செவ்வாய், 29 அக்டோபர், 2024

திருச்சி புத்தகத் திருவிழா - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட நடை நல்லது - பகுதி பன்னிரண்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


திருச்சி புத்தகத் திருவிழா - 30 செப்டம்பர் 2024























புத்தகத் திருவிழாவுக்கெல்லாம் சென்று ரொம்ப வருஷம் ஆச்சு! டெல்லியில் வசித்த போது கூட ஒருமுறை உலக புத்தகக் கண்காட்சிக்குச் சென்று அங்கே இருந்த மிகச் சில தமிழ் புத்தகங்கள் கிடைக்கும் கடைகளில் புத்தகங்கள் வாங்கியிருக்கிறோம்! என்னிடம் இன்னும் கூட அவை இருக்கின்றன! 


அப்போது அங்கு வந்திருந்த நம் தமிழ் வலைப்பதிவர்கள் சிலரையும் கூட சந்தித்து மகிழ்ந்தோம்! 


அப்புறம் 2015ஆம் ஆண்டு என நினைக்கிறேன்! ஒரு திருமணத்திற்காக சென்னைக்குச் சென்றிருந்த போது அப்போது  நடந்து கொண்டிருந்த புத்தக கண்காட்சிக்கு நம்ம Ganesh Bala  கணேஷ் சாருடன் சென்று சுற்றி மகிழ்ந்து வந்தோம்! பிறகு இப்போது தான் எங்களுக்கு அந்த வாய்ப்பு கிட்டியுள்ளது!


செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி முதல் அக்டோபர் 6ந்தேதி வரை திருச்சியில் நடைபெறும் மாபெரும் புத்தகத் திருவிழாவைப் பற்றியும் அங்கே வருகை தந்திருக்கும் 150க்கும் மேற்பட்ட பதிப்பகத்தினரின் அரங்குகள் பற்றியும், அன்றாடம் மாலையில் நடைபெறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்களின் கலை நிகழ்ச்சிகளைப் பற்றியும் Hello fmல் திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் IAS அவர்கள் சொன்னதைக் கேட்டேன்!


முடிந்தால் ஒரு நாள் போயிட்டு வரலாமே என்று நினைத்த போது, மகளும் கல்லூரியிலிருந்து வந்ததும் ‘அம்மா! இங்க Book fair நடக்கிறதா எல்லா இடத்திலும் விளம்பரம் பார்த்தேன்! நாமளும் ஒருநாள் போகலாமா?’ என்றாள். அவ்வளவு தான்! அப்பாவிடம் சொல்லி மூவரும் ஞாயிறான நேற்று கிளம்பியாச்சு..🙂


மாலை திருச்சி Cantonment பகுதியில் உள்ள John Vestry பள்ளியின் விளையாட்டுத் திடலில் அமைக்கப்பட்டுள்ள புத்தகத் திருவிழாவுக்குச் சென்று சேர்ந்தோம்! வாயிலிலே கோட்டை போன்ற பிரம்மாண்ட அமைப்பும், கோட்டையின் உச்சியில் கம்பீரமாக நின்ற இராணி மங்கம்மாளும் பிரம்மிக்க வைத்தது! வீரம் விளைந்த மண்ணாயிற்றே!


உள்ளே போவதற்கு முன்னே முக்கியமான ஒரு கடமை இருக்கே என்று இராணி மங்கம்மாளுடன் மூவரும் மாற்றி மாற்றி புகைப்படங்கள் சில எடுத்துக் கொண்டோம்…:) விடுமுறை நாளானதால் நேற்று கும்பல் அதிகமாக தான் இருந்தது! 


வரிசையாக அமைத்திருந்த அரங்குகளும் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்களும் என எங்களுக்கான இனிய நேரத்தை அங்கே செலவிடத் துவங்கினோம்! மகளும் ஆர்வமுடன் நிறைய புத்தகங்களை அங்கு எடுத்து பார்த்துக் கொண்டிருந்தாள்! ‘இது நான் கிண்டில்ல படிச்சிருக்கேன்! இது நல்லா இருக்கும்! இந்தக் கதை இப்படித்தான் இருக்கும்மா! இது எனக்கு காலேஜ்ல வந்திருக்கு! என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தாள்!


