சனி, 15 செப்டம்பர், 2018

காஃபி வித் கிட்டு – எந்த சக்ககுன்னாவே – தனிமை – திருமணமும் ஒரு பழக்கமும் – பிள்ளையார் சதுர்த்தி

காஃபி வித் கிட்டு – பகுதி – 6

இந்த வாரத்தின் பிடித்த முகம்:







கிருஷ்ண ஜெயந்தி அன்று நான் இருக்கும் பகுதியில் ஒரு நிகழ்வு – அங்கே சென்று நிகழ்ச்சியை ரசித்ததோடு சில புகைப்படங்களும் எடுத்தேன். நிகழ்ச்சிக்கு வந்திருந்த குழந்தைகள், பெரியவர்கள் என பலரையும் புகைப்படம் எடுக்க முடிந்தது. அப்படி எடுத்த படங்களில் ஒன்று தான் இன்றைய பிடித்த முகம் – கேமராவுடன் இருந்த என்னைப் பார்த்து விரல்களால் வாவா என அழைத்த ஒரு குழந்தையின் முகம்….

இந்த வாரத்தின் WhatsApp தகவல்:



படங்களைத் தந்து அதற்குப் பொருத்தமான வாசகம் சொல்லச் சொல்லிக் கேட்பார்கள் அல்லவா? இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவர்/சிறுமியர்களுக்கு மேலுள்ள படத்தினைக் காண்பித்து பொருத்தமான வாசகம் சொல்லக் கேட்டபோது சொன்ன வாசகம் – பரிசு பெற்ற வாசகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வாசகம் - NEVER SWALOW YOUR CHEWING GUM! – இந்த படமும் வாசகமும் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியாது! 

இந்த வாரத்தின் ரசித்த பாடல்:

எந்த சக்ககுன்னாவே…. ராம் சரண், சமந்தா நடிப்பில் ”ரங்கஸ்தலம்” என்ற தெலுங்கு படத்திலிருந்து…. பாடலில் வரும் கிராமியக் காட்சிகள் ரொம்பவே அழகு.



வட இந்திய திருமண அழைப்பிதழ்கள்:


மாதிரி அழைப்பிதழ்.... 
விலை - 250/- மட்டும்....


மிட்டாய் டப்பா - மேல் மூடியில்....



மிட்டாய் டப்பா - போட்டுத் தரும் பையில்....


மிட்டாய் டப்பா - உள்ளே....

வட இந்திய திருமண அழைப்பிதழ்கள் மிகவும் அழகாக வடிவமைக்கிறார்கள். இதற்கென்றே தலைநகரில் சாந்த்னி சௌக், chசாவ்டி பஜார், நய் சடக் பகுதிகளில் நிறைய கடைகள் உண்டு. சமீபத்தில் வந்த ஒரு திருமண அழைப்பிதழ் ஒரு சிறு புத்தகம் போல இருந்தது. இரண்டாயிரம் ரூபாய்க்கு ஒரு அழைப்பிதழ் கூட பார்த்திருக்கிறேன். சமீபத்தில் வந்த அழைப்பிதழ் 150 ரூபாய் – அச்சிடும் செலவு தனி! இப்போது சொல்லப் போவது அழைப்பிதழ் பற்றி மட்டும் அல்ல. இங்கே இருக்கும் ஒரு பழக்கம் பற்றி. நம் ஊரில் திருமண அழைப்பிதழ் கொடுக்க வரும்போது அட்சதை மற்றும் குங்குமச் சிமிழ் கொண்டு வந்து அழைப்பிதழைத் தந்து செல்வார்கள். ஆனால், இங்கே அட்சதை, குங்குமம் தந்து அழைப்பதில்லை.  மாறாக ஏதேனும் இனிப்பு கொடுத்து அழைப்பார்கள். அல்லது Assorted Items கொண்ட – இனிப்பு, காரம் என அனைத்தும் இருக்கும் பெட்டி கொடுத்து அழைப்பார்கள் - பெட்டியில் ஒரு ஊறுகாய் பாக்கெட்டும் இருந்தது - எதற்கு என்று புரியவில்லை! இந்த மிட்டாய் வகைக்கே சிலர் ஒவ்வொரு அழைப்பிதழோடும் 1000 ரூபாய்க்கு மேலே செலவு செய்வதுண்டு.  இந்த வாரம் வந்த – அவர்கள் சொல்கிற விதத்தில் – மிட்டாய் டப்பா – மேலே…. அழைப்பிதழோடேயே சாப்பிட பொருட்களும் தந்து செல்வார்கள் – அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி திருமணம் – சென்றால் அது பற்றியும் எழுதுகிறேன்.

