அனைத்து
பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன்
ஆரம்பிக்கலாம்.
மகிழ்ச்சி என்பது
நம் வீட்டில் விளைவது. மற்றவர் தோட்டத்தில் அதைத் தேட வேண்டியதில்லை.
கடைசி கிராமம் என்ற தலைப்பில் இதுவரை வெளிவந்த பதிவுகளின் சுட்டிகள்
கீழே:
படம்-1: chசித்குல் - எல்லை நோக்கி நடந்தபோது
படம்-2: chசித்குல் - இயற்கை தான் எத்தனை அழகு....
மதிய
உணவாக ராஜ்மா சாவல் உள்ளே சென்றதும் வயிறு நிம்மதியடைந்து எங்களை வாழ்த்தியது.
chசித்குல் கிராமத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இந்திய-திபெத் எல்லை
இருக்கிறது என்றாலும் எல்லை வரைச் செல்ல தேவையான அனுமதி எங்களிடம் இல்லை. அனுமதி
இல்லாமல் கிராமத்திலிருந்து சில கிலோமீட்டர் [3 ½ கிலோமீட்டர்] தொலைவில் இருக்கும்
செக் போஸ்ட் வரை செல்ல முடியும் என்று சொன்னதால் நடக்க ஆரம்பித்தோம். நான், நண்பர்
பிரமோத், கேரள இளைஞர் ப்ரஷாந்த் மற்றும் வெளி நாட்டிலிருந்து வந்திருந்த மைக்கேல்!
நாங்கள் நடப்பதைப் பார்த்து எங்களுடன் சேர்ந்து கொண்டார் இன்னுமொரு சுற்றுலாப்
பயணி! மெதுவாக மலைகளையும் ஆற்றையும் ஆங்காங்கே கட்டப்பட்டு வரும் தங்குமிடங்களையும்
பார்த்தபடியே நடந்தோம்.
படம்-3: chசித்குல் - பாதையோரப் பூக்கள்...
படம்-4: chசித்குல் - ஆங்காங்கே முளைக்கும் தங்குமிடங்கள்...
சிறிது
நடந்த பிறகு கிராமத்தின் எல்லை முடிய எங்கெங்கும் மலைப்பிரதேசம் மட்டுமே
கண்ணுக்குத் தெரிந்தது. தூரத்தில் எங்கிருந்தோ குரல் எழுப்பும் பறவைகளின் ஒலி
காதுக்குள் ரீங்கரித்தது. மலைப்பகுதியில் உலவும் கிராமத்தின் செல்லங்கள் எங்களுடன்
தொடர்ந்து நடந்து வந்தன. எங்கே
பார்த்தாலும் இயற்கையின் எழில். நெடிதுயர்ந்த தேவதாரு மரங்கள்,
மலையுச்சியிலிருந்து உருகி வழிந்து ஓடி வரும் பனி நீர், அது கலக்கும் Bபாஸ்pபா ஆறு
என ஒவ்வொன்றும் பார்க்கப் பார்க்க ஆனந்தம். பொறுமையாக பேசியபடி, இயற்கை எழிலை
ரசித்தபடி அந்த மலைப்பாதைகளில் நடந்தோம். நடுநடுவே சில கிராமத்து மனிதர்களைப்
பார்க்க முடிந்தது. அனைவருமே எங்களைப் பார்த்து ஒரு புன்சிரிப்பு சிரித்து
மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள். சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம் – வழக்கம் போல!
படம்-5: chசித்குல் - இயற்கை அன்னையின் மடியில் - நான்கு நண்பர்கள்...
படம்-6: chசித்குல் - இயற்கையை ரசித்தபடி ஒரு நடை...
நடுவே வெட்ட வெளியில் ஒரு தங்குமிடம் – வாசலில் சில
இருக்கைகள் – சிலர் அங்கே அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருக்கிறார்கள்.