முத்து காமிக்ஸ் என்ற அரங்கைப் பார்த்ததும் ‘இரும்புக்கை மாயாவி’ என்று சொல்லிக் கொண்டு உள்ளே சென்று விட்டேன்…:) மகளிடம் நான் இதைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்த போது அங்கே தன் மகளுடன் வந்திருந்த ஒரு நபர், ‘ஆமாங்க! நாமல்லாம் எவ்வளவு இன்ட்ரஸ்டிங்கா படிச்சிருக்கோம்!’ ‘சூப்பரா இருக்குமே!’ என்றார்..🙂 


வானதி பதிப்பகத்திற்குள் சென்றதும் கூடலழகி நல்லா இருக்கும்! படிச்சிருக்கீங்களா! என்று கேட்டார் கடைக்காரர்! இருக்குங்க! என்றேன்! அத்திமலைத் தேவன் என்றார்! இதோ இந்த பாப்பா இருக்காளே இவளே ரெண்டு தடவ படிச்சிட்டா! என்றேன்! சார்! எங்க வீட்டுல எல்லாருமே காலச்சக்கரம் சாரோட பரம ரசிகர்கள்! என்றேன்! 


சார் அடுத்தது ஒண்ணு கூட எழுதறார் என்று அவர் சொன்னதும் ‘செம்பவழத் தீவு!’ என்றேன்! நாம தான் முகநூலிலும் தொடர்கிறோமே! அப்புறம் அவர் ஒன்றுமே சொல்லலை…:) எங்கள் கலெக்‌ஷனில் இல்லாதவற்றை மட்டும் வாங்கிக் கொண்டோம். காலச்சக்கரம் சாருடைய புத்தகங்கள் இன்னும் இரண்டு அரங்குகளில் கூட இருந்தது! 


இந்த புத்தகத் திருவிழாவில் இருந்த எல்லா அரங்கிலுமே புத்தகங்களை 10% தள்ளுபடியுடன் வாங்கிக் கொள்ளலாம்! தேர்வுகளுக்கான புத்தகங்கள், பரிசளிப்பதற்கான சிறிய புத்தகங்கள், குழந்தைகளுக்கான புத்தகங்கள், பிக்சர் சார்ட்டுகள், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான புத்தகங்கள் என்று எங்கு நோக்கினும் புத்தகங்கள்! 


மத்தியச்சிறையில் உள்ள  கைதிகளுக்கு நாம் புத்தகங்களை donate செய்வதற்கு கூட ஒரு அரங்கு! திருநங்கைகள் தயாரித்த பொருட்களுக்கான அரங்கு! என்றும் இருந்தது! ஒரு ரவுண்ட் அடித்து எல்லா கடைகளையும் பார்த்த பின் வெளியே வந்தோம்! கலைநிகழ்ச்சிகள் அங்கே நடைபெற்றுக் கொண்டிருக்க அதையும் சற்று நேரம் பார்த்து வீடியோ எடுத்தேன்!


இவ்வளவு நேரம் சுற்றினால் பசிக்காதா! அதற்கும் அங்கே சில கடைகள் அமைக்கப்பட்டிருந்தது! Mercelyல் ஆளுக்கொரு சாக்லேட் ஐஸ்கிரீம் வாங்கி ருசித்து விட்டு அங்கேயிருந்து கிளம்பி விட்டோம்! எங்கள் மூவருக்குமே நேற்றைய பொழுது நல்லதொரு இனிய மாலைப் பொழுதாக அமைந்தது! புத்தகத் திருவிழாவில் எடுத்த படங்கள் இப்பதிவில் இணைத்திருக்கிறேன். 


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

29 அக்டோபர் 2024


5 கருத்துகள்:

  1. நாள் கடந்து பதிவிட்டாலும், நயம்பட பதிவிட்டுள்ளீர்கள். சுவாரஸ்யம். என்னென்ன புத்தகங்கள் வாங்கினீர்கள்?

    பதிலளிநீக்கு
  2. வாசகம் அருமை.
    புத்தகத் திருவிழா உலா , பழைய நினைவுகள், படித்த படிக்க போகும் புத்தகங்கள் விவரம் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
  3. படங்களும் விவரங்களும் சூப்பர், ஆதி!

    காலச்சக்கரம் நரசிம்மா அவர்கள் ஹப்பா எத்தனை எழுதியிருக்கிறார் பிரமிப்பு அது போல இந்திரா சௌந்தரராஜன் அவர்களும். எப்படித் தொடர்ந்து எழுதுகிறார்கள் என்று பிரமிப்பும்!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. புத்தகத் திருவிழா படங்கள் நன்றாக உள்ளன. உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்துள்ளீர்கள்.

    எமது நாட்டிலும் சென்ற மாதம் நடந்தது. பேரனுக்கான புத்தகங்கள் வாங்கினோம்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை.

    திருச்சி புத்தக கண் காட்சி படங்கள் யாவும் நன்றாக உள்ளது. அன்று முழுவதும் நன்றாக பொழுது போயிருக்கும். ஏதாவது புத்தகங்கள் வாங்கினீர்களா ? புத்தக கண்காட்சியை பற்றிய விபரங்கள் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....