இந்த வாரத்தின் ரசித்த கவிதை:

எங்கள் ஊர் நெய்வேலியைச் சேர்ந்த தோழி ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ சில வருடங்கள் முன்பு எழுதிய கவிதை – ரசித்த கவிதையாக – இதோ இங்கு….

தனிமை
▪▪▪▪▪▪▪



விடுமுறை தினத்தன்று
அரசு அலுவலகத்தில் ஒலிக்கும்
தொலைபேசி மணியைப் போல

ஓடும் நதியில் மிதக்கும்
ஒற்றைச் சுள்ளியைப் போல

அந்தி இருளில் எரியும் திரி தேடி
அலையும் அந்துப்பூச்சியைப் போல

ஏற்றப்படாத மெழுகுவர்த்தியைப் போல

அலை தூங்கும் கடலைப் போல

இதழ்களைத் தேடும்
ஈர முத்தங்களைப் போல

நடுநிசியில் ஒளிரும்
நகர விளக்குகளைப் போல

பழ மரத்தின் பழுத்த இலை போல

மலை காட்டில் மந்திரங்கள் ஜபிக்கும்
முனிவனைப் போல

நகர சிரமப்படும் கோடைக்கால
நண்பகலைப் போல

வெட்டவெளியில் நிற்கும்
ஒற்றைப் பனை போல

திசை மறந்த பறவை
தவற விட்ட கூட்டைப் போல

அர்த்த ஜாமத்தில் அலறும்
பறவையொலியின் வலியைப் போல

தரை நோக்கிப் பாயும்
எரிநட்சத்திரத்தின் ஒளியைப் போல

தளிர்க் கைகள் உடைத்த தலையில்லா பொம்மையைப் போல

அவள்

தனிமை கொண்டு
தளர்ந்து சோர்ந்தாள் !

" ஸ்ரீ "
SREEMATHI RAVI
12th SEPTEMBER 2016

இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம்

ரெட் லேபிள் டீ விளம்பரம் – இரண்டு நாட்கள் முன்னர் வெளியான விளம்பரம் இது. பாருங்களேன்.



என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

30 கருத்துகள்:

  1. பரந்த பாலைவனவெளியில் படரும் மேகக் குவியல்போல உவமைக் குவியல்களால் ஒரு கவிதை "தனிமை". மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனிமை பற்றிய உங்கள் கருத்து சிறப்பு....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  2. கவிதை ஸூப்பர்.
    வடநாட்டு நாகரீகங்கள் தமிழகத்தில் இப்போது வேரூன்றி விட்டது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி. சில பல விஷயங்கள் - தேவையில்லாத விஷயங்கள் இப்போது நம் ஊர் திருமணங்களிலும்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  3. தனிமையின் உணர்வுகளைப் பொருத்தமான உருவகங்களுடன் மனதை தொடும் விதத்தில் எழுதியிருக்கிறார். அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பாண்டியன் சுப்ரமணியன் ஜி!

      நீக்கு
  4. குழந்தை சற்றே தூக்கக் கலக்கத்தில் இருக்கிறது போல!

