திங்கள், 29 ஜூன், 2020

நல்ல காலம் பொறந்திருக்கு… – கதை மாந்தர்கள் – கொரோனா கதைகள்…


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம்.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் துவங்கலாம் வாருங்கள்.

 

மனது என்பது கண்ணாடி போன்றது. நீ என்ன எண்ணுகிறாயோ அதையே அது செய்யும். எனவே என்றுமே நல்லதையே நினைப்போம்.

 

*****


“என்னப்பா சுக்வீந்தர்,  உன்னைப் பார்த்து பல நாட்களாகிவிட்டதே… கொரோனா காலம் எல்லோரையும் வீட்டில் உட்கார வைத்து விட்டது.  நீ எப்படி இருக்கிறாய்?  தொழில் எல்லாம் எப்படிப் போகிறது?” என்று எதிரே வந்து கொண்டிருந்தவனைப் பார்த்ததும் கேள்விக் கணைகளைத் தொடுத்தார் அமர்நாத்.   


“பாபுஜி…. நான் நன்றாகவே இருக்கிறேன்.  உண்மை தான் கொரோனா எல்லோரையும் பாடாய் படுத்திக் கொண்டு இருக்கிறது.  பலரும் வேலையில்லாமல் திண்டாடுகிறார்கள். அடுத்த வேளை உணவுக்கு என்ன வழி என்று தெரியாமல் பலரும் விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.  பசி, பட்டினி போன்றவையும் பல இடங்களில்! நடந்தே ஊர் திரும்பும் மனிதர்களைப் பற்றி தினமும் நாளிதழிலும், தொலைக்காட்சிகளிலும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் பாபுஜி.  எனக்கும் சில நாட்கள் கடினமாகவே இருந்தது பாபுஜி.  ஆனால் இப்பொழுது எனக்கு நேரமே இல்லை.  ஓடி ஓடி உழைக்கிறேன். உழைப்பிற்கான ஊதியமும் வந்து கொண்டிருக்கிறது.  நான் மட்டுமல்ல என் மனைவி Gகுர்ப்ரீத்தும் உழைத்துக் கொண்டே இருக்கிறாள்…”


”ஆஹா…. கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது சுக்வீந்தர், கொஞ்சம் விவரமாத் தான் சொல்லேன் கேட்கிறேன் – கொஞ்சம் அந்த பஸ் ஸ்டாண்ட்ல உட்கார்ந்து பேசலாமா? வயசாயிடுச்சே… நிறைய நேரம் நிக்க முடியல, அப்பப்ப உட்கார்ந்துக்க சொல்லுது உடம்பு” என்றபடியே நடந்தார் அமர்நாத். 


“ஓ பேசலாம் பாபுஜி… நான் இன்னிக்கு நல்லா இருக்கக் காரணம் நீங்க தானே பாபுஜி. உங்க கிட்ட சொல்லாம வேற யாருகிட்ட சொல்லப்போறேன். வாங்க உட்கார்ந்தே பேசலாம்.” என்றபடி கூடவே நடந்தான் சுக்வீந்தர். 


“சொல்லு சுக்வீந்தர், உன் சந்தோஷ வாழ்க்கையைச் சொல்லு, ஒரேயடியா எல்லோருடைய கஷ்டங்களைக் கேட்டுக் கேட்டு காதே கதறிக் கொண்டிருக்கிறது…  உன் சந்தோஷ கதையைக் கேட்டு என் காதும் கொஞ்சம் குளிரட்டும்.” என்றபடியே பேருந்து நிலையத்தில் அமர்ந்தார் அமர்நாத். 


