வியாழன், 26 செப்டம்பர், 2019

கல்யாணக் கனவுகள்…


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இன்றைய நாளை திருமணம் பற்றிய ஒரு பொன்மொழியுடன் துவக்கலாமா?

திருமணம் என்பது சரியான துணையைத் தேடிப் பிடிப்பதல்ல. கடைசி வரை சரியான துணையாக இருப்பதே.
 
***


அலைபேசி ”Bபோலே chசூடியா…” என்று சிணுங்கியது.  எடுத்துப் பார்த்தால் சுரேந்தர். தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் அதிகாரியாக பணிபுரியும் இளைஞர். உதவி மனப்பான்மையும் நல்ல குணமும் கொண்டவர். அழைப்பை எடுக்க, ”நான் சுரேந்தர் பேசுகிறேன்.  எனக்கு திருமணம் நிச்சயமாகி விட்டது. மகிழ்ச்சியுடன் நண்பர்கள் அனைவருக்கும் தகவலைச் சொல்ல வேண்டும். கண்டிப்பாக பீஹாரில் நடக்கும் திருமணத்திற்கு வர வேண்டும். இன்னும் ஒரு மாதம் தான் இருக்கிறது… நீங்கள் எனக்கு மிகவும் முக்கியமான வேண்டப்பட்டவர் என்பதால் உங்களுக்கு தான் முதல் அழைப்பு! கண்டிப்பாக வந்து விட வேண்டும்.  நாலு நாள் நடக்கப் போகும் திருமண நிகழ்வுகள் எல்லாவற்றிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும். பத்திரிகை வந்ததும் உங்களை நேரில் சந்தித்து பத்திரிகை அளிக்கிறேன்”.

கல்யாணம்… ஆஹா கல்யாணம்… யாருக்குத் தான் இல்லை கல்யாண ஆசைகள். பிறந்ததே கல்யாணம் செய்து கொண்டு குழந்தை குட்டிகளுடன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே என்று சிலர் யோசிப்பதுண்டு. எல்லோருடைய திருமண வாழ்க்கையும் சந்தோஷமாகவே கழியும் என்ற உத்திரவாதம் இல்லை என்று தெரிந்தாலும் திருமணம் செய்து கொள்ளவே வேண்டாம் என்று நினைப்பவர்கள் மிகக் குறைவு. தற்போதைய காலகட்டத்தில் இப்படிச் சிந்திப்பவர்கள் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறார்கள் என்றாலும், அவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு தானே…  சுரேந்தருக்கும் கல்யாண ஆசைகள் உண்டு. சில வருடங்களாகவே திருமணத்திற்குப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள் வீட்டில்.  ஏனோ காரணங்களால் தட்டிப் போய்க்கொண்டே இருந்தது.  இப்போது திருமணம் நிச்சயம் ஆகிவிட்டதில் மகிழ்ச்சி!

அலைபேசி அழைப்பு வந்த சில நாட்கள் ஆகிவிட்டது. பத்திரிகை வரவில்லை. சுரேந்தரும் வரவில்லை. எனக்கும் வேறு சில பணிகள் தொல்லைகள் மனதைத் துளைக்க, சுரேந்தரின் திருமணம் மறந்தே போனது. அதன் பிறகு சுரேந்தரின் அழைப்பும் வரவில்லை. சரி திருமணத்திற்கு நாம் போகாததால் கோபம் கொண்டிருப்பாரோ என்று மனதில் கொஞ்சம் உறுத்தல். அவருடன் பேசுவதற்கான சந்தர்பத்திற்காகக் காத்திருந்தேன். சில மாதங்கள் கழிந்து விட்டன. ஒரு நாள் சுரேந்திரிடமிருந்து அழைப்பு.  “நல்லா இருக்கீங்களா? உங்களைப் பார்த்து ரொம்ப நாட்களாகி விட்டது. இந்த ஞாயிறு சந்திக்க முடியுமா? உங்களுக்கு வேறு ஏதும் வேலை இருந்தால் பிறகு சந்திக்கலாம். உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்…” பீஹாரிகளுக்கு ஒரு பழக்கம். ‘நான் என்று சொல்வதை விட நாங்க’ என்று தான் சொல்வார்கள் [”மே” என்பதற்கு பதில் “ஹம்”]. ”ஹம் லோக்g சண்டே ஆயேங்கே” என்று சொன்னதால் மனைவியுடன் வருகிறார் போலும் என நினைத்தேன். ஆனால் வந்த பிறகு தான் தெரிந்தது தனியாக வந்திருக்கிறார் என்று.

