வியாழன், 13 செப்டம்பர், 2018

சாப்பிட வாங்க – கக்கோடா[ரா] [எ] கன்டோலா சப்ஜி




கக்கோடா[ரா] சப்ஜி....

நாம் இருக்கும் இடங்களுக்குத் தகுந்தாற்போல கிடைக்கும் காய்கறிகளும் மாறுபடும். நம் ஊரில் கிடைக்கும் பல கீரைகள் இங்கே கிடைப்பதில்லை. இங்கே கிடைப்பவை நம் ஊரில் கிடையாது. தலைநகர் வந்த பிறகு தான் தாமரைத் தண்டில் சப்ஜி செய்வதைக் கேள்விப்பட்டேன். நம் ஊரில் இருந்தவரை அதைச் சமைக்க முடியும் என்று கூட தெரியாது. இப்படி பல காய்கறிகளைச் சொல்ல முடியும். வீட்டின் அருகிலேயே காய்கறி மார்கெட் தினமும் மாலை வேளைகளில் உண்டு. அங்கே போகும்போது வித்தியாசமான காய்கறிகள் இருந்தால், விற்பவரிடம் இது என்ன, இதன் பெயர் என்ன, எப்படி சமைப்பது என்று கூட கேட்பதுண்டு. அப்படி இங்கே கிடைக்கும் ஒரு காய்கறி தான் கக்கோடா[ரா] என்கிற கன்டோலா.


சிறிய வகை கக்கோடா[ரா]....


பெரிய வகை கக்கோடா[ரா]....

இது இரண்டு அளவுகளில் கிடைக்கிறது - பார்ப்பதற்கு மிதி பாவக்காய் அளவில் இருப்பதும், இன்னுமொரு வகை பெரியதாகவும் கிடைக்கின்றன. பெயரைக் கேட்டு விசாரித்ததோடு சரி. சமீபத்தில் ஒரு நாள் வாங்கி சமைத்துப் பார்க்கலாம் என மிதி பாவக்காய் அளவு உள்ள கக்கோடா[ரா] வாங்கி வந்தேன். இந்த காய் பல மருத்துவ குணங்கள் உடையது என்று இணையத்தில் சில தகவல்கள் கிடைத்தது.  இந்த காய் பாகற்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்ற வகையைச் சேர்ந்தது. மேல் பக்கத்தில் முள் போல அமைப்பு கொண்ட இதில் நார்சத்தும், விட்டமின் சத்துகளும் உண்டு. கோடைக் காலத்தில் சாப்பிட ஏற்ற உணவு என்றும் தெரிகிறது. பாகற்காய் போன்ற சுவை – மைனஸ் கசப்பு! கசப்பில்லாத பாகற்காய் சுவை! ஆங்கிலத்தில் இந்தக் காய்க்கு Spiny Gourd என்ற பெயர் – மேலே முள் போல இருப்பதால்! இந்தக் காயின் தற்போதைய விலை – தலைநகர் விலை – கிலோ எண்பது ரூபாய் முதல் 100 வரை!


கக்கோடா[ரா] சப்ஜி.... - தென்னிந்திய முறையில்...

சிறிய கக்கோடா[ரா] பாவக்காய் சப்ஜி செய்வது போலவே, வெங்காயம் சேர்த்து செய்தேன். நம்ம ஊர் செய்முறை தான் – அதனால் இங்கே செய்முறை தரவில்லை. படங்கள் மட்டும் எடுத்தேன். அது இங்கே தொகுப்பாக தந்திருக்கிறேன். பெரிய கக்கோடா[ரா]வை வட இந்திய முறைப்படிச் செய்தேன். எப்படிச் செய்வது என்பதை கீழே தருகிறேன். நீங்களும் செய்து பார்க்கலாம் – உங்கள் ஊரில் கன்டோலா என்கிற கக்கோடா[ரா] கிடைத்தால்! ராஜஸ்தான், குஜராத் பகுதிகளில் நிறையவே கிடைக்கிறது. சமீபத்தில் தான் மண்ணால் ஆன தவா வாங்கினேன். அதில் தான் சப்பாத்தி இப்போதெல்லாம்! ககோடா[ரா] சப்ஜி செய்த அன்று தான் முதல் முறையாக இந்த மண் தவாவும் பயன்படுத்தினேன். ரெண்டு சோதனைகள் ஒரே நாளில்! புதிய தவாவில் செய்த சப்பாத்தி – புதிய காய்கறியில் சப்ஜி – இரண்டு சோதனை முயற்சிகளும் நன்றாகவே வந்தன!

