்ச பயலுக வந்து சும்மா இருக்க மாட்டானுங்க. அதுலயும் ஒருத்தன் உண்டு, கடைபக்கம் வந்தா கையை வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டான். செகதியண்ணன் கொஞ்சம் அந்தப் பக்கம் திரும்பினா போதும், கண்ணிமைக்க நேரத்தில வாழைக்குலை அனங்காம ஒரே இணுங்கில ஒருபழத்தை இணுங்கி  தோலையும் உரிச்சு வாயில போட்டு  வாயே அசையாம முழுங்கிருவான். செகதியண்ணனுக்கும் என்னத்தையோ திருட்டுத்தனம் நடந்திருக்குண்ணு சந்தேகம் வரும். ஆனா கண்டுபிடிக்க முடியாது. இந்தப் பயதான் தோலிருக்க சுளை முழுங்குகதிலதான் பிஎச்டி வாங்கின பயலாச்சே. ஆனா ஒண்ணு. இந்த பய எதையாவது திருடிகிட்டு வீட்டுக்கு கொண்டு போகணும்னு நினைக்க மாட்டான். சும்மா செகதியண்ணன காணாம எதையாவது எடுத்து வாயில போடுவான். அதுல ஒரு அல்ப சந்தோஷம். செகதியண்ணனும், நம்ம பயலுகதானேன்னு அவ்வளவு கண்டுகிட மாட்டாரு. நல்ல மனுஷன்.


இப்படித்தான் ஒருதடவை நம்ம பய வந்தான். கடையில பாத்தா பேயன்குலைதான் தொங்குது. இது சரிப்பட்டு வராது. ஒரே வாய்க்குள்ள போகாது. கடையில ஒரு சாக்குல சிறுகிழங்கு. மண்ணு போக தொடச்சு வச்சிருக்கு. அப்படியே சாப்பிடலாம், நல்லாருக்கும். பக்கத்துல இன்னொரு சாக்குல சேப்பங்கிழங்கு. இதை கருணைக் கிழங்குண்ணும் சொல்லுவா. பேருதான் கருணைக்கிழங்கு. கொஞ்சமும் கருணை கிடையாது. வாயில போட்டா நாக்குல இருந்து பீக்கு வரைக்கும் அரிச்சு தள்ளிடும்.


நம்ம பயலுக்கு கை துறுதுறுங்குகு. சிறுகிழங்கை ஒரு பிடி எடுத்து வாயில போட்டாத்தான் நமைச்சலு அடங்கும். என்னத்தச் செய்ய. எதையாவது லவட்டி வாயில போட்டே பழக்கப்பட்டுப் போச்சு. செகதியண்ணன் கொஞ்சம் அந்தப் பக்கம் திரும்பினான். சிறுகிழங்குண்ணு நினைச்சு கருணைக் கிழங்க லபக்குண்ணு வாயில போட்டு வாயசையாம வாய்க்குள்ளேயே அசை போடுகான்.


எலேய்! நீ என்னதான் வாயசையாம சவச்சாலும் நாக்குல படாம சவைக்க முடியுமா. கருணைக் கிழங்கு வேலையைக் காட்டிட்டுல்லா. பயலுக்கு நாக்கு அரிப்பு தாங்க முடியல்ல. கூட வந்த கூட்டுக் களவாணிக்கு மனசிலாயிட்டு. இந்த பய வந்த வருத்தப் பாத்து செகதியண்ணனுக்கும் மனசிலாயிட்டு. நல்ல மனுஷன். இவனப் பாத்து 'என்ன மக்கா! என்ன செய்யு. எதுக்கு கொடைஞ்சுகிட்டு வாரே.' பயலுக்கு வேற வழி தெரியல்லை. கூட வந்த பய, 'மாமா! சிறுகிழங்குண்ணு நினைச்சு கருணைக் கிழங்கை வாயில போட்டுட்டான். அதுதான் இந்த வருத்து வாரான்.'


நம்ம செகதியண்ணனுக்கு ஒரே சங்கடமாப் போச்சு. நம்ம கடை கருணைகிழங்கை திண்ணுப் போட்டு பய இப்படி நாக்கரிச்சு துடிக்கானேன்னு மருகுகான். 'ஏட்டி! வீட்டில தயிர் இருந்தா எடுத்துக்கிட்டு ஓடி வா!' தயிரு நாக்குல கொஞ்சம் இருந்தா அரிப்பு  கொறையும். இந்த அக்கப்போரைப் பாத்துக்கிட்டு இருந்த சிவதாணு பாட்டா, 'ஏலே! செகதி! கொஞ்சம் மண்டஞ்சக்கரையை உடச்சு அவன் வாயில போடு. கொஞ்ச நேரத்தில அரிப்பு ஓடிரும்.'


