வெள்ளி, 20 செப்டம்பர், 2019

கடைசி கிராமம் – தில்லிவாசிகள் திருடர்கள் – நீங்க எந்த ஊர்


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்து தான் பிறக்கின்றன - நபிகள் நாயகம்.



கடைசி கிராமம் என்ற தலைப்பில் இதுவரை வெளிவந்த பதிவுகளின் சுட்டிகள் கீழே:













chசித்குல் கிராமத்தில் உள்ள புத்தமத வழிபாட்டுத் தலத்தினைப் பார்க்கலாம் என கிராமத்தினுள் சென்ற போது அந்த வழிபாட்டுத் தலம் புதுப்பிக்கப்பட்டு வருவதை மட்டுமே பார்க்கமுடிந்தது. அந்த ஊரின் வழக்கம் போலவே, இந்த வழிபாட்டுத் தலமும் பெரும்பாலும் மரத்தினால் தான் அமைக்கிறார்கள். தேவதாரு மரத்தினைக் கொண்டு தான் இந்த கட்டிடங்கள் அமைக்கிறார்கள். பல வருடங்கள் ஆனாலும் ஸ்திரமாக இருக்கக் கூடியவகையில் தான் அமைக்கிறார்கள். அந்த இடத்திற்கு நாங்கள் சென்றபோது இரண்டு முதியவர்கள் அங்கே அமர்ந்து கட்டிடப் பணியை மேற்பார்வை செய்து கொண்டிருந்தார்கள். அவர்களிடம் நின்று பேச்சுக் கொடுத்தோம்.  கிராமத்தில் என்ன வசதிகள் இருக்கிறது, பள்ளிக்கூடம், ஆரம்ப சுகாதார நிலையம், காவல் நிலையம் போன்றவை இருக்கிறதா? வாழ்க்கை முறை என்ன? கிராமத்தில் எத்தனை வீடுகள் இருக்கும்? என்று பொதுவாக விசாரிப்பு இருக்கும்.



இந்த மாதிரி கிராமத்தின் மக்களிடம் பேசும்போது அவர்களுக்கும் ஒரு வித மகிழ்ச்சி, நமக்கும் சில தகவல்கள் கிடைக்கும். கிராமத்தில் பள்ளிக்கூடம் இருக்கிறது, ஆரம்ப சுகாதார நிலையமும் உண்டு, காவல் நிலையம் இல்லை – அதற்கான அவசியமும் இல்லை என்று சொன்னார் ஒரு பெரியவர்.  சுமார் 125 குடும்பங்கள் இங்கே வசிக்கிறார்கள். பெரும்பாலும் அமைதி விரும்பிகள் தான் இங்கே. எங்களுக்குள் பிரச்சனைகள் வருவதில்லை. வந்தாலும் முதியவர்கள் சேர்ந்து, பார்த்து, பிரச்சனைகளைத் தீர்த்து வைத்து விடுவோம்.  பிரச்சனை என்று வந்தால் வெளியூரிலிருந்து வரும் சுற்றுலாவாசிகள் மூலம் தான் வர வாய்ப்பு இருக்கிறது. அதையும் சமாளித்து விடலாம் என்று ஒரு முதியவர் சாத்வீகமாகச் சொல்ல, மற்றவர் சற்றே வேகமாகச் சொன்னார் – ரொம்ப பிரச்சனை செய்தால், நாலு தட்டு தட்டி, மலைமீதிலிருந்து உருட்டி விட்டால் ஆச்சு – நேரே ஆற்றில் விழவேண்டியது தான்!  சொல்வது சற்றே அதீத உணர்ச்சியுடன் இருந்தாலும், இது வரை அப்படிச் செய்ததில்லை என்றும் சொன்னார் அந்த முதியவர்.


