காஃபி வித் கிட்டு – பகுதி – 4
குரங்கு சவாரி…
திங்கக் கிழமை அன்று
இரவு உணவுக்குப் பிறகு ATM வரை செல்ல வேண்டியிருந்தது. வழக்கம் போல முதலாவது
ATM-ல் அறிவிப்பு பலகை – “நகத் நஹி ஹே… ஆப் கி அசுவிதா கே லியே கேத் ஹே!” – பணம் இல்லையாமாம்!
அடுத்ததில் தேவையான பணம் எடுத்துக் கொண்டு வெளியே வந்தால் 910 பேருந்து – ஷிவாஜி ஸ்டேடியத்திலிருந்து
சையத் காவ்ன் வரை செல்லக்கூடிய பேருந்து வந்து கொண்டிருந்தது. அதில் இருந்த சவாரி –
பேருந்தின் மேல் வாலையே ஸ்பெஷல் சீட்டாகக் கொண்டு, முன்பக்கத்தில் ஒய்யாரமாக
உட்கார்ந்து பயணித்தது. பேருந்து
ஓட்டுனரிடம் சொல்லவோ, அலைபேசியை எடுத்து புகைப்படம் எடுக்கவோ நேரமில்லை. பேருந்து
கடந்து விட்டது. இரவு நேரத்தில் ஜாலி ரைட் போகிறது போலும் அந்தக் குரங்கு!
இந்த வாரத்தின் ரசித்த
பாடல்:
சிவகார்த்திகேயன்
தயாரிப்பில் உருவாகிவரும் படம் கனா. அப்பாவுக்கும் மகளுக்குமான அற்புத உறவு பற்றிய
படம் என்று சொல்கிறார்கள். இந்தப் பாடலை சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனாவுடன்,
சிவகார்த்திகேயனும், வைக்கம் விஜயலக்ஷ்மியும் பாடி இருக்கிறார்கள். முதல் முறை
கேட்டவுடனேயே பிடித்து விட்டது. கேளுங்களேன்.
இந்த வாரத்தின் ஒரு விளம்பரம்:
Gகூங்கட் – வட இந்தியப் பெண்கள் –
குறிபாகத் திருமணம் ஆனவர்கள் எப்போதும் தங்கள் முகத்தினை புடவைத் தலைப்பால் மூடியே
வைத்திருப்பார்கள் – இதற்கு Gகூங்கட் எனப் பெயர். கடுமையான கோடைக் காலங்களிலும்
இப்படி முகத்தினை மூடி இருப்பது கொடுமையான விஷயம். ஆண்கள் முன்னர் தங்களது
முகத்தினைக் காண்பிக்கக் கூடாது என்ற வழக்கம் இப்போதும் வடக்கே இருக்கிறது.
சமீபத்தில் கூட இவர்களுக்குச் சுதந்திரம் தரவேண்டும் என்று சொல்லும் ஒரு
குறும்படம் பார்த்தேன் – இணையத்தில் இருந்தால் பிறகு அதை இங்கே பகிர்ந்து
கொள்கிறேன். இந்த வாரம் இனிமேல் Gகூங்கட் இப்படியும் இருக்கலாம் எனச் சொல்லும் ஒரு
விளம்பரம்!
கன்டோலா:
காய்கறி வாங்கப்
போகும்போது, நம் ஊரில் கிடைக்காத வித்தியாசமான காய்கறி ஏதேனும் பார்த்தால் அதை
விற்பவரிடம் அது என்ன, எப்படி சமைப்பது எனக் கேட்பதுண்டு. சில சமயங்களில் கேட்பது
மட்டுமல்லாது, வாங்கிக் கொண்டு வந்து சமைத்தும் பார்ப்பதுண்டு. அப்படி பார்த்த ஒரு
காய்கறி தான் மேலே இருப்பது – காய்கறிக்கடைக்காரர் அதன் பெயர் சொன்னார் - அது ”கக்ரோடா” என்று எனக்குக் கேட்டது. .இணையத்தில் தேடினால் அந்தப் பெயரில் உத்திராகண்ட் மாநிலத்தில் ஒரு ஊர்
இருப்பதாகக் காண்பிக்கிறது. கக்ரோடா அல்ல கன்டோலா (அல்லது) கக்கோடா என பிறகு தெரிந்து கொண்டேன். சமீபத்தில் வாங்கி வந்தேன் – சோதனை முயற்சி
தான்! எப்போதும் நாம் தானே சோதனை எலி! இங்கே நமக்கு நாமே திட்டம் – செய்ததும் நானே,
சோதனை எலியும் நானே! எப்படி இருந்தது என்பதை தனிப்பதிவாக எழுதுகிறேன். இந்த
காய்கறி பார்த்திருக்கிறீர்களா என பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!
