புதன், 11 செப்டம்பர், 2019

கடைசி கிராமம் – இந்தியாவின் கடைசி டாபா – உணவகம்



அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

உன்னால் நூறு பேருக்கு உணவு கொடுக்க முடியாவிட்டால் பரவாயில்லை. ஒருவருக்குக் கொடு. எவ்வளவு கொடுக்கிறோம் என்பதல்ல, எந்த மனநிலையில் கொடுக்கிறோம் என்பதே முக்கியம் – அன்னை தெரசா.



படம்-1: ஹிந்துஸ்தான் கா ஆக்ரி டாபா - ஒரு பார்வை...

கடைசி கிராமம் என்ற தலைப்பில் இதுவரை வெளிவந்த பதிவுகளின் சுட்டிகள் கீழே:









படம்-2: டாபாவிலிருந்து காணக் கிடைக்கும் ஆறும் பாலமும்...


படம்-3: சாலையிலிருந்து கீழே இரும்புப் படிக்கட்டுகளில் இறங்கும்போது...

சென்ற பதிவில் பேருந்தில் கிடைத்த ஸ்னேகம் பற்றிச் சொல்லியதோடு தங்குமிடம் சென்று சேர்ந்து உடைமைகளை வைத்த பின்னர் மதிய உணவுக்காக எங்கே சென்றோம் என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன் என்று சொல்லி இருந்தேன். நாங்கள் சென்ற இடம் “ஹிந்துஸ்தான் கா ஆக்ரி dhடாபா” என்ற உணவகம். இந்திய திபெத் எல்லையில் இருக்கும் கடைசி உணவகம் என்ற அடைமொழியுடன் இருக்கும் மிகச் சிறிய உணவகம்.  chசித்குல் நகருக்குச் செல்லும் பயணம், இங்கே ஒரு வேளையாவது உணவு சாப்பிடாமல் நிறைவடையாது என்பது பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் சொல்லும் விஷயம்.  அப்படி இங்கே என்ன ஸ்பெஷல்? ஆரம்ப காலத்தில் இந்த ஊரில் இருந்த ஒரே உணவகம் இந்த “ஹிந்துஸ்தான் கா ஆக்ரி டாபா” மட்டுமே. இப்போது இன்னும் சில உணவகங்கள் வந்து விட்டாலும், இதைப் போல சுவை இல்லை.


படம்-4: ஹிந்துஸ்தான் கா ஆக்ரி டாபா - சாலையிலிருந்து...


படம்-5: சுழித்துக் கொண்டு ஓடும் Bபாஸ்pபா ஆறு...

ஓ.பி. நேghகி அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த சிறு உணவகம் சுவையான ஹிமாச்சலப் பிரதேசத்தின் உணவான “ராஜ்மா சாவல்”, பராந்தா போன்றவற்றை மட்டுமே தருகிறார்கள். ப்ரெட் டோஸ்ட், ப்ரெட் ஆம்லேட், மேகி நூடுல்ஸ் போன்றவை இருந்தாலும் பெரும்பாலும் முதல் இரண்டு உணவு தான் சாப்பிடுகிறார்கள்.  சாலையிலிருந்து கீழே சில இரும்புப் படிகள் மூலம் கீழே இறங்கினால் சில Tableகளும் Chairகளும் இருக்க, ஒரு ஓரத்தில் சமையலறை! அனைத்துமே மிகச் சாதாரணமான சூழல் என்றாலும் சற்றே பார்வையை வெளியே அனுப்பினால் கீழே சலசலத்து ஓடும் Bபாஸ்pபா ஆறும், ஆற்றுக்கு அந்தப் புறம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மலைச்சிகரங்களும் தான். அத்தனை அழகான காட்சிகளைப் பார்த்தபடியே உணவுக்குக் காத்திருந்த வேளையில் எங்களை நாங்கள் மறந்திருந்தோம்.


படம்-6: டாபாவிலிருந்து இயற்கைக் காட்சிகள்...


