அனைத்து
பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.
எதிர்க்கும் ஆற்றல்
இருந்தாலும், பிறர் செய்யும் பிழைகளைப் பொறுத்துக் கொள்பவனே நல்லவன் – புத்தர்.
கடைசி கிராமம் என்ற தலைப்பில் இதுவரை வெளிவந்த பதிவுகளின் சுட்டிகள்
கீழே:
கல்பா
என்ற கிராமத்தில் ஓர் இரவு தூக்கம் – நீண்ட பயணத்தில் ஏற்பட்ட களைப்பினைப் போக்க
அந்த இரவுத் தூக்கம் தேவையாக இருந்தது. அதிகாலையிலேயே எழுந்து தயார் ஆகலாம் என
இரவே முடிவு செய்திருந்ததால் காலை ஐந்தரை மணிக்கே விழிப்பு வந்து விட்டது. அறையின்
திரைச் சீலைகளை விலக்க, வெளிச்சம் வந்திருந்தது. இமய மலையின் அற்புத அழகு
தெரிந்தது. சூரியனின் ஒளிக்கிரணங்கள் பனிபடர்ந்த மலையில் பட்டு மலையின் அழகு
இன்னும் அதிகரித்திருந்தது. நாங்கள் எழுந்த சில நிமிடங்களுக்குப் பிறகு கீழே
இருந்த புத்தமத வழிபாட்டுத் தலத்தில் கிராமத்தைச் சேர்ந்த யாரோ ஒருவர் அங்கே
இருக்கும் “ஓம் மணி பத்மே ஹம்” மணிகளைச் சுழற்றி பிரார்த்தனை செய்ய அந்த மணிகளின்
நாதம் காதுக்குள் நுழைந்து ஒரு வித அமைதியைத் தந்தது.
காலை
நேரத்தில் தேநீர் அல்லது காஃபி குடித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் எனக்கில்லை.
நண்பர் பிரமோதிற்குக் காலை சூடாக ஏதாவது உள்ளே சென்றால் தான் அன்றைய பொழுது சுகமாகக்
கடக்கும்! என்று நம்பிக்கை. இரவு சஞ்சீவ் [தங்குமிட உரிமையாளர்] இடம் கேட்டபோது
ஏழு மணிக்கு மேல் தான் தேநீர் தர முடியும் – பால் அதற்குப் பிறகு தான்
கிடைக்குமாம்! – என்று சொல்லி விட்டார். தங்குமிடத்தில் அப்படியும் இப்படியும்
உலவிக் கொண்டிருந்தபோது பக்கத்து அறையில் இருந்தவர் கையில் கேமராவுடன் வெளியே
வந்தார். சஞ்சீவும் கூடவே வந்து தங்குமிடத்தின் கடைசி தளத்தில் இருக்கும் ஒரு
அறைக்கு அழைத்துச் சென்றார் – அங்கிருந்து மலைப்பிரதேசம் முழுவதும் காண முடியும்
என்று அவர் சொன்னதும், எங்கள் கேமராக்களையும் எடுத்துச் சென்றோம். மேலே உள்ள அறையின் திரைச் சீலைகளை விலக்க – இமய
மலையின் அற்புதக் காட்சி தெளிவாகத் தெரிந்தது.
முதல்
நாள் இரவு கிராமத்தினர் மலை நோக்கி வணக்கம்/பிரார்த்தனை செலுத்துவது ஏன் என்று
கேட்க நினைத்திருந்த எங்களுக்குக் கேட்காமலேயே பதில் கிடைத்தது சஞ்சீவிடம்
இருந்து. அந்த மலைப்பகுதியில் தான் பஞ்ச கைலாசங்கள் என அழைக்கப்படும் கைலாஷ்களில்
ஒன்றான கின்னர் கைலாஷ் எனும் கைலாசம் இருக்கிறது. பெரும்பாலும் மான்சரோவர் கைலாஷ்
யாத்திரை தான் பலருக்கும் தெரிந்த கைலாஷ் யாத்திரை. இந்த கின்னர் கைலாஷ் யாத்திரை
ஹிமாச்சலப் பிரதேசத்தில் மட்டுமல்லாது வடக்கின் பல மாநிலங்களிலும் சிவ பக்தர்கள்
இடையே பிரசித்தி பெற்றது. கல்பா கிராமத்திலிருந்து சுமார் இரண்டு அல்லது மூன்று
நாட்கள் மலைப்பாதையில் ஏறியும் இறங்கியும் சென்று [ட்ரெக்கிங்] தான் இந்த கின்னர்
கைலாஷ்-ஐ அடைய முடியும்.
