வியாழன், 12 செப்டம்பர், 2019

ஒல்லிக்குச்சி பீமன்…



அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைக்கு தில்லி நண்பர் பத்மநாபன் அவர்களின் பதிவு! சற்றே இடைவெளிக்குப் பிறகு அவருடைய பதிவு! பதிவுக்குப் போகும் முன்னர், கண்ணதாசன் அவர்களின் பொன்மொழிகளில் ஒன்றைப் படிக்கலாமா – வெங்கட், புது தில்லி.

”அழும் போது தனிமையில் அழு. சிரிக்கும்போது நண்பர்களோடு சிரி! கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள். தனிமையில் சிரித்தால் பைத்தியம் என்பார்கள்!” – கண்ணதாசன்.
 
ஒல்லிக்குச்சி பீமன்…


நடிப்புத்திறமை என்பது ஒவ்வொரு மனுசனுக்கும் தேவையான ஒண்ணு. குடும்பத்தில குழப்பம் வராம இருக்கணும்னாகூட என்னமா நடிக்க வேண்டியதிருக்கு. எந்த குடும்பத்திலேயாவது கணவன் மனைவிக்குள் குடும்பச் சண்டை, குடுமிபிடி சண்டை வந்ததே இல்லேன்னா ரெண்டு பேருமே சிறந்த நடிகர்களா இருக்கணும். கோபம் வந்தா வெளியில் காட்டாம சிரிச்சா மாதிரி நடிக்கணும். சிலசமயம் சிரிப்பு வந்தாலும் சிரிக்காத மாதிரி நடிக்கணும். மாமியார் வீட்டுக்கு வந்தா சந்தோஷமா இருக்கிற மாதிரி காட்டிக்கணும். மனைவியின் தோழிகள் வீட்டுக்கு வந்தா யோக்கியன் மாதிரி நடிக்கணும். நடிக்கத் தெரியாதவனுக்கு லைஃப் கொஞ்சம் கஷ்டம்தான்!  ஆனாலும் சண்டையே போடாம குடும்பம் நடத்துனா என்னத்த வாழ்க்கை! போர் அடிச்சிராது!

இப்படித்தான் எங்க அலுவலகத்தில்   கிருஷ்ணன் மாமான்னு ஒருத்தர் இருந்தார். பாலக்காட்டுக்காரர். நான் வேலையில் சேர்ந்தபோது அவர் ஓய்வு பெறும் வயதை எட்டியிருந்தார். ஆனால் அந்த வயதிலும் உற்சாகமாய் இருப்பார்! நாயர் என்னும் என்னுடைய பாஸ்தான் அவருக்கும் பாஸாக இருந்தார். நாயர் ரொம்ப சாதுவானவர். எப்போதும் வேலை வேலை என்று இருப்பார். அப்போதெல்லாம் நான், வெங்கட் மற்றும் நான்கு ஐந்து பேர் மதிய உணவு வேளையில் ஒன்று கூடி கும்மியடிப்பது வழக்கம். கிருஷ்ணமாமாவும் அவ்வப்போது கலந்து கொள்வார். அதுவும் குளிர்காலம் வந்தால் அந்த மதிய வேளைகள் கலகலவென போகும். ஒருநாள் கிருஷ்ணமாமா "என்னடா பத்மநாபா! எப்படி இருக்காய்" என்று கேட்டபடியே வந்து சேர்ந்தார்.

