வெள்ளி, 26 ஜூன், 2020

அமேசான் தளத்தில் மின்னூல்கள் வெளியிடுவது எப்படி…


அன்பின் இனிய நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதோர் வாசகத்துடன் துவங்கலாம்.


போதும் என்று நொந்து போய் புது வாழ்க்கையைத் தேடுகிறீர்களா? ஒரு புதிய புத்தகத்தை வாசிக்கத் தொடங்குங்கள் – இங்கர்சால்.

*****


அமேசான் தளத்தின் வழி மின்னூல்கள் தொடர்ந்து வெளியிட்டு வருவதை நீங்களும் அறிந்திருக்கலாம்.  முதலில் நண்பர் ஸ்ரீனிவாசன் அவர்களின் உதவியோடு அவரும் சில நண்பர்களும் சேர்ந்து நிர்வகிக்கும் தளமான www.freetamilebooks.com தளம் மூலம் சில மின்னூல்களை வெளியிட்டேன். www.pustaka.com தளம் வழியே ஒரே ஒரு மின்னூல் மட்டுமே வெளிவந்தது.  எனக்கு அந்தத் தளம் ஒத்துவரவில்லை.  சில மாதங்களாகத் தொடர்ந்து அமேசான் கிண்டில் பதிப்புகளாக www.kdp.amazon.com (Kindle Direct Publishing) தளம் வழியாக மின்னூல்களை வெளியிட்டு வருகிறேன்.  இதுவரை அமேசான் தளத்தில் வெளியான எனது மின்னூல்கள் 16 (ஏழு சகோதரிகள் நான்கு பாகங்களையும் தனித்தனியாகக் கணக்கில் எடுத்துக் கொண்டால்!). இன்னும் சில மின்னூல்களும் தொடர்ந்து வெளிவரலாம்! அமேசான் தளம் வழி மின்னூல் வெளியிட என்ன தேவை? பார்க்கலாம் வாருங்கள்.

 

கிண்டில் வழி வெளியிட என்ன தேவை?:  உங்களது ஆக்கங்களை மின்னூலாக வெளியிட முதல் தேவை நீங்கள் எழுதி இருக்க வேண்டும் – அதாவது Content!  அதனை Microsoft Word கோப்பாக சேமித்துக் கொள்ள வேண்டும்.  அப்படிச் செய்யும்  வேளையில் கவனம் தேவை – A4 அளவில் பக்கங்களை வடிவமைத்துக் கொள்வதும், தலைப்புகளைச் சரிவர அமைப்பதும், புத்தகத்தின் பகுதிகளைச் சரிவர அமைப்பதும் முக்கியம்.  சரி உங்களிடம் Content இருக்கிறது. அதற்கு அடுத்த தேவைகள் என்ன? பெரிதாக ஒன்றும் இல்லை.  வாருங்கள் பார்க்கலாம்.

 • அமேசான் தளத்தில் ஒரு கணக்கு தேவை.
 • கூடவே www.kdp.amazon.com தளத்தில் அந்தக் கணக்கைக் கொண்டு பதிவு செய்து கொள்ளுங்கள். முதல் முறை அங்கே சில தகவல்களை – உங்கள் வணிகக் கணக்கு எண், PAN உட்படத் தர வேண்டியிருக்கும். அதனைக் கவனமாகத் தரவேண்டும்.
 • KDP Select என்பதிலும் enroll செய்து விடுங்கள். அதன் மூலம் Kindle Unlimited கணக்கு இருப்பவர்கள் உங்கள் நூலைப் படிக்க முடியும்.
 • அதன் பிறகு நீங்கள் மின்னூல் வெளியிட தயாராக இருந்தால் ”Create a New Title” என்பதன் கீழே “+ Kindle ebook” என்பதைச் சொடுக்கினால் ஒவ்வொரு விஷயமாகக் கேட்பதைச் செய்ய வேண்டும்.  அதனைச் செய்கையில் கவனமாகச் செய்தல் அவசியம். அப்படித் தவறு செய்தாலும் அதைத் திருத்திக் கொள்ள முடியும் என்பதால் பயப்படத் தேவையில்லை.
 • நூல் பற்றிய குறியீடுகளை அதாவது Label கொடுக்கும்போது இணையத்தில் தேடினால் உங்கள் மின்னூல் வரும்படிக் கொடுப்பது அவசியமானது.  அதனைக் கருத்தில் கொண்டு Label கொடுப்பது அவசியம்.
 • மூன்று பக்கங்கள் இதில் உண்டு.  ஒவ்வொன்றாகச் செய்து முடித்து வெளியிட்டால் குறைந்தது 72 மணி நேரத்திற்குள் உங்கள் மின்னூல் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வந்துவிடும்.