ஞாயிறு மாலை அவரைச் சந்திக்கச் சென்று சொன்ன இடத்தில் காத்திருந்தேன். பரிசுப் பொருள் ஏதேனும் வாங்கிக் கொள்ளலாம் என காதி கிராஃப்ட் உள்ளே நுழைந்து தேடிக் கொண்டிருந்தேன். ஆனால் ஒன்றும் சரியாக அமையவில்லை. அதற்குள் அழைப்பு வரவே, சரி பார்த்துக் கொள்ளலாம் என வெளியே வந்தேன். சுரேந்தர் என்னை விட இளைஞர் என்பதால் என்னைப் பார்த்தவுடன் குனிந்து காலைத் தொட்டார் – இங்கே தன்னை விட மூத்தவர்களைப் பார்த்தால் இப்படியான மரியாதை செய்வது வழக்கம். எங்கே பார்த்தாலும், அது நட்ட நடு வீதியாக இருந்தாலும் காலைத் தொட்டு ஆசீர்வாதம் கேட்பது வழக்கம். அந்த வழக்கம் இன்றைக்கும் தொடர்கிறது! அவரைத் தொட்டு எழுப்பி பேசிக் கொண்டே நடந்தோம்.  அருகே இருக்கும் ஒரு பூங்காவில் அமர்ந்து பொதுவான விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம். அவராகவே என்ன பேச வேண்டும் என ஆரம்பிக்கட்டும் என காத்திருந்தேன்.  அவரும் ஆரம்பித்தார்.

“மனசே சரியில்லை. அப்பா என்னுடன் பேசுவதே இல்லை. அம்மாவும் எப்போது பேசினாலும் என் திருமணம் பற்றி தான் பேசுகிறார்கள். என்னிடம் தான் குறை என்பது போல சொல்வது கஷ்டமாக இருக்கிறது” என்று சொல்லிக் கொண்டிருந்தார். மேலும் சொல்லட்டும் என காத்திருந்தேன். திருமணம் என்று சந்தோஷமாகச் சொன்னாரே, இப்போது என்னவாயிற்று என்று யோசித்தபடியே சுரேந்தர் மேலும் பேசுவதற்குக் காத்திருந்தேன்.

“திருமணம் நிச்சயம் ஆனது என்ற சந்தோஷத்தில் உங்களுக்குத் தகவல் சொன்ன பிறகு, பெண் வீட்டிலும் எங்கள் வீட்டிலும் திருமண வேலைகளை நல்ல நாள் பார்த்து ஆரம்பித்தார்கள். பீஹாரிகள் திருமணத்தில் வரதட்சிணைக்குக் [dhதஹேஜ்] கொடுக்கும் முக்கியத்துவம் உங்களுக்குத் தான் தெரியுமே. இந்தத் திருமணத்திலும் அந்த விஷயங்கள் அடிக்கடி பேசிக் கொண்டிருந்தார்கள்.  எங்கள் வீட்டில் பேசுவது மாதிரியே, பெண்ணும் என்னிடம் பேசினார் – எங்கள் ஊர் வழக்கப்படி பெண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டிலிருந்து நகைகள் செய்து/வாங்கித் தருவோம். எவ்வளவு மதிப்பிற்கு நகை வாங்க வேண்டும் என்று முடிவு செய்து வைத்திருந்தேன். அந்தப் பெண் என்னை அலைபேசியில் அழைத்து, ”நான் என்ன நகை சொல்கிறேனோ அதைத் தான் நீங்கள் வாங்கித் தர வேண்டும்” என்று சொல்ல, எனக்குக் கொஞ்சம் தயக்கமாக இருந்தது – “நான் நினைத்த மதிப்பினை விட அதிகமாக  நகைகளைக் கேட்டுவிட்டால்?” அதனால் நான் எனக்குப் பிடித்ததை வாங்கித் தருகிறேன் – திருமணத்திற்குப் பிறகு உனக்குப் பிடிக்கவில்லை என்றால் உனக்குப் பிடித்தவாறு வாங்கிக் கொள்” என்று சொல்லி விட்டேன். அது இரண்டாம் பிரச்சனையாக வெடித்தது! முதல் பிரச்சனை?

