இப்போது உங்களை எறும்பீஸ்வரர் திருக்கோவிலுக்கு அழைத்துச் செல்லப்
போகிறேன். திருச்சி – தஞ்சாவூர்
சாலையில் 11 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இக்கோவில் 1000-2000 வருடங்கள்
பழமையானது. இங்கே குடிகொண்டிருக்கும்
இறைவனை எறும்பீஸ்வரர், பிப்பிலிகேஸ்வரர் [பிப்பிலி என்றால் எறும்பு என
அர்த்தமாம்], மதுவனேஸ்வரர் போன்ற பெயர்களாலும் இறைவியை நறுங்குழல்நாயகி [மணமிக்க
கூந்தலுடையவள் என்ற பொருளில்], மதுவனேஸ்வரி, சௌந்தர நாயகி போன்ற பெயர்களாலும்
அழைக்கிறார்கள்.
கோவிலுக்கு எப்படிச் செல்வது? திருச்சி சத்திரம் மற்றும் மத்திய பேருந்து நிலையங்களிலிருந்து நிறைய
பேருந்துகள் இந்தக் கோவிலுக்குச் செல்கின்றன. பேருந்து நிலையத்தில் “பாய்லர், பாய்லர்” என்று அழைப்பதைப் பார்த்து,
குண்டாக இருக்கும் யாரையோ கிண்டல் செய்கிறார் என நினைத்து விட வேண்டாம். திருவெறும்பூரில் இருக்கும் பாய்லர் தொழிற்சாலையைத்
தான் அவர் சுருக்கிச் சொல்கிறார்! திருவெறும்பூர், பாய்லர் தொழிற்சாலை போன்ற இடங்களுக்குச் செல்லும்
பேருந்திலேறி “மேலக் கோவில் ஸ்டாப்” எனக் கேட்டு இறங்க வேண்டும்.
முதலில் நிறுத்தத்தின் பேர்
தெரியாமல் நான் “எறும்பீஸ்வரர் கோவில்” எனக் கேட்க, நடத்துனரும் மிகவும் தெரிந்த
மாதிரி மூன்று நிறுத்தங்களுக்கு முன்னாலேயே இறக்கி விட்டுவிட்டார்! அங்கிருந்து
சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் இருக்கிறது நான் இறங்க வேண்டிய மேலக் கோவில் ஸ்டாப்! ஒரு கடையில் வழி கேட்ட போது, அந்த கடை
நடத்துபவருக்கும் எறும்பீஸ்வரரை தெரியவில்லை பாவம்! அங்கே நின்றுகொண்டிருந்த ஒருவர் தான், “அட நம்ம மேலக்கோவில் தாம்பா அது!”
எனச் சொன்னதுடன் நில்லாமல் அவரது காரிலேயே எங்களை
ஏற்றிக் கொண்டு மலையடிவாரத்தில் விட்டார். அவருக்கு நன்றியைச் சொல்லி அர்ச்சனை தட்டு வாங்கிக் கொண்டு நகர்ந்தோம்.
எறும்பீஸ்வரர்-நறுங்குழல்நாயகி உறையும் இக்கோவில் ஒரு சிறிய குன்றின் மீது
அமைந்திருக்கிறது. சுமார் 125 படிகள் ஏறி
சிறப்பு வாய்ந்த கோவிலுக்குச் சென்றால், இறைவனையும் இறைவியையும் கண்ணாரக் கண்டு
ரசிக்க முடியும். கோவிலின் உள்ளே செல்லுமுன்
தலவரலாற்றினைப் பார்ப்போமா!
தலவரலாறு: தாரகாசுரன் என்ற அரக்கன் தேவர்களை மிகவும்
துன்பப்படுத்த, அவர்களும், நாரதரிடம் சென்று அரக்கனின் கொடுமைகளில் இருந்து மீள
வழி சொல்லும்படி வேண்டினர். நாரதர் இத்தலத்திற்குச் சென்று சுயம்பு லிங்கமாக
எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கு மலர் சாற்றி வழிபட்டு அவரிடம் முறையிடும்படி
ஆலோசனை கூறவே, தேவர்களும் அசுரன் கண்ணில் படாமல் இருக்க எறும்பு உருவமெடுத்து
இறைவனை வழிபட வந்தனர். லிங்கத் திருமேனி மிகவும் வழுவழுவென இருந்ததால் எறும்பு
உருவில் இருந்த தேவர்கள் அதன் மீதேறி மலர் சாற்றி வழிபட மிகவும் சிரமப்பட்டனர்.
