வியாழன், 31 அக்டோபர், 2024

தில்லி 2 திருச்சி - இரயில் பயண அனுபவங்கள் - இரயில் பயணங்களில் - பகுதி இரண்டு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட இரயில் பயணங்களில் - பகுதி ஒன்று பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


நேற்று தில்லி 2 திருச்சி இரயில் பயணத்தில் கிடைத்த அனுபவங்களின்  முதல் பகுதியை வெளியிட்டு இருந்தேன்.  அதன் தொடர்ச்சி இதோ…


சுந்தரத் தெலுகு


பயணத்தில் இத்தனை நேரம் தமிழ், ஹிந்தி என்று கேட்டுக் கொண்டிருக்க, Itarsi நகரம் வந்த பிறகு ஒரே சுந்தரத் தெலுகு கேட்டுக் கொண்டு இருக்கிறது. தெலுகு பேசும் அந்த நபர்களும் வடக்கர்களை கழுவி கழுவி ஊற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் உணவு, அவர்களின் பழக்க வழக்கம் என அனைத்தையும் திட்டிக் கொண்டே இருக்கிறார்கள். 


ரெண்டு இட்லி, தண்ணியா ஒரு வஸ்துவை சாம்பார் என்ற பெயரில் கொடுத்து விட்டு 85 ரூபாய் வாங்கி விடுகிறார்கள் என ஒரே புலம்பல். உணவைப் பொறுத்த வரை இங்கே கிடைக்கும் உணவை சாப்பிடுவது மட்டுமே நல்லது. வேறு மாநில உணவுகளை இங்கே எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான் மிஞ்சும்.


இன்னும் உறங்காமல் இப்படி பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.   அதைக் கேட்டுக்கொண்டு உறங்காமல் நானும் இதை தட்டச்சு செய்து வெளியிட்டு கொண்டிருக்கிறேன். 🙂 


******


சுகமான சுமைகள்…


இரவு நேரம் பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது - ஆனாலும் உறங்காமல் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறார்கள் சிலர். Maigraine தலைவலி பெண்ணுக்கு உடம்பு முடியவில்லை. வாந்தி அமர்க்களம். கணவன் தூங்கும் குழந்தையையும் விட முடியாமல் மனைவிக்கு உதவி செய்ய கூட போக முடியாமல் அவஸ்தை பாவம். நான் குழந்தையை பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தேன். 


குழந்தைகளை வைத்துக் கொண்டு மனைவிக்கும் உடல் நிலை சரியில்லை என்றால் மிகவும் கடினம் தான். மூவரையும் பார்த்துக் கொண்டு திண்டாடுகிறார். எனது மகளை இப்படி இரயிலில் அழைத்துக் கொண்டு சென்ற நாட்கள் நினைவில் வந்து போனது. மகள் பெரிதாகும் வரை என் மீது தான் படுத்து உறங்குவார் என்பதால் உடல் வலியுடன் தான் பயணம் இருக்கும்.,... ஆனாலும் அது ஒரு சுகமான வலி தானே…… 


பக்கியா (பிரக்யா) என்னதான் பாட்டியுடன் தனியாக வந்துவிட்டாலும் இப்போது அம்மாவையும் அப்பாவையும் தேட ஆரம்பித்து விட்டார். பாட்டி பேத்தியை தூங்க வைக்க முடியாமல், தானும் தூங்க முடியாமல் புலம்பிக் கொண்டே இருக்கிறார்…….. 🙁 


******


வெடிகுண்டு இட்லி வடை…


அனைவருக்கும் மீண்டும் இரயில் பயணத்தில் இருந்து காலை வணக்கம். நேற்று இரவு பதினோரு மணிக்கு மேல் தான் தூங்க விட்டார்கள். அதனால் இரவு நல்ல உறக்கம். காலை ஆறரை மணிக்கு எழுந்து விட்டாலும் கீழே இருந்தவர் எழுந்திருக்காததால் நானும் அப்படியே படுத்து மீண்டும் உறங்கிவிட்டேன். காலை எட்டு நாற்பதுக்கு விஜயவாடா இரயில் நிலையம் வர வேண்டியது.. பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே வந்து விட்டது.  நல்ல விஷயத்தையும் சொல்ல வேண்டும் அல்லவா? 