கொஞ்ச தொலைவில் நாயர் அவர் நண்பர்களுடன் வந்து கொண்டிருந்தார். கிருஷ்ணமாமா என்னைப் பார்த்து "டேய்! வர்ரான் கள்ளன்!" என்று பாலக்காட்டுப் பாஷையில் சொல்லி சிரிக்கவும் நாயர் பக்கத்தில் நெருங்கி வரவும் சரியாக இருந்தது. உடனே நாயரைப் பார்த்து "நாயர் சாப்! நமஸ்காரம்! இப்பதன்னே நானும் பத்மநாபனும் உங்களைப் பற்றி பேசிண்டிருந்தோம்! நல்ல ஆபீஸர்ன்னு" ன்னு சொல்லி சிரித்தார். நான் எசகு பிசகாக நாயரைப் பார்த்து சிரித்து விட்டு கிருஷ்ணமாமாவைப் பார்த்து மனசுக்குள் "என்னவொரு உலகமகா நடிப்புடா சாமி" ன்னு நினைத்துக் கொண்டேன். அதனால் என்ன! அவரது நடிப்பால் நாயருக்கும் சந்தோஷம். இவரோட நடிப்பை பார்த்த எங்களுக்கும் அற்ப சந்தோஷம். எல்லோருக்கும் சந்தோஷம். அதனால் நடியுங்கள்! சந்தோஷமாக நடியுங்கள். அடுத்தவருக்கு சந்தோஷம் கொடுக்கும் நடிப்பை நடியுங்கள்.

சரி அது கிடக்கட்டும் விடுங்க! நான் நாடகம் போட்ட கதையை இப்ப சொல்லுகேன். கேக்கேளா!

ஒருமுறை கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா தலைமையகத்தில் ஒரு முகாம். முழுக்க முழுக்க விவேகானந்தா கேந்திரா கிராம முன்னேற்றத் திட்ட தொண்டர்களும் மற்றும் பாலர் பள்ளி ஆசிரியைகளும் மட்டுமே கலந்து கொண்ட புத்துணர்வு முகாம் அது. சுமார் ஒரு எண்பது பேர் கலந்து கொண்டோம். கன்னியாகுமரி, தென் திருநெல்வேலி, வடக்கு திருநெல்வேலி (தற்போதைய தூத்துக்குடி மாவட்டம்) மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த நண்பர்கள் கலந்து கொண்ட முகாம் அது. அதிகாலை ஐந்து மணிக்கு காலைக்கடன்கள் முடித்து பின் யோகாவுடன் ஆரம்பிக்கும் தின நிகழ்வுகள் மாலை ஐந்துமணி வரை தொடரும். பின் கொஞ்சம் விளையாட்டு அதன் பின் பஜனை அரங்கத்தில் கொஞ்சம் இணைந்து பாடுவோம் இறைவனை பாடுவோம். பின் ஏழுமணி அளவில் இரவு உணவு உண்டபின் பொழுது போக்க மீண்டும் அந்த பெரிய அரங்கத்தில் அனைவரும் ஒன்று கூடி இரவு ஒன்பது மணி வரை ஏதாவது கலைநிகழ்ச்சி எங்களுக்குள் நடத்தி மகிழ்ந்திருப்போம்.

இந்த நேரத்தில் எங்களுக்குள் ஒரு ஆரோக்கியமான போட்டி ஆரம்பிக்கும். நான்கு நாட்கள் முகாம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாவட்ட நண்பர்கள் அரைமணிநேரம் குழுவாக தங்கள் திறமைகளை காட்ட வேண்டும். கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டது வடக்குத் திருநெல்வேலி விவேகானந்தா கேந்திரம். அங்கு பன்னீர்செல்வம் என்றொரு நண்பர் உண்டு. அற்புதமாக பாடுவார். தியாகத்தின் சிறப்பை எடுத்துச் சொல்லும் "கண்ணா உன் சந்நிதியில் நானும் இடம் பெற வேண்டும்" என்று அவர் உருகி உருகி பாட மீண்டும் மீண்டும் கேட்போம்.

"ஊதுபத்தி எரிவதென்ன, அதற்கிங்கு தகுதி என்ன?
தன்னையே அழித்துக் கொண்டு தருவது நறுமணம்தான் - தியாகமே தகுதி என்று உணர்ந்தேன்!"