இறைவன் அவர்கள் சிரமத்தைப் பார்த்து தனது லிங்க உருவை சற்றே சாய்வான எறும்புப்
புற்றாக மாற்றிக் கொண்டார். தேவர்கள் பூஜித்த பிறகு, தாரகாசுரனை அழித்து
தேவர்களைக் காத்ததோடு எறும்பீஸ்வரர் என்றும் பெயர் பெற்றாராம்.
முற்றிலும் கற்களால் கட்டப்பட்டுள்ள
இக் கோவிலின் நுழைவு வாயில் வடக்கு திசையில் உள்ளது. இரண்டு பிரகாரங்கள் உள்ளன.
கருவறை நுழை வாயிலின் இருபுறமும் விநாயகர், முருகன் ஆகியோரின் உருவச் சிலைகள்
உள்ளன. கருவறை உள்ளே மூலவர் எறும்பீஸ்வரர் கிழக்கு நோக்கி காணப்படுகிறார். இறைவி
நறுங்குழல் நாயகியின் சந்நிதி வெளிப் பிரகாரத்தில் தெற்கு நோக்கி உள்ளது.
உட்பிரகாரத்தில் சோமச்கந்தர், முருகன், கஜலக்ஷ்மி, காசி விஸ்வநாதர், லக்ஷ்மி,
பைரவர் ஆகியோரின் உருவச் சிலைகள் காணப்படுகின்றன.
தலத்தின் சில சிறப்புகள்:
பிரம்மா, இந்திரன், அக்னிதேவன், முருகர், அகத்திய முனிவர், நைமிச முனிவர் ஆகியோர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர்.
இங்கிருக்கும் நவக்கிரக சந்நிதியில் சூரியன் தனது மனைவியர்களான உஷா, பிரதியுஷா இருவரும் ஒருவரையொருவர் நேருக்குநேர் பார்த்தபடி இருக்கின்றனர்.சிவன் கருவறைக்கு முன்புள்ள துவாரபாலகர்களில் ஒருவர் கோப முகத்துடனும், மற்றொருவர் சாந்த முகத்துடனும் இருக்கின்றனர். கோவிலுக்கு வரும்போது மனதில் கோபம், ஆணவம் போன்ற குணங்களைக் கொண்டிருந்தாலும் சுவாமியை வணங்கிய பின்பு அவர்கள் சாந்த கோலத்தை அடைவார்கள் என்று காட்டவே இப்படி அமைத்திருக்கிறார்கள் அக்காலத்தில் என்கின்றனர்.தினமும் சுவாமிக்கு பூஜைகள் நடக்கும்போது கருவறையில் எறும்புகள் வரிசையாக ஊர்ந்து சென்று, நைவேத்தியப் பொருட்களை எடுத்துக்கொள்ளும் என்கிறார்கள்.
கி. பி. 1752-ல் ஆங்கிலேயாக்கும் பிரெஞ்சுக்காரர்க்கும் நடந்த போரின்போது இவ்விடம் போர் வீரர்கள் தங்கும் ராணுவத் தளமாக விளங்கியது எனச் சொல்வது, இங்கிருந்த பாழடைந்து கிடக்கும் தூண்களைப் பார்க்கும் போது உண்மையென்றே தோன்றியது.பிரகாரத்தில் உக்கிரமாக இருக்கும் சொர்ணகால பைரவரையும் நேரெதிரே தனிச்சன்னதியில் இருக்கும் கஜலட்சுமியையும் ஒரேசமயத்தில் வேண்டிக்கொண்டால் பயங்கள் நீங்கி, குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.லிங்கம் இடப்புறத்தில் சாய்ந்தபடி இருக்க, மத்தியில் ஒரு பிளவு இருப்பதால் பார்வைக்கு லிங்கம் இரண்டு பகுதிகளாக பிரிந்திருப்பது போல இருக்கிறது. இதில் வலப்புறம் உள்ள பகுதியை சிவன் அம்சம் என்றும், இடப்புறத்தை அம்பாள் அம்சம் என்றும் சொல்கின்றனர். இந்த லிங்கத்திற்கு "சிவசக்தி லிங்கம்' என்ற பெயரும் உண்டு. சிவனில்லாது சக்தியில்லை, சக்தியில்லாது சிவனில்லை என்பதை உணர்த்தும் விதமாகத் தோன்றியது.
