புதன், 19 செப்டம்பர், 2018

ஷிம்லா ஸ்பெஷல் – குழப்பத்தின் விளைவு – பயணத்தின் துவக்கம்



ஹாதூ பீக், நார்கண்டா, ஹிமாச்சலப் பிரதேசம்





Trade Fair  - 2010 மற்றும் 2013 - தமிழ்நாடு ஸ்டால்களில்....


நவம்பர் மாதங்களில் தலைநகரில் நடக்கும் ஒரு திருவிழா - வருடாந்திர Trade Fair. இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பிரகதி மைதான் பகுதியில் தனித்தனி அரங்கங்கள் உண்டு. அரங்கத்திலும் தற்காலிக கொட்டகைகளிலும் 14 நாட்களுக்கு [நவம்பர் 14 – 27] கண்காட்சி நடக்கும்.  இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலிருந்தும் கூட இந்த Trade Fair சமயத்தில் பல நிறுவனங்கள் கடை விரிக்கும். நம் தமிழ்நாட்டிலிருந்தும் சில சுயதொழில் அமைப்புகளும், அரசும் அவர்களது பொருட்களையும் திட்டங்களைப் பற்றிய விவரங்களையும் காட்சிக்கு/விற்பனைக்கு வைத்திருப்பார்கள் – பெரும்பாலும் தமிழக அரசு ரொம்ப மெனக்கெடுவதில்லை. மற்ற மாநில அரசுகள் அர்ப்பணிப்போடு அரங்குகள் அமைத்து, சிறந்த மாநிலத்திற்கான பரிசு பெறுவதுண்டு. சில வருடங்கள் நானும் அங்கே சென்று படங்கள் எடுத்து பகிர்ந்ததுண்டு. 

பயணத் தொடர் எனச் சொல்லி ஆரம்பித்து, தில்லியில் நடக்கும் வருடாந்திர கண்காட்சி பற்றிச் சொல்கிறேனே என்ற குழப்பம் வேண்டாம். இந்தக் கண்காட்சி சமயத்தில் வருடா வருடம் கேரள அரசின் சார்பாக ஐந்து அல்லது ஆறு பேர் பதினைந்து நாள் Deputation-ல் தில்லி வருவார்கள். நண்பர் ப்ரமோத் கேரள அரசின் சார்பாக வரும் அலுவலர்களில் ஒருவராக வருவது வழக்கம். அப்படி வந்தால் குறைந்தது பதினைந்து நாட்களாவது இங்கே தங்கும்படி இருக்கும். அந்தப் பதினைந்து நாட்களில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வெளியே சென்று வர முடியும். கடந்த நவம்பர் மாதத்தில் அப்படி வரும்போது எங்கே செல்லலாம் என்று கேட்டு தொடர்பு கொண்டிருந்தார். அவருடன் ஏற்கனவே சில பயணங்கள் செய்திருக்கிறேன். அந்தப் பயணங்கள் பற்றிய தொடரில் இவரைப் பற்றியும் குறிப்பிட்டதுண்டு.



காசி விஸ்வநாதர்....

ஒரு முறை அலஹாபாத், வாரணாசி வரை சென்று வந்தோம். அப்போது கயா செல்ல முடியவில்லை என்பதால் கயா செல்ல வேண்டும் என்பது அவரது விருப்பம். இருப்பதோ மூன்று நாட்கள் மட்டும். அந்த மூன்று நாட்களுக்குள் தில்லியிலிருந்து கயா சென்று, சுற்றிப் பார்த்துவிட்டு திரும்ப வேண்டுமானால், தில்லி – கயா பயணம் விமானத்தில் தான் செய்ய வேண்டும். இரயிலில் எப்போதுமே டிக்கெட் கிடைப்பது அரிது. தில்லியிலிருந்து பீஹார் செல்ல எத்தனையோ வண்டிகள் இருந்தாலும் அத்தனையிலும் கும்பல் இருக்கும். முன்பதிவு செய்ய வேண்டுமென்றால் – வருடம் முழுவதுமே வெயிட் லிஸ்ட் தான்! – முதல் நாள் முதல் ஒரு மணி நேரத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் பதிவாகிவிடும் – குறிப்பாக தீபாவளி, Chசட் பூஜா சமயங்களில். ஒவ்வொரு பெட்டியிலும் 72 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 720 பேர் இருப்பது போலத் தோன்றும்! பீஹார் பக்கம் இரயிலில் செல்ல எனக்கு விருப்பமும் இல்லை.



