ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

சாப்பிடலாம் வாங்க – விதம் விதமாய் இனிப்பு



கடந்த வியாழன் அன்று தில்லியில் நடந்த சுற்றுலா பருவம் நிகழ்ச்சி பற்றி எழுதும்போது, அங்கே பார்த்த விஷயங்கள், எடுத்த படங்கள் ஆகியவற்றை ஞாயிறில் வெளியிடுகிறேன் என்று சொல்லி இருந்தேன். இன்றைக்கு அந்தப் பதிவு அல்ல என்றாலும், இன்றைக்கு இங்கே விதம் விதமாய் இனிப்பு தான் தரப் போகிறேன் – இதில் சில இனிப்பு வகைகளை நீங்கள் கேட்டிருக்க/ சுவைத்திருக்க வாய்ப்பில்லை என்ற எண்ணம் எனக்குள் இருந்ததால் தான் இப்படி. எதற்காக இத்தனை வகை இனிப்பு என்ற கேள்வி பிறந்தால் உங்களுக்கு ஒரு சபாஷ்! காரணம் இருக்கிறது – கடைசியில் சொல்கிறேன்! முதல் இனிப்பாக உத்திராகண்ட் மாநிலத்திலிருந்து ஒரு இனிப்பு!


சிங்கோரி...

1. சிங்கோரி - மேலே இருக்கும் இனிப்பின் பெயர் சிங்கோரி! உத்திராகண்ட் மாநிலத்தின் Gகdட்வால் மற்றும் குமாவ்ன் பகுதிகளில் இந்த இனிப்பு செய்கிறார்கள். அங்கே இருக்கும் ஒரு மரத்தின் இலையில் சுற்றி வைத்து தரும் இந்த இனிப்பினை இது வரை சுவைக்க வாய்ப்பு அமையவில்லை! நண்பர் ஒருவர் இந்த இனிப்பின் சுவை பற்றி சொல்லி இருக்கிறார் என்பதால் தெரியும்.


ஷூப்தா...

2. ஷூப்தா - ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், குறிப்பாக காஷ்மீர் பகுதியில் உலர் பழங்கள் நிறையவே கிடைக்கும். அந்த மாநிலத்தில் செய்யப்படும் ஒரு இனிப்பில் உலர் பழங்கள் நிறைய உண்டு! பாதாம், முந்திரி, பிஸ்தா, வாதுமை கொட்டை [Walnut], திராட்சை மற்றும் பனீர் கொண்டு தயாரிக்கப்படும் மேலுள்ள இனிப்பின் பெயர் ஷூஃப்தா!


சக் ஹாவ் கீர்...

3. சக் ஹாவ் கீர் [Chak Hao Kheer] எனும் இனிப்பு வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மிகவும் பிரபலம். அங்கே கிடைக்கும் கருப்பு அரிசியில் செய்யப்படும் இந்த இனிப்பு – நம் ஊர் பாயசம் மாதிரி தான் என்றாலும் கருப்பு அரிசியில் செய்யப்படுவது. இணையத்தில் இந்த இனிப்பின் செய்முறை உண்டு.


டப்ரூ...

4. Dabbroo – இது ஹிமாச்சலத்து இனிப்பு – பார்க்க தோசை மாதிரியே இருக்கே என்று நினைத்தால் தோசை மாதிரி தான் – ஆனால் இனிப்பு தோசை – கோதுமை, சர்க்கரை மற்றும் நெய் சேர்த்து தயாரிப்பது. ஹிமாச்சலப் பிரதேசத்தில் இந்த இனிப்பு வகை விழாக் காலங்களில் கண்டிப்பாக இடம் பெறும்.


பால் மிட்டாய்...

5. Bபால் மிட்டாய் – ஹிந்தியில் Bபால்-னா முடியாச்சே…. முடில கூடவா மிட்டாய் செய்வாங்க…. கேட்கவே முடில! என்று நினைத்ததுண்டு – இந்தப் பெயர் கேள்விப்பட்ட போது. ஆனால் முடியில் செய்யும் மிட்டாய் இல்லை இந்த Bபால் மிட்டாய். கோயா/மாவாவில் செய்யும் இனிப்பு இந்த Bபால் மிட்டாய்! இதுவும் உத்திராகண்ட் மாநில இனிப்பு தான்!