கடையில மண்டஞ்சக்கரை இருந்த பெரிய மரவட்டையப் பாத்தா தீர்ந்து போய் இருந்தது. கொஞ்சம்போல இளுகின மண்டஞ்சக்கரைதான் இருந்தது. இங்க பயலுக்கு அரிப்பு தாங்காம துடிக்கான். செகதியண்ணன் அந்த மரவட்டையிலேயிருந்து இளுகின மண்டஞ்சக்கரையை வழிச்சு பயலுக்கு கொடுத்தான். எப்படியோ கொஞ்ச நேரத்தில அரிப்பு போய் பய தெளிஞ்சான். இப்படி ஒரு நல்ல மனசுள்ள மனுஷன் நம்ம செகதியண்ணன். ஆனா அந்த பய இன்னைக்கு கடைக்கு வந்தாலும் துறு துறுண்ணு எதை எடுத்து வாயில போடலாண்ணுதான் தட்டழியான். என்னத்தச் சொல்ல!


இப்படி நல்லமனம் படைச்ச செகதியண்ணனுக்கு ஒரு சோதனை வந்தது. கடைக்கு பின்னால வீட்டில வடக்க ஒரு முறி (அறை) (ஒரு பெரிய அறையை இரண்டாக முறித்து இரண்டு தனி அறைகளாக மாற்றியதால் முறி என அழைத்தோமோ) காலியா கிடந்தது.  யாராவது வாடகைக்கு வந்தால் மாசம் இருநூறு ரூபாய் கிடைக்கும். ஆனா அந்த ஊருல யாரு வாடகைக்கு வருவா. ஒண்ணுமில்லாதவனுக்குக் கூட ஒண்டுகதுக்கு சொந்த குடிசையாவது இருந்தது.


இப்படி இருக்கும் போது ஒரு ஜோடி வீடு வாடகைக்கு தேடி வந்தது. ஊருக்குள்ள நுழைஞ்சதும் நம்ம செகதியண்ணன் கடைதான்.  செகதியண்ணன் ரெண்டு பேரையும் பார்த்தான். அந்த ஜோடியில பையன் பாக்கதுக்கு ஹீரோ மாதிரி இருந்தான். கொஞ்சம் வசதியான வீட்டு பையன்போல. ஆனா அந்த பொண்ணு கொஞ்சம் சுமாருதான். படிச்ச பொண்ணு மாதிரியும் தெரியல்ல. நல்ல குடும்பத்து அம்சமும் இல்ல. என்னத்தச் சொல்ல. காதலுக்கு கண் இல்லைன்னு சொல்லுகது நெசந்தான் போல.


செகதியண்ணனுக்கு மனசுக்குள்ள  கொஞ்சம் சந்தேகம்தான். பையன் வெள்ளையும் சொள்ளையுமா இருக்கானே. நம்ம இடமோ ஒத்த முறி. நம்ம வீட்டுக் கிழவி  ஒண்டிகிட்டு கிடந்த முறி. ஒரு மூலையில ஒரு அஞ்சடி உயரத்துக்கு மறிச்சு ஒரு அடுக்களை. அந்த முறிக்கு வெளியில கொஞ்சம் தள்ளி களியாமக் கிடந்த கிழவிக்கு வேண்டி ஓலைக்கிடுவு வச்சு மறைச்ச கக்கூஸ் இருக்கு. ஆனா இந்த பொம்பளப்புள்ளைக்கு புடிச்சு  வருமாத் தெரியல்லையே.  கதவத் தொறந்தா ஒத்த சக்கைமூடும் அதைத் தாண்டி டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டோட பொறவாசலும்தான் தெரியும்.