தலைநகரிலிருந்து - Bபல்லிமாரான்:
பதிவு எழுத ஆரம்பித்த
நாட்களில் அவ்வப்போது தலைநகரிலிருந்து என்ற தலைப்பில் பதிவுகள் எழுதி வந்தேன் –
தலைநகரின் வித்தியாசமான அனுபவங்கள் சொன்ன பதிவுகள் அவை. சில பதிவுகளுக்குப் பிறகு
எழுதவில்லை. இந்த வாரத்தில் அப்படி ஒரு விஷயம் – இங்கே. தலைநகரில் நிறைய பழமையான இடங்கள் உண்டு – பழைய தில்லியில்
இருக்கும் சில பகுதிகள் நூற்றாண்டுகளுக்கும் மேலானவை. சமீபத்தில் அப்படி ஒரு
இடத்திற்குச் சென்றிருந்தேன். அந்த இடத்தின் பெயர் Bபல்லிமாரான் – Bபல்லி என்றால் மூங்கில்/துடுப்பு,
மாரான் – துடுப்பு போடுபவர் – அந்தக் காலத்தில் துடுப்புப் போடும்
படகோட்டிகளுக்கான வசிப்பிடமாக இருந்த இடம் இந்த Bபல்லிமாரான்! இப்போதைய Bபல்லிமரான்
பகுதியில் இன்னமும் பல கடைகள் தலைமுறை தலைமுறைகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த Bபல்லிமாரான்
ஒரு சட்டசபைத் தொகுதியும் கூட! அப்பகுதிக்கு எதற்காகச் சென்றேன், அங்கே கிடைத்த
அனுபவங்களை தனிப்பதிவாக எழுதுகிறேன்!
செப்டம்பர்-1, 2013 – சென்னை
பதிவர் சந்திப்பு:
ஐந்து வருடங்களுக்கு முன்னர் இதே
நாளில் தான் ஒரு பதிவர் சந்திப்பு நடந்தது. நடந்த இடம் - சென்னையின் வடபழனி
பகுதியில் இருக்கும் Cine Musicians Auditorium. பதிவுகளில் மட்டுமே
சந்தித்திருந்த பல பதிவர்களை அன்று தான் முதன் முதலில் சந்தித்தேன். அதே சமயத்தில்
குடும்ப விழா ஒன்று இருக்க, குடும்பத்துடன் பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டேன்.
புலவர் இராமானுஜம் ஐயா, சென்னைப் பித்தன், கந்தசாமி ஐயா, சுப்பு தாத்தா, ரமணி ஜி, ரஞ்சனி
நாராயணன் அம்மா மற்றும் பலரையும் அங்கே சந்தித்து பேசிக் கொண்டிருந்த மகிழ்ச்சியான
தருணங்கள். நான் கலந்து கொண்ட ஒரே பதிவர் சந்திப்பு. சந்திப்பின் போது எடுத்த
படங்கள் 200-க்கும் மேல்! எட்டு பதிவுகளில் படங்களை வெளியிட்டு இருக்கிறேன்! முதல் பதிவு – பதிவர் சந்திப்பு – புகைப்படங்கள் தொகுப்பு – 1.
இனிமையான நினைவுகளைத் தந்த சந்திப்பு.