முதல் பிரச்சனை அதற்கு முன்னரே ஆரம்பித்திருந்தது! உங்களுக்கே தெரியும். நான் வங்கிப் பணியில் இருப்பது! வங்கியில் வாடிக்கையாளர் சேவையில் இருக்கும்போது அலைபேசி அழைப்புகள் வந்தால் எடுத்துப் பேச முடிவதில்லை. பேசினால் வாடிக்கையாளர்களுடன் பிரச்சனை. பேசாவிட்டால் வரப் போகும் மனைவிக்குக் கோபம்! இரண்டு பக்கத்திலிருந்தும் கஷ்டம்.  அதுவும் அந்தப் பெண் பேச ஆரம்பித்தால் குறைந்தது முக்கால் மணி நேரம் பேசுகிறார்.  எனக்கு அவ்வளவு நேரம் பேச முடியாது. இரவு பகல் என எப்போதும் அலைபேசியில் அழைத்துக் கொண்டே இருக்கிறார் – திருமணத்திற்குப் பிறகு எவ்வளவு பேச வேண்டுமோ அவ்வளவு பேசலாமே! என்று சொல்லியே விட்டேன்! காலையில் ஏழரை மணிக்கு வீட்டை விட்டுப் புறப்பட்டால் 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வங்கிக் கிளைக்குச் சென்று வீடு திரும்ப இரவு எட்டு மணி ஆகிவிடுகிறது. இரவு வெகு நேரம் விழித்துப் பேசிக் கொண்டிருந்தால் அடுத்த நாள் வங்கியில் எப்படி வேலை பார்ப்பது?  Cash Handling இருக்கும் என்பதால் கொஞ்சம் தவறினாலும் நட்டம் தானே!

”கல்யாணத்திற்கு முன்னரே நீங்கள் என்னுடன் சரியாகப் பேசுவதில்லை என்றால், கல்யாணம் ஆன பிறகு எப்படிப் பேசுவீர்கள் என்று அடிக்கடி ஊடல். எவ்வளவோ முறை சமாதானம் செய்தாலும், இந்த முதல் பிரச்சனை அதிகரித்துக் கொண்டிருந்தது. பெண்ணின் பெற்றோரும் என்னிடம் “நீங்கள் எங்கள் பெண்ணிடம் பேசுவதில்லையாமே?” என்று கேள்வி கேட்டு அவர்களும் அலைபேசியில் தொல்லை தர ஆரம்பித்தார்கள். பெண்ணின் பெற்றோருக்கும் எங்கள் பெற்றோருக்கும் இடையில் சின்னச் சின்னதாய் வாக்குவாதங்கள்.  கடைசியில் அந்தப் பெண் “என் கூட ஒழுங்காக பேசுவதில்லை, என் இஷ்டத்திற்கு நகை வாங்க ஒத்துக் கொள்ளவில்லை என வரிசையாக புகார் பட்டியல் அளித்து, என்னைத் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று சொல்லி விட்டார். நிச்சயித்த திருமணம் தடைபட்டுப் போனது! எனக்கும் மனக் கஷ்டம். எங்கள் வீட்டினருக்கும் மனக் கஷ்டம். சரியான புரிந்து கொள்ளல் இல்லாமல் இப்படி ஆனதே என்று யாரிடமும் திருமணம் நின்றதைச் சொல்ல வில்லை.

