திங்கள், 28 அக்டோபர், 2024

சூழல் - மழையே மழையே - அடி பம்ப் - தூங்கா நகரம் - நடைக்கு கொஞ்சம் தடை - நடை நல்லது - பகுதி பன்னிரண்டு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று காலை வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி பதிமூன்று பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


நடை நல்லது வரிசையில் இதோ இன்றைக்கு பன்னிரெண்டாம் பகுதி! பதிவுகளுக்கு முகநூலிலும் இங்கேயும் நீங்கள் அனைவரும் தரும் ஆதரவிற்கு மனம் நிறைந்த நன்றி. என்னதான் முகநூலில் ஒவ்வொரு தினமும் நடை நல்லது என்ற தலைப்பில் இந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டேன் என்றாலும், இங்கே, வலைப்பூவில் பகிர்ந்து கொள்வதில் இருக்கும் மகிழ்ச்சி அங்கே இல்லை என்பது என் எண்ணம்.  எனக்கான சேமிப்பாகவும், முகநூலில் இல்லாதவர்கள் படிக்க வசதியாகவும், நடை நல்லது பதிவுகள் இங்கேயும்!


சூழல் - மழையே மழையே - 12 செப்டம்பர் 2024:



காலை ஐந்து மணிக்கு எப்போதும் போல விழித்து வேலைகளை முடித்துக் கொண்டு நடந்து வரலாம் என புறப்பட்டு ஜன்னல் வழியே பார்த்தால் மழை! அட… இன்னிக்கு நடை அவ்வளவு தானா என வீட்டில் அமர்ந்துவிட்டேன்! காலை ஏழு மணி வரை கூட மழை பொழிந்து கொண்டிருந்தது. அதனால் காலை நேர நடைக்கு இன்றைக்கு தடை! மதியம் அலுவலகத்தில் உணவு இடைவேளையின் போது தான் நடக்க முடியும்.  ஆனாலும் காலை அலுவலகத்திற்கு செல்வதற்கு நடக்கலாம் என நினைத்தாலும் மேக மூட்டத்தினை பார்த்த பிறகு ”அடங்குடா ஆர்வக்கோளாறு!” என்று என்னை நானே தடுத்துக் கொண்டு வழக்கம் போல பேருந்தில் செல்ல பேருந்து நிறுத்தம் சென்றேன்.  


அங்கே பேருந்து நிறுத்தத்தில் ஒரு மனிதர் கீழே ஒரு கம்பளியை விரித்து, மேலே ஒரு Curtain துணியைப் போர்த்திக் கொண்டு படுத்துக் கொண்டிருந்தார்.  அப்போது மணி காலை 08.25! அப்படி இப்படி திரும்பிப் படுத்தாலும் தொடர் உறக்கம் தான். மழை காரணமாக பேருந்து நிறுத்தத்தின் பல இடங்களில் தண்ணீர் மற்றும் மேலிருந்தும் தொடர்ந்து சொட்டிக் கொண்டு இருந்தது. ஆனாலும் அதெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டே இல்லை என்பது போல தொடர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். நம்மைப் போல கவலைகள் இல்லை அவருக்கு.  கவலைப்படும் நிலையை எல்லாம் கடந்து விட்டார் என்பது ஒரு புறம் இருந்தாலும், பல விஷயங்களில் உழன்று கொண்டிருக்கும் நம்மால் இப்படியெல்லாம் விட்டேத்தியாக இருக்க முடியுமா என்ற எண்ணமும் தோன்றியது. 


சிறு வயதில் நினைத்த (கிடைத்த) இடத்தில் படுத்து உறங்கியிருக்கிறேன் - ஒரு போராட்டத்தில் மாட்டிக் கொண்டு சாலை ஒன்றில், நான் இரவு நேரத்தில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து நின்று விட, சாலையோரத்தில் இருந்த மரத்தின் அடியில் படுத்து உறங்கியிருக்கிறேன் - அது போல இப்போது படுத்து உறங்க முடியுமா என்ற எண்ணம் மனதுக்குள் வந்தது! அது ஒரு காலம்! இப்போது நினைத்தாலும் இப்படியெல்லாம் வெட்ட வெளியில் உறங்க முடியாது - சென்ற வருடம் சுந்தர/சந்தன மஹாலிங்கம் ஆலயத்திற்குச் சென்று ஓரிரவு தங்கியபோது கூட ஒரு கூடாரத்தில் தங்கியிருந்தேன் என்றாலும் அது வெட்ட வெளியல்ல! 