கவனத்தில் கொள்ள வேண்டியது:  அட இவ்வளவு தானா? சுலபமாகத் தான் இருக்கிறது என்று நினைக்கலாம். ஆனால் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.  அவை என்ன என்பதையும் பார்க்கலாம்.

 • நீங்கள் உங்கள் நூலில் படங்களை இணைக்கலாம். ஆனால் அவை நீங்கள் எடுத்தவையாக, உங்களிடம் உரிமை இருப்பதாக இருக்க வேண்டும். பொது இடத்திலிருந்து – அதாவது கூகுள்/இணைய தளத்திலிருந்து எடுத்து கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது.
 • அதைப் போலவே நீங்கள் எழுதுவதும் வெளியிடங்களிலிருந்து எடுக்கப்பட்டவையாக இருக்கக் கூடாது.  உங்கள் எழுத்தாகவே இருக்க வேண்டும்.  Copy Right விஷயங்களில் கிண்டில் மிகவும் கண்டிப்பாகச் செயல்படும்.
 • விலை – கிண்டில் வழி வெளியிடும்போது நிச்சயம் விலையில்லாமல் வெளியிட முடியாது!  சில நாட்கள் இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை உங்களால் தரமுடியும் என்றாலும் நிரந்தரமாக இலவசமாக வெளியிடுவது இயலாது. 
 • உங்கள் கோப்பின் அளவைப் பொறுத்து குறைந்த பட்ச விலையை தளமே உங்களுக்கு நிர்ணயித்துக் கொடுக்கும். அதிகபட்ச விலையும் அப்படியே! குறைந்த அளவு விலையையே வைப்பது நல்லது.
 • உலகம் முழுவதும் இந்தியா, யு.எஸ். தவிர பதினொன்று நாடுகளில் உங்கள் புத்தகத்தினை தளம் வெளியிடும். அதற்கான விலைகள் வேறுபடும். 

உங்களுக்கு எவ்வளவு கிடைக்கும்? வைத்த விலை முழுவதும் உங்களுக்குக் கண்டிப்பாகக் கிடைக்காது என்பதை உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை.  35% மற்றும் 70% என இரண்டு Royalty உண்டு. அதனைத் தேர்ந்தெடுப்பது உங்கள் கையில்.  70% சதவீதம் எனத் தேர்ந்தெடுக்கும்போது அதற்கென சில விஷயங்களைத் தளமே முடிவு செய்யும் – குறிப்பாக விலை! உதாரணத்திற்கு உங்கள் புத்தகத்தின் விலை 70/- எனில் உங்களுக்குக் கிடைக்கும் Royalty – 35% சதவீதம் எனில் 21/- மட்டும்!  (70/- ரூபாயிலிருந்து வரிகளைக் கழித்துக் கொள்வார்கள்!)

விளம்பரம்:  சரி மின்னூலை வெளியிட்டு விட்டீர்கள்? அடுத்து அன்ன?  இதை விளம்பரப்படுத்துவது எப்படி?  வெளியிட்ட தகவலை உங்கள் முகநூல், வலைத்தளம், WhatsApp Status என அனைத்திலும் தெரிவிக்கலாம். உங்கள் மின்னூலை தரவிறக்கம் செய்யும் நண்பர்களை நூலுக்கான விமர்சனம் எழுதச் சொல்லி அதனையும் உங்கள் வலைப்பூவில்/சமூகத் தளங்களில் வெளியிடலாம்!  அமேசான் தளமும் அவ்வப்போது சில விளம்பரங்கள் செய்யும் – உங்கள் அனுமதியோடு.  அதனைத் தவிர விளம்பரம் செய்வது உங்கள் கையில்!  மனம் இருந்தால் மார்க்கமுண்டு! இந்த விளம்பர விஷயத்தில் நான் ரொம்பவே Weak! :) முகநூல், மற்றும் என் வலைத்தளத்தில் தகவல் தருவதோடு சரி.

எப்போது உங்களுடைய கணக்கில் பணம் வரும்?:

பொதுவாக ஒரு மாதத்தில் விற்கும் மின்னூல்களுக்கான ராயல்டி மற்றும் Kindle Unlimited வழி படிக்கப்பட்ட பக்கங்களுக்கான தொகை என்பது அந்த மாதம் முடிந்து 60 நாட்களின் முடிவில் உங்கள் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.  அதாவது ஜூன் மாதத்தில் உங்களுடைய நூல் விற்பனை/Kindle Unlimited வழி படிக்கப்பட்ட பக்கங்களுக்கான தொகை ஆகஸ்ட் மாத கடைசியில் தான் வரும்.  இதில் எந்த வித ஏமாற்றமும் இருக்காது என்று நம்பிக்கை கொள்ளுங்கள். 


