வியாழன், 24 அக்டோபர், 2024

கதம்பம் - நவராத்திரி பொம்மைகள் - மெய்யழகன் - அன்பே நிறை! அன்பே இறை!


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட இட்லி சாப்பிட ஆசைப்பட்டது ஒரு தப்பா - நகர் வலம் ஐந்து பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


நவராத்திரி பொம்மைகள் - 26 செப்டம்பர் 2024:






இன்னும் ஒரு வாரத்தில் நவராத்திரி துவங்க இருப்பதால் திருவரங்கம் இப்போதே அதற்கான கொண்டாட்டங்களுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது! வருடந்தோறும் போடப்படும் கொலு பொம்மைக் கடைகளும் அதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கொள்ளை அழகான பொம்மைகளும்!


சாஸ்திரத்துக்கு ஒரு பொம்மையாவது வாங்கணும் என்ற வழக்கத்தை பற்றிக் கொண்டு வகுப்புகளை முடித்துக் கொண்டு இன்று நானும் தோழி ஒருவரும் கடைத்தெருவுக்கு கிளம்பிவிட்டோம்! கைக்குள் அடங்கிவிடும் அளவுள்ள சிறிய பொம்மை முதல் இரண்டடி மூன்றடி அளவுள்ள பெரிய பொம்மைகள் வரை அங்கு இருந்தன.


இந்த வருடத்து ட்ரெண்டாக எல்லாக் கடையிலுமே ‘அயோத்தி குழந்தை ராமர்’ புன்னகையுடன் காட்சி தருகிறார்! அத்திவரதர் வெளிப்பட்ட வருடம் எல்லோர் வீட்டிலுமே அத்திவரதர் இருந்தார்! அதுபோல இந்த வருடம் குழந்தை ராமரை எங்கும் பார்க்கலாம்!


நவக்கிரக செட், சத்திய நாராயண பூஜை செட், கிருஷ்ணர் கோபிகைகள், தட்சிணாமூர்த்தி செட், வாராஹி செட், கோவர்த்தன கிரி செட், கடோத்கஜன் செட், கும்பகர்ணன் செட், சீமந்த செட், அறுபதாம் கல்யாண செட் என்று ஒவ்வொன்றும் அழகான கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட பொம்மைகள்!


வீட்டில் கொலு வைக்க, ஷோகேஸில் வைக்க, கொலு வைக்கும் வீடுகளுக்குச் செல்லும் போது வாங்கிச் செல்ல என்று அங்கு வருவோர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான எண்ணங்கள்! விலையை கேட்டு விட்டு கடந்து செல்வோரும் உண்டு! நின்று பேரம் பேசி வாங்குவோரும் உண்டு! கடை வைத்திருப்பவர்களும் இது தான் சீசன் என்று விலையை சற்று கூட்டி  வைப்பதும் பின்பு பொருளை கழித்து விட இறங்குவதும் என இவை எல்லாமே வருடந்தோறும் நிகழ்கிற சம்பவங்கள் தான்!


அன்றொரு நாள் கடைத்தெருவில் சுற்றுலாவாக திருவரங்கம் வந்திருந்த பெண்மணி ஒருவர் என்னிடம், ‘who is Aandal? In glass room  there are 6 idols??’ என்று கேட்டார்! புன்னகையுடன் ‘Aandal is a god! She married lord ranganathar in this srirangam! One idol ! six mirror views! என்று சொன்னதும் ஆச்சர்யப்பட்டு நன்றி சொன்னார்!  அங்கிருந்த பொம்மைகளில் இன்று என் தோழி அங்கு இருந்த ரங்கன் ஆண்டாள் செட் தான் வாங்கினார்! 


தந்தையாகிய பெரியாழ்வாருடன் ஆண்டாள் திருவரங்கம் புறப்பட்டு வந்து ரங்கனுடன் ஒன்றென கலந்து விட்டாள் அல்லவா! அதையே அங்கு அழகான பொம்மைகளாக பெரியத் திருவடியும் சின்னத் திருவடியும் இருபுறமும் இருக்க பெரியாழ்வாரும் ஆண்டாளும் நின்றிருக்க பள்ளி கொண்ட ரங்கன் மையத்தில் வீற்றிருக்கிறார்!


இரண்டடி உயரத்தில் சிவன் பார்வதியை அரவணைத்துக் கொண்டிருந்த கல்கத்தா பொம்மை கொள்ளை அழகாக இருந்தது! விற்றுவிட்டதாம்! ஆர்டர் கொடுத்தால் அடுத்த மாதம் கிடைக்கும் என்றார்! கவரை மட்டும் எடுங்களேன்! ஃபோட்டோ எடுத்துக்கறேன்! என்றேன்..🙂 அதேபோல் பிரம்மாண்ட கும்பகர்ணன் செட்! 22000 ரூபாயாம்!