தங்குமிடத்தின உரிமையாளர் எங்களைப் பார்த்ததும் புன்முறுவல் பூத்து “வாருங்கள்
தேநீர் சாப்பிடலாம்…” என்கிறார். பதிலுக்கு புன்னகைத்து – ”செக் போஸ்ட் செல்லும்
வழி இது தானே?” என்று கேட்க, ”ஆமாம்… அப்படியே சிறிது தூரம் நடந்து செல்லுங்கள்”
என்று வழி சொல்கிறார். மேலும் நடக்கிறோம். வழியெங்கும் சின்னச் சின்னப் பூக்களும்,
தோட்டங்களும் கண்களைக் கவர்கின்றன. மைக்கேல் என்னுடன் பேசியபடியே நடக்க, ப்ரஷாந்த்
மற்றும் ப்ரமோத், மற்ற பயணி ஆகியோர் எங்களுக்கு முன்னே நடந்து சென்று
கொண்டிருக்கிறார்கள். வழியில் ஒரு உள்ளூர் பெண்மணி நின்று கொண்டிருக்கிறார் –
எங்களைப் பார்த்து புன்னகையோடு – “உங்களுக்கு விசில் அடிக்கத் தெரியுமா?” என்று
கேட்கிறார்!
படம்-7: chசித்குல் - ஆற்றங்கரை ஓரத்தில் குளியல்...
படம்-8: chசித்குல் - இயற்கை அழகு...
சாதாரணமாக
உதடு குவித்து விசில் அடிக்கத் தெரியும் என்று சொல்ல, “அது எனக்கே தெரியும் –
மலையுச்சியில் என்னுடன் வந்தவர்கள் இருவர் உண்டு – அவர்களை அழைக்க வாய்க்குள்
விரல் விட்டு விசில் அடிக்க வேண்டும் – அப்படி அடித்தால் தான் கேட்கும் என்று
புன்னகையுடன் கூற, நாங்களும் புன்னகை புரிந்தோம் – வேறென்ன செய்ய? ”உங்களுக்கு விசில்
அடிக்கக் கூடத் தெரியாதா?” என்று புன்னகைத்தது போல இருந்தது! கொஞ்சம்
வெட்கமும் வந்தது. ஹாஹா… எப்படியாவது விசில் அடிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்
என்று தோன்றியது! உதடு குவித்து விசில் அடிக்க அது முன்னே சென்று கொண்டிருந்த
நண்பர்களுக்குக் கூட கேட்கவில்லை – மலை மீது இருந்தவர்களுக்கு எங்கே கேட்கும்? அந்தப்
பெண்மணியும் நாங்களும் ஒரு சேர சிரித்துக் கொண்டிருந்தோம். அவரிடம் சென்று
வருகிறோம் என்று சொல்லி மேலே நடந்தோம்.
படம்-9: chசித்குல் - இன்னும் இன்னும் படங்கள்...
படம்-10: chசித்குல் - பஞ்சுப் பொதியாக மேகங்கள்...
அந்தப்
பெண்மணியும் அவர் உடன் வந்திருந்தவர்களும், ஒரு யாக் மற்றும் சில மாடுகளை வைத்திருப்பவர்கள்.
மலை மீது மாடு மேய்க்க வந்திருக்கிறார்கள். மூன்று பக்கங்களிலிருந்தும் மாடுகளைப்
பார்த்துக் கொள்ளவேண்டும். மாலையானால் மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்ல
வேண்டும் – அது தான் அவர்களது ஒவ்வொரு நாள் வேலையும்! காலையில் வீட்டிலிருந்து
புறப்பட்டு மாலை வரை மாடு மேய்த்து திரும்ப வேண்டும் – வீட்டிலிருந்து புறப்படும்
போதே அன்றைய உணவுத் தேவைகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும். வீடு திரும்பிய பிறகு
இரவுக்கான உணவு! ஒரே ஒரு யாக் மற்றும் 40 மாடுகள் அவர்களிடம் இருக்கிறதாம். மாலை
திரும்பும்போதும் அவர்களைப் பார்த்தோம் – அடுத்த நாளும் அவர்களைப் பார்த்தோம்.
ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அவர் எங்களைப் பார்த்து புன்னகை புரிய – எங்களுக்கு
விசில் அடிக்கத் தெரியவில்லை என்று சிரிப்பதாகவே தோன்றியது!
படம்-11: chசித்குல் - வீடு திரும்பும் மாடுகளும் ஒரே ஒரு யாக்-உம்
படம்-12: chசித்குல் - எங்களுடன் வந்த செல்லம்...