இந்தத்
தகவல்களைச் சொல்லிக் கொண்டே இன்றைக்கு மேகமூட்டம் அதிகமாக இருப்பதால் உங்களுக்கு
தரிசனம் இதுவரை கிடைக்கவில்லை. கொஞ்சம் பொறுத்திருந்தால் தரிசனம் கிடைக்கலாம்
என்று சொல்ல, பக்கத்து அறையில் தங்கி இருந்தவர் [அவர் இரண்டு நாட்களாக அங்கேயே
தங்கி இருக்கிறாராம்!], இரண்டு நாட்களாக என்னால் பார்க்க முடியவில்லை என்று
சொல்லிக் கொண்டிருந்தார். ஆஹா…. மேக மூட்டம் சுத்தமாக விலக – அதோ கின்னர் கைலாஷ்!
79 அடி சிவலிங்கம் கல்பா கிராமத்திலிருந்து மிகச் சிறிய மலைமுகடாக எங்களுக்குக்
காட்சி தந்தது. நானும் நண்பரும், பக்கத்து
அறையில் இருந்தவரும் நிறைய படங்களை எடுத்துத் தள்ளினோம். என்னுடைய கேமராவில் 55-250
zoom இருந்ததால் முடிந்தவரை zoom செய்து படங்களை எடுத்தேன்.
நிறைய
நேரத்திற்கு மேக மூட்டம் இல்லை என்பதால் நல்ல தரிசனம் எங்களுக்கு! உங்களுக்கு நல்ல
அதிர்ஷ்டம் இருந்ததால் ஒரே நாளில் இங்கே தரிசனம் கிடைத்தது – சிலர் மூன்று நாட்கள்
தங்கியும் தரிசனம் கிடைத்ததில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார். பக்கத்து அறையில்
தங்கி இருந்தவர் இரண்டு நாட்களுக்குப் பிறகு தான் தனக்கும் தரிசனம் வாய்த்தது
என்று சொல்லிக் கொண்டிருந்தார். கின்னர் கைலாஷ் – சிவபெருமானிடம் அனைவருக்கும்
நல்லதே நடக்கட்டும் என வேண்டிக் கொண்டு மேலதிகத் தகவல்களை சஞ்சீவ் அவர்களிடம்
கேட்டுக் கொண்டிருந்தேன். கீழே தந்திருக்கும்
கின்னர் கைலாஷ் பற்றிய தகவல்கள் கேட்டு, படித்து அறிந்த தகவல்கள். உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என
நம்புகிறேன். வாருங்கள் தகவல்களுக்குப்
போகலாம்!
கின்னர்
கைலாஷ் – கடல் மட்டத்திலிருந்து 19850 அடி உயரத்தில் இருக்கும் ஒரு இடம் தான் இந்த
கின்னர் கைலாஷ். அங்கே 79 அடி உயரத்தில் இயற்கையாக அமைந்த சிவலிங்கம் ஒன்று உண்டு.
கல்பா நகரத்திலிருந்து மேக மூட்டம் இல்லாத நாட்களில் இந்த 79 அடி சிவலிங்கத்தினைக்
காண முடியும். கிராமத்தினர் அனைவரும் இந்த கின்னர் கைலாஷ் சிவலிங்கத்தினை நோக்கியே
பிரார்த்தனை செய்கிறார்கள். சிவபெருமான் இந்த இடத்தில் தான் தனது துணைவி
பார்வதியுடன் இருப்பதாக உள்ளூர் மக்களின் நம்பிக்கை. இந்த இடத்திற்குச் செல்வது
என்பது அத்தனை சுலபமில்லை. உயரத்தினைப் பார்த்தாலே உங்களுக்கு எத்தனை கடினம்
என்பது புலப்படும். ஆனாலும் மே முதல் அக்டோபர் வரை – மழை நாட்களைத் தவிர்த்து –
இந்த கின்னர் கைலாஷ் சிவலிங்கத்தினைத் தரிசனம் செய்யவும், பரிக்ரமா என
அழைக்கப்படும் கிரிவலம் செய்யவும் நிறைய பக்தர்கள் வருவதுண்டு.
