அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட திருச்சி புத்தகத் திருவிழா பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
கடந்த சில வாரமாக திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடை நல்லது தலைப்பில் பதிவுகள் எழுதி வருகிறேன். இந்த வாரம் அதில் கொஞ்சம் மாற்றம். சமீபத்தில் திருச்சி வந்து தில்லி திரும்பி இருக்கிறேன் என்பதை உங்களில் சிலர் அறிந்து இருக்கலாம். தில்லியிலிருந்து திருச்சி வரை திருக்குறள் விரைவு வண்டியில் வரும் போது கிடைத்த இரயில் பயண அனுபவங்களை தொடர்ந்து முகநூலில் உடனுக்குடன் எழுதிக் கொண்டிருந்தேன். அந்த அனுபவங்கள் இங்கே ஒரு சேமிப்பாகவும், முகநூலில் என்னைத் தொடராத நண்பர்களின் வசதிக்காகவும் பகிர்ந்து கொள்கிறேன்.
பாட்டியும் பேத்தியும்…
முன்பெல்லாம் தில்லியிலிருந்து தமிழகம் நோக்கி வரும் இரயில்கள் அதிக பட்சம் தமிழர்கள் தான் இருப்போம். ஆனால் நம் ஊர் மக்கள் விமான பயணத்தை அதிகம் தேர்ந்தெடுக்கிறார்கள். நம் ஊரில் வடக்கர்கள் அதிகம் வந்துவிட்டதால் இரயிலில் அதிக அளவில் அவர்கள் தான் இருக்கிறார்கள். முன்பு 75:25 என இருந்தது இப்போது அப்படியே தலைகீழாக 25:75 என்று மாறி இருக்கிறது. எனது (படு)இருக்கை உடனான எட்டு இடங்களில் இரண்டு பேர் மட்டுமே தமிழர்கள்…..
என்னைத் தவிர ஒரு பாட்டியும் அவரது பேத்தியும். பாட்டியும் என்னைப் போலவே பல வருடங்களாக தில்லியில் இருப்பவர் போல…. தமிழ் - அதுவும் சென்னைத் தமிழ் பேசுகிறார் என்றாலும் ஹிந்தியிலும் பேசுகிறார். என்ன ஹிந்தியை சென்னைத் தமிழ் போலவே பேசுகிறார். பேத்திக்கு தமிழ் புரிகிறது என்றாலும் முழுக்க முழுக்க ஹிந்தியில் தான் பேசுகிறார். பாட்டி தமிழிலும் பேத்தி ஹிந்தியிலும் உரையாடுவதைக் கேட்க குதூகலமாக இருக்கிறது.
பாட்டி கிராமத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் நல்ல ஸ்டைல் - காது முழுக்க வரிசையாக தோடுகள் மற்றும் மாட்டல். கிராமத்துக்கு உரியதான கிண்டலும் நக்கலும் பேச்சில் தெரிக்கிறது….. ஒன்றிரண்டு உதாரணம்….
ஸ்பீகரை போட்டுக் கொண்டு ஸ்மார்ட் ஃபோனில் யாருடனோ பேசிய போது எதிர் பக்கம் இருப்பவர் “ஸ்டேஷன்ல நான் வந்து பாக்கலாம்னா தனியா எப்படி வரதுன்னு யோசிக்கிறேன்” என்று சொல்ல அதற்கு பாட்டியின் பதில்…… “ஏன் நாலு நாயைக் கூட கூட்டிட்டு வாயேன்!”
பேத்தியிடம் “ஏய் உச்சா வந்தா சொல்லு, நீ பாட்டு மழ மாதிரி பேஞ்சிடாத…”
படுத்துக்கணும் என்று சொன்ன ஒரு வட இந்திய பெண்மணியை “இத்தனை நேரம் உடகார்ந்தவளுக்கு இப்ப பத்தரை மணிக்கு படுக்கணுமாம், எரும!” என்கிறார் தமிழில்
அடித்து ஆடிய அசதியில் தற்போது உறங்கிக் கொண்டிருக்கிறார்.
******
வடக்கர்களின் அட்டகாசம்…..
