வெள்ளி, 11 அக்டோபர், 2024

கதம்பம் - நவராத்திரி 2024 - BULKY STOMACH GANAPATHI - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அம்பாள் கொலுவிருக்கும் நவராத்திரி பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******




நவராத்திரி 2024 - 3 அக்டோபர் 2024:








அம்பாளின் அனுக்ரஹத்தால் இந்த வருட கொலு சாத்தியமானது! இனிமையாகவும் துவங்கியுள்ளது. நேற்று காலை 9 மணிக்கு மேல் துவங்கிய கொலுப்படிகள் அமைத்து பொம்மைகளை வைக்கும் பணிகள் நிறைவடைய மாலை 7 மணியாகி விட்டது!


இந்த வருட கொலுவுக்குள்  ஆதிசங்கரர் அருளிய செளந்தர்ய லஹரியை நான் கற்றுக் கொள்ள பாக்யம் இருந்ததால் எல்லோரும் நவராத்திரியில் அதை அன்றாடம் பாராயணம் செய்யச் சொல்லி என் ஆசிரியர் சொன்னதை ஏற்று இன்று முதல் துவங்கியிருக்கிறேன். நல்லதே நடக்கட்டும்! 🙏 🙏


பாராயணத்தை முடித்து விட்டு கடைத்தெருவுக்குச் சென்று வெற்றிலை பாக்கு, பிரசாதத்துக்கு தொன்னை என்று எல்லாவற்றையும் வாங்கி வந்தோம்! வீடு திரும்பியவுடன் இரண்டு வீடுகளில் தாம்பூலமும் வாங்கி கொண்டாச்சு!


மாலை தான் எல்லோர் வீட்டுக்கும் சென்று குங்குமம் கொடுத்து அழைக்க வேண்டும்! இரண்டு நாளாகவே வீட்டு வேலைகளால் எல்லா கிளாஸையும் கட் அடித்து விட்டேன்....🙂 அடுத்த வாரம் யூனிட் டெஸ்ட் இருக்கு..🙂


ஸ்வீட்டோடு ஆரம்பிப்போம்! இன்னிக்கு கேசரி தான் நிவேதனம் செய்யலாம் என்று இருக்கிறேன்!


*******


BULKY STOMACH GANAPATHI - 4 அக்டோபர் 2024:



ஒவ்வொரு பண்டிகைகளும் விரதங்களும் நம்மை பக்குவப்படுத்துவது ஒருபுறம் என்றால் பலதரப்பட்ட மனிதர்களை சந்திக்க வைப்பதன் மூலம் நமக்குள் இருக்கும் சந்தோஷத்தையும் மன நிறைவையும் கூட மீட்டுத் தருகிறது என்று சொல்லலாம்