புதன், 23 அக்டோபர், 2024

இட்லி சாப்பிட ஆசைப்பட்டது ஒரு தப்பா - நகர் வலம் ஐந்து


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம்பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.

 


******


சென்ற நான்கு வாரங்களாக நகர்வலம் என்ற தலைப்பில் பதிவுகள் எழுதியது நினைவில் இருக்கலாம்.  அந்த வரிசையில் இன்றைக்கு அடுத்த பதிவு! 


இட்லி சாப்பிட ஆசைப்பட்டது ஒரு தப்பா? 


சென்ற நகர்வலம் பகுதியை முடிக்கும்போது “ஆனால் அதை விட சோகமான ஒரு விஷயம் அன்றைக்கு நடந்தது - உணவு சம்பந்தப்பட்ட விஷயம் தான் அதுவும்! அது அடுத்த நகர்வலம் பகுதியில்…..” என்று முடித்திருந்தேன்.  அந்தக் கதைக்கு தான் இன்றைக்கு வரப் போகிறேன்.  மாப்பிள்ளை அழைப்பு பேருந்திலிருந்து உத்யோக்g Bபவன் பேருந்து நிலையத்தில் இறங்கி அங்கிருந்து 490 எண் கொண்ட பேருந்தில் ஏறிக் கொண்டேன். நேரடியாக கரோல் Bபாக்g வரை செல்ல முடியும் என்பதால் அதில் ஏறிக் கொண்டு மெட்ரோ நிலையம் அருகே இறங்கிக் கொண்டேன்.  அங்கே மெட்ரோ நிலையம் அருகே இருக்கும் ஒரு கடை பற்றி ரீல்ஸ் பார்த்ததிலிருந்தே அங்கே சென்று அங்கே கிடைக்கும் உணவுப் பண்டங்களை ருசிக்க வேண்டும் என்கிற நப்பாசை இருந்தது.  ஆசை யாரை விட்டது.  சில ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள அதிகம் சிரமப்படத் தேவையில்லை என்பதால் அப்படியான ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதில் தப்பில்லை என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.  


கரோல் Bபாக்g மெட்ரோ நிலையத்தின் ஏழாம் நுழைவாயில் அருகே FRULLATO என்கிற கடை இருக்கிறது.  அங்கே அருமையான Thick Milkshakes மற்றும் Deserts கிடைக்கிறது என்று பார்த்ததிலிருந்து என்றாவது ஒரு நாள் சென்று விட வேண்டும் என்று தோன்றிவிட்டது.  தில்லி வந்த புதிதில் ஆரம்பித்து சுமார் நான்கு வருடங்கள் வரை நானும் அறை நண்பர் பாலாஜியும் ஒவ்வொரு நாளும் இரவு உணவு உண்ட பின்னர் கரோல் Bபாக்g பகுதியில் பிரபலமான Monday Market வழியாக நடந்து வீடு திரும்புவோம். அப்போது நிச்சயம் கையில் ஏதேனும் ஒரு ஐஸ்க்ரீம் இருக்கும் - அதைச் சுவைத்தபடியே தான் திரும்புவோம்.  அதீத குளிரில் கூட இந்தப் பழக்கம் தொடர்ந்து கொண்டிருந்தது.  ஒரு நாள் விடாமல் ஐஸ்க்ரீம் சாப்பிட்ட நாட்கள் அவை.  இப்போது தினம் தினம் சாப்பிடுவது இல்லை என்பதோடு அதைச் சாப்பிடுவது அரிதாகி விட்டது. கடையில் Milkshakes மற்றும் Deserts கிடைப்பதோடு நன்றாகவும் இருக்கிறது என்று பலரும் சொல்லவே அங்கே சென்று விட்டேன்.  



அங்கே Chocolate Fudge (99 ரூபாய்) வாங்கி சுவைத்தேன். ஆஹா அட்டகாசமான சுவை.  சாப்பிடும்போதே மனைவியையும் மகளையும் நினைத்துக் கொண்டேன்.  அவர்களுக்கும் ஐஸ்க்ரீம் சாப்பிடுவது பிடித்தமான விஷயமாயிற்றே. அவர்கள் இங்கே வரும்போது வாங்கித் தரவேண்டும் என்று மனதில் முடிந்து வைத்துக் கொண்டேன்.  சரி அவர்களுக்கும் சேர்த்து நானே சாப்பிட்ட மாதிரி இப்போதைக்கு நினைத்துக் கொள்வோம் என வாங்கிய Chocolate Fudge-ஐ சுவைத்தேன்.  மிகவும் நன்றாகவே இருந்தது.  எல்லோரும் உணவு சாப்பிட்ட பிறகு இப்படி Deserts சாப்பிடுவார்கள் என்றால் நான் கொஞ்சம் வித்தியாசமாக இங்கே முதலில் Deserts சுவைத்து விட்டு வீட்டுக்குச் சென்று இரவு உணவை சமைத்து சாப்பிட நினைத்திருந்தேன்.  ஆனால் வீட்டு சமையல் இன்றைக்கு வேண்டாம் என முடிவு எடுக்க ஒரு காரணமாக இருந்தது எதிர் சாரியில் இருந்த ஒரு கடையின் பெயர் பலகை. அந்தக் கடையின் பெயர் Flavours of Chennai… 


