புதன், 8 ஜூலை, 2020

கிண்டில் வாசிப்பு – இருவர் – பால கணேஷ்


அன்பின் இனிய நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம்.  இந்த நாளினை நல்லதொரு வாசகத்துடன் துவங்கலாம் வாருங்கள். 


”ஒரு செயலைச் செய்வது வெற்றி அல்ல, அதை மகிழ்ச்சியாக செய்வதே வெற்றி. எதையுமே சிறு புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள் – அன்னை தெரசா”.


*****


நண்பர் பால கணேஷ் – பல தகவல்களை தன்னுள்ளே வைத்திருக்கும் டரங்க் பெட்டி!  அவரது ஒரு நூலின் பெயர் கூட ட்ரங்க் பெட்டி தான் என்பதை நீங்களும் அறிந்திருப்பீர்கள்.  வலைப்பூவில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தவர் இப்போதெல்லாம் முகநூலில் மட்டுமே எழுதுகிறார்.  நல்ல நண்பர்.  நிறைய எழுதுபவர் – அவரிடம் இருக்கும் புத்தகப் பொக்கிஷங்களுக்காகவே அவரை புத்தகப் பிரியர்கள் கடத்தினாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை!  அவரது சில அச்சுப் புத்தகங்களை வாசித்து, ரசித்ததோடு எனது வலைப்பூவிலும் எழுதி இருக்கிறேன்.  சமீபத்தில் “இருவர்” என்ற மின்னூலை அவர் அமேசான் தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.  மின்னூல் விலை ரூபாய் 50/-. தரவிறக்கம் செய்து கொள்ள முகவரி கீழே தருகிறேன்.  வெளியிட்ட அன்று நானும் தரவிறக்கம் செய்து கொண்டேன்.  இதோ படித்தும் விட்டேன்.  முகநூலில் எழுதியவற்றைத் தொகுத்து இப்போது மின்னூலாக வெளியிட்டு இருக்கிறார்.




இருவர் – யார் அந்த இருவர்? கொஞ்சம் பார்க்கலாம்!  முதலாமவர் வை.மு. கோதைநாயகி அம்மாள்! 1901-ஆம் ஆண்டு – பிறந்த போதே இவருக்குப் பெயர் வைத்தவர் இவரது மாமனார்!  ஆமாம் – மாமனாரே தான்!  கோதைநாயகி என்ற பெயர் வைத்து, பிறந்தபோதே அவரை தனது மருமகள் என்று சொல்லி விட்டவர்.  சொன்னது படியே தனது மகனுக்குத் திருமணம் செய்து வைத்தவர் அவரது மாமனார்.  முதலாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் சங்கீதத்தில் நல்ல ஈடுபாடு.  படிக்கத் தெரியவில்லை என்றாலும் கேள்வி ஞானத்திலேயே பாடல்களை பாடியவர்.  நல்ல சங்கீத வித்வானாக வருவார் என்று நினைத்தாலும் அவர் ஆனது எழுத்தாளராக.  கூடவே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றவர்.  தனது எழுத்தாலும், பாட்டாலும், மிகவும் பிரபலமானவர். ஜகன்மோகினி என்ற பத்திரிக்கையை வெற்றிகரமாக நடத்தியவர்.  பாரதியார் எழுதிய பாடல்களை, அவருக்கே பாடிக் காண்பித்தவர். சுதந்திரப் போராட்டத்தில் அவர் சந்தித்த இன்னல்கள், எழுத்துத் துறையில் சந்தித்த எதிர்ப்புகள், என பல விஷயங்களை இந்த நூல் வழி நாம் தெரிந்து கொள்ள முடியும். மிகச் சிறந்த பத்திரிகை ஆசிரியர், நாவலாசிரியர் என பல பெருமைகளைக் கொண்டிருந்த வை.மு. கோதைநாயகி அம்மாளின் கதையை இந்த “இருவர்” என்ற மின்னூல் வழி நமக்குச் சொல்கிறார் கதாசிரியர். 


