செவ்வாய், 18 செப்டம்பர், 2018

டப்பு டப்பு மாமா - பத்மநாபன்



 
நண்பரின் தளத்தில் என்னுடைய முதல் பதிவாக ”ஒற்றைத் துண்டுடன் நடந்த கதை” படித்து,  பின்னூட்டத்தில் நம்பிக்கையூட்டிய அனைவருக்கும் நன்றிகள் பல. சந்தித்த கதை மாந்தர்கள் பற்றி வெகு சுவையாக சொல்வார் என்று சொல்லி இருந்தாரே, இதோ அப்படி ஒரு கதை மாந்தர் – “டப்பு டப்பு மாமா” பற்றி சொல்கிறேன்.

ஊரில் கல்லூரி முடித்து வெட்டி ஆபீஸராக இருக்கும் போது கழிந்த நாட்களை நினைக்கும் போது நன்றாகத்தான் இருக்கிறது. பகல் நேரங்களில் தனிமையில் இருக்கும்போது மனதுக்குள் ஒரு கலக்கம் இருந்து கொண்டு இருக்கும், எப்படியாவது ஒரு வேலை கிடைக்க வேண்டுமே என்று. அவ்வப்போது அதற்குரிய தயாரிப்பில் இருப்பது போல் அப்பாவிடம் காட்டிக் கொள்ளவும் வேண்டும். எவ்வளவு நெருக்கடிகள் மனுஷனுக்கு.

அந்த கலக்கம், மயக்கம் எல்லாம் அதோடு சரி. மாலை ஆறுமணிவாக்கில் அப்படியே எங்கள் ஊர் பூதநாத சிவனை ஒரு தரிசனம் செய்து விட்டு ஒரு ஏழுமணிவாக்கில் நண்பர்கள் ரண்டு மூணு பேருடன் ஊரை ஒரு ரவண்டடித்துவிட்டு எதாவது ஒரு கண்ட்ரையில் அந்தப் பக்கம் ரண்டு பேரு, இந்தப் பக்கம் ரண்டு பேருன்னு உட்கார்ந்து கொண்டு நாட்டு நடப்பு பேசும் போது கிடைக்கும் சுகம் இருக்கே, அதற்கு ஈடு இணை எங்கும் கிடையாது. இந்த பிக்பாஸு, கக்கூஸூன்னு ஒரு எளவும் கிடையாது. நாமதான் பாஸு. பச்சத்தண்ணிதான் ஜூஸு.

கொஞ்சம் பேச்சு போர் அடிக்கும்போது அப்போதுதான் வேலை முடிந்து வீடு திரும்பும் ஏதாவதொரு அண்ணனோ, மாமா முறை உள்ளவரோ வருவார். அன்னைக்கு வந்தது நம்ம டப்பு டப்பு மாமா.

என்னது!  டப்பு டப்பு மாமாவா? நல்ல பேராக இருக்கே. முதல்ல அந்த கதையை சொல்லுப்பா.

போடே! அதை சொல்ல ஆரம்பிச்சா நாறிப்போகும்டே.

பரவாயில்லப்பா. நான் மூக்கப் பொத்திகிடுகேன்.

அந்த மாமாவிற்கு நாகர்கோவில் கோட்டார்ல பலசரக்கு கடையில் வேலை. ராத்திரி பத்து மணிக்கு கடை முடிஞ்சு கடைசி பஸ்ஸை புடிச்சு எங்க ஊர் கொல்லாங்குளத்தங்கரை பஸ் ஸ்டாப்புல வந்து இறங்குவாரு.  கையில வச்சிருக்க காலி சோத்துடப்பா பையை நம்ம பயலுக யாராவது ஒருத்தன் கையில் கொடுப்பாரு. இன்னா வந்தருகேன் மக்களேன்னுட்டு வேட்டியை நல்ல தூக்கி கட்டி கிட்டு ரண்டு கையாலும் ரண்டு தொடையிலும் டப்பு டப்புன்னு தட்டிக்கிட்டே இருட்டுல கொல்லாங்குளத்து தென்னந்தோப்புல ஒரு தென்னமரத்துக்கு பின்னால போய் குத்த வைப்பார்.  இந்த கொல்லாங்குளத்தப்பத்தைப் பற்றி பேச ஆரம்பித்தால் அது பெரிய கதையாகும். மோடிக்கு தெரிந்தால் கோபித்துக் கொள்வார். சரி, அது இருக்கட்டும்.

