செவ்வாய், 9 ஜூன், 2020

கதம்பம் - புறாவின் குரல் - இடைவெளி - மாற்றங்கள் - அம்மா - லக்ஷ்மண் ரேகா

நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.


உங்களது வாழ்க்கை எப்போதும் நிறைவாக இருக்கிறது என்று எண்ணுங்கள். இதை உங்கள் மனதில் வற்புறுத்திக் கூறி பதியச் செய்து விடுங்கள். வாழ்க்கையில் எப்போதும் நிறைவைப் பற்றிச் சிந்திப்பதால், அதன் மூலமே மேலும் உண்மையான நிறைவான வாழ்க்கையை விரைவில் பெற்று விடுவீர்கள் - இது உறுதி. 


புறாவின் குரல் - 25 மே 2020: டெல்லியில் புறாக்கள் அதிகம். பாத்ரூம் ventilationல் நின்று கொண்டு ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்... என்று சத்தம் போட்டுக் கொண்டே இருக்கும்!! முதலில் சில நாட்களுக்கு ரொம்பவே பயமாக இருந்தது  

சில சமயம் பால்கனி வழியே பெட்ரூம், சமையலறை என்று உள்ளே வந்து விடும். அவ்வளவு சீக்கிரம் போகாது. விரட்டுவதற்கு பக்கத்து வீட்டு Bimla ஆண்ட்டியிடம் ஓடி அரைகுறை ஹிந்தியிலும், ஆங்கிலத்திலுமாக புரிய வைத்து அழைத்து வருவேன் 

இன்று ஏன் இந்த புறாக் கதை??? என்று யோசிப்பது புரிகிறது. 

இங்கும் அதே ம்ம்ம்... ம்ம்ம் 

படத்தில் இருப்பது இன்று நான் படம்பிடித்த புறா தான்.  ஹிந்தியில் புறாவுக்கு கபூத்தர் என்று பெயர்.

டெல்லியில் அப்போது என்னை பயமுறுத்திய சில விஷயங்களில் முதன்மையானது என் கணவர் வைத்திருந்த கைகளை போன்றே இருக்கும் soap holder.  இரண்டாவது புறாக்களின் குரல்!

***

தலைமுறை இடைவெளி - 26 மே 2020: எனக்கும் மகளுக்கும் இடையே புரிதல், கருத்து வேறுபாடு பற்றி யோசித்ததில் பெரியவர்கள் சொல்லை தட்டாதது, அனுசரித்தல், விட்டுக் கொடுத்தல், விருப்பங்கள் என்று பல விஷயங்கள் மாறுபடுகின்றன. நான் வளர்த்த பெண் தான். எல்லா விஷயங்களையும் எடுத்து சொல்வேன். ஆனாலும்!!!! என்னுடைய தலைமுறையில் செய்த சில விஷயங்கள்...

1) எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என நினைப்பது.

2) ஒரு விஷயம் பிடித்தாலும்/ பிடிக்காவிட்டாலும் பெரியவர்கள் சொல்லை மறுக்காமல் செய்வது.

3) ஒரு விஷயத்தை பற்றி நமக்கு நன்றாகவே தெரிந்தாலும் அப்பா அம்மா / கணவனிடம் கேட்டு செய்வது.

4) இந்த விஷயம் எனக்குப் பிடிக்கும்/ பிடிக்காது என்று வெளிப்படையாக சொல்லாதிருத்தல்.


இவை எதுவும் இப்போதைய தலைமுறைக்கு இல்லை. எல்லாவற்றையும் ஈஸியாக எடுத்துக் கொள்வது. எதற்காகவும் அலட்டிக் கொள்ளாதது. மெனக்கெடாதது என்று இன்னும் பல மாறுபாடுகளும் இருக்கு. 


உங்கள் வீட்டிலும் இப்படி பல விஷயங்களை உணர்ந்திருக்கலாம். பகிர்ந்து கொள்ளுங்களேன்! நானும் தெரிந்து கொள்கிறேன்.