இருவரில் இரண்டாவதாக வருபவர் யாரென்பதையும் பார்த்துவிடலாம் வாருங்கள்.   இரண்டாமவர் யாரென்று தெரியுமா? அவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள். ”பெண் குழந்தைக்கு எழுதப் படிக்கத் தெரியணும். பால் கணக்கு, லாண்டிரிக் கணக்கு இதையெல்லாம் போடற அளவுக்குப் படிப்பு இருந்தால் போதும். அதுக்கப்புறம் நிறுத்திடலாம்” இவை தான் முத்துலெட்சுமி ரெட்டி அவர்களைப் பள்ளியில் சேர்க்கும் போது அவர் அப்பா கூறிய வார்த்தைகள்.  படிப்பில் நல்ல ஆர்வம் இருந்தாலும் அவர் படிப்பதற்கு இருந்த தடைகளுக்கு இந்த வார்த்தைகளே உதாரணம். ”பெரிய பெண்”ணானதும் பள்ளிக்குச் சென்று படிக்க முடியாமல் தடை! வீட்டிலிருந்தபடியே படிப்பைத் தொடர்ந்து கடினமான மெட்ரிகுலேஷன் பரீட்சை எழுதி தேர்ச்சி பெற்றார் (எழுதியது 100 பேர், அதில் தேர்ச்சியானவர்கள் 10 பேர் மட்டுமே! அத்தனை கடினமாக இருக்குமாம்!) தொடர்ந்து மருத்துவம் படித்தபோது கிடைத்த அனுபவங்களைப் படிக்கும்போது எத்தனை இன்னல்களை அவர் அடைந்திருக்கிறார் என்பது தெரிந்தது – உதாரணத்திற்கு ஒரு விஷயம் பார்க்கலாம்!


“சென்னை மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்து விட்டதே தவிர, அங்கே படிப்பது அத்தனை எளிதாக அமைந்துவிடவில்லை  நமது முத்துலெட்சுமிக்கு. அங்கே பேராசிரியராக இருந்த கர்னல் ஜிப்போர்ட், தான் நடத்தும் வகுப்புகளில் மாணவிகளை வகுப்பிற்குள்ளும் அனுமதித்ததில்லை, உட்காரவும் அனுமதித்ததில்லை. வகுப்பின் வாசலிலிருந்தே கவனித்து நின்றபடியே தான் குறிப்பெழுதிக் கொள்ள வேண்டும்!”  என்னவொரு வில்லத்தனம் இந்த கர்னல் ஜிப்போர்ட்-க்கு!  அவரையும் “அறுவை சிகிச்சை” பாடத்தில் முழு மதிப்பெண்களைப் பெற்று மனம் மாற்றக் கொள்ளச் செய்தார் முத்துலட்சுமி.  1912-இல் மருத்துவப் பட்டம் பெற்றுத் தேறினார்.  ஒரு இந்தியப் பெண் மருத்துவத்தில் பட்டம் பெறுவது என்பது அது தான் முதல்முறை! இப்படி மருத்துவரான முத்துலட்சுமி மருத்துவத்தில் சாதித்தது ஏராளம். 


வாழ்க்கையில் பல இன்னல்களைக் கடந்து, பொது வாழ்க்கையில் ஈடுபட்டதோடு, மேல் சபை உறுப்பினராகவும் ஆனார்.  அவரால் எடுத்துக் கொள்ளப்பட்ட முக்கிய விஷயங்களில் ஒன்று தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம். அவரது பெரு முயற்சியால் மட்டுமே இந்தச் சட்டம் அமலானது! அப்படி இருந்த பெண்களைக் காப்பாற்றி “அவ்வை இல்லம்” என்ற சேவை இல்லத்தினைத் துவங்கி அங்கேயே தங்க வைத்து, பாதுகாப்பையும் வேலை வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்தார் என்பதையும் பார்க்கும்போது எத்தனை சிறப்பான விஷயத்தினை அவர் செய்திருக்கிறார் என்பது புரியும். 


இந்த ”இருவர்” மின்னூல் வழி நண்பர் பால கணேஷ் அவர்கள் சிறப்பான இரண்டு பெண்மணிகளின் வாழ்க்கை வரலாற்றை நம்முடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.  நல்ல பல தகவல்களைத் தரும் இந்த மின்னூலை நீங்களும் வாசித்துப் பார்க்கலாமே!


இந்த மின்னூல் அமேசான் தளத்தில் கிண்டில் வெளியீடாக வெளியிட்டு இருக்கிறார். மின்னூலின் விலை ரூபாய் 50/- மட்டும்.  Amazon Kindle Unlimited கணக்கு வைத்திருப்பவர்கள் அவர்களது மாதாந்திரக் கட்டணத்திலேயே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.  மின்னூலை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய சுட்டி கீழே....