நம்ம மாமா ஒரு அரை மணிநேரம் ஆனந்தமா மனிதர் அனுபவித்து போவார். இடை இடையே டப்பு டப்புன்னு சத்தம். மலச்சிக்கலக்கூட மகிழ்ச்சியா கொண்டாடும் மனுக்ஷன் இவராத்தான்யா இருக்கும். சிலநாட்களில் இடை இடையே முத்தைத்தரு பத்தித்திருநகைன்னு திருப்புகழ் வேற பாடுவாரு. நல்ல இடத்தில நல்ல பக்திப்பாட்டு. மனுக்ஷனுக்கு நல்ல கணீர் குரல். திருப்புகழ் பாடற நேரம்காலம்தான் கொஞ்சம் சரியில்லை. ஒருத்தன் சொல்லுவான், மாமா பக்கத்துல பண்ணி (பன்றி) பாய்ஞ்சிருக்கும், பயந்திருப்பாரு. அதுதான் பக்திப்பாட்டுன்னு நமுட்டு சிரிப்பு சிரிப்பான். உண்மைதான். ராத்திரி கும்மிருட்டுல பக்கத்தில் பன்றி கீச்சுன்னு கத்திக்கொண்டு ஓடினால் இருட்டில் பன்றி கண்ணுக்குத் தெரியாது. சத்தம் மட்டும் கேட்கும். சாமி கிடையாது, பூதம் கிடையாதுன்னு சொல்லிக்கிட்டு திரியறவன்கூட
சொட்டு மூத்திரம் போய்ட்டு சாமியே சரணம்பான். நம்ம மாமாவுக்கு இது தினசரி அனுபவம்தான். ஆனாலும் மனுஷன் அவ்வப்பொழுது முத்தைத்தரு பத்தித்திருநகையை துணை கொள்வார்.

ஒருவழியாக மனுஷன் வெற்றிச் சிரிப்புடன் வருவார். என்னுடைய நீண்ட நாள் சந்தேகத்தை அவரிடம் கேட்டேன். மாமா! மரத்து மூட்டுல இருந்து டப்பு டப்புன்னு சத்தம் வந்து கிட்டே இருந்துதே. அதுல ஏதோ சூட்சுமம் இருக்கு போல தெரியுதே. அது ஒண்ணுமில்லை மக்கா. இருட்டில் பாதையில, மரத்து மூட்டுல என்ன எளவு கிடக்குன்னு யாருக்கு தெரியும். இடை இடையே தொடையை ரண்டு தட்டு தட்டுனேன்னா பூச்சி பொட்டு கிடந்தா ஓடிரும்லா. இப்ப என்ன பிரச்சனைன்னா அப்படி தட்டி தட்டி பழகி இப்ப தட்டல்லேன்னா போக மாட்டேங்கு பாத்துக்கோன்னாரு. அப்படியே அவருக்கு டப்பு டப்பு மாமான்னு நாமகர்ணமாகிப் போச்சு.

இன்னொருத்தன் ஆரம்பிப்பான், என்ன மாமா இன்னைக்கு கொஞ்சம் லேட்டு போல இருக்கே! ஆமா மக்களே! இன்னைக்கு கொஞ்சம் வேலை அதிகம்தான். அவரும் உற்சாகமாய் நம்மோடு பங்கேற்க தயாராவார். அவருக்கும் மனப்புழுக்கத்தில் இருந்து வெளியே வந்த மாதிரி இருக்கும். அது டாஸ்மாக் இல்லாத பொற்காலம். அப்படியே ஆரம்பிப்பார். தீவாளி வரப்போகுல்லா. காசு வேணுமுல்லா மக்கா. அதுதான் கொஞ்சம் நெருக்கி வேலை பார்த்துகிட்டு இருக்கேன். ஆனா ஒண்ணு பார்த்துக்கோ. இந்த வருஷம் தீவாளியை செழிப்பா ஓட்டிருவேம்லா.

