சனி, 13 ஜூன், 2020

காஃபி வித் கிட்டு – வதந்தி – விலைவாசி – கவிதை - பாடல் - மும்தாஜ்

காஃபி வித் கிட்டு – பகுதி 71

அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.


இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:


உங்களை விமர்சிப்பவர்களை கண்டு கொள்ளாதீர்கள். ஏனெனில் அவர்களுக்குத் தெரிந்தது உங்களைப் பற்றிய வதந்திகள் மட்டுமே. உங்களின் வலிகள் அல்ல.  

 

இந்த வாரத்தின் ரசித்த கவிதை:


மருக்கொழுந்து மனம் – கவிஞர் மகுடேஸ்வரன்

 

காலையில் மலரும்

தாமரை மனத்தோடிருந்தேன்.

பகல் முடிய முடிய

வாடி வதங்கின அதன் இதழ்கள்.

 

மாலையில் மலரும்

மல்லிகை மனத்தோடிருந்தேன்.

அவிழும் பொழுதுவரை

உள்பொங்கிய நாற்றத்தால்

வெடித்துச் சிதறுவது போல் இருந்தது

மனத்தின் மலர்ச்சி.

 

இரவில் மலரும்

ஆம்பல் மனம் யாருக்கு வேண்டும்?

நிலவுக்கு மலர்ந்து

சூடுவாரற்று

மடல் தளர்ந்து மடியும் மௌன வதம்!

 

மாமாங்கத்திற்கு மலரும்

குறிஞ்சி மனத்தைக் கொள்வதென்றால்

அதுவரை இந்த வனம்

காட்டுதீ பற்றி

கருஞ்சாமல் ஆகாதிருக்குமா?

 

வேண்டுமம்மா வேண்டும்

ஒடிக்க ஒடிக்க

கசங்க கசங்க

தண்டும் தழையும்

ஒன்றி மணக்கும்

மருக்கொழுந்து மனம்!


இந்த வாரத்தின் ரசித்த பாடல்:

 

இந்த வாரத்தின் ரசித்த பாடலாக உத்திராகண்ட் மாநிலத்திலிருந்து ஒரு பாடல்.  பாடலை ரசிப்பதுடன் உத்திராகண்ட் மாநிலத்தில் உள்ள சில இடங்களையும் நீங்கள் பார்க்க முடியும். பார்த்து ரசிக்கலாமே!


 

அரக்கு பள்ளத்தாக்கு - தரவிறக்கம்

 

அரக்கு பள்ளத்தாக்கு என்ற தலைப்பில் வெளியான மின்னூல் – ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிஷா மாநிலத்திற்குச் சென்ற போது கிடைத்த அனுபவங்கள் மற்றும் அங்கே பார்க்க வேண்டிய இடங்கள் விரிவாகச் சொன்ன மின்னூல் வரும் செவ்வாய் கிழமை மதியம் வரை அமேசான் தளத்திலிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்!

என்னுடைய அனைத்து மின்னூல்களின் பட்டியலுக்கான சுட்டி கீழே:

மின்புத்தகங்கள் பட்டியல்


இந்த வாரத்தின் முகநூல் இற்றை:


முரளி என்ற நண்பரின் முகநூல் இற்றை பகிர்ந்தது நினைவில் இருக்கலாம். இன்றைக்கு வேறு ஒரு நண்பரின் முகநூல் இற்றை – குமார் எனும் நண்பர் – அவருடைய நட்பும் முப்பது ஆண்டுகளுக்கும் மேலானது.  தற்போதைய விலைவாசி பற்றிய அவர் இற்றை உங்களையும் யோசிக்க வைக்கும். படியுங்களேன்.

 

கொரோனாவிற்கு பின் எல்லாவற்றின் விலையையும் 10%க்கும் மேல் உயர்த்தியிருக்கிறார்கள். விலை Print செய்த எண்ணெய் packetலிருந்து விலை குறிப்பிடப்படாத காய்கறிகள் வரை விலையேற்றியிருக்கிறார்கள். மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமா இல்லை மூன்று மாத லாபத்தை எடுக்க வேண்டிய கட்டாயமா என்று தெரியவில்லை. TASMAC productகளில் இதை முதலில் கேள்விப்பட்டோம்!! கூரியர் Rs.50 ஆக்கியாச்சாம். நான் மார்ச்சு மாத ஆரம்பத்தில் வாங்கிய Samsung phone இப்போது ரூ.2ஆயிரம் அதிகம் என்கிறான் அமேசான்காரன். குறைவான வட்டியில் கடன் குடுக்க FD, SB வட்டிகளை அநியாயத்துக்கு குறைத்து வருகின்றன வங்கிகள். பென்ஷன் இல்லாமல் வங்கி வட்டியை வைத்து சாப்பிடுபவர்களுக்கு இது மிகவும் கஷ்டகாலம்.

