திங்கள், 16 செப்டம்பர், 2019

கடைசி கிராமம் – கடைசி கிராமத்தில் ஓர் இரவு – இரவு உணவு



அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

நீங்கள் தினமும் காலையில் எழும்போது அன்று இரவு தன்னிறைவோடு உறங்க வேண்டும் என்ற உறுதியோடு எழ வேண்டும் – ஜார்ஜ் லோரிமர்.



கடைசி கிராமம் என்ற தலைப்பில் இதுவரை வெளிவந்த பதிவுகளின் சுட்டிகள் கீழே:














இந்திய திபெத் எல்லை கிராமமான chசித்குல் பகுதியில், எல்லைக்கு முன்னர் இருக்கும் Check Post வரை நடந்து சென்று அங்கே இருந்த தங்குமிடம் ஒன்றில் Bபாஸ்pபா ஆற்றின் கரை அருகே சில நிமிடங்கள் அமர்ந்து இயற்கை அழகை ரசித்த பிறகு எங்கள் தங்குமிடம் திரும்பினோம். திரும்பியதும் நேரே அறைக்குச் சென்று விடாமல் கீழே அமர்ந்து எதிரே தெரியும் மலைகளையும் கிராமத்தினர்களின் அன்றாட வாழ்க்கை முறையையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தோம். தங்குமிடத்தின் உரிமையாளரை அழைத்து தேநீர் கிடைக்குமா எனக் கேட்க, ஒரு பணியாளரை அழைத்து தேநீர் தயாரிக்கச் சொன்னார். அவர் நடந்து செல்லும் விதம் பார்த்தபோதே இன்றைக்கு தேநீர் நன்றாக இல்லாமல் ஏனோ தானோ என்று தான் இருக்கப் போகிறது என்று தோன்றியது – நடையில் அத்தனை வளைவு நெளிவுகள் – நல்ல போதையில் இருந்தார் அந்தப் பணியாளர்.


மலைப்பகுதி, மாலை நேரக் குளிர் என பலவிதமான காரணங்களால், இந்தப் பகுதி மக்கள் – குறிப்பாக ஆண்கள் மாலை நேரத்தில் கொஞ்சமாக மது அருந்துவது வழக்கம் தான் – உத்திராகண்ட் ஆண்கள் இந்த மது விஷயத்தில் எந்தப் போட்டி வைத்தாலும் ஜெயிக்க முடியும் – “எவ்வளவு அடிச்சாலும் ஸ்டடியா நிற்பேன்” என்று சொல்லி அப்படி நின்றும் காட்டுவார்கள்! ஹிமாச்சலப் பிரதேச மக்களும் அப்படியே! தங்குமிட உரிமையாளரிடம், ”பணியாளர் போதையில் இருக்கிறார் போலும், தேநீர் வந்து சேருமா?” என்று கேட்க, புன்னகை புரிந்தபடியே, இன்று விடுமுறை அல்லவா? அதனால் கொஞ்சமாக மது சாப்பிட்டு இருக்கிறார். நான் கூட இரண்டு பெக் அடித்து இருக்கிறேன் என்று பக்கத்தில் வந்து சொல்ல, மதுவின் வீச்சம்! ஹாஹா… பரவாயில்லை, தேநீர் வரட்டும் பார்க்கலாம் எனக் காத்திருந்தோம். காத்திருந்த வேளையில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.


