ஷிம்லா ஸ்பெஷல் – பகுதி - 2
சென்ற பதிவில் சொன்னது போல
பயணத்திற்கான எல்லா ஏற்பாடுகளும் – தங்குமிடம், போக்குவரத்து முன்பதிவு அனைத்தும்
செய்து முடித்த பிறகு பயணம் போகும் நாளுக்குக் காத்திருந்தேன். வார விடுமுறையான
சனி, ஞாயிறு தவிர வெள்ளி அன்று விடுமுறை எடுத்துக் கொண்டு மூன்று நாள் பயணமாக
ஷிம்லா மற்றும், அருகே உள்ள குஃப்ரி மற்றும் நார்கண்டா செல்லத் திட்டம். வியாழன்
அன்று [23 நவம்பர்] மாலை அலுவலகத்திலிருந்து வீடு திரும்பி தயாராகி வீட்டிலிருந்து
மாலை 07.00 மணிக்கு புறப்பட்டேன். நண்பர்கள் அனைவரும் கேரளா ஹவுஸ் [ஜந்தர் மந்தர்
அருகில்] தங்கியிருக்க, அங்கே செல்ல ஒரு ஆட்டோவும் கிடைக்கவில்லை. பயங்கர
ட்ராஃபிக் ஜாம் – அடுத்த நாள் Martydom day – என்பதால் சர்தார்ஜிகளின் ஊர்வலங்கள்.
முதுகுச் சுமையோடு பொடி நடையாகவே சென்று சேர்ந்தேன் [மூன்று கிலோமீட்டர்].
நண்பர்கள் அங்கே தயாராக
இருந்தார்கள். இரவு 10 மணிக்கு தான் எங்கள் பேருந்து. அதனால் இரவு உணவை கேரளா
ஹவுஸில் முடித்துக் கொள்ளத் திட்டம். நண்பர் ப்ரமோத் பயணம் துவங்கும் முன்னரே
வயிறு சரியில்லை, அதனால் உணவு உண்ணப்போவதில்லை என்று சொன்னார். அதனால் நானும் மற்ற
இரு நண்பர்களும், இரவு உணவு சாப்பிட்டோம் – தவா ரொட்டி, மட்டர் பனீர், தால்
மற்றும் சாலட். இரவு உணவு முடித்து மீண்டும் நண்பரின் அறைக்குச் சென்று அனைவரும்
கேரள ஹவுஸின் எதிர்புறம் இருக்கும் படேல் சௌக் மெட்ரோ நிலையம் வந்து சேர்ந்த போது
மணி 08.45. மெட்ரோவில் தில்லி காஷ்மீரி Gகேட் பகுதியில் இருக்கும் அந்தர்
ராஷ்ட்ரிய பஸ் அdட்dடா [அதாவது Inter State Bus Terminus] சென்று சேர்ந்தோம்.
ஷிம்லாவுக்கான பேருந்து நடைமேடை 20-21-லிருந்து புறப்படும் என்பதை விசாரித்துக்
கொண்டு அங்கே சென்றடைந்த போது இரவு 09.30. அங்கே அப்படி ஒரு கூட்டமும் குழப்பமும்.
இரவு எட்டு மணிக்கு புறப்பட
வேண்டிய பேருந்தே வந்து சேர வில்லை. பொதுவாக ISBT பகுதியில் நெருக்கடியைக் குறைக்க
வாகனங்களை வேறு இடங்களில் நிறுத்தி வைத்திருப்பார்கள். புறப்படுவதற்கு முன்னர்
ISBT வந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்படும். அன்றைக்கு ட்ராஃபிக் ஜாம் காரணமாக
பேருந்துகளை பஸ்நிலையம் கொண்டு வருவதில் சிக்கல்கள் என்பதால் ஒரே கூட்டமும்
குழப்பமும். எந்த பஸ் எங்கே போகிறது, எப்போ வரும் என்று சொல்ல ஒருவரும் இல்லை.
எந்தப் பேருந்து வந்தாலும் எங்கே செல்லும் பேருந்து எனக் கேட்க ஒரு கூட்டம் ஓடும்.
ஷிம்லா, மணாலி, chசம்பா என ஹிமாச்சலப் பிரதேசம் செல்லும் அத்தனை பேருந்துகளும்
அந்த நடைமேடையிலிருந்து என்பதால் பேருந்தைக் கண்டால் அப்படி ஒரு பரபரப்பு.