கடைசியாக பதிவர் சந்திப்பு இரண்டு வருடங்களுக்கு முன்னர் மதுரையில் நடந்தது.
சின்னச் சின்னதாய் சந்திப்புகள் இருந்தாலும் பெரிய அளவில் சந்திப்புகள் நடக்க
வாய்ப்பில்லை என்று தான் தோன்றுகிறது – சந்திப்பில் பார்த்த பல பதிவர்கள் இப்போது
பதிவுகளே எழுதுவதில்லை என்பதையும் சொல்ல வேண்டும்.
என்ன நண்பர்களே, இந்த வாரத்தின்
காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச்
சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
நட்புடன்
வெங்கட்
புது தில்லி
குட்மார்னிங் வெங்கட்.
பதிலளிநீக்குசென்ற வாரம் திடீரென எங்கள் ஏரியாவில் நான்கைந்து குரங்குகள் கண்ணில்பட, எல்லோரும் கதவை மூடிக்கொண்டு பத்திரமாக இருந்தோம். அவை ஏரியாவை விட்டு வெளியேறி விட்டன என்கிற தகவல் வரும்வரை!
மாலை வணக்கம் ஸ்ரீராம்.
நீக்குகுர்ங்குகள் - எங்கள் பகுதி ரிட்ஜ் பகுதிக்கு அருகில் என்பதால் குரங்குகள் அவ்வப்போது வரும். அலுவலகம் இருக்கும் பகுதியில் குரங்குகள் நிறையவே.....
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
சிகா பாடல் மகன்கள் கேட்கும்போது தவிர்க்கமுடியாமல் கேட்டிருக்கிறேன்! ரிப்பீட் மோடில் அவர்கள் கேட்ட பாடலையே மறுபடி மறுபடி கேட்கும்போது கொஞ்சம் எரிச்சல்தான் வரும். ஏதாவது சொன்னால் வயசை வம்புக்கு இழுப்பார்கள் என்பதால் சும்மா இருந்துவிடுவேன்...!
பதிலளிநீக்கு>> ஏதாவது சொன்னால் வயசை வம்புக்கு இழுப்பார்கள் என்பதால் சும்மா இருந்துவிடுவேன்!..<<
நீக்குஅதுதான் ரொம்பவும் நல்லது!...
ஹாஹா... வயசை வம்புக்கு இழுப்பார்கள்.... :) நான் இந்தப் பாடலை பதிவிட்டதற்கு மகள் சொன்னது - இந்தப் பாட்டு உனக்குத் தெரியுமா! பழைய பாட்டு தானே தெரியும்!
நீக்குசும்மா இருப்பது சுகம்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!
நீக்குகூங்கட் குறும்படம் பின்னர்தான் பார்க்கவேண்டும். ஆனால் அந்த வார்த்தை ஒரு அழகான பாடலை நினைவு படுத்தி விட்டது. கூங்கட் கி ஆட்க்கா தில் பர்க்கா... அமீர்கான், ஜூஹி...
பதிலளிநீக்குGகூங்கட் - வார்த்தை வைத்து நிறைய ஹிந்தி பாடல்கள் உண்டு. அமீர்கான் ஜூஹி பாடல் எனக்கும் பிடிக்கும்.
நீக்குகுறும்படம் முடிந்த போது பாருங்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
கக்ரோடாவைப் பார்த்தால் பாகற்காய்க்கு ஒன்று விட்ட தம்பி போலிருக்கு! பாகற்காய்க்கும் எலுமிச்சைக்கு பிறந்த குழந்தை போலவும் இருக்கு!
பதிலளிநீக்குபாகற்காய்க்கு ஒன்றுவிட்ட தம்பி - ஹாஹா... சுவை மட்டும் கசப்பு இருக்காது. அதே மாதிரி தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
பல்லி என்றால் எனக்கு நினைவுக்கு வருவது நம்மூர் பல்லிதான்! நேற்று என் செல்லம் ஒரு பல்லியை முதன்முறையாக கேட்ச் செய்து டின்னர் செய்து விட்டது!