“பாபுஜி, நீங்க வேலை பார்த்த பாங்ல இருந்து லோன் வாங்கிக் கொடுத்து எனக்கு ஒரு இரும்புப் பட்டறை வைத்துக் கொடுத்தீங்க இல்லையா, முன்னாடி பார்த்த வேலைகள் வரத்து குறைஞ்சுடுச்சு. என்னடா பண்ணறது, வேலையில்லாம கஷ்டமாக இருக்கேன்னு… வைகுரு (Wahe Guru) நம்மைச் சோதிக்கிறாரேன்னு மனது அடிச்சுக்கும். வைகுரு என்னைக் கைவிடல!  இந்த கொரோனா காலத்துல புதுசா சில வேலைகள் – காலத்துக்குத் தகுந்தமாதிரி கிடைச்சுது பாபுஜி.  எல்லா அலுவலகத்திலும் சானிடைசர் பயன்பாடு அதிகமாகிடுச்சு. வாசலிலேயே சானிடைசர் டிஸ்பென்ஸர் வைக்க ஆரம்பிச்சுட்டாங்க.  அதையும் கையால அழுத்திப் பயன்படுத்தினா எங்க கொரோனா வந்துடுமோன்னு காலில் அழுத்தி சானிடைசர் கையில் வரும்படி செய்ய, சின்னச் சின்ன டிஸ்பென்ஸருக்கான தேவை அதிகரிச்சு இருக்கு.  அந்த மாதிரி டிஸ்பென்ஸர் தயாரிக்க என்னோட பட்டறைக்குக் கொஞ்சம் ஆர்டர் வந்தது.  நம்ம தொழில் சுத்தம் பார்த்து அவங்களுக்குப் பிடிச்சுப் போக, அடுத்தவங்களுக்கும் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.   இப்ப கை நிறைய ஆர்டர் இருக்கு.  ஒவ்வொரு நாளும் பட்டறையில் வேலை தொடர்ந்து நடந்துக்கிட்டே இருக்கு.  நான் உழைக்கிறது மட்டுமில்லாம நாலு ஆட்களையும் போட்டு வேலை வாங்குறேன்.  அவர்களுக்கும் சம்பளம் கொடுத்து அவங்களையும் அவங்க குடும்பத்தையும் மகிழ்வா வைச்சுக்க முடியுது பாபுஜி”.


”கணிசமான லாபமும் கிடைக்குது.  வாங்குன கடனைக் கூட  இரண்டு மாசத்துல முழுசா கட்டிடுவேன் பாபுஜி.  அந்த அலுவலகங்களிலேயே மாஸ்க்-ம் கேட்டாங்க.  வீட்டுல  Gகுர்ப்ரீத் கிட்ட சொன்னேன். வீட்டில இருக்க தையல் மெஷின் வைச்சு மாஸ்க் தைக்க ஆரம்பிச்சுட்டாங்க.  ஒரு நாளைக்கு 100 மாஸ்க் தான் தைக்க முடியுது, அது பத்தாதுன்னு இன்னும் ஐந்து மெஷின் வாடகைக்கு எடுத்து, ஆள் போட்டு தைக்க ஆரம்பிச்சு இருக்காங்க – வீட்டில் இருந்தபடியே வேலை செய்து நிறைய மாஸ்க் தைச்சு அதையும் விக்கறோம். அதுலயும் நல்ல லாபம் வருது.  வேலைக்கு வச்ச பெண்களுக்கும் கூலி கொடுத்து அவங்களையும் சந்தோஷமா வச்சுக்க முடியுது.  ஆண்டவன் ஒரு கதவை மூடினா இன்னுமொரு கதவை திறந்து வைப்பான்னு சொல்வாங்க…. அது எனக்கும் இந்த சமயத்துல நல்லாவே புரிஞ்சுது பாபுஜி”.


”நீ சந்தோஷமா இருக்கணும் சுக்வீந்தர். எல்லா கஷ்ட காலத்துலயும் சில நல்ல விஷயங்களும் இருக்கும் சுக்வீந்தர்.  பிரச்சனைகள் யாருக்குத்தான் இல்லை.  இந்தப் பிரச்சனைகள் எல்லாம் நல்லபடியா முடியணும்கிறது தானே எல்லோருடைய ஆசையும்.  நல்லா இருப்பா.  மேலும் மேலும் உழைச்சு நீ வாழ்க்கையில நல்ல முன்னேறணும்.  சரிப்பா… நான் புறப்படறேன்.  நீயும் உன் வேலையைப் பார்க்கணுமே, புறப்படு” என்று சொல்லியபடி புறப்பட்டார் அமர்நாத்.