சரி விமானத்தில் முன்பதிவு செய்யலாம் என்றால் ஒரு வழிப் பயணத்திற்கே 4500-5000 என டிக்கெட் விலை. இருவரும் சென்று திரும்புவதென்றால் சுமார் 20000/- விமான டிக்கெட்-டுக்கே ஆகும். அவ்வளவு கொடுத்து பயணிக்க எங்களுக்கு விருப்பமில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தோம். வேறு எங்கு செல்லலாம் என்ற ஆலோசனைகளும் நடந்து கொண்டிருந்தது. ரொம்பவே ஆலோசனை செய்தால் ஒரு முடிவும் எடுக்க முடியாது – அப்போதும் அது போலவே நடந்தது! நண்பரும் தில்லி வந்து சேர்ந்து விட்டார். நண்பருடன் வந்திருந்த அரசு அதிகாரிகளில் இருவர் இதுவரை வட இந்தியா பக்கமே வந்ததில்லை. அவர்களுக்கும் எங்கேயாவது போக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது – எப்படியாவது பனிப்பொழிவு பார்க்க வேண்டும் என்பது அவர்கள் ஆசை.


ஷிம்லாவில் நாங்கள் தங்கிய இடம்....

தென் மாநிலங்களிலிருந்து வரும் பலருக்கும் பனிப்பொழிவு என்றாலே ஷிம்லா தான்! ஷிம்லா போகலாமா என அவர்கள் கேட்க, மூன்று நாட்களில் கயா சென்று வருவது இயலாத விஷயம் என்பதால் ஷிம்லா போக முடிவு செய்தோம். எங்கே செல்வது என்ற குழப்பங்களிலிருந்து விடுபட்டு முடிவாக ஷிம்லா பயணம் முடிவானது! ஷிம்லாவில் அரசு ஊழியர்கள் தங்குவதற்காக ஒரு மிகப் பெரிய – பழமையான இடம் உண்டு. அதில் தங்கும் வாடகை மிகவும் குறைவு – ஷிம்லாவின் புகழ் பெற்ற மால் ரோடு மற்றும் இரயில் நிலையம் ஆகிய இரண்டுமே நடக்கும் தூரத்தில். அது தவிர சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களெல்லாமே அருகே தான். அதனால் ஷிம்லா போக முடிவு செய்தவுடன் நான்கு பேர் தங்கக் கூடிய அறையை முன்பதிவு செய்தேன். தங்குமிடம் முடிவு செய்தாயிற்று – அடுத்தது போக்குவரத்து!


ஷிம்லாவின் இரயில் நிலையம்...

தில்லியிலிருந்து ஷிம்லா செல்ல மூன்று வசதிகள் – சாலை வழி, இரயில் அல்லது விமானம் மூலம் செல்லும் வசதிகள் உண்டு. இதில் விமானம் மூலமாகச் செல்வதற்கு கட்டணம் அதிகம் – ஏர் இந்தியா விமானங்கள் தான் – இன்றைக்கு தேடியபோது ஒரு நபருக்கு தில்லி – ஷிம்லா – தில்லி 18700/- கட்டணம் என்று காண்பித்தது! ஒரு மணி நேர பயணம் தான். நாங்கள் நான்கு பேர் – இத்தனை கட்டணம் கொடுத்துச் செல்ல எங்களுக்கு விருப்பமில்லை. இரண்டாவது வழி இரயில் மூலம் செல்வது. சண்டிகரை அடுத்த கால்கா வரை இரயிலில் சென்று அங்கிருந்து மலை இரயிலில் [Narrow Gauge] – Himalayan Queen மூலம் செல்லலாம்.


கால்காவிலிருந்து ஷிம்லா போகும் இரயில்...