ஆக்ராவில் ஏறி ஜான்சியில் இறங்குவதற்காக நான்கு வடக்கர்கள் இரயிலில் வந்து இருக்கிறார்கள். அத்தனை அடாவடி. ஒருவர் ஏதோ tutorial கல்லூரி நடத்துகிறார் போலும். சரியான தற்பெருமை தக்காளியாக இருக்கிறார். வழி முழுக்க தற்பெருமை அடித்துக் கொண்டு வருகிறார். அதனை கேட்டு காதோரம் இரத்தம் வருகிறதா என அடிக்கடி தொட்டுப் பார்த்துக் கொள்கிறேன். அவரின் தற்பெருமைகளில் ஒரு மாதிரி….. “இந்த 3AC எனக்கு சரிவராது…. நான் எப்பவுமே அதுல போக மாட்டேன். வர பயணிகள் சரியா இருக்க மாட்டாங்க….. நம்ம ஸ்டாண்டர்ட் என்ன இவங்க ஸ்டாண்டர்ட் என்ன!” அடியே நீ இப்ப அதுல தான் வர….. வாயை மூடிட்டு வாடி! என்று சொல்ல நினைத்தேன்.
பயணித்தது சுமார் இரண்டரை மணி நேரம் என்றாலும் அவர்கள் இருந்த இடம் முழுவதும் வாழைப்பழத் தோலும் குட்கா பாக்கெட்டுகளும் குவிந்து கிடக்கிறது. இந்த அழகில் மற்ற பயணிகள் குறித்து இழித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அழகில் அவர்கள் அனைவரும் ஜான்சி அருகே இருக்கும் தத்தியா (Datia) enkita இடத்தில் இருக்கும் மா பகுளாமுகி ஆலயத்திற்குச் செல்கிறார்களாம்……
எப்படா ஜான்சி வரும், எப்போது அவர்கள் இறங்குவார்கள் என காத்துக் கொண்டிருக்கிறேன்….. 🙁
******
பக்கியா…..
அடித்து ஆடிய அசதியில் பாட்டி குறட்டை விட்டு தூங்கி விட்டார். பேத்தியும் தூங்கிவிட கொஞ்சம் அமைதியானது எங்கள் பெட்டி. ஜான்சி நகரில் அந்த நான்கு வடக்கர்கள் இறங்கிவிட மூன்று தமிழர்கள் வந்து சேர்ந்தார்கள். அவர்களில் ஒரு குடும்பம் - கணவன், மனைவி மற்றும் இரு சிறு குழந்தைகள்…… பால் குடி மாறா குழந்தை மொத்த பெட்டியையும் விழிக்க வைத்திருக்கிறது. கன்னியாகுமரி வரை பயணிக்கப் போகிறார்கள் என்பதால் குழந்தை தூங்கும்போது தான் மற்றவர்களின் தூக்கம் இருக்கப்போகிறது. ஜாலிலோ ஜிம்கானா தான்.
மொத்தமாக ஹிந்தி ஆட்கள் தான் வருகிறார்கள் என்பதாலோ என்னமோ Pantry Car இலிருந்து வரும் உணவுப் பொருட்கள் பெரும்பாலும் வட இந்திய உணவுகள் தான். Dal vadaa என்று குரல் கொடுக்கும் அதே சமயம் போனால் போகிறது என பருப்பு வடா என்றும் கூறுகிறார் அந்த சிப்பந்தி. நமக்கு இருக்கவே இருக்கிறது பழங்கள்… காலையில் சுடச் சுட கச்சோடி மற்றும் ஆலு சப்ஜி கிடைக்க அதனை சாப்பிட்டு ஒப்பேற்றி விட்டேன். மதியம் வாழைப்பழம், கொய்யா என போபால் இரயில் நிலையத்தில் வாங்கி சாப்பிட்டாயிற்று.