மேலே
நடக்க, ஒரு சிறு குச்சி அதன் மீது ஒரு பதாகை – ”அனுமதி இல்லாமல் இதற்கு மேலே
வரக்கூடாது” என்று பதாகை. ஒரு ஆளும் அங்கே இல்லை என்றாலும் அந்த எல்லையைத் தாண்டி
நாங்கள் செல்லவில்லை. அந்த செக் போஸ்ட் அருகேயே சில டெண்டுகளும் குடில்களும் கொண்ட
தங்குமிடம் இருந்தது. அதன் மிக அருகே பாஸ்பா நதி ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த
டெண்டுகளுக்கு என்ன வாடகை? அவற்றில் வசதி எப்படி என்று தெரிந்து கொண்டு, அங்கேயே
ஆற்றங்கரை ஓரமாக சிறிது நேரம் அமர்ந்து இருக்கலாம் என அந்த இடம் நோக்கி நடந்தோம். அங்கே
இருந்த தங்குமிட உரிமையாளரிடம் பேச்சுக் கொடுத்தோம். அவர் எங்களை வரவேற்று ”தங்க
இடம் வேண்டுமா?” என்று கேட்டார். ஏற்கனவே தங்குமிடம் பார்த்து தங்கி இருக்கிறோம் –
அப்படியே ஒரு நடை நடந்து இங்கே வந்தோம் என்று சொன்னோம்.
படம்-13: chசித்குல் - புதியதாக அமைந்த தங்குமிடங்கள்...
படம்-14: chசித்குல் - முதுகில் மைக்ரோஃபோன் உடன் நடக்கும் நண்பர்...
இருந்தாலும்
அவருடைய டெண்ட் வசதிகளைப் பார்க்க விருப்பம் என்று சொல்ல, அவர் அழைத்துச் சென்று
காண்பித்தார் – ஒவ்வொரு டெண்ட் உள்ளேயும் மூன்று படுக்கைகள் – ஒன்றுக்கொன்று
ஒட்டியபடி! ஒரு படுக்கைக்கு 500 ரூபாய் என்றும் கழிப்பிட வசதிகள் பொது என்றும்
சொன்னார். கழிப்பிட வசதி உள்ளேயே வேண்டுமென்றால் ஒரு படுக்கைக்கு 700 ரூபாய் என்று
சொன்னார். கொஞ்சம் அதிகம் தானோ என்று
தோன்றியது – நாங்கள் இருவரும் சேர்ந்து தங்கும் இடத்திற்கு 500 தானே கொடுக்கப்
போகிறோம்? ஆனால் இப்படியான டெண்டுகளில் தங்குவதும் ஒரு வித புது அனுபவம் தான் –
குளிருக்குத் தகுந்த போர்வைகள், ரஜாய்கள் இருந்தாலும், இந்த வெட்டவெளியில் அதிக
அளவில் குளிர் இருக்கும் என்பதால் கொஞ்சம் ஜாக்கிரதையாகத் தான் இருக்க வேண்டும்!
நன்றாகவே இருக்கிறது அவரது தங்குமிடம் என்று சொல்லி ஆற்றங்கரை ஓரம் வந்து
அமர்ந்தோம்.
படம்-15: chசித்குல் - கிராமம் சற்று தொலைவிலிருந்து...
படம்-16: chசித்குல் - மலையுச்சியிலிருந்து உருகி ஓடி வரும் பனிநீர்...
சில
பல புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். ஆற்றங்கரையில் அமர்ந்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். ஆற்றைக் கடந்து அந்தப் பக்கம் போனால் சில தோட்டங்கள்
உண்டு. மலைப்பகுதியில் மலையேற்றம் செய்யலாம் என்று தங்குமிட உரிமையாளர் சொல்ல,
ஆற்றைக் கடப்பது எப்படி என்று கேட்க, “நீங்கள் ஐந்து பேர் இருக்கிறீர்களே,
அப்படியே ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு கால்களை அழுத்தி ஊன்றி மெதுவாக
நடக்க வேண்டியது தான்” என்கிறார்! அதிக அளவு ஓட்டம் இருக்கும் ஆற்றை இப்படிக்
கடப்பது வேண்டாத வேலை என்று எங்களுக்குத் தோன்றியது! அவர் ஆற்றைக் கடப்பது சுலபம் என்பது
போலச் சொல்லி விட்டாலும், அந்த மாதிரி செய்வதற்கு எங்களுக்கு இஷ்டமில்லை –
அப்படிச் செய்வது விபரீத விளைவுகளைத் தரும் என்று அந்த எண்ணத்தையே கைவிட்டோம்.