இந்த மலை இரயிலில் ஒரு மாதம் முன்னதாக முன்பதிவு செய்ய வேண்டும். ரொம்பவே மெதுவாகச் செல்லும் இந்த இரயிலில், கால்காவிலிருந்து ஷிம்லா வரை செல்வது ஒரு சுகானுபவம் – ஆனால் நிறைய நேரம் எடுக்கும். டிக்கெட் கிடைப்பதும் கடினம். குழந்தைகளோடு செல்வதென்றால் இந்த இரயிலில் பயணிப்பது நல்லது – இயற்கைக் காட்சிகளையும் மலைப்பிரதேசங்களையும் ரசித்தபடி செல்வது நல்லதொரு அனுபவமாக இருக்கும். மூன்றாவது வழி சாலை வழிப் பயணம். தில்லியிலிருந்து ஷிம்லா வரை சுமார் 360 கிலோமீட்டர். ஹிமாச்சலப் பிரதேசம் அரசே சிறப்பான பேருந்துகள் - Scania Volvo 2X2 பேருந்துகளை – Himsuta என்ற பெயரில் இயக்குகிறது. மலைப்பாதை என்பதால் எட்டு மணி நேரப் பயணத்தில் ஷிம்லாவின் டூட்டிகண்டி பேருந்து நிலையத்தில் விட்டு விடுவார்கள். ஒரு நபருக்கு 900 ரூபாய் கட்டணம்! போக வர முன்பதிவு செய்து விட்டேன்.



ஹிமாச்சலப் பிரதேச அரசின் வோல்வோ பேருந்து...

குறிப்பிட்ட நாளும் வர ஷிம்லா நோக்கிய எங்கள் பயணம் – நான், நண்பர் பிரமோத் மற்றும் இருவர் – துவங்கியது. ஷிம்லா நகரில் என்னென்ன இடங்கள் பார்த்தோம், கிடைத்த அனுபவங்கள் என்ன என்பதை எல்லாம் வரும் பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறேன். ஷிம்லா போகலாம் வாங்க….

பயணம் நல்லது. ஆதலினால் பயணம் செய்வீர்!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

40 கருத்துகள்:

  1. குட்மார்னிங் வெங்கட். பிரகதி மைதான் பற்றி என் முன்னாள் நண்பன் ஒருவன் நிறையச் சொல்லி இருக்கிறான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம். பிரகதி மைதான் - நிறைய விஷயங்கள் இங்கே உண்டு. கொஞ்சம் கொஞ்சமாக இதை மூட திட்டமிருக்கிறது. நகரத்திலிருந்து வெளியே கொண்டு போக நினைக்கிறார்கள். ஏற்கனவே ஆடோ எக்ஸ்போ போன்றவை நோய்டாவுக்கு சென்றுவிட்டது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. நல்ல பயணக் குறிப்புக்களையும் அனுபவங்களையும் எதிர் நோக்கிக் காத்திருக்கேன். தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாரத்தில் மூன்று பதிவுகளாக - திங்கள், புதன் மற்றும் வெள்ளி அன்று வெளியிட உத்தேசம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  3. பிகார் செல்ல முன்பதிவு செய்தாலும் செய்யாட்டியும் ஒண்ணு தான்! எப்படியும் நம் இடத்தை அவங்க ஆக்கிரமிச்சுப்பாங்க! :) இப்போல்லாம் குஜராத்திலும் அப்படி நடக்கிறது. :) பரோடா-- சூரத் பயணத்திலே ரொம்பக் கஷ்டப்பட்டோம். :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பீஹார், உத்திரப் பிரதேசம் போன்ற இடங்களில் முன்பதிவு வெறும் ஒரு ஃபார்மாலிடி தான். யார் வேண்டுமானாலும் வருவார்கள், உட்காருவார்கள் - ஒன்றும் செய்ய முடியாது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  4. முதல் படத்தில் இருக்கும் இரு குன்றுகளும் எங்கள் ஆசிரியரான கேஜி சென்று வந்து பகிர்ந்திருந்தாரா என்று நினைவில்லை. நாந்தான் அவர் அனுப்பும் படங்களை பகிர்வேன். ஆனாலும் நினைவில்லை! பார்த்த ஞாபகமாய் உள்ளது.(உங்கள் திங்கள் அறிமுகப்பதிவில் பார்த்தத்தைச் சொல்லவில்லை!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் பதிவிலும் வெளியிட்டு இருக்கிறேன். கேஜி சென்று வந்து பகிர்ந்தாரா என்பது நினைவில் இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. சிம்லா என்று சொல்லும்போதே குளிர்கிறது! சிம்லா ஸ்பெஷல் உட்பட சில சினிமாக்களில் பார்த்த இடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்பெல்லாம் நிறைய சினிமாக்கள் இங்கே எடுத்ததுண்டு. இப்போது குறைந்து விட்டது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. வாங்க வாங்க போகலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  7. நீங்க தனி வண்டி எடுத்துக்கிட்டுச் சண்டிகர் வழியா சிம்லா போகலாமே! அப்படியே சண்டிகர் முருகனையும் பார்த்துருக்கலாம்! நம்ம கோவில்தான் :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனி வண்டி வைத்துக் கொண்டு போகலாம் டீச்சர். கூட வரும் நண்பர்களைப் பொறுத்தே அது. சண்டிகர் சென்று பல வருடங்களாகி விட்டது. அலுவல் விஷயமாக நான்கு ஐந்து முறை சென்று அங்கே சில நாட்கள் தங்கியதுண்டு - ஆனால் அப்போது பார்த்த இடங்களில் கோவில் கண்டிப்பாக இல்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  8. தங்களோடு சிம்லா சுற்றிப் பார்க்கத் தயாராகக் காத்திருக்கிறேன் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  9. அழகான படங்கள் . பயணவிவரங்கள் பயணம் செய்ய விரும்புவர்களுக்கு உதவும்.
    அலகாபாத் செல்ல முன்பதிவு செய்து போயும் பயனில்லை மக்கள் படுத்தும் பாடு.
    படங்களில் சிம்லா பார்த்தது .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பகுதிகளில் முன்பதிவு என்பதற்கு அர்த்தமில்லை! ஏசி கோச்களில் கூட யார் வேண்டுமானாலும் வந்து விடுவதைப் பார்த்திருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  10. //குழந்தைகளோடு செல்வதென்றால் இந்த இரயிலில் பயணிப்பது நல்லது – இயற்கைக் காட்சிகளையும் மலைப்பிரதேசங்களையும் ரசித்தபடி செல்வது நல்லதொரு அனுபவமாக இருக்கும்.//

    உண்மை , ரயிலில் இயற்கை காட்சிகளை ரசித்து கொண்டே செல்லலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரயில் பயணம் இங்கே மிகவும் சிறப்பு.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  11. ஆகா...! சில்லென்று ஒரு பயணம்...

    ரசிக்க காத்திருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சில்லென்ற பயணம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  12. ஷிம்லா...சிம்லா...

    எல்லா செய்தியும் நல்லா நோட் பண்றேன்..


    நாங்க போகும் போது வசதியா இருக்கும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா உங்களுக்குப் பயனுள்ளதாய் இருக்கும் என்பதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  13. //ரொம்பவே ஆலோசனை செய்தால் ஒரு முடிவும் எடுக்க முடியாது// ஹா ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 1,புதிய வானம், புதிய பூமி,
      2, மேரே சப்னோன் கி ரானி
      அருமையான பயணம் அமைய வாழ்த்துகள். கொடைக்கானல் செல்வது போல் ஷிம்லா செல்லும் தோழி சொன்ன விஷயம், ஷிம்லாவின் பொலிவு குறைந்து கொண்டு வருவதாக.
      உங்களுக்கு நல்லதே கண்களில் பட என் வாழ்த்துகள் வெங்கட்.

      நீக்கு
    2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
    3. ஷிம்லாவின் பொலிவு - ஆமாம்மா... இப்பதோ சற்றே சரியில்லை. நிறைய கும்பல் வர ஆரம்பித்து விட்டது. கட்டுமானங்கள் அதிகரித்து விட்டது. தண்ணீர் பிரச்சனை என பல பிரச்சனைகள் அங்கே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

      நீக்கு
  14. மலைரயில் ஆசையை தூண்டுது....