இரயிலில் கிடைக்கும் உணவு சுமாராகத்தான் இருக்கும் என்பதாலும் தென்னிந்தியா வந்துவிட்டதே அதனால் இரயில் நிலையத்தில் கிடைக்கும் உணவு அதை விட நன்றாக இருக்கும் என்ற நப்பாசையாலும் விஜயவாடா இரயில் நிலையத்தில் இட்லி வடை வாங்கினேன். அனைவரும் கழுத்தில் தங்களது QR Code உள்ள அட்டையை மாட்டிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதால் சில்லறை பிரச்சனை இல்லை. 60 ரூபாய் transfer செய்து இரண்டு இட்லி இரண்டு வடை தொட்டுக்கொள்ள சட்னி….. சாம்பார் கிடையாது. ஆனால் அதற்கு பதில் ஊறுகாய்……:) சரிடா ஆந்திர மக்களுக்கு ஊறுகாய் காரம் பிடித்தது என்றாலும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள ஊறுகாய் கொடுப்பது ரொம்ப ஓவர் டா தம்பி என்று சொன்னேன். 


இட்லியாவது கொஞ்சம் பரவாயில்லை ஆனால் வடை என்ற பெயரில் தந்தது வெடிகுண்டு மாதிரி இருந்தது. நெஞ்சு அடைத்தான் உருண்டை என்று சொல்வதுண்டு. அப்படித்தான் இருந்தது. எப்படியோ உள்ளே தள்ளி பத்து ரூபாய்க்கு கிடைத்த மோர் வாங்கி குடித்து ஒப்பேற்றி ஆயிற்று. இரயில் புறப்பட, எப்போதும் போல கதவருகே நின்று கிருஷ்ணா நதியையும் தூரத்தில் தெரியும் கனக துர்கா கோவிலையும் பார்த்து ரசித்தேன். கிருஷ்ணா நதியில் தண்ணீர் நிறைய இருக்கிறது - பார்த்து ரசித்ததோடு ஒரு காணொளி ஆகவும் எடுத்துக் கொண்டேன். 


இன்னும் பயணம் தொடர்கிறது. இன்னும் பன்னிரெண்டு மணி நேரம் பயணிக்க வேண்டும்… 🙁


******


அலைபேசி மட்டுமே உற்ற துணை…


தனியாக இத்தனை தூரம்/நேரம் ஒரே இரயிலில் பயணிப்பது என்பது பலருக்கு கொடுமையான தண்டனை. முன்பெல்லாம் இப்படி தனியாக பயணிக்கும் சமயங்களில் இரண்டு மூன்று புத்தகங்களை - ஆங்கிலம் அல்லது தமிழ் - எடுத்து வந்து பயணத்தில் படித்து முடித்து விடுவேன். இப்படி புத்தகம் படிப்பவர்கள் நிறைய பேரை இரயில்களில் பயணிக்கும் போது பார்க்க முடியும். ஆனால் இப்போது இப்படி புத்தகம் படிப்பதை பார்க்கவே முடியவில்லை. எனது வாசிப்பும் கிண்டில் அல்லது அலைபேசி வாசிப்பாக மாறி விட்டது. 


வாசிப்பதை விட சக பயணிகளை கவனிப்பதும் இங்கே எழுதுவதும் என பொழுது போகிறது. ஆனால் பலருக்கு அலைபேசி மட்டுமே துணையாக இருக்கிறது. தொடர்ந்து விளையாடவோ அல்லது காணொளிகள் பார்ப்பதையோ மட்டுமே செய்கிறார்கள். எனது பக்கத்து இருக்கையில் அமர்ந்து இருக்கும் ஒருவர் ஒன்றரை மணி நேரமாக பில்டிங் blocks போன்ற ஏதோ ஒன்றை அடித்து நொறுக்கி விளையாடிக் கொண்டிருக்கிறார். அவரது பக்கத்து இருக்கை பெண்மணி காதில் ஒயரைச் சொருகிக்கொண்டு (நல்ல வேளையாக) ஹிந்தி படம் பார்த்துக் கொண்டு வருகிறார். வேறு ஒருவரோ இரயிலின் விட்டத்தை பார்த்தபடி படுத்துக் கொண்டு யாரிடமோ அலைபேசி வழி பேசிக் கொண்டு இருக்கிறார். 


நேரத்தைக் கடத்துவது என்பது மிக மிக கொடுமையான தண்டனை ஆக இருக்கிறது பலருக்கும். எப்படா ஊர் வரும் என்று புலம்பிக் கொண்டே இருக்கிறார் எதிர் சீட்டு பாட்டி. 🙂 இப்படி நீண்ட தூரம் இரயிலில் பயணிப்பது எனக்கு பிடிக்காது என்று தெரிந்தும் இரயிலில் முன்பதிவு எதற்கு செய்தீர்கள் என்று கணவரை வம்புக்கு இழுத்துக் கொண்டு இருக்கிறார் மற்றொரு பெண்…… 


இவர்களைக் கவனித்தபடி நேரத்தைக் கடத்துகிறேன் நானும்…….. 