அந்தக் கிருஷ்ணர் ரொம்ப அழகா இருக்காரில்ல! ரெண்டு பேரும் எடுத்துப்போம்! சரியா! அண்ணே! அத பேக் பண்ணி குடுத்துடுங்க! ட்ரெண்டுக்கு சப்போர்ட் பண்ணி குழந்தை ராமரை இருவரும் கைகளில் சுமந்து எடுத்துக் கொண்டோம்! என்னமோ எனக்கு இந்த வருஷம் தட்சிணாமூர்த்தி வாங்கணும்னு தோணறது! அண்ணே! அதையும் பேக் பண்ணிடுங்க! அந்த முறத்தில விளக்கு ரொம்ப பிடிச்சிருக்கு! ரெண்டு பேருக்கும் வாங்கிப்போம்! சரியா!


இப்படியாக இந்த வருடத்துக்கான கொலு பர்சேஸ் சென்று கொண்டிருக்கிறது!


******


மெய்யழகன் - 28 செப்டம்பர் 2024:




சினிமாவுக்கெல்லாம் நான் வரல! டிக்கெட் புக் பண்ணித் தரேன்! நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க!!


மகளும், நானும் மேட்னி ஷோவுக்கு மெய்யழகனைக் காண வந்திருக்கிறோம்..🙂


ஃபீல் குட் மூவியாக இருக்கும்னு தான் ரிவ்யூக்களில் கேள்விப்பட்டேன்..🙂 பார்க்கலாம்...🙂


முந்தைய ஷோ முடிந்து நிறைய பேர் வெளியே வரவும் தான் மனசுக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கு...🙂


******

அன்பே நிறை! அன்பே இறை! - 28 செப்டம்பர் 2024:



மெய்யழகன்!


படத்தின் ட்ரெய்லரை மகள் எனக்கு காண்பித்த போதே பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன்! இதோ படம் வெளியான மறுநாளே சென்று வந்துவிட்டோம்! பொதுவாக இப்போது வருகின்ற படங்கள் எல்லாமே சரமாரியான வெட்டும் குத்தும் தான் கதையே என்பது போலாகி விட்டது! 


எப்போதாவது தான் மெல்லிய நீரோட்டம் போல் சலசலப்பு இல்லாமல் அடிதடி, ஆர்ப்பாட்டம் என்று இல்லாமல் மயிலிறகு போல் மனதை வருடிச் செல்லும் திரைப்படங்களை பார்க்க முடிகிறது! அப்படி ஒரு திரைப்படம் தான் இந்த மெய்யழகன்!


பிறந்து வளர்ந்த வீட்டையும், ஊரையும் பிரிவது என்பது எவ்வளவு கொடுமையானது என்று நான் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். செல்லும் வழியெங்கும் பசுமையான நினைவுகளையும் பலவித உணர்வுகளையும் வெளிப்படுத்தி வேதனையை கூட்டியது எனலாம்! அப்படியொரு நிலையில் அரவிந்த்சாமி!


நம்மீது அளவு கடந்த அன்பை செலுத்தும் ஒரு ஜீவன்! யோசித்துப் பார்த்தால் நம்முடைய வாழ்வில் சந்தித்த ஏதோ ஒரு நபராக இருக்கலாம்! எங்கேயாவது அப்படியொருவர் நிச்சயம் இருப்பார்! அவர்களுக்கு இந்த உலகில் உள்ள எல்லோரின் மீதும் அளவற்ற அன்பும், உரிமையும் இருக்கும்! 


நாம் அவர்களுக்கு பெரிதாக எதுவுமே செய்திருக்க மாட்டோம்! அவர்களை நினைவில் கூட வைத்திருக்க மாட்டோம்! ஆனால் அவர்கள் தன் இயல்பிலிருந்து மாறுவதில்லை! அப்படியொரு ஊர்க்காரனாகவும், உறவினராகவும் கார்த்தி!


96 திரைப்படம் போல் இதுவும் ஓரிரவில் நிகழும் சம்பங்களின் தொகுப்பு தான் இந்தத் திரைப்படமும்! தஞ்சையின் பசுமை போர்த்திய வயல்வெளிகளும், ஊர்ப்பாசமும், வட்டார மொழியும், உறவினரிடையே இருக்கும் பாசமும், பந்தமும் என நம்மையும் சற்றே திரும்பிப் பார்க்க வைக்கிறது! 


கார்த்தியின் ஊர்ச்சாயலுடன் கூடிய இயல்பான நடிப்பும், நகரவாசியான அரவிந்த்சாமியின் பட்டும் படாத இயல்புடன் கூடிய நடிப்பும் என வித்தியாசமான கோணத்தில் பயணிக்க வைக்கிறது! ஃபீல்குட் மூவியாக பார்க்கத் துவங்கினால் நிச்சயம் ரசிக்கலாம்!