வெறும் ஓடு போட்ட கட்டடம்தான் இந்த இன்ஸ்டிட்யூட். அதோட ஓனரை மேனேஜர் சார், மேனேஜர் சார்ன்னுதான் கூப்பிடுவோம். ஒரு அஞ்சு ரெமிங்டன் தமிழ் டைப்ரைட்டரு, அஞ்சாறு ரெமிங்டன் இங்கிலீஸு டைப்ரைட்டரு, அப்புறம் ஒரு அஞ்சாறு கோத்ரெஜ் டைப்ரைட்டருன்னு மொத்தமா ஒரு இருவது இருவத்தஞ்சு  டைப்ரைட்டருங்க இருக்கும். ஆனாலும் அந்த ரெமிங்டன் மெஷினில் டைப்படிக்கிற சவுண்டு இருக்கே! ம்ம்! இப்பவும் டைப்ரைட்டருங்க கூட கொஞ்சித் திரிஞ்ச நாட்களை நினைச்சாலும் டிங் டிங்குண்ணு மனசுக்குள்ள மணி அடிக்குமுல்லா.   எலே! வைத்தி! அந்த கணவதிவரம் புள்ள ஒண்ணு வரும்லாடே! அதுக்கு பேருகூட, சரி அது எதுக்கு இப்ப. அதுக்கு பக்கத்து டேபிள் டைப்ரைட்டருல உட்கார்ந்து டைப்படிச்சா மட்டும் வரிக்கு வரி டிங் டிங்குண்ணு ரண்டு தடவை மணி அடிக்கும்.  ஹார்ட்டு டப்பு டப்புண்ணு  அடிக்கும். சபாபதிண்ணு ஒரு பய இருந்தான். அவனுக்கு மூணு தடவை டிங் டிங் டிங்குண்ணு  அடிக்குமாம். அதுபாட்டுக்கு அடிச்சுக்கிட்டு கிடக்கட்டும். நாம நம்ம கதைக்கு வருவோம்.


செகதியண்ணனுக்கு மனசுக்குள்ள  இதெல்லாம் ஓடுகு. ஆனாலும் மாசம் ஒரு இருநூறு ரூவா கிடைச்சா கொஞ்சம் ஆசுவாசமா இருக்கும். அந்த பொம்பளப்புள்ள முறியைப் பாத்துக் கொஞ்சம் புறுபுறுன்னுது. அதுக்கு அந்த முறி புடிக்கலை போல. கிழவிக்கே அந்த முறியிலே அடைஞ்சு கிடக்க புடிக்காது. பாவம் இது சின்ன வயசுப் புள்ள. வயசு ஒரு இருவத்திரண்டு இருவத்து மூணு இருக்குமா. என்ன எளவுக் காதலோ. சரி. வரட்டும். நம்ம வீட்டு சின்னப் புள்ளைக அதை அக்கா மாதிரி பாத்துக்கிடும்.


அந்த பையன் அந்தப் புள்ளையை சமாதானப்படுத்தி செகதியண்ணன் கையில ஒருமாச அடவான்ஸை கொடுத்து ஆளுக்கொரு சூட்கேஸோட அந்த சின்ன முறிக்குள்ள நுழைஞ்சாங்க. அவங்க உள்ளே போனதும் செகதியண்ணன் பொஞ்சாதி 'என்ன ஏதுண்ணு விசாரிக்காம மாசம் இருநூறு ரூவா கிடைக்குன்னு யாரையோ உள்ள கொண்டு வந்துட்டேளோன்னு யோசனையா இருக்கு.'


'எல்லாம் கேட்டேன். நம்ம சூரங்குடி வாத்தியாருக்கு மகனாம் பாத்துக்கோ. கொஞ்சம் வெசளா சுத்திக்கிட்டு இரண்டு மூணு வருஷம் முன்னால வீட்ட விட்டு மெட்ராஸுக்கு ஓடிருக்கான். அங்க ஏதோ நல்ல வேலையில இருந்திருக்கானாம். அங்க இந்த புள்ளைக்கு கூட லவ்வு வந்திருக்கு. என்னத்த எளவு லவ்வோ. கூட்டிக்கிட்டு ஊருக்கு வந்திருக்கான். வாத்தியார் சேத்துக்கிடல்லை. துரத்தி விட்டுட்டாரு. கையில காசு உண்டு பாத்துக்கோ. ஒரு மூணு மாசம் இங்க இருந்து கிட்டு திரும்ப மெட்ராசுக்கு போயிடுவானாம் பாத்துக்கோ.'


'என்னத்தையோ, எனக்கு புடிச்சுக் காணல்ல. வாத்தியாரோ இல்லாட்டி அந்த புள்ளையோட ஆட்காரகளோ வந்து நம்மள சண்ட புடிக்காம இருந்தா சரிதான்.'


வீட்டு பொம்பளைக சொன்னா காரியமாத்தான் இருக்கும். பாவம் நம்ம செகதியண்ணனுக்கு தெரியுமா, வில்லங்கம் வரப்போகுதுண்ணு.


