புதன், 3 ஜூன், 2020

அந்தமானின் அழகு – Bபாராடாங்க் – மதிய உணவு – நண்பரின் பார்வையில் பயணம்

படகில் பயணித்தபோது...

அந்தமானின் அழகு பகுதி 39


முந்தைய பதிவுகள் – பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6  பகுதி 7 பகுதி 8 பகுதி 9  பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30  பகுதி 31 பகுதி 32  பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36 பகுதி 37 பகுதி 38

அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.


விறகில் தீ இருப்பதை உணர்ந்தவன் ஞானி. அதில் தீமூட்டி உணவு சமைத்து சாப்பிட்டவன் விஞ்ஞானி – ராமகிருஷ்ண பரமஹம்சர்.

உணவகத்தின் எதிரே...


நாங்கள் சுண்ணாம்பு குகைகளை கண்டு ரசித்தபிறகு அலையாத்திக் காடுகள் வழி படகில் பயணித்து Bபாராடாங்க் படகுத் துறைக்கு வந்து சேர்ந்தபோது நல்ல பசி.  மதிய நேர உணவுக்கான நேரமும் வந்திருந்தது. சிறிய இடம் தான் Bபாராடாங்க்.  பெரிய பெரிய உணவகங்களை அங்கே எதிர்பார்ப்பது சரியல்ல. ஒன்று அங்கே இருக்கும் உணவகங்களில் ஏதோ ஒன்றில் சாப்பிடவேண்டும். அப்படியில்லை என்றால் மூன்று/மூன்றரை மணி நேரம் பயணித்து போர்ட் Bப்ளேயர் சென்று சாப்பிட வேண்டும் – அதுவும் வனப்பாதை திறந்திருந்தால் பயணிக்க முடியும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் – அப்படி திறந்திருக்க வில்லையென்றால் அடுத்த திறக்கும் நேரம் வரை காத்திருக்க வேண்டும்.  நாங்கள் இப்படி யோசித்துக் கொண்டு படகுத் துறை வந்தபோது எங்கள் ஓட்டுனர் மார்ஷல் ஒரு நல்ல வேலையைச் செய்து வைத்திருந்தார்.  அந்த வேலை எங்களுக்கான உணவை ஏற்பாடு செய்து வைத்திருந்தது.

உணவகச் சிப்பந்தி...
 

Bபாராடாங்க் பகுதியில் பெரும்பாலும் அசைவ உணவகங்கள் தான் – சிலவற்றில் இரண்டும் உண்டு.  தனியாக சைவ உணவகங்கள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.  இருப்பதும் அப்படி ஒன்றும் சிறப்பாக இல்லை.  நாங்கள் அனைவருமே சைவம் என்பதால் சூர்யா’ஸ் கிட்சன் எனும் உணவகத்தில் காலை வந்த உடனேயே அன்றைக்கு சைவ சமையல் மட்டும் செய்யுங்கள் எனச் சொல்லி எங்கள் அனைவருக்கும், அவருக்குமாக சைவ உணவு தயார் செய்யச் சொல்லி இருந்தார் எங்கள் ஓட்டுனர் மார்ஷல். நல்ல வேளையாகப் போயிற்று.  அங்கேயே சாப்பிட்ட பிறகு புறப்படலாம் என உணவகம் நோக்கிச் சென்றோம்.  உணவகத்தில் ஓடி ஓடி எல்லோருக்கும் என்ன தேவை எனக் கேட்டுக் கேட்டு உணவை வழங்கினார்கள் மார்ஷலும் உணவகச் சிப்பந்திகளும் – கிட்டத்தட்ட ஆறு ஏழு நாட்கள் கழித்து தென்னிந்திய முழுச் சாப்பாடு!  சாதம், குழம்பு, ரசம், அப்பளம், ஊறுகாய், மோர் என அனைத்தும் இருந்தது.  சுவையும் நன்றாகவே இருந்தது. 

உணவகத்தில்...
 