ஏன் மாமா, லாட்டரி விழப்போகாக்கும்.

இல்லடே! வேற காரியம் பார்த்து வச்சிருக்கேம்லா.

இப்படி பேசிக்கொண்டிருக்கும்போது ஒருத்தன் எழுந்து புளியமரம் பக்கமாக போய் குத்த வச்சு ஒண்ணுக்குப் போவான். எலே! இருட்டுல அங்க போகாதலே. புளிமூட்டுல ஒரு பொந்து கிடக்கு. உள்ள என்ன எளவு கிடக்குன்னு தெரியல்ல. பட்டுன்னு போட்டுட்டுன்னா நீ டாக்டர்கிட்ட போய் படம் காட்டணும் பாத்துக்கோ.

அவன் கிடக்கான் மாமா! நீ நம்ம விஷயத்துக்கு வா. தீவாளிக்கு என்ன ப்ளான் வச்சுருக்க சொல்லு.

அதுவா! போன பங்குனி உத்திரம் சமயம் ரண்டு ஆடு வாங்கி விட்டேன். கையோடு ரண்டையும் சேர்த்து விட்டுட்டேன்லா. 

என்ன மாமா, நீயேவா! ஒருத்தன் அமுக்கமா கேட்டான்.

ஏலேய் அசத்து! மாமன்கிட்ட பேசுக மாதிரியா பேசுக.  குறுங்காட்டுல ஒரு நல்ல கிடா சுத்திக்கிட்டிருக்கும்லாடே. அங்கே ரண்டயும் மேய்ச்சலுக்கு விட்டேன். அந்த ரண்டும் குட்டி போட்டாச்சுல்லா. குட்டியை வச்சுகிட்டு பெருசு ரண்டயும் வித்துப் போடுவேம்லா.

சரி மாமா, நீ இந்த தீவாளியை அடிச்சுக் கொளுத்து.

சரி நான் வரட்டுமா மக்களே. உங்க அத்தை இருக்காளே, நேரத்துக்கு வீட்டுக்கு போகல்லைன்னா நிலைக்கு நிப்பா. ரொம்ப நேரம் ராத்திரி இருக்காதீங்க மக்களே. நேரத்தோடு வீட்டுல போய் உறங்குங்கடே. மாமா மடிச்சுக் கட்டின வேட்டியை ஒரு பக்கமாக உயர்த்தி தொடையைத் தட்டிக் கொண்டே கிளம்பினார்.

இப்படியாக அன்றையபொழுது இனிதே கழிந்தது. என்ன சிவா! அடுத்த நாளைக்கு இன்னொரு மாமாவோ மச்சானோ வராமலா போய் விடுவார். அந்த அனுபவங்களையும் பிறிதொரு சமயத்தில் சொல்வேன்!

வேறொரு பதிவில் சந்திக்கும் வரை….

நட்புடன்

இரா.ஈ. பத்மநாபன்
புது தில்லி.

நண்பரின் பதிவுக்கு உங்கள் வருகையும், தரப்போகும் பின்னூட்டங்களும் நிச்சயம் மகிழ்ச்சி தரும். தொடர்ந்து அவர் எழுதுவது உங்கள் கைகளில் இருக்கிறது – அன்புடன் வெங்கட்.

42 கருத்துகள்:

  1. காலை வணக்கம் வெங்கட் & பத்மநாபன் அண்ணாச்சி! கண்ட்ரைஎன்றால் என்ன என்று தெரியவில்லையே...!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாலை வணக்கம். சிற்றோடையின் மீது கட்டப்பட்ட குறும்பாலத்தை 'கண்ட்ரை' என்போம்.

      நீக்கு
    2. காலை வணக்கம் ஸ்ரீராம்.