படம்-7: ஆறும் ஆற்றோர மரங்களும் - ஒரு கிட்டப்பார்வை...

நேghகி அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் சுழன்று சுழன்று வேலை செய்கிறார்கள். சமைப்பது, சமைத்த உணவை பகிர்வது என அனைத்தும் குடும்பத்தினர் தான். பாசத்துடன் சமைத்து இப்படி வருபவர்களுக்கு பரிமாறும் செயல் மிகவும் பாராட்டக் கூடியது தானே. காலையிலிருந்து பழம், கேக் மட்டுமே சாப்பிட்டு வந்திருந்த எங்களுக்கு நல்ல பசி. என்ன கிடைக்கும் எனக் கேட்க, ”ராஜ்மா/தால் சாவல்” மட்டுமே கிடைக்கும் என்று சொல்ல அதையே எங்களுக்கும் தரச் சொன்னோம்.  சுடச் சுட சாதம் தயாராகிறது என்பதால் கொஞ்சம் காத்திருக்கச் சொன்னார்கள். இயற்கையை ரசித்தபடியே காத்திருந்தோம். பத்து-பதினைந்து நிமிடங்கள் கழித்து ஒரு தட்டில் சுடச் சுட சாதமும் ஒரு கிண்ணத்தில் ராஜ்மாவும் மற்ற கிண்ணத்தில் தாலும் வந்தது. தொட்டுக்கொள்ள என்னவென்று கேட்க, ஒரு தட்டு வந்தது! அந்தத் தட்டில் என்ன இருந்தது?


படம்-8: இயற்கையை ரசிப்போம் தொடர்ந்து...


படம்-9: தட்டு நிறைய வறுத்த சிகப்பு மிளகாய்...

தட்டு நிறைய சிகப்பு மிளகாய்… எண்ணையில் வறுத்த சிகப்பு மிளகாய்! பார்க்கும்போதே உடல் முழுவதும் எரிகிற மாதிரி உணர்வு. வேண்டாம் இந்த ஆபத்தான விளையாட்டு என்று அதை ஒதுக்கி அப்படியே ராஜ்மா/தால் சாவலைச் சுவைத்தோம். ஆகா என்னவொரு சுவை. chசித்குல் கிராமத்தில் இருந்த போது மூன்று வேளைகளில் இரண்டு வேளைகள் இங்கே தான் சாப்பிட்டோம். மூன்றாம் வேளை கடை மூடிவிட்டதால் சாப்பிடமுடியவில்லை. அந்த வேளை சாப்பிட்டது அவ்வளவு சுவைக்கவில்லை! இயற்கை அழகை ரசித்தபடி சாப்பிட்ட உணவும் மிகவும் பிடித்திருந்தது. சுடச் சுட தேநீரும் ராஜ்மா சாவல் என சாப்பிட்டு முடித்த பிறகு நேghகி அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தோம். முன்னர் அவருடைய உணவகம் மட்டுமே இருந்தது என்றும் இப்போது இங்கே நிறைய தங்குமிடங்கள் வந்துவிட்டன என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்.


படம்-10: வளைந்து நெளிந்து ஓடும் ஆறு...


படம்-11: ஹிந்துஸ்தான் கா ஆக்ரி டாபா - மேஜைகளிலும்!...

சீசன் சமயத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவதால், புதிது புதிதாக தங்குமிடங்கள் கட்டுகிறார்கள்.  கட்டுமானப் பணிகள் அதிகம் நடப்பதால் கொஞ்சம் கொஞ்சமாக கிராமம் தனது அழகை இழந்து வருகிறது என்று வருத்தம் கொண்டார். ஆனால் போட்டிக்கு ஈடு கொடுக்க, தானும் கொஞ்சம் பெரிய அளவில் கட்டிடம் கட்டிக் கொண்டிருபதையும் சொன்னார். சின்னக் கடை என்றாலும், சுவையான உணவு தருவது தனது பழக்கம் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்.  அவரது குடும்பத்தினரும் இடைவிடாது பணி செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் கொடுத்த தேநீரின் சுவை அவ்வளவு சிறப்பாக இருந்தது. இரண்டு பேர் சாப்பிட்டு, தேநீரும் அருந்திய பிறகு உணவுக்கான தொகை எவ்வளவு என்று கேட்க 140/- மட்டுமே என்று சொன்னார்! சுவையான உணவுக்கு வாங்கிய தொகை ரொம்பவே குறைவு – அடுத்த நாள் வேறு ஒரு இடத்தில் இதே மாதிரி ராஜ்மா சாவல் சாப்பிட்ட போது கொடுத்த தொகை இதே போல் மூன்று மடங்கு!