நாங்கள் சென்ற போது உட்பிரகாரத்தில் சிவன் நர்த்தனமாடும் உருவத்தினை வண்ண
வண்ண கோலப் பொடி கொண்டு அழகாய் வரைந்து வைத்திருந்தது. அங்கிருந்த பூஜை செய்பவரிடம் ஓவியத்தின் அழகில் மயங்கி புகைப்படம்
எடுத்துக் கொள்ளவா எனக் கேட்டபோது, “யார் வரைந்தது?” எனவும் கேட்டேன். முதல் நாள் ஒரு பெண் வந்து சுமார் ஆறு மணி நேரம்
செலவழித்து இந்த ஓவியத்தினை வரைந்தார் எனச் சொன்னார். அழகாய் படம் வரைந்த அந்த ஊர்-பேர் தெரியாத அப்பெண்ணுக்குப் பாராட்டுகள்!
ஓவியத்தினை ரசித்து நறுங்குழல் நாயகியையும் வலம் வந்து கோவில் வெளிப்
பிரகாரத்தினைச் சுற்றி வந்தோம். நிறைய இடிபாடுகளைக் காண
முடிந்தது. அமைதியான சூழலில் இருக்கும்
இக்கோவிலில் சில மணித்துளிகள் இருந்து விட்டு இறங்க மனமில்லாதே கீழே இறங்கினோம்.
கோவிலின் திருக்குளம் எல்லா குளங்களைப் போலவே பச்சை
நிறத்தில் பல வித பிளாஸ்டிக் கழிவுகளோடு காட்சியளித்தது.
திவ்யமான தரிசனம் கண்டு மன அமைதியுடன் திரும்பி வந்தோம். திருச்சி சென்றால் காண வேண்டிய கோவில்களில் இதனையும்
சேர்த்துக் கொள்ளுங்கள். கோவிலுக்குச் சென்று
சிவ-சக்தியின் அருளைப் பெருவீர்களாக!
மீண்டும் சந்திப்போம்.
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
அந்த வழியாக சென்ற பொழுது கோவிலை பார்த்திருக்கிறேன்.. கோவிலுக்குள் சென்றது இல்லை
பதிலளிநீக்குஅடுத்த முறை அவ்வழியே சென்றால் கோவிலுக்கும் சென்று வாருங்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கார்த்திக்.
ஆஹா...... அட்டகாசமான பதிவு!
பதிலளிநீக்குநறுங்குழல் நாயகி....... ஹைய்யோ!!!!!
இனிய பாராட்டுகள்.
நறுங்குழல் நாயகி - பெயரிலேயே எவ்வளவு இனிமை இல்லையா டீச்சர்!
நீக்குதங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.
இந்தக் கோவிலிலே இவ்வளவு விஷயம் இருக்குன்னு தெரிஞ்சிருந்தா ஒரு நடை இறங்கிப் பார்த்துட்டுப் போயிருப்பேனே. தஞ்சாவூர்ல மூணு வருஷம் வேலை பார்த்தபோது எத்தனை தடவை இந்த ரோட்டில் போயிருப்பேன். கோவில் சுவற்றைப் பார்த்ததோட சரி.
பதிலளிநீக்குநானும் பலமுறை திருச்சி வந்திருந்தாலும் இக்கோவிலுக்கு ஏனோ போனதில்லை. இம்முறை தான் போக முடிந்தது. அடுத்த முறை இந்தப் பக்கம் சென்றால் கோவிலுக்கும் சென்று வாருங்களேன்...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி.கந்தசாமி ஐயா.