      பத்மநாபன் அண்ணாச்சி தந்திருக்கும் பதில் பார்த்திருப்பீர்கள்.... பதிவில் சேர்க்க நினைத்து மறந்தேன்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    3. பதில் தந்தமைக்கு நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. முத்தைத்திரு பத்தைத்திரு பாடும் நேரமா அது? அப்படிப் பாடிய அவர் டப்பு டப்பு மாமா இல்லை, தப்புத் தப்பு மாமா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... செய்யும் வேலைக்கும் பாடும் பாட்டுக்கும் சம்பந்தமே இல்லையே! தப்புத் தப்பு மாமா! ஹாஹா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. டப்பு டப்புக்குக் காரணம் நான் வேற யோசிச்சேன்... வெறும் தொடை தட்டும் சப்தம்தானா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... நீங்கள் என்ன யோசித்து இருப்பீர்கள் என கொஞ்சம் குண்ட்சாக புரிகிறது! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    2. ஹாஹா... நீங்களுமா கீதா ஜி! :))))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  4. ஜாலியா எழுதி இருக்கீங்க அண்ணாச்சி.. அந்த "அதற்குரிய தயாரிப்பில் இருப்பது போல் அப்பாவிடம் காட்டிக் கொள்ளும்" தந்திரம் செய்யாதார் யார்? கிளம்பி வெளியில் சென்று நண்பர்களை சந்தித்து மகிழாதார் யார்? சொந்த அனுபவம் போலப் படித்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தந்திரம் செய்யாதார் யார்.... ஹாஹா... அந்த வயது அப்படி இல்லையா..... உங்களுக்கும் அந்த அனுபவம் உண்டு என்பதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. காலை வண்க்கம் வெங்கட்ஜி!! ஆஹா எங்கூரு கதைல....கோட்டாரு அது இதுனு...பத்ம்நாபன் (பப்பநாபா/பப்பு எங்கூரு பாஷைல சொல்லணும்னா) அவர்கள் நாரோவிலு பக்கமோ!!!!! ஹா ஹா

    செம இன்ட்ரெஸ்டிங்காக இருக்கு...ஒன்னும் ஒற்றைத் துண்டுடன் நடந்த கதை வாசிக்கலை வாசிக்கணும்...

    ஸ்வாரஸியமான நடை ரசித்தேன் மிகவும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கீதா ஜி.... ஆமாம் நாரோவில் பக்கம் தான். இராஜக்காமங்கலம்! தலைநகர் வந்து 30 வருடங்கள் ஆகிவிட்டது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. ஒரு கதை இரு கதை மூணு கதை இன்னிக்குப் படிச்சாச்சு.
    டப்பு டப்பு மாமா சூப்பர் தான். ஐயா கி.ராஜ நாராயணன் கதை படிக்கும் மகிழ்ச்சி வந்தது என்று சொல்லுங்கள் வெங்கட்,. அவரை நிறைய எழுதச் சொல்லுங்கள். வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகையும் கருத்துப் பகிர்வும் மகிழ்ச்சி தந்தது வல்லிம்மா....

      பத்மநாபன் அண்ணாச்சி ஒரு திறமைசாலி. அவரை நிறைய எழுதச் சொல்லி இருக்கிறேன். தொடர்ந்து எழுதுவார் என நம்புகிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. டப்பு டப்பு மாமா கதை அருமை
    தங்கள் நண்பர் தொடர்ந்து எழுதுட்டும்
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் தொடர்ந்து எழுத வேண்டும் என்பது தான் எனது எண்ணமும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  8. தங்களது நண்பர் திரு. இரா.ஈ.பத்மநாபன் அழகான கதையை கொடுத்து இருக்கிறார் ஜி.

    இயல்பான யதார்த்த நகைச்சுவை மிகவும் இரசித்தேன்.