வீட்டுக்கு குடி வந்த ஜோடிகள் சும்மா பேருக்கு இரண்டு மூணு பாத்திரம் பண்டத்தை மட்டும் வச்சிருந்தது. ஆனால் கையில நல்ல காசு. மூணு நேரமும் ஓட்டலில் இருந்துதான் டிபனு சாப்பாடு எல்லாம். செகதியண்ணன் பொஞ்சாதிக்கு ஒரே எரிச்சல். வீட்டுல பொம்பளைன்னா சோறு பொங்கனோமா ஒரு குழம்பை வச்சமா தொட்டுக்க ஒரு கறியை வச்சமான்னு இல்லாம எப்ப பார்த்தாலும் ஓட்டல் சாப்பாடுன்னுக்கிட்டு. காதலிச்சானாம், கூட்ட்டிக்கிட்டு வந்துட்டானாம். எந்த ஊர்க்காறியோ தெரியல்ல. அப்படின்னு புறுபுறுத்துக்கிட்டே இருப்பா.


இந்த ஜோடிக்கு வேற வேலை கிடையாது. முறிக்கு நடையில நெருக்கி உக்காந்துகிட்டு டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் பொறவாசலையும் அங்க போற வாற பொம்பளப் புள்ளைகளையும் வாய்பாத்துக்கிட்டே இருக்க வேண்டியது.


அப்படி இப்படின்னு ஒரு வாரம் பத்துநாள் ஓடிட்டு. ஆனா ஒண்ணு. இந்த ஜோடியில ஆம்பிள இருக்கானே ஒரே வாரத்தில ஊருல பாதி இளவட்டப் பயலுகளை பச்சம் புடிச்சிக் கிட்டான். டீ வாங்கி குடுக்கது என்னா, பழம் வாங்கி குடுக்கது என்னா, அப்படி இப்படின்னு சிரிச்சுப் பேசி நல்ல பேரு வாங்கிட்டாம்லா. ஆனா என்ன வேலை செய்யான், எப்படி கையில இவ்வளவு காசு புரளுகுன்னு யாருக்கும் தெரியல்ல. நல்ல வெள்ளையும் சொள்ளையுமா காலையில வெளியே  போனா மத்தியானம் மூணு மணிபோல வீட்டுக்கு வந்து வாசல்ல ஜோடியா உட்கார்ந்து  டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் பொற வாசலை வாய் பாக்க ஆரம்பிச்சுடுவாங்க.


அப்படி இப்படின்னு ஒரு மாசம் ஓடிப்போச்சு. ஒரு வெள்ளிக்கிழமை. அடுத்த மூணு நாளு வரிசையா லீவு. நம்ம ஆளு செகதியண்ணன்கிட்ட வந்து " அண்ணே! எங்க அப்பா எங்களை வீட்டுல சேத்துக்கிடுகேன்னுட்டாரு. அதனால வாடகையை அட்வான்ஸ்ல கழிச்சுக்கிடுகேளா. நாளைக்கு காலையில் வீட்டை காலி பண்ணுகோம். சரியாண்ணே!" செகதியண்ணனுக்கு சங்கடந்தான்.   இனி யாரு வாடகைக்கு வருவா. இந்த புள்ளைக வேற ஒண்ணுக்கு ஒண்ணா பழகிட்டு இப்போ போறேங்கு. ஆனா சந்தோஷமாத்தான் போகு. போகட்டும், போகட்டும். நல்லா இருங்கப்போன்னு வழியனுப்பி வச்சாரு.


சனியாச்சை, ஞாறச்சை, திங்கழாச்சைன்னு மூணு நாளு ஓடிப் போச்சு. செவ்வாச்சை காலையில ஏழுமணிக்கு இன்ஸ்டிட்யூட்ட தொறக்க மேனேஜர்  சாரும் டீச்சரும் ஏழு மணி ஷிப்டு புள்ளைகளும் வந்தாச்சு. மேனேஜர் கதவை தொறந்ததும் நம்ம ராஜபாண்டியன் நல்ல மெஷின் கிடைக்கணும்னு இடிச்சு புடிச்சு உள்ள போய் டைப்ரைட்டர தேடுகான். ஒரு டைப்ரைட்டரக் கூட காணல்ல. மேனேஜர் சார் அதிர்ந்து போய் வாயடைச்சு நிக்காரு. டீச்சரும் வாயடைச்சு போய் நிக்குது.  இந்த ஊருல ஒரு கோழிக் கள்ளன் கூட வந்தது கிடையாதே. இப்ப மொத்த இன்ஸ்டிட்யூட்டையும் திருட்டுப் பயலுக கொண்டு போயிட்டானுகளே. பின்னால ஓட்டைப் பிரிச்சு இறங்கி வழிச்சு நக்கிட்டானுகளே.