தேநீர் வந்தது – நினைத்தபடியே அவ்வளவு சுவை இல்லை – மதியம் “ஹிந்துஸ்தான் கா ஆக்ரி டாபா”வில் சுவைத்த தேநீர் பிரமாதமாக இருந்தது. மதியம் தங்குமிடம் வந்து சேர்ந்தபோது இரவு உணவை தங்குமிடத்தில் சாப்பிடலாம் என நினைத்திருந்தோம் – அந்த முடிவை மாற்றிக் கொள்ள வைத்தது தேநீர் சுவை! உரிமையாளரிடம் எங்களுக்கு இரவு உணவு வேண்டாம் என்று சொல்லி விட்டோம்.  சிறிது நேரம் கீழே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். பின்னர் எங்களது அறைக்குச் சென்று கொஞ்சம் ஓய்வு. மிகவும் சிறிய கிராமம் என்பதால் விரைவிலேயே ஊர் மக்கள் அனைவரும் உறங்கி விடுவார்கள். அன்றைய நாளின் அலுப்பினைப் போக்க சூடான நீரில் ஒரு குளியல் போட்டோம். ஏழரை மணிக்கு மேல் தயாராகி இரவு உணவுக்காக அறையைப் பூட்டிக் கொண்டு கீழே வந்தோம். நேரே சென்றது “ஹிந்துஸ்தான் கா ஆக்ரி டாபா”.  ஆனால் எங்கள் துரதிர்ஷ்டம் அந்த உணவகம் பூட்டி இருந்தது! சீக்கிரமாகவே மூடிவிடுவார்களாம் – அருகே சென்ற உள்ளூர்வாசியைக் கேட்டதில் தெரிந்து கொண்டோம்.  


இது போன்ற சின்ன கிராமங்களில் இருக்கும் உணவகங்களும் குறைவு – அது தவிர இருக்கின்ற உணவகத்திலும் அதிக அளவில் உணவுப் பொருட்களைத் தயார் செய்து வைத்துக் கொள்ள மாட்டார்கள். எத்தனை செலவாகும் என்பதற்குத் தகுந்தவாறு தானே சமைக்க முடியும். ஊரே அமைதியாக இருக்க, எங்கே உணவகம் திறந்திருக்கும் என்று பார்த்தபடி நடந்தோம். ஒரே ஒரு உணவகம் மட்டும் திறந்திருந்தது. அங்கே என்ன கிடைக்கும் என்று கேட்க, அங்கே இருந்த பெண்மணி, “நூடுல்ஸ், ப்ரெட் டோஸ்ட், ப்ரெட் ஆம்லெட் மற்றும் மோமோஸ்” இது மட்டும் தான் இப்போதைக்கு இருக்கிறது! அதுவும் கொஞ்சமாகவே இருக்கிறது என்று சொல்லி விட்டார். சரி என நூடுல்ஸ், ப்ரெட் ஆம்லெட், ப்ரெட் டோஸ்ட் மற்றும் மோமோஸ் ஆகிய அனைத்தையும் சொன்னோம். நாங்கள் அங்கே இருக்கும்போதே ப்ரஷாந்த் மற்றும் மைக்கேலும் வந்து சேர்ந்து கொண்டார்கள்.


எனக்கு வெஜ் நூடுல்ஸ், ப்ரெட் டோஸ்ட்! இரண்டு மோமோஸ்! கூடவே ப்ளாக் டீ! மற்றவர்கள் ப்ரெட் ஆம்லெட்டும் பகிர்ந்து கொண்டார்கள். அனைத்திலும் கொஞ்சம் கொஞ்சம் அனைவருக்கும் கிடைத்தது. நாங்கள் அங்கே அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தபோது சரியாக மின்சாரத் தடை! அலைபேசில் இருக்கும் டார்ச் லைட்டை அனைவரும் ஒளிர விட்டோம். அந்த ஒளியில் எங்களது இரவு உணவு – கேண்டில் லைட் டின்னர் போல இது மொபைல் லைட் டின்னர்! அந்த இரவு நேரத்தில், அன்றைய பொழுதின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டபடியே சாப்பிட்டு முடித்தோம். அதன் பிறகு தான் மின்சாரம் திரும்பியது! நாங்கள் அங்கே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது ஒரு தம்பதி அங்கே உள்ளே நுழைந்தார்கள். அவர்களுக்குக் கிடைத்தது ப்ரெட் ஆம்லேட் மட்டுமே! கூட குளிர்பானம்! நல்லவேளை அதாவது கிடைத்ததே!