மாவா பாட்டி...

6. மாவா Bபாட்டி – மத்தியப் பிரதேசத்திலிருந்து ஒரு இனிப்பு மாவா Bபாட்டி – பார்க்க குலோப்ஜாமூன் மாதிரி இருந்தாலும், இது வேறு.  உள்ளே உலர் பழங்கள் வைத்து செய்யப்படும் இந்த மாவா Bபாட்டி மத்தியப் பிரதேசத்தின் பகுதிகளில் மிகவும் பிரபலம்.


சிரோட்டி காஜா...

7. சிரோட்டி காஜா: இந்த காஜா ஆந்திரப் பிரதேசத்திலும் செய்வார்கள் என்றாலும் பீஹார் மாநிலத்தவர்கள் சொல்வது இது எங்கள் ஊர் ஸ்பெஷல் என! ஆந்திர காஜாவும் சாப்பிட்டதுண்டு, பீஹார் மாநிலத்தின் சிரோட்டி காஜாவும் சாப்பிட்டதுண்டு – அலுவலகத்தில் இப்போதெல்லாம் நிறைய பீஹார் மாநிலத்தவர்கள்! :)


குலாப் பீதா...

8. Gகுலாப்b பீதா -  பெங்காலி இனிப்பு – மைதா, சர்க்கரை மற்றும் நெய் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு இது. பார்க்க ரோஜாப்பூவைப் போல இருக்கும் இந்த இனிப்பு செய்வதற்கு கொஞ்சம் வேலை அதிகம் என்றாலும் பார்க்கவே அழகு! ஹிந்தியில் Gகுலாப்b என்றால் ரோஜா!


தேஹ்ரோரி...

9. தேஹ்ரோரிசத்தீஸ்கட் மாநிலத்தில் ஹோலி சமயத்தில் செய்யப்படும் இனிப்பு இது. அரிசி, தயிர் மற்றும் சர்க்கரை கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு இது. பார்த்திருந்தாலும் இதுவரை சுவைத்ததில்லை.


சென்னா போடா...

10. சென்னா போடா:  ஒடிஷா மாநிலத்தின் இனிப்பு இந்த சென்னா போடா! என்னங்க இது மரியாதை இல்லாம போடான்னு சொல்றீங்க! என்று கோபம் கொள்ள வேண்டாம் – இந்த இனிப்பின் பெயர் தான் போடா! சென்னா என்றால் வேறு ஒன்றுமில்லை – பனீரை தான் இவர்கள் சென்னா என்று சொல்கிறார்கள். மைக்ரோவேவ் அவனில் செய்யப்படும் கேக் போன்ற இனிப்பு இது!


என்ன நண்பர்களே, இந்தியாவில் பல மாநிலங்களிலிருந்து கொண்டு வந்த இனிப்பினை ருசித்தீர்களா…. பதிவின் ஆரம்பத்தில் சொன்னது போல இந்த இனிப்பிற்கான காரணத்தினைச் சொல்லும் தருணம் வந்து விட்டது. இன்றைக்கு 30 செப்டம்பர். 2009-ஆம் ஆண்டு இதே நாளில் தான் வலைப்பூ தொடங்கி இணையத்தில் எழுத ஆரம்பித்தேன். ஒன்பது வருடங்கள் முடிந்து பத்தாம் வருடத்தில் அடி எடுத்து வைத்திருக்கிறது இந்த “சந்தித்ததும் சிந்தித்ததும்” வலைப்பூ! வலைப்பூவினை ஆரம்பிக்கும் போது இத்தனை வருடங்கள் தொடர்ந்து எழுதுவேன் என நினைத்தது இல்லை. எனக்கென்று வலைப்பூ ஆரம்பித்து, என்னை எழுத ஊக்குவித்த எனது சித்தப்பா ரேகா ராகவன் இப்போதெல்லாம் வலைப்பூவில் எழுதுவதே இல்லை.