பல மாற்றங்களை அடைந்து நம் உடலை ஒரு வித சௌகரியங்களுக்கு பழக்கப்படுத்திவிட்டால் அந்த சூழலிலிருந்து வேறுபட்டு எந்த வித சௌகரியமும் இல்லாத இடங்களில் தங்குவது நமக்கு சாத்தியமில்லை என்று தோன்ற ஆரம்பித்து விட்டது! எனது அப்பா எந்த திருமண நிகழ்வுகளுக்குச் சென்றாலும் தனக்கு ஒரு தலையணை, பாய் மற்றும் போர்வை கொடுத்து விடுங்கள் என்று போனவுடன் சொல்லி விடுவார் - பொதுவாக மெத்தையில்லாமல் படுக்க மாட்டார். எங்கே சென்றாலும் மெத்தை எதிர்பார்த்து கிடைக்காவிட்டால் மேலே சொன்னபடி பாய், போர்வை, தலையணை ஆகியவை நிச்சயம் தேவை! சூழலுக்கு ஏற்ப நம்மால் நம்மை உடனடியாக மாற்றிக் கொள்ள முடியுமா என்ற சிந்தனை காலையில் அந்த மனிதரை பேருந்து நிறுத்தத்தில் பார்த்த போது தோன்றியது!  


இன்றைய சிந்தனை குறித்த உங்கள் எண்ணங்களையும் சொல்லுங்களேன்!


*******


அடி பம்ப் - 13 செப்டம்பர் 2024:



ஹஸ்த்சாலித் பம்ப் அல்லது ஹாண்ட் பம்ப் என்று ஹிந்தியில் சொல்லப்படும் அடி பம்ப் இன்னும் நமது கிராமங்களில் உண்டு. ஆனால் சென்னை போன்ற பெரு நகரங்களில் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் தலைநகர் தில்லியில் இன்றைக்கும் பயன்பாட்டில் உள்ளது. பலருக்கு இது பயன்படுகிறது. தங்களது மாநிலங்களை விட்டு வேலை தேடி தலைநகர் வந்து வீடில்லாமல் சாலையோரங்களில் தங்கும் பலரும் இவற்றை பயன்படுத்துகிறார்கள்.


குளிப்பதற்கு, குடிப்பதற்கு என பலவற்றுக்கும் இந்த பம்பில் அடித்து தான் தண்ணீர் பெறுகிறார்கள். அதீத குளிர் நாட்களில் கூட இந்த பம்பில் தண்ணீர் அடித்து குளிப்பவர்களை பார்க்க முடியும். என்னதான் பூமிக்கு அடியில் இருந்து வரும் தண்ணீர் கோடைக்காலத்தில் சில்லென்றும் குளிர் நாட்களில் சற்றே வெதுவெதுப்பாக இருக்கும் என்றாலும் கடும் குளிர் காலங்களில் இப்படி பச்சைத் தண்ணீரில் வெட்ட வெளியில் அமர்ந்து குளிப்பது என்பது மிகவும் கொடுமையானது. 


முன்பெல்லாம் தில்லியில் பல சாலை சந்திப்புகளில் பியாவு என்கிற தண்ணீர் தரும் இடங்கள் இருந்தன. ஒரு சிறு கட்டிடத்தின் உள்ளே அமர்ந்து கொண்டு சிறிய இடைவெளி வழியே ஒரு மூக்கு பாத்திரத்தின் உதவியால் நீட்டிய கைகளில் தண்ணீர் ஊற்றுவார்கள். அப்படியே ஊற்ற ஊற்ற நாம் நீர் அருந்தலாம். ஆனால் காலப் போக்கில் இப்போது அப்படியான பியாவு ஒன்று கூட இல்லை. குடி நீர் கூட காசு கொடுத்து தான் வாங்க வேண்டி உள்ளது.


இன்று காலை மழை தொடர்ந்து கொண்டிருந்தாலும் கொஞ்சம் நடந்து வந்தேன். எங்கள் வீடு இருக்கும் வளாகத்தில் இருக்கும் அடிபம்ப் பார்த்த உடன் நம் ஊரில் இன்னும் இருக்கிறதா என்று யோசித்தேன். ஒரு சில கிராமங்களில் இருந்தாலும் சென்னை போன்ற நகரங்களில் நான் பார்த்தது இல்லை. இன்னும் நம் ஊரில் இப்படியான அடிபம்ப் இருக்கிறதா என்று சொல்லுங்களேன்.....