பொதுவாக சுற்றுலாவாசிகள் பிரச்சனை இருப்பதில்லை. தில்லிவாசிகள் சிலர் வரும்போது பிரச்சனை வருவதுண்டு – பெரும்பாலானா தில்லிவாசிகள் திருடர்கள், சோம்பேறிகள் – இங்கே வந்து அமைதியைக் குலைக்கும்படிச் செய்து விடுகிறார்கள் என்று சொல்லி விட்டு, எங்களைப் பார்த்து, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் எனக் கேட்டார்கள்! நான் சிரித்தபடியே, நான் தில்லியிலிருந்தும் நண்பர் கேரளத்திலிருந்தும் வருகிறார்.  நான் தில்லியில் இருந்தாலும் தமிழகத்தைச் சேர்ந்தவன்” என்று சொல்ல, “அடடா? உங்களிடம் நான் தில்லிவாசிகள் திருடர்கள் என்று சொல்லி இருக்கக் கூடாதோ?” என்று வருத்தப்பட்டார்.  பரவாயில்லை – நீங்கள் பொதுவாகச் சொல்வதில் தவறில்லை. நான் அப்படியானவன் இல்லை என்று எனக்குத் தெரியுமே என்று சொல்ல, அவர் மீண்டும் வருந்தினார்.


அவரிடம் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். ”உங்களுடன் நிழற்படம் எடுத்துக் கொள்ளலாமா?” எனக் கேட்க, தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல, சில படங்கள் எடுத்துக் கொண்டோம். அவர்களைத் தனியாகவும், நானும், நண்பரும் சேர்ந்தும் சில படங்கள். அவர்கள் எங்கே பணி செய்தார்கள் எனக் கேட்க, ஒருவர் மட்டும் ராணுவத்தில் பணி புரிந்ததாகச் சொல்லி அவர் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் – தில்லி உட்பட - பயணித்திருப்பதைச் சொன்னார் – கூடவே தனது அதிகாரியாக இருந்தவர்களில் தமிழரும், மலையாளியும் உண்டு என்று சொல்லி, மிகவும் நல்லவர்கள் என பாராட்டவும் செய்தார். சில நிமிடங்கள் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்ததில் அவர்களுக்கும் மகிழ்ச்சி, எங்களுக்கும் சில தகவல்கள் கிடைத்தன.  அவர்கள் இருவருக்கும் நன்றி சொல்லி அங்கிருந்து புறப்பட்டோம்.


வழியில் இன்னுமொரு பெரியவர் – இந்த மலைப்பகுதிகளில் கிடைக்கும் ஒரு அமைப்பில் வென்னீர் வைத்துக் கொண்டிருந்தார் – இந்த அமைப்பிற்குப் பெயர் ”ஹமாம்” – முன்பு தரம்ஷாலா சென்று வந்ததைப் பற்றி எழுதிய தொடரிலும் இதைப் பற்றிச் சொல்லி இருக்கிறேன். ஒரு சிறு Drum போன்ற அமைப்பு. கீழே நெருப்பு பற்ற வைக்கும் வசதி – அமைப்பின் உள்ளே கரி இருக்க அவை நன்கு சூடான பிறகு மேலே இருக்கும் புனல் வழியே நீரை விட்டால் அது உள்ளே சுழன்று பக்கவாட்டில் இருக்கும் குழாய் வழியே வெளிவரும் போது நன்கு சூடாக வரும்! இந்த அமைப்பில் தண்ணீர் கொதிக்க வைக்க வேண்டியதில்லை. முன் வேலையாக கரி சூடாக்கினால் போதும் – தண்ணீர் புனல் வழி விட விட, குழாய் வழியாக வெளியே சூடான நீர் கிடைத்து விடும். அந்தப் பெரியவரிடமும் பேச்சுக் கொடுத்து அவரையும் நிழற்படம் எடுத்துக் கொண்டோம்.  நிழற்படத்தினை அவரிடம் காண்பித்த போது அப்படி ஒரு புன்சிரிப்பு அவரிடம்! தன் படத்தினைப் பார்ப்பது ஒரு வித மகிழ்ச்சி தானே!


அந்த முதியவரிடமும் நன்றி சொல்லி அங்கிருந்து புறப்பட்டு மலைப்பாதை வழி கீழே நடந்தோம். நாங்கள் கிராமத்தின் பிரதான சாலையை வந்தடைந்த போது “ஹிந்துஸ்தான் கா ஆக்ரி டாபா” திறந்து இருந்தது. இரும்புப் படிக்கட்டுகள் வழி கீழே இறங்கி உணவகத்தினை அடைந்த போது அங்கே நண்பர்கள் ப்ரஷாந்த் மற்றும் மைக்கேல் காலை உணவுக்காகக் காத்திருந்தார்கள். காலையிலேயே எங்கேயிருந்து வருகிறீர்கள் எனக் கேட்க, எங்களது அன்றைய தின அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டோம். கோவிலுக்கு வந்து வாத்திய இசையை சேமித்துக் கொள்ள முடியவில்லையே என மைக்கேலுக்கு வருத்தம். பெரியவர்களிடம் பேச முடியவில்லை என ப்ரஷாந்த வருந்தினார். உணவக உரிமையாளர் என்ன சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டபடியே வெளியே வந்தார்.  எனக்கு ஆலூ பராண்டாவும், நண்பருக்கு ப்ரெட் ஆம்லேட்டும் – கூடவே சிறப்பான தேநீரும்!