என் வீட்டினர் இப்போதும் சில பெண்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சாதி [பீஹார் மாநிலத்தில் இந்த ஜாதிப் பாகுபாடுகள் ரொம்பவே அதிகம்], அந்தஸ்து, வேலை பார்க்கும் பெண் மருமகளாக வேண்டும் என்று அவர்கள் சொல்லும் எல்லா கட்டளைகளுக்குத் தகுந்த பெண் கிடைப்பது கடினமாகி விட்டது. எனக்குத் திருமணம் ஆகாதற்கு நான் மட்டுமே காரணம் என்று என்னையே கடிந்து கொள்கிறார்கள். நான் என்ன செய்வது என்று தெரியவில்லை” என்று தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.  அவருடைய மனக் கஷ்டங்களை யாரிடமாவது சொன்னாலாவது ஆறுதல் கிடைக்காதா என்ற எண்ணம் தான் இப்படி ஒரு சந்திப்பிற்கான தேவையாக இருந்திருக்கிறது.  திருமணமே செய்து கொள்ளாமல் இப்படியே இருந்து விடலாம் என்று தோன்றுகிறது என்று சொல்ல, ”நல்லதையே நினை சுரேந்தர். எல்லாம் நல்லபடியே நடக்கும்” என்று ஆறுதல் சொன்னேன்.  இரவு உணவை ஒரு உணவகத்தில் முடித்துக் கொண்டு அவர் இல்லம் திரும்ப, நானும் அவருடைய பிரச்சனைகளைச் சிந்தித்த படியே வீடு திரும்பினேன்.

அவரை ஆஸ்வாஸப்படுத்த, நீண்ட நேரம் பேச வேண்டியிருந்தது. பெற்றோரிடமும் மனம் விட்டுப் பேசச் சொல்லி இருக்கிறேன். விரைவில் நல்ல செய்தியோடு மீண்டும் அழைப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. பார்க்கலாம்! சுரேந்தருக்கு நல்ல மனைவி அமையட்டும்! நீங்களும் பிரார்த்தனை செய்யலாமே! இந்த விஷயங்களைப் பற்றி என் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தேன் – “திருமணம் ஆனவர்களில் பலர் ஏன் திருமணம் செய்து கொண்டோம் என்று புலம்பிக் கொண்டிருக்க, சுரேந்தரோ, திருமணம் ஆகவில்லையே என கஷ்டப்படுகிறார்” என்று சொல்ல, “ஏன் சொல்ல மாட்டீங்க! பதினேழு வருஷத்துக்கு அப்புறமும் இப்படிச் சொல்ல எப்படி மனசு வரும்?” என்று பிடித்துக் கொண்டார்! ”இப்படி வாயை விட்டு மாட்டணுமா? இத்தனை வருஷம் கழித்தும் உனக்கு ஒழுங்காப் பேசத் தெரியலையேடா…” என்று உள்மனது என்னைக் கடிந்து கொண்டது. ஹாஹா… எப்படிப் பேசணும்னு இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்!

இந்தப் பதிவு பற்றிய உங்கள் சிந்தனைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.  வேறு சில விஷயங்களோடு உங்களைச் சந்திக்கும் வரை…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

50 கருத்துகள்:

  1. நல்லதொரு வாசகம்.  குட்மார்னிங்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. பாவம் சுரேந்தர்...    சீக்கிரம் அவருக்கு நல்ல மனைவி வாய்க்கட்டும்.  சிலருக்கு அப்படி அஆகிவிடுகிறது.  ஒன்று நிச்சயதார்த்தான் ஆனால் உடனே திருமணம் முடிந்துவிடவேண்டும்.  அல்லது திருமணத்துக்குமுன் இருவரும் இதுபோல அலைபேசி,வாட்ஸாப் உரையாடல்கள் வைத்துக்கொள்ளக்கூடாது.  ஒருவகையில் சுரேந்தர் தப்பித்திருக்கிறார்.  இப்படி புரிதல் இல்லாத மனைவி வாய்க்காமல் போனதும் நல்லது என்று தேற்றிக்கொள்ளவேண்டியதுதான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    2. // அல்லது திருமணத்துக்குமுன் இருவரும் இதுபோல அலைபேசி,வாட்ஸாப் உரையாடல்கள் வைத்துக்கொள்ளக்கூடாது. //
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஸ்ரீராம் எந்த உலகத்தில் வாழ்கிறார்ர்ர்ர்:))

      நீக்கு
    3. நீங்கள் இருக்கும் இதே உலகத்தில் தான் அதிரா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    4. அதிரா....

      உள்ளதைச்சொல்றேனுங்க....!