ஊரடங்கு-1: 27 மே 2020: 
பொது முடக்கம், ஊரடங்கு, சமூக இடைவெளி, முகக்கவசம், நோய்த்தொற்று, தனிமைப்படுத்தல் என்ற வார்த்தைகளைத் தான் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அரசு ஒருபுறம் சொல்லிக் கொண்டிருந்தாலும் 'இதையெல்லாம் பார்த்துட்டு உட்கார்ந்தா முடியுமா? வாழப் பழகிக்கணும்!” என்று சொல்வோரும் இருக்கின்றனர்.

ஒவ்வொருவரின் வாழ்வும், பிழைப்பும், பார்வையும் வேறு!! தொற்றும் ஒவ்வொரு நாளும் கூடிக் கொண்டே தான் செல்கிறது. பேருந்து மட்டும் தான் ஓடவில்லை மற்றபடி மக்கள் சகஜமாக அவரவர் பணியை கவனித்துக் கொண்டிருக்கின்றனர். நம்முடைய பாதுகாப்பு நம் கையில்!!

திருச்சியில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே தான் இருக்கிறது. அனல் காற்று!! புழுக்கம்! ஒரு மழை பெய்து வெப்பத்தை தணிக்காதா என எதிர்பார்க்கிறேன்!

இரண்டு மாதமாக சமாளித்து வந்து நேற்று தான் எலெக்ட்ரீஷியனை அழைத்து சில வேலைகளைக் கொடுத்தேன்.

இன்று சேரனின் எழுத்திலும் இயக்கத்திலும் 2001ல் வெளிவந்த பாண்டவர் பூமி திரைப்படம் பார்த்து ரசித்தோம். கிராமத்து வாழ்கையும், கிராமத்து மனிதர்களும், உறவுகளுக்குள் இருக்கும் பிணைப்பும், அழகான பாடல்களும் என நல்லதொரு பொழுதுபோக்கு.

இந்த திரைப்படத்தில் வரும் "அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்! அது ஒரு அழகிய நிலாக்காலம்!! என்ற பாடலை திருமணமான புதிதில் என் கணவர் அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டிருப்பார். 

இதை மகளிடம் சொன்ன போது "பாவம் அப்பா!" என்று சொல்லி சிரித்துக் கொண்டிருந்தாள். 

நல்லதே நடக்கும்! இதுவும் கடந்து போகும்!


அம்மா - 28 மே 2020: சுந்தரி!!


தவறு செய்தால் கண்டிக்கவும், நல்லதை எடுத்துச் சொல்லவும், பாராட்டவும், தட்டிக் கொடுக்கவும், தன் குழந்தையை உசத்தியாக பேசவும் இந்த உலகில் அம்மாவைத் தவிர யாரால் முடியும்! அம்மா தன் குழந்தையை ஒருநாளும் வெறுக்க மாட்டாள்!


இன்று வைகாசி சஷ்டி! அம்மாவுக்கு திதி. பதினாறு வருடங்கள் உருண்டோடி விட்டன. இருக்கும் போது உன்னை கஷ்டப்படுத்தினேனா தெரியலம்மா! உன்னால் தான் இந்த வாழ்க்கை!! உன்னோட ஆசிகள் எப்போதும் இருக்கும் என நம்பறேன்.


லக்ஷ்மண் ரேகா - 28 மே 2020:
வெயில் நாட்களில் அடுக்களை அலமாரிகளில் எறும்புகளின் அணிவரிசை!! மகளிடம் 'லக்ஷ்மண் ரேகா' போடணும். எல்லாவற்றிலும் எறும்பு இருக்கு! என்று சொல்லிக் கொண்டிருந்தேன். லக்ஷ்மண் ரேகான்னு ஏன் அதுக்கு பெயர்? என்றாள். லஷ்மணன் கிழித்த கோட்டை சீதாதேவி தாண்டியதால் என்ன ஆச்சு? ராவணன் தூக்கிண்டு போய் நிறைய பிரச்சனைகள் வந்தது இல்லையா! அதே மாதிரி இந்த கோட்டை தாண்டினால் அது காலி!! அன்னிக்கு PM கூட லஷ்மண் ரேகான்னு சொன்னாரே! என்றாள். ஆமாம். ஊரடங்குன்னு போட்டிருக்கிற கோட்டை அனாவசியமா தாண்டினா தொற்று எண்ணிக்கை கூடுதலாகி நமக்கு தான் பிரச்சனைகள் கூடுதலாகும். அது தான்!!