இருவர்


பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை, பின்னூட்டம் வழி பகிர்ந்து கொள்ளுங்கள்.   மீண்டும் வேறு ஒரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி.

24 கருத்துகள்:

  1. பால கணேஷ் ஒரு தகவல் சுரங்கம்.  சிறந்த நகைச்சுவை எழுத்துக்குச் சொந்தக்காரர்.  நல்ல நண்பர்.   அவருக்கு எங்கள் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல் சுரங்கம் - உண்மை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் சாதனைகள் என்றும் போற்றத்தக்கது...

    வலையுலக வாத்தியாருக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் சாதனைகள் - என்றென்றும் போற்றுதலுக்குரியவை தான் தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. வாத்தியாருக்கு வாழ்த்துகள்.
    அவரது நகைச்சுவை எழுத்து வலையுலகம் அறிந்ததே... பகிர்வுக்கும், சுட்டிக்கும் நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாத்தியாருக்கு வாழ்த்துகள் - நன்றி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. திரு பாலகணேஷ் அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்!

    கோதைநாயகி அம்மாளின் கதைகளை பதினைந்து வயதில் நூலகத்திலிருந்து எடுத்து நிறைய வாசித்திருக்கிறேன். டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டி பற்றிய தகவல்கள் ஏற்கனவே அறிந்தவை தான் என்றாலும் இரு உயர்ந்த பெண்மணிகளைப்பற்றி எழுதியதன் மூலம் அவர்களுக்கு மகுடம் சூட்டியிருக்கிறார் திரு பாலகணேஷ்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மகுடம் சூட்டியிருக்கிறார் திரு பாலகணேஷ்!” நன்றிம்மா..

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோம்மா...

      நீக்கு
  5. திரு பாலகணேஷ் அவர்களுக்கு வாழ்த்துகள்
    நூலினை தரவிறக்கம் செய்து வாசிக்கிறேன் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தரவிறக்கம் செய்து வாசிக்க இருப்பதில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. இருவரைப் பற்றியும் படித்துள்ளேன். அவர்களுக்குப் பெருமை சேர்க்கும் நூல். நூலாசிரியருக்கு பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  7. பால கணேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    நூலை சீக்கிரம் படிக்கிறேன் ஐய்யா.
    நூலை சிறப்பாக அறிமுகம் செய்த தங்களுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது படியுங்கள் அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. பதிவுலக ஜாம்பவானின் டிரங்பெட்டியின் தீவிர ரசிகர்களில் நானும் ஒருவன் எனச் சொல்லிக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்...பாலகணேசையும் அவரது நூலையும் அறிமுகம் செய்த விதம் அருமை...வாழ்த்துகளுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி.

      நீக்கு
  9. பால கணேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    இருவரும் மிக அருமையான பெண்மணிகள். சாதனை பெண்மணிகள்.
    கோதைநாயகி அம்மாளின் கதைகள் படித்து இருக்கிறேன் திருவெண்காட்டில் இருக்கும் போது.
    முத்துலெட்சுமி அம்மா அவர்களைப் பற்றி பள்ளி பாடத்தில் படித்து இருக்கிறோம்.
    நீங்கள் நன்றாக நூல் விமர்சனம் செய்து இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  10. டாக்டர் முத்துலட்சுமி அம்மா பற்றி படித்து வியந்தேன். இன்போஸிஸ் சுதாமூர்த்தியின் அனுபவங்களை படித்தது நினைவிற்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  11. நல்ல அறிமுகம். ஆனால் காலம் எல்லாவற்றையும் மறக்கடிக்கச் செய்துவிடுகிறது. அடையாரில், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பூங்கா (ஆவின் பாலகம் செயல்படும் இடம்) உண்டு. (இப்போ ரெட்டி மிஸ்ஸிங் என்று நினைவு). இந்த மாதிரி நூல்கள் மூலம் சாதனையாளர்களை நினைவில் வைக்க முயல்வது பாராட்டுக்குரியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நூல்கள் மூலம் சாதனையாளர்களை நினைவில் வைக்க முயல்வது பாராட்டுக்குரியது// உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுப்ரேம் ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....