திங்கள், 24 செப்டம்பர், 2018

ஷிம்லா ஸ்பெஷல் – க்ராண்ட் ஹோட்டல் – ஷிம்லா நகர் வலம் ஆரம்பம்…



ஷிம்லா ஸ்பெஷல் – பகுதி – 3

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ஷிம்லா ஸ்பெஷல்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


ஷிம்லா நகரில் சூரியோதயம்... 
தங்கிய அறையிலிருந்து எடுத்த காட்சி...
ஷிம்லா ஸ்பெஷல்....

 
ஷிம்லா நகரில் சூரிய அஸ்தமனம்... 
தங்கிய அறையிலிருந்து எடுத்த காட்சி...
ஷிம்லா ஸ்பெஷல்....


இரவு முழுவதும் தூங்காமல் வந்த பயணம் ஷிம்லா நகரின் டூட்டிகண்டி பேருந்து நிலையத்தில் முடிந்தது. பக்கத்து இருக்கையில் இருந்தவர் ஷிம்லா நகரைச் சேர்ந்தவர் என்பதால் அவரிடம் பேருந்து நிலையத்திலிருந்து நாங்கள் தங்குவதற்கு முன்பதிவு செய்திருந்த க்ராண்ட் ஹோட்டலுக்கு எப்படிச் செல்வது என்று கேட்டேன். பேருந்து நிலையத்திலிருந்து அந்த இடம் 6 கிலோமீட்டர் இருக்கும் என்று சொல்லி, எனக்கு வண்டி வரும் என்றாலும் அதில் ஐந்து பேர் செல்ல முடியாது, ஏதாவது டாக்ஸி பிடித்துக் கொள்ளுங்கள் – காசு அதிகம் கேட்பாங்க, அதனால் பேரம் பேசுங்கள் என்று சொன்னார். புதிய ஊருக்குச் செல்லும்போது அந்த ஊர் மனிதர் உதவி செய்வது நல்ல விஷயம். பேருந்திலிருந்து இறங்கி, உடைமைகளை அதற்கான இடத்திலிருந்து [பேருந்தின் கீழ்ப்பகுதியில் வைத்திருந்த உடைமைகள்] பெற்ற பிறகு வாகனம் தேடும் படலம்.


மலைகள்... மலைகள்... எங்கும் மலைகள்... 

தங்கிய அறையிலிருந்து எடுத்த காட்சி...
ஷிம்லா ஸ்பெஷல்....


பேருந்து நிலையத்தின் ஒரு புறம் டாக்ஸி பதிவு செய்ய ஒரு சிறு அலுவலகம் இருக்கிறது. அங்கே சென்றால் நிறைய கூட்டம். அப்போது அங்கே இருந்த சில வண்டி ஓட்டுனர்களிடம் கேட்டபோது அனைவருமே ஒரே வாடகையாக 200 ரூபாய் தான் சொன்னார்கள். அப்படி எங்களுக்கு அமைந்த ஓட்டுனர் ரஞ்சித் சிங் – ஆஹா மஹாராஜா ரஞ்சித் சிங் பெயரில் ஒரு ஓட்டுனர்! சரி என அவர் வாகனத்திலேயே ஹோட்டல் க்ராண்ட் நோக்கிப் பயணித்தோம். பயணிக்கும்போதே அவருடன் பேசி ஒரு நாள் முழுவதும் ஷிம்லா சுற்றிப் பார்க்க எத்தனை கேட்கிறார், அடுத்த நாள் குஃப்ரி-நார்கண்டா பயணத்திற்கு எவ்வளவு என்பதை எல்லாம் பேசிக் கொண்டோம். முதலில் தங்குமிடம் சென்று பிறகு அவரை அழைக்க, அலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டோம்.


தங்கிய அறையிலிருந்து எடுத்த காட்சி...

ஷிம்லா ஸ்பெஷல்....