தரவிறக்கம்/விற்பனை பற்றிய தகவல்கள்:


உங்கள் மின்னூல் எத்தனை பேரால் தரவிறக்கம் செய்யப்பட்டது, எத்தனை பேர் அந்த நூலை விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்கள், Kindle Unlimited கணக்கு வைத்திருப்பவர்கள் மூலம் எத்தனை பக்கங்கள் – Kindle Edition Normalized Pages (KENP) படித்திருக்கிறார்கள் என்ற தகவல்கள் அனைத்தையும் நீங்கள் கவனிக்க முடியும் – WWW.KDP.AMAZON.COM தளத்தில் நுழைந்து Reports என்ற பகுதியில் இந்தத் தகவல்களைப் பெற முடியும். 


முடிவாக, ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். பணம் சம்பாதிப்பது மட்டுமே மின்னூல்களை வெளியிடுவதற்கான காரணம் இல்லை.  நீங்கள் வெளியிட்டாலும் அதற்கான வரவேற்பைப் பொறுத்தே உங்களுக்கு பணம் வரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  ஆனாலும் பணம் சம்பாதிப்பதைத் தாண்டி, உங்கள் ஆக்கங்கள் இணையத்தில் கிடைக்கிறது என்பதே பெரிய சந்தோஷம் தானே…  இன்றைக்கு நீங்கள் ஆவணப்படுத்துவதை வரும் நாட்களில் – இணையம் உள்ளவரை யாரோ ஒருவர் தேடிப் படிக்க முடியும் என்பது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  கூடவே உங்கள் மின்னூல் வழி தரும் விஷயங்கள் உலகத்தில் யாரோ ஒருவருக்கு பயன்படப் போகிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.  உதாரணத்திற்கு எனது பயணக் கட்டுரைகளையே எடுத்துக் கொள்ளுங்கள் – நண்பர் ஒருவர் எனது பயணக் கட்டுரை படித்து நான் சென்ற இடத்திற்குச் சென்று வந்தார் – அப்போது அவருக்கு எனது மின்னூல்/பயணக் கட்டுரை பயன் தந்தது என்பதையும் எனக்குத் தெரிவித்தார்.  அது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. 


ஆதலினால் உங்கள் ஆக்கங்களைத் தயக்கமின்றி மின்னூலாக்க முயலுங்கள். இந்தப் பதிவின் வழி நான் சொன்ன விஷயங்கள் கொஞ்சமே. என்னைவிட முன்னோடிகள் இங்கே உண்டு. அவர்களும் மேலதிகத் தகவல்களை பின்னூட்டத்தில் இணைக்கலாம். முழுவதுமாக இங்கேயே பாடம் எடுக்க முடியாது அல்லவா? நீங்களாக இதைச் செய்யும்போது சில சந்தேகங்கள் வரலாம்! நிச்சயம் வரும்! அந்தச் சமயத்தில் உங்களுக்கு உதவி தேவை எனில் என்னை நிச்சயமாக தொடர்பு கொள்ளலாம்! என்னால் இயன்ற உதவியை நிச்சயம் செய்வேன்.  So!  Welcome to all friends who want to bring out e-books! 


கடைசியாக பதிவினை முடிப்பதற்கு முன்னர் இந்த வாரத்தில் வெளியான இரண்டு மின்னூல்கள் பற்றிய தகவலைச் சொல்லி முடிக்கிறேன். எனது இல்லத்தரசியின் இரண்டாவது மின்னூல் – “ஆதியின் அடுக்களையிலிருந்து” வெளியாகியிருக்கிறது இந்த வாரத்தில்… இன்று மதியம் 12 மணி வரை இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்! – அதற்கான சுட்டி கீழே…


ஆதியின்அடுக்களையிலிருந்து...


எனது மின்னூல் ஒன்றும் வெளியிட்டு இருக்கிறேன் இந்த வாரத்தில்.  ஜம்மு அருகே இருக்கும் மாதா வைஷ்ணோ தேவி கோவிலுக்குச் சென்ற போது கிடைத்த அனுபவங்கள் இந்த மின்னூல் வழி நீங்களும் படிக்கலாம்.  அதனைத் தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே….


