திங்கள், 8 ஜூன், 2020

அந்தமானின் அழகு – பயணம் – குழுவினர் பார்வையில் - நிர்மலா ரங்கராஜன்

அந்தமானின் அழகு பகுதி 41

முந்தைய பதிவுகள் – பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6  பகுதி 7 பகுதி 8 பகுதி 9  பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30  பகுதி 31 பகுதி 32  பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36 பகுதி 37 பகுதி 38 பகுதி 39 பகுதி 40

அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

 

எங்கள் பயணத்தில் நாங்கள் பார்க்க முடிந்த இடங்கள் அனைத்தையும் பார்த்து விட்டு போர்ட் Bப்ளேயரில் கடைசி இரவினை நோக்கி வந்து விட்டோம்.  Bபாராடாங்க் தீவிலிருந்து வந்த பிறகு தங்குமிடம் திரும்பி கொஞ்சம் ஓய்வு – நாளை தில்லி திரும்புவதற்கான கடைசி கட்ட Packing நடந்து கொண்டிருந்தது. சிலருக்கு கொஞ்சம் Shopping பாக்கி இருந்தது. அனைவரும் புறப்பட்டு அபர்தீன் பஜார் சென்றோம். நாங்கள் மார்க்கெட்டில் சுற்றும் வேளையில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள, இந்த அந்தமான் பயணம் பற்றிய இன்னுமொரு பார்வையாக இன்றைய தினமும் ஒரு பகிர்வு.  சகோ நிர்மலா ரங்கராஜன் அவர்களின் பார்வையில் இந்த அந்தமான் பயணம்…  வரும் பகுதியில் பயணம் பற்றிய சில முக்கிய குறிப்புகளுடன் வருகிறேன் – இப்போதைக்கு Over to திருமதி நிர்மலா ரங்கராஜன்! – வெங்கட், புது தில்லி.

*****

அந்தமான் பயணம் ஆஹா... - ஆனந்தப் பயணம் ... அற்புதப் பயணம்...


நினைவில் நிற்பவை எல்லாம் நிறைகளே எனவே முதலில் நிறைகளை எழுதுகிறேன். குறைகள் நினைவுக்கு வந்தால் இறுதியில் எழுதலாம். பயணத்திற்கு தேர்ந்தெடுத்த நேரம் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் சேர்ந்தார் போல் வந்தது மேலும் அலுவலகத்தில் எவருக்கும் எந்த பிரச்சனையும் இன்றி விடுப்பு கிடைத்தது இது எல்லாம் எங்கள் அந்தமான் பயணத்தின் முதற்கட்ட நல்ல அறிகுறியாக இருந்தது. இந்த பயணத்திற்கு ஒவ்வொரு குடும்பமும் தனித்தனியாக முன்பதிவு செய்திருந்தாலும் எல்லோருக்கும் ஒரே விமானத்தில் பயணச்சீட்டு கிடைத்தது எங்கள் அதிர்ஷ்டம். பயண ஏற்பாட்டாளர்கள் தங்குமிடம், காலை இரவு சாப்பாடு மற்றும் போக்குவரத்து வசதிகள் என்று அனைத்தையும் மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.


எங்கள் குழுவில் இருந்த (சிறியவர் முதல் பெரியவர் வரை) அனைவருமே சில சங்கடமான சூழ்நிலைகளிலும் கூட சோர்ந்துவிடாமல் உற்சாகமாகவும் கலகலப்பாகவும் இருந்தது பயணத்தின் மிகப்பெரிய ப்ளஸ். டெல்லி விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்படும் நேரம் தாமதமானாலும் அது ஒரு பொருட்டாகவே எங்களுக்கு தெரியவில்லை.  மேலும் விசாகப்பட்டினத்தில் சிறிது நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது அப்பொழுதும் கூட எங்களுக்கு நேரம் போனதே தெரியவில்லை. போர்ட் பிளேயர் விமான நிலையத்தில் இருந்து தங்கும் விடுதிக்கு செல்லும் வழி முழுவதும் எங்கும் பசுமை... பசுமை.... இது எங்களுக்கு ஆரோக்கியமான இன்பமான உற்சாகமூட்டும் ஒரு பசுமை வரவேற்பாக இருந்தது. பயணத்திற்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கும்போது எங்கள் தோழி ஒருவர் "புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ள இந்த நேரத்தில் அந்தமான் செல்வது ஆபத்து" என்று பயமுறுத்தினார். ஆனால் மழை காற்று என்ற எந்த சிரமமும் இன்றி எங்கள் பயணம் இனிதாக தொடர்ந்தது மிக மிக நிறைவான விஷயம்.