பின்னல்!


இன்று ஆன்லைன் வகுப்புக்கு தயாராவதற்காக மகளுக்கு தலைவாரி விட்டுக் கொண்டிருந்தேன். சிடுக்கு எடுத்து பின்னல் போட ஆரம்பிக்கும் போது என் தம்பியிடமிருந்து அழைப்பு. அவனிடம் பேசி விட்டு வருவதற்குள் முதன்முறையாக தானே பின்னல் போட்டுக் கொண்டு விட்டாள். சூப்பரா இருக்கு! இப்படியே அடிக்கடி பின்னிப் பார்த்தா வந்துடும்!! என்று தட்டிக் கொடுத்தேன்  

இத்தனை நாளாக கற்றுக் கொள்ள மாட்டேங்கிறாளே!! ஒரு அவசரம் என்றால் என்ன செய்வாள்! என்று நினைத்தேன். 


குளவிக்கூடு!!
பால்கனிக்கு செல்லும் கதவின் பின்பக்கத்தில் மேக்னெட் இருக்கும் இடத்தில் சட்டென்று யாருக்கும் தெரியா வண்ணம் கூடு கட்டியுள்ளது.  எத்தனை முறை மண் சுமந்து வந்ததோ!!! அழிக்க மனம் வரவில்லை!


புறாக்கூடு!


எதிர்வீட்டின் AC OUTLET ன் பின்பக்கம் கூடு கட்டியுள்ளது. நிமிடத்துக்கு ஒருமுறை படபடவென்று பறந்து செல்வதும், தன்னுடைய கூட்டில் முட்டைகள் பத்திரமாக இருக்கிறதா என பார்ப்பதுமாக இருக்கிறது  எத்தனை மெனக்கெடல்! பத்திரப்படுத்துதல்! அடுக்களை வழியே அவ்வப்போது புறாவின் செயல்களை பார்ப்பதே பொழுதுபோக்காக போய்விட்டது 


என்ன நண்பர்களே, இந்த நாளின் கதம்பம் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே!

மீண்டும் சந்திப்போம்… சிந்திப்போம்…

நட்புடன்

ஆதி வெங்கட்.

45 கருத்துகள்:

 1. அனைத்தையும் பேஸ்புக்கில் படித்திருக்கிறேன்.

  குளவிக்கூடை விட்டு வைத்திருப்பது சரியல்ல அல்லது எச்சரிக்கையாக இருக்கவே வேண்டும்.  படுத்திருக்கும்போது காதுக்குள் போய்விட்டாலும் ஆபத்து.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குளவிக்கூடுகள், குருவிக்கூடுகள் போன்றவற்றை அழித்தால் குடும்பம் சிதறும் என்பார்கள். மேலும் குளவி கூடு கட்டுதல் நன் நிமித்தமே என்றும் சொல்லுவார்கள். மண்ணால் கூடு கட்டினால் மாட்டுப் பெண்ணுக்குக் குழந்தை பிறக்கும் என்றும் அரக்கினால் கூடு கட்டினால் அகத்துப் பெண்ணுக்குக் குழந்தை பிறக்கும் என்றும் சொல்வார்கள். பறந்து போன, காலிக் கூடுகளையே அழிக்க எங்களுக்கு மனம் வராது. அது பாட்டுக்குப் பறந்து கொண்டும் போய்க்கொண்டும், வந்து கொண்டும் இருக்கும். நாம் குறுக்கே போனால் தான் கொட்டும்.

   நீக்கு
  2. குளவிக்கூட்டை அழிக்க மனமில்லை சார்..அவைகளும் வீட்டுக்குள் வருவதில்லை..அனைத்து பகுதிகளையும் வாசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி ஸ்ரீராம் சார்..