மேனேஜர் முன்னூறு மீட்டர் தள்ளியிருந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடுகாரு. அங்கேயிருந்து இன்ஸ்பெக்டரும், இப்பம் புள்ள  பொறக்குமா இல்ல நாளைக்கு பொறக்குமாங்க மாதிரி வயித்த வச்சிருந்த ஏட்டய்யாவும் ஒரு கான்ஸ்டபிளும் கிளம்பி  வந்தாங்க. சப்இன்ஸ்பெக்டரு புதுசு. இதுதான் மொதகேசு போல. எல்லாத்துக்கும் ஏட்டய்யாவையே பாத்தாரு. ஏட்டய்யா பழம்திண்ணு கொட்டை போட்டவருண்ணு வயத்தப் பாத்தாலே தெரியும். ஏட்டய்யா கண்ணால இன்ஸ்டிட்யூட்ட ஒரு சர்வே எடுத்தாரு.

  

அப்படியே பின்னால போய் ஓட்டப் பிரிச்ச இடத்தைப் பார்த்து சுத்தி முத்திப் பார்த்தாரு. அந்த இடத்தில இருந்து பார்த்தா காலிமனையைத் தாண்டி நம்ம செகதியண்ணன் வீடு தெரிஞ்சுது. நேரா அங்க வந்தாரு.


அதுக்குள்ள ஊருக்குள்ள விஷயம் தெரிஞ்சு கூட்டம் சேர்ந்து போச்சு. சத்தமா சுகுப்  போட்டாலே என்னமோ ஏதோண்ணு ஓடி வர ஊருல அதுவும் இது வரைக்கும் திருட்டு பயமே இல்லாத ஊருல ராத்திரியோட ராத்திரியா இருவது இருவத்தஞ்சு டைப்ரைட்டரை ஆட்டையப் போட்டுக்கிட்டு போய்ட்டான்னா பெரிய திருட்டுக் கூட்டமால்லா இருக்கணும்.


செகதியண்ணன் கடைக்கு வந்த ஏட்டய்யா ஒரு சிகரெட்டை வாங்கி பத்த வச்சுக்கிட்டே கூடி நிண்ண மக்கள் வாயை கிளறினாரு. எல்லோரும் ஒரே மாதிரி இது வரைக்கும் ஒரு திருட்டு கூட இந்த ஊருல நடந்ததில்லையேண்ணு மூக்குல விரலை வைக்க, ஏட்டய்யா சிகரெட்டை குடிச்சு முடிச்சாரு. அப்போ தெக்குத் தெரு சிவதாணு செகதியண்ணன்கிட்ட பேச்சு வாக்குல "எடே செகதி, நம்ம காதல் ஜோடி வீட்டை காலி பண்ணிட்டாளோ. இனி அது மாதிரி செளரியமா வாடகைக்கு ஆள் கிடைக்க மாட்டாளேடே." ன்னு கேட்டான். இதைக் கேட்ட ஏட்டய்யா,"யாரு ஓய் அந்த காதல் ஜோடி"ன்னு கேட்க செகதியண்ணன் எல்லாக் கதையையும் சொல்லி முடிச்சாரு.


ஏட்டய்யா அப்படியே கடைக்கு பின்னால போய் அந்த ஜோடி இருந்த முறிப் பக்கமா போய் ஒரு நோட்டம் விட்டாரு. அங்கேயிருந்து இன்ஸ்டிட்யூட் பின்வாசலைப் பாத்தாரு. திரும்பி செகதியண்ணன்கிட்ட வந்து  "ஓய். அவன் பேரு என்ன சொன்னீரு."


"செல்வகுமாரு. ஆளு நல்ல டீஸன்ட் பாத்துக்கிடுங்கோ"


"ஒம்ம சர்டிபிகேட்ட யாருவோய் கேட்டா. அந்த பொம்பள எப்படி இருந்தா"


"சார். அந்த பொம்பளப் புள்ள கொஞ்சம் சுமாருதான். அதுவும் அவனுக்கு முன்னால ரொம்ப சுமார் தான்."


"அவன் வெளியில போகும்போது டீக்கா வெள்ளை சட்டை வெள்ளை பேன்ட்  போட்டுக்கிட்டு போவானோ!"