அடுத்து தங்கியிருந்த இடங்கள் அனைத்துமே மிகவும் அருமையான இடங்கள். போர்ட் பிளேயரில் அனைத்து வசதிகளுடன் இருந்த ஹோட்டல் கவிதா, மற்றும் அருகிலிருந்த ஆஞ்சநேயர் கோவில் ப்ளஸ். அங்கு தங்கியிருந்தவரை நாங்கள் காலையிலும் மாலையிலும் ஒரு குட்டி நடை போட்டு ஆஞ்சநேயரை சென்று சேவித்து வந்தது மனதுக்கு நிறைவாக இருந்தது.(வீட்டில் இருக்கும்போது கூட இப்படி இரண்டு வேளையும் கோவிலுக்கு செல்வதில்லை). அடுத்து ஹேவ்லாக் தீவில் ராதா கிருஷ்ணா ரெசார்ட். ஆஹா எவ்வளவு அருமையான இடம் அது. தென்னை, கமுகு,  குரோட்டன்ஸ், செம்பருத்தி இன்னும் பல செடி கொடிகளுடன் கூடிய தோட்டத்திற்கு நடுவில் அமைந்துள்ள இடம் அது. வாழ்க்கையில் இது போன்ற இடங்களுக்கு சென்று ஒரு சில தினங்களாவது தங்கி இருக்க வேண்டும். (இங்கு நாங்கள் தங்கியிருந்தபோது ஒரு மறக்கமுடியாத நகைச்சுவை நிகழ்ச்சி நடந்தது. அதனை நான் இறுதியில் தனியாக எழுதுகிறேன்.)


அடுத்து நீல் தீவில் தங்கியிருந்த டேங்கோ ரெசார்ட். இது கடற்கரையில் அமைந்துள்ள ஒரு தங்கும் விடுதி. இந்த கடற்கரைக்கு இந்த விடுதியில் தங்கி இருப்பவர்களைத் தவிர வேற்று ஆட்கள் யாரும் வரமாட்டார்கள். எனவே இந்த கடற்கரையில் கூட்டம் இல்லாமல் மிகவும் அமைதியாக ரசிக்கக் கூடிய இடமாக இருந்தது. மேலும் ஓய்வு எடுப்பதற்கும் இங்கு சாய்வு இருக்கைகள் இருப்பது மிகவும் வசதியாக இருந்தது. இங்கும் நிறைய மரங்கள் நிறைந்த தோட்டமும் நீச்சல் குளமும் பூச்செடிகளும் பார்ப்பதற்கு மிக அழகாகவும் மனதிற்கு நிறைவாகவும் இருந்தது. இந்த இடத்திலிருந்து சூரிய உதயம் மிக நன்றாக தெரியக்கூடிய சீதாபூர் கடற்கரை சிறிது தொலைவிலேயே இருந்தது. எங்கள் குழுவில் இருந்து நாங்கள் ஐந்து பேர் மட்டும் சூரிய உதயம் பார்ப்பதற்கு அதிகாலை 4.00 மணிக்கே கிளம்பி சென்றோம். மறக்க முடியாத அபூர்வ நிகழ்ச்சி அது.(இது பற்றி திரு. வெங்கட் சார் அவர்கள் பயணக்கட்டுரையில் மிக விரிவாக எழுதியுள்ளார்). இப்படி நாங்கள் தங்கியிருந்த இடங்கள் அனைத்துமே எல்லா வசதிகளும் நிறைந்த ரசித்து அனுபவிக்கக் கூடிய இடமாக இருந்தது. மேலும் இந்த இடங்கள் அனைத்துமே காலை மாலை உணவு கிடைக்கும் இடமாக இருந்தது கூடுதல் வசதி.