”ஒரு கதவு மூடினால் இன்னுமொரு கதவு திறக்கும்” எவ்வளவு அழகா சொல்லிட்டானே சுக்வீந்தர் என்று நினைத்தபடியே நடந்தார் அமர்நாத்.  ”எல்லாம் நல்லாவே முடியும்னு நம்பிக்கை வேணும். நம்பிக்கை தானே வாழ்க்கை….” என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டே நடந்தார்.


*****

நண்பர்களே, இன்றைய பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வழி சொல்லுங்கள்.  நாளை வேறு ஒரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை….


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி.


படங்கள்: இணையத்திலிருந்து....

38 கருத்துகள்:

 1. வாசகம், ஒரு நாளைக்கு இரண்டு தரம் சரியான நேரம் காட்டும் தின்றுபோன கடிகாரம் இரண்டையுமே ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. ஆம், ஒரு சாரார் வேலையில்லை என்று வருந்தினாலும் சிலர் புத்திசாலித்தனமாக பிழைக்கிறார்கள். சில ஷேர் ஆட்டோக்காரர்கள் இப்போது ரெகுலராக காய்கறி, பழங்கள் கொச்டுவந்து விற்பனை செய்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான். சிலருக்கு இந்த வேளையில் நல்ல பிசினஸ். எங்கள் வீட்டின் அருகே ஒரு கடை மூடியே கிடந்தது. அதனை ஒருவர் இப்போது வாடகைக்கு எடுத்து, விதம் விதமாக சானிடைசர் விற்கிறார். நல்ல சேல்ஸ்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. உழைப்பு, விடாமுயற்சி, சமயோசிதம் மூன்றும் இருந்தால் யாரும் எந்த சூழ்நிலையிலும் பிழைத்துக் கொள்ளலாம். அற்புதமான கதை. வாழ்க சுக்வீந்தர் வகை மனிதர்களும், அவர்கள் குடும்பங்களும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உழைப்பு, விடாமுயற்சி, சமயோசிதம் - முக்கியத் தேவைகள் தான் கௌதமன் ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

 4. இங்கு ஊரடங்கு சமயத்தில் பலர் வேலை இழந்தனர் ஆனால் அதே சமயத்தில் மக்கள் கடைகளுக்கு செல்ல அஞ்சியதால் பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்தனர்.. இந்த நேரத்தில் ஆன்லைன் பொருட்களை டெலிவரி செய்ய ஆட்கள் அதிகம் வேண்டி இருந்தது சோம்பேறித்தனம் இல்லாத ஆட்கள் இந்த வேலையில் சேர்ந்தனர் நன்றாக சம்பாதித்தனர் இதுமட்டுமல்ல ஒவ்வொரு தடவையும் நாம் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் போது நமக்கு என ஒரு பெர்ஷனல் ஷாப்ப்ர் நாம் சொல்லும் பொருளை தேடி எடுக்கிறார். நான் சொன்ன பொருள் இல்லையென்றால் உடன்ற் நமக்கு டெக்ஸ்ட் செய்து அது இல்லை அதுக்கு மாற்றாக வேற என்ன வேண்டும் என்று கேட்கிறார். உதாரணமாக இங்கே பல வகையான பால் கிடைக்கும் பல ப்ராண்ட்டும் இருக்கும் நாம் சொன்ன பால் இல்லை என்றால் வேற என்ன மாதிரியான பால் இருக்கிறது என்பதை அவர் சொல்லும் போது அதில் இருந்து நமக்கு தேவையானதை எடுத்து பேக் செய்து 2 மணி நேரத்திற்குள் வீட்டிற்கு டெல்வரி செய்து விடுகிறார் அவருக்கு ஷாப்பிங் நிறுவனம் கொடுக்கும் சம்பளத்துடன் டெலிவரி செய்யும் போது கிடைக்கும் டிப்ஸும் மிக அதிகமாக கிடைக்கிறது... உழைப்பவர்கள் இதை எல்லாம் பயன்படுத்தி சம்பாதிக்கிறார்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உழைப்பவர்கள், சோம்பேறித்தனம் இல்லா ஆட்கள் இந்த கொரோனா காலத்திலும் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது உண்மை. பலரும் நடப்பதை நினைத்து வருத்தத்தில் இருக்க, சிலர் சூழலை சரியாகப் பயன்படுத்தி, வெற்றி காண்கிறார்கள்.