   நீக்கு
  3. ஏற்கனவே குடும்பம் சிதறி தான் கிடக்கிறது.:( எப்போதுமே கூட்டை அழிக்க மனம் வருவதில்லை..அவைகளும் தொந்தரவு தருவதில்லை..இருக்கட்டும்..

   நீக்கு
 2. குளவி கூடு கட்டினால்
  சுற்றத்தில் புது உயிர் ஒன்று வரவாகும் என்பார்கள்...

  இது மாதிரி வீடுகளில் கூடு கட்டும் குளவிகள் சாதாரணமாக மனிதர்களை நெருங்குவதில்லை...

  குளவிக் கூட்டைச் சிதைத்து விட வேண்டாம்...
  அது ஒரு கருவறை போல...

  அதனுள் முட்டையிலிருந்து பிறந்த புழுவை வைத்திருக்கிறது...

  புழு சில நாட்களில் குளவியாகி கூட்டைப் பிளந்து கொண்டு பறந்து விடும்..

  இருப்பினும் கவனமாக இருக்கவும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அறிவுரைகளுக்கு மிக்க நன்றி துரை சார்..குளவிக்கூட்டை அழிக்கும் தைரியமும், எண்ணமும் இல்லை..

   நீக்கு
 3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வீட்டுக்குள் வருபவை பிள்ளையார் எறும்புகள் எனப்படும் கறுப்பு எறும்புகளா?...

   அவை சிவப்பு எறும்புகள் மாதிரி ரவுடிகள் அல்ல... மனிதருடன் இருக்க இஷ்டப்படுபவை...

   வீட்டைச் சுற்றி தோட்டம் இருந்தால் தேங்காய்ப் பால் பிழிந்த சக்கையுடன் சிறிது அரிசி மாவு கலந்து தூவி விடவும்...

   எறும்புகள் இடம் மாறிப் போய் விடும்...

   நீக்கு
  2. பிள்ளையார் எறும்புகள்னா இரண்டு அரிசியைப் போட்டாலே காணாமல் போயிடும். சிவப்பு எறும்புகள் கொஞ்சம் கஷ்டம் தான்.

   நீக்கு
  3. சிவப்பு எறும்புகள் தான் உலவின துரை சார்..

   நீக்கு
  4. சிவப்பு எறும்புகள் என்றால் கவனமாக இருக்கவும்...

   நீக்கு
 4. பதில்கள்
  1. அனைத்து பகுதிகளையும் வாசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி சகோ..

   நீக்கு
 5. முகநூலிலும் பார்த்தேன், படித்தேன், ரசித்தேன், இங்கேயும். குளவிக்கூடுகள் இங்கேயும் நிறைய இருக்கின்றன. பறந்து போன வெற்றுக் கூடுகளைக் கூடச் சில சமயங்கள் எடுக்க மனம் வருவதில்லை. நல்லதொரு கதம்பம். இந்தக் காலக் குழந்தைகளின் எண்ணங்களே தனித்துவமானவை. நாம் பார்த்த, அனுபவித்த பல விஷயங்கள் அவர்களுக்குத் தெரியாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனைத்துப் பகுதிகளையும் வாசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி கீதா மாமி.

   நீக்கு
 6. இன்றைக்கென்ன... உணவை டச் பண்ணாமல் பதிவு போட்டிருக்கீங்க? என்ன உணவுன்னு பார்த்தேன்.

  கதம்பம் நல்லாருக்கு. குழந்தைகள் தானாகவே ஏதேனும் செய்யும்போது நமக்கு வருவது மகிழ்ச்சியா இல்லை நிம்மதியா என்று பட்டிமன்றமே வைக்கலாம். என் பெண்ணை, என்ன என்னவோ பண்ணற, நம்ம சமையல் வத்தக்குழம்பு பண்ணித்தந்தால், உடனே போய் மொசரல்லா சீஸ் வாங்கிட்டு வர்றேன் என்றதற்கு அன்றே வத்தக்குழம்பும் உருளை ரோஸ்ட்டும் அருமையாகப் பண்ணிணாள். ஆனா ரெசிப்பி பர்ஃபக்டாக இருக்கணும். கண்ணளவு காதளவுலாம் வேலைக்காகாது.