செல்லும் இடங்களில் எல்லாம் திகட்ட திகட்ட இளநீர் குடித்தது நிறைவோ நிறைவு. கடல் குளியல் இனிமையான அனுபவம். நான் கடற்கரை இருக்கும் ஊருக்கு மிக அருகாமையிலேயே பிறந்து வளர்ந்தவள். எத்தனையோ முறை கடற்கரைக்கு சென்றுள்ளேன் இருந்தாலும் கடலில் இறங்கவோ அல்லது குளிக்கவோ விரும்பியது கிடையாது. ஆனால் அந்தமானில் இரண்டு முறை கடலில் குளித்தேன் அதுவும் மிகவும் அனுபவித்து சந்தோஷமாக குளித்தேன். இது எனக்கு மிகமிக திருப்தியாக இருந்தது. வீட்டில் இருக்கும் மீன் தொட்டியில் உள்ள மீன்களை எல்லாம் கடலில் பார்த்தபோது ஒரு துள்ளல் மகிழ்ச்சி. கடல் குதிரை, நட்சத்திர மீன், ஆக்டோபஸ் இன்னும் பெயர் தெரியாத எத்தனையோ கடல்வாழ் உயிரினங்கள் பவளப்பாறைகள் அதுவும் உயிருள்ள பவளம் வாய்திறந்து மூடுவது அதிசயத்திலும் அதிசயம் இவை எல்லாமே இந்த பயணத்தின் நிறைவான விஷயங்கள்.


நீல் தீவிலிருந்து போர்ட் பிளேயர் சென்றபோது கப்பலில் இருந்தபடியே சூரிய அஸ்தமனம் பார்த்தது ஒரு இனிமையான அனுபவம்.  நெருப்பு பந்து மெதுவாக கீழே இறங்கி தண்ணீரை தங்கமாக்கி வானத்தில் குங்குமத்தை தூவி மேகக் கூட்டத்திற்கு நடுவே வைரம் பதித்தது போல். பிறகு  கொஞ்சம் கொஞ்சமாக சிறியதாகி கடைசியில் ஒரு சிறு குங்குமப்பொட்டு ஆஹா.... என்ன ஒரு இனிமையான இயற்கை நிகழ்வு!  என்றென்றும் நெஞ்சைவிட்டு நீங்காத காட்சி அது. சுண்ணாம்பு குகை பார்க்க சென்றபோது கப்பலில் கடலை பார்த்து ரசித்தபடி நின்றுகொண்டு பயணித்தது வித்தியாசமான அனுபவமாக  இருந்தது. அந்தக் கப்பலில் பேருந்து , சிற்றுந்து,  ஜீப் என பலவகையான வாகனங்களை ஏற்றிக் கொண்டு சென்றது எங்களுக்கு அதிசயமாக இருந்தது.  அதனை தொடர்ந்து படகில் பயணிக்கும் போது சுற்றிலும் இருக்கும் காடுகளை ரசித்துக் கொண்டே சென்றது மிக ஆனந்தமாக இருந்தது. மலையேற்றம் பற்றி படிக்கும்போது இதை நாம் அனுபவித்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தது உண்டு.  அந்த எண்ணம் இந்த பயணத்தின்போது நிறைவேறியது. சுண்ணாம்பு குகை பார்க்கச் சென்றது கிட்டத்தட்ட  மலையேற்றம் போலதான் இருந்தது. அங்கு சென்று சேர்ந்த பிறகு பல அதிசயங்களை பார்க்கமுடிந்தது சுண்ணாம்பு பாறையில் சூரிய வெளிச்சம் பட்டு தங்கமென ஜொலித்தது , சில தெய்வ வடிவங்கள், மலர் வடிவங்கள் என இயற்கையாகவே அமைந்து இருந்த அந்த சுண்ணாம்பு பாறைகளை பார்த்து நாங்கள் அதியத்து போனோம்!