    வாழ்த்துகள் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நகைச்சுவை உணர்வு அவருக்கு நிறைய உண்டு ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  10. டப்பு டப்பு மாமா கதை நன்றாக இருக்கிறது.
    வித்தியாசமான மனிதர்களைப் பற்றி நிறைய எழுதட்டும் உங்கள் நண்பர் பத்மநாபன் அவர்கள்.
    நெல்லை மாவட்டபேச்சு வழக்குடன் கதை நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பத்மநாபன் இன்னும் எழுதுவார் என்ற நம்பிக்கை உண்டு. பார்க்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  11. ஹா ஹா ஹா நல்ல நகைச்சுவை எழுத்து... நான் வெங்கட்தான் இப்படி எழுதுறார் எனப் படிச்சுக்கொண்டு வந்தேன்.. முடிவில் பெயர் வேறு:).. அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... நான் இப்படி எழுதுவேன் என நினைத்தீர்களா.... நல்ல நகைச்சுவை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஞானி அதிரா.

      நீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    நல்ல நகைச்சுவை உணர்வு மிக்க கதை. இயல்பான அந்த ஊர் பேச்சு வார்த்தைகளுடன் மிகவும் அருமையாக எழுதியிருக்கிறார் தங்கள் நண்பர். மிகவும் ரசித்தேன். அவரை இன்னும் நிறைய எழுதச் சொல்லுங்கள். அவருக்கு பாராட்டுகளுடன் வாழ்த்துக்களும்.
    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் நிறைய எழுத வேண்டும் என்பது தான் நம் அனைவரின் விருப்பமும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  13. எந்த காரணத்தால் அவர் டப்பு டப்பு என்று கொட்ட ஆரம்பித்தாரோ அதுவே அவருக்குப் பழக்கமாய் விட்டதா பெயர்க்காரணமே கதைக் கருவாகி விட்டது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  14. உங்கள் நடையில்லாமல் வித்தியாசமாக இருக்கிறதே என்று யோசித்தேன். உங்கள் நண்பரின் பதிவு என்று இறுதியில் தெரிந்து கொண்டேன். சுவாரஸ்யமாக எழுதுகிறார். தொடரட்டும் அவரது எழுத்துப்பணி! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  15. காலையிலேயே படித்துவிட்டேன். மிகவும் ரசித்தேன் ஒரு தட்டச்சுப் பிழை, மூக்கைப் பொத்திக்கிடுதேன். என்று வரும்.

    நண்பர் ரொம்ப நல்லா எழுதியிருக்கார். இந்த இயல்பான நகைச்சுவையுடன் கூடிய திருநெவேலி எழுத்து சுலபமா யாருக்கும் கைகூடாது. நல்ல எழுத்துத் திறன். நிறைய எழுதச் சொல்லுங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருநெவேலி எழுத்து சுலபமா யாருக்கும் கைகூடாது. உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  16. பத்மநாபன் பேசும்போதும் இப்படிப் பேசுவார் என்றால் பயணங்கள் ருசிக்க காரணம் வேண்டுமோ? (பயணங்களில் கூட வராவிட்டாலும் நகைச்சுவையா பேசறவங்ககிட்ட இருந்தாலே நேரம் போவதே தெரியாது)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேசும் போது நிறைய நாரோயில் வட்டார வழக்கு வரும். நகைச்சுவை உணர்வு மிக்கவர். அவருடன் இருக்கும் நேரங்கள் இனிமையானவை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  17. நாரோயில் வட்டார வழக்கை இப்போல்லாம் அடிக்கடி படிக்க முடியுது. முகநூலிலும் இரு நண்பர்கள் இருக்காங்க. அந்த வட்டார வழக்கிலேயே எழுதுவாங்க! இங்கேயும் அந்த வட்டார வழக்குச் சொல்! அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் உறவினர் ஒருவரும் முகநூலில் அவரது வட்டார வழக்கில் எழுதுகிறார்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  18. நல்ல நகைச்சுவை....உங்கள் கதை என நினைத்தேன்.
    ஓ...உங்கள் நண்பர் நன்றாக எழுதுகிறார்.
    அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!

      உங்கள் வலைப்பூவில் கருத்துப் பெட்டியை நீக்கி விட்டீர்கள் போல.... பதிவுகள் படித்தாலும், பின்னூட்டமிட முடியவில்லை.

      நீக்கு
  19. ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து எழுதுங்கள் அண்ணாச்சி....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....