நல்ல வேளையாக இரவு பத்து மணிக்குச்
செல்ல வேண்டிய எங்கள் பேருந்து 10 மணிக்கு வந்து சேர்ந்தது. அனைவரும் அவரவர்
இடத்தில் உட்கார்ந்து கொள்ள 10.30 மணிக்கு, அரை மணி நேர தாமதத்திற்குப் பிறகு
புறப்பட்டது. 2 X 2 பேருந்து என்றாலும், எனக்கும் நண்பர் ப்ரமோத்-க்கும் வேறு வேறு
சீட். விண்டோ சீட் வேறு ஒருவருக்கு. என் பக்கத்தில் உட்கார்ந்தவரை மாற்றி உட்காரச்
சொன்னால் – “மாத்தேன் போ! எனக்கு தான் ஜன்னல் சீட்” என குழந்தை போல அடம்
பிடித்தார். சரி பரவாயில்லை, நண்பர் அருகில் இருக்கும் இளம் பெண்ணைக் கேட்க,
காதில் சொருகியிருந்த இயர்ஃபோனை இன்னும் அழுத்திச் சொருகி தலையை மட்டும் ஆட்டி முடியாது
என்ற சங்கேத பாஷை பதில் கிடைத்தது. சரி
ஆய்க்கோட்டே என அப்படியே பயணம் துவங்கியது.
அன்றைய நாள் இரவில் தலைநகரில்
ஏகப்பட்ட கல்யாணங்கள் – நல்ல முகூர்த்த நாளாம் – எங்கே பார்த்தாலும் சாலைகளில் bபாராத்
[கல்யாண ஊர்வலம்] சென்று கொண்டிருக்கிறது. நெடுஞ்சாலை ஓரங்களில் இருக்கும் பெரிய
பெரிய மாளிகை போன்ற கொட்டகைகளில் திருமண நிகழ்வுகள். ”ஊர்ல கல்யாணம் மார்ல
சந்தனம்” கதையா, யாருக்காவது திருமணம் என்றால் போதும் அவரைத் தெரிந்தவர்கள்
எல்லோரும், கைகளை மேலே தூக்கிக்கொண்டு ஆட ஆரம்பித்து விடுகிறார்கள். “ஆஹா இன்னும்
ஒரு ஜோடி மாட்டிக்கிச்சுடோய்” நு ஒரு அல்ப சந்தோஷம் தான். மாப்பிள்ளை ஊர்வலங்களில்
சிக்கிச் சிதறி ஒரு வழியாக வேகமெடுத்தது எங்கள் வோல்வோ பேருந்து. சீரான வேகத்தில்
சென்று கொண்டிருந்த பேருந்து தில்லியை அடுத்த மூர்த்தல் சென்று சேர்ந்த போது இரவு
01.30 மணி.
ஷீஷ்மஹல் பஞ்சாபி தாபாவில் வண்டி
நின்றது – இரவு உணவுக்காக. அந்த இரவிலும் பலர் ரொட்டி, பனீர் சப்ஜி என அடித்து
ஆடினார்கள். நாங்கள் ஏற்கனவே இரவு உணவை முடித்துக் கொண்டதால் பேருந்திலிருந்து
இறங்கி சற்றே இளைப்பாறினோம். தேநீர் கிடைத்தால் நன்றாக இருந்திருக்கும் – வெளியே
நல்ல குளிர். கேரள நண்பர் இருவருக்கும் குளிர் புதிது என்பதால் கொஞ்சம்
கஷ்டப்பட்டார்கள். இங்கேயே இப்படி என்றால் ஷிம்லாவில் எப்படி சமாளிப்பார்கள் என்ற
சிந்தனை எனக்குள். ஒருவழியாக பேருந்து ஓட்டுனர் நடத்துனர் உணவு சாப்பிட்டு
வந்தார்கள். மற்றவர்களும் சாப்பிட்டு வாயில் போட்டுக்கொண்ட சோன்ஃப் [சோம்பு
மற்றும் கல்கண்டு] மென்றபடியே கையில் Tooth Pick-உடன் வந்து சேர்ந்தார்கள்.