என் தாயாருக்கு வழக்கமாக காண்பித்துவரும் Specialist doctor ஒருவரை சென்றமாதம் அவசரமாக தொடர்பு கொண்டாக வேண்டிய சூழ்நிலை. ஆனால் கிளினிக், மருத்துவமனை எங்கும் அவர் பார்ப்பதில்லை என்று கூறிவிட்டனர். வேறு doctor நண்பர்கள் மூலமாகக் கேட்டு மாத்திரை வாங்கி சாப்பிட்டாயிற்று. இப்போதுதான் சில நாட்களாக doctor வீடியோ conferencing மூலம் பார்ப்பதாக கூறினர். App ஒன்றை download செய்து UPI மூலம் பணம் செலுத்தி குறிப்பிட்ட நேரத்தில் தயாராக இருக்க வேண்டும். Fees Rs.250லிருந்து Rs300ஆக்கியிருந்தார். 2020-21ஆம் ஆண்டுக்கான உயர்வா இல்லை கொரோனாதான் இதற்கும் காரணமா என்று தெரியவில்லை.

இரண்டு மாத வருமான இழப்பை ஈடுசெய்ய வேண்டி விலையை உயர்த்துபவர்களுக்கும் இரண்டு மாத வருமான இழப்பினால் அதிகம் செலவு செய்ய முடியாத நிலையில் இருப்பவர்களுக்கும் tug of war நடக்கப்போகும் காலங்கள் இனி.

 

பின்னோக்கிப் பார்க்கலாம் வாங்க:


2011-ஆம் வருடம் இதே நாளில் என் வலைப்பூவில் எழுதிய பதிவு – மும்தாஜ் வந்துவிட்டால் என்ற தலைப்பில் ஆக்ரா பயணங்கள் எழுதிய பதிவு ஒன்றிலிருந்து சில வரிகள்…


நம் தமிழகத்தில் மன நிலை சரியில்லையெனில் கீழ்பாக்கத்திற்கு அழைத்துச் செல்வார்கள் அல்லவா, அது போன்ற மருத்துவமனை ஒன்று வட இந்தியாவில் அதுவும் ஆக்ராவில் இருக்கிறது.  அதற்குத் தான் அவர்கள் என்னை ஆக்ராவிற்கு அழைக்க, நான் இன்னும் அதிகமாய் அலறினேன்.

 

இந்த நிகழ்வுக்குப் பிறகு யார் தில்லிக்கு வந்துஆக்ரா போகணும், எங்களுக்கு ஹிந்தி தெரியாது, நீங்க வந்தா சௌகரியமாய் இருக்கும்!"-ன்னு  கேட்டாலும், 'கனவில் திரும்பவும் மும்தாஜ் வந்துவிட்டால்'…. என்ற பயத்தோடு "எனக்கு முன்பே ஒப்புக் கொண்ட வேலை இருக்கிறது" என்று நாசுக்காக ஒதுங்கிக் கொண்டு,  ஒரு தமிழர் நடத்தும் சுற்றுலா நிறுவனத்தினை கை காண்பித்து விடுகிறேன்.

 

முழுப்பதிவும் படிக்க ஏதுவாய் சுட்டி கீழே...

 

மும்தாஜ் வந்துவிட்டால்


நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் [சி]ந்திப்போம்...

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லி


54 கருத்துகள்:

 1. இன்றைய வாசகம் அருமையான வாசகம்.

  வித்தியாசமாய் இருக்கிறது திரு மகுடேஸ்வரனின் கவிதை.

  பாடல் - ரசித்தேன்.

  அரக்குப் பள்ளத்தாக்கு - வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   கவிதையும் பாடலும் ரசித்தமைக்கு நன்றி.