    படத்துக்குப் பொருத்தமா அந்த வாசகம் என்று எனக்குத் தெரியவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு மூன்று படங்கள் எடுத்திருக்கிறேன். அவற்றையும் சேர்க்க வேண்டும். :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. வரவர ரொம்ப தெலுங்குப்பாடல் கேட்கிறீர்கள்! ஆனால் பாடல் ரசிக்க வைத்தது. முதல்முறை கேட்கிறேன். என் மகன்கள் சமந்தா ரசிகர்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானாகப் போய் கேட்பதில்லை. சில நண்பர்கள் அனுப்புகிறார்கள். சில Suggestions வருவதுண்டு. ஆஹா உங்கள் மகன்கள் சமந்தா ரசிகர்களா? நல்லது.

      அடுத்த முறை வேறு மொழி பாடல் உங்களுக்காகவே போடுகிறேன்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. திருமண அழைப்பிதழ்கள் - வடஇந்தியாவில் ஏகப்பட்ட பார்த்திபன்கள் இருக்கிறார்கள் போல!

    தனிமைக் கவிதையை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விதம் விதமாகக் கிடைக்கின்றன ஸ்ரீராம். சில ரொம்பவே அழகு. சாதாரண கார்டுகளுக்கு இப்போது அத்தனை வரவேற்பு இல்லை.

      தனிமை கவிதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. விளம்பரத்தை மிக மிக மிக மிக மிக மிக மிக ரசித்தேன். தேநீர் அருந்திக் கொண்டே அவர் பேசும் வசனம்... கலங்கின கண்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் - எனக்கும் ரொம்பவே பிடித்தது இந்த விளம்பரம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. அழைப்பிதழே இப்படியா...!!!!!

    அனைத்தும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் டி.டி. இந்த மாதிரி அழைப்பிதழ்கள் ரொம்பவே அழகாய், இன்னும் விலை அதிகமாக இருக்கின்றன.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  9. படத்துக்கான வாசகம் ரசிக்க வைத்தது. இது சுவிங்கம் மெல்லும் குழந்தையின் மனதில் இருப்பது வெளிவந்திருக்கிறது. (அவர்கள் உட்கார்ந்திருக்கும் பந்து போன்ற அமைப்பு, பபிள்கம்மை மென்று பலூன் உருவாக்குவதுபோல் இருக்கு).

    திருமணம் என்பது இவ்வளவு செலவு பிடிக்கும் விஷயமாக ஆகிவருகின்றது. கவலையுறச் செய்யும் செய்திதான். வட இந்தியத் திருமணங்களில், திருமணத்தின்போது, செலவுக்குச் சமமாக வரவை எதிர்பார்க்கும் வழக்கம் உண்டோ?

    குழந்தையின் முகம், அவ்வளவு சரியாக புகைப்படத்தில் வரவில்லை. அதாவது எடுத்த மொமெண்ட் குழந்தையின் முகபாவம் மாறிவிட்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தைகளைப் படம் எடுப்பது கொஞ்சம் கடினமான வேலை. எப்போது முகபாவம் மாறும் என்று சொல்ல முடியாது. தெரியாமல் எடுக்கும்போது சில நல்ல படங்கள் கிடைக்கின்றன.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  10. அனைத்தும் அருமை.
    காணொளிகள் எல்லாம் நன்றாக் ஐருக்கிறது.
    தெலுங்கு பாடலில் இயற்கை காட்சிகள் அருமை.
    டீவிளம்பர காணொளி மிக அருமை.
    திருமண அழைப்பிதழ் அழகு, செய்தி அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    இந்த வாரத் தொகுப்பு எப்போதும் போல் அருமையாக உள்ளது.

    குழந்தை மிகவும் அழகாக உள்ளார்..

    தனிமைக் கவிதை ஒவ்வொரு வரிகளும் அருமை. மிகவும் ரசித்தேன். கவிதை எழுதியவருக்கு பாராட்டுகள்.வெளியிட்ட தங்களுக்கும் நன்றி.

    படமும் சிறு குழந்தைகளின் ஐயப்பாடும் ஒத்து வருகிறதோ என எண்ண வைக்கிறது.