தியேட்டரை விட்டு வெளியே வந்தால் மழை பெய்து சாலை நனைந்திருப்பது தெரிந்தது! ஆட்டோவில் ஏறியதும் ‘படம் எப்படிக்கா இருக்கு? சில பேர் நல்லாருக்குன்னு சொல்றாங்க! சில பேர் நல்லா இல்லேன்னு சொல்றாங்க! என்று ஆர்வத்துடன் கேட்டார் அந்த ஆட்டோ டிரைவர்…:)


அன்பே நிறை! அன்பே இறை! இது தான் ‘மெய்யழகன்’ நமக்கு உணர்த்தும் ஒரு வரிக் கதை!


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

24 அக்டோபர் 2024


12 கருத்துகள்:

  1. ராம் லல்லா பொம்மை நாங்களும் தேடினோம்.  கிடைக்கவில்லை!  கடைசி நிமிடத் தேடல் என்பதால் குறுகிய தேடல்!  சிவன் பார்வதி பொம்மை மிக அழகாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராம் லல்லா பொம்மை இங்கே எல்லாக் கடைகளிலுமே இருந்தது சார்! சிவன் பார்வதி பொம்மை நேரில் இன்னும் அழகாக இருந்தது!

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. மெய்யழகன் இன்னும் பார்க்கவில்லை.  அந்தப் படம், லப்பர் பந்து, போன்றவை OTT யில் வெளியானதும் பார்க்க வேண்டும்.  போகுமிடம் வெகு தூரமில்லை பார்த்தேன்.  பார்க்கக்கூடிய நல்ல தரமான படம்.  கருணாஸ் அசத்துகிறார்.  வாழை பார்த்து மிக நொந்து போனேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் வாழை படம் ரொம்ப நல்லாருக்குன்னு சொன்னாங்க. நல்லால்லியா?

      போகுமிடம் வெகு தூரமில்லை - இப்படி ஒரு படம் வந்திருக்கா..? நோட்டட். தரமான படம்னு சொல்லியிருக்கீங்க

      கீதா

      நீக்கு
    2. மெய்யழகனைத் தவிர மற்ற படங்களை நானும் பார்க்கவில்லை! வாய்ப்புக் கிடைத்தால் பார்க்க வேண்டும்!

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  3. இரண்டடி உயரத்தில் சிவன் பார்வதியை அரவணைத்துக் கொண்டிருந்த கல்கத்தா பொம்மை கொள்ளை அழகாக இருந்தது! //

    ஆமாம் ஆதி ரொம்ப அழகா இருக்கு. ராம் லல்லா பொம்மைய காணலியே நீங்க வாங்கியவையும்..?

    ஆண்டால் ரங்கமன்னாருடன் கலந்ததும் கூட செட்டாக வந்துவிட்டதா!! அட! அப்ப ஆண்டாள் வாழ்க்கையே தீமாக வைத்து கொலு வைத்துவிடலம போல!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் வாங்கிய பொம்மைகளை படம் எடுக்கவில்லை! கடையில் பார்த்த சில பொம்மைகளை மட்டும் தான் பகிர்ந்திருக்கிறேன்,!

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  4. ஓ மெய்யழகன் நல்லாருக்கா. லப்பர் பந்தும் கூட நலலருக்குன்னு சொல்றாங்க வாழையும் கூட சொல்றாங்க. ஆனால் எனக்கு வாய்ப்பு கிடைப்பது கொஞ்சம் தள்ளித்தான் பார்ப்போம் கிடைக்குதான்னு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மெய்யழகன் எங்கள் இருவருக்குமே பிடித்திருந்தது! வாய்ப்பு கிடைக்கும் போது பாருங்க.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  5. ராம் லல்லா தரிசனம் இரண்டுமுறை கிடைத்தது. அந்தப் படம்தான் எல்லா இடங்களிலும் விற்கிறார்கள். நாங்கள் இந்தப் பொம்மையை கும்பகோணத்தில் பார்த்தோம். மகளுக்கு முதன்முறை கொடுப்பதால் ராமர் சீதா லட்சுமணன் அனுமார் செட் வாங்கி அனுப்பினோம்

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை.

    கதம்ப பதிவு நன்றாக உள்ளது. கொலு பொம்மைகள் அழகாக இருக்கிறது. நீங்கள் வாங்கிய பொம்மைகளும் சொல்லும் போதே அழகாகத்தான் உள்ளன.

    மெய்யழகன் திரைப்பட விமர்சனத்திற்கு மிக்க நன்றி .தங்கள் விமர்சனம் படங்களை பார்க்கத் தூண்டுகின்றன. நேரம் கிடைக்கும் போது பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. வாசகம் உண்மை. சகிப்பு தன்மைதான் உறவுகளை பலபடுத்தும்.
    இங்கு கொலு பார்க்க போன வீடுகளில் அயோத்தி ராமர் இருந்தார்.
    சிவன் , பார்வதி பொம்மை அழகு.

    மெய்யழகன் விமர்சனம் அருமை, பார்க்க வேண்டும்.

    "போகுமிடம் வெகு தூரமில்லை" படம் நன்றாக இருக்கிறது. யூடியூப்பில் இருக்கு முழு படமும்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....