   மின்னூல் - வாழ்த்துகளுக்கு நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  2. வாசகம், கவிதை, பாடல் அருமை. விலைவாசி எல்லா பக்கமும் ஏரிவிட்டது. என் அக்கா நேற்று நேச்சுரல் அழகுநிலையத்தில் ஹைஜீன் காஸ்ட் என்று 100 கு மேல் விலையை கூட்டியிருப்பதாக சொன்னார். புது மின்னூல் வெளியீடு இல்லையா?

   நீக்கு
  3. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

   மின்னூல் - ஏழு சகோதரிகள் பாகம் 2 திங்களன்று வெளியிட்டேன். அதற்குப் பிறகு ஒன்றும் வெளியிடவில்லை. நாளை அல்லது நாளை மறுநாள் பாகம் 3 வெளிவரலாம்.

   நீக்கு
 2. இந்தப் பின்னோக்கும்  பதிவை இப்போதுதான் வாசிக்கிறேன்.   ஆர் வி எஸ் கமெண்ட் ரசித்தேன் - அதற்கு உங்கள் திருமதியின் பதிலையும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பின்னோக்கும் பதிவு - ஆஹா... இங்கே கொடுப்பதில் படிக்காத பதிவுகள் படிக்கப்படுவதில் மகிழ்ச்சி.

   நன்றி ஸ்ரீராம். அங்கேயும் கருத்தினை வெளியிட்டுவிட்டேன்.

   நீக்கு
 3. இன்றைய வாசகம் அழகு.. அருமை...
  மனதிற்கு இதமாக இருக்கிறது...

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

   நீக்கு
 4. அருமை. விலைவாசி ஏற்றம் எங்கும் எதிலும் எதிரொலிக்கிறது. இந்த ஏற்றத்தைச் சரிக்கட்ட யார் மக்களுக்குக் கொடுக்கப்போகிறார்களோ தெரியவில்லை. மற்ற இடங்களுக்கு இங்கே கொஞ்சம் பரவாயில்லையோ என எண்ணுகிறேன்.

  புதிய மின்னூலுக்கு வாழ்த்துகள். சுட்டியில் போய்ப் பார்க்கணும். படிச்சேனா இல்லையானு நினைவில் இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விலைவாசி ஏற்றம் - தமிழகத்தில் ரொம்பவே அதிகமாக இருக்கிறது. தில்லியில் இப்போதும் முன்னர் போலவே காய்கறி விலைகளில் மாற்றமில்லை.

   மின்னூல் - வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 5. மகுடேஸ்வரன் கவிதைகள் எப்போதுமே பிடித்தமானவை. தாஜ்மஹல் அப்படி ஒன்றும் என்னையும் கவரவில்லை. அதை விட அழகாக நம்ம ஊர்க் கோயில்களும் அதன் சிற்ப வேலைப்பாடுகளும் இன்றும் எவராலும் செய்ய முடியாததாக உள்ளன. அஜந்தா, எல்லோரா அதைவிடச் சிறப்பு எனத் தோன்றும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிதை - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தாஜ்மஹல் - ஒரு முறை பார்க்கலாம். அவ்வளவு தான்.

   அஜந்தா எல்லோரா - இன்னும் பார்க்கும் வாய்ப்பு அமையவில்லை கீதாம்மா...

   நீக்கு
  2. கீசா மேடம்... அதன் சிறப்பு, மனைவிக்காக ஒரு அரசன் ப்ரம்மாண்டமாக ஒரு நினைவுச்சின்னம்/சமாதி எழுப்பியிருக்கிறானே என்பதுதான்.

   நம்ம ஊர்ல யாரு மனைவிக்காக ஏதேனும் செஞ்சிருக்காங்க? கலைநயமிக்க கட்டிடம், கோவில்?

   நீக்கு
  3. நெல்லையாரே, நீங்க எப்போப் பார்த்தீங்க? சமீபத்தில் போனப்போவா? இதில் தர்க்கரீதியான பல விஷயங்கள் உள்ளன. எழுதினால் பெரிசாகும். அவரவருக்குப் பிடித்தது, அவரவர் ரசிக்கலாம். எனக்கு ரசிக்கலை. அம்புடுதேன்!