நாங்கள் மதிய உணவினை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் வேளையில் இந்தப் பயணத் தொடரின் ஒரு பகுதியாக ஒரு விஷயத்தினை படிக்கலாம் வாருங்கள் – இந்தப் பயணம் முடித்து வந்த பிறகு, இந்தத் தொடரை எழுதிக் கொண்டிருக்கும் சமயத்தில் குழுவினரில் சிலரை பயணம் பற்றி – குறை நிறை பற்றி எழுதித் தரச் சொல்லி இருந்தேன்.  அப்படி எழுதச் சொன்ன போது நண்பர் சுப்ரமணியன் என்கிற மணி அவர்கள் எழுதித் தந்த சில வரிகள் இந்தப் பகுதியில். நீங்கள் படித்துக் கொண்டிருப்பதற்குள் நாங்கள் எங்கள் மதிய உணவினை முடித்துக் கொண்டு வந்து விடுகிறோம். பின்னர் தொடர்ந்து பயணிக்கலாம்! வாருங்கள் நண்பர் மணி அவர்களில் வார்த்தைகளில் இந்தப் பயணம் பற்றி படிக்கலாம்.

அதோ அந்த அந்தமான்… - ஆர். சுப்ரமணியன்

ஏழு நாட்கள் ஏழு குடும்பங்கள் – ஏழு ஆண்கள், ஆஅறு பெண்கள், ஐந்து குழந்தைகள் (மருத்துவர் விக்னேஷ், செல்வி ஐஸ்வர்யா எங்களை பொருத்தமட்டில் குழந்தைகளே).  எட்டாம் குடும்பமாய் திரு சுமந்த் (பயண ஏற்பாட்டாளர்)  மற்றும் அவரைச் சார்ந்தோரின் அன்பு.

ஆசை தீர அந்தமானின் அழகை ரசித்தோம். கடல் அன்னையின் காலடியில் சுற்றித் திரிந்த பின் எட்டாம் நாளை நாடே குழந்தைகள் தினமாய் கொண்டாடியது.  போர்ட் Bப்ளேயர், ராஸ் தீவு, நார்த் Bபே தீவு, ஸ்வராஜ் த்வீப் (Havelock) தீவு, Neil (இதற்கும் ஒரு இந்தியப் பெயர் உண்டு) தீவு, Bபாரா டாங், Lime Stone Cave என ஏழு வெவ்வேறு இடங்களைக் கண்டோம். நீரின் ஆழப் பகுதியில் சுதந்திரமாய் சுற்றித் திரியும் வெவ்வேறு விதமான பல வண்ண மீன்கள், பவளப் பாறைகள், கடல் வாழ் உயிரினங்கள் – என்னவென்று சொல்வதம்மா எழிற்கடலில் பேரழகை வர்ணிக்கத் தோன்றியது.  இந்தப் பயணத்தில் குறை/நிறை எனப் பார்கும்போது எனக்குத் தோன்றியது கீழே:

குறை ->:  இவ்வளவு அழகான, ரம்மியமான, மீண்டும், மீண்டும் அனுபவிக்கத் தூண்டும் கடலை குறைந்த தினங்களில் விட்டு வந்தது.

நிறை ->: Gole Market Gang என ஒரே கூட்டுக் குடும்பமாய் ஏழு குடும்ப உறுப்பினர்களும் ஏழு நாட்களில் வாழ்ந்தது. மீண்டு வந்து ஆறு மாதங்களுக்கு மேலாகியும் ஆறு நாட்கள் போலவே பசுமையான நினைவுகள். வெங்கட் அண்ணாச்சியின் இந்தப் பதிவு மூலம் மீண்டும் பயணம் குறிந்த நினைவலைகளை அசை போட முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி!  

****

 

Gole Market Gang (முதல் முறை பயணம் சென்று வந்தபோது குழுவினர் எடுத்த படங்களை பகிர்ந்து கொள்ள வாட்ஸ் அப் குழு தொடங்கியபோது வைத்த பெயர்! அப்படியே இன்று வரை தொடர்கிறது!  பயணம் பற்றி பகிர்ந்து கொண்ட நண்பர் மணி அவர்களுக்கு நன்றி. மதிய உணவை முடித்துக் கொண்டு அதற்கான பணத்தினையும் கொடுத்து நாங்கள் வெளியே வந்தோம். சில பல படங்களை எடுத்துக் கொண்டு படகுத் துறைக்கு வந்து சேர்ந்த போது கப்பல் மறு கரையில் நின்றிருந்தது.  கப்பலின் வருகைக்குக் காத்திருந்தோம். கப்பல் வந்தவுடன் அதில் பயணித்து மறுகரையைச் சென்றடைந்தோம்.  ஓட்டுனர் மார்ஷலும் எங்களுடன் சாப்பிட்ட பிறகு எங்களுடனேயே வந்து சேர்ந்தார். 