சிறிது நேரம் காத்திருக்க சுடச் சுட வெண்ணைக் கட்டி தடவிய பராண்டாவும் ப்ரெட் ஆம்லேட்டும் வந்தது. நாங்கள் சாப்பிட்டு முடித்தோம். ரொம்பவும் சுவையாகச் சமைத்து இருந்தார்கள்.  தேநீரும் சுடச் சுட வர அதையும் ருசித்தோம். அன்றைய தினம் என்ன திட்டம் என்பதை ப்ரஷாந்த் மற்றும் மைக்கேல் கேட்டார்கள். எங்களது திட்டம் அடுத்த ஊரான ரக்chசம் வரை சென்று அங்கே கொஞ்ச நேரம் இருந்து விட்டு அங்கேயிருந்து புறப்பட்டு மாலைக்குள் சாங்க்ளா அல்லது வேறு சிறு கிராமத்திற்குச் செல்வது என்று சொன்னோம்.  மைக்கேல் இன்னும் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் வேறு கிராமம் ஏதாவது ஒன்றில் தங்க திட்டம் என்று சொன்னார். ப்ரஷாந்த்-உம் சாங்க்ளாவிலோ அல்லது கார்ச்சம் என்ற இடத்திலோ தங்கி பிறகு ராம்பூர் வருவதாகத் திட்டமிட்டு இருப்பதாகச் சொன்னார். என்ன செய்யலாம் என அனைவரும் விவாதித்தோம்.


chசித்குல் தங்குமிடத்தைக் காலி செய்து கொண்டு முதுகுச் சுமையோடு ரக்chசம் வரை நடக்கலாம் என்று திட்டமிட்டோம். கிட்டத்தட்ட ஒன்பது கிலோமீட்டர் மலைப்பாதையில் நடக்கவேண்டும்.  ஏற்கனவே நாங்கள் கல்பாவிலிருந்து ரோghகி வரை நடந்து வந்தது நினைவுக்கு வந்தது. பேருந்தில் ஒரு மணி நேரத்திற்குள் சென்று விடலாம்! அதிக நேரம் நமக்கு ரக்chசம் கிராமத்தில் கிடைக்கும் என்று திட்டம் மாறியது. காலை ஒன்பது மணிக்கு மேல் chசித்குல் நகரிலிருந்து பேருந்து ஒன்று புறப்படும் என்பதால் அதற்குள் தங்குமிடத்தினை காலி செய்து பேருந்து நிற்கும் இடத்தில் வந்து சேரலாம் என முடிவு செய்து தங்குமிடம் திரும்பினோம். சரியான நேரத்தில் பேருந்து நிற்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். அதன் பிறகான அனுபவங்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன். சரியா?





இன்றைக்கு பதிவில் சொன்ன விஷயங்களைப் பற்றிய உங்கள் சிந்தனைகளையும் எண்ணங்களையும் பின்னூட்டம் வழியாக பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி. நாளை வேறு ஒரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

40 கருத்துகள்:

  1. நபிகள் நாயகம் வாக்கு பொன்வாக்கு.