ஜெய் மாதா (dh)தி!


இதுவரை வெளியான எனது மின்னூல்கள் அனைத்திற்குமான சுட்டி....


எனது மின்னூல்களின் பட்டியல்


இது வரை இந்த மின்னூல்களை வாசிக்காத நண்பர்கள் இருந்தால், தரவிறக்கம் செய்து வாசித்து உங்கள் மேலான கருத்துகளைச் சொல்லலாமே!


இந்தப் பதிவின் வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என நம்பிக்கை உண்டு.  மேலதிகத் தகவல்கள் வேண்டுமெனில் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.  உங்கள் சந்தேகங்களை முடிந்த அளவு தீர்த்து வைக்க முயல்வேன்! இணையத்திலும் நிறைய காணொளிகள் இருக்கின்றன.  அதையும் நீங்கள் பார்க்கலாம். பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பின்னூட்டம் வழி சொல்லுங்கள்! நாளை வேறொரு பதிவுடன் சந்திக்கும் வரை…


நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லி.

venkatnagaraj@gmail.com

44 கருத்துகள்:

 1. நல்ல நேரத்தில் வெளியிட்டிருக்கிறீர்கள்.  உபயோகமான குறிப்புகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறிப்புகள் சிலருக்கேனும் பயன்பட்டால் மகிழ்ச்சியே ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. இனிய் காலை வணக்கம் வெங்கட்ஜி.

  நல்ல தகவல்கள் ஜி. எளிமையாக உள்ளது புரிந்து கொண்டு படிபடியாகச் செய்ய.

  என்னிடம் அமேசான் தளத்தில் வெளியிடும் முறை பற்றிய தகவல்கள் நம்ம அனு ஃபோன்ல சொல்லி எழுதி வைத்திருக்கிறேன். ஒரு லிங்கும் அனுப்பியிருந்தாங்க. மகேஷ் எப்படிச் செய்ய வேண்டும் என்று கேட்டப்ப அறிந்து கொண்டது. ஒரு வருடம் ஆகிறது அறிந்து கொண்டு!!!!!!!!!

  நான் நேரடியாக ப்ளாகர் தளத்தில் எழுதுவதில்லை. எல்லாமே எம் எஸ் வேர்டில் தான் இருக்கின்றன. பெரும்பாலும் ப்ரின்ட் ஃபோர்மாட்டில்.

  இப்ப உங்கள் தகவல்கள் எளிமையாக இருக்கிறது வெங்கட்ஜி. மிக்க மிக்க நன்றி.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆதி வாவ்!!!!!! நீங்களும் அமேசானில் குதிச்சுட்டீங்க! மிக்க மகிழ்ச்சி ஆதி. இன்னும் நிறைய உங்கள் படைப்புகள் வெளிவர வேண்டும். மனமார்ந்த வாழ்த்துகள்!

   வெங்கட்ஜி உங்களுக்கும் வாழ்த்துகள்!

   கீதா

   நீக்கு
  2. இனிய காலை வணக்கம் கீதாஜி.

   தகவல்கள் சிலருக்கேனும் உதவினால் மகிழ்ச்சியே.

   சில வருடங்களுக்கு முன்னரே KDP-யில் இணைந்து தகவல்களும் சேமித்து வைத்தேன். ஆனால் கோப்புகளை இணைத்து வெளியிட நேரம் அமையவில்லை. இப்போது தான் வெளியிட ஆரம்பித்திருக்கிறேன்.

   எம்.எஸ். வேர்டில் சேமித்துக் கொள்வது எப்போதும் நல்லதே.

   தகவல்கள் பயன்படும் என்பதில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
  3. வாழ்த்தியமைக்கு நன்றி கீதாஜி. இல்லத்தரசியின் இன்னும் சில மின்னூல்கள் வெளிவரும்.

   நீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  நல்ல பதிவு. மின்னூல்கள் வெளியிடுவது எப்படியென விளக்கமாக, அதிலும் நன்கு புரிந்து கொள்ளும் விதத்தில் பகிர்ந்திருக்கிறீர்கள்.படித்து தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   பதிவின் வழி சொன்ன விஷயங்கள் சிலருக்கேனும் பயன்பட்டால் மகிழ்ச்சியே.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. நல்லதொரு பகிர்வு. அமேசான் தளத்தில் இணைவது? அதையும் சொல்லி இருக்கலாமோ? எதுக்கும் மறுபடி மத்தியானம் வந்து மறுபடி படிக்கிறேன். எனக்கு அமேசானில் இணைவது எப்படினு தெரியாமல் தான் விழிக்கிறேன். நீங்கள் அமேசான் தளத்தில் இணைந்தபின்னர் அந்தக் கணக்கை வைத்துக் கேடிபியில் இணைய வேண்டும் எனச் சொல்லி இருக்கிறீர்கள். அதான் புரியலை. என்னைப் போன்ற ம.ம.க்களுக்கு அவ்வளவு எளிதில் புரியாது! :))))))))சிரிக்க மாட்டீங்கனு நம்பிக்கைதான்! :))))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அமேசான் தளத்தில் கணக்கு துவங்குவது, G-mail கணக்கு துவங்குவது போலதான் கீதாம்மா.... WWW.AMAZON.COM தளத்தில் வலது பக்கம் மேலே - Sign in/Create your account என இருக்கும். அதில் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்து அமேசான் பக்கத்தில் கணக்கு துவங்கலாம்! சுலபமாகவே செய்து கொள்ளலாம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 5. அமேசான் தளத்தில் நான் வெளியிட்ட நூலைப் பற்றி உங்களுடன் பகிர்ந்தபோது பல விஷயங்களைத் தெரிந்துகொண்டேன். இது பலருக்கும் பயனுள்ள பதிவு. திரு திண்டுக்கல் தனபாலன் கூறுவதுபோல வலைப்பூவில் எழுதுவும் பதிவுகளுக்கு முறையாக அவ்வப்போது Labels கொடுக்க ஆரம்பித்துவிட்டாலே நமக்கு அடிப்படையாக ஒரு இலக்கு அமைந்துவிடும். மின்னூலை வெளியிட்டபின்னர்தான் நான் என் அனைத்துப்பதிவுகளிலும் உரிய Labelsகளை அமைத்தேன்.
  உங்களின் ஆர்வமும், பயணமும், கேமராவும் எங்களுக்கு அருமையான படைப்புகளைத் தருகின்றன. வாசித்து எழுதுவேன்.
  மென்மேலும் எழுத மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவுகளுக்கு Label கொடுப்பது நல்லதொரு வழி. பதிவுகளை இணைத்து மின்னூலாக்க உதவியாக இருக்கும்.

   முடிந்த போது நூல்களை வாசித்து உங்கள் கருத்துகளையும் எழுதுங்கள் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. கிண்டிலில் புத்தகம் வெளியிடுவதை பற்றி தேடிக் கொண்டிருந்தேன்.

  அழகாக எலிமையாக எழுதி புரியவைத்து விட்டீர்கள்.

  ப்லாக் எழுதும் அனைவருக்கும் பயன் தரும் தகவல்கள்

  நன்றி சா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தப் பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால் மகிழ்ச்சியே திருப்பதி மஹேஷ்.

   மின்னூலாக்கத்தில் உதவியோ சந்தேகமோ இருந்தால் கேளுங்கள். எனக்குட் தெரிந்ததை சொல்லித் தருவேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. அன்பு வெங்கட் மிகப் பயனுள்ள பதிவு. இதன் வழியே தர்முள்ள புத்தகங்கள் வெளி
  வேண்டும். உங்கள் பயணக்குறிப்புகள் விலை மதிப்பற்றவை.
  அதே போல் ஆதியின் சமையல் குறிப்புகளும் சுவையாக
  இருக்கும்.

  நீங்கள் சொல்வது சரியே.
  பணம் வருவது பிறகு. முதலில் நாம் சொல்ல வந்ததே எல்லோருக்கும் போய்ச் சேருவதே மகிழ்ச்சி.
  மிக நன்றி அன்பு வெங்கட்.
  செயல் படுகிறேனோ இல்லையோ.
  மீண்டும் படித்துப் புரிந்து கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வல்லிம்மா..... வணக்கம்.

   பதிவு சிலருக்கேனும் பயன்பட்டால் மகிழ்ச்சியே.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. ஏற்கனவே புஸ்தகா மின்னுலாக வெளியானதை அமேசானில் வெளியிடலாமா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புஸ்தகாவுடன் உங்களுக்கு ஒரு ஒப்பந்தம் இருக்கும் - அதனால் அமேசானில் நீங்களாகவே வெளியிட முடியாது. அது தவிர அமேசான் தளத்தில் அவர்களாகவே வெளியிட்டு இருப்பார்கள். புஸ்தகாவில் வெளியிட்ட உங்கள் புத்தகங்கள் ஏற்கனவே அமேசானில் இருக்கும். உங்களுடைய நான்கு மின்னூல்கள் - புஸ்தகா வெளியீடாக வந்த மின்னூல்கள் அமேசானில் ஏற்கனவே இருக்கிறது. கீழேயுள்ள சுட்டி வழி சென்று பாருங்கள்....