தேவையான பொருட்கள்:



கன்டோலா என்கிற கக்கோடா[ரா] – கால் கிலோ, எண்ணெய் – 2 ஸ்பூன், அஜ்வைன் என்கிற ஓமம் – 1 ஸ்பூன், மஞ்சள் பொடி – 1 ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, மிளகாய் தூள் – 2 ஸ்பூன், தனியா பொடி – 1 ஸ்பூன், ஜீரா பொடி – 1 ஸ்பூன், தேவையென்றால் – ஒரு ஸ்பூன் – பொடித்த வெல்லம்.

எப்படிச் செய்யணும் மாமு?  


கக்கோடா[ரா] சப்ஜி - வட இந்திய முறையில்....

கக்கோடா[ரா]வை தண்ணீல் அலசி, காய்ந்த பிறகு, நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்த பிறகு, அடுப்பை சிம்மில் வைத்து, அதில் ஓமத்தினைச் சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு மஞ்சள் பொடி சேர்த்து கலக்கிய பிறகு அதில் நறுக்கி வைத்த கக்கோடா[ரா]வைச் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கலக்கு. வாணலியின் மேலே ஒரு தட்டு போட்டு மூடி வைத்து விடுங்கள். இரண்டு மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறை கலக்கி விடவும். நன்றாக வெந்த பிறகு [வெந்துடுச்சா, வேகலையான்னு ஒரு விளையாட்டு நினைவுக்கு வருகிறது!] இரண்டு ஸ்பூன் மிளகாய் பொடி, ஜீரா பொடி, தனியா பொடி சேர்த்து நன்கு கலக்கி விட்டு, மூன்று நான்கு நிமிடங்கள் வேக விடலாம். பிறகு பொடியான வெல்லம் சேர்த்து, ஒன்றிரண்டு நிமிடங்களில் அடுப்பை அணைத்து விடலாம். நன்கு கலந்து விட்டால் போதும். ஆறிய பிறகு வேறு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்!



இணையத்தில் பார்த்த காணொளியில் சொன்ன முறையில் செய்த சப்ஜி இந்த வட இந்திய சப்ஜி. காணொளி மேலே தந்திருக்கிறேன். சப்பாத்தி, பூரி, பராட்டா, குஜராத்தி ரோட்லா போன்றவற்றுடன் இந்த சப்ஜி நன்றாக இருக்கும். 

மீண்டும் ச[சி]ந்திப்போம்…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

34 கருத்துகள்:

  1. காலை வணக்கம் வெங்கட். விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாலை வணக்கம் ஸ்ரீராம். இப்போது தான் வர முடிந்தது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. கக்கடோராவை அரிந்தால் கோவைக்காய் போல இருக்கு. ஜாக்கிரதையாய் சிறியவகையை சமைக்க எடுத்துக்கொண்டு விட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா.... இரண்டும் சமைத்தேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. ஓ... பெரிய கக்கடோராவையும் வாங்கிச் சமைத்து விட்டீர்களா! விளாம்பழம் போல இருந்தது பார்க்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளாம்பழம் - பிள்ளையாருக்குப் பிடித்ததாயிற்றே! பெரிய கக்கோடாவை விட சிறியது பிடித்திருந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. ஓமமா? ஓமம் சேர்த்தால் மருந்து சாப்பிடுவது போல இருக்குமே...!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வடக்கே பல சப்ஜிகளில் ஓமம் சேர்ப்பதுண்டு. சப்பாத்திக்கு மாவு பிசையும் போதே கொஞ்சம் ஓமம் சேர்ப்பது நல்லது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. வெந்துடுச்சா வேகலையா விளையாட்டைப்பற்றி சமீபத்தில் கூட எங்கேயோ படித்து, கமெண்ட் செய்தேனே...

    அருமை. நல்லாயிருக்கு என்று அதைச் சாப்பிட்ட நீங்கள் சொன்னால் சரியாய்த்தான் இருக்கும்!! ஹா.. ஹா.. ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் பதிவில் தான் ஸ்ரீராம், 'குழந்தைகள் உலகம் தனி உலகம்' பதிவு.

      நீக்கு
    2. ஆமாம் கோமதி அக்கா... ஞாபகம் வந்து விட்டது. நன்றி.