படம்-12: பாலம் - தூரப் பார்வை... 


படம்-13: ஹிந்துஸ்தான் கா ஆக்ரி டாபா - பார்க்க மறக்காதீர்கள் எனச் சொல்லும் பதாகை...

நேghகி அவர்களிடம் கிராமத்தினைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். இயற்கை எழிலை ரசிப்பது தவிர வேறு இங்கே என்ன செய்யலாம்? என்றபோது கிராமியக் கோவில் பற்றியும் கிராமத்தில் சுற்றி வருவது பற்றியும் சொன்னார். கிராமத்திலிருந்து சுமார் மூன்றரை கிலோமீட்டர் தொலைவில் Check Post வரை நீங்கள் நடந்து சென்று வரலாம். அதற்கு மேல் செல்வதற்கு ITBP அனுமதி வேண்டும் என்றும் சொன்னார். அந்த Check Post தாண்டி சில கிலோமீட்டர்கள் சென்றால் இந்திய திபெத் எல்லை வரும் – ஆனால் அங்கே ஒன்றுமில்லை என்றும் சொன்னார். எங்களுக்கு என்ன திட்டம்? எத்தனை நாள் இங்கே இருக்கப் போகிறீர்கள் எனக் கேட்டு, ஒரு நாள் என்றதும் அப்படியானால், இப்போதே Check Post வரை நடந்து விட்டு வாருங்கள் – இயற்கை அன்னையின் எழிலை ரசித்து வாருங்கள் என்று சொன்னார்.


படம்-14: இங்கேயும் ஃப்ளக்ஸ் அரக்கன் வந்து விட்டான்!...


படம்-15: மலை முகடு ஒன்றில் பட்டொளி வீசி பறக்கும் பாரதக் கொடி...

”ஹிந்துஸ்தான் கா ஆக்ரி டாபா”வில் இரவு உணவு சாப்பிட முடியாமல் போனதில் கொஞ்சம் வருத்தம் உண்டு! ஆனால் அடுத்த நாள் காலை உணவை அங்கே தான் சாப்பிட்டோம். உணவகத்தில் அமர்ந்து கொண்டிருந்த போது கீழே ஓடிய ஆற்றையும், ஆற்றின் குறுக்கே அமைந்திருந்த இரும்புப் பாலத்தையும், மலைப் பிரதேசத்தினையும் நிறைய படங்கள் எடுத்தோம். உணவகத்தில் வந்த சுற்றுலாப் பயணிகள் உணவக உரிமையாளருடன் எடுத்துக் கொண்ட படங்களை மாட்டி வைத்திருந்தார். நாங்கள் அவருடன் படம் எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், காட்சிகளை மட்டும் படம் பிடித்துக் கொண்டோம். உணவுக்கு உரிய பணத்தினை அவருக்குத் தந்த பிறகு அப்படியே நடக்க ஆரம்பித்தோம்.  எங்கள் கூடவே மைக்கேல், ப்ரஷாந்த் [இதற்கு முந்தைய பதிவில் சொன்ன கேரள இளைஞர்] சேர்ந்து கொள்ள இன்னும் ஒரு சுற்றுலாப் பயணியும் சேர்ந்து கொண்டார்! அப்படியே நடக்க ஆரம்பித்தோம். அந்த நடைப்பயணத்தில் கிடைத்த அனுபவங்கள் அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

இன்றைக்கு பதிவில் சொன்ன விஷயங்களைப் பற்றிய உங்கள் சிந்தனைகளையும் எண்ணங்களையும் பின்னூட்டம் வழியாக பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி. நாளை வேறு ஒரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

24 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.