பொதுவாக சுற்றுலா பயணங்கள் செல்லும்போது துணி துவைத்து உலர்த்துவது மிகவும் சிரமமான வேலையாக இருக்கும். எங்களுக்கு அந்த சிரமமே இல்லை. தங்கியிருந்த ஒவ்வொரு இடத்திலும் மொட்டை மாடி அல்லது கட்டிடத்தின் பின்புறம் என துணி உலர்த்துவதற்கு வசதியாக இருந்தது. எங்கு சென்றாலும் மாலை 5 மணிக்கே தங்குமிடம் திரும்பி வந்து விடுவோம் . எனவே மாலையில் நாங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க நிறைய அவகாசம் கிடைத்தது இது எல்லோருக்குமே நிறைவாக தான் இருந்திருக்கும். அந்தமானில் பொருட்கள் வாங்கினால் விலை அதிகமாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் சில பொருட்கள் இங்கு கிடைக்கும் விலைக்கே கிடைத்தது எனவே தேவையான பொருட்களை வாங்குவது சிரமமாக இல்லை. தங்கியிருந்த ஒவ்வொரு இடத்திலும் சிப்பந்திகளின் சேவையும் வாகனம் ஓட்டுனர்களின் சேவையும் மிகவும் நிறைவான விஷயங்கள். இப்படி நிறைகள் நிறையவே எழுதலாம். பார்த்த இடங்கள் ஒவ்வொன்றுமே நிறைவு தான்.


குறைகள்: எங்கள் மகன் நவீன் எங்களோடு இந்த பயணத்தில் கலந்து கொள்ளாதது எங்களுக்கு மிகப்பெரிய குறையாக இருந்தது. கண்ணாடி படகில் சென்றபோது டீசல் வாடை ஒத்துக்கொள்ளாமல் மிகவும் சிரமப்பட்டோம். அதனால் அந்த நேரத்தை எங்களால் சந்தோஷமாக அனுபவிக்க முடியவில்லை மாறாக மரண அவஸ்தை ஆகி விட்டது. குழுவில் நண்பரின் மகள் பர்ஸ் தொலைந்து போனது, செல்லுலர் ஜெயிலில் சக தோழி ஒருவர் படியில் தடுமாறி விழுந்தது போன்ற ஒரு சில எதிர்மறை நிகழ்வுகள் அனைவருக்குமே வருத்தமாக இருந்தது. ராஸ் தீவிலிருந்து நார்த் பே தீவிற்கு செல்ல படகு வருவதற்கு வெகுநேரம் காத்திருந்தது மிகவும் வெறுப்பாக இருந்தது. எல்லோரும் ஒரே இடத்தில் இருந்திருந்தால் இந்த வெறுப்புணர்வு இருந்திருக்காது. குழுவில் பாதி பேர் சென்றுவிட்டனர் மீதமிருந்த எங்களுக்கு வெய்யிலின் தாக்கமும் நேரம் வீணாகிறது என்ற எண்ணமும் சேர்ந்து சோர்வை உண்டுபண்ணியது. ராதா நகர் கடற்கரையில் குளித்துவிட்டு உடை மாற்றும் இடத்தில் வசதி மிகக் குறைவாகவே இருந்தது. அங்கு குளித்து உடை மாற்றிக்கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.