      நீக்கு
    3. வெந்துடுச்சா வேகலையா விளையாட்டு - அது ஒரு கனாக்காலம்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    4. குழந்தைகள் உலகம் தனி உலகம். உண்மை தான்மா.. அந்த மகிழ்ச்சி பெரியவர்கள் ஆனபிறகு கிடைப்பதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
    5. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. கன்டோலா அருமை...

    இனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  7. அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குத்தூசி.

      நீக்கு
  8. கக்கோடா - அரிந்தால் கோவைக்காய் போல் தெரிகிறது. எனக்கு கோவைக்காயும் பிடிக்காது.

    எத்தனையோ விதவிதமான காய்கறிகள். எஞ்சாய். எந்தக் காயிலும் வெங்காயம் போட்டுவிட்டால் எப்படியோ சாப்பிட்டுவிடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்தக் காயிலும் வெங்காயம் போட்டால் - ஹாஹா... இருக்கலாம். போட்டால் ஒரு சுவை. வெங்காயம் இல்லாமல் ஒரு சுவை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  9. தாமரைத்தண்டில் உணவு முதன்முறையாக அறிகிறேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாமரைத் தண்டில் ஊறுகாய் கூட உண்டு கில்லர்ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. தாமரைத் தண்டில் வத்தல்செய்வார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    கக்கோடாவில் பதிய முயற்சியாக சப்ஜி செய்து விட்டீர்களா? சுவையாக இருந்திருக்குமென நினைக்கிறேன். பார்ப்பதற்கு குட்டி பாகல் மாதிரி இருந்தாலும், அரிந்து வைத்ததை பார்த்த போது கோவைக்காய் மாதிரி இருக்கிறது. செய்முறை அருமை. புது விதங்களாக கிடைக்கும் காய்கறிகளை வித விதமான தினுசில் சமையல் செய்து பார்க்கும் தங்கள் முயற்சியை பாராட்டுகிறேன்.

    தாங்கள் கூறியபடி வேகவைத்து கட் செய்து கொண்ட உருளைக்கிழங்கில் அரிசிமாவு, கடலைமாவு தெளித்து பிசறி கார்க்கறி ஒருநாள் செய்தேன். ரோஸ்டாக மிகவும் நன்றாக வந்தது. தங்களுக்கு மிகவும் நன்றி. இந்தக் காய் இங்கு கிடைத்தால் செய்து பார்க்கலாம். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  12. கன்டோலா பார்க்க சின்ன பலா பிஞ்சு போல் இருக்கிறது.
    சமையல் குறிப்பு அருமை. இங்கு கிடைக்காது கிடைத்தால் செய்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  14. தாமரைத் தண்டில் செய்ததுண்டு. இதைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் செய்ததில்லை வெங்கட்ஜி. நன்றாக இருக்கும் போலத் தெரியுது. நான் எல்லா காயும் சாப்பிடுவேன் பிடிக்காது என்ற லிஸ்டே இல்லை...எனவே கிடைத்தால் செய்துவிடலாம் ஆனால் விலைதான் பயமுறுத்துகிறது. கிடைக்கும் அங்கேயே விலை இப்படி என்றால் இங்கு கேட்கவே வேண்டாம்...

    பாகலும் வேறு ஏதோ ஒரு காயும் இணைந்து வந்ததோ இயற்கையாகவே!! பார்த்தால் அப்படித்ட் தோன்றுகிறது. ரெசிப்பி குறித்துக் கொண்டாயிற்று. பாகற்காய் போல ஆனால் கசப்பு இல்லை என்பதால் பாகற் செய்வது போலவே இதையும் பிட்லா, சாம்பார் என்று புகுந்து விளையாடலாம்.

    நல்ல ரெசிப்பி சாப்பிடனும் என்று தோன்றுகிறது இங்கு கிடைக்குமானு தெரியலை தமிழில் பெயர் என்னவா இருக்கும் என்று பார்க்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிடிக்காது என்ற பட்டியலே இல்லை. ஹாஹா.. இப்படித்தான் இருக்கணும். தமிழ் நாட்டில் இந்த காய் கிடைக்குமா எனத் தெரியவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  15. வெங்கட்ஜி இது தமிழில் பழு பாகல், மெழுகுபாகல்னு சொல்லப்படுகிறதாம் விக்கி சொல்கிறார்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழு பாகல் - இருக்கலாம். ஆனால் நம் ஊரில் நான் பார்த்ததில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....