  அங்க மழை வரலைனு சொல்றீங்க. இங்க ஒருநாள் விட்டு ஒருநாளாவது மழை பார்க்க சந்தோஷமாக இருக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் மகள் சமைத்து தந்திருப்பது மகிழ்ச்சி..அனைத்து பகுதிகளையும் வாசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி நெல்லை சார்.

   நீக்கு
 7. குளவிக்கூட்டை கலைக்காதீங்க///
  வீட்டுக்கு ஆகாது..

  என் அம்மா எனக்கு கல்யாணம் ஆகும்வரை தலை பின்னி விட்டாங்க. அதனாலோ என்னமோ இன்றுவரை எனக்கு சுயமா தலைவாரினால் சரியா இருக்காது. ஆனா, என் பிள்ளைகளை 7வது படிக்கும்போதிலிருந்தே தலை பின்ன விட்டுட்டேன். இப்ப அதுக விதம் விதமா பின்னிக்குறாங்க.
  இனி நீங்களும் ஸ்கூலுக்கு போகும்போது மட்டும் தலை பின்னிவிடுங்க. மத்த நேரத்தில் ரோஷிணியே பின்னிக்கிட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் 7 ஆம் வகுப்பிலிருந்து நானே தான் பின்னிக் கொள்கிறேன்..அது தான் திருப்தியும் தரும்..:) இப்போது மகள் பழகி வருகிறாள்..எனக்கு உடல்நிலை சரியில்லாத போது எழுந்து அவளுக்கு தலைபின்னி விட முடியாமல் பள்ளிக்கு விடுமுறை எடுத்த நாட்களும் உண்டு..:) இனிமேல் அப்படி இருக்க கூடாது என்று சொல்லித் தான் பழக்கி வருகிறேன்..அனைத்து பகுதிகளையும் வாசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றிங்க ராஜி..

   நீக்கு
 8. அடுக்களை இல்லை என்றாலும் சிந்திக்க வைத்த பதிவு. இன்றைய தலைமுறையை எதையும் ஏன் எதர்க்கு எப்படி என கேள்வி கேட்டு கற்க வேண்டும் என சொல்லி வளர்க்கிறோம். எனவே அவர்கள் கேட்கும் குண்டக்க மண்டக்க கேள்விகளுக்கு பதில் சொல்லும் பக்குவம் முன்னால் தலைமுறையினர் நமக்கு இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். எங்கள் ஃப்ளாட் ஏசிகளிலும் புறாக்கள் உள்ளன. மரங்களுக்கு இணையாக அவையும் பரவைகளுக்கு இடம் கொடுத்தாலும் மரங்களுக்கு இணையாக மழையை தான் கொடுக்க முடியாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்..பக்குவம் நமக்கு தான் இருக்க வேண்டும்..அனைத்து பகுதிகளையும் வாசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி அர்விந்த் சகோ..

   நீக்கு
 9. குளவிக்கூடு கட்டுவது வரவு என்பார்கள்
  கொரோனா பல மனிதர்களின் வாழ்வை மாற்றி விட்டது மக்களும் வெறுத்து போய்தான் வேலைக்கு கிளம்பி விட்டனர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொரோனாவால் எல்லாமே மாறிவிட்டது.. விரைவில் நிலைமை சரியாகும் என நம்புவோம்..தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சகோ..

   நீக்கு
 10. தலைமுறை இடைவெளி : நாம் தான் மாற்றிக் கொள்ள வேண்டும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ..

   நீக்கு
 11. அனைத்தும் அருமை ஆதி.
  முகநூலில் பாடித்தேன்.
  ரோஷ்ணியின் ஜடை அழகை அங்கு கண்டேன்.
  எனக்கு என் அம்மாதான் ஜடை பின்னி விட்டார்கள் திருமணம் ஆனபின் மாமியார் பின்னி விடுவார்கள்.