"கற்பூர ஜோதியென்ன, அதற்கிங்கு தகுதி என்ன?
தன்னையே எரித்துக் கொண்டு தருவது நல்ஒளிதான் - தியாகமே தகுதி என்று உணர்ந்தேன்!"

இறைவனின் சந்நிதியில் இடம் பெற தியாகமே தகுதி என்று பாடல் போய்க் கொண்டு இருக்கும். முதல்நாள் பன்னீர்செல்வம் குழுவினர் அரைமணிநேரம் அருமையான பாட்டுக் கச்சேரியை கொடுத்து விட்டனர். இரண்டாம் நாள் ராமநாதபுரம் மாவட்டம் சார்பில் நாகலெட்சுமி என்ற சகோதரி நடத்திய ஓர் ஓரங்க நாடகம்.  மூன்றாவதுநாள் நான் பணிபுரியும் வள்ளியூர் கிளையின் முறை. எங்கள் பொறுப்பாளர் என்னிடமும் நண்பர் ராமகிருஷ்ணன் என்பவரிடமும் பொறுப்பை ஒப்படைத்தார்.

ஆஹா மாட்டி விட்டுட்டாங்களேய்யா, மாட்டி விட்டுட்டாங்களேய்யான்னு வடிவேலு பாணியில் புலம்பிவிட்டு யோசிச்சு ஒருவழியாக பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தை சுருக்கமாக நாடகமாப் போடலாம்னு முடிவு செய்தோம். எல்லாம் சரிதான். நடிக்க ஆளு வேணுமே. ஒரே நாளுல பாரதியாரை படிச்சு நடிக்கணுமே! ஒருவழியாக தருமன், பீமன், அர்ஜுனன், நகுல சகாதேவர்களை தேர்ந்தெடுத்து ரிகர்சல் எடுக்க ஆரம்பிச்சாச்சு. திரெளபதியாக நடிக்க ஆழ்வார்குறிச்சி சிவராஜன் ரெடி. அவருக்கு ஏற்ற மாதிரி புடவை, ஜாக்கெட் தேடித் தெண்டுனது தனிக்கதை. நடந்த ஒரே கொடுமை என்னன்னா பீமனாக நடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஒரு இருவத்தஞ்சு கிலோ எலும்பும் ஒரு பதினைஞ்சு கிலோ சதையும் வச்சுக்கிட்டு சுத்திக்கிட்டு இருந்த ஒரு புல்தடுக்கி பயில்வான்தான். ஆமாம், இன்று வரை அதே கட்டுடலை கட்டிக் காத்துவரும் நானேதான். [பார்க்க - என்றும் இருபத்தி எட்டு]

அதற்கு ஒரே காரணம் நாங்கள் எடுத்துக் கொண்ட பாஞ்சாலி சபதம் பகுதியில் அதிகம் வசனம் பீமனுக்கும் திரெளபதிக்கும்தான். நான் ஸ்கூல் படிக்கும்போது இந்த பீமனுடைய பகுதி மனப்பாடப்பகுதியாக இருந்ததால் எனக்கு அந்த வரிகள் நினைவு உள்ளது என்று சொல்லியதன் விளைவு, பீமன் டயட்டில் இருந்த பீமனாக வேண்டிய சூழல். எரிதழல் கொண்டு வா தம்பீ! கதிரை வைத்திழந்தான் அண்ணன் கையை எரித்திடுவோம் என்று உணர்ச்சி பிழம்பாக வசனமெல்லாம் பேச வேண்டும். ரிகர்சலை ஆரம்பித்து பீமன் டயலாக்கெல்லாம் நல்லாத்தான் சொல்லுகாரு. ஆனாலும் பீமனாக யாருதான் நடிக்கதுன்னு ஒரு நியாய தர்மம் வேண்டாமாய்யா.  நல்லவேளையாக அந்தப் பக்கமாக வந்த பத்தமடை முத்தப்பா கண்ணில் பட்டார். அடடே! இவர் எப்படி இவ்வளவு நேரம் கண்ணில் படாமல் போனார்.