கப்பலில் பயணித்தபோது...


மறுகரையில் – நீலாம்பூர் ஜெட்டி பகுதியில் எங்கள் வாகனம் நின்று கொண்டிருந்தது. அப்போது தான் பழங்குடியினரில் ஒருவர் அங்கே அமர்ந்திருக்க அவரை பார்த்தோம்.  அவரிடம் பேச முடியவில்லை – காவலர் உடன் இருந்தார் – எங்களுக்கு அனுமதியும் இல்லை என்பதால் பேச முயற்சிக்கவில்லை. அந்த பழங்குடி இளைஞர் ஒரு புன்னகையுடன் அனைவரையும் பார்த்துக் கொண்டிருந்தார் – நாம் எல்லாம் அவருக்கு வித்தியாசமாக தெரிந்திருப்போம் என நினைத்துக் கொண்டேன்.  தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்பதால் அங்கேயே இருந்த வாஷ் ரூம் வசதிகளை பயன்படுத்திக் கொண்ட பிறகு சரியாக, வனப்பகுதிக்குள் செல்ல கதவு திறந்தது. திரும்பிச் செல்லும் சமயத்தில் ஒவ்வொரு நாளும் நான்கு முறை மட்டுமே இந்த வனப்பாதை திறக்கிறார்கள். மாலை கடைசி நேரம் திறப்பது 02.30 மணிக்கு. நான்கு மணி வரை திறந்திருப்பார்கள் என்றாலும் விரைவில் அங்கிருந்து புறப்படுவது நல்லது. அந்த சமயத்தில் நீங்கள் புறப்பட வில்லை என்றால் அன்றைய தினம் Bபாராடாங்க் பகுதியில் தங்க வேண்டியிருக்கும் என்பதைச் சொல்லிவிடுகிறேன்.  அதற்குப் பின் நடந்த விஷயங்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.


நண்பர்களே! இந்த நாளின் பதிவு பற்றிய உங்கள் என்ணங்கள் என்ன என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

பின்குறிப்பு: இந்தப் பகுதியில் இணைத்த படங்கள் நண்பர் மணி எடுத்தது. 

44 கருத்துகள்:

  1. இனிமையான அனுபவங்கள்.  காணொளி கண்டு ரசித்தேன்.  ஒரே ஒரு பழங்குடி இளைஞரையாவது காண நேர்ந்ததே...   அதிருஷ்டம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுபவங்கள் இனிமையே.... காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      ஆமாம் ஒருவரையாவது பார்க்க முடிந்ததே என்று தான் எனக்கும் தோன்றியது.

      நீக்கு
  2. அனுபவங்கள் ரசிக்க வைத்தன ஜி
    தங்களது நண்பர் ஆர்.சுப்பிரமணியன் அவர்களின் கருத்துரை கவிதை போன்று அழகு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுபவங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      நண்பரின் எழுத்து - உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி.

      நீக்கு
  3. அந்தமான் பயணம் விவரிக்கும்போது நாங்களும் உங்களுடன் வருவது போலவே தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணத்தில் நீங்களும் உடன் வருவது அறிந்து மகிழ்ச்சி முரளிதரன்.

      நீக்கு
  4. ஞானி, விஞ்ஞானி..சிறப்பு. ஏதோ சித்தாந்த நூலைப் படிக்க ஆரம்பித்ததுபோன்ற எண்ணம் இச்சொற்களைக் கண்டதும் ஏற்பட்டது. வனப்பாதை...திகிலுக்காகக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வனப்பாதை - வரும்போதே இதைப் பற்றிச் சொல்லி இருக்கிறேன். திரும்பும்போது, சொல்லும் அளவு அனுபவங்கள் இல்லை முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  5. காணொளி அபாரம்...