நாங்கள் அமர்ந்து பேசுவது கேட்டு, அவர்களும் எங்களுடன் பேச ஆரம்பித்தார்கள். மும்பையிலிருந்து இங்கே வந்திருக்கிறார்களாம். என்ன இடம் இது? இவ்வளவு சிறிய கிராமமாக இருக்கிறதே, இங்கே சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள் – குறிப்பாக பொழுதுபோக்கு வசதிகள் ஒன்றுமே இல்லையே? ஒரு Pub இல்லை, பாரா க்ளைடிங், பவுலிங்க், என எதுவுமே இல்லை? குறைந்த பட்சமாக தங்குமிடத்தில் டிஜே கூட இல்லை! எப்படி பொழுது போக்குவது? நாளைக்கு முதல் வேலையாக இங்கே இருந்து புறப்பட வேண்டும். இரண்டு நாட்கள் தங்கலாம் என திட்டமிட்டதை மாற்றியே ஆக வேண்டும் என்று இருவருமாகச் சேர்ந்து புலம்பினார்கள். ப்ளான் ஏ விலிருந்து ப்ளான் பி என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஹிமாச்சலப் பிரதேசம் முழுவதிலும் இப்படியான அமைதியான சூழல் உள்ள இடங்கள் உண்டு. ஷிம்லா, மணாலி போன்ற இடங்களில் மும்பைக் காரர்கள் கேட்கும் வசதிகள் நிறைய உண்டு!


நானும் நண்பர்களும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டோம். பெரும்பாலான சுற்றுலாவாசிகளுக்கு இந்த மாதிரி கும்பலும், விளையாட்டுகளும், பொழுதுபோக்கு அம்சங்களுமே தேவையாக இருக்கிறது – எங்களைப் போலச் சிலருக்கு இயற்கை, அமைதி, மலை, நதி என்று பார்க்கப் பார்க்க ஆனந்தமாக இருந்தது! அவரவர் விருப்பங்கள் மாறுபட்டவை தானே! அவர்களும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்த பிறகு தங்குமிடம் திரும்பினார்கள். நாங்களும் எங்கள் உணவுக்கான தொகையைக் கொடுத்துவிட்டு – அதிலும் அந்த கடைப் பெண்மணியின் கணவருக்கு பயங்கர குழப்பம் – கணக்கே வரவில்லை – நாங்கள் சாப்பிட்ட சிலவற்றுக்குக் காசே கேட்கவில்லை – நாங்களாகச் சொல்லி எவ்வளவு தொகை ஆனதோ, அதைக் கொடுத்தோம் – ”ஏம்பா, கணக்குல இவ்வளவு வீக்கா இருந்தா, கடை எப்படி லாபத்துல ஓடும்?” என்று கேட்க, உங்களை மாதிரி நல்லவர்கள் இருக்க எங்களுக்குக் கவலையில்லை என்கிறார் சிரித்தபடியே!



நாளை காலை சந்திப்போம் என்று ப்ரஷாந்த் மற்றும் மைக்கேலுக்குச் சொல்லி தங்குமிடம் சேர்ந்து அன்றைய கணக்குகளைப் பார்த்து, அலைபேசியில் சேமித்த பிறகு, அலைபேசி, காமிரா பேட்டரி போன்றவற்றை Charge செய்ய வைத்துவிட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். படுத்தபடியே பேசிக் கொண்டிருந்த சில நிமிடங்களில் உறக்கம் – ஆனால் பக்கத்து அறைக்கு வந்து சேர்ந்த பெங்காலிகள் சிலர் தங்குமிட பணியாளர்களிடம் தகராறு செய்து கொண்டிருந்தார்கள் – உணவு சரியில்லை – அதனால் அதற்கான தொகையைத் தர மாட்டோம் – உரிமையாளரைக் கூப்பிடு என சப்தம் வந்தவண்ணம் இருந்தது! உரிமையாளர், பணியாளர் என அனைவருமே மதுமயக்கத்தில் இருக்க, எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் காலையில் பார்த்துக் கொள்ளலாம் எனச் சொல்லி அந்தப் பணியாளர் விலகி விட்டார். அதற்குப் பிறகும் பெங்காலிகள் கத்திக் கொண்டிருந்தார்கள் – அதாவது பேசிக் கொண்டிருந்தார்கள் – அவர்கள் பேசுவதே அப்படித்தான் இருக்கும்!