பதிலளிநீக்குபூச்சி பல்லிக்கு டின்னர் என்றால் பூனைக்கு டின்னர் பல்லி! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
சிரிப்புக்கொரு தனபாலன்! மகிழ்வான அவர் முகம் நமக்கும் மகிழ்வூட்டுகிறது.
பதிலளிநீக்குதனபாலனின் மகிழ்ச்சி பரவட்டும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
ஒவ்வொரு படமும் ஒவ்வொரு செய்தியை அழகான புகைப்படத்துடன் தருகிறது. திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நீங்கள் தந்துள்ள பட்டம் அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குகனா பாடல் நண்றாகத்தான் இருக்கிறது.
பதிலளிநீக்குதிண்டுக்கல் ஜி புகைப்படம் ஸூப்பர்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குநீங்கள் அந்த ATMமுக்கு வருவீர்கள் என்று அந்த குரங்குக்கு (ஆஞ்சிக்கு) எப்படி தெரிந்தது. ஒரு வேளை அதுதான் நகத் நஹி என்று எழுதி வைத்ததோ.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜே.கே. ஜி!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஜாலியாக பஸ்ஸில் பயணம் போகும் நம் மூதாதையர் மிகவும் அழகாக உள்ளார்.
கன்டோலா அசப்பில் குட்டி பாகற்காய் மாதிரி இருந்தது. பெரிது படுத்தி பார்க்கும் போது சிறிது வித்தியாசங்கள் தெரிந்தது. பாகற்காய்க்கு இது என்ன உறவு என்பதை சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் உறுதிப்படுத்தி விட்டார். ஹா ஹா ஹா. நன்றி. இந்த காயை இதுவரை பார்த்ததில்லை.
சிவகார்த்திகேயன், அவர் மகள் பாடும் பாடல் கேட்டேன். நன்றாக உள்ளது.
பல்லிமாரான் பெயரே வித்தியாசமாக உள்ளது. அதற்கு தாங்கள் கொடுத்த விளக்கம் பொருத்தமாக இருத்தது.
பதிவர் சந்திப்பு பக்கம் சென்று அனைத்துப் படங்களையும் பார்த்து வந்தேன். மிகவும் அழகாக, மிகவும் தெளிவாக படங்கள் எடுத்துள்ளீர்கள்.200 படங்களா?அனைத்தையும் பதிவாக வெளியிட்டீர்களா? பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும், தங்களுக்கும் நன்றிகள்.
தொகுப்பு மிகவும் அருமையாக இருக்கிறது.
அனைத்தையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
200 படங்களும் கொஞ்சம் கொஞ்சமாக சில பதிவுகளில் வெளியிட்டேன். ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!
கொடுத்த பாடலை பிறகு ரசிக்க வேண்டும்...
பதிலளிநீக்குGகூங்கட் பற்றி இன்று தான் அறிந்தேன்...
காய்கறி - இதே போல் சிவப்பாக கொடைக்கானலில் கிடைக்கும், அது (பழம்) வேறோ...?
அட...! நானே தான்...! ஹா... ஹா... நன்றி ஜி..
அட.... நீங்களே தான்! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
அந்த கக்கோடாவை இங்கே பார்த்திருக்கின்றேன்..
பதிலளிநீக்குஎதோ புரியாத வஸ்து ஆக இருக்கின்றதே!..
எதற்கு வம்பு!.. - என்று விலகிப் போய் விடுவேன்...
சமையல் குறிப்பினைத் தாருங்கள்..
ஒரு கை பார்க்கலாம்!...
சமையல் குறிப்பு - விரைவில் பகிர்கிறேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி.
2013 பதிவர் சந்திப்பில் எடுத்த புகைப்படங்களில் இருப்பவரை அடையாளம் காட்ட கேட்டு எழுதி இருந்தது நினைவில் வருகிறது சரியா
பதிலளிநீக்குநீங்கள் கேட்ட பிறகு எனக்குத் தெரிந்தவர்களின் பெயரை படத்தின் கீழே சேர்த்தேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
பதிவர் சந்திப்பின் இனிய நினைவுகளை மீண்டும் அசைப்போட வைத்தது உங்க பதிவு.