ஷிம்லா நகரின் மால் ரோடு பகுதியில் எந்த வாகனத்திற்கும் அனுமதி இல்லை. ஹோட்டல் இருக்கும் இடத்திற்கு சற்றே அருகே இருக்கும் ஒரு சாலை சந்திப்பு வரை தான் வாகனம் செல்லும். அதன் பிறகு மலைப்பாதையில் [நல்ல மேடு! முதுகுச் சுமையோடு நடப்பது பிரம்மப் பிரயத்தனம் தான்!] கொஞ்சம் நடக்க வேண்டும் – 300 மீட்டர்! இங்கேயும், மற்ற மலைப்பிரதேசங்கள் போல பிட்டூ என அழைக்கப்படும் உழைப்பாளிகள் உண்டு. உங்கள் உடைமைகளைச் சுமந்து வந்து கொடுப்பார்கள். முன்னர் சந்தித்த பிட்டூ பற்றி எழுதி இருக்கிறேன் [படிக்காதவர்கள் சுட்டி மூலம் படிக்கலாம்!] பெரும்பாலான மக்கள் அவர்களைத் தான் தங்கள் உடைமைகளைச் சுமந்து வர அமர்த்திக் கொள்கிறார்கள். சமவெளிப்பகுதி மக்களுக்கு இந்த மலைகளில் நடப்பது கடினமான விஷயம் – ஆனால் மலைப்பகுதி மக்களுக்கு இப்படி நடந்து நடந்து பழகிய விஷயம் என்பதால் சுலபமாக ஏறி விடுகிறார்கள்.


தங்கிய அறையிலிருந்து எடுத்த காட்சி...
ஷிம்லா ஸ்பெஷல்....

தஸ்புஸ் என மூச்சு வாங்கியபடி ஹோட்டல் க்ராண்ட் வரவேற்பு அறைக்கு வந்து சேர்ந்தோம். முன்பதிவு செய்த காகிதத்தினைக் காண்பித்து எங்களுக்கான அறைச் சாவியை வாங்கிக் கொண்டு அறைக்குச் சென்றோம். அறை முன்பதிவு செய்ய என்ன Terms and Conditions என்பதை இங்கே படிக்கலாம்!  நான்கு பேர் தங்கும் அறைக்கான வாடகையை [இரண்டு நாளுக்கு ரூபாய் 800/-] ஏற்கனவே இணையம் மூலம் முன்பதிவு செய்யும்போதே செலுத்தி விட்டோம். அறை நான்காவது மாடி – லிஃப்ட் கிடையாது! அம்மாடி! ஏற்கனவே மலையேற்றம் – இங்கே மீண்டும் மலையேற்றம்! நாங்கள் ஹோட்டல் அறைக்குச் சென்று உடைமைகளை வைத்து விட்டு, தயாராவதற்குள் இந்த அறை பற்றியும் அதன் பழமை பற்றியும் உங்களுக்குச் சொல்லி விடுகிறேன். ஹோட்டல் கிராண்ட் என்று இன்றைக்கு அழைக்கப்படும் தங்குமிடம் முதன் முதலில் கட்டப்பட்டது 1829-ஆம் ஆண்டு. “Bentick Castle” என்ற பெயருடன் Governor General Lord William Bentick அவர்கள் தங்குவதற்காக உருவாக்கப்பட்டது.


தங்குமிடம் முன்னர் கேரள நண்பர்களுடன்...
ஷிம்லா ஸ்பெஷல்....