******


தூங்கா நகரம் - நடைக்கு கொஞ்சம் தடை - 14 செப்டம்பர் 2024:


இன்றைக்கு நடைக்கு கொஞ்சம் தடை….. சாலைகளில் நடக்காமல் இரயில் நடைமேடையில் அல்லது இரயிலுக்குள் நடக்க வேண்டியிருக்கும். காலை மூன்று மணிக்கு எழுந்து காலை வேலைகளை முடித்துக் கொண்டு குளித்து ஹஸ்ரத் நிசாமுதீன் இரயில் நிலையம் நோக்கி ஆட்டோவில் புறப்பட்டாச்சு! தமிழகம் நோக்கிய பயணம். இப்போதெல்லாம் விமானத்தில் பயணம் செய்ய அதுவும் தில்லியிலிருந்து திருச்சி வரை விமானத்தில் வருவதென்றால் பத்தாயிரம் வரை ஆகிவிடுகிறது. போக வர ஒருவனுக்கே குறைந்த பட்சம் 20K……. அதனால் கடந்த இரு முறையாக இரயில் பயணம் தான். 


காலை 05.20 மணிக்கு திருச்சி வரை செல்வதற்கான திருக்குறள் விரைவு வண்டியில் தான் நேற்று பயணச்சீட்டு வாங்கினேன். அதனால் காலை விரைவில் எழுந்து காலையின் சில்லென்ற காற்று உடலைக் குளிர்விக்க மனதும் காலைக் காட்சிகளைக் கண்டு குளிர்ந்தது. அதிகாலை நேரத்திலேயே சர்தார்ஜிகள் மற்றும் சர்தார்ணிகள் குருத்வாரா வந்து பிரார்த்தனை செய்து திரும்புவதையும் இரவு நேர கேளிக்கைகளை முடித்துக் கொண்டு சாலையில் இருக்கும் நிசப்தத்தை கலைக்கும் வண்ணம் சப்தம் எழுப்பிக் கொண்டு செல்வதையும் காண முடிந்தது. 


வாகன நெரிசல் இல்லாமையால் 20 நிமிடத்தில் இரயில் நிலையம் அடைந்துவிட்டேன். எப்போதும் போல நீண்ட தூரம் நடக்க முடியாது என்றாலும் நடைமேடையில் முடிந்தவரை நடந்து கொண்டிருந்தேன். காலை நேரத்தில் பார்க்கக் கிடைக்கும் காட்சிகள் அத்தனை அழகானவை அல்ல. இரயில் பயணத்தில் கிடைக்கும் அனுபவங்களை அவ்வப்போது எழுதுகிறேன். 


மதுரை மட்டுமல்ல தலைநகர் தில்லியும் 24 X 7 இயங்கிக் கொண்டிருக்கும் தூங்கா நகரம் என்பதை இன்றைய காட்சிகளும் சொல்லிப் போனது…..  மேலும் பல விஷயங்களை நடை நல்லது பதிவுகளில் தொடர்ந்து பார்க்கலாம்.


மேலும் நடப்போம்…… மேலும் பேசுவோம்……


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

28 அக்டோபர் 2024

11 கருத்துகள்:

  1. பொது இடங்களில் ஆதரவற்றோரின் தூக்கம் - கொடுத்து வைத்தவர்கள் என்று நமக்குத் தோன்றினாலும் அவர்கள் நிலை அவர்களுக்குத்தான் தெரியும்.  இக்கரைக்கு அக்கரை பச்சை. 

    அவரவருக்கு வாய்த்த இடம் அவன் போட்ட பிச்சை; அறியாத மானிடருக்கு அக்கரையில் இச்சை! - கவிஞர்.

    பதிலளிநீக்கு
  2. அடி பம்ப் - ஆம் சென்னையின் பெரிய வீதிகளில் காண முடிவதில்லை. நகரின் உட்புறங்களில் அமைந்திருக்கலாம். இது இல்லாவிட்டால் சிரமம்தான்.