      நீக்கு
    5. :))) உள்ளது உள்ளபடி...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. ஆஹா  வீட்டம்மாவிடம் மாட்டிக்கொண்டீர்களா?  அந்தப் பிரச்னையிலிருந்து எப்படி தப்பித்தீர்கள் என்பதுதான் அடுத்த பதிவாக இருக்குமோ?!!!   ஹா.. ஹா.. ஹா.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த பதிவு :) இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. சுரேந்தர் நிலையில் இன்று பல ஆண்கள். அந்தப் பெண்ணும் படித்து நல்ல வேலையில் இருப்பவள் தானே. இதெல்லாம் புரிந்து கொள்ளக்கூடிய பொது அறிவு கூடவா இல்லை? ஆனால் இந்தக்காலத்துப் பெண்கள் திருமணம் என்றால் கணவனிடமிருந்து நகை, புடைவைகள், பல்வேறுவிதமான உடைகள், சினிமா, ஓட்டல், ஊர் சுற்றல் என்றே நினைக்கிறார்கள். அத்தகைய பெண்கள் திருமணம் செய்து கொண்ட பின்னரும் மாறுவது ரொம்பக் கஷ்டம். அவங்களுக்காப் பட்டால் திருந்தலாம். சுரேந்தருக்கு நல்ல வாழ்க்கை அமையப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  5. இன்னமும் ஸ்ரீரங்கம் வரவில்லையா? புது தில்லி என்றே விலாசம் வருகிறதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருவரங்கம் தான். முன்னல் schedule செய்து வைத்தது. மாற்றவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
    2. ஏன் வெங்கட் இப்போ டெல்லியில் இல்லையோ? வேலை மாற்றம் பெற்றுக் கொண்டுவிட்டீங்களோ?

      நீக்கு
    3. விடுமுறையில் திருச்சி/திருவரங்கம் வந்திருக்கிறேன் அதிரா. சில நாட்கள் கழித்து தில்லி திரும்புவேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. //திருமணம் என்பது சரியான துணையைத் தேடிப் பிடிப்பதல்ல. கடைசி வரை சரியான துணையாக இருப்பதே.//
    நல்ல வாசகம்.

    சுரேந்தருக்கு நல்ல வாழ்க்கை துணை அமைய வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  7. வீட்டுக்கு வீடு வாசற்படி என்பது போல் எந்த திருமணத்தில் தான் பிரச்சினை இல்லை. ஆனாலும் சுரேந்திரன் பிரச்சினை வித்தியாசமாகத்தான் உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோசப் ஐயா.

      நீக்கு
  8. சுரேந்தருக்கு விரைவில் நல்லவிதமாக திருமணம் நிகழ பிரார்த்தனைகள்.

    இதில் இந்தப்பெண்ணை சுரேந்தர் திருமணம் செய்யாதது நன்மை என்றே சொல்வேன். இவளொரு சூழ்நிலையே புரிந்து கொள்ளாதவளாக இருக்கிறாள்.

    நாளை இவள் எதற்கெடுத்தாலும் விவாஹரத்து கேட்பாள். சமீபத்தில் டிக்டாக்கிலேயே பொழுதை கடத்திய மனைவியை கண்டித்ததற்கு விவாஹரத்து கேட்டு இருக்கிறாள் ஒருத்தி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோதிஜி.

      நீக்கு
  10. //திருமணம் என்பது சரியான துணையைத் தேடிப் பிடிப்பதல்ல. கடைசி வரை சரியான துணையாக இருப்பதே.
    //
    உண்மை...

    சுரேந்தர் கதை மனதுகு கவலையைக் கொடுக்கிறது, இதில் ஒன்றும் பெரிய பிரச்சனை இருப்பதாக தெரியவில்லை, இவரில்தான் நானும் கொஞ்சம் குறை சொல்வேன் இவ் விசயத்தில்.. அஜஸ்ட் பண்ணிப்போகும் தன்மை இவருக்கு குறைவுபோல தோணுது அத்தோடு பயந்த சுபாவம் கொண்டவராக இருப்பார் போலும்...

    பொதுவாக திருமணம் நிட்சயிக்கப்பட்டு விட்டால், இருவருமே மணிக்கணக்காகப் பேசுவதைத்தானே விரும்புவார்கள், இவர் நேரம் சொல்லி வச்சுப் பேசியிருக்கலாம்.. நகை விசயம்கூட, ஓபினாகப் பேசியிருக்கலாம், என்னுடைய பஜட் இது, இதுக்குள் நீ சொல்லும் நகைகளை வாங்கித்தாறேன் என... சரி முடிந்தது முடிந்ததுதானே.. விதி இருப்பின் அப் பெண்ணே கூட திரும்ப வரக்கூடும்.