அவர்களது பேச்சையும் மீறி நாங்கள் உறங்க ஆரம்பித்தோம். அடுத்த நாள் எங்களுக்கு எந்த வித அனுபவங்களைத் தந்தது என்பதை வரும் பகுதியில் சொல்கிறேன். இன்றைக்கு பதிவில் சொன்ன விஷயங்களைப் பற்றிய உங்கள் சிந்தனைகளையும் எண்ணங்களையும் பின்னூட்டம் வழியாக பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி. நாளை வேறு ஒரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

26 கருத்துகள்:

  1. தன்னிறைவான உறக்கம்...

    கிடைக்குமா?

    குட்மார்னிங்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

      தன்னிறைவான உறக்கம் கிடைக்கட்டும்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. நல்லஅனுபவங்கள்.   கேளிக்கைகளை எதிர்பார்த்து இதுமாதிரி இடங்களுக்கு வருவார்களா?!!  நீங்கள் சொல்லி இருப்பது போல அவரவர் விருப்பம்! உணவுக்கான அலைச்சல்..  நல்லவேளை அந்தக் கடையாவது திறந்திருந்தது...  அதுவும் சரியான நேரத்துக்கு சென்று விட்டீர்கள் என்றும் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த இடத்திற்கு வருவதற்கு முன்பே திட்டமிட்டு இருந்தால் ஏமாற்றம் தவிர்த்து இருக்கலாம் ஸ்ரீராம்.

      ஆமாம். சரியான நேரத்தில் சென்று விட்டோம். இல்லை எனில் தண்ணீர் குடித்துவிட்டு படுத்திருப்போம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  4. அமைதியை தேடி செல்பவர்களுக்கு அது கிடைக்கும் இடம் சொர்க்கமாகத் தெரியும். பெரு நகர சுற்றுலா பயணிகளுக்கு அது நரகமாக தெரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோசப் ஐயா.

      நீக்கு
  5. //நடையில் அத்தனை வளைவு நெளிவுகள் நல்ல போதையில் இருந்தார் அந்தப் பணியாளர்//

    ஹா.. ஹா.. எங்கும் இப்பிரச்சனைதானா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மது இல்லாத இடம் ஏது? சில் மாநிலங்களில் மட்டுமே மதுவுக்குத் தடா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  6. இது போன்ற இடங்களில் அமைதி தானாக மனதில் சூழும். அருமையான படங்கள். சுவாரஸ்யமான அனுபவங்கள். தொடரவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  7. குளிர் பிரதேசங்களில் பனிபடலம் இருப்பதால் மாலை விரைவில் இருட்டு வந்துவிடும் நாள்முழுவதும் உழைக்கும் மக்கள் விரைவில் தூங்க செல்வதும் அதனால்தான் போலும்.
    உணவு கிடைத்ததே பெரிய விசயம்.