******


தொடரும் பயணம் - தமிழகத்தில்….. 


சென்னையை கடந்தது இரயில்….. வண்டி நல்ல வேளையாக சரியான நேரத்திற்கு முன்னதாகவே வந்து கொண்டு இருக்கிறது. 03.55 சென்னை எக்மோர் வர வேண்டிய இரயில் 03.35 மணிக்கு வந்தடைந்து விட்டது…. சில மணித்துளிகள் வெளிக்காற்றை சுவாசிக்க முடிந்ததில் கொஞ்சம் நிம்மதி. 


பெட்டிக்குள் ஸ்வாரஸ்ய சம்பாஷனைகள் தொடர்கின்றன. 


பாட்டியும் பேத்தியும்: 


அஞ்சு பை எப்படி தூக்கறது? நீ இரண்டு பை தூக்கிக்கோ என்று பேத்தியிடம் பாட்டி சொல்ல, பேத்தி கேட்ட கேள்வி…. 


தோ பை தூக்னா ஹே க்யா? பாதி ஹிந்தி பாதி தமிழில் என கேட்ட கேள்வி! 


அடி போடி மெண்டலு…. என்பது பாட்டியின் பதில் 🙂


சிறுவன் அம்மாவிடம்….. 


சுள்ளி விட்டிட்ட….. அதனால் உன் மேல கோவம் எனக்கு….. 


தென்காசி பக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் கிள்ளி என்பதை சுள்ளி என்கிறார்கள். எங்கள் பக்கத்தில் எல்லாம் சுள்ளி என்றால் மெலிதான விறகு….. 


இப்படியாக பொழுது போகிறது…… இன்னும் சில மணித் துளிகளில் திருச்சி…… அதனால் தில்லி 2 திருச்சி இரயில் பயண பதிவுகள் இத்துடன் முடிவடைகின்றது.  திருச்சி 2 தில்லி பயண அனுபவங்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது:) 


என்ன நண்பர்களே, இரயில் பயணத்தில் எனக்குக் கிடைத்த அனுபவங்கள் எப்படி? உங்களுக்கும் இப்படியான இரயில் பயண  அனுபவங்கள் கிடைத்திருக்கலாம். அவற்றை அசைபோட இந்தப் பயணப் பதிவுகள் ஒரு காரணியாக இருக்கலாம்.  இந்தப் பயண அனுபவங்கள் இரண்டு பகுதிகளாக வெளியிட வேண்டிய கட்டாயம்.  இரண்டு நாட்கள் இரயில் பயணம் (கிட்டத்தட்ட 40 மணி நேர பயணம்) என்பதால் கிடைத்த அனுபவங்கள் அதிகம். முகநூலில் சிறிது சிறிதாக நிறைய இற்றைகள் எழுதியிருந்தேன். இங்கே தொகுத்து இரண்டு பகுதிகளாக எழுதி இருக்கிறேன்.  திருச்சி 2 தில்லி பயண அனுபவங்களுக்காக காத்திருங்கள். 


பயணங்கள் நல்லது….. ஆதலினால் பயணம் செய்வீர்…..


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

31 அக்டோபர் 2024


3 கருத்துகள்:

  1. அனைவருக்கும் அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    வாழ்க பல்லாண்டு..

    பதிலளிநீக்கு
  2. பயணக் கட்டுரையை ரசித்துப் படித்தேன். நீங்கள் உங்களைச் சுற்றி நடப்பவன எல்லாவற்றையும் மிகத் துல்லியமாக observe செய்கிறீர்கள். (IAS / IPS தேர்வு எழுதியிருக்கலாமோ?) Observe செய்த விஷயங்களை சுவாரசியமாக எழுதியுள்ளீர்கள். பகிர்ந்தமைக்கு நன்றி. பகுதி 2 ஐ எதிர்நோக்குவேன்.

    பதிலளிநீக்கு
  3. வெங்கட்,

    ஒவ்வொரு செய்தியும் அருமை.

    திருச்சி டு டெல்லி போகும்போதும் அதே பாட்டி உங்களுடன் வரவேண்டும் என மனதார வேண்டுகிறேன், Okay வா ?

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....