வெள்ளி, 18 அக்டோபர், 2024

மனசு தாங்க காரணம் - நடை நல்லது - பகுதி ஒன்பது


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


நடை நல்லது வரிசையில் இதோ இன்றைக்கு ஒன்பதாம் பகுதி! பதிவுகளுக்கு முகநூலிலும் இங்கேயும் நீங்கள் அனைவரும் தரும் ஆதரவிற்கு மனம் நிறைந்த நன்றி. என்னதான் முகநூலில் ஒவ்வொரு தினமும் நடை நல்லது என்ற தலைப்பில் இந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டேன் என்றாலும், இங்கே, வலைப்பூவில் பகிர்ந்து கொள்வதில் இருக்கும் மகிழ்ச்சி அங்கே இல்லை என்பது என் எண்ணம்.  எனக்கான சேமிப்பாகவும், முகநூலில் இல்லாதவர்கள் படிக்க வசதியாகவும், நடை நல்லது பதிவுகள் இங்கேயும்!


மனசு தாங்க காரணம் - 7 செப்டம்பர் 2024:



படம்: இணையத்திலிருந்து...

விலங்குகளுக்கு உணவு அளிப்பது தவறு என்று இயற்கை ஆர்வலர்களும் சக மனிதர்கள் சொன்னாலும் அப்படி உணவு அளிப்பதை பலரும் தொடர்கிறார்கள்… இயற்கையாக அவற்றின் தங்குமிடங்கள் ஆக இருந்த பல பகுதிகளை மனிதன் தனது தேவைக்காக ஆக்கிரமிக்க தொடங்கியதிலிருந்து இந்த பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கிறது. வனங்களை அழித்து விலங்குகளின் வாழ்வாதாரத்தை பாதித்த பிறகு அவை நாம் இருக்கும் இடங்களில் உலவுகின்றன என்று சொல்வது தவறு. நாம் தான் அவற்றின் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறோம்.


தற்போது நான் இருக்கும் வீடு ஒரு காலத்தில் வனமாக இருந்திருக்கும். இன்னமும் பக்கத்தில் ridge area என அழைக்கப்படும் இடம் இருக்கிறது என்றாலும் அங்கே இருக்கும் மரங்கள் வெறும் முட்செடிகள் மட்டுமே - பழம் தரும் மரங்கள் அல்ல! அதனால் அங்கே இப்போதும் இருக்கும் குரங்குகள் வனத்தை விட்டு வெளியே வந்து வீடுகளுக்குள் புகுந்து உணவை எடுத்துக் கொண்டு செல்வது வழக்கம் ஆக இருக்கிறது. சில சமயங்களில் அவற்றை தொந்தரவு செய்தாலோ, பயமுறுத்தினாலோ கடிக்கவும் செய்து விடுகிறது. 


ஆனால் ஒரு சிலர் காலை நேரத்திலும் மாலை நேரத்திலும் தங்களது கார் டிக்கி முழுக்க வாழைப்பழம், ஆப்பிள், மாம்பழம், பேரிக்காய் என விதம் விதமாக ஏதாவது பழங்களை அவ்வப்போது கொண்டுவந்து இது போன்ற குரங்குகளுக்கு வழங்குவார்கள். அப்படியான சமயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் அவற்றை வாங்கிச் சாப்பிடுவதை பார்க்கமுடியும். நடைப்பயனத்தின் போது இப்படியான காட்சிகள் அடிக்கடி பார்க்கக் கிடைப்பதுண்டு. மாநகராட்சி சட்டதிட்டங்கள் படி இப்படி குரங்குகளுக்கு உணவு அளிப்பது தண்டனைக்குரிய செயல் என்பதோடு அபராதமும் விதிப்பதுண்டு. என்றாலும் இப்படி உணவு அளிப்பது தொடரத்தான் செய்கிறது. 


குடும்பத்தோடு வந்து குரங்குகளுக்கு உணவு வழங்குவார்கள். அந்த சமயத்தில் அவர்களுக்கு பெரிய தானம் செய்துவிட்ட மகிழ்ச்சி முகத்தில் தெரியும். ஒவ்வொரு குரங்கும் சாப்பிடுவதைப் பார்த்து ஆனந்தப்படுவதொடு அவற்றுடன் one to one உரையாடல்கள், கொஞ்சல் போன்றவையும் நடக்கும். பார்க்கும் நமக்கு, என்ன தான் உணவு கொடுத்தாலும் அவற்றின் இயல்பைக் காண்பித்துவிடுமோ என்ற எண்ணமும் மனதில் வந்து போகும். 


இன்றைக்கு காலையில் பார்த்தபோது ஒரு குடும்பத்தினர் - குழந்தைகள் உட்பட மூன்று பெரிய பக்கெட்டுகளில் ஆப்பிள்கள் கொண்டுவந்து குரங்குகளுக்கு கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். இருபது கிலோ வாங்கியதாக சொன்னதைக் கேட்க முடிந்தது. இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ ஆப்பிள் சுமார் 200/- ரூபாய். அவர்களுக்கும் திருப்தி, குரங்குகளுக்கு வயிற்றுப் பசி தீர்ந்த நிம்மதி…. அடுத்த வேளை வரை பிரச்சனையில்லை! 