  விடுமுறைக்கு ஊருக்கு வந்தால் அம்மாவும், அத்தையும் ஓர்படிகளும் பின்னி விடுவார்கள் ஜடையை.

  குழந்தைகளிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது இப்போது.
  அதுவும் ரோஷ்ணி மிக திறமை வாய்ந்த குழந்தை வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் பின்னல் கதைகள் அழகாக இருக்கின்றன..குழந்தைகளிடமிருந்து நாம் தான் கற்றுக் கொள்ள வேண்டும்..தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..

   நீக்கு
 12. எவ்வளவு அழகாக எழுதுகிறீர்கள்?..

  'தலைமுறை இடைவெளி' நிதர்சனமான ஒன்று. இந்த மாதிரி விஷயங்களில் பலர் பூசி மெழுகுவதைத் தான் பார்த்திருக்கிறேன். நீங்கஸோ வெளிப்படையாக அதை அலசி இருக்கிறீர்கள்.
  எது பற்றிப் பேசுவதற்கும் எழுத்துலகில் தயாராக இருப்பது ஆரோக்கியமான சிந்தனைப் போக்கிற்கு வழி காட்டும். பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் கருத்துரை மகிழ்ச்சியை தருகிறது ஐயா..பாராட்டவும் வெளிப்படையான மனம் வேண்டும்..தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி ஜீவி ஐயா.

   நீக்கு
 13. வேளச்சேரியில் என்மகன்குடி இருந்த அடுக்கு மாடி குடி இருப்பில் புறாக்கள்கூடு கட்டும் அவற்றின்சப்தம் கர்ண கொடூரம் விட்டுத்தொட்டிக்சளில் முட்டை இட்டு விடும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி ஐயா.

   நீக்கு
 14. வணக்கம் சகோதரி

  பதிவு அருமை. வாசகமும் அருமை. புறாவின் பெயர் ஹிந்தியில் தெரிந்து கொண்டேன். புறாவும் எதற்கும் ஆசைப்படாத மனப்பக்குவம் பெற்றவை. இந்தப் பெயர் பொருத்தம் கூட பொருந்தி வருகிறது.

  தலைமுறை இடைவெளி பற்றி அழகாக சொல்லியிருக்கிறீர்கள். இந்தக் கால குழந்தைகள் மொத்தத்தில் நம்மை விட புத்திசாலிகள்.

  தங்கள் அம்மாவின் நினைவுகளை பகிர்ந்த போது என் கண்களும் கசிந்தன. அம்மாவை அவ்வளவு எளிதில் மறக்க இயலுமா? நம் நினைவுகள் இற்றுப்போகும் வரை நினைவிருக்கும் ஒரே தெய்வம் அம்மாதான்.

  கை வேலைகளுடன் தங்கள் பேச்சை கிரஹித்து, தங்கள் சொல்படி செயலாற்றும் தங்கள் மகள் ரோஷ்ணிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்க வளமுடன்.

  குளவிகள் கூட்டை எடுக்க மனம் வராது. குளவிகள் இல்லா வெறும் கூட்டை உடைத்தால் கூட தலைவலி வருமென்பார்கள். அது பேசாமல் இருக்க வேண்டியதுதான். தானாகவே பலமிழந்து ஒருநாள் உதிர்ந்து விடும். அனைத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனைத்துப் பகுதிகளையும் வாசித்து கருத்துக்களை தெரிவித்ததற்கு மிக்க நன்றி கமலா மேடம்..

   நீக்கு
 15. வாசகத்துடன் கதம்பம் எல்லாமே அருமை

  தலைமுறை இடைவெளி கண்டிப்பாக இருக்கும்.


  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி..

   நீக்கு
 16. ஆதி இங்கும் புறாக்கள் அதிகம்.

  கைவடிவ சோப் ஸ்டான்ட் அழகா இருக்கு! ரசித்தேன்..

  சமீபத்தில் தான் கோமதிக்கா புறாக்களின் பாடல் பற்றி பதிவில் சொல்லியிருந்தார்.