சுழித்துக் கொண்டு ஓடும் ஆற்றை இப்படிக் கடப்பது மடத்தனம் தானே. பாலம் போல ஏதாவது
இருந்தால் கடக்கலாமே தவிர, ஆற்றின் குறுக்கே வேகமாக ஓடும் தண்ணீரைத் தாண்டி
நடப்பது முட்டாள் தனம் என்றே முடிவு செய்தோம்.
படம்-17: chசித்குல் - பனிநீர் - பளிங்கு போல...
படம்-18: chசித்குல் - மேகக் கூட்டம்...
நீண்ட
நேரம் அங்கே அமர்ந்து இயற்கை எழிலை ரசித்தோம். அங்கே சில சிறுவர்கள் – கிராமத்துச்
சிறுவர்கள் ஆற்றுத் தண்ணீர் பிடித்து பாத்திரங்களில் சுட வைத்து வெட்ட வெளியில்
குளித்துக் கொண்டிருந்தார்கள் – யாரைப் பற்றிய கவலையும் அவர்களுக்கு இல்லை! அந்த
மாதிரி குளிக்க முடிந்தால் நன்றாகத் தான் இருக்கும் ஆனால் குளிக்க முடியாது!
அவர்களைப் பார்த்து கையசைத்து புன்னகை புரிய அவர்களும் பதிலுக்கு கையசைத்தார்கள்!
ஒரே ஆட்டம் தான் அங்கே – சிறுவர்கள் சேர்ந்து விட்டால் மகிழ்ச்சிக்கும்
கொண்டாட்டத்திற்கும் குறைவேது? இந்தக் காட்சிகளை எல்லாம் பார்த்தபடி அமர்ந்திருந்த
எங்களுக்கு தங்கும் அறை திரும்ப மனதில்லை. ஆனாலும் திரும்பித்தானே ஆக வேண்டும்.
மலைப்பகுதி என்பதால் விரைவாக இருட்டி விடும். அந்தத் தங்குமிட உரிமையாளருக்கு
நன்றி சொல்லி, அங்கிருந்து புறப்பட்டோம். சமீபத்தில் தான் இந்தத் தங்குமிடம் அமைத்திருக்கிறேன் – அடுத்த முறை இந்த ஊருக்கு வந்தால், எங்கள் தங்குமிடத்தில்
தங்க வேண்டும் என்று சொல்லி அனுப்பினார்.
படம்-19: chசித்குல் - எல்லை யிலிருந்து திரும்பிய போது ...
படம்-20: chசித்குல் - யாக் - ஒரு கிட்டப்பார்வை...
“விசில்
அடிக்கத் தெரியுமா?” என்று கேட்ட பெண்மணியின் வீட்டைச் சேர்ந்த மற்றொருவர் கீழே
வந்து விட்டார். அவரிடம் பேசி விட்டு தங்குமிடம் நோக்கி நடந்தோம். தங்குமிடம்
வந்ததும், வாசலில் போட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்து, தேநீர் வரவழைத்துக்
குடித்தோம். நீண்ட நேரம் நடந்ததற்கு இணையாக நீண்ட நேரம் அமர்ந்து கொண்டு கிராமத்து
நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண்டும், இயற்கையை ரசித்துக் கொண்டும் இருந்தோம். சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்ட பிறகு, இரவு
உணவு சாப்பிட அனைவரும் ஒன்று கூடுவோம் என்று சொல்லி எங்கள் அறைக்குத்
திரும்பினோம்! மேலே நடந்தது பற்றி அடுத்த பகுதியில் சொல்கிறேன்.