ஷீஷ்மஹல் பஞ்சாபி Dhதாபாவிலிருந்து
பேருந்து புறப்பட்டபோது இரவு 02 மணி. 10.30 மணிக்குப் புறப்பட்டதிலிருந்து அந்த Dhதாபாவில்
நிறுத்தும் வரை பயணிகள் பேசியபடியே இருந்தனர் என்பதால் தூக்கமில்லை. சரி இரவு
சாப்பாடு சாப்பிட்டு முடித்த நள்ளிரவிற்குப் பிறகாவது தூங்குவார்கள் எனப்
பார்த்தால் சில ஜோடிகள் தூங்கவே இல்லை. அதுவும் எனது இடப்பக்கம் இருந்த ஒரு ஜோடி
இரவு முழுவதும் கைகளைப் பிடித்தபடியே பேசிக்கொண்டிருந்தனர் – இத்தனைக்கும் புதிதாய்
மணம் ஆனவர்கள் போலத் தெரியவில்லை. முன் இருக்கையில் இருந்த பெண்ணோ [நண்பர் ப்ரமோத்
அருகில் இருந்தவர்] அலைபேசி மூலம் யாரோ ஒருவரிடம் [ஆண் தான்!] வீடியோ காலில்
பேசிக் கொண்டிருந்தார். அவர் தனது இரவு உடையில் கட்டிலில் படுத்துக் கொண்டும்
உட்கார்ந்து கொண்டு பேசும் காட்சி பின்னால் இருந்த எனக்கு நன்கு தெரிந்தது. கூடவே
பெண்ணின் அலைபேசி வழி கொஞ்சல்களும் கேட்டுக்கொண்டு இருந்தது. டேய் தூங்கவிடுங்கடா
என்று சொல்லத் தோன்றியது. நண்பர் ப்ரமோத் என்னிடம் திரும்பி மலையாளத்தில் – தூங்க விடமாட்டேங்கறாங்க
என்று புலம்பினார். கண்களை இறுக்க மூடியும் உறக்கம் வரவில்லை.
சண்டிகட் வழியே ஹிமாச்சல
பிரதேசத்திற்குள் நுழைந்திருந்தது வண்டி. கொஞ்சம் கண்களை இறுக மூடி தூங்க
முயற்சியில் இருந்தபோது பேருந்தின் நடத்துனர் வந்து எழுப்பினார் – மலைப்பாதையில் செல்லப்
போகிறது – உல்டி பேக் [vomiting bag] வேண்டுமா எனக் கேட்பதற்காக எழுப்பினார்.
“அடேயப்பா, உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு எல்லை இல்லையா, தூங்கறவனை எழுப்பி கேட்கறீயேப்பா…….
எனக்கு வேண்டாம் என்று சொல்லிய பிறகு மீண்டும் முயன்றேன். ஆனாலும் தூங்க
முடியவில்லை. ஹிமாச்சலப் பிரதேசத்தின் சிற்றூர்களில் நின்று பயணிகளை இறக்கி
விட்டபடி சென்று கொண்டிருந்தது பேருந்து. காலை ஷிம்லாவின் டூட்டிகண்டி பேருந்து
நிலையத்தில் நின்ற போது தான் முன்சீட் பெண் அலைபேசி வழியே அந்த ஆணுக்கு பைபை
சொல்லிக் கொண்டிருந்தார். அழகன் பட மம்மூட்டி-பானுப்ரியா சீன் தான்!
இரவு முழுவதும் தூங்காமலே இருக்க
நேர்ந்தது – கார் போன்றவற்றில் செல்லும்போது ஓட்டுனர் அருகே அமர்ந்து செல்வதால்
தூங்கமுடியாது – பேருந்தில் செல்லும்போதும் இப்படியா அமைய வேண்டும் என்ற
எண்ணத்துடன் பேருந்திலிருந்து கீழே இறங்கினோம். அங்கிருந்து நாங்கள் தங்கப் போகும்
இடம் சுமார் ஆறு கிலோமீட்டர் – அங்கே எப்படிச் சென்றோம், அதன் பிறகு என்ன செய்தோம்
என்பதை எல்லாம் அடுத்த பதிவில் சொல்கிறேன்.
பயணம் நல்லது. ஆதலினால் பயணம்
செய்வீர்!
நட்புடன்
வெங்கட்
புது தில்லி.
குறிப்பு: படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து....