    அவருக்கு நல்ல பெண் கிடைக்க என் பிரார்த்தனைகள். ஆனா பெற்றோர் கண்டிஷன் போடுவதுதான் தப்பாகத் தோணுது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இவரில்தான் நானும் கொஞ்சம் குறை சொல்வேன்// - கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். (ஆனா திருமணத்துக்கு முந்தி, பெண்கள், இவன் எப்படிப்பட்டவன் என்று தெரிஞ்சுக்க கொஞ்சம் அதிகமாத்தான் பேசிப் பார்ப்பாங்க. நாமதான் ஜாக்கிரதையா 'நல்லவன்' போல 'நல்லதனமா' பேசி, அப்புறம் திருமணம் முடிஞ்சதும் நம்முடைய உண்மையான குணத்தைக் காண்பிக்கணும். ஹா ஹா (இல்லைனா எப்படி திருமணம் நடக்கும்)

      நீக்கு
    2. இந்தக் கதையில எல்லா ஆண்களும் ஆணுக்கே சப்போர்ட் பண்ணுறீங்க.. கர்ர்ர்:)) எனக்கென்னமோ அவர் அஜஸ்ட் பண்ணி நடக்க மாட்டார் என்றே தோணுது:)).. அதாவது கோடு போட்டு வாழ்பவர்கள்போல:)) ஹையோ நெ தமிழன் ஏன் இப்போ ஓடுறார்:) ஹா ஹா ஹா:)..

      நீக்கு
    3. அது எப்படி வங்கிப்பணியில் இருப்பவர் மணிக்கணக்காக அலுவலக நேரத்தில் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணுடன் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? வங்கி வேலை என்பது எவ்வளவு பொறுப்பானது என்பதே தெரியாத அந்தப் பெண்ணை சுரேந்தர் திருமணம் செய்து கொள்ளாததே நல்லது . இந்த விஷயத்தில் பெற்றோரும் குற்றவாளிகளே! பெண்ணுக்குப் பொறுப்பில்லாமல் இருப்பதை எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள்? புரியவில்லை.

      நீக்கு
    4. விட்டுக் கொடுத்தல்... இருவரிடமும் தேவை தான் அதிரா. ஒருவர் மட்டும் விட்டுக்கொடுக்க வேண்டும் எனும்போது பிரச்சனை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    5. நல்லதனமா பேசி.... :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
    6. எனக்குத் தெரிந்த வரை நிறைய அட்ஜஸ்ட் செய்ய தயாரகத் தான் இருக்கிறார் சுரேந்தர். தான் சொல்லும்படி மட்டுமே இருக்க வேண்டும் என அந்தப் பெண் நினைக்கிறார் அதிரா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    7. வேலை நேரத்தில் பேசுவது- அதுவும் வங்கி வேலையில் பேசுவது கடினம். புரிதல் அவசியம் தான் கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. எல்லாம் நன்மைக்கே என்றுதான் எடுத்துக்கணும். திருமணத்துக்கு முன்னாலேயே 'புரிதலின்மை' தெரிந்தது நல்லதுதானே.

    ஆனா ஒண்ணு சொல்லணும். இந்தப் பெண்கள் திருமணம் ஆனபிறகு கணவனுடன் ரொம்ப நேரம் பேச ஆசைப்படுவார்கள்/பேசுவார்கள். அப்புறம் குழந்தை பிறந்ததும், கணவன் மனைவியோடு பேச ஆசைப்படுவான்...ஆசைப்படுவான்.... ஆசைப்பட்டுக்கிட்டே இருக்க வேண்டியதுதான். அவங்க குழந்தையோட ரொம்ப பிஸியாயிடுவாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா கர்ர் அப்படி இல்லை, இவருக்கேத்த துணை அப்பெண் இல்லை:)).. ஏனெனில் இவரைப்போல, பெரிதாக நேரம் ஒதுக்கிக் கதைக்காமல் தானும் தன் வேலையும் என இருக்கும் சில பெண்களும் இருக்கிறார்கள்.. அப்படியானவர்கள் இவருக்குப் பொருந்தக் கூடும்... நம்மைப்போல அலட்டல் பேர்வழிகள் எல்லாம்:).. விட்டிட்டே ஓடிடுவோம் ஹா ஹா ஹா:))