சீதாபூர் கடற்கரைக்கு சூரிய உதயம் பார்க்க எங்கள் குழுவில் நாங்கள் ஐந்து பேர் மட்டுமே சென்றோம். அனைவருமே சென்றிருந்தால் நிறைவாக இருந்திருக்கும். நாங்கள் தங்கியிருந்த கடற்கரையில் சூரிய அஸ்தமனம் மிக நன்றாக இருக்கும். எனவே நண்பர் எங்கள் அனைவரையும் சூரிய அஸ்தமனம் பார்க்க அழைத்தார். புறப்பட்ட நாங்கள் அவரோடு சேர்ந்து செல்லாமல் மெதுவாக அலட்சியமாக சென்றதால் அன்று அந்த அருமையான காட்சியை தவற விட்டோம். பாராடாங்க் சென்றபோது மிகவும் பழுதடைந்த ஒரு சாலையில் பயணித்தோம். அதிகாலையிலேயே அதுபோன்ற ஒரு பயணம் மிகவும் சிரமமானதாக இருந்தது.  ஜிர்காடாங்க் ல்  இருந்து பாராடாங்க் செல்லும் வழியில் நிறைய கூட்டம் கூட்டமாக பழங்குடியினரை பார்க்கலாம் என்றும் அதற்காக சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் கூறியிருந்தனர். நாங்களும் அவர்கள் சொன்னபடியே நடந்து கொண்டோம்.  மேலும் வண்டிக்குள் அமர்ந்திருக்கும் பொழுது தலையை கூட அசைக்கவில்லை. பேசவில்லை,  சிரிக்கவில்லை. எங்கள் குழுவில் பேசாமலும் சிரிக்காமலும்  இருப்பது மிகவும் சிரமமான விஷயம்.  இருந்தபோதும் அதையும் நாங்கள் கடை பிடித்தோம். இவ்வளவு சிரமப்பட்டும் எங்களால் கூட்டம் கூட்டமாக பழங்குடியினரை பார்க்க முடியவில்லை. நாங்கள் சென்றுகொண்டிருந்த சாலையில் எதிரில் வந்த ஒரு வாகனத்தில் மூன்று பழங்குடியினர் சென்றனர் அவர்களை மட்டுமே எங்களால் பார்க்க முடிந்தது.  ஒரு சிலர் அதையும்கூட பார்க்கவில்லை. இது எங்களுக்கு பெரிய ஏமாற்றம் ஆகிவிட்டது.


எலிஃபன்ட் தீவு பார்க்க அனுமதி கிடைக்காதது வருத்தமாக இருந்தது. நேரமின்மை காரணத்தால் பாரட் தீவு போன்ற சில அற்புதமான இடங்களை பார்க்க முடியாமல் போனது கொஞ்சம் வருத்தமாக இருந்தது. பயணத்தின் இறுதியில் அதாவது நாங்கள் டெல்லி வருவதற்காக போர்ட் பிளேயர் விமான நிலையம் வந்து சேர்ந்த போது தான் தெரிந்தது நான் எனது கைபேசியை தங்கும் விடுதியிலேயே மறந்து வைத்துவிட்டு வந்திருந்தது.  இதனால் குழுவில் நண்பர்களுக்கு சிரமம் கொடுத்துவிட்டேன். இது எனக்கு மிகப்பெரிய குறையாக தெரிந்தது.  நிறைகுறைகள் மட்டுமல்லாது ஒரு சிறிய நகைச்சுவை சம்பவத்தையும் எல்லோருடனும் பகிர்ந்துகொண்டு முடித்துக்கொள்கிறேன். ராதாகிருஷ்ணா ரிசார்ட்டில் தங்கியிருந்தபோது ஒரு நகைச்சுவை சம்பவத்தைப் பற்றி பிறகு எழுதுவதாகக் குறிப்பிட்டிருந்தேன். இதோ அது!