எறும்பீஸ்வரர கோவிலைப் பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தைத தூண்டிவிட்டது தங்களின் பகிர்வு. நன்றியும் பாராட்டுக்களும்.
பதிலளிநீக்குதங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி ருக்மணிம்மா....
நீக்குArumaiyaaga irukkiradhu
பதிலளிநீக்குதங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பிரபாகரன்.
நீக்குஒரு திருத்தம்... அந்த பேருந்து நிறுத்தத்திற்கு பெயர் 'மலைக்கோவில்'. திருச்சியிலேயே இருந்தாலும் நானும் அதனுள்ளே சென்றது இல்லை.
பதிலளிநீக்குமலைக்கோவில்... நன்றி குமார். பேச்சு வழக்கில் மேலக்கோவில் என்று சொன்னதையே நான் எழுதினேன்...
நீக்குவருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிடா குமார்.
தல வரலாறு சுவாரஸ்யம். /நறுங்குழல் நாயகி/ என்ன அழகான பெயர்.
பதிலளிநீக்குபடங்கள் அருமை.
அமைதியான சூழலில் நல்ல தரிசனம்.
பகிர்வுக்கு நன்றி.
திவ்யமான தரிசனம்
நீக்குஇதுவரை இந்த தலத்திற்கு சென்றதில்லை... படங்கள் அருமை... தலத்தின் சிறப்புகளை தந்தமைக்கு நன்றி சார் !
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்...வாழ்த்துக்கள்...(த.ம. 3)
தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்.
நீக்குஅட ! திருச்சி மலை கோவிலா? இங்கு சென்றிருக்கிறேன். கல்லூரி நண்பர்களுடன் இங்கு எடுத்த படம் இன்னும் உள்ளது. இதன் பெயர் மருந்தீஸ்வரர் கோவில் என்பது தான் நினைவில்லை நாங்கள் மலை கோவில் என்றே சொல்லுவோம்
பதிலளிநீக்குநிற்க சென்னை திருவான்மியூரிலும் ஒரு மருந்தீஸ்வரர் கோவில் உள்ளது.
ஓ... கல்லூரி காலத்தில் நீங்கள் சென்ற கோவிலா?
நீக்குதிருச்சி மருந்தீஸ்வரர் கோவில் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்.
“எறும்பீஸ்வரர் கோவில்”
பதிலளிநீக்குசிறு வயதில் பார்த்தது. இப்போது திருச்சிக்கு அடிக்கடி சென்றாலும் பார்க்க முடிவது இல்லை. மறுபடியும் பார்க்கும் ஆவலை உங்கள் பதிவு ஏற்படுத்திவிட்டது.
சின்ன வயதில் பார்த்ததை விட இப்போது பார்க்கும்போது உள்ள மாறுதல்கள் உங்களுக்குப் புரியும் இல்லையா... முடிந்தபோது சென்று வாருங்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
இது பற்றி கேள்விப்பட்டதே இல்லே இப்ப தெரிந்து கொண்டேன் பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குதங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.
நீக்குநல்லதொரு ஆன்மீக பயணப் பகிர்வு. வாழ்க.
பதிலளிநீக்கு//பேருந்து நிலையத்தில் “பாய்லர், பாய்லர்” என்று அழைப்பதைப் பார்த்து, குண்டாக இருக்கும் யாரையோ கிண்டல் செய்கிறார் என நினைத்து விட வேண்டாம்.//
குண்டாக இருப்பவர்கள் அப்படி நினைத்து விட்டால் கொதித்துப் போய்விட மாட்டார்களா?
//குண்டாக இருப்பவர்கள் அப்படி நினைத்து விட்டால் கொதித்துப் போய்விட மாட்டார்களா?//
நீக்குகொதித்து எழுந்தால் அவ்வளவு தான்... :)
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்].