பாட்டி தனக்கும் பழங்கள் வாங்கித் தரச் சொல்ல அவருக்கும் வாங்கித் தந்து பொது சேவை செய்தாயிற்று. தனது பேத்தியை பக்கியா பக்கியா என அழைக்கிறார். இது என்னடா பெயர் என்று குழப்பிக் கொண்டு இருந்தேன். சிறுமியிடம் கேட்க அவரும் அதே பெயரைச் சொன்னார். இரண்டாம் முறை கேட்டபோது சரியான பெயர் தெரிந்தது….. பிரக்யா…… இப்படி அழகான பெயர் வைத்து விட்டு பக்கியா என கூப்பிடுகிறார்கள்…. 🙂
******
மனிதர்கள் பலவிதம்…
ஒவ்வொரு பயணத்திலும் விதம் விதமான மனிதர்களை பார்க்க முடிகிறது. மனிதர்களின் குணங்கள் எத்தனை எத்தனை….. பரபரவென்று இயங்கும் குழந்தைகளையும் இளைஞர்களையும் இப்படி ஒரு பெட்டிக்குள் அடைத்து வைத்து விட்டால் எப்படி பொழுது போக்குவது? எல்லாருக்கும் ஒரு பிரச்சனை என்றால் பெட்டியில் இருக்கும் பாட்டிக்கு ஒரு வித பிரச்சனை…… வெத்தலை பாக்கு போட்டு எச்சி துப்ப முடியவில்லையாம்…… 🙁
அவரவர்களுக்கு அவரவர் பிரச்சனை தான் பெரிதாக இருக்கிறது…….
குழந்தைகளுடன் வந்திருக்கும் இளம் பெண்ணுக்கு தலைவலி…… migraine பிரச்சனை. கணவர் அவரிடம் இது போகாதா என்று கேட்க அவரையும் குழந்தைகள் இரண்டையும் காண்பித்து, சிரித்தபடியே சொல்கிறார் - பெரிய தலைவலியே நீங்கள் மூவரும் தான் என்று. நகைச்சுவைக்காக சொல்லப்பட்டாலும் வீட்டுக்கு வீடு வாசப்படி என்று நினைத்துக் கொண்டேன். சில வருடங்கள் மும்பையில் வசித்தவர்கள் தற்போது இருப்பது கஜுராஹோவில்…. என்னதான் சுற்றுலா தலமாக இருந்தாலும் வசதிகள் குறைவு என்பதால் என்னால இங்கே இருக்க முடியாதுப்பா என்று புலம்பிக்கொண்டு வருகிறார்…..
இவ்வளவு நீண்ட பயணங்கள் கொடுமையானவை என்று இன்னும் ஒரு பெண்மணி புலம்புகிறார். தில்லியில் இருந்து புனித யாத்திரை இராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள் - கணவன் மனைவியாக…… தொடர்ந்து பயணத்தில் இருக்கும் கஷ்டத்தையும் சரியா லோயர் பர்த் வாங்காமல் middle berth வாங்கி விட்டார் என்றும் கணவனை நிந்தனை செய்து கொண்டே இருக்கிறார். அவர் எல்லாரையும் போல தலையாட்டி பொம்மை மாதிரி தலையாட்டிக்கொண்டு இருக்கிறார். வேறென்ன செய்ய!
இப்படியான நிகழ்வுகளையும் சம்பாஷணைகளையும் கேட்டபடியே எனது பொழுது போகிறது! அதை இங்கே பகிர்வதன் மூலம் உங்களுக்கும் கொஞ்சம் பொழுது போகட்டும்! :)))))
******
என்ன நண்பர்களே, இரயில் பயணத்தில் எனக்குக் கிடைத்த அனுபவங்கள் எப்படி? உங்களுக்கும் இப்படியான இரயில் பயண அனுபவங்கள் கிடைத்திருக்கலாம். அவற்றை அசைபோட இந்தப் பயணப் பதிவுகள் ஒரு காரணியாக இருக்கலாம். இந்தப் பயண அனுபவங்கள் அடுத்த பகுதியிலும் தொடரும். இரண்டு நாட்கள் இரயில் பயணம் (கிட்டத்தட்ட 40 மணி நேர பயணம்) என்பதால் கிடைத்த அனுபவங்கள் அதிகம். முகநூலில் சிறிது சிறிதாக நிறைய இற்றைகள் எழுதியிருந்தேன். இங்கே தொகுத்து ஒன்று அல்லது இரண்டு நாட்களில் வெளியிடுகிறேன். அடுத்த பகுதிக்கு காத்திருங்கள்.
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
30 அக்டோபர் 2024
இரயிலில் வந்ததால் தானே இது போன்ற அனுபவங்கள் கிடைக்கின்றன.விமானத்தில்?
பதிலளிநீக்குஇரயில் பயணங்கள் அருமையானவை.