   https://www.amazon.in/Kindle-Store-G-M-Balasubramaniam/s?rh=n%3A1571277031%2Cp_27%3AG.M.+Balasubramaniam

   நீக்கு
  2. தகவலுக்கு நன்றி இந்தமின்னூல்கள் எத்தனை பேரால் படிக்கப்பட்டு இருக்கிறது என்று தெரியவேண்டுமே முடியுமா

   நீக்கு
  3. புஸ்தகா தளத்தில் உங்கள் கணக்குப் பக்கம் இருக்கும். அங்கே பார்த்து, தெரிந்து கொள்ளலாம். அமேசான் தளத்தில் நீங்கள் நேரடியாக வெளியிட்டால் மட்டுமே அந்தத் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்த எண்ணிக்கை, படித்த பக்கங்கள் எண்ணிக்கை (கிண்டில் அன்லிமிட்டட்) தெரிந்து கொள்ள முடியும்.

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 9. பலருக்கும் பயனுள்ள தகவல்கள் ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிலருக்கேனும் உதவினால் மகிழ்ச்சியே கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. பலருக்கும் பயன் தரும் அருமையான குறிப்புகள்... வாழ்த்துகள் ஜி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிலருக்கேனும் இக்குறிப்புகள் உதவினால் மகிழ்ச்சியே தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. கிண்டில் மூலம் வெளியிட்டால் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்று அறிந்துகொள்ள எல்லாரும் ஆவலாக இருப்பது சரியே. என்னுடைய அனுபவத்தைச் சொல்லட்டுமா? (ஆனால் இதை நீங்கள் இரகசியமாக வைத்துக்கொள்ளவேண்டும், சரியா?)

  1. புஸ்தகாவில் என்னுடைய ஆறு புத்தகங்கள் வெளியாகியுள்ளன. அதன்மூலம் இந்த மூன்றாண்டுகளில் எனக்குக் கிடைத்த வருமானம் ரூ.540.00

  2. கிண்டிலில் நான் (வேறு) நான்கு புத்தகங்களை வெங்கட் நாகராஜ் சொன்னதுபோல வெளியிட்டிருக்கிறேன். ('தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்', 'இரவுகள் ஏழு', 'பனியில் நனைந்த கவிதைகள்', 'அம்மாவுடன் பேசினீர்களா?') எல்ல நூல்களுமே ரூ 49 தான் விலை வைத்திருக்கிறேன். அதுதான் அமேசான் சொல்லும் குறைந்த பட்ச விலையாகும். எனக்கு வரவேண்டிய ராய்ல்டி (?!) 35% என்று ஒப்புக்கொண்டிருக்கிறேன். டிசம்பர் 2019, ஜனவரி-பிப்ரவரி 2020இல் இந்த நூல்கள் வெளியாகியுள்ளன.

  இவற்றின் விறபனையில் இருந்தும் Kindle Unlimited வாசிப்பிலிருந்தும் என் கணக்கில் கிரெடிட் ஆன் பணம் பின்வருமாறு:

  டிசம்பர் 2019 க்கு: ரூ 51.68 (அமெரிக்கா) + ரூ.7.58 (இந்தியா)
  ஜனவரி 2020 க்கு: ரூ 44.32 (அமெரிக்கா) + ரூ. 17.77 (இந்தியா)
  பிப்ரவரி 2020 க்கு: ரூ 6.49 (அமெரிக்கா) + ரூ. 12.82 (இந்தியா)

  புத்தகங்களின் விலை அதிகமானால் ராயல்டி அதிகம் வரலாம். ஆனால் வாசிப்பாளர்கள் குறைந்தாலும் குறையும். அதிகமாக விளம்பரம் செய்தாலும், அடிக்கடிப் புதிய நூல்களைக் கிண்டிலில் தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டே இருந்தாலும் உங்களுக்கு அதிக visibility கிடைக்கும். அது ஒரு நாள் அதிக வருமானமாக முடியக்கூடும்.

  புஸ்தகாவில் ஏற்கெனவே உங்கள் நூலை வெளியிட்டிருந்தால் எழு வருடங்களுக்கு ஒப்பந்தம் போட்டிருப்பீர்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஆனால் கிண்டில் மூலம் அதிக வருமானம் வரலாம் என்று தோன்றினால், மூன்றுமாத அறிவிப்பு கொடுத்து அந்த ஒப்பந்தத்தை முடித்துக்கொள்ள வழியுண்டு.