"ஆமா சார். உங்களுக்கு அவனை முன்னாலேயே பரிச்சயம் உண்டா சார்."


"உண்டுமான்னா கேட்கீரு. இன்ஸ்டிட்யூட் கேஸ் முடிஞ்சு போச்சு ஓய். இனி ஆளைத் தேடி புடிக்க வேண்டியதுதான். எளவெடுத்துப் போவான். குளத்து தண்ணிக்குள்ள குசுப்போட்டா, யாரு போட்டாண்ணு தெரியாதுண்ணு நினைச்சுக்கிட்டான் போல." ன்னு சொல்லி சிரிச்சாரு.


அப்போ ஆ..... ன்னு பொளந்த செகதியண்ணன் வாய் மூட ரெண்டு மூணு நாளாச்சு.


அப்புறம் ஒரு வாரத்துக்குள்ள அந்த ஜோடியை திருநெல்வேலி பக்கம் எங்கேயோ வச்சு அமுக்கிட்டாங்க. டைப்ரைட்டிங் மெஷினெல்லாம் கொஞ்சம் சேதாரத்தோட திரும்பி வந்து சேர்ந்தது. அப்புறம் நாரோல் கோர்ட்டில கேஸ் நடந்து செகதியண்ணன், ராஜபாண்டியன், மேனேஜர் சார் எல்லோரும் சாட்சி சொல்லப் போனது, குற்றவாளிக் கூண்டுல கொஞ்சமும் குற்ற உணர்ச்சி இல்லாமல் அதே வெள்ளை பேன்ட் வெள்ளை சட்டையோட வந்து நின்னது, கோர்ட்டுக்கு வேடிக்கைப் பார்க்க போன என்னை படிக்கிற பயலுக்கு கோர்ட்டில என்ன வேலைன்னு எங்க தாத்தா ஃபுல்வக்கீல் துரத்தி விட்டது எல்லாம் தனிக்கதை. 


என்ன நண்பர்களே... இன்றைய பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களைப் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். மீண்டும் வேறு ஒரு பதிவுடன் சந்திப்போம்... சிந்திப்போம்... 


நட்புடன்


பத்மநாபன்

புது தில்லி. 

42 கருத்துகள்:

  1. அவியலில் ஆரம்பித்து நல்ல அனுபவத்தில் முடிந்திருக்கிறது.  ஊர்பாஷையில் ரொம்பவே சுவாரஸ்யமான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊர் பாஷையில் ரொம்பவே சுவாரஸ்யமான பதிவு - ஆஹா. மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. வெள்ளந்தி மக்களிடையே விஷக் கிருமிகள் நுழைந்த விதத்தை நடைத் தமிழில் சொல்லிய அழகான கதை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெள்ளந்தி மக்களிடையே புகுந்த விஷக் கிருமிகள் - ஆமாம். இப்படி நிறைய விஷக் கிருமிகள் இவ்வுலகில்.

      உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  4. செகதியண்ணன் மனதில் இடம் பிடித்து விட்டார்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  5. கொஞ்சம் நீளம் அதிகம். இரு இடுகையாகப் போட்டிருக்கணும்னு நினைக்கிறேன்.

    அண்ணாச்சி எழுத்து குறை சொல்லமுடியாத அருமையான எழுத்து.

    //புளுபுளுத்துக்கிட்டே // - எங்க அப்பா உபயோகிக்கும் இந்த வார்த்தையைத்தான் கேட்டு எவ்வளவு வருஷங்களாச்சு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீளம் அதிகம் - அவர் எழுதி அனுப்பியதும் பேசியபோது நாங்களும் இதை உணர்ந்தோம். ஆனால் இரண்டு பகுதிகளாக வெளியிட்டால் ஸ்வாரஸ்யம் குறையலாம் என அப்படியே, ஒரே பகுதியாக வெளியிட்டு விட்டேன் நெல்லைத் தமிழன்.

      அண்ணாச்சியின் எழுத்து - நன்றி.

      நீண்ட வருடங்களுக்குப் பிறகு உங்கள் அப்பா உபயோகிக்கும் வார்த்தையை இப்பதிவு மூலம் நீங்களும் படிக்க முடிந்திருக்கிறது! மகிழ்ச்சி

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. முறிக்கு ஆள் பிடிக்க நினைக்கும்போதே, வில்லங்கம் செகதியைத் துரத்துதேன்னு நினைத்தேன். அதுக்கு ஏத்தமாதிரியே ஆயிட்டு. அடிக்கடி எழுதி வாங்குங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வில்லங்கம் செகதியைத் துரத்தி இருக்கிறது! உண்மை.