    நண்பர் மணி அவர்கள் சொன்ன குறை மிகவும் சரியானதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      நண்பர் மணி சொன்ன குறை - குழுவினரில் அனைவருக்கும் இந்தக் குறை உண்டு!

      நீக்கு
  6. மணி எடுத்ததும் மணியாகத்தான் உள்ளன, லாFபிங் புத்தா வைத்திருக்கும் மணியையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் மணி எடுத்த படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
  7. பதிவுக்கும் படங்களுக்கும் பாராட்டுகள். நண்பரும் தன் கருத்தை அருமையாகப் பகிர்ந்திருக்கிறார். கடினமான பயணம் என்றாலும் விடாமல் பயணித்து அதை எங்களுடன் பகிரவும் செய்திருக்கிறீர்கள். கப்பலுக்காகக் காத்திருந்தது போல் பத்ரிநாத் போகும்போதும் ஜ்யோதிஷ்மட்டில் காத்திருக்க நேரிடும். அங்கே வழி திறக்கச் சில சமயங்கள் மறுநாள் கூட ஆகும் என்பார்கள்.காணொளி பார்க்கணும். பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா...

      நண்பரின் கருத்டுகளை பாராட்டிதற்கு நன்றி.

      இன்னும் சில இடங்களிலும் இப்படியான காத்திருப்புகள் உண்டு. குகைப் பாதை (Tunnel) வழி பயணிக்கும்போதும் இப்படி மொத்தமாக அனுப்புவார்கள்.

      நீக்கு
  8. இம்மாதிரிக் கார்கள், பேருந்துகள் ஏறுவதை கோவாவில் பார்த்ததோடு எங்கள் காரும் அப்படி ஒரு சின்னக் கப்பலில் ஏறியது. நாங்கள் காருக்குள்ளேயே அமர்ந்திருந்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவாவிலும் உண்டு. கேரளத்திலும் காலடி அருகே உண்டு கீதாம்மா.. கேரளத்தில் இப்படி பார்த்திருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் மேலதிகத் தகவல்களுக்கும் நன்றி.

      நீக்கு
    2. ஹாஹாஹா, கேரளத்தில் குருவாயூர் மட்டும் பல ஆண்டுகள் முன்னர் போனது. பின் சமீபத்தில் 2015 ஆம் ஆண்டில் தங்கை கணவர் சஷ்டிஅப்தபூர்த்திக்குத் திருவனந்தபுரம் சென்றோம். கேரளம் என்னை அவ்வளவாய்க் கவரவில்லை. காலடிக்கு மாமா போயிட்டு வந்துட்டதாலே என்னை அழைத்துப் போவது சந்தேகம். ஆனால் நீங்க சொன்னது கேள்விப் பட்டிருக்கேன்.

      நீக்கு
    3. உங்களுக்கு காலடி பயணம் அமையட்டும் கீதாம்மா. மாமா ஏற்கனவே பார்த்திருந்தாலும் நீங்கள் பார்க்கவில்லையே. :)

      கேரளம் - God's Own Country - உங்களுக்கு பிடிக்கவில்லையா?

      நீக்கு
    4. தெரியலை வெங்கட், எனக்கு என்னமோ சின்ன வயசிலே இருந்து சென்னையும் பிடிக்காது, கேரளமும் பிடிக்காது. சென்னையில் வாழ நேர்ந்தது. பின்னர் இங்கே வந்தாச்சு. கேரளப் பயணம்னு மாமா திட்டம் போடும்போதெல்லாம் ஏதேனும் தடங்கல் தானாக வந்துடும். அதனால் ஆவலும் இல்லை. சங்கரர் அழைத்தால் காலடி போகலாம். காலடி சங்கரமடத்தின் படம் ஒன்று சமீபத்தில் பார்த்தேன். பசுமாடு கன்று போடும் படம். அழகோ அழகு!

      நீக்கு
    5. எனக்கும் சென்னை அத்தனை ஈர்க்கவில்லை. கேரளத்தின் அழகு நன்று. அங்கே இருக்கும் மனிதர்கள் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. எல்லா இடங்களைப் போல நல்லவர்களும் கெட்டவர்களும் அங்கேயும் உண்டு. சங்கர மடத்தில் கன்று ஈனும் காணொளி எனக்கும் வந்தது கீதாம்மா...