  ஆனால் புஸ்தகா தான் தமிழில் மின் நூல்களை அறிமுகப்படுத்த முன்வந்த அமைப்பு என்பதாலும், மிகுந்த பொருட்செலவைச் செய்து அதற்கான கட்டமைப்பை அவர்கள் உருவாக்கினார்கள் என்பதாலும், நம்து நன்றியைக் காட்டும் விதமாக நமது நூல்களை அந்த ஏழு வருடம் அங்கேயே இருக்கவிடுவது நமது நன்றியைக் காட்டுவதாகும். புதிய நூல்களை கிண்டிலில் வெளியிடலாம்.

  நமது வலைப்பதிவர்கள் அனைவருமே தங்கள் முக்கிய பதிவுகளை கிண்டிலில் புத்தகமாக்குவதன்மூலம்
  உடனடியாக உலகளாவிய புகழை அடைய முடியும். பணம் என்றோ வராமலா போய்விடும்? வாழ்த்துக்களுடன்  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விரிவான கருத்துப் பகிர்வுக்கு நன்றி. பணம் வருவது என்பது விற்பனையை/வாசிப்பதைப் பொறுத்தே என்பதையும் சொல்லி இருக்கிறேன். கூடவே இன்னும் ஒரு விஷயமும் பூடகமாகச் சொல்லி இருக்கிறேன்....

   //முடிவாக, ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். பணம் சம்பாதிப்பது மட்டுமே மின்னூல்களை வெளியிடுவதற்கான காரணம் இல்லை. நீங்கள் வெளியிட்டாலும் அதற்கான வரவேற்பைப் பொறுத்தே உங்களுக்கு பணம் வரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனாலும் பணம் சம்பாதிப்பதைத் தாண்டி, உங்கள் ஆக்கங்கள் இணையத்தில் கிடைக்கிறது என்பதே பெரிய சந்தோஷம் தானே… இன்றைக்கு நீங்கள் ஆவணப்படுத்துவதை வரும் நாட்களில் – இணையம் உள்ளவரை யாரோ ஒருவர் தேடிப் படிக்க முடியும் என்பது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.//

   ஜி.எம்.பி. ஐயாவின் கேள்விக்கு பதில் சொல்லுகையில் புஸ்தகாவில் வெளியிட்டதை 7 வருடங்கள் வரை வெளியிட முடியாது என்பதையும் சொல்லி இருக்கிறேன் இராய செல்லப்பா ஐயா.

   /உடனடியாக உலகளாவிய புகழ்/ - ஹாஹா.... நல்ல நகைச்சுவை!

   எனக்கு புஸ்தகா அனுபவம் கொஞ்சம் கசப்பானதே.... அதனால் அதனைப் பற்றி விரிவாகச் சொல்ல வில்லை. நான் அமேசானில் வெளியிட ஆரம்பித்ததே ஏப்ரல் கடைசியில் தான். அதனால் இங்கே இருந்து வருமானம் என்ன என்பதை சொல்ல முடியாது! எதிர்பார்க்கவும் இல்லை.

   தங்களது வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராய செல்லப்பா ஐயா.

   நீக்கு
  2. வருமானம் பிரபலங்களுக்கே வருகிறது. நம்மை போன்றோருக்கு கஷ்டம். குறிப்பாய் க்ரூப்பா வேலை செஞ்சா கிடைக்கும்

   நீக்கு
  3. பிரபலங்களுக்கே கூட பல சமயம் வருமானம் வருவதில்லை! :) க்ரூபாக வேலை செய்தா கிடைக்கலாம் - Give and take policy!

   Content மற்றும் நம் நூலுக்கான வரவேற்பினைப் பொறுத்தே இருக்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எல்.கே.

   நீக்கு
 12. வெங்கட்ஜி! நல்ல பயனுள்ள பதிவு. நானும் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். எங்கள் தலைமையகம் இப்போது பங்களூரில். அங்கிருந்துதான் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். முயற்சி செய்கிறோம்.

  மிக்க நன்றி பகிர்ந்தமைக்கு.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவுகள் சிலருக்கேனும் பயனுள்ளதாக இருந்தால் மகிழ்ச்சியே.