   உங்கள் விரிவான கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   நீக்கு
 5. பதில்கள்
  1. //உழைப்பவருக்கு எதுவும் எளிது// உண்மை தான் தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. வாசகமும் அதர்க்கு பொருத்தமான கதையும் அருமை ஐய்யா.
  "மனம் தரும் பணம்" என்ற நூல் இதை தான் மேலும் ஆழமாக சொல்கிறது, அது குறித்த அறிமுகம் தயார் ஆகிக்கொண்டே இருக்கிறது.
  எண்ணம் பாசிட்டிவ் ஆ இருந்தா எந்த சூழலிலும் நமக்கான வாய்ப்பு தென்படும் என்பதை எடுத்துக்காட்டிய தங்கள் கதை அருமை.
  உலகம் அழியும் வரை மனிதனுக்கான தேவையும் அது சார்ந்த தொழிலும் நிச்சயம் இருக்கும்.
  ஒரு தொழில் செய்து பழகிய பலர் கொராணா நிகழ்த்திய தடபுடல் மாற்றத்திர்க்கு ஈடு கொடுத்து மாறிக்கொள்ள நேரம் பிடிக்கிறது என்றே நான் கருதுகிறேன்.
  மாஸ்க் தைக்கும் பெண்கள், நாளை கொரானா காணாமல் போனாலும் வேரு துணிகள் தைத்து தொழிலில் சிறக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகமும் இன்றைய பகிர்வும் உங்களூக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

   மனம் தரும் பணம் - தேடிப் பார்க்கிறேன் அரவிந்த்.

   நீக்கு
 7. சிலருக்கு வாழ்வு கொடுக்கிறது கொரோனா. சூழ்நிலைக்கதை அருமை ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிலருக்கு வாழ்வு கொடுக்கிறது கொரோனா - உண்மை கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. ஆம். கொரோனா, பல்வேறு புதிய வியாபாரங்களுக்கு அடிகோலியிருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புதிய வியாபாரங்களுக்கு அடிகோலியிருக்கிறது - உண்மை தான் நெல்லைத் தமிழன். சூழலைச் சரிவர பயன்படுத்தத் தெரிந்திருந்தால் சுகமே.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. இங்க புதிது புதிதாக நிறைய காய்கறி கடைகள் முளைத்தன. இப்போவும் ஆங்காங்கே தேங்காய் கூறு போட்டு வித்துக்கிட்டிருக்காங்க.

  ஆனால் தெரு முனைகளில் கம்பிகளில் கட்டி மாஸ்க் விற்பதுதான் பார்க்கச் சகிக்கலை. யார் யாரோ தொட்டுவிட்டுச் செல்கிறார்கள். சுகாதாரம் ரொம்பவே கம்மி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லை பாவம் நெல்லை அவங்களுக்கு அப்படி மாஸ்க் விற்பதுதான் வழி என்றால் என்ன செய்ய முடியும்.