பல்வேறு கைகள் மாறியபிறகு, சர் ஹென்றி லாரன்ஸ் என்பவர் இந்த இடத்தினை வாங்கி அங்கே தங்கினார். பிறகு 1850 முதல் 1887 வரை ஷிம்லா வங்கி வசம் இருந்திருக்கிறது – வங்கி திவாலான பிறகு ”New Club” எனும் அமைப்பு இந்த இடத்தினை வாங்கி ஏற்கனவே ஷிம்லாவில் இயங்கிய United Service Club-க்கு போட்டியாக Club ஆரம்பித்தது. 1892-ஆம் ஆண்டு Chevalay Pelity the Vice-regal Confectioner ஆல் இரண்டு லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்டது. அப்போதிலிருந்து தங்குமிடமாக இருக்கிறது. 1922-ஆம் ஆண்டு கட்டிடம் மொத்தமும் தீக்கிரையானது! இந்தக் கட்டிடம் மற்ற மலைப்பகுதி கட்டிடங்களைப் போல மரங்களால் கட்டப்பட்ட கட்டிடம் தான். 1930-ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாக, மீண்டும் கட்டப்பட்டது. 1942-ஆம் ஆண்டு கட்டிடம் முழுவதும் அரசின் கைவசம் வந்தது. மத்திய அரசின் Central Public Works Department தான் இப்போது இந்த கட்டிடத்தினை பராமரிக்கிறது.


இவ்வளவு சீரியஸா என்ன ஜிந்திக்கிறேன்?........
ஷிம்லா ஸ்பெஷல்....

1960-வரை ஷிம்லா நகரில் மிகவும் பிரபலமான தங்குமிடமாக இந்த க்ராண்ட் ஹோட்டல் இருந்திருக்கிறது. பிறகு கடும் தண்ணீர் பஞ்சம், மோசமான பராமரிப்பு போன்ற காரணங்களால் கொஞ்சம் கொஞ்சமாக தன் முதலிடத்தினை இழந்தது. மற்ற தனியார் தங்குமிடங்கள் வர ஆரம்பித்து விட்டன.  என்றாலும் 2000-ஆம் ஆண்டு இந்த க்ராண்ட் ஹோட்டல் மீண்டும் புனரமைக்கப்பட்டு சரியான பராமரிப்புடன், தண்ணீர் வசதிகளுடன் இருக்கிறது. Rain Water Harvesting வசதிகளும் இணைக்கப்பட்டதால் தண்ணீர் பஞ்சமும் இல்லை! நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறது என்றாலும் இன்னமும் சிறப்பாகச் செய்ய வாய்ப்பிருக்கிறது. அரசுத் துறையின் பராமரிப்பு என்பதால் கொஞ்சம் மெத்தனப் போக்கு இருப்பது கண்கூடு! இன்னும் சிறப்பாகப் பராமரித்தால் நல்லது.


மேற்கூரைகள் இப்படித்தான் - பனிப்பொழிவிற்கு ஏற்ற மாதிரி....
ஷிம்லா ஸ்பெஷல்....

இந்த தங்குமிடத்தில் எங்களுக்குக் கிடைத்த [Automated allotment system!] அறை நான்காம் மாடியில் – அது தான் கடைசி! குரங்குகள் நிறையவே இருப்பதால் அவை அவ்வப்போது குதித்து ஓடும் சப்தங்கள் கேட்ட வண்ணமே இருந்தது – மேற்கூரை பனிப்பொழிவுக்கு ஏற்றவண்ணம் கட்டப்பட்டிருப்பதால் நன்றாகவே சப்தம் கேட்கிறது! பகலிலேயே அதிக சப்தம் – இரவின் நிசப்தத்தில் எப்படி இருக்குமோ என்ற நினைப்பு வந்தது – அன்றைய இரவில் அந்த சப்தம் கேட்கக் கிடைத்தது – பயங்கரமாகத் தான் இருந்தது குரங்குகளின் சப்தம்! உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டு நடந்து வருவது சிரமம். குரங்குகளை ஓட்டுவதற்காகவே சிலரை நியமித்து இருக்கிறார்கள் என்றாலும் பலருக்கு இந்தக் குரங்குகளைக் கண்டு கொஞ்சம் அச்சம் வரத்தான் செய்கிறது. என்ன இருந்தாலும் விலங்கு தானே – எப்போது தாவும் என்பது அதற்கே தெரியாதே!


நகர்வலம் செல்லத் தயாராகி நடக்கும் நண்பர்...
ஷிம்லா ஸ்பெஷல்....