      நீக்கு
  9. சுற்றி பார்த்துவிட்டு வந்த பசியில் உணவு தேவாமிர்தமாக இருந்திருக்கும்.

    பழங்குடி இளைஞர் ஒருவரை கண்டுவிட்டீர்களே ஓரளவு திருப்தியாக இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் - பசி நேரத்தில் உணவு கிடைத்தால் ஆனந்தம் தான் மாதேவி.

      பழங்குடி இளைஞர் ஒருவரை பார்த்ததில் மகிழ்ச்சி தான்.

      நீக்கு
  10. விறகில் தீ இருப்பதை உணர்ந்தவன் ஞானி. அதில் தீமூட்டி பார்த்தவன் விஞ்ஞானி. தன் உடலையும் விறகாகவே பாவிப்பவன் மெய்ஞானி ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... வாசகத்தில் நல்லதொரு சேர்ப்பு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிவா.

      நீக்கு
  11. காணொளி இப்பொழுதுதான் திறந்தது ஸூப்பர் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி. நான் அங்கே எடுத்த காணொளி இது!

      நீக்கு
  12. வாசகம் அருமை.

    // வெங்கட் அண்ணாச்சியின் இந்தப் பதிவு மூலம் மீண்டும் பயணம் குறிந்த நினைவலைகளை அசை போட முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி!//

    நண்பர் ஆர். சுப்ரமணியன் அவர்கள் சொன்னது சரியே.
    அவருக்கு நினைவலைகள், எங்களுக்கு நேரே பார்த்த உணர்வு.

    காணொளி அருமை.

    உணவகத்தில் சிரிக்கும் புத்தர் மிக அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

      நேரில் பார்த்த உணர்வு - நன்றிம்மா...

      காணொளியும், உணவகத்தில் எடுத்த படமும் - நன்றி.

      நீக்கு
  13. ஏழு நாட்கள் ஏழு குடும்பங்கள் - என்பது சாதாரண விஷயம். இதுவே மற்றவர்களுக்கு இந்தக் குழு தெரியப்படுத்தும் செய்தியாக நான் உணர்கிறேன். இந்த கூட்டு ஒத்துழைப்பும் பரிவும் இல்லையென்ரால் இந்த சுற்றுலாவே சவசவத்திருக்கும் என்று உளமாற நம்புகிறேன். வாழ்க்கையின் அனுதின போக்கிலும் இப்படியான சமூக ஒற்றுமை மேலோங்கினால் அதை விட பேறு வேறோன்றும் இல்லை என்பதே இந்தத் தொடரை வாசிக்கும் பொழுது அடிக்கடி நினைவுக்கு வருகிறது.

    இந்தப் பதிவில் ஓட்டுனர் மார்ஷல் அவர்கள். முன்யோசனையுடனான அவரது ஏற்பாடு நன்றியைத் தாண்டிய ஒன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமூக ஒற்றுமை இப்போதைய அத்தியாசவசியத் தேவை. விட்டுக் கொடுத்தலும், சக மனிதர்கள் மீதான எதிர்பார்ப்பு இல்லாத அன்பும், பரஸ்பர புரிதலும் இருந்தாலும் எல்லாம் நலமே. சின்னச் சின்ன இடையூறுகள், பிரச்சனைகள் வந்தார்லும் அதனை பெரிதாக்கிவிடக்கூடாது.

      பதிவின் வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஜீவி ஐயா.

      நீக்கு
  14. //ஏழு நாட்கள் ஏழு குடும்பங்கள் - என்பது சாதாரண விஷயம்.//

    ஏழு நாட்கள் ஏழு குடும்பங்கள் -- என்பது சாதாரண விஷயம் அல்ல - என்று வாசிக்க வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு வார்த்தை விடுபட்டால் அர்த்தமே மாறி விடுகிறது! நான் இரண்டாவதாகச் சொல்லி இருப்பதைத் தான் எழுத நினைத்திருப்பீர்கள் என்றே நினைத்துக் கொண்டேன் ஜீவி ஐயா.