   எப்படியான மாஸ்க் வாங்கினாலும் உறையில் பேக் செய்து வருவதே கூட ...வாங்கினால் நன்றாகக் கழுவி ஒரு முறை ஆட்டோ க்ளேவ் செய்து பயன்படுத்தினால் நல்லதே. அது நீங்கள் இங்கு சொல்லியிருக்கும் மாஸ்க் உட்பட.

   கீதா

   நீக்கு
  2. காய்கறிக் கடைகள் - ஆமாம். தேங்காய் கூறு போட்டு விற்பது இங்கே கிடையாது. ஆனால் உடைத்த தேங்காய் கிடைப்பதுண்டு நெல்லைத் தமிழன் - ஆனால் இப்பொழுது யாரும் விற்பதில்லை - பயம் தான் காரணம். சாலை சந்திப்புகளில் பிளாஸ்டிக் கவரில் முகக் கவசங்கள் விற்கிறார்கள் இங்கே.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  3. சூழல் - அவர்களும் பாவம் தான். வீட்டில் தைப்பதையே கூட நன்றாகத் துவைத்து பயன்படுத்துவதே நல்லது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 10. பதில்கள்
  1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 11. வாசகங்கள் இரண்டுமே அருமை ஜி!

  கதை மிக மிக பாசிட்டிவ்! நல்லா எழுதியிருக்கீங்க ஜி

  இந்தச் சூழலிலும் கூட நிறையப்பேர் இப்போது என்ன செய்தால் வழி பிறக்கும் என்று சோம்பி இருக்காமல், மனதை சோகப்படுத்திக்காமல் அடுத்தது என்ன என்று யோசித்துப் பிழைக்கிறார்கள்.

  என் தங்கை சொன்னாள் அங்கு பலரும் உணவுக்கடை மூடியதால் வீட்டிலிருந்தே உணவு தயாரித்து டெலிவரி செய்து சம்பாதிக்கிறார்கள் என்று. அதுவும் இல்லாமல் அவர்கள் செய்து வந்தவற்றை எல்லாம் ஆன்லைனில் விற்பனைக்கு மாற்றினார்களாம். எனவே அவர்களின் கஸ்டமர்களும் இழக்கவில்லை என்றும் சொன்னாள்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

   எல்லாச் சூழலிலும் சரியான முயற்சி எடுப்பது தேவையான ஒன்று.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 12. காலத்துக்கு ஏற்ற தொழில் இங்கும் பலர் இவ்வாறு தொழில் செய்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலத்துக்கு ஏற்ற தொழில் - அது தானே நல்லது மாதேவி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 13. பதில்கள்
  1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 14. கொரோனா கதை பிரமாதம். ஒரு கதவு மூடினால் இன்னுமொரு கதவு திறக்கும் -நம்பிக்கைதான் வாழ்க்கை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்பிக்கை தான் வாழ்க்கை - அதேதான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

   நீக்கு
 15. ”எல்லாம் நல்லாவே முடியும்னு நம்பிக்கை வேணும். நம்பிக்கை தானே வாழ்க்கை…//

  உண்மை ,நம்பிக்கைதான் வாழ்க்கை.
  நம்பிக்கையோடு கணவரும் ,மனைவியும் உழைத்து பிறருக்கும் வேலை கொடுத்தது மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 16. நேர்மறை எண்ணம் தரும் அருமையான கதை ...

  மகிழ்ச்சி ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுப்ரேம் ஜி.

   நீக்கு
 17. அருமை..
  காலத்திற்கேற்ற சம்பவக்கோர்வை..
  நிஜத்தில் நடக்கத்தான் வேண்டும்...

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி.

   நீக்கு
  2. மிக உன்னதமான மகிழ்ச்சி தரும் பதிவு. எந்நாளும் இதே போல நல்ல செய்திகள் காதில் விழவேண்டும். கடிகாரமும் நனமை செய்கிறது. பெரியவரும் சுக்வீந்தரும் மேலும் மேலும் நன்மை பெறவேண்டும். நீங்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நன்றிகள் பல. வெங்கட்.

   நீக்கு
  3. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....