    குட்மார்னிங்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

      பொன்மொழி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  2. //சற்றே அதீத உணர்ச்சியுடன் இருந்தாலும், இது வரை அப்படிச் செய்ததில்லை என்றும் சொன்னார் அந்த முதியவர்.//

    உணர்ச்சி வசப்பட்டு உளறி உண்மையைச் சொல்லி விட்டோமா...   என்று ஜாக்கிரதையாக சமாளிக்கிறாரோ!!  ஹா..  ஹா..  ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா.... கொஞ்சம் அவசரப்பட்டு சொல்லிட்டோமோ என நினைத்திருக்கலாம் அந்தப் பெரியவர்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. அந்த இருவரில் வெள்ளை உடை அணிந்தவர்தான் ராணுவத்தில் பணியாற்றியவராய் இருக்கவேண்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... சரியாகக் கணித்து இருக்கிறீர்கள் ஸ்ரீராம். அவரே தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. எனக்கு என்னவோ நீங்கள் இதுவரை செய்துள்ள பயணங்களில் இது மனதில் நிற்கும் பயணமாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.  எனவே முதலிடம் பெறுமா என்று கேட்க ஆவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாப் பயணங்களுமே பிடித்தவை தான் ஸ்ரீராம். இந்தப் பயணம் நல்லதோர் அனுபவம்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. அந்த வெந்நீர் பாத்திரம் நாம் வாங்கி வைத்துக் கொண்டால் மின்சாரம், கேஸ் செலவில்லாமல் நமக்கு உதவுமோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா.... யார் அதனைத் தூக்கிக்கொண்டு வருவது? விறகும் தேவை. தனி வீடாக இருந்தால் பயன்படும். அடுக்குமாடி குடியிருப்பு எனில் கஷ்டம் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. இனிய காலை வணக்கம்.வெங்கட். மிகப் புதுமையான

    பயணம். சுவாரஸ்யமான மனிதர்கள்.
    எல்லாமே இனிமை. அதுவும் வென்னீர் சுடவைக்கும் முறை மிகப் புதுமை. குற்றங்கள் நடக்காத கிராமம் என்றால் அதிசயமாக இருக்கிறது. சிவ பெருமானின் நேர்ப்பார்வையில் இருக்கும் இம்மனிதர்கள் கொடுத்து வைத்தவர்களும். கூட. அந்தப் பெரியவரின்
    புன்னகை மிக அழகு.
    அடுத்த கிராமம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
    நீங்கள் நடந்து போகாதது எனக்கு நிம்மதி.:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நீங்கள் நடந்து போகாதது எனக்கு நிம்மதி// ஹாஹா.... சில இடங்களில் நடக்கத் தான் வேண்டியிருக்கும் வல்லிம்மா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. இம்மாதிரியான அனுபவங்கள் வெகு சிலருக்கே கிடைக்கும். அது உங்களுக்கு கிடைத்திருக்கிறது. அனுபவியுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோசப் ஐயா.

      நீக்கு
  8. அழகிய கிராமம், பெரியவரின் அழகான புன்னகை போல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  9. நபிகள் நாயகம் பொன்மொழி மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  10. பெரியவர்கள் பேட்டி, மர வீடு ,வெந்நீர் வைக்கும் பாத்திரம், மலர், ஆடு அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  11. சக மனிதர்களின் அமைதியைக் குலைப்பவர்கள் எந்த வகையிமர்?...

    அரிய செய்திகளும் அழகிய படங்களும் - அருமையான பதிவு,..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  12. மரத்தால் வழிபாட்டுத்தலம். பராமரிப்பது மிகவும் சிரமமாயிற்றே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிரமம் தான் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா. ஆனால் மலைல் பிரதேசங்களில் மரம் தான் பிரதான கட்டுமானப் பொருள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. மிக அழகிய ஊர், தேனீர் வைக்கும் முறை பார்க்க அழகு.

    ஆஆஆஆ நீங்க ஓம்லெட் சாப்பிட்டனீங்களோ இது ஆதிக்குத் தெரியுமோ?:)) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா.... அது தேநீர் வைக்க அல்ல! சுடு நீருக்கானது...

      நான் ஆம்லேட் சாப்பிட்டதாக சொல்லவில்லையே....

      ஹாஹா... அப்படியே மேலோட்டமாக படித்து சொல்லிட்டீங்க போல! :))))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. அந்த பெரியவர் படம் புன்னகையுடன்.