    பதிவு சொல்லப்போகும் விஷயங்களுக்குத் தக்க பொன்மொழிகள் சொல்வது சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

      பொன்மொழி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. தாபாவிலிருந்து கண்ணில்படும் அந்தப் பாலம் பயமுறுத்துகிறது! அடுத்தப்படத்திலேயே அதில் இறங்கி நடக்க முற்படுவது சுவாரஸ்யம்.  பசியில் சாப்பிடும் எந்த உணவும் ருசிக்கும் என்பதையும் மீறி அந்த உணவு ருசித்திருக்கும் என்று நினைக்கிறேன்.  வறுத்த சிகப்புமிளகாய்...  பயமுறுத்துகிறார்களே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாலம் - :)

      படிகளில் தான் இறங்குகிறோம்... பாலத்தில் அல்ல ஸ்ரீராம். படிகள் வழி கீழே இறங்கினால் உணவகம்.

      சிவப்பு மிளகாய் பார்க்கவே பயமாகத் தான் இருந்தது. அதனாலேயே சாப்பிடவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. போட்டியாளர்கள் அதிக பணம் வாங்கினாலும் நேகி குடும்பத்தினர் குறித்த ளவு பணம் வாங்குவது பாராட்டப்பபடவேண்டிய செயல்.  அவர்களை ஒரு படம் பிடித்திருக்கலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் படம் எடுக்கத் தோன்றவில்லை. எடுத்திருக்கலாம்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. >>> இந்திய திபெத் எல்லையில் இருக்கும் கடைசி உணவகம்..<<<

    செய்தியும் படங்களும் அழகு.. அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் செய்தியும் உங்களுக்கு பிடித்து இருந்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  5. நல்ல சுவாரஸ்யமான தகவல்கள் ஜி
    தொடர்ந்து வருகிறேன்... திபெத் எல்லைக்கும்...

    "ப்ளக் அரக்கன்" ஹா.. ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஃப்ளக்ஸ் அரக்கன்... :(

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  6. அருமையான பொன்மொழி.

    படங்கள் அழகு.
    உணவுக்கு தொட்டுக் கொள்ள வறுத்த மிளகாய் அதை சாப்பிடுகிறார்களா?
    குளிருக்கு மிளகாய் காரம் வேண்டி இருக்குமோ ! அவர்களுக்கு?

    தங்கும் விடுதி, உணவு விடுதி என்று மலை பிரதேஷங்களில் இயற்கையை அழிப்பது நடந்து கொண்டு இருக்கிறது அது தவிர்க்க முடியாத ஒன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குளிருக்கு மிளகாய் காரம் வேண்டி இருக்குமோ? இருக்கலாம் கோமதிம்மா.

      மலைப் பிரதேசங்களில் இயற்கை அழிப்பு - வேதனை தரும் உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. ஆறும் பாலமும் காட்சி மனதை அள்ளிகொண்டே போகிறது.

    மலையில் இந்தியக்கொடி அருமை.

    ஆகா!தட்டுநிறைய சிவப்பு மிளகாய் காரமாக இருக்குமா தெரியாது. நாங்கள் ஒரு முறையில் காய்ந்த மிளகாய் பொரிப்போம் உப்பு தண்ணீரில் மிளகாயின் தலையை கிள்ளி விட்டு 4-5 மணித்தியாலங்கள் ஊறவைத்து பொரித்து எடுப்போம் உப்புடன் சேர்ந்து சிறிதுகாரமாக இருக்கும் சாததுடன்,புட்டுடன் சாப்பிட மிகவும் ருசி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மோர் மிளகாய் என மோரில் ஊற வைத்த மிளகாய் பயன்பாடு இங்கே உண்டு. ஆனால் இந்த மிளகாய் அப்படி அல்ல.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
    2. இலங்கையில் இது போல் சிவப்பு மிளகாய் பொரித்து வைத்தார்களே என்று நினைத்தேன் மாதேவி. மோர் போடாமல் தண்ணீரில் ஊற வைத்து வடித்து பொரித்தது இல்லையா?