கடையின் பெயரை பார்த்ததும் அப்படியே சாலையைக் கடந்து அந்தக் கடையின் முன்னே நின்றேன்.  உணவுப் பட்டியல் பார்த்தபோது சாம்பார் மினி இட்லி என்று பார்த்ததும் கொஞ்சம் சபலம் வந்தது - இட்லி சாப்பிட்டு நிறைய நாட்கள் ஆகிவிட்டதே - சாப்பிடுவோம் என்று முடிவு செய்தேன். பொதுவாகவே தில்லியில் நான் வெளியில் தென்னிந்திய உணவுகளை சாப்பிடுவதில்லை.  அது நன்றாக இருக்காது என்று அனுபவம் தந்த பாடம் என்பதால் இப்படி.  ஆனால் அன்றைக்கு ஆசை வென்றது.  ஒரு plate சாம்பார் மினி இட்லி என்று தமிழில் கேட்க அந்த கடையின் உரிமையாளர் ஆங்கிலம் கலந்த ஹிந்தியில் பதில் சொன்னார்.  அப்போதாவது சுதாரித்து இருக்க வேண்டும்.  அவருக்கு தமிழ் தெரியவில்லை - கடையின் பெயர் மட்டும் Flavours of Chennai… அவர் தமிழகத்தை அடுத்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதை அவர் முகம் மற்றும் அவர் பேசிய ஆங்கில மொழியின் Slang சொன்னது. 


யாரோ ஒரு ஹிந்திவாலாவுக்கு மைஸூர் மசாலா ரவா தோசா எப்படிச் செய்வார்கள் என்று ஆங்கிலத்தில் விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார்.  நான் கேட்ட இட்லி வந்தது. பத்து மினி இட்லி போட்டு அதில் சூடாக சாம்பார் விட்டு ஒரு plate-இல் சட்னியும் வைத்து தந்தார்.  பல இடங்களில் கொடுக்கும் plastic spoon நாக்கை பதம் பார்க்கும் விதத்திலேயே இருக்கிறது. இங்கேயும் அப்படியே.  முதல் இட்லி துண்டை எடுத்து வாயில் வைத்ததும் தெரிந்து விட்டது இட்லியின் தரம்.  ரப்பர் கொண்டு செய்யப்பட்டது போல அப்படி ஒரு இழுவை. சவக் சவக் என்று மெல்லும்போதே பிடிக்காமல் போய்விட்டது.  சாப்பிடாமல் விட முடியாது.  60 ரூபாய் கொடுத்து வாங்கி விட்டோம். வேறு வழியில்லை சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.  உணவை வீணாக்குவது எப்போதுமே பிடிக்காத விஷயம் என்பதால் மனதைக் கல்லாக்கிக் கொண்டு, நாக்கையும் ருசி பார்க்காதே அடங்கு என்று அடக்கி பத்து மினி இட்லிகளையும் சாம்பார் மற்றும் சட்னியின் துணை கொண்டு உள்ளே தள்ளினேன்.  சாம்பார் சுவையும் சுமார் தான்.  நம் ஊரில் கிடைக்கும் சாம்பார் இட்லி எப்படி சுவையாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே சாப்பிட்டு முடித்தேன்.  


“இந்த வேதனை உனக்குத் தேவையா?” என்று வடிவேலு மாதிரி என்னை நானே கேட்டுக் கொண்டு அங்கேயிருந்து நகர எதிரே இருந்த FRULLATO கடையின் பெயர் பதாகை கவர்ந்து இழுத்தது.  மீண்டும் ஏதேனும் ஒரு மில்க் ஷேக் சாப்பிட்டு புண்பட்ட/நொந்து போன மனதை தேற்றிக் கொள்ளலாமா என்று கூட மனது அலைபாய்ந்தது. ஆனாலும் கடிவாளம் போட்டு அடக்கிக் கொண்டு பேருந்து நிறுத்தம் வந்து அங்கிருந்து 990 பிடித்து வீட்டருகே இறங்கிக் கொண்டேன்.  இட்லி சாப்பிட ஆசைப்பட்டது இவ்வளவு பெரிய தப்பா என்று என்னை நானே மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.  அடுத்த நகர்வலத்தில் வேறு ஒரு அனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்.  


தொடர்ந்து வலம் வருவோம்…..