      //அடிக்கடி எழுதி வாங்குங்கள்// நானும் அவரிடம் சொல்லிக் கொண்டே தான் இருக்கிறேன். அவருக்குப் பணிச்சுமை அதிகமாக இருப்பதால் எழுதுவதும் படிப்பதும் குறைந்திருக்கிறது நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. காலைலயே கருணைக்கிழங்கை ஞாபகப்படுத்திப் பசியையும் ருசியையும் தூண்டிவிட்டுட்டீங்களே சார். பாஷையும் சூப்பர். பதிவும் சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பசியைத் தூண்டிய பதிவு - :)))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபிநயா.

      நீக்கு
  8. நகைச்சுவையான நாகர்கோவில் தமிழில்....இன்ஸ்பெக்டரும், இப்பம் புள்ள பொறக்குமா இல்ல நாளைக்கு பொறக்குமாங்க மாதிரி வயித்த வச்சிருந்த ஏட்டய்யாவும் ஒரு கான்ஸ்டபிளும் கிளம்பி வந்தாங்க.....அப்படியே கிராமத்து பாஷையில் அசத்திவிட்டார்.ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணாச்சியின் கிராமத்து பாஷை - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ரங்கராஜன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. திருநெல்வேலி மாவட்டத்துக்குள் நடந்து கொண்டே சென்றது போன்ற உணர்வு.

    நிறைய இடங்களில் சிரிக்க வைத்தார் அண்ணாச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருநெல்வேலி மாவட்டத்துக்குள் நடந்து கொண்டே சென்றது போன்ற உணர்வு - நன்றி கில்லர்ஜி.

      நிறைய இடங்களில் சிரிக்க வைத்தார் அண்ணாச்சி - ஹாஹா... நேரில் பேசும்போதும் அப்படியே தான் அவர்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. வட்டார பேச்சு வழக்கு மனதை கவர்ந்தது..
    பாவம் அண்ணாச்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வட்டார பேச்சு வழக்கு - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. பிடிகருணையைத்தான் நாங்க கருணைக்கிழங்கு என்போம். அப்புறம் சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, அப்புறம் திருநெவேலிக்கே உரித்தான முட்டான் கிழங்கு (இது சேப்பங்கிழங்கை எடுக்காமலேயே விட்டுவிட்டால் பெரிதாகி வரும் கிழங்கு என்று நினைக்கிறேன். பத்மனாபன் அண்ணாச்சிட்ட கேட்டுப்பாருங்க). இதுல எப்படி சந்தேகம் வந்து சேப்பையை கருணைம்பாங்களோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்தேகம் - அண்ணாச்சியிடம் கேட்டுச் சொல்கிறேன் நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. // ஒரு முரியங்கா, ரண்டு கத்தரிக்கா, ஒரு துண்டு புடலங்கா, ஒருதுண்டு தடியங்கா, ஒரு வாழக்கா, ஒரு சின்ன துண்டு சேனை, நாலஞ்சு சீனியாவரக்கா! வேற என்ன காய்டே அவியலுக்கு போடணும்.//
    வெள்ளரிக்காய், காரட் 
    அண்ணாச்சியோட கதை சொல்லும் பாங்கே தனி. மஹாபாரதக் கிளை கதை போல நடுவில கொஞ்சம் ஒதுங்கிட்டு வருவார். கதையைக் காட்டிலும் கேரக்டர் வருணனை அபாரம்  அண்ணாச்சி கதைகள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து அண்ணாச்சி கதை என்ற மின் நூல் பிரசுரம் செய்யலாம். free tamil books இல் இணையுங்கள்

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணாச்சியின் எழுத்துப் பாங்கு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      மின்னூல் - அவரிடம் பேசிப் பார்க்க வேண்டும்.


      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. சுவாரசியமான நடையுடன் சுவையான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. அவியல், கூட்டாஞ்சோறு இவைகளுக்கு காய்கள் கேட்டு வாங்கலாம்.
    கடையில் தருவார்கள்.
    கதை மாந்தர்களைப்பற்றி ஆரம்பிக்கும் போது இருந்து முடிக்கும் வரை அசத்தலான எழுத்து.

    நாகர்கோவில் தமிழை கேட்டு மகிழ்ந்தேன்.

    //இப்பம் புள்ள பொறக்குமா இல்ல நாளைக்கு பொறக்குமாங்க மாதிரி வயித்த வச்சிருந்த ஏட்டய்யாவும் ஒரு கான்ஸ்டபிளும் கிளம்பி வந்தாங்க.//

    நல்ல குசும்பு.