    'ஹமாம்' குளிர்தேசங்களுக்கு வெந்நீர் எடுக்க இலகுவானதாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  15. கிராமத்தின் சுற்றுலாச் சிறப்புகள் நன்றாக இருக்கின்றன. காவல் நிலையம் இல்லாமல் ஓர் கிராமம், அதுவும் எல்லையில்! மக்கள் மிக மிக நல்லவர்கள் போல! சந்தித்த பெரியவர்களும் அவர்களின் கருத்துக்களும் அருமை. வெந்நீர்ப்பாத்திரம் கிட்டத்தட்ட நம்ம பாய்லர் போல எனக்குத் தோன்றியது. அதில் நடுவில் குழாய் இருக்கும். அதன் மூலம் கட்டைகள் போட்டு எரிப்போம். சுற்றி உள்ள பாத்திரத்தில் நீரை நிரப்புவோம். இங்கே புனல் வழி நீர். உடனே வெந்நீர். :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீசா மேடம்... சும்மா 10 நாட்கள் பயணத்திலேயே எனக்கு வட நாட்டினர், தமிழர்களைவிட ரொம்ப நல்லவர்கள் என்று தோன்றிவிட்டது. (ஆட்டோ, இனிப்பு கடையினர், இஸ்திரி போடுபவர், பொருட்கள் விற்பவர் போன்ற எல்லோரும்). முன்னம் ஒருத்தர் சொன்னார், இந்தியா அகலமாக இருந்து கீழே போகப்போக குறுகலாவது போல, மக்கள் மனமும் அப்படி மாறுகிறது என்று

      நீக்கு
    2. நம் ஊர் பாய்லருக்கும் இங்கே உள்ள ஹமாம்-க்கும் வித்தியாசம் - உடனடி வெந்நீர்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
    3. கீழேப் போகப்போக குறுகிப் போகும் மனம்... :) ஆமாம் அப்படிச் சொல்வது உண்மை என்று சிலர் உணர்த்தியது உண்டு நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  16. படங்கள் அருமை. அனுபவங்கள் சுவாரஸ்யம். சந்திக்கும் நபர்களுடனான உரையாடல்கள் மூலம் பலவற்றை அறிந்து கொள்ள முடிகிறது. தொடரவும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை ராமலக்ஷ்மி. பல விஷயங்கள் பேசுவதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  17. பொன்மொழி அருமை ஜி
    அங்கு தேவதாரு மரங்கள் விலை மலிவாக கிடைக்குமோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேவதாரு மரங்கள் தான் அதிகம். ஆனாலும் தானாக விழும் மரங்களை மட்டுமே பயன்படுத்தும் வழக்கம் வைத்து இருக்கிறார்கள் கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  18. தொடர்ந்து படித்துக்கொண்டு வருகிறேன். விட்ட இடுகை எல்லாம் படித்துவிட்டேன். வழிபாட்டுத் தலம் உள்ளே பார்த்திருக்கலாம், அவ்வளவு தூரம் போய்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழிபாட்டுத் தலம் பார்க்க கொடுத்து வைக்கவில்லை நெல்லைத் தமிழன். ஆனால் புறப்படும் முன்னர் ஒரு கோவிலில் நல்ல தரிசனம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  19. வணக்கம் சகோதரரே

    முதல் வாசகம் அருமை. ரசித்தேன்.

    பயண அனுபவங்களை நன்றாக சுவை குறையாமல், கூறியுள்ளீர்கள். அங்குள்ள மக்கள் நீங்கள் பேசி பழகியதை பகிரும் போது மிகவும் நல்லவர்களாக தெரிகிறார்கள். அந்த வென்னீர் அடுப்பு, இயற்கை சூழ்ந்த படங்கள் அனைத்தும் அழகாக இருக்கின்றன.

    இரண்டு, மூன்று கிலோ மீட்டர் வேண்டுமானாலும் நடந்து விடலாம். நீங்கள் எட்டு, ஒன்பது கி. மீ தூரத்தை நடந்து கடக்கலாம் (அதுவும் கடினமான அந்த மலைப்பாதையில்) என சட்டென முடிவு எடுக்கிறீர்கள். அங்குள்ள இயற்கையின் சூழல்கள் அப்படி முடிவெடுக்க தூண்டுகிறது போலும்.! பேருந்தில் செல்ல முடிவெடுத்து அங்கு சென்றதும் ரசித்த காட்சிகளை காண ஆவலாக இருக்கிறது. அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    இந்த கட்டுரையின் இதற்கு முந்தைய இரு பகுதிகளை படிக்க இயலாமல் போய் விட்டது. அவைகளையும் விரைவில் படிக்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்... சூழல்கள் பொறுத்து முடிவு எடுப்பது தான் வழக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....