பதிலளிநீக்குஆமாம் - இந்தச் சந்திப்பில் உங்களையும் சந்தித்தேன். மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.
இந்தக் காய் பார்த்திருக்கேன் நிறையவே. வாங்கிச் சமைச்சதில்லை. ஆனால் நண்பர்களில் வீடுகளில் சாப்பிட்டிருக்கோம்னு நினைக்கிறேன். டிடியின் இந்தப் படம் ஏற்கெனவே பார்த்த மாதிரி இருக்கு. குரங்கார் தில்லி, ஹரியானாவில் இஷ்டத்துக்குச் சுத்துவாரே. குருகாவில் என் மைத்துனர் வீட்டில் வாசலிலோ, கொல்லைப்பக்கமோ எதுவும் காய வைக்க முடியாது. துணிகள் உட்பட. அவர் குடும்பத்தோடு வந்து தூக்கிப் போயிடுவார். கொல்லைப்பக்கம் போனாலோ, வாசல் பக்கம் போனாலோ கையில் கம்புடன் தான் போகணும். :)
பதிலளிநீக்குஆமாம் - நீங்கள் பார்த்திருக்க முடியும்.
நீக்குடி.டி. படம் - பதிவில் வெளியிட்டது தான் - சுட்டியும் தந்திருக்கேனே....
குரங்குகளும் குருகிராமமும் பிரிக்க முடியாதவை - காடுகள் வீடுகளானால் அவை எங்கே போகும்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
குறும்படம் பின்னர் பார்க்கணும்.
பதிலளிநீக்குமுடிந்த போது பாருங்கள்.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
இந்தக் காயின் பெயர் பழுபாகல். நேபாலில் மீடோகரிலா என்பார்கள். கல்கத்தா,மும்பையில் கிடைக்கிறது. நான் இதன் கறி எப்படிச் செய்வது என்று ,சொல்லுகிறேனில் எழுதியிருக்கிறேன். இந்தக் கொடி காட்மாண்டுவில் எங்கள் வீட்டிலேயே இருந்து காய்த்து சாப்பிட்ட அனுபவம் உண்டு. பாகல் வகையைச் சேர்ந்தது. கசப்பே கிடையாது. ஏஞ்ஜலின் கூட என் குறிப்பைச் செய்து எழுதியிருந்தார். இதில் எல்லாம் செய்யலாம். ருசியான காய்.அமெரிக்காவில் கூட நான் வாங்கினேன். நான் டில்லியில். என் நம்பர்9871342001 . முடிந்தால் போன் செய்யுங்கள். அன்புடன்
பதிலளிநீக்குமீடோகரிலா - மேலதிகத் தகவல்களுக்கு நன்றிம்மா....
நீக்குவிரைவில் சந்திக்கிறேன் மா... உங்களுடன் பேசியதில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா....
அந்த குரங்கு அந்த வழித்தடத்தில் வாடிக்கையாளர் என்று யாரோ சொன்ன நினைவு.
பதிலளிநீக்குஅந்த கண்டேலா, லீச்சியோட பச்சே மாதிரி இருக்கு, கேட்டேளா.
ஹாஹா... வாடிக்கையாளர்! இருக்கலாம்.
நீக்குலிச்சிக்கும் இதற்கும் வடிவத்தில் வித்தியாசம் இருக்கிறது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.
2013 ஆகஸ்டில் நடந்த அந்த சந்திப்பில் உங்களை பார்த்தும் பேசாமல் தவிர்த்து சங்கோஜமாய் ஒதுங்கிப்போனது நினைவுக்கு வருகிறது!
பதிலளிநீக்குஅடடா... நானும் பலரை சந்திக்க இயலாமல் போனது. வாய்ப்பு கிடைத்தால் விரைவில் சந்திப்போம்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.