    டெல்லியில் முன்னர் தருவதாகச் சொன்ன பியாவு தகவல் வியப்பு. பிற நகரங்களில் இது போல இருந்ததில்லை என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. இப்போதெல்லாம் நிறைய நகரங்கள் தூங்கா நகரங்களாகி விட்டன 

    பிழைப்புக்கு பிழைப்பும் ஆச்சு, பொழுது போக்குக்கு பொழுதுபோக்கும் ஆச்சு.

    பதிலளிநீக்கு
  4. இன்றைய வாசகம் சூப்பர் ஜி!

    அந்த மனிதர் பாவம் அவருக்கு என்ன கவலைகளோ மனதிற்குள்? நாடோடிகள்/குறவர்களின் வாழ்க்கையை பார்க்கறப்ப ஆஹா என்ன ஜாலிப்பா என்று நினைத்ததுண்டு. ஆனால் எங்கு இடம் கிடைக்கிறதோ அங்கு அப்படியே ஒரு சட்டி பானை வைத்து பொங்கி படுத்து குழந்தைகள் அங்கிருக்கும் குப்பைகளில் சேற்றில், அழுக்கு நீரில் விளையாடி என்ன செய்தாலும் கவலைப்படாமல் இருப்பதைப் பார்க்கறப்ப ஆ இது நம்மால முடியாது என்று தோன்றியதுண்டு

    ஆனால் இது வரை எங்கு போனாலும் வசதிகள் இல்லைனாலும் உறங்கும் பழக்கம் இருக்கிறது. நாளை எப்படியோ

    கீதா

    பதிலளிநீக்கு
  5. அடி பம்பு சென்னையில் சில இடங்களில் இருக்கின்றன. கார்ப்பரேஷன் தண்ணீர் வரும் போது பலரும் அடித்துப் பிடித்ததுண்டு. இங்கு பெங்களூரில் அப்படிப் பார்க்கவில்லை இதுவரை.

    தில்லியில் பார்த்திருக்கிறேன்.

    இங்கும் மழை சமீபத்தில் பெய்த போது கொஞ்சம் விடும் போது நடந்துவிட்டு வருவேன் ஆனால் என்ன என்றால் கையில் குடை எடுத்துச் செல்ல வேண்டும். நான் நனைந்தாலும் பரவாயில்லை என் மூன்றாவது செவி நனையக் கூடாதே!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  6. மதுரை ஒரு காலத்தில் தூங்கா நகரம் என்றிருந்தது இப்போது பல நகரங்களும் அப்படித்தான் என்று தோன்றுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. வெட்ட வெளியில் மழைத்தண்ணீர் நடுவே படுத்திருக்கும் படம் மனதை என்னவோ செய்கிறது.

    பதிலளிநீக்கு
  8. 1990 வரை இந்தியன் டாய்லெட் உபயோகித்த நான் வெஸ்டெர்ன் இல்லையென்றால் அந்த பிரயாணமே வேண்டாம் என்று எண்ணும் அளவு மாறியாச்சு. இதை கும்பகோணத்தின் அருகே உள்ள கிராமத்திலிந்து எழுதறேன் (here Western is there), வெயில் வெக்கை பிடிக்கலை எப்படா பெங்களூர் போவோம்னு இருக்கு.

    பதிலளிநீக்கு
  9. வாசகம் அருமை. அந்த மனிதர் படுத்து இருப்பதை பார்த்தவுடன் பாட்டு நினைவுக்கு வந்தது, "பாய் விரித்து படுப்பனும் வாய்விரித்து தூங்குகிறான், பஞ்சணையில் நான் படுத்தும் நெஞ்சில் ஓர் அமைதியில்லை"

    பாயோ, பட்டு மெத்தையோ நிம்மதியாக படுத்தவுடன் தூங்குபவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

    மதுரையில் கார்பிரேஷன் தண்ணீர் குழாயில் ஒரு டியூப் மாட்டி இந்த அடி பம்பு மூலம் அடித்து எடுக்க வேண்டும். எல்லோர் வீடுகளிலும் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  10. நீங்கள் சொல்வது போல இப்போது எல்லா ஊர்களும் தூங்கா நகரம் ஆகி விட்டது .
    இரவு படுக்க செல்ல வெகு நேரம் ஆகிறது.

    பதிலளிநீக்கு
  11. மழைநீரில் படுக்கை பார்க்கும் போது மனதுக்கு சங்கடம்.

    நகரங்கள் தூங்காநகரங்கள் ஆகிக்கொண்டிருக்கின்றன.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....