கம்பீரமான கட்டுடலும் அதற்கேற்ற முறுக்கு மீசையும் வைத்துக் கொண்டு அமைதியாக கேந்திரப்பணி செய்து வந்தவர் முத்தப்பா. அவரை அழைத்து விஷயத்தை சொன்னேன். அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவரும் மனப்பாடப்பகுதியில் பாஞ்சாலி சபதம் படித்து பீமனை உள் வாங்கிக் கொண்டிருந்தார். பீமன் ஒப்பனை அவருக்கு அத்தனை பாந்தமாய் பொருந்த பீமன் என்னிடம் இருந்து தப்பித்தார். நாடகம் அருமையாக நடந்து பாராட்டுப் பெற்றது. முத்தப்பா அவர்களின் நடிப்பும் வசன வெளிப்பாடும் சிறப்பு. திரெளபதியாக நடித்த நண்பர் சிவராஜனின் ஒப்பனைப் பொருத்தத்தில் மயங்கி மதிமயங்கி நின்றவர்களில் நானும் ஒருவன்! சிவராஜனை அப்படி அழகிய சுந்தரியாய் பார்த்ததும் எனக்கு சுஜாதா எழுதிய ஒரு சிறுகதை நினைவிற்கு வந்தது. பெண் வேடமிட்டு நாடகத்தில் நடித்த ஒருவர் சந்தித்த எசகு பிசகான அனுபவத்தை அவர் பாணியில் எழுதியிருப்பார். கதையின் பெயர் மறந்து விட்டது.

யாருக்காவது தெரிந்தால் சொல்லுகேளா!

நண்பர்களே, இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். வேறு ஒரு பதிவில் மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

பத்மநாபன்
புது தில்லி

18 கருத்துகள்:

  1. கண்ணதாசனின் வரிகள் அருமை.

    குட்மார்னிங்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

      கண்ணதாசனின் வரிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. அண்ணாச்சி முதல் பாராவிலேயே சிக்ஸர் அடித்து விட்டார்.  சுமுக உறவு பேண நடிப்பு ஓரளவு அவசியம்தான்! நானும்  குறைந்த அளவில் நடிப்பதுண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் பாராவிலேயே சிக்ஸர்.... ஹாஹா... ஆமாம் ஸ்ரீராம்.

      நடிப்பு சில சமயங்களில் தேவையான ஒன்று தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. சுவாரஸ்யமான அனுபவம்தான்.  நானும் என் அண்ணனும் சிறுவயதில் இதே பாஞ்சாலி சபதம் பகுதியை ஒரு விடுமுறை நாளில் எங்களுக்குள் நடித்துப்பார்க்க, 
     
    எங்களுக்குத் தெரியாமல் கவனித்துக் கொண்டிருந்த அப்பா "உணர்ச்சியே இல்லாமல் பேசறீங்களேடா.... பாரதியார் என்னமா எழுதி இருக்கார்?" என்று கருத்துச் சொன்னார்.  

    அவர் பாரதியார் பக்தர்.  

    "ஸ்கூல்ல மனப்பாடம் பண்ணி ஒப்பிக்கற மாதிரியே இருக்கு" என்றார்.  நாங்கள் என்னவோ உணர்ச்சிப்பிழம்பாக பேசியதாக நினைத்துக் கொண்டிருந்தோம். 

    அவரை பேசிக் காட்டச் சொன்னோம்.  

    கொஞ்சம் பேசிக்காட்டிவிட்டு நழுவி விட்டார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் நடிப்பு அனுபவங்கள் ஸ்வாரஸ்யம். பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. நடிக்க தெரிந்திருந்தால் தான் இந்த காலத்தில் பிழைக்க முடியும். பிறரை ஏமாற்றுவதற்காக நடிப்பதை தவிர மற்ற இடங்களில் நடிப்பதில் தவறில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடிக்கத் தெரிந்தால் தான் பிழைக்க முடியும். உண்மை தான் ஜோசப் ஐயா. பல சமயங்களில் நடிக்க வேண்டியிருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. கண்ணதாசனின் இந்தப் பொன்மொழி எனக்கு மிகவும் பிடித்தமானது.