பக்தி
இருந்தால் எந்தக் கடினமான பாதையும் சுலபம் ஆகும் என்பதைப் பல முறை
உணர்ந்திருக்கிறோம். படித்திருக்கிறோம். இப்படி கின்னர் கைலாஷ் மலையேற்றம்
செய்வதற்காகவே சிலர் வெளி மாநிலங்களிலிருந்தும் வருகிறார்கள். மலையடிவாரத்தில்
இருக்கும் காவல்துறை அலுவலகத்தில் பதிவு செய்து கொண்ட பிறகு தான் இந்த மலையேற்றம்
செய்ய முடியும். மிகவும் கடினமான மலையேற்றம் என்பதால் முதல் முறை மலையேற்றம்
செய்கிறவர்கள் இந்தப் பயணத்தினைத் தவிர்ப்பது நல்லது. மலையேற்றம் எவ்வளவு
கடுமையானது என்பதைப் பார்க்க நினைத்தால் ஒரு காணொளியின் சுட்டி கீழே
தந்திருக்கிறேன். வழி நெடுக அற்புதமான மலைக் காட்சிகளும், ஓடைகளும், நதிகளும்,
பூக்கள் நிறைந்த சமவெளிப் பகுதிகளும் [மலைத்தொடர் என்பதால் நடுநடுவே இப்படி
சமவெளிகளும் உண்டு], ஏற்றம் இறக்கம் என அனைத்தும் இந்த மலையேற்றத்தில் உண்டு.
விதம்
விதமான பூக்களை எங்கள் பயணத்தில் பார்த்தோம் என்றாலும் மலைப்பகுதியில் இப்படி
மலையேற்றம் செய்யும் போது இன்னும் நிறைய விதமான பூக்களைக் காணும் வாய்ப்பு
கிடைக்கும். முதல் நாள் பகல் முழுவதும் நடந்து கடல் மட்டத்திலிருந்து 11780 அடி
உயரத்தில் இருக்கும் ஆஷிகி பார்க் எனும் இடத்தினை அடைந்து அங்கே இருக்கும்
சமவெளியில் இரவு தங்கல்! அடுத்த நாள் அங்கிருந்து புறப்பட்டு கின்னர் கைலாஷ்
சென்று கின்னர் கைலாஷ் சிவலிங்கம் தரிசித்த பிறகு, திரும்ப வேண்டும். வழியில்
கைலாஷ் dhத்வார், Bபீம் dhத்வார், பார்வதி குண்ட் போன்ற அழகிய இடங்களைப் பார்க்க
முடியும். கின்னர் கைலாஷ் பகுதியில் தங்கமுடியாது என்பதால் கீழ் நோக்கிய பயணமும்
இரண்டாம் நாளே தொடங்கி ஆஷிகி பார்க் வந்தடைய வேண்டும். இல்லை எனில் தொடக்க
இடத்திற்கு வந்து சேர வேண்டும் – அது ஒவ்வொருவருடைய தாங்கும்/நடக்கும் சக்தியைப்
பொறுத்தது. மொத்த ட்ரெக்கிங் நாட்கள் மூன்றாக இருந்தால் நலம்!
இந்தத்
தகவல்களைக் கேட்டுக் கொண்டும், கின்னர் கைலாஷ் சிவலிங்க தரிசனம் கண்டு, சில பல நிழற்படங்கள்
எடுத்த பிறகு எங்கள் அந்த நாளின் பயணத்திற்காக தயாரானோம். அந்த நாள் எங்களுக்கு
என்ன அனுபவங்களைத் தந்தது என்பதை வரும் பதிவுகளில் சொல்கிறேன். இன்றைக்கு பதிவில்
சொன்ன விஷயங்களைப் பற்றிய உங்கள் சிந்தனைகளையும் எண்ணங்களையும் பின்னூட்டம் வழியாக
பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி. நாளை வேறு ஒரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட்
புது
தில்லி
பொறுத்துக்கொள்ளும் சாத்வீக காலம் எல்லாம் இப்போது நடைமுறைக்கு ஒவ்வாது என்று நினைக்கிறேன். மோதி மிதித்து விடுதலே நலம்!!!!