அன்று காலை குளித்து தயாராகி வெளியில் வந்தேன்.  சக தோழி ஒருவர் தரையில் அமர்ந்திருந்தார். நான் அவர்களுக்கு காலை வணக்கம் தெரிவித்துவிட்டு  "ஏன் மேடம் இங்கே தரையில் உட்கார்ந்து இருக்கீங்க?" என்று கேட்டேன் அவர்களும் 'இல்லம்மா சும்மா இந்த செடிகளை எல்லாம் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறேன்' என்று சொன்னார்கள் நானும் அப்படியா! என்று சொல்லிவிட்டு அவரை கடந்து சென்றேன் செல்லும்போதே ஒரே சிந்தனை இவர்களுக்கு தரையில் உட்காருவது சிரமமாயிற்றே அப்படி இருக்க ஏன் தரையில் உட்கார வேண்டும் அதுவும் வெண்மையான உடை உடுத்திக்கொண்டு என்று நினைத்துக்கொண்டேன் நடக்கையில் மற்றொரு தோழி ஒருவர் என்னை நெருங்கி வந்துநிம்மி நான் பார்த்துவிட்டேன் ம்மா" என்று சொன்னார்கள்.  ஆங்! என்ன பார்த்தீர்கள் எப்பொழுது பார்த்தீர்கள் என்றேன் அவரது பதில் 'இப்போது தான் மேடம் கீழே விழுந்ததை பார்த்தேன் என்றார்கள். அவ்வளவுதான் எனக்கு விஷயம் புரிந்துவிட்டது. அதன்பிறகு என்ன ? சிரிப்பு விருந்துக்கு விஷயம் கிடைத்துவிட்டது. சிறிது நேரத்திற்கு பிறகு நாங்கள் எல்லோரும் ஓரிடத்தில் சந்திக்கும் பொழுது விழுந்த தோழியே 'இப்படி அடிக்கடி தவறி விழுவது கேவலமாக இருக்கும் என்பதால் தான் விழுந்தது யாருக்கும் தெரிய வேண்டாம் என்று மறைத்தேன் என்று சொன்னார்கள். குறிப்பு: செல்லுலர் ஜெயில் படியில் தடுக்கி விழுந்ததும் இதே தோழிதான்.


பயணக் கட்டுரையில் திரு வெங்கட் அவர்கள் விரிவாகவும் தெளிவாகவும் நிறையவே எழுதி இருப்பதால் நான் இத்தோடு முடித்துக் கொள்வது நல்லது.

நன்றி!


நட்புடன்


நிர்மலா ரங்கராஜன்

புது தில்லி


32 கருத்துகள்:

 1. பயணத்தில் பங்குபெற்றவர்களை அந்த பயணத்தை மறுபடி அசைபோட வைத்து விட்டீர்கள்.  அவர்களுக்கும் அது இனிய அனுபவமாக இருக்கும்.  

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குழுவிலிருந்தவர்களையும் எழுதச் சொல்லிக் கேட்டிருந்தேன். அனுப்பியதை இங்கே, இதே தொடரில் சேர்த்து விட்டேன். மற்றவர்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வது நல்ல விஷயம் எனத் தோன்றியது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. அனுபவங்களை பகிர்ந்த விதம் அருமை.
  கீழே விழுவது எல்லோருக்குமே இயல்புதான் ஆனாலும் சிலருக்கு அது அவமானமாக தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பகிர்வு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

   கீழே விழுவது பலருக்கும் நடப்பதே.

   நீக்கு
 3. நெருப்பு பந்து மெதுவாக கீழே இறங்கி தண்ணீரை தங்கமாக்கி வானத்தில் குங்குமத்தை தூவி மேகக் கூட்டத்திற்கு நடுவே வைரம் பதித்தது போல்......அனுபவத்துடன் இலக்கிய ரசனையும்..மிகவும் ரசித்தேன். திருமதி நிர்மலா ரங்கராஜன் அவர்களுக்கு பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்றைய பகிர்வினை ரசித்த உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 4. பதில்கள்
  1. பதிவு உங்களுக்கும் பிடித்தில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 5. திருமதி நிர்மலா ரங்கராஜன் அவர்கள் எழுதிய அனுபவ பகிர்வு அருமை.

  நிறைவு அருமை, தன் மகன் தன்னுடன் பயணம் செய்ய முடியவில்லை என்று தாயின் மனக்குறையை அருமையாக பதிவு செய்தார்.