    தெலுங்கு பாடல் மிகவும் நன்றாக இருக்கிறது. இசையும் இயற்கையும் அருமை.

    திருமண அழைப்பிதழே மிக அழகு. அழகுக்கு அழகு சேர்ப்பது போல் மிட்டாய் டப்பாவின் முகப்பும், டப்பாவை போட்டுத் தரும் பையின் அழகும் மனதை கவர்கிறது. நீங்கள் கூறுவது போல் அதிகமான செலவழிப்பு எனத் தோன்றுகிறது. இதை திருமணம் முடிந்த பின்னும் வெளியில் போட நமக்குத்தான் மனசு வராது என நினைக்கிறேன். அவ்வளவு கலையழகாக உள்ளது.

    தேநீர் காணொளி மிகவும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  12. கவிதை சிறப்பு.
    ஃப்ரூக் பாண்ட் ரெட் லேபிள் டீயின் விளம்பரம் எல்லாமே நன்றாக இருக்கும். வீட்டு சாவியை தொலைத்து விட்டு வாசலில் நிற்கும் ஹிந்து தம்பதிகளை வீட்டுக்குள் அழைத்து தேநீர் கொடுத்து உபசரிக்கும் முஸ்லிம் பெண்மணி விளம்பரமும் எனக்குப் பிடிக்கும். இந்த விளம்பரம் சரியான நேரத்தில் வந்து கவர்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் மகள் திருவண்ணாமலையில் ஒரு வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது, அந்த வங்கியில் பணியாற்றிய ஒரு முன்னாள் பணியாளர் தன் சகோதரியின் திருமணத்திற்கு அழைக்க வந்தாராம். அழைப்பிதழின் மேல் அட்டை வெங்கடாஜலபதி, அலமேலுமங்கத் தாயார் படம். அதை அப்படியே ஃபிரேம் செய்து விடலாம். ஒவ்வொருவருக்கும் ஒரு பெரிய எவர்சில்வர் தாம்பாளத்தில் அந்த பத்திரிகை, நான்கு ஆப்பிள்கள், ஒரு ஸ்வீட் டப்பா இவைகளை வைத்து அழைத்தாராம். இங்கும் அப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.

      நீக்கு
    2. புகைப்படத்திற்கு ஏற்ற வாசகம் எழுதியது நிஜமாகவே குழந்தைகள்தானா? பிஞ்சிலே பழுத்த கேஸோ? இருந்தாலும் குறும்பை ரசிக்கிறேன்.

      நீக்கு
    3. ஆமாம் - இன்னொரு சாய் கிடைக்குமா என அந்தப் பெரியவர் கேட்பது ரொம்பப் பிடிக்கும்.

      இந்தப் பதிவில் வந்த விளம்பரம் - எனக்கும் பிடித்துவிட்டது. பார்த்தவர்கள் பெரும்பாலானோர்களுக்குப் பிடித்திருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

      நீக்கு
    4. எனக்குத் தெரிந்து இந்த மாதிரி பத்திரிகையுடன் ஸ்வீட், பழங்கள் கொடுக்கும் வழக்கம் நம் ஊரில் இருந்ததில்லை. வடக்கே ரொம்ப காலமாக இருக்கிறது இந்தப் பழக்கம். இங்கே இருந்து சென்றவர்கள் ஆரம்பித்திருக்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

      நீக்கு
    5. படத்திற்கேற்ற வாசகம் - எழுதியது குழந்தைகளா என்பதில் எனக்கும் சந்தேகம் உண்டு. ஆனால் இப்படி நிறைய படங்கள் இணையத்தில் இருக்கின்றன.

      பிஞ்சிலே பழுத்தது! இன்றைய குழந்தைகளுக்கு பல விஷயங்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறதே! Exposure ரொம்பவே அதிகமாக இருக்கிறது எனத் தோன்றும் எனக்கு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

      நீக்கு
  13. பிடித்த குழந்தையின்கண்களில் கனவு தெரிகிறதோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....