   உங்கள் பதிவுகளும் மின்னூலாக வெளிவர வாழ்த்துகள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

   நீக்கு
 13. நல்ல பயனுள்ள தகவல்.
  உங்களுக்கும், ஆதிக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பயனுள்ள தகவல் - நன்றி கோமதிம்மா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 14. எனக்கும் என்னுடைய கோவில் பதிவுகளை புத்தகமாக வெளியிடனும்ன்னு ஆசை. ஆனா, குடும்ப சூழல் அதுக்கு ஒத்துவரல கிண்டில் பத்தி சில காலமா பேச்சு அடிபடும்போது அடிக்கடி பதிவுகளை புத்தகமாக்கும் எண்ணம் தலை தூக்கும்.

  முகநூலில் அண்ணியோட ஆதியின் அடுக்களையிலிருந்து புத்தகம் மின்னூலா வந்திருக்குன்னு பதிவிட்டிருந்ததை பார்த்து வழிமுறைகளை சொல்லுங்கண்ணின்னு கேட்டிருந்தேன். இதோ நீங்க பதிவாக்கிட்டீங்க.

  பெரிய மகளுக்கு பிரசவ நேரம் நெருங்குது. அதை நல்லபடியா முடிச்சுட்டு புத்தகம் வெளியிடும் வேலையை பார்க்க வேண்டியதுதான்.

  பகிர்வுக்கு நன்றிண்ணே/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அச்சுப் பதிப்பாக வெளியிடுவதில் சில சிக்கல்கள் உண்டு. மின்னூல் வெளியிடுவது நல்லது - ஒரு தொகுப்பாக உங்கள் எழுத்தும் இருக்கும் என்பது ஒரு மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் தான்.

   பெரிய மகளுக்கு பிரசவ நேரம் நெருங்குது - வாழ்த்துகள். நலமே விளையட்டும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 15. விளக்கமான பதிவிற்கு நன்றி. வழிகாட்டுதல்களுக்கும் நன்றி.
  உங்கள் சேவை சிறக்க வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தகவல்கள் சிலருக்கேனும் பயன்பட்டால் மகிழ்ச்சியே...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கௌதமன் ஜி.

   நீக்கு
 16. பலருக்கும் பயனாகக் கூடிய, ஊக்கம் தருகிற பகிர்வு. அச்சில் வெளியான எனது இரு நூல்களையும் அமேசானில் கொண்டு வர நண்பர்கள் சொல்லியும் அதில் அதிக நாட்டமின்றி இருந்தேன். இப்பதிவு அதைச் செய்யும் உத்வேகத்தை அளிக்கிறது:). நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் பதிவுகளும் மின்னூலாகக் கொண்டு வருவது நல்லது தான். அச்சில் வெளியான நூல்களை அமேசான் வழி கொண்டு வருவதென்றால் பதிப்பகத்திடமிருந்து எழுத்து மூலமாக Digital Rights- ஐ பெற்றுக் கொள்வது நல்லது - அப்படி அவர்களுடன் ஒப்பந்தம் இருந்தால்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
  2. நல்லது. அப்படியான ஒப்பந்தம் ஏதுமில்லை என்றாலும் பதிப்பாளரின் சம்மதத்தையும் பெற்றுள்ளேன். நன்றி வெங்கட்.

   நீக்கு
  3. ஒப்பந்தம் இல்லை என்றாலும் பதிப்பாளரின் சம்மதத்தையும் பெற்றது நல்லதே.

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 17. நல்ல தகவல்கள் ....எங்களது பயண கட்டுரைகளையும் சிலவற்றை மின்னூலாக்கி உள்ளோம் ....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா... உங்களது பயணக் கட்டுரைகளும் மின்னூலாக வெளியிட்டதற்கு வாழ்த்துகள் அனுப்ரேம் ஜி.

   நீக்கு
 18. அருமையான, மிகவும் பயனுள்ள பதிவு. தங்கள் எழுத்தை நெட்டில் பார்க்க, அச்சில் பார்க்க, யாராவது தெரியாத்தனமாகப் புகழ்ந்துவிட்டால்(!) அதைக் காதால் கேட்க, யாருக்குத்தான் ஆசை இருக்காது!

  உங்கள் புத்தகங்கள் அமேஸானிலும், freetamilbooks-லும் கிடைப்பதைப் பார்த்திருக்கிறேன். குறிப்பாகப் பயணக் கதைகள்.. வாழ்த்துகள். தொடர்ந்து ஆர்வமாக இயங்கிவரும் நீங்கள் பாராட்டுக்குரியவர்.

  பதிவுக்கும், வழிகாட்டலுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு சிலருக்கேனும் பயன்பட்டால் மகிழ்ச்சியே.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏகாந்தன் ஜி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....