பதிலளிநீக்குகுட்மார்னிங் வெங்கட்.
இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.
நீக்கு//மோதி மிதித்து விடுதலே நலம்.// சில சமயத்தில் இப்படியும் செய்ய வேண்டி இருக்கும்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கொடுத்து வைத்திருக்க வேண்டும் இந்த இடங்களுக்கு சென்று வந்ததற்கு. எவ்வளவு அழகிய இடங்கள், காட்சிகள்...
பதிலளிநீக்கு//கொடுத்து வைத்திருக்க வேண்டும்// :)))
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
இங்கு செல்லவே கொடுத்து வைத்திருக்கவேண்டும் என்றால் அங்கே மலை மேலே ஏற எவ்வளவு அதிருஷ்டம் இருக்கவேண்டும்... கொடுத்து வைத்தவரால் அந்த கிராம மக்கள்.
பதிலளிநீக்குஅந்த கிராம மக்கள் கொடுத்து வைத்தவர்கள் தான் ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கின்னர் கைலாஷ்.. முதன்முறை கேள்விப்படுகிறேன் !
பதிலளிநீக்குவினாயக சதுர்த்தி வாழ்த்துகள் வெங்கட். எத்தனை அற்புதமான இடம்.
நீக்குமலைக் காட்சிகளே அழகு. அதுவும் இந்த கின்னர் சிவலிங்கக் காட்சிகள் மிக அருமை. கடவுள் அருள் இருந்தால தான் இது போன்ற இடங்களுக்குச் செல்லும் அதிர்ஷ்டம் கிடைக்கும்.
காணொளி மிகமிக இனிமை.
மேகம் விலக்கி காட்சி கொடுத்த சிவனார்
அருளே அருள்.
உங்கள் தயவில் திங்கட்கிழமை ஈஸ்வரன் தயவு கிடைத்தது.
நன்றி வெங்கட். வாழ்த்துகள்.
ஆஹா... நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை ரிஷபன் ஜி. மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.
நீக்குஆச்சர்யமான விடயங்கள் ஜி காணொளி கண்டேன். இந்தியாவிலேயே எவ்வளவோ இடங்கள் பார்க்க வேண்டி இருக்கிறது.
பதிலளிநீக்குஉண்மை தான் கில்லர்ஜி. நம் நாட்டிலேயே பார்க்க வேண்டிய எண்ணிலடங்கா இடங்கள் உண்டு.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
யாரோ ஒருவர் மணிகளைச் சுழற்றி பிரார்த்தனை செய்ய அந்த மணிகளின் நாதம் காதுக்குள் நுழைந்து ஒரு வித அமைதியைத் தந்தது. இவ்வாறாக நான் நம் கோயிலுக்குச் சென்றபோது பல முறை உணர்ந்துள்ளேன். நன்றி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குபுதிய இடம் பற்றி அறிந்துகொண்டேன் .படங்கள் அருமை தொடர்கிறேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்குகின்னர் கைலாஷ் இப்போதுதான் கேள்வி படுகிறேன்.
பதிலளிநீக்குமிக அழகாக இருக்கிறது.
கின்னர் கைலாஷ் சென்று கின்னர் கைலாஷ் சிவலிங்கம் தரிசித்த நிறைவு கிடைத்தது.
அழகான இடம் தான் கோமதிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
Good Ji...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குகாணொளி பார்த்தேன், கின்னர் கைலாஷ் பார்ப்பது கடினம் என்று தெரிகிறது.
பதிலளிநீக்குநேரில் சென்று பார்ப்பது கடினமான வேலை தான் கோமதிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
உங்களுடைய எழுத்து உங்களுடன் நானும் பயணித்தது போலிருந்தது. அருமை.
பதிலளிநீக்குஉங்களுடைய முதல் வருகை. மகிழ்ச்சி ஜோசஃப் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
காணக்கிடைக்காத காட்சிகள் கண்டு மகிழ்ந்தோம். நேரடி தரிசனத்துக்கு கொடுத்துவைக்க வேண்டும் நீங்கள் கொடுத்து வைத்தவர்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்கு
பதிலளிநீக்குகின்னர் கைலாஷ்.....வாவ் மிக மிக அழகான இடம் ..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுப்ரேம் ஜி.
நீக்கு