    அடுத்து காத்திருக்கிறோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  8. பொதுவாக மக்களுக்குச் சத்தமும், சந்தடியுமே பிடிக்கிறது. ஸ்ரீரங்கத்திற்கு நாங்கள் குடித்தனம் வந்ததைக் கேலி செய்யாத உறவினர் இல்லை. சென்னையை விட்டுவிட்டு அங்கே கிராமத்திற்கு வந்திருக்காங்க என! ஆனால் அங்கே உள்ள வசதி மற்ற இடங்களில் நிச்சயமாக இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சத்தமும் சந்தடியுமே பிடிக்கிறது - உண்மை தான் கீதாம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. படிக்கும்போதே இத்தகைய இடங்களுக்கு வந்து பத்து நாட்களாவது தங்கும் எண்ணம் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சற்று கடினமான பயணம். இல்லை என்றால் உங்களைப் போன்றவர்களும் சென்று வரலாம்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  10. நல்ல அனுபவ சுற்றுலா, படங்கள் அழகு... தலைப்புத்தான் இன்னும் புரியவில்லை:)... கடைசிக் கிராமம்?....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் தொடரின் பகுதிகள் அனைத்தும் படிக்கவில்லை என்று தெரிகிறது. முதலிலேயே கடைசி கிராமம் என்பதற்கு விளக்கம் சொல்லி இருக்கிறேன் - இந்திய திபெத் எல்லையில் உள்ள கடைசி கிராமம் தான் chசித்குல். அங்கே வரை சென்றதால் இத்தொடரின் பெயராக கடைசி கிராமம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  11. அன்பு வெங்கட்,
    உங்கள் இருவரது அனுசரிப்பு மிக இனிமை.
    கிடைத்ததைக் கொண்டு முனிவர்கள் போல
    நடந்து கொண்டிருக்கிறீர்கள்.

    படங்கள் அத்தனையும் அதீத அமைதியைப் பிரதி பலிக்கின்றன.
    இங்க மன்சாந்திக்கு மட்டுமே வரவேண்டும். உல்லாசம் தேடி வரக்கூடாது.

    //அதற்குப் பிறகும் பெங்காலிகள் கத்திக் கொண்டிருந்தார்கள் – அதாவது பேசிக் கொண்டிருந்தார்கள் – அவர்கள் பேசுவதே அப்படித்தான் இருக்கும்!//
    ஆஹாஹா.
    கீ போல்சே என்று நீங்களும் கேட்டிருக்கலாம்.
    மராத்திய கொங்கணியர்கள் கூட பேசுவது சண்டை போடுவது
    போலத்தான் இருக்கும்.
    வீர பரம்பரைகள் ஆயிற்றே.

    நல்ல தொடர். சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் வல்லிம்மா... சிலருக்கு மெதுவாகப் பேசத் தெரியாது. சாதாரணமாக பேசினாலே சண்டை போடுவது போலதான் இருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. //மராத்திய கொங்கணியர்கள் கூட பேசுவது சண்டை போடுவது
      போலத்தான் இருக்கும்.
      வீர பரம்பரைகள் ஆயிற்றே.//
      இவங்களோட மதுரைக்காரங்களும் அடக்கம். அவங்களை விட்டுட்டீங்களே? இங்கே திருச்சியில் மதுரைக்காரங்க என்றால் மெதுவாகப் பேசத் தெரியாது என்பார்கள். ஆனால் பேசுவதை சரியாகப் புரிஞ்சுப்பாங்க. மற்ற மாவட்டங்களில் அப்படிப் புரிஞ்சுக்கறதில்லை. எங்க வீட்டிலேயும் சத்தமான பேச்சுத் தான். எனக்குப் புக்ககம் வந்து கூட சில காலம் சத்தமாகத் தான் பேசிக் கொண்டிருந்தேன். அவங்க புரிஞ்சுக்கறது சரியில்லைனு தெரிஞ்சதும் மெல்ல மெல்லக் குறைந்து போனது.

      நீக்கு
    3. ஹாஹா.... ஹரியானாவைச் சேர்ந்தவர்களும் பேசுவதைக் கேட்டால் சண்டைக்கு வருவது போலத்தான் இருக்கும் கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. அருமையான அனுபவங்கள் ...ஒவ்வொரு பயணத்திலும் ஒவ்வொரு வித அனுபவம் ....

    உங்களை மாதிரி நல்லவர்கள் இருக்க எங்களுக்குக் கவலையில்லை என்கிறார் சிரித்தபடியே!...உண்மை உண்மை .....


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணங்கள் நல்ல பல அனுபவங்களை நமக்குத் தருபவை தான் அனுப்ரேம் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....