ஒரு முறை விசிட்டில் எத்தனை ஆலயங்கள் சென்று வந்திருக்கிறீர்கள். அவற்றை நாங்களும் ரசிக்கும் வண்ணம் படங்களுடனும் பகிர்வது மேலும் சிறப்பு. அம்பிகையின் நறுங்குழல் நாயகி என்ற பெயரும், ஆலயத்தின் தல வரலாறும்... (அந்தத் ‘தல’யச் சொல்லீங்க... ஸ்தல) மனம் கவர்ந்தன. இறுதியில் குளத்தின் நிலையை போகிற போக்கில் நீங்கள் சொல்லிப் போனது மனதில் உறுத்தியது. நேரில் பார்த்த எஃபெக்ட் குடுத்துட்டீங்க வெங்கட்!
பதிலளிநீக்கு//அம்பிகையின் நறுங்குழல் நாயகி என்ற பெயரும், ஆலயத்தின் தல வரலாறும்... (அந்தத் ‘தல’யச் சொல்லீங்க... ஸ்தல) மனம் கவர்ந்தன. //
நீக்குதல... :)
தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி கணேஷ்....
அற்புதமான ஒரு தலம் பற்றி சுவாரசியமான தகவல்களை அள்ளி வழங்கியவருக்கு ஒரு நன்றி.
பதிலளிநீக்குதங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கே.பி.ஜே. சார்.
நீக்குஅன்பு நண்பரே
பதிலளிநீக்குசொந்த ஊர் கும்பகோணம் ஆகையால் பல முறை இந்த ஏறும்பீசர் கோவிலை பஸ்சில் கடந்தது உண்டு. ஆனால் தங்களின் வலையை படித்த பின் அந்த கோவிலை நேரில் சென்று பார்க்க தோன்றுகிறது. எனினும் தங்களின் பகிர்வுக்கு நன்றி.
விஜயராகவன்
உங்கள் கும்பகோணத்தில் நிறைய கோவில்கள் உண்டே. கும்பகோணத்தில் சில நாட்கள் தங்கி நிறைய கோவில்கள், புராதனமான இடங்களைப் பார்க்க ஆசை. ஆனால் எப்போது ஈடேறுமோ தெரியவில்லை!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!
நல்லத் தகவல். நன்றிகள்
பதிலளிநீக்கு//பிப்பிலி என்றால் எறும்பு//
வடமொழியில் பிபீலிகா (पिपीलिका) என்றால் எறும்பு. அதனால் தான் பிபீலிகேஸ்வரர் (பிப்பிலீஸ்வரர் அல்ல)
தல நாயகியின் பெயர் மதுவனேஸ்வரி;
அதுசரி மதுவனத்தை நாடித்தானே எறும்பு வரும். இங்கு பக்தர்கள் (எறும்புகள்) நாடும் ஈசனின் நாயகி என்பதால் இந்தப் பெயரோ?
//அதுசரி மதுவனத்தை நாடித்தானே எறும்பு வரும். இங்கு பக்தர்கள் (எறும்புகள்) நாடும் ஈசனின் நாயகி என்பதால் இந்தப் பெயரோ?//
நீக்குநல்ல தகவல்கள்....
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிடா சீனு [வெங்கட ஸ்ரீனிவாசன்].
படங்களும் பதிவும் கோவிலுக்கு அழைத்துசெல்கிறது மனதை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி சசிகலா.
நீக்கு// நில்லாமல் அவரது காரிலேயே// நல்லவர்கள் நல்லவர்களை இனம் காணுவார்கள் என்பது உண்மை தான் சார் .
பதிலளிநீக்குகோவிலின் நிலைமையைப் பார்க்கும் பொது பரிதாபமாக இருக்கிறது. சிரத்தை எடுத்து வரைந்த அந்த ஓவியம் அழகு. பதிவு அருமை
//கோவிலின் நிலைமையைப் பார்க்கும் பொது பரிதாபமாக இருக்கிறது. சிரத்தை எடுத்து வரைந்த அந்த ஓவியம் அழகு. பதிவு அருமை//
நீக்குபரிதாபமான நிலை தான்.
தங்களது வருகைக்கும் இனிய கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.
அருமையான தகவலுடன் படங்களும் அருமை.!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வரலாற்று சுவடுகள்.