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

23 அக்டோபர் 2024

12 கருத்துகள்:

  1. இட்லி உருவத்தில் எதையாவது செய்து போட்டால் சாப்பிட்டு விடுவார்கள் என்று நினைத்திருப்பார்கள் போலிருக்கிறது! நீங்கள் சாப்பிட ரப்பர் வகை இட்லிகள் சென்னையிலேயும் கிடைக்கின்றன!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வடிவத்தில் மட்டுமே இட்லி - மற்றபடி ரப்பர்! இப்போது பல ஊர்களில் இப்படியான இட்லிகள் தான் ஸ்ரீராம் - குறிப்பாக வடக்கில்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. நீங்கள் டெல்லி சுயம்பாக்கத்தில் எப்பொழுதாவது கூட இட்லி வார்ப்பது இல்லையா? ரெடிமேட் மாவு கூட கிடைக்குமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரெடிமேட் மாவு பிடிப்பதில்லை. முன்பு வீட்டிலேயே அரைத்து (மிக்ஸியில்) தோசை, ஊத்தப்பம், இட்லி போன்றவை செய்ததுண்டு. இப்போது செய்வதில்லை ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
    2. அப்படித்தான் படித்தேன் ஸ்ரீராம். பல சமயங்களில் இப்படி எழுத்துப் பிழைகள் வந்து விடுகின்றன.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. வாசகம் அருமை.
    சில நேரங்கள் அமைதியாகத்தான் போக வேண்டி உள்ளது.
    இட்லி உத்தரசுவாமிமலையில் நன்றாக இருக்கும். கார் பார்க் செய்யும் இடத்தில் ஒரு தமிழ்நாட்டை சேர்ந்தவர் விற்பார்.

    //அங்கே Chocolate Fudge (99 ரூபாய்) வாங்கி சுவைத்தேன். ஆஹா அட்டகாசமான சுவை. சாப்பிடும்போதே மனைவியையும் மகளையும் நினைத்துக் கொண்டேன். அவர்களுக்கும் ஐஸ்க்ரீம் சாப்பிடுவது பிடித்தமான விஷயமாயிற்றே. அவர்கள் இங்கே வரும்போது வாங்கித் தரவேண்டும் என்று மனதில் முடிந்து வைத்துக் கொண்டேன். //

    அருமையான நினைவு. அங்கு ஆதியும் உங்களை நினைத்து கொள்வார் உங்களுக்கு பிடித்தவைகளை செய்யும் போது. இட்லி சாபிட போய் ஏமாற்றம் அடைந்ததை சொல்லிய போது நினைத்து இருப்பார் மினி இட்லி சாம்பார், சட்னியுடன் செய்து கொடுக்க வேண்டும் ஊர் வரும் போது என்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      பதிவு வழி பகிர்ந்த செய்திகள் குறித்த தங்கள் எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை.

    ஐஸ்க்ரீம் நன்றாக இருந்தது என சுவைக்கும் போதே ஊரில் இருக்கும் மனைவியையும், மகளையும் நினைத்தவாறு சாப்பிட்டது மனதை நெகிழ வைத்தது. அவர்களை விட்டு சாப்பிடுகிறோமே என நினைக்கும் தங்களது அன்பிற்கு மகிழ்ச்சி. அவர்களும் இப்படி ஏதாவது சாப்பிடும் போது தங்களை நினைத்திருப்பார்கள்.

    இட்லியின் கதை கஸ்டமாக இருக்கிறது. சில சமயங்களில் நாம் விரும்பும் உணவுகள் நாம் எதிர்பார்த்த மாதிரி அமையாமல் போவது வருத்தம்தான்.

    நாங்களும் ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு உணவகத்தில் ஒரு சாதா தோசை சாப்பிட்டோம் . எப்போதும் அந்த உணவகத்தில் தோசை சாப்பிட்டதில்லை. இட்லிதான் வாங்குவோம். அதனால் அன்று அதை தேர்ந்தெடுத்தோம். தோசை எண்ணெய்யில் மிதந்து முறுக்காக மாறி வந்தது. சாப்பிடுவதற்குள் பட்ட சிரமம் சொல்லி மாளாது. இனி தோசை ஆசை வராமல் இருக்க மனதிடம் பல முறை சொல்லி விட்டேன். ஆனால், அது எத்தனை நாள் நான் சொல்வதை கேட்குமோ ..? :))

    நகர்வலம் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவும் வாசகமும் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி. நகர்வலம் பதிவின் பகுதிகள் குறித்த தங்களது விரிவான கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  5. மும்பையில் பல பிழைக்க வந்த தமிழர்கள் இட்லி, வடை செய்து அலுமினியம் vessel இல் போட்டு தூக்கில் chutney யுடன் கையில் horn மாதிரி ஒன்றை வைத்துக் கொண்டு Bபொய் என்று சத்தம் செய்து கொண்டு சுற்றுவர்.மந்தார இலையில் 3 இட்லி(size சற்று சிறியது) ஒரு வடை 10 ரூ.கடைக்காரர்கள் கூலியாட்கள் விரும்பி சாப்பிடுவர்.இட்லி,தோசை,வடை விற்றே ஒருவர் இங்கு நன்கு பிழைக்கலாம்.மெது வடையை மெண்டு வடை என்பர் இங்கு😁
    விஜி.

    பதிலளிநீக்கு
  6. சுவையான ஐஸ்கிரீம் மனைவி,மகளை நினைத்ததில் மேலும் இனித்திருக்கும்.

    இனித்த ஐஸ் கிரீம் ....ஹா...ஹா...இட்லி வந்து நோக வைத்துவிட்டதே. சில தடவை இப்படி ஆகி விடுமே.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....