இன்றைக்கு
பதிவில் சொன்ன விஷயங்களைப் பற்றிய உங்கள் சிந்தனைகளையும் எண்ணங்களையும்
பின்னூட்டம் வழியாக பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி. நாளை வேறு ஒரு பதிவில் உங்களைச்
சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட்
புது
தில்லி
//வயிறு நிம்மதியடைந்து எங்களை வாழ்த்தியது//
பதிலளிநீக்குஇது முதல்முறையாக கேள்விப்படுகிறேன் ஜி
ஒவ்வொரு விடயங்களும் ரசனையாக இருந்தது படிப்பதற்கு...
எனக்கு விசில் அடிக்கத் தெரியாது.
இனிய காலை வணக்கம் கில்லர்ஜி.
நீக்குஆஹா... உங்களுக்கும் விசில் அடிக்கத் தெரியாதா?
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மகிழ்ச்சியை வெளியில் தேடியே பழகிவிட்டோம்.
பதிலளிநீக்குகுட்மார்னிங்.
இனிய காலை வணக்கம் ஸ்ரீராம். வெளியே தேடித்தேடி உள்ளே இருப்பதை இழக்கிறோம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
என்ன ஒரு அருமையான இடம்....
பதிலளிநீக்குஅழகிய புகைப்படங்கள்.... இயற்கை மிகமிக அழகானது....
மனிதன் அதைக் கெடுக்காமல் இருக்கவேண்டும்.
இயற்கை அழகானது. மனிதன் அதைக் கெடுத்துக் கொண்டே இருக்கிறான்.... அதான் சோகமான உண்மை ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஆக, இனி அந்த ஊருக்குச் செல்பவர்கள் விசில் அடிக்கப் பழகிக்கொண்டு செல்வது நல்லது!!!!
பதிலளிநீக்குகூடவே வந்த செல்லம் அழகு.
எனக்கெல்லாம் இதுமாதிரி இடங்கள் ஒருவாரம் தாங்கும். நகரங்களில் வாழ்ந்து பழகிய நமக்கு அதற்குமேல் தாங்காது!!!
விசில் அடிக்க பழக வேண்டும்... ஹாஹா....
பதிலளிநீக்குஇப்படி அங்கே நிறைய செல்லங்கள்....
நகரங்களில் வாழ்ந்து பழகிய நமக்கு சில காலம் இருந்தால் கிராமமும் பழகிவிடும் ஸ்ரீராம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இந்த பயணங்கள் மூலம் உங்களுக்கு மிக அற்புதமான அனுபவங்கள் கிடைத்திருக்கும். அவற்றில் சிலவற்றை எங்களிடம் பகிர்ந்துக்கொள்வதற்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குஆமாம் ஜோசப் ஐயா. பயணங்கள் நல்ல பல அனுபவங்கள் தரும். சிலவற்றை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இப்படி ஒரு பயணம்... ஆகா... ஏங்க வைத்து விட்டீர்கள் ஜி...
பதிலளிநீக்குஇப்படி ஒரு பயணம்.திட்டமிடுங்கள் தனபாலன். உடன் வர நானும் தயார்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அழகான படங்களுடன் சிலுசிலுப்பான பதிவு..
பதிலளிநீக்குவாழ்க நலம்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.
நீக்குஇந்த தடவை புகைப்படங்கள் அருமையாக வந்திருக்கின்ற்ன. கவனத்தை ஈர்க்கும் நடுப்பகுதி முழு ப்ரமேயையும் ஆக்ரமிக்காமல் ஒன்றில் மூன்று என்ற விதியின் படி அமைந்து அருமையாக உள்ளன. வாழ்த்துக்கள். Jayakumar
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.
நீக்குஉங்களின் சுற்றுலா பயணமும், இதில் உள்ள விபரங்களும் வேறு எவரும் எழுதியதில்லை. எல்லாமே புதுசு.
பதிலளிநீக்குஎல்லாமே புதுசு. மகிழ்ச்சி ஜோதிஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மிக மிக அருமையான இடம்.
பதிலளிநீக்குஅழகான படங்கள். சித்குல் பார்க்க வேண்டிய இடம் தான்.