   நீக்கு
  4. பிரம்மாண்டமான நினைவுச் சின்னம் - மனைவிக்கு, வேறு யாரும் அமைத்ததாகத் தெரியவில்லை நெல்லைத் தமிழன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  5. சிலருக்கு சில இடங்கள் ரசிப்பதில்லை - உண்மை தான் கீதாம்மா...

   நீக்கு
 6. எனக்குத் தோன்றியதை எழுதுகிறேன். கவிதையில் பொருட்குற்றம் உளது. (மணம் என்றாலே நக்கீரன் வந்து விடுவார்). மருக்கொழுந்து இலை. ஒப்பிடப்பட்ட மற்றவை யாவும் பூக்கள். பூக்களுடன்  இலை வாசனை ஒப்பீடு சரியில்லை. வேண்டும் என்றால் கொத்தமல்லி, கருவேப்பிலை, பிரிஞ்சி இலை போன்றவற்றுடன் ஒப்பிடலாம் என்றாலும் அங்கும் பொருட்குற்றம் தடுக்கிறது. 
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

   நீக்கு
  2. பூ வகைகள் தான் சொல்லணும்னா மகிழம்பூவைச் சொல்லலாம். காய்ந்தாலும் நீண்ட நாட்கள்/மாதங்கள் மணம் வீசும். அபூர்வமான மணம். எங்க பள்ளியில் மகிழ மரத்தடியில் தான் அமர்ந்து சாப்பிடுவோம். சிவகாமியின் சபதம் நாவலில் மாமல்லரும், சிவகாமியும் மகிழ மரத்தடியில் தான் சந்திப்பார்கள். பன்னீர்ப்பூக்களின் மணமும் அலாதியானது. அதுவும் இரவு நேரத்தில் போக்குவரத்தற்ற சாலையில் நடந்தால் அங்கே பன்னீர்ப்பூ மரங்கள் இருந்து பூக்களும் உதிர்ந்திருந்தால் அதிலிருந்து வரும் மணம்!

   நீக்கு
  3. மகிழமர் நினைவுகள் - இனிமையானவை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 7. எல்லோரும் தாஜ்மஹால் பார்க்கப்போகும்  நேரம் உச்சி வெயில். பாதங்கள் சுடசுட ஓடி பார்க்கும்போது உடல் நோவுகள் தான் மனதில் தங்கும். பார்க்க நல்ல நேரம் சூரியோதயம் போது அல்லது அந்தி வெயில், அல்லது பவுர்ணமி நிலவில். நிலவு வெளிச்சத்தில் பார்க்க அழகாக இருக்கும். 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாலை நேரத்தில் பார்க்க நன்றாகவே இருக்கும் ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  2. நாங்கள் பகல், மாலை, இரவு 3 நேரமும் பார்த்திருக்கோம். :)))))

   நீக்கு
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 8. வாசகம் அருமை ஜி
  கவிதை முரண் படும் விசயங்களை சொல்கிறது அழகு.

  கொரோனா மருத்துவர் கட்டணத்தையும் உயர்த்தி விட்டதே...

  காணொளி பிறகு காண்பேன் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

   நீக்கு
 9. உத்திராகாண்ட் மலையழகின் பாடல் காணொளி கண்டேன் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உத்திராகண்ட் மலையழகு ரொம்பவே நன்றாக இருக்கும் கில்லர்ஜி.

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. இந்த வார வாசகம் அருமை.

  மற்ற செய்திக்கோர்வையும் நல்லாவே இருந்தன.

  விலை உயர்வுக்கு உண்மையான காரணம், டிரான்ஸ்போர்ட்டில் உள்ள சிக்கல், டெலிவர் செய்வதில் உள்ள எக்ஸ்ட்ரா செலவுகள். தயார் செய்யும் இடத்திலும் அவர்கள் கூடுதலாக செலவு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவேண்டிவருது.

  நமக்கு நோய்த்தொற்று ஏற்படக்கூடாது என்பதற்காக பிறர் மேற்கொள்ளும் ரிஸ்க்குக்கான விலை என்று நினைத்துக்கொள்ளவேண்டியதுதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம், பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

   இங்கே தில்லியில் விலைவாசி அத்த்தனை மாற்றம் இல்லை.

   நீக்கு
 11. கவிஞர் மகுடேஸ்வரன் அவர்களின் வரிகள் அருமை...