நாங்கள் குளித்து தயாரானதும் ஓட்டுனர் ரஞ்சித் சிங் அவர்களை அழைத்தோம். அன்றைய நாளில் ஷிம்லா நகரில் இருக்கும் சில சுற்றுலாத் தலங்களைப் பார்க்க அவருடன் தான் செல்லப் போகிறோம். ஒரு நாள் வாடகையாக 1700 என்று பேசி இருந்தோம். எங்களை இறக்கி விட்ட இடத்திலேயே காத்திருப்பதாகச் சொல்ல, மலைப்பகுதியில் நடந்தோம் – இந்த முறை கீழ் நோக்கிச் சென்றதால் அவ்வளவு சிரமமாகத் தெரியவில்லை. கைகளில் காமிராவுடன் புறப்பட்டு விட்டோம். படங்கள் நிறையவே எடுத்திருந்தோம் – நானும் நண்பர் பிரமோத்-உம் எங்கள் DSLR கேமராக்களில் எடுக்க, மற்ற நண்பர்கள் அவரவர் அலைபேசியில் எடுத்தார்கள். நிறைய படங்கள் எடுத்திருந்தாலும், எப்போதும் போல சில படங்கள் மட்டுமே தொடரில் பகிர்ந்து கொள்ள முடியும்.


கேரளத்திலிருந்து வந்த நண்பர்கள்.... 
நகர் வலம் செல்லத் தயாராக...
ஷிம்லா ஸ்பெஷல்....

ஓட்டுனர் ரஞ்சித் சிங் உடன் அன்றைய ஷிம்லா நகர்வலம் துவங்கியது. முதலில் எங்கே சென்றோம், என்ன பார்த்தோம் என்ற விவரங்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன். ஓகேவா!

பயணம் நல்லது. ஆதலினால் பயணம் செய்வீர்!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

20 கருத்துகள்:

  1. ​குட்மார்னிங் வெங்கட்.

    இரண்டு நாட்களுக்கு நான்கு பேர்களுக்கு 800 ரூபாய் என்பது சீப்பாய் இருக்கிறதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

      அரசு ஊழியர்களுக்கான தனிப்பட்ட பயணம் என்பதால் இவ்வளவு. அரசு வேலையாகச் சென்றால் இன்னும் குறைவு. தனியார் நபர்களுக்கு கட்டணம் அதிகம் - அரசுத் துறை ஊழியர்கள் மூலமாக தனியார் நபர்களும் முன்பதிவு செய்ய வசதி இருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. பொதுவாகவே அரசுத்துறையினால் நடத்தப்படும் ஓட்டல்களில் அறை வாடகை குறைவே. ஆனால் அந்தப் பருவ காலத்தில் சென்றோமானால் இடமே கிடைக்காது. இப்போவும் கொடைக்கானலில் தமிழ்நாடு அரசினால் நடத்தப்படும் சுற்றுலா மாளிகையில் அறை வசதியாகவும் இருக்கும். வாடகை குறைவாகவும் இருக்கும். எந்நேரமும் குழாயில் வெந்நீரும் வரும். தனியார் ஓட்டல்களில் அது இல்லை! குளிக்கவே வெந்நீர் கிடைப்பது அரிது! :( நாங்க அமிர்தசர் போனப்போக் கூட பஞ்சாப் அரசின் சுற்றுலா மாளிகையில் தான் தங்கினோம். குளிர்காலம் என்பதால் ரஜாய், வெந்நீர், காலைத் தேநீர், காலை உணவு உட்படக் கொடுத்தார்கள், காலை உணவுக்கு மட்டும் தனியாகப் பணம்!

      நீக்கு
    3. அரசுத் துறையின் சில இடங்கள் ரொம்பவே நன்றாக இருக்கின்றன.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  2. நான்காவது மாடி நோ லிப்ட்... அம்மாடி... சீரியஸான சிந்தனை என்னவாக இருக்கும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலைப்பாதையில் ஏறி வந்த பிறகு நான்காவது மாடி - கொஞ்சம் கஷ்டம் தான்.