என்ன ஒரு பிரச்சனை என்றால் வாழைப்பழங்கள் கொடுத்தால் அவை சாப்பிட்டு முடித்தபின் அங்கே நடைபாதை முழுக்க வாழைத் தோல்கள் இருக்கும். காலை நேர நடையில் இவற்றையெல்லாம் கவனித்து நடக்கா விட்டால் வழுக்கி விழ வாய்ப்புண்டு….. குறிப்பாக முதியவர்கள். பழம் கொடுப்பவர்கள் தோல்களை கொஞ்சம் அப்புறப்படுத்தி, ஓரமாக குவித்து வைத்தால் நல்லது. வீதியை பெருக்கும் ஊழியர்கள் வரும்வரை யாரும் விழாமல் இருக்கலாம். இதுவும் ஒரு விதத்தில் சக மனிதனுக்குச் செய்யும் உதவியாக இருக்குமே! 


எல்லா காரியங்களுக்கும் மனது தானே காரணம்….. என்ன நான் சொல்றது சரிதானே? 


மேலும் நடப்போம்…… மேலும் பேசுவோம்……


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

18 அக்டோபர் 2024


18 கருத்துகள்:

  1. குரங்குகளை நம்ப முடிவதில்லை.  திடீரென பிராண்டி விடுகின்றன!  நீங்கள் சொல்வது போல சமூக சேவை செய்பவர்கள் அதற்கென ஒதுக்குப்புறமாக ஒரு இடம் செலெக்ட் செய்து கொள்ளலாம்.  சங்கடமான விஷயங்கள்தான்.  குரங்குகள் வாழைப்பழ தோல் சாப்பிடாதோ...  சாலையோரங்களில் கிடந்தால், மழையும் பெய்தால் சூப்பர்தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குரங்குகளை நம்ப முடியாது - எப்போது பல்லைக் காட்டும் என்பதை சொல்ல முடியாது. ஆனாலும் தைரியமாக சிலர் அருகே சென்று உணவு கொடுக்கிறார்கள். வாழைப்பழத் தோல், மாம்பழத்தோல் போன்றவை அவை சாப்பிடாமல் விட்டுவிடுவதை பார்த்திருக்கிறேன் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. எங்கள் வளாகத்தில் மிஞ்சின சப்பாத்தி ப.ரெட்டை ஒருவர் குப்பையில் போடாமல் கட்டி கீழே வைக்கிறார். அலையும் நாய்களில் இரண்டு அதைத் திறந்து காலையில் சாப்பிடுகிறது. அவங்க நல்லது செய்கிறார்கள், குடியிருப்பின் மற்ற வாசிகளுக்குக் கெடுதல் செய்கிறார்கள் என்று இருவேறு எண்ணங்கள் எனக்கு. சிலர் நிஜமாகவே உயிர்களிடத்தில் அன்பாக இருப்பது எனக்குப் படிப்பினை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலருக்கு இது பிடித்து இருக்கிறது. சிலருக்குப் பிடிப்பதில்லை. ஆனாலும் நீங்கள் சொல்லி இருப்பது போல சக உயிர்களிடத்தில் நிஜமாகவே அன்பு வைத்தால் நல்லது தானே நெல்லைத்தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. வாசகம் அருமை, உண்மை.
    விலங்குகள் தேடி உணவு உண்ணும் வழக்கத்தை விட்டு விட்டன என்று இயற்கை ஆர்வலர்கள் சொன்னாலும் புண்ணியம் கிடைக்கும் என்றும், பாவம் அவைகளுக்கு உணவு கிடைக்கவில்லை அவதி படுகிறது என்றும் கொடுக்கிறார்கள்.
    பழமுதிர்சோலையில் குட்டி யானை என்று சொல்கிற மினி வேனில் கொண்டு வந்து கொடுப்பார்கள். காரட், மற்றும் பழங்கள், பொரி, பொட்டுக்கடலை. நீங்கள் சொல்வது சரிதான் எல்லாவற்றுக்கும் மனம் தான் காரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      இப்படி உணவு அளிப்பது தவறு என்று தான் இங்கேயும் சொல்கிறார்கள். ஆனாலும் உணவு அளிப்பது தொடர்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. பிற உயிர்களையும் நேசிப்பதுதான் மனிதநேயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. உண்மைதான். நாம் அவற்றின் வாழ்விடங்களை கைப் பற்றிக் கொண்டபிறகு அவற்றிற்காக உணவு கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை. மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் இருக்கும் குரங்குகள் குண்டாக ஆரோக்கியமாக இருக்கின்றன. ஆனால் சில மலைப் பகுதிகளில் இருக்கும் குரங்குகளைப் பார்க்கும்பொழுது, அவை இளைத்துப்போய் எலும்புகள் தெரியும் அளவில்தான் இருக்கின்றன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலை/காடு இருக்கும் பகுதிகள் அழிக்கப்பட அங்கே இருக்கும் விலங்குகள் கொஞ்சம் கொஞ்சமாக நகருக்குள் வந்துவிடுகின்றன. பல பிரச்சனைகள் மனிதர்களால் தானே கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. வனங்களை அழித்து விலங்குகளின் வாழ்வாதாரத்தை பாதித்த பிறகு அவை நாம் இருக்கும் இடங்களில் உலவுகின்றன என்று சொல்வது தவறு. நாம் தான் அவற்றின் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறோம்.//

    உண்மை ஜி!