  உத்திராகண்ட் மாநில காணொளி இசையும் ரசிக்க வைத்தது...

  அரக்கு பள்ளத்தாக்கு தரவிறக்கம் செய்து கொண்டேன் ஜி... நன்றி...

  விலையேற்றம் ஒரு புறம்... வருமானத்திற்கு வழியில்லாத நிலை ஒரு புறம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிதை, காணொளி - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   மின்னூல் - தரவிறக்கம் செய்து கொண்டதற்கு நன்றி.

   சூழல் விரைவில் சரியாகட்டும்.

   நீக்கு
 12. கவி அருமை
  தங்களின் மின்னூலுக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிதை - மகிழ்ச்சி.

   மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 13. காணொளி ரசனை.
  விலைவாசி ஏற்றம் மக்களுக்கு துன்பம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காணொளி - பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

   விலைவாசி ஏற்றம் - கடினமான ஒன்று தான்.

   நீக்கு
 14. இந்த வார வாசகம் பொருள் பொதிந்தது!

  மற்றவைகளும் சுவை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் மற்றும் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முஹம்மது நிஜாமுத்தீன்.

   நீக்கு
 15. வாசகம், காணொளி அருமை.

  உத்திராகண்ட் மாநிலத்தில் இயற்கை அழகை கண்டேன்.

  மின்னூலுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம், காணொளி - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா....

   இயற்கை அழகு - உத்திராகண்ட் அழகான இடம் தான். அங்கே ஒரு சில இடங்கள் மட்டுமே பார்த்திருக்கிறேன்.

   மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 16. வாசகம், கவிதை பாட்டு எல்லாமே ரசித்தேன் வெங்கட்ஜி

  மின்னூல் வெளியீட்டிற்கு வாழ்த்துகள்!

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகளை ரசித்தமைக்கு நன்றி துளசிதரன் ஜி.

   மின்னூல் - வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 17. இன்று கிட்டுவுடன் மாலை நேரத்திலாவது ஒரு காஃபி குடிக்கலாம் என்று நினைத்து முடியாமல் போனது!!! டின்னர்/சப்பர் டைம் வந்திருக்கிறேன்!!!

  வாசகம் அட்டகாசம்! மிகவும் ரசித்தேன். நல்ல பொருள் பொதிந்த ஒன்று!

  அட! மலரைச் சொல்லியே மனம் பற்றி பேசும் அழகான வித்தியாசமான கவிதை! ரசித்தேன்.

  உங்கள் நண்பர் முரளி அவர்க்ளின் இற்றை நினைவு இருக்கிறது ஜி.

  இங்கு காய்களின் விலை அதிகரித்தது போல் இல்லை. நாங்கள் முன்பு சந்தையில் வாங்கியது போலவே இப்போது அருகிலும் ஒரு க்டையில் கிடைக்கிறது. 10 ரூபாய்க்கு 3 பேர் சாப்பிடும் அளவு...கூட்டாகச் செய்தால் 4, 5 பேர் சாப்பிடலாம். பெரிய மஞ்சள் பூஷணிக்காய் 20 ரூபாய் தான். இப்போதைக்கு இப்படி ஓடுகிறது. எங்கள் பகுதி கடைகளில் கூடியது போல் தெரியவில்லை ஜி பாக்கெட் பொருட்கள்.
  ஆனால் கண்டிப்பாக //இரண்டு மாத வருமான இழப்பை ஈடுசெய்ய வேண்டி விலையை உயர்த்துபவர்களுக்கும் இரண்டு மாத வருமான இழப்பினால் அதிகம் செலவு செய்ய முடியாத நிலையில் இருப்பவர்களுக்கும் tug of war நடக்கப்போகும் காலங்கள் இனி.// டிட்டோ செய்கிறேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிலருக்கு இரவு உணவுக்குப் பிறகு காஃபி அருந்தும் பழக்கம் உண்டே கீதாஜி! :)

   வாசகம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   விலையேற்றம் - நிறைய பேருக்கு பிரச்சனை தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 18. பாடல் செம..ராப் போல!! .அதோடு உத்தர்காண்ட் காட்சிகள் செமையா இருக்கு அந்த பாலம்..வாவ் அப்புறம் பறவைப் பார்வையில் வியூவில் வரும் கிராமம்...நன்றாக இருக்கிறது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காணொளி வழி பகிர்ந்து உத்திராகண்ட் மாநிலம் எனக்கும் பிடித்த இடம். உங்களுக்கும் காணொளி பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

   நீக்கு
 19. வெங்கட்ஜி!! ஹையோ மும்தாஜ் வந்துவிட்டால் வாசித்து சிரித்துவிட்டேன்...அங்கு கொடுப்பதற்குப் பதில் இங்கு தரேன்...இதுதானே புது பதிவு ஸோ..