  தலைமுறை இடைவெளி தவிர்க்க முடியாததுதான். ஆனால் பாருங்க ஒரு சில தலைமுறை தலைமுறையாய் தொடர்கிறது. அதை நான் சிறு பதிவாக எழுதி வைத்திருக்கிறேன். அதை தளத்தில் பகிர்கிறேன்.

  ஆனால் பாருங்க நீங்க சொன்ன 1,2,3,4 ல் மூன்றாவதைத் தவிர மற்றதெல்லாம் நான் கொஞ்சம் அப்படியும் இப்படியும்தான் ஹா ஹா ஹா ஹா...மூன்றாவது கூட பிறந்த வீட்டில் இருந்த வரை அதற்கான சாய்ஸே இல்லாததால் எல்லாமே பெரியவங்களே டிசைட் செய்ததால்...ஆனால் இப்ப அது அப்படியே பொருந்தும். இப்ப மகனிடமும் கேட்டுத்தான் செய்கிறேன்

  மற்றதை என் மகனிடம் சொல்லும் போது நினைப்பேன் நாமே இப்படித்தானே இருந்தோம் என்று!!!!!!! ஆனால் மகனும் நானும் நிறைய பகிர்ந்தும் கொள்வோம் விவாதமும் செய்வோம் முடிவில் நான் சரி என்றால் அவன் ஏற்பான் அவன் சரி என்றால் நான் ஏற்பேன்..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா..ஹா..ஹா..நான் இப்போ வரை சுயமாக எந்த முடிவும் எடுப்பதில்லை..:)

   நீக்கு
 17. லக்ஷ்மண் ரேகா சரிதான்! உங்கள் இப்போதான சூழலுக்கான விளக்கம்.

  கரப்பு, எறும்பிற்கு ஒரு பயோ பேஸ்ட் ஒன்று வந்துள்ளது ஆதி அது ட்யூபில் இருக்கு ஆயின்ட்மென்ட் போல. அதை நாம் கோடு போல் போட்டு வைத்துவிட்டால் வருவதில்லை பாவம் அவற்றையும் எனக்குக் கொல்ல மனம் இல்லை. அது போல குளவிக் கூட்டையும் நான் உடைக்கவே மாட்டேன் அதில் அவை இல்லை என்றாலும் கூட. புறா பாவம் எல்லா உயிர்களுமே தங்கள் முட்டைகள் பொரிவது, குழந்தைகள் ஒரு வயது வரை வரும் வரை மெனக்கிடத்தான் செய்கின்றன. அதுகளுக்குச் சொல்லத் தெரிவதில்லை பாவம்.

  ரோஷினி தானே பின்னிக் கொள்வது நல்ல தொடக்கம்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பயோ பேஸ்ட் பற்றி தேடிப் பார்க்கிறேன்..தகவலுக்கு மிக்க நன்றி சேச்சி..

   நீக்கு
 18. புறாக்களின் அட்டகாசம் எங்கள் பால்கனியில் எப்பொழுதும் உண்டு. சமீபத்தில்தான் பால்கனியை வலையால் மூடிவிட்டோம்.தலைமுறை இடைவெளி படம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வடக்கில் புறா இல்லாத இடமே இல்லை என்று சொல்லலாம்..தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி ராமசாமி ஜி..

   நீக்கு
 19. கதம்பம் மணக்கிறது.

  அம்மாவின் ஆன்மா இனிதே இளைப்பாறட்டும்.

  கோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி..

   நீக்கு
 20. பக்..பக்...பக்.. மாடப் புறா.

  நீங்கள் எடுத்துச் சொல்வதை கேட்கும் பெண்ணாக ரோஷினி இருப்பதுவே சிறப்பு இப்பொழுதுஉள்ள தலைமுறை இடைவெளியில் யார் கேட்கிறார்கள். 'அம்மாவுக்கு சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லத்தான் தெரியும் ' என்ற வாக்கியம் வரும் பல இடங்களிலும் கண்டதுதான்.

  உங்கள் அம்மாவை வணங்குகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....