      நீக்கு
    3. உங்களுடைய கேள்விக்கு மாதேவி பதில் சொல்வார் என நானும் காத்திருக்கிறேன் கோமதிம்மா....

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    4. ஆமாம். கோமதி அரசு. இது மோர் கலந்து வெய்யிலில் காயவைத்து எடுப்பது அல்ல. உப்பு நீரில் மட்டும் ஊறவைத்து பொரித்து எடுக்கும் சிவப்பு காய்ந்த மிளகாய்.சற்று காரம்தான் ஒன்று சாப்பிடுவோம். இங்கு காரம் நன்கு சாப்பிடுவார்கள்.

      நீக்கு
    5. காரம் - முன்பெல்லாம் நான் கூட காரமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். சில வருடங்களாகவே தவிர்த்து வருகிறேன் மாதேவி. தகவல் தந்தமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. படங்களும் தகவல்களும் அருமை...

    இயற்கையை ரசித்துக் கொண்டே இருக்கலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயற்கையை ரசித்துக் கொண்டே இருக்கலாம்... ஆமாம் தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. படங்கள் அனைத்தும் சூப்பர், அந்தப் பாலம் தெரியும் படம் நம்ப முடியவில்லை, மிக அழகாக எடுத்திருக்கிறீஇங்க, பிரிண்ட் பண்ணிப் பிரேம் பண்ணி வைக்கலாம் அவ்ளோ அழகு.

    ஓ அவர்கள் உறைப்பு அதிகம் சாப்பிடுவினமோ.. எங்கள் ஊரும் உறைப்புக்கு பேர் போன இடம்தான்.. யாழ்ப்பாணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அதிரா.

      யாழ்ப்பாணம் தேங்காய் விளைவிப்பதற்க்கும் கூட பிரபலமானது இல்லையா அதிரா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. இந்தியாவின் கடைசி கிராமம். அதில் இப்படி ஒரு உணவகம்.
      படி இறங்கி கீழே போக வேண்டுமா. நல்ல திடசாலியான
      மக்கள் இருக்கும் இடம்.
      ராஜ்மா சாவல் எப்படி செய்வார்கள். இங்கே ராஜ்மா தால் தினம் உண்டு. பாஸ்தாவுக்குத் தொட்டுக்கொள்ள.

      மலைகளின் அழகும் ஆற்றின் வெண்மையும் மிக அழகு.
      இரவு எங்கே தங்கினீர்கள்.
      மிரட்டுகிறது வறுத்த மிளகாய்.
      ஒருவேளை கஷ்மீரி சில்லியாக இருக்குமோ.
      மாதேவி சொல்வது போல உப்பில் ஊறவைத்தால் சுவையாக இருக்குமோ.

      நமக்கு வேண்டாம்ப்பா. விஷப் பரீட்சை.
      மலைமேல் இந்தியக் கொடி கம்பீரம்.
      அடுத்த படுதிக்குக் காத்திருக்கிறேன்.

      நீக்கு
    3. ஆமாம் வல்லிம்மா. சில படிகள் - இரும்புப் படிகளில் கீழே இறங்கிச் செல்ல வேண்டும்.

      இரவு தங்கியது அதே கிராமத்தில் தான் மா. முந்தைய பகுதியில் தங்குமிடம் பற்றி சொல்லி இருக்கிறேன் மா.

      காஷ்மீரி சில்லி அல்ல! உப்பிலும் ஊற வைக்கவில்லை - அப்படியே வறுத்து வைத்தது என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டதால் சுவைக்கவில்லை. விஷப்பரீட்சை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....