  //”ஷாஜஹான் கூட இவ்வளவு முறை என்னைப் பார்க்க வந்திருப்பாரா என்று தெரியவில்லை! உங்களுக்குத்தான் என் மேல் எவ்வளவு ஆசை!!” என்று காதலுடன் என்னைப் பார்த்துக் கூறுவது போல இருந்தது…”//

  சிரித்து முடியலை...ரசித்தேன் ஜி

  நானும் ஒரே ஒரு முறை சென்றதோடு சரி என்னை ஆக்ரா ஈர்க்கவில்லை. என்னவோ தெரியலை. ஒரு வேளை அங்கு கச கச என்று வெயில் சமயம் போனதாலோ என்னவோ...ம்ம் இருந்தாலும் அதற்குப் பதில் நான் மலைப்பகுதி, ஆறுகள் அருவிகள் உள்ள இடங்களுக்குப் மீண்டும் எனறாலும் உடனே மூட்டை கட்டிவிடுவேன்!! ரெடியாக. ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மும்தாஜ் வந்து விட்டால் - ஹாஹா.... பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

   இப்போதெல்லாம் யாரும் அழைப்பதில்லை. அழைத்தாலும் நான் போவதாக இல்லை!

   நீக்கு
 20. உங்களுக்கு நிஜமாவே ரொம்பப் பொறுமை 30 முறை ஆக்ராவுக்குப் போனது!! ஒரு முறை போனதற்கே நான் போதும்னு அலறிட்டேன் ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொறுமை - ஹாஹா... தவிர்க்க முடியாத காரணங்கள் உண்டு.

   கோடையில் மதிய நேரத்தில் அங்கே போவது கொடுமையான அனுபவம் கீதாஜி.

   நீக்கு
 21. வணக்கம் சகோதரரே

  வாசகம் அருமை. இன்றைய காஃபி வித் கிட்டு பகுதிகள் அமர்க்களமாக உள்ளது.

  கவிதை நன்றாக உள்ளது. ரசித்தேன்.

  பாடல் இனிமையாக இருக்கிறது. உத்தரகாண்ட் மலையழகும், இயற்கையழகும் சேர்ந்த பாடல் காட்சிகள் ரசிக்கும்படி இருந்தது.

  தங்களது மின்நூலுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்..

  விலைவாசி ஏற்றந்தான் வருடந்தோறும் அதிகரிக்கிறதே. இப்போது கொரோனாவில் காய்கள், சாமான்கள் என ஆன்லைன் வர்த்தகத்தில் வாங்குகிறோம். ஒன்றிரண்டை தவிர விலைகள் ஏறவில்லை என நினைக்கிறேன். வெளியில் சென்று வாங்கும் காலங்கள் எப்போதோ?

  பின்னோக்கி தங்களின் பழைய பதிவுக்கும் சென்று படித்து வந்தேன். மிக நகைச்சுவையாக எழுதியிருக்கிறீர்கள். உங்கள் கனவில் வந்த மும்தாஜ் கேட்ட கேள்வி மிகவும் சிரிப்பை தந்தது அதற்கு வந்த கருத்துரைகளும் நகைச்சுவையாக இருந்தன. படித்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கமலா ஹரிஹரன் ஜி.

   மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி.

   பின்னோக்கி - மும்தாஜ் பதிவு - நீங்களும் ரசித்ததில் மகிழ்ச்சியும் நன்றியும்.

   நீக்கு
 22. நல்லதொரு தொகுப்பு. பகிர்ந்த கவிதை அருமை.விலைவாசி குறித்த தங்கள் நண்பரின் கூற்று உண்மை. மின்னூல் வெளியீட்டுக்கு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காஃபி வித் கிட்டு - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

   மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....