  என்னைப்போல அந்த அம்மாவும் அடிக்கடி கீழே விழுவார்கள் போலும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா....

   வீட்டினர் அனைவரும் பயணத்தில் இருப்பது தானே மகிழ்ச்சி.

   //என்னைப் போல அந்த அம்மாவும் அடிக்கடி கீழே விழுவார்கள் போலும்// :))))

   நீக்கு
 6. உங்களுக்கு போட்டியாக உங்கள் குழுவில் மூவராவது இப்பயணம் குறித்து புத்தகமே எழுதி வெளியிட்டுவிடுவார்கள் போல? அணுபவம் சிறப்பு ஐய்யா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. போட்டியாக! ஹாஹா... அப்படி அவர்கள் எழுதினாலும் மகிழ்ச்சியே அரவிந்த்.

   நீக்கு
 7. திருமதி நிர்மலா ரங்கராஜன் அவர்கள் நிறைகுறைகளையும் (குறைகள் = சிலவற்றை பார்க்க முடியவில்லை எனும் ஏக்கங்கள்) சிறப்பாக தொகுத்து வழங்கி உள்ளார்கள்... அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   குறைகளும் நிறைகளும் கொண்டது தானே வாழ்க்கைப் பயணமும்.

   நீக்கு
 8. குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை (மீசைக்காரர் மன்னிப்பாராக)தடுக்கி விழுந்தாலும் விழவில்லை. உட்கார்ந்தது தான். கடைசி பஞ்ச்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

   நீக்கு
 9. பயண அனுபவங்களை ரசனையாக தந்துள்ளார்.

  பதிலளிநீக்கு
 10. ஹாஹாஹா, நான் தான் பயணங்களில் கீழே விழுவேன் என்றால் உங்கள் குழுவிலுமா? சென்ற வருடம் அம்பேரிக்கா போக விமானப் பயணத்துக்காக ஸ்ரீரங்கத்தில் இருந்து சென்னை செல்லும் வழியிலும் கீழே விழுந்து எழுந்தே போனேன். கும்பகோணத்தில் அடிக்கடி விழுவேன். உங்க நண்பி கீழே விழுந்தாலும் சமாளிச்சுட்டாங்க போல! நல்ல பகிர்வு. ரசனையுடன் தந்திருக்கிறார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா...

   விழுவது - சில சமயங்களில் நடப்பது தானே...

   நீக்கு
 11. மொத்தப் பயணத்தையும் ஒரு போஸ்ட்டில் படிச்சதைப்போன்ற ஃபீலிங்காக இருக்கிறது.. அழகிய சுற்றுலாத்தான்.

  பதிலளிநீக்கு
 12. அத்தனை நாள் பயணத்தை ஒரு கட்டுரையில் சொல்லிப்போனாலும் மிக மிக அருமையாகச் சொல்லியுள்ளார்கள்..வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ரமணி ஜி.

   நீக்கு
 13. முதல் வாசகமும் அதற்கான படமும் மிகவும் அருமை!
  திருமதி நிர்மலா பயண அனுபவங்களை மிக அழகாக எழுதியிருக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம், படம் மற்றும் பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மனோம்மா...

   நீக்கு
 14. இது ஒரு அருமையான மெதட். உங்க மின்னூலுக்கும் இந்த பிற்சேர்க்கைகள் உபயோகமா இருக்கும் என்று நினைக்கிறேன். இவங்க ரொம்ப அழகா எழுதியிருக்காங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //மின்னூலூக்கும் இந்த பிற்சேர்க்கைகள் உதவும்// உண்மை தான் நெல்லைத்தமிழன்.

   நீக்கு
 15. பயண வாசகம் அருமை. திருமதி நிர்மலா அவர்களின் பயண அனுபவம் ரசிக்கும்படியும் நகைசுவையாகவும் இருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமசாமி ஜி.

   நீக்கு
 16. உங்க பயணத்தின் சிறு குறிப்பு என அழகா எழுதிவிட்டார் ...அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அனுப்ரேம் ஜி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....