நீக்குஎறும்பீஸ்வரர் வரலாறு அறிந்து மகிழ்ச்சி. மிக்க நன்றி. ஒரு கோவிலுக்குச் சென்று வந்த உணர்வு. சமயத்தில் இதுவும் ஒரு புண்ணியம் அன்றோ!
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com
தங்களது வருகைக்கும் இனிய கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் ஜி!
நீக்குவணக்கம் வெங்கட்ஜி. அந்த பேருந்து நிறுத்தத்தின் பெயர் ”திருவெறும்பூர் மலைக்கோவில் ஸ்டாப்” என்பது தான் சர்யானது.
பதிலளிநீக்குநானும் இந்த மலைக்கோயிலுக்கு 2-3 தடவைகள் நேரில் சென்று வந்துள்ளேன்.
ஆனால் 1970-1981, 1999-2009, சுமார் 20 வருடங்களுக்கு மேல் தினமும் காலையும் மாலையும் பஸ்ஸில் அலுவலகம் செல்லும் போதும், வீடு திரும்பும் போதும், இந்த மலையைப்பார்த்து ரஸித்து, ஹர ஹர சிவ சிவ என கன்னத்தில் போட்டுகொண்டது உண்டு.
இந்தக்கோயில் பற்றிய மகிழ்ச்சியான பகிர்வுக்கு மிக்க நன்றிகள். vgk
இந்தக் கோவில் வழியாகத் தான் நீங்கள், ரிஷபன் ஜி, ஆர்.ஆர்.ஆர். மூவரும் வந்து செல்வது வழக்கமென நினைத்தபடியே தான் மலையேறினேன்.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ.ஜி.
//ஆறு மணி நேரம் செலவழித்து இந்த ஓவியத்தினை வரைந்தார் எனச் சொன்னார். அழகாய் படம் வரைந்த அந்த ஊர்-பேர் தெரியாத அப்பெண்ணுக்குப் பாராட்டுகள்!//
பதிலளிநீக்குஅந்தப்பெண்மணிக்கு என் மனமார்ந்த இனிய அன்பான பாராட்டுக்களும்.
நிச்சயம் பாராட்டவேண்டும் அப்பெண்மணியை....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ.ஜி.
//பேருந்து நிலையத்தில் “பாய்லர், பாய்லர்” என்று அழைப்பதைப் பார்த்து, குண்டாக இருக்கும் யாரையோ கிண்டல் செய்கிறார் என நினைத்து விட வேண்டாம். திருவெறும்பூரில் இருக்கும் பாய்லர் தொழிற்சாலையைத் தான் அவர் சுருக்கிச் சொல்கிறார்! //
பதிலளிநீக்குநல்ல நகைச்சுவை தான்! நான் தினமும் அடிக்கடி அனுபவித்தது. ;)))))
//நல்ல நகைச்சுவை தான்! நான் தினமும் அடிக்கடி அனுபவித்தது. ;)))))//
நீக்குரசித்தேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!
//இறைவியை நறுங்குழல்நாயகி [மணமிக்க கூந்தலுடையவள் என்ற பொருளில்], மதுவனேஸ்வரி, சௌந்தர நாயகி போன்ற பெயர்களாலும் அழைக்கிறார்கள். //
பதிலளிநீக்குமிகவும் செளந்தர்யமான அழகான் பெயர்கள் அல்லவா? மகிழ்ச்சி. ;)))))
அழகான பெயர்கள் தான். படிக்கும்போதே மனதில் இன்பமல்லவா....
நீக்குதங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி.
திருச்சி ஜில்லாக்காரன் என்று பெருமையோடு சொல்லிக்கொள்ளும் எனக்கு இந்தக் கோவில் பற்றி இதுவரை தெரியாது. 'பாய்லர்' தொழிற்சாலை உள்ள திருவெறும்பூர் அப்பெயர் பெற்றது இக்கோவிலால் தானோ?
பதிலளிநீக்கு//திருவெறும்பூர் அப்பெயர் பெற்றது இக்கோவிலால் தானோ?//
நீக்குஉண்மை சூரி... இங்கிருக்கும் சிவன் பெயராலேயே திருவெறும்பூர் என்ற பெயர் ஏற்பட்டது.