காலை வணக்கம் வெங்கட். ஊர் கிளம்பிய, நடந்த, பஸ் நிலையம் அடைந்த, பஸ் கிளம்பிய என்று எல்லா நேரமும் துல்லியமாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குகாலை வணக்கம்.
நீக்குசில சமயங்களில் நேரத்தோடு குறித்து வைப்பதுண்டு - அலைபேசியில் தான்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
இரவு முழுவதும் வீடியோ காலில் பேச அந்தப் பெண்ணுக்கு செல் ஒத்துழைத்தது பெரிய ஆச்சர்யம். பவர் பேங்க் வைத்திருந்திருப்பாரோ... என்ன கம்பெனி செல்லாம்? விசாரித்திருக்கக் கூடாது?!!
பதிலளிநீக்குஎந்தக் கம்பெனி செல் எனக் கேட்க, அவர் பேசாமல் இருக்க வேண்டுமே... :) பவர் பேங்க் இணைத்தபடியே இப்போது இருக்கிறார்கள் பலரும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நடு இரவில் வயிற்றுக்கு முழு அளவு உணவு கொடுப்பவர்களை பார்த்து எனக்கும் ஆச்சர்யமாக இருக்கும். பதிவின் இடையே மெலிதாக வழிந்த உங்கள் நகைச்சுவையையும் ரசித்தேன்.
பதிலளிநீக்குஎந்த நேரமும் சாப்பிடலாம் என இருப்பது இங்கே ஒரு வழக்கமாகவே வைத்திருக்கிறார்கள் சிலர். அப்பா கொஞ்சம் நேரம் தவறி சாப்பிட்டாலே, அவ வேளையில் சாப்பிடக்கூடாது என்பார்!
நீக்குநகைச்சுவை - :) இருந்தால் நல்லது!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நான் கேட்க நினைச்ச கேள்விகளை ஸ்ரீராம் கேட்டுவிட்டார். எனக்கெல்லாம் ஒரு நிமிஷம் நிற்பதற்குள் அலைபேசி பத்துத் தரம் அணைஞ்சுடுது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இத்தனை நேரம் எப்படிப் பேசினார் என்பது இருக்கட்டும். அப்படி என்ன தான் விஷயம் இருக்கும்! மொக்கை போட ஒரு இரவா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
பதிலளிநீக்குபேச அப்படி என்ன விஷயம் இருக்கும் - எனக்கும் அதே நினைவு தான். எனக்கு ஒரு நிமிடத்திற்கு மேல் பேச விஷயம் இருப்பதில்லை! யாராவது பேசினாலும் கொஞ்ச நேரத்தில் அலுப்பு வந்து விடுகிறது! மொக்கை போட ஒரு இரவு - கொஞ்சம் அதிகம் தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
நானாக இருந்தால் அவங்களிடம் சொல்லி இருப்பேன். நான் தூங்கணும் என! ராஜ்தானியில் ஒரு முறை இப்படி நடந்து நாங்க சொல்லியும் கேட்காமல் போகவே கடைசியில் டிடியை அழைத்துச் சொல்லச் சொன்னோம்.
பதிலளிநீக்குநீங்கள் சொல்லி இருக்க முடியும். நாங்கள் சொல்ல முடியாது.... சிலர் சொன்னாலும் கேட்பதில்லை... பயணத்தில் ஸ்பீக்கர் போட்டு பாட்டு கேட்பவர்கள் சிலரிடம் சொல்லி, என் இஷ்டம், இப்படிதான் இருப்பேன்” என்று சொல்லியதுண்டு!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
வீடியோ காலில் பேசியவர் இரவு உடையில் இருந்ததைக்கூட கவனித்து இருக்கின்றீர்களே... ஜி
பதிலளிநீக்குதொடர்கிறேன்...
ஆஹா. எத்தனை விதமான அனுபவங்கள்.
நீக்குஅதற்குப் பொருத்தமான அழகன் பட பானுப்ரியாவின் படம்.
நம் ஊர் மக்கள் மாறப் போவதில்லை.
ஷிம்லா அனுபவம் சிறக்க வாழ்த்துகள். வெங்கட்.