    நடிக்காமல் யாருமே வாழ்வை கடத்த முடியாது பத்மநாபன்ஜி.

    அவை பிறரை காயப்படுத்தாமல், நஷ்டப்படுத்தாமல் இருப்பது நலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடிப்பு பிறரை காயப்படுத்தாமல் இருப்பது நலம். சரியாகச் சொன்னீர்கள் கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. ஒல்லிக்குச்சி பீமன் - சுவாரஸ்யம்..

    வர்றான் கள்ளன்!! - ஹா..ஹா..ஹா..

    மினிஸ்டரை சைக்கிளில் டபுள்ஸ் அடிக்கிறேன்னு சொன்ன கிருஷ்ணன் மாமா தானே இவர்...:)) உங்கள் நண்பர் சொல்லக் கேட்டு பலமுறை சிரித்திருக்கிறோம்..:))

    நடிப்பு தேவை தான் - ஆனாலும் நடிக்கத் தெரிந்தால் தானே..உண்மை விளம்பிகளாக இருந்து விட்டால்???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரே தான்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. தினம் தினம் போடும் வேசங்கள் தான் என்னென்ன... ம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  8. கண்ணதாசன் சொல்வது சரிதான்.
    மிக அருமையாக பத்மநாபன் சார் சொல்லி விட்டார், நடிப்பு கலை வாழ்வில் நடிப்பு எல்லாம் பற்றி.

    நடிக்க தெரியவில்லை என்றால் வாழ்த்தெரியாதவன் என்ற பேர் கிடைக்கும்.
    யாரையும் மோசம் செய்யாத நடிப்பு அவசியம் தான்.(பிறரை மகிழ்ச்சி படுத்தலாம்)

    குழந்தைகளிடம் நமக்கு ஒன்றுமே தெரியாதமாதிரி நடிக்கலாம், 'இந்த பாட்டு தெரியவில்லையே! செல்லக்குட்டிக்கு தெரியுமே பாடு' என்றால் பெருமையாக தனக்கு மட்டுமே தெரியும் என்று பாடும் குழந்தை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    கண்ணதாசனின் பொன் மொழி மிகவும் நன்று. இந்த உலகத்தில் ஒரு மனிதனை சக மனிதர்கள் எப்போதுமே சிரிக்கவும் விட மாட்டார்கள். அழவும் விட மாட்டார்கள்.

    தங்கள் நண்பரின் சுவாரஸ்யமான பதிவு மிக நன்றாக உள்ளது. ஆங்காங்கே நகைச்சுவை வருகிற மாதிரி எழுதுவதே ஒரு பெரிய கலை. அக்கலை அவரிடம் நிறைய உள்ளது.

    முதலில் நடிப்பை பற்றி உண்மையான கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார். சில சமயம் பொய் முகம் காட்டித்தான் மெய் முகத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

    சிலருக்கு பெண் வேடமிட்டால் பெண்களே பார்த்து பொறாமை படுமளவிற்கு நன்றாக பொருந்தி வரும். நாடகம் நன்றாக நடந்தேறியது மகிழ்ச்சி. அதைக்குறித்து அழகாக எழுதிய தங்கள் நண்பருக்கு பாராட்டுக்கள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ணதாசனின் பொன்மொழி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      பொய் முகம் காட்டித் தான் மெய் முகத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது - உண்மை.

      பெண் வேடம் - கல்லூரி காலத்தில் நண்பருக்கு இப்படி பெண் வேடமிட்டு சைக்கிள் கேரியரில் அமர வைத்துச் செல்ல, பின்னால் சில ரோமியோக்கள் தொடர்ந்தார்கள்! ஹாஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....