இயற்கையை ரசிக்க தெரிந்து விட்டால் ! கூட வரும் துணையும் ரசிக்க் தெரிந்துவர்களாய் இருந்தால் அலுப்பில்லா பயணம்.
முன்பு விசில் பதிவு போட்டீர்கள் அல்லவா? நிறைய பேர் தெரியாது என்றும் தெரியும் என்றும் போட்டார்கள். எனக்கு கொஞ்சம் தெரியும் என்று சொன்னேன். சார் பாடல்களை விசிலில் அழகாய் பாடுவார்கள் என்று சொன்னேன். நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன்.
பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குஆமாம் மா. விசிலோசை பதிவு. நினைவு இருக்கிறது. நீங்கள் கூட விசில் அடிப்பீர்கள் என எழுதி இருந்தீர்கள்.... சுட்டி கீழே..
http://venkatnagaraj.blogspot.com/2013/03/blog-post.html?m=1
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஉண்மையான வாசகம். மகிழ்ச்சி என்பது நம் வீட்டில்தான் விளைகிறது என்பது உண்மை. ஆனால் அதை அடிக்கடி மறந்து விடுகிறோம்.
பயணக் கட்டுரை மிக நன்றாக உள்ளது. பொறுமையாக படங்கள் எடுத்து, அதை உங்களின் அழகான எழுத்து நடையுடன் விளக்கிய விதத்தில் நாங்களும் உங்களுடன் கூடவே பயணித்த அருமையான ஒரு உணர்வு வரப் பெற்றோம். படங்கள் அனைத்தும் மிக அருமை.
எழில் கொஞ்சும் இடங்கள்.மலைகளும், இயற்கை அழகும் அதி அற்புதமாக இருக்கின்றன. பாதையோரத்து பூக்களும் மேக கூட்ட படங்களும் கண்களை கட்டிப் போடுகின்றன.
அந்த கிராமங்களில் உள்ளவர்கள் நீங்கள் அவர்களை அணுகி பேசிய விதங்களை பகிர்ந்ததிலிருந்து அவர்கள் அனைவரும் மிகவும் அன்புள்ளம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பது புரிகிறது.
அந்த ஆறும், பனி உருகி ஒடும் இடங்களும் பார்வைக்கு விருந்து. எங்களுக்கே தாங்கள் பகிர்ந்த விதமும், இயற்கை வனப்புகளும் மிகவும் பிடித்திருக்கிறது என்னும் போது, மலைகளையும், இயற்கை அழகையும் நேரடியாக அனுபவித்து இரு கண்களால் ரசித்து பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்த உங்களுக்கு அங்கிருந்து நகர்ந்து வர மனமிருக்காதுதான்... தாங்கள் சென்ற இடங்கள் அவ்வளவு அழகாக இருக்கின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
விசில் அடிக்கத் தெரியாதா?...கல்லூரி நாள்களில் என் நண்பர்களிடம் நான் மாட்டிக்கொண்டு பட்ட அவஸ்தை நினைவிற்கு வந்தது.
பதிலளிநீக்குஆஹா... உங்களுக்கும் விசில் அடிக்கத் தெரியாதா முனைவர் ஐயா?
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
எழில் கொஞ்சும் இயற்கை படங்களை பார்துக்கொண்டே இருக்கலாம் .
பதிலளிநீக்குஅந்த மலைமுகடுகள் ..பனிபடலங்கள் ..ஆறு ..என கவர்ந்து கொண்டே செல்கிறது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்குமகிழ்ச்சி பற்றிய கருத்து முற்றிலும் உண்மை.
பதிலளிநீக்குபடங்கள் சொல்லி வேலை இல்லை, வேற லெவல்.. அவ்ளோ அழகு.
படங்கள் பிடித்ததில் மகிழ்ச்சி அதிரா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
படங்கள் அனைத்தும் அருமை. இயற்கையின் எழில் மனதைக் கொள்ளை கொள்கிறது. அனுபவங்களை சுவாரஸ்யமாகச் சொல்லியுள்ளீர்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குஇயற்கை அன்னையின் எழில் கொட்டும் படங்கள் ....
பதிலளிநீக்குபாராட்ட வார்த்தைகளே இல்லை ....அற்புதம்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுப்ரேம் ஜி.
நீக்கு