வலைப்பூவில் எழுதத் துவங்கிய போது எழுதிக்கொண்டிருந்த பலர் இப்போதெல்லாம் எழுதுவதே இல்லை. தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். முகநூல், வாட்ஸப், ட்விட்டர், இன்ஸ்டாக்ராம் என பல தளங்களுக்கு மாறி விட்ட இணைய நண்பர்கள் பலர். 369 தொடர்பவர்கள், 11 லட்சத்து 65 ஆயிரம் பக்கப் பார்வைகள், 1740 பதிவுகள், ஆயிரக் கணக்கில் பின்னூட்டங்கள் என எனது வலைப்பயணம் இன்னமும் தொடர்கிறது. இன்னும் எத்தனை நாள் இந்தப் பயணம் தொடரும் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். முகநூல் அந்த அளவுக்கு என்னை ஈர்க்கவில்லை என்பதும் இங்கே தொடர்வதற்கு காரணம். இத்தனை வருடங்களாக தொடர்ந்து ஆதரவு தந்து வரும், படித்து தங்கள் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளும் அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.

தொடர்ந்து நட்பில் இணைந்திருப்போம்…

மீண்டும் ச[சி]ந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

52 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!!!

    இனிய ஸ்வீட்ஸோடு வரவேற்பா!! ஹா ஹா ஹா

    ஸ்ரீராம் நான் முந்திக்கிட்டேன்...நீங்க க்யூல நில்லுங்க.ஸ்வீட்ட் டேஸ்ட் பண்ண....ஹா ஹா ஹா நெல்லை கீதாக்கா எல்லாருக்கும் ஸ்வீட் பிடிக்கும் அதுவரை இருக்கனுமே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கீதா ஜி!

      ஆஹா... எல்லோரும் கீதா ஜி சொல்ற மாதிரி க்யூல நின்னாதான் ஸ்வீட் கிடைக்கும்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  2. முதல் இரண்டும் நட்ஸ் அண்ட் ட்ரை ஃபுரூட்ஸ் கலந்து சூப்பர்...

    அந்த கறுப்பு அரிசியில் செய்வது செய்திருக்கேன். உறவினர் ஒருவர் சிவப்பு அரிசி வாங்கச் சென்று தெரியாமல் வாங்கிக் கொண்டு வந்துவிட அதை என்ன செய்வது என்று தெரியாமல் அதை என்னிடம் கொடுத்துவிட்டார். அப்போது நான் அதில் கொஞ்சத்தை கேரளத்து கஞ்சி போல செய்தேன். அப்புறம் நெட்டில் பார்த்து இந்த ஸ்வீட் கீர் செய்தேன்..வேக கொஞ்சம் டைம் எடுக்கிறது...மற்றபடி நன்றாக இருக்கிறது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மணிப்பூர் பயணத்தில் கறுப்பு அரிசி உணவு ஏதோ ஒன்று முயற்சித்தேன். நீங்கள் சொல்வது போல வேக நிறையவே நேரம் எடுக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  3. அந்த தோசை என் பாட்டி செய்யற பாட்டிட்டருந்து நான் கற்றுக் கொண்ட இனிப்பு கோதுமை தோசை மாதிரியேதான்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிப்பு தோசை கொஞ்சம் சுலபம் தான். செய்து பார்க்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  4. எல்லா ஸ்வீட்டும் அருமை. குறித்தும் கொண்டேன். கோதுமை தோசை தவிர.....சிரோட்டி காஜா நம்ம ஊர்/கர்நாடகா சிரோட்டி போலவேதான் இருக்கு. என்ன இதில் ட்ரை ஃப்ரூட்ஸ் நடுவில் வைச்சுருக்காங்க.

    அந்த இரண்டாவது ட்ரைஃப்ரூட்ஸ் சிக்கி போல இருக்கு அது இங்கும் ஏதோ ப்ரான்ட் பெயரில் கிடைக்கிறது....ஷுப்தாவும் அப்படித் தெரிந்தாலும் வித்தியாசமாக இருக்கும் என்று தோன்றுகிறது...எல்லாத்துக்கும் நெட்டில் செய்முறை பார்த்து வைத்துக் கொள்ளனும்...