    பயணம் நல்லதுன்னா உங்க மாப்ளை எங்க கேக்குறார். கிடைக்கும் ஞாயித்துக்கிழமை ஒரு நாள் லீவை தூங்கியே கழிக்கிறார். நான் எங்க?! ஹும்ம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா.... எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது சென்று வாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    ஆஹா.. பதிய பயணம்.. அதுவும் சில்லென்ற பயணம். தங்களின் திட்டமிடல் வெகு அருமையாக இருந்தது. தாங்கள் குறிப்பிட்டுள்ள செய்திகளில் பயண தூரங்களும், வசதிகளும், பொருளாதார செலவுகளும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். அங்கு சென்றவுடன் முதலில் எந்த இடமென்பதை நானும் தெரிந்து கொள்ளும் ஆவலுடன் பயணத்தில் பதிவின் மூலமாக தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்கள் மற்றவர்களுக்கு பயன்பட்டால் நல்லது தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  16. இந்த சிம்லா ரயிலை தொடர்ந்து ஜீப்பில் ஒரு திரைப்படத்தில் பாட்டு பாடியபடி ஹீரோ வருவாரே அந்த ரயிலா இது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாட்டு பாடியபடி ஹீரோ வருவாரே அந்த ரயிலா இது - தெரியவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
    2. ஆமாம், வெங்கட், ஆராதனா படத்தில் ராஜேஷ் கன்னா ஜீப்பில் "மேரே சப்னோ கி ராணி" பாடியபடி தொடருவார். ஷர்மிலா தாகூர் ரயிலில் பயணித்துக் கொண்டே அவருடன் காதல் மொழிகள் கண்களால் பேசியபடி வருவார்! இஃகி, இஃகி! முதல் முதலா மதுரை மீனாக்ஷி தியேட்டரில் பார்த்தது. கல்யாணம் ஆவதற்கு முன்னால். அதுக்கப்புறமா தண்டனை மாதிரிப் பார்க்க நேர்ந்தது சில, பல தடவைகள். இதோட தமிழ் சிவகாமியின் செல்வன் அறுவை மகா சமுத்திரம்! வாணிஸ்ரீ, ஜிவாஜியோ? தெரியலை!

      நீக்கு
    3. ஓஹோ மேரே சப்னோ கி ராணி பாடலா.... அந்தப் பாடலை வேறு விதமாக பயன்படுத்தி இருக்கிறார்கள் கல்லூரி ஸ்கிட் ஒன்றில்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு
  17. இரு முறை சென்ற பிரதேசம் என்றாலும் உங்களுடன் மீண்டும் பயணம். ஹிமாச்சல் ஓரிரு பயணங்களில் முடியும் பிரதேசம் அல்ல. நிறைய இடங்கள் உள்ளன....முதல் படம் அட்டகாசம். அந்த இடத்திற்குச் சென்றதில்லை.

    ப்ரகதி மைதான் மிகப் பெரிய மைதான் பார்த்திருக்கேன் ஜி...

    கால்கா டு ஷிம்லா ஆஹா ஆஹா மிக மிகப் பிடித்த பயணம். ஒவ்வொரு ஸ்டேஷனிலும் இறங்கி ஏறுவதுண்டு. மலையை அழகை ரசித்துச் செல்லலாம். நேரம் எடுத்துக் கொண்டாலும் மெதுவா செல்லும் என்பதால் அழகை ரொம்பவே ரசிக்கலாம். எக்கச்சக்க டனல்ஸ்...

    அதுவும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இரவில் சண்டிகர் லைட்டுடன் தெரியும் காட்சி அருமையா இருக்கும்.

    படங்கள் எல்லாம் அழகு..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  18. ராஜாக்களின் நகரத்தை தொடர்ந்து உங்களது இந்த பயணத்தொடரை தேன்சிட்டு இதழில் பயன்படுத்திக்கொள்ள உங்கள் அனுமதி வேண்டுகிறேன்! அனுமதித்தால் செப்டம்பர் இதழில் இக்கட்டுரை தொடர் வெளிவரும். நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சுரேஷ்... தகவலுக்கு நன்றி. பயன்படுத்தலாம். வெளியானதும் தகவல் சொல்லுங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....