      நீக்கு
  15. பொன்மொழி அருமை. பாராடாங் பயணம் உங்களுடன் பயணித்தது போல் உணர்வை ஏற்படுத்தியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொன்மொழி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      தொடர்ந்து பயணிப்போம்.

      நீக்கு
  16. பொன் மொழ் அருமை.

    அனுபவங்கள் புதுமை. அதுவும் அழகிய இடம். நண்பர் நன்றாகச் சொல்லியிருக்கிறார். காணொளி கண்டேன். இங்கும் இப்படி வண்டிகள் ஏற்றுவதுண்டு.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொன்மொழி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      கேரளத்தில் படகு வழிச் செல்லும் வாகனங்களை நானும் கண்டிருக்கிறேன் - காலடி அருகே.

      நீக்கு
  17. பதிவுக்கு தொடர்பில்லாத கேள்வி. உங்கள் பதில் அளித்து ஆதரவளிக்கும் நண்பர்கள் எத்தனை பேர்கள் அமேசான் தளத்தில் ஆதரவு அளித்துள்ளார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமேசான் தளத்தில் யார் தரவிறக்கம் செய்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடியுமா என்ன? ஏப்ரல் மாத கடைசியிலிருந்து தானே இங்கே உலவ ஆரம்பித்து இருக்கிறேன். பார்க்கலாம் எப்படிப் போகிறதென ஜோதிஜி.

      நீக்கு
  18. ஹப்பா ஓட்டுநர் மார்ஷல் உங்கள் எல்லோருக்கும் மதிய உணவை ஏற்பாடு செய்தது அதூவ்ம் எல்லோரும் சைவம்...அங்கு கிடைப்பதும் கஷ்டம் என்ற வேளையில்... மிகப் பெரிய விஷயமாகப் போயிற்று. நல்ல அன்புடனான கவனிப்பு. ஹாஸ்பிட்டாலிட்டி.

    வரும் வழியிலேனும் ஒரு பழங்குடி மனிதரைப் பார்க்க முடிந்தது. அதுவரை திருப்த்திப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான். ஃபோட்டோ கூட எடுக்க முடியாமல் போயிற்றே அனுமதி இல்லாததால்.

    காணொளியும் பார்த்தேன் ஜி.

    நண்பரின் வரிகள் சிறப்பு. 7 நாட்கள் 7 குடும்பங்கள் என்பது சாதாரண விஷயம்ல்ல மிகப் பெரிய விஷயம். நல்லபடியாக அமைந்தது எல்லோருடைய நல்ல மனதையும் காட்டுகிறது. நல்ல குழு. வாழ்த்துகள் ஜி

    கீதா

    ராகிருஷ்ண பரமஹம்ஸரின் பொன்மொழி நன்றாக இருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓட்டுனர் மார்ஷல் செய்த நல்ல விஷயம் எங்கள் அனைவருக்குமே பிடித்திருந்தது. சாப்பாடு சுவையும் நன்றாகவே இருந்தது.

      பழங்குடி மனிதர் ஒருவரையாவது பார்க்க முடிந்ததே என்பதில் மகிழ்ச்சி தான் கீதாஜி.

      காணொளி - நன்றி. நண்பரின் வரிகள் உங்களுக்கும் பிடித்திருந்தது அறிந்து மகிழ்ச்சி.

      தொடர்ந்து பயணிப்போம் கீதாஜி.

      நீக்கு
  19. படங்களும் பகிர்வும் அருமை

    இன்னொரு பார்வையாகத் தங்கள் நண்பரின் கருத்துகளைப் பகிர்ந்திருப்பதும் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //படங்களும் பகிர்வும் அருமை// - நன்றி ராமலக்ஷ்மி.

      இன்னோரு பார்வையாக நண்பரின் கருத்துகள் - மகிழ்ச்சி. இன்னும் சில பார்வைகளும் வரும்!

      நீக்கு
  20. பலப்பல ஊர்களில் பயணம் செய்யும்போது பலப்பல அனுபவங்கள் ,அவற்றையெல்லாம் ஃ போட்டோவோடு சேர்த்துப் பதிவிட்டது சூப்பர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் கருத்துரை. மகிழ்ச்சி அபயா அருணா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....