    சூப்பர் இனிய ஞாயிறு!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெட்டில் அனைத்தும் செய்யும் விதம் கிடைக்கிறது. முடிந்த போது செய்து பாருங்கள். நீங்கள் செய்த பிறகு வலைப்பூவிலும் பகிர்ந்து கொள்ளவும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  5. காலை வணக்கம் வெங்கட். முதல் படம் மதுரை ஹேப்பிமேன் அல்வாவை ரோல் செய்தமாதிரி இருக்கு! சிங்கோரி இலையுடன் சாப்பிட வேண்டுமாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

      ஹேப்பிமேன் அல்வா - இதைச் சாப்பிடுவதற்காகவேனும் மதுரை செல்ல வேண்டும் எனத் தோன்றுகிறது! அஞ்சல் வழி அனுப்புவார்களா?

      சிங்கோரி இலையுடன் சாப்பிட வேண்டாம். இலையின் சுவை இனிப்பில் இருக்கும் - சில மணி நேரங்கள் சுற்றி வைப்பதால்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    2. @ஸ்ரீராம் - ரொம்பவும் வெறுப்பேற்ற வேண்டாம்... மதுரை ஹேப்பிமேன் அல்வாவை வரவழைத்துச் சாப்பிட்டுவிட்டு, அது நீங்கள் சொன்னதுபோல் அவ்வளவு நன்றாக இல்லை என்றால், செலவழித்த பணம் முழுவதும் நீங்கள்தான் தரணும்... இப்போவே சொல்லிட்டேன்..

      நீக்கு
    3. அதிக எதிர்பார்ப்பு எப்போதுமே ஏமாற்றத்தைதான் தரும் நெல்லை...!

      நீக்கு
    4. [திருத்தப்பட்டது]

      (அதிக) எதிர்பார்ப்பு எப்போதுமே ஏமாற்றத்தைதான் தரும் நெல்லை...!

      நீக்கு
    5. நெல்லை நானும் வாங்க நினைத்திருக்கிறேன் ஹாப்பி மேன் ஹல்வாவை. நல்லா இல்லைன்னா ஸ்ரீராம் கிட்ட வாங்கிட வேண்டியது தான் பணத்தை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
    6. ஹை ஹை... இந்த சமாளிப்புக்கு நாங்க பயப்படமாட்டோம். நல்லா இல்லைன்னா உங்கள்ட இருந்து பணம் வசூல் தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    7. அதிக எதிர்பார்ப்பு - அதிக ஏமாற்றம்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. ஷுப்தா மிக்ஸர் போல இருப்பதாலும் சக் ஹாவ் கீர் பீட்ரூட் அல்வா போல இருப்பதாலும் அவற்றை பெருந்தன்மையுடன் உங்களுக்கே விட்டு விடுகிறேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஷுப்தா நன்றாகவே இருக்கும் ஸ்ரீராம். கறுப்பு அரிசி இனிப்பும் சுவை தான். பீட்ரூட் உங்களுக்குப் பிடிக்காதா? சிறு வயதில் அம்மா வாங்கி வரும் பீட்ரூட்டை பொரியலாகச் சாப்பிடாமல், துருவி சர்க்கரை சேர்த்து அப்படியே சாப்பிட்டதுண்டு. இப்போது அப்படிச் சாப்பிட்டு பார்க்கத் தோன்றுகிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. டப்ரூ நான்கைந்து டுத்துக்கொள்கிறேன். நல்லாயிருக்கும்போல! பால் மிட்டாய் ஓகே. மாவா பாட்டி (பாட்டி சொல்வார்..."இல்லைடா பேராண்டி.. இது மாவு இல்லை. ஸ்வீட்டு!) இரண்டும் ஓகே ரகம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்... எடுக்க எடுக்க குறையாமல் இருக்கும் அட்சயப் பாத்திரம் தான்! :)

      இல்லைடா பேராண்டி - இது மாவு இல்லை ஸ்வீட்டு - ஹாஹா... ரசித்தேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. சீரோட்டி காஜா மாவு அதிகமாகவும் ஸ்வீட் கம்மியாகவும் இருக்கும் போல! குலாப் நல்லாயிருக்கு பார்க்க.. ஹார்டா இருக்குமோ? தேஹ்ரோரி அதிரசம் அல்லது சூயனை நினைவூட்டுகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிரோட்டி - ஆந்திராவில் செய்வது போன்றதை சாப்பிட்டிருக்கிறேன். கரகரவென்று இருக்கும். சர்க்கரைப் பாகில் ஊறவைத்துச் செய்வது தான்.