      சீரியஸான சிந்தனை - என்னவாக இருந்திருக்கும் என்று நான் இப்போதும் சிந்திக்கிறேன்! ஹாஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. அழகிய காட்சிகள் ஸூப்பர் ஜி விபரங்களும் நன்று தொடர்ந்து வருகிறேன்
    சிந்தனை பலமாயிருக்கிறது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து வந்து உற்சாகம் தருவதற்கு நன்றி ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  4. தங்குமிடத்திற்குச் சென்றதும், அதன் வரலாறு பதிந்ததும், நான்காம் மாடிக்கு சிரமப்பட்டு சென்றதும் அறிந்தோம். குரங்குத்தொல்லையையும் சமாளித்தது தெரிகிறது. தொடர்ந்து பயணிக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. ஆமாம், வடமாநிலங்களில் பெரும்பாலும் குரங்கார் இருப்பார். தொல்லை தான்! இங்கேயும் இருந்தாலும் அபூர்வமாய்த் தான் கண்களில் படுவார். அடுத்த பதிவுக்குக் காத்திருக்கேன். காலை உணவு பற்றிக் குறிப்பிடவில்லையே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை உணவு - அடுத்த பகுதியில் சொல்வேன்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  7. அருமை அருமை மலைகள் அருமை. நாலாவது மாடிக்கு எப்படித்தான் ஏறினீர்களோ. அதுவும் சுமையோடு.

    குரங்கார் தொல்லையோடு எப்படித்தான் தூங்கினீர்களோ.
    படு சீரியஸ் லுக் . வீட்டு நினைவும் வந்திருக்கும்.
    மிக மிக அழகு வெங்கட்.. நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அத்தனை அதிகம் எடை இல்லை அம்மா. ஒரே ஒரு Backpack மட்டுமே...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா..

      நீக்கு
  8. நாங்கள் முதன் முறை சென்ற போது இதில்தான் தங்கினோம். அப்போது தண்ணீர் கஷ்டம் கொஞ்சம் இருக்கத்தான் செய்தது. பராமரிப்பு வெகு சுமார். இங்கு நீங்கள் சொல்லியிருப்பது போல் குரங்குகள் அதிகமோஅதிகம். கழுத்தைச் சுற்றி இருந்த என் துப்பட்டாவின் நுனியைப் பிடித்துக் கொண்டு ஊஞ்சலாடினார் ஒரு சிறிய மூதாதையர். என் மகன் ஒரே அழுகை அப்போது அவன் வயது இரண்டரை. நான் குச்சி ஏதேனும் கிடைக்குமா என்று தேடினேன்...அப்புறம் அங்கிருந்த ஒருவர் குச்சி எடுத்து வந்து அவரை விரட்டவும் மீண்டும் தாவ முயற்சிப்பதற்குள் நான் மெதுவாக மகனைக் கூட்டிக் கொண்டு மால் ரோட் பக்கம் சென்றுவிட்டேன். கூட வந்த குழுவினர் தயாராகும் முன் அவர்கள் என்னிடம் கேமரா கொடுத்து காட்சிகள் எடுக்கச் சொன்னதால் நான் எடுக்க முயன்ற போது சிறிய குரங்காரின் விளையாட்டு...ஹா ஹா...ஆனால் அங்கு பல பெரிய மூதாதையரும் ரொம்பவே கர் கர் தான்...

    பழைய நினைவுகளை மீட்ட பதிவு ஜி..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே பல இடங்களில் குரங்குத் தொல்லை தான். அவற்றின் இடத்தினைப் பறித்துக் கொண்டு அவற்றையே குறை சொல்வது நமக்கு வழக்கமாகிவிட்டது! :)))

      நீங்கள் சென்று வந்த போது கிடைத்த அனுபவங்களை மீட்டெடுக்க இந்தப் பதிவுகள் உதவியதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா பிரேம்குமார் ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....