    இப்ப பாருங்க இங்க தமிழ்நாடு கர்நாடகா எல்லைப் பகுதிகளில் காட்டில் இரு மானில யானைகளும் உணவு கிடைக்காமல் ஆந்திரா பக்கம் செல்கின்றனவாம்.

    இதில் இப்ப பன்னேர்கட்டா ஹோசூர் பகுதி வரை இருக்கும் இந்தச் தேசிய சரணாலயக் காட்டுப் பகுதியில் 4 வழிச் சாலை போடப் போறாங்களாம். ஓசூரை இணைக்கும் வகையில் அதிவேகப் பயணச் சாலையாம்!!! அங்கிருக்கும் கிராம மக்கள் இதை எதிர்க்கிறார்கள். பின்னே, ஏற்கனவே சிறுத்தை, புலி எல்லாம் நகரத்துக்கு அப்பப்ப விசிட் கொடுக்கிறது. சமீபத்தில் electronic city ல உலாவியது. அதற்கு முன் எங்க ஏரியா வுக்கு 2 கிமீ தள்ளி அப்பபக்கம் உலாவியது.

    பொதுமக்களும், இயர்கை ஆர்வலர்களும் இப்படியே போனால் மக்களுக்கும் யானைக்குமான பிரச்சனைகள் அதிகமாகும் என்கிறார்கள். ஆனால், மத்திய அரசு சுற்றுப்புறச் சூழல் அமைச்சகம். Forests and Climate Change and the National Wildlife Board இதற்குப் பச்சைக் கொடி காட்டிட்டாங்களாம். இப்ப வனத்துறை பாதுகாப்பு அனுமதிக்காகக் காத்திருக்காங்களாம். என்னவோ போங்க.

    எதிர்காலத்தில் வீட்டுக்கொரு யானை, புலி, சிறுத்தை, 10 குரங்குகள் வளர்க்கணும், மத்திய அரசு ஒவ்வொரு வீட்டுக்கும் இவ்வளவு மாநியம் வழங்கும்னு சொல்லுமோ என்னமோ!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேதனையான நிகழ்வுகள் தான். மனிதன் தனது சுய லாபங்களுக்காக இயற்கையின் கொடைகள் பலவற்றை அழித்துக் கொண்டே இருக்கிறான் என்பது தான் நிதர்சனம் கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. வாழைப்பழம் கொடுக்கும் அன்பர்கள் பேசாம ஒரு குப்பைத் தொட்டியும் அங்கு வைத்து "எல்லாரும் சாப்டுட்டு இதுல தோலை இப்படிப் போடுங்கன்னு காட்டி குரங்குகளைப் பழக்கிவிட வேண்டியதுதான்!!!!!!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல ஐடியா தான். குப்பைத்தொட்டி காணாமல் போய்விட நிறைய வாய்ப்பு இருக்கிறது என்பதும் யோசிக்க வேண்டிய விஷயம் கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. மாநகராட்சி கட்டுப் பாடுகள் விதிப்பது இருக்கட்டும், அப்படினா அவங்க குரங்குகள் இப்படி வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையா? காடுகளை அழிப்பதும் அரசுதான், அதன் பின் உள்ள வரும் விலங்குகளுக்கு உணவு கொடுக்காதன்னு சொல்வதும் அரசுதான்! ஏனென்றால், உணவு தேடித்தான் உள்ளே வருகின்றன. அந்த உணவும் இங்கும் கிடைக்கலைனா பாரதியின் பாடல் தான் தனிஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்னு நம்மை தாக்கத்தான் செய்யும்! பசியின் கொடுமையில்தானே மனிதன் பல குற்றங்கள் புரிகிறான் அது போலத்தான்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனிதன் செய்யும் செயல்கள் - பல சமயங்களில் சக மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் கெடுதலாகவே முடிகின்றன என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. மனிதனுக்கே உரிய நேயத்தோடு விலங்குகளுக்கு உதவும் மனப்பான்மை சரிதான். ஆனால், அதையே எதிர்பார்த்து பழகும் அந்த வானரங்கள் அவ்வாறு கொடுக்காதவர்களைப் பார்த்து பாய்ந்து கடிக்கவோ, உறுமி மிரட்டவோ செய்ய ஆரம்பித்து விடும். அது எத்தனை பேரை பாதிக்கும் செயல் அல்லவா? கொடுப்பவர்களும் எத்தனை நாட்களுக்குத்தான் விடாமல் வந்து கொண்டேயிருப்பார்கள்.

    கருத்துகளில் கூறியிருப்பவைகள் சரிதான். யாரையும் யாராலும் மாற்ற முடியாது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே

    நடையோடு பல நல்ல செய்திகளைப் பற்றிய அலசல்களும் தொடரட்டும். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்கள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....