      தேஹ்ரோரி அரிசி மாவில் தயிர் சேர்த்து செய்கிறார்கள்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  9. சென்னா போடா... நாம் அதற்கு ஒடிஷா போடா என்று பெயர் வைத்து விடுவோம். பழிக்குப்பழி!

    பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சந்தித்ததும் சிந்தித்ததும் வலைப்பூவுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒடிஷா போடா.... ஹாஹா. நாம் அப்படியே அழைத்து விடலாம் இந்த இனிப்பை....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  10. 5,6,7 சுவைச்சிருக்கேன். பிகாரின் இனிப்புக்களோ வடகிழக்கு மாநிலங்களின் இனிப்புக்களோ தெரியாது. காஷ்மீர் உணவு சாப்பிட்டிருக்கேன்.இனிப்பு அதிகம் சாப்பிட்டதில்லை. பல புதிய இனிப்பு வகைகள். இந்த ஞாயிற்றுக்கிழமையைக் காலை இனிப்புடன் ஆரம்பித்திருப்பதற்கு நன்றி. சாவகாசமாய் வந்து செய்முறைகள் கிடைக்கின்றனவா என்று பார்க்க வேண்டும். கறுப்பு அரிசி சமைத்ததே இல்லை. ப்ரவுன் ரைஸ் இங்கேயும் சமைச்சிருக்கேன். அம்பேரிக்காவிலும் சமைச்சிருக்கேன். அதில் கிச்சடி நன்றாகவே இருக்கும். அடை, தோசை போன்றவையும் பண்ணலாம். இதில் உள்ள இனிப்பு தோசை கிட்டத்தட்ட நம்ம ஊர் வெல்ல தோசை போல் தான்! சீச்சீ! இந்தப் பழம் புளிக்கும்! இஃகி, இஃகி, இஃகி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா கீதா அக்கா.. அப்போ ஒன்று மட்டும் வைத்துக்கொண்டு மிச்சத்தை வைத்து விடுகிறேன்.. ஹா.. ஹா.. ஹா...

      நீக்கு
    2. எல்லாத்தையும் வைங்க! எனக்கு வேணும்! :))))

      நீக்கு
    3. பீஹார் மாநில இனிப்புகள் அடிக்கடி சாப்பிடுவதுண்டு. அலுவலக நண்பர்கள் ஊருக்குச் சென்று வந்தால் கொண்டு வருவார்கள். சில நன்றாகவே இருக்கின்றன. பர்வல் கி மிட்டாய் என்று ஒன்று ரொம்பவே பிடித்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
    4. ஹாஹா.... ஸ்ரீராம் உங்களுக்கு எத்தனை வேண்டுமோ அத்தனை எடுத்துக் கொள்ளலாம். பிறகு வருபவர்களுக்கும் கிடைத்துக் கொண்டே இருக்கும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    5. ஆஹா உங்களுக்கே எல்லாம் வேணுமா.... எடுத்துக்கோங்க....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  11. முதல்லே வந்திருக்கே சிங்காரமான சிங்கோரி அதைப் போலவே பிஸ்தா கோன் சாப்பிட்டிருக்கேன். பாதாமிலும் கோன் செய்து உள்ளே நட்ஸ் அடைத்திருப்பார்கள். நான் முதல்லே அதானோனு நினைச்சேன். அப்புறம் பார்த்தா இலைனு சொல்றீங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இலையின் பெயர் கூட சிங்கோரி தான்! :) பிஸ்தா கோன், பாதாம் கோன் - இதெல்லாம் வடக்கே கிடைக்கின்றன. நம் ஊரில் கிடைக்கிறதா எனப் பார்க்க வேண்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  13. அடேங்கப்பா எவ்வளவு இனிப்புகள். இனிப்பை விரும்பாத எனக்குகூட ஆசை வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா.... உங்களுக்கு இனிப்பு பிடிக்காதா என்ன..... கொஞ்சமா எடுத்துக்கோங்க. இனிப்பு நல்லது! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  14. உங்களுடைய ப்ளாகிற்கு 10ஆண்டுகள் நிறைவு அடைந்ததை கொண்டாடதான் இத்தனை வகை இனிப்புகளா!! நன்றி. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்! தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா இனிப்புகளை காணோமே..?!! ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒன்பது வருடங்கள் நிறைவு. பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறது இந்த வலைப்பூ!

      தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா இனிப்புகள் - நம்மில் பலருக்கும் தெரிந்தவை என்பதால் இங்கே சேர்க்கவில்லை! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

      நீக்கு
  15. இனிப்பான தொகுப்பு. தகவல்களுடன் படங்கள் அருமை. 9_ஆம் ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துகள்! தொடருங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  16. இப்போத் தான் கவனிச்சேன். ஒன்பது ஆண்டுகள் முடிந்து பத்தாம் ஆண்டுத் துவக்கம் என்பதை. மனமார்ந்த வாழ்த்துகள்! தொடர்ந்து இது போலப் பற்பல ஸ்வீட் வகைகளை அறிமுகம் செய்யவும் பிரார்த்தனைகள்! :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  17. ஆவ்வ்வ்வ் இம்முறை வித்தியாசமான இனிப்புக்களாகப் போட்டு வெறுப்பேத்துறீங்க.. இவற்றை எப்படித்தான் நாங்கள் சுவை பார்க்க முடியும்.. அந்த முதலாவது சுத்தியிருப்பது வெற்றிலையாலோ... முதலாவதும் ரெண்டாவதும் வாங்கிச் சாப்பிடோணும் என ஆசையா இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவற்றுக்கான குறிப்புகள் இணையத்தில் உண்டு ஞானி அதிரா. நீங்களே செய்து பார்த்து சுவைக்கலாம்! அதுதானே கஷ்டம் என்று சொல்கிறீர்களா..... ஹாஹா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  18. பத்தாவது வருடத் தொடக்கத்திற்கு வாழ்த்துக்கள்.
    இனிப்புகள் அருமை.
    வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
    2. பத்தாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் பதிவுக்கு மனம் நிறை வாழ்த்துகள். இன்னும் 40 50 ஆண்டுகள் எழுத வேண்டும்.

      இனிப்புகள் சூப்பர். பார்த்தே என் லெவல் ஏறி விட்டது. மருமகள் தில்லிப்சென்று வரும்போதெல்லாம் பார்த்துப் பார்த்து வாங்கி வருவார் மாமனார் சாப்பிட.
      மனம் நிறைகிறது இந்த வகைகளைப் பார்க்கும் போதே.
      ஹ்ம்ம். ஆசை இருக்கு தாஅசில் பண்ண. ஆஹா ஆஹா.

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

      நீக்கு
  19. ஆஹா... இந்த இடுகையை எப்படித் தவறவிட்டேன். அனைத்து இனிப்புகளும் அருமை (அடடா வெங்கட் சாப்பிட்டிருக்கிறாரே... நமக்கு அந்த வாய்ப்பு இன்னும் கிடைக்கலையே என்று தோன்றியது, கறுப்பு அரிசி இனிப்பைத் தவிர. அது பார்க்கவே நன்றாக இல்லை..ஹாஹாஹா)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா. கறுப்பு அரிசி இனிப்பு - பார்க்க நன்றாக இல்லையா! :) பார்க்க நன்றாக இருப்பது பலவும் சுவையில் நன்றாக இருப்பதில்லை! :))))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  20. உங்களுக்கென்ன. ஸ்வீட் படமாப் போட்டுத் தள்ளீட்டீங்க. அதப்பாத்து ரொம்ப துள்ளுன நாக்கை control பண்ண நான் பட்ட பாடு. நல்லவேளை, வீட்டுல கடலை மிட்டாய் ஸ்டாக் இருந்துது. இரண்டு பீஸ் கொடுத்து கட்டுக்குள் கொண்டு வந்தேன்.

    பத்தாவது வருடம் இனிப்புடன் தொடங்கி விட்டீர்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடலை மிட்டாய் - அதற்கு இணை ஏது! இப்ப உடனே கடைக்குப் போய் கடலை மிட்டாய் வாங்கணும் நானு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....