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சூரி [Sunnyside]
நறுங்குழல் நாயகி பெயர் என்னையும் மிகக் கவர்ந்தது. சந்தர்ப்பம் கிடைக்கும்போது பார்க்க வேண்டும்.
பதிலளிநீக்குமுடிந்த போது பாருங்கள் ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் இனிய கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
தல வரலாறு அருமை... தஞ்சை சென்று வந்த உணர்வு...
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சங்கவி. இக்கோவில் தஞ்சையில் அல்ல, திருச்சியிலேயே இருக்கிறது.
நீக்குபுதிய அறிமுகம் வெங்கட்ஜி... தொடருங்கள்...
பதிலளிநீக்குவருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ரெவெரி.
நீக்குஎறும்பீஸ்வரர் கோவில் தரிசனம் அருமை.
பதிலளிநீக்குசிவ நர்த்தன ஓவியம் மிக அழகு.
தங்கலது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!
நீக்குதிருச்சி திருவெறும்பூர் மலைக்கோவில் பற்றிய பதிவும் படங்களும் சிறப்பாக இருந்தன. ஊர் திருச்சி என்பதால், நான் ஏற்கனவே அங்கு சென்று இருக்கிறேன். மறுபடியும் சென்று அதைப் பற்றிய பதிவு ஒன்றை போட வேண்டும் என்ற எண்ணத்தை தங்கள் பதிவு தந்துள்ளது. நன்றி!
பதிலளிநீக்குதங்களது முதல் வருகையோ...?
நீக்குஉங்களது ஊரும் திருச்சியா? மிக்க மகிழ்ச்சி நண்பரே.
நீங்களும் சென்று உங்கள் பக்கத்தில் எழுதுங்கள்.....
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
ஏற்கனவே ஒருமுறை உங்கள் பதிவிற்கு ( எலிகளைப் பற்றிய பதிவு என்று நினைக்கிறேன் ) வந்து கருத்துரை பகுதியில் கருத்தினை தெரிவித்துள்ளேன்.
நீக்குஓ முன்பே வந்திருப்பதறிந்து மகிழ்ச்சி. தொடர்ந்து வாருங்கள் நண்பரே.
நீக்குஎறும்பீஸ்வரர்!புதிய தகவல்.சிறப்பான பகிர்வு
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஜி!
நீக்குஎங்கள் ஊர் மலைக்கோவில் பற்றிய விளக்கம் அருமை !!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் பதிவினை ரசித்து கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி ஆர்.ஆர்.ஆர்.
நீக்குvenkat,
பதிலளிநீக்குRomba nalla irukku Ungal AAnmega katurai. Thodaratum Ungal AAnmega Payanam
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராஜு.
நீக்குஎறும்பீஸ்வரர் கோவில் தர்சனம் கிடைக்கப்பெற்றோம்.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்குஇது எறும்பீஸ்வரர் (எறும்பு+ஈஸ்வரர்) அல்ல. எறும்பியூர் ஈசர். எறும்பி என்றால் யானை. அந்தக் காலத்தில் யானைகள் நிறைந்திருந்த பகுதியாக இது இருந்திருக்கலாம். அதனால் திருவெறும்பியூர் என இந்த ஊர் இன்றும் அழைக்கப்படுகிறது. தேன் தமிழால் ஈசனைத் துதித்த திருநாவுக்கரசர் இதே எறும்பியூர் ஈசனைக் குறித்துப் பதிகம் பாடியிருக்கிறார். அதிலொன்று:
பதிலளிநீக்குவிரும்பி ஊறு விடேல், மட நெஞ்சமே!
கரும்பின் ஊறல்கண்டாய், கலந்தார்க்கு அவன்;---
இரும்பின் ஊறல் அறாதது ஓர் வெண்தலை
எறும்பியூர்மலையான், எங்கள் ஈசனே.