பாதி நேரம் அலைபேசியின் இடத்தை மாற்றி மாற்றி வைத்துப் பேசியதால் பார்க்க முடிந்தது ஜி!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
மாறப் போவதில்லை இவர்கள் வல்லிம்மா... அடுத்தவர்களுக்குத் தொந்தரவு என நினைப்பதே இல்லை நம் மக்கள்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அருமை..எனக்கும் மிகவும் பிடித்தமானது பயண அனுபவங்கள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுச்சேரி கலியபெருமாள் ஜி!
நீக்குராஜா காது கழுதைக் காதுக்கு பதிவு தேறியதா?
பதிலளிநீக்குஹிந்தி தெரியாமல் பஸ் தேடணும்னா என்ன பண்ணறது? தொடர்கிறேன்.
ஹிந்தி தெரியாமல் கொஞ்சம் கஷ்டம் தான் - ஆனாலும் சமாளித்து விடும் நம்பிக்கை இருந்தால் போதும்...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
பயணத்தில் தான் எத்தனை அனுபவம்!
பதிலளிநீக்குதொடர்கிறேன்.
ஆமாம் மா... பயணங்கள் நமக்குப் பல அனுபவங்களைத் தருகின்றன.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
கல்யாண ஊர்வலம் பார்க்க மிகவும் அழகாக இருந்தது.
பதிலளிநீக்குகல்யாண ஊர்வலங்கள் இங்கே இப்படித்தான் ஐயா. முடிந்தால் ஏதாவது ஒரு காணொளியாக எடுத்து பகிர்ந்து கொள்கிறேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
எல்லாம் சரி, நீங்க உறங்காததுக்கு காரணம் இருக்கு. உங்களோடு சேர்ந்து பானுப்பிரியா ஏன் உறங்காம இருக்காங்க?!
பதிலளிநீக்குபதிவுக்காக ஒரு படம் - அவ்வளவு தான்! :) ஹாஹா.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபிரயாண அனுபவங்கள் நன்றாக இருந்தது. பேருந்து ஏறியதிலிருந்து, இறங்கும் வரை தங்கள் நகைச்சுவையை கலந்து அழகாக நாங்களும் உடன் பயணித்த ஒரு பேருந்து அனுபவத்தையே தந்து விட்டீர்கள். சிலருக்கு அடுத்தவருக்கு தொந்தரவு தருகிறோமோ என்ற எண்ணமே வராது போலும்..! பயண அனுபவம் சுவாரஸ்யமாக இருந்தது. இன்னும் பல இடங்களை காணும் ஆவலுடன் உங்கள் பதிவை தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!
நீக்குகொஞ்சம் அவஸ்தையான பயணம்...
பதிலளிநீக்குசில சமயங்களில் இப்படி அமைந்து விடுகிறது.... என்ன செய்ய? எல்லாம் அவன் செயல்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
உங்கள் பயணங்கள் நிகழ்ந்த தேதிக்கும் பதிவுக்கும்காலைடைவெளிஅடிகம்காண்கிறேன் நோட்ஸ் எடுத்து வைத்துக்கொள்வீர்களா
பதிலளிநீக்குஒவ்வொரு பயணத்தொடர் எழுதும்போதும் உங்களுக்கு வரும் அதே சந்தேகம் - எனது பதிலும் அதே.... ஹாஹா....
நீக்குஅலைபேசியில் அவ்வப்போது குறிப்புகளைச் சேமித்துக் கொள்வதுண்டு. தங்குமிடம் சென்றதும் எழுதி வைப்பதும் உண்டு. படங்களாக எடுத்து வைத்துக்கொள்வது நினைவுகளை மீட்க உதவும் - அனைத்தும் வைத்து பதிவுகள் எழுதுவது எனது வழக்கம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
பல இடங்களில் சிரித்துவிட்டேன் வெங்கட்ஜி!!!
பதிலளிநீக்குசுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க. பானுப்ப்ரியா மம்முட்டி ஸ்டைல் கால் யப்பாடியோ இடையிடையே கடைசில தூர்தர்ஷன் ம்யூஸிக் வந்திச்சா ஹா ஹா ஹா...
அது சரி அப்பெண்ணோட ஃபோன் எப்படி சார்ஜ் போகாம இருந்துச்சோ?
ரீச்ட் சிம்லா... அடுத்து என்ன? வெயிட்டிங்க்...
கீதா
இப்போதெல்லாம் அலைபேசி கூடவே Back up வைத்தபடியே அலைகிறார்கள் சிலர்.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!