Jayakumar
// என்ன ஹிந்தியை சென்னைத் தமிழ் போலவே பேசுகிறார் //
பதிலளிநீக்குஇதைதான் ஹிந்தி படங்களில் மெஹமது மற்றும் பின் நாட்களில் மிதுன் சக்கரவத்தியும் கிண்டல் செய்து படங்களில் நடித்திருக்கிறார்கள்.
மெஹ்மூத்.
நீக்குஅந்தக் குழந்தை தூங்கும் போது தான் மற்றவர்கள் தூங்க வேண்டும் ஜாலிலோ ஜிம்கானா என்கிற வரிகள் புன்னகைக்க வைத்தன.
பதிலளிநீக்கு/ஜாலிலோ ஜிம்கானா/
நீக்குஆம். புன்னகைக்க வைத்தது. இது அடிக்கடி சகோதரி கீதா சாம்பசிவம் அவர்கள் அடிக்கடி பதிவுகளில் பதிந்து கேட்டுள்ளோமோ..?
மற்றவர்களுக்கு சுற்றுலா ஸ்தலமாக இருக்கும் இடம் அங்கேயே வசிப்பவர்களுக்கு எவ்வளவு சிரமம் என்பதை கஜூரஹோவாசி அனுபவம் புரிய வைக்கிறது.
பதிலளிநீக்குமைக்ரேன் என்றதும் என் பழைய அனுபவங்கள் ஞாபகத்துக்கு வருகின்றன கடவுள் புண்ணியத்தில் இப்போதெல்லாம் மைக்ரேன் வருவதில்லை.
பக்கியா சிரிக்க வைத்தது.
ஒரு பாஷையில் கேள்வியும், இன்னொரு பாஷையில் பதிலும்...
பதிலளிநீக்குஇது இன்றைய எங்கள் பிளாக் பகுதியிலும் வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!!
இன்றைய பதிவு முழுவதுமே கவர்ந்தது.
பதிலளிநீக்குநானும் சமீபத்தில் நெடிய இரயில் பயணங்கள் செய்ததால் ரசிக்க முடிந்தது.
மொபைல் வாங்கத் தெரிந்தவர்களுக்கு ஹெட்செட் வாங்கும் மனது இல்லாமையால் பல பிரச்சனைகள்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. ரயில் பயணங்கள் ஸ்வாரஸ்யமானவை. அதுவும் ஜன்னலோர இருக்கை கிடைத்தால் பகல் நேரங்களில் வெளியே பராக்குப் பார்ப்பதிலேயே பொழுதே நகர்ந்து விடும்.
தாங்கள் பயணித்த போது கேட்ட /பார்த்த சம்பாஷணை கள்/ விஷயங்கள் சுவாரஸ்யமாக இருந்தது. நல்ல அழகான பெயர்களை வைத்தவர்கள் அதை முழுதாகத் சொல்லி மகிழ்வதில்லை. உண்மைதான்.. பக்கியா என்றா அழைக்க வேண்டும்.? "யா" மட்டும் அவர்கள் வாய் உள்ளேயே மெளனமாகி போனால், அந்த அழைக்கும் பெயர் மற்றவர்களுக்கு மிகவும் வித்தியாசமாக படும். :))
பதிவு ஸ்வாரஸ்யமாக இருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாசகம் அருமை.
பதிலளிநீக்குபயண அனுபவம் மிக ருமை, ரசித்து படித்தேன்.
அடித்து ஆடிய பாட்டியை ரசித்தேன்.
நாங்களும் முன்பு ரயில் பயணங்களை ரசித்தோம்
எத்தனை நினைவுகள், எத்தனை அனுபவங்கள்
ரயில் பயணம் அருமையானது. பலவித மனிதர்களை சந்திக்கலாம்.
வெங்கட்,
பதிலளிநீக்குதங்களின் 40 மணிநேர ரயில் பயண அனுபவங்கள் அருமை.
பாட்டி துணையுடன் பயணிப்பதால் சோர்வடைய வாய்ப்பில்லை.
வடக்குப்பட்டி வாரிசுகளின் வருகை அச்சத்தை தருகிறது.
நாற்பதாண்டுகளுக்கு முன்பு இதுபோன்று இரவும் பகலுமாக இந்தியாவில் ரயிலில் நீண்ட பயணம் செய்தது நினைவிற்கு வருகிறது. அரக்கோணம் டு மத்திய பிரதேசம் - ரட்லம்.