அன்றைக்கே எறும்பூர் என்று இருந்திருந்தால் அவர் எறும்பூர் என்றுதான் பாடியிருக்க வேண்டும். எழுத்துப் பிழையோடு பாடுபவரல்லர் நாவுக்கரசர். அவரே எறும்பியூர் என்று பாடுகிறார் என்றால் அதுதான் சரியான பெயராக இருக்கவேண்டும். ஊரின் பெயர்கள் காலப்போக்கில் ஒலிப்பு மாறுதல் இயல்பு. அதைப்போலவே எறும்பியூர் என்பது எறும்பூர் என்று திரிந்தது. பிறகு வழக்கம் போலவே நம்மவர்கள் எறும்பி என்பது யானை என்பதையும் மறந்து, எறும்பு என நினைத்து, கதை பல கற்பித்துவிட்டார்கள். எறும்பு என்ற தமிழையும் மாற்றி பிப்பிலி திப்பிலி என்றாக்கியது இன்னும் கொடுமையல்லவா! எனவே திருவெறும்பூர் என்பது தவறாகத் திரிக்கப்பட்டது. அதைப் போலவே எறும்பீசன் என்பதும், அதையே வடமொழியாக்கி பிப்பிலீஸ்வரர் என்பதும், எறும்பாக மாறினார்கள், எறும்பு வந்து சாப்பிடும் என்ற கதைகளைப் பரப்புவதும், நம்புவதும் நம் வரலாற்றை இழந்ததன் துர்ப்பலன். பாவம், நம் பிழையால் இறைவனின் வரலாற்றையே மாற்றிவிட்டோம். இனியேனும் சிந்திப்போமா? திருத்தலங்களின் பெயர்களையும் இறைவனின் பெயர்களையும் கொலை செய்யாமல் காப்போம்! நன்றி!
தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
நீக்குஅருமையானதொரு தலத்தினைப் பற்றிய பகிர்வு அருமை! நன்றி சகோ!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அட்சயா.
நீக்குஅடடா! மிகவும் அருமை! மலைக்கோவில் எனது பத்து வயதுக்குள்ளான நாட்களை நினைவு கூரச்செய்வது! மனதுக்கு மிகவும் இதம் தரும் ஒரு இடம்! கோவில், சிலைகள், கோலம், குளம் (அதுவும் தண்ணீருடன்) என படங்களும் ... அருமை! கோயிலுக்குள் இருக்கும்போது ஒரு பரபரப்பான சாலைக்கு அருகில் இருக்கிறோம் என்ற உணர்வே ஏற்படாது! ஒரு வருடத்திற்கு முன்பாக மீண்டும் அங்கே சென்றிருந்தேன்! நல்ல வைப்ரேஷன்! ரீசார்ஜ் செய்துகொண்ட உணர்வு ஏற்பட்டது!என் இதயத்திற்கு நெருக்கமான இடத்தைப் பற்றி எழுதியதற்கு - மிகவும் நன்றி! தொடருங்கள்! அன்புடன் எம்ஜிஆர்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரவிஜி ரவி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகோவிலைப் பற்றிய விபரங்கள் தெரிந்து கொண்டேன். நீங்கள் அழகாய் சொல்லிய விதம் நானும் கோவிலுக்கு உடன் சென்று சிவ தரிசனம் செய்த திருப்தியை தந்தது.
சிவபெருமானை ஓவியமாக கோலமிட்ட அந்தப் பெண்மணிக்கு என்னுடைய பாராட்டுக்களும்.கோலம்தான் எத்தனை அழகு.. பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
காலை வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குபதிவின் வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்தது என்று அறிந்து மகிழ்ச்சி.
கஷ்டப்பட்டு வரைந்த ஓவியம் ஆயிற்றே. அதனால்தான் அத்தனை அழகு.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஐயா சிவாயநமஹ அடியேன் கி ஜனார்த்தனன். அரக்கோணம். வேலை விடயமாக திருச்சி திருவெறும்பூரில் தங்கியுள்ளேன். இக்கோயிக்கு கடந்த 25 வருடங்கள் சென்று கொண்டு இருக்கிறேன் ஆனால் தங்கள் பதிவின் மூலமாக நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் நன்றிகள் பல ....
பதிலளிநீக்கு