      நீக்கு
    2. எல்லாம் நன்மைக்கே - உண்மை தான் நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    3. யாருக்கு யார் அமைய வேண்டுமோ? காலம் பதில் சொல்லும் அதிரா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. //அது நட்ட நடு வீதியாக இருந்தாலும் காலைத் தொட்டு ஆசீர்வாதம் கேட்பது வழக்கம்.// - இதை நான் துபாயில்தான் பார்த்தேன். என் நண்பனின் அம்மா அங்கு வந்திருந்தபோது, துபாய் ரோட்டில் பார்த்த நண்பனோடு வேலை செய்யும் சிந்திக்கள், அவன் அம்மாவின் காலைத் தொட்டு வணங்குவதை. எப்படிப்பட்ட கலாச்சாரம்... ரொம்பவும் வியந்தேன். நாம (தென்னிந்தியர்கள்) இதெல்லாம் வீட்டுக்குள்ளதான் வச்சிக்குவோம்..வெளியில் வந்தால் கொஞ்சம் மிதப்பா இருந்துடுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டுக்குள்ளும் பெரியவர்களை வணங்கும் வழக்கம் கிடையாது! அரிதாகவே வணங்குவார்கள்.

      நீக்கு
    2. நான் தில்லி சென்றபின் தான் இந்தப் பழக்கம் பற்றி தெரிந்து கொண்டேன். நல்ல பழக்கம் நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    3. பல பழக்கங்களை மறந்து வருகிறோம்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  13. 'மே' என்பதற்கு பதில் 'ஹம்'

    எவ்வளவு நல்ல பழக்கம்!

    'யாதும் ஊரே; யாவரும் கேளிர்' -- அரசியல் மேடைகளுக்கே என்றாகி விட்டது. ஹூம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசியல் எல்லாவற்றிலும்.... உண்மை ஜீவி ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. கதை போல அழகாக எழுதியிருக்கிறீர்கள்..
    கதையாகவே எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது என்றாலும் கட்டுரைகள் அமைப்பில் எழுதுவதில் நீங்கள் திறமைசாலி என்பதலால் இதுவும் நன்றாகத் தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி ஜீவி ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. நாம் ஊரில் ஒரு மாதிரிப் பிரச்சினை. எல்லோரும் படித்து விட்டார்கள் எல்லாப் பெண்களுக்கும் சந்தேகம் இயல்பாக இருக்கிறது எங்கள் பெரியவனுக்கு எல்லாம் கூடி வரும் போது அந்த பெண் ஈமெயிலில் சத்தாய்க்க ஆரம்பித்ததும் அவன் துபாயிலிருந்து வரவில்லை என்று மறுத்துவிட்டான். நின்று போனது.
    இன்னோறு பெண் தனக்கு முதுகுவலி இருப்பதால் குழந்தைகள் பெற பயம் என்று சொல்லிக் கெடுத்துக் கொண்டார்.

    இந்த சுரேந்தர் ரொம்பப் பாவம். வேலை நேரத்தில் இவ்வளவு தொந்தரவு செய்தால்
    என்னதான் செய்வார்.

    கீதா சொல்வது போல நிலைமை மிக மாறி விட்டது.

    ஸ்ரீரங்கத்தில் இருக்கிறீர்களா. பலே பலே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் வல்லிம்மா... இரண்டு வாரம் திருவரங்கத்தில்...

      வேலை நேரத்தில் தொந்தரவு என்றால் கஷ்டம் தான்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  16. தன் மனதில் இருப்பதை யாரிடமாவது கொட்டும், அதனால் எந்த பின் விளைவும் வராது , நல்லது மட்டுமே நடக்கும் என்ற நம்பிக்கையுடன் உங்களிடம் சொல்லியிருக்கிறார். அந்த நம்பிக்கையை அளித்த நீங்கள் பாராட்டுக்குரியவர். அப்படி ஒருவர் கிடைத்த சுரேந்தர் அதிர்ஷ்டசாலி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி Bபந்து ஜி.

      நீக்கு
  17. சுரேந்தரை புரிந்து கொள்ளும் பெண்ணாக அமையட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது தான் அவரின் விருப்பமும் மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....