    //வாசல்ல ஜோடியா உட்கார்ந்து டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் பொற வாசலை வாய் பாக்க ஆரம்பிச்சுடுவாங்க.//



    நாகர்கோவிலில் இப்படி நோட்டம் பார்த்தவர்கள் தான் எங்கள் வீட்டில் கொள்ளையடித்தார்கள்.ஒரு திருடன் இரண்டு திருடன் இல்லை 7 பேர். யாரையும் பிடிக்க முடியவில்லை.
    எங்கள் வீட்டில் நகைகள், வெள்ளிப்பாத்திரங்கள் , புது பட்டுபுடவைகள் போனது போனது தான்.

    போலீஸ் சொன்ன செய்தி உங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து போகிறவர்கள் துப்பு சொல்லிதான் நடந்து இருக்கு இந்த திருட்டு என்று.

    செகதியண்ணன் மனதில் பதிந்து விட்டார்.
    பத்மனாபன் நன்றாக எழுதி இருக்கிறார்.
    பாராட்டுக்கள்.





    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நோட்டம் பார்த்தவர்கள் வீட்டில் கொள்ளையடித்தார்கள் - அடடா... மனிதர்களை என்ன சொல்ல!

      பத்மநாபன் அண்ணாச்சியின் பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. வட்டார வழக்கில் ஒரு நல்ல கதை. நன்றி வெங்கட். பொன்மொழி அருமை.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி பானும்மா.

      அண்ணாச்சியின் பதிவு உங்களுக்கும் பிடிதததாக இருந்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  16. கிராமத்து பேச்சு வழக்கில் சுவாரசியமான கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  17. வட்டார வழக்கு டயலாக்கோடு கூடிய கதை அது..
    என்ன ஒரே இணுங்கில ஒருபழத்தை இணுங்கி.... புது வார்த்தையாக இருக்கிறதே
    இது noun ஆகவும் வருகிறதுverb ஆகவும்வருகிறது .
    என்ன அர்த்தம்
    இணுங்குதல் verb ஆக என்ன அர்த்தம்
    இணுங்கு noun ஆக என்ன அர்த்தம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இணுங்குதல் - பிரித்து எடுத்தல் என்ற பொருள் தரும். விரிவாக அண்ணாச்சி பதில் சொல்லலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா.

      நீக்கு


    2. இணுங்குதல்
      தமிழ் பொருள் இணுங்குதல் இணுக்குதல். (இலைகள், தளிர்கள் போன்றவற்றை) கிள்ளிப் பறித்தல். வெட்டுதல். மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் - iṇungkutal (ஒலிப்பு) pluck;
      693 bytes (26 சொற்கள்) - 23:57, 26 பெப்ரவரி 2016
      இளிதல்
      இளிதல், வினைச்சொல். இணுங்குதல் உரித்தல் இகழப்பட்டு எளியனாதல் ஆங்கிலம் .. ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ +
      451 bytes (24 சொற்கள்) - 05:20, 21 ஏப்ரல் 2016


      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் விரிவான விளக்கத்திற்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
  18. வணக்கம் சகோதரரே

    பொன்மொழி சிறப்பாக இருக்கிறது. நல்ல கதை. இயல்பான கிராமத்து பேச்சு வழக்கில் தொடர்ந்து துப்பறியும் கதையாக முடித்தது நன்றாக உள்ளது. நாகர்கோவில் பேச்சு வழக்கு கதையை அருமையாக நகர்த்தி முடிவு வரை சுவாரஸ்யம் குறையாமல் விறுவிறுப்பாக்கியது.நிறைய இடங்களில் தன் வழக்கமான நகைச்சுவை உணர்வை குன்றாது வழங்கிய தங்கள் நண்பர் இந்த கதையையும் மிக சிறப்பாக எழுதியுள்ளார். அவருக்கு என மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகமும், பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கமலா ஹரிஹரன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  19. நாகர்கோவில் வழக்கில் அழகாக அமைந்த பதிவு..வெள்ளந்தி மனசுக்காரர் பாவம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கிரேஸ்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  20. நாரோயில் மொழியிலே நல்லதொரு கதை. எனக்கு என்னமோ ஆரம்பத்திலேயே சந்தேகம். இன்ஸ்டிட்யூட்டையே பார்க்கறாங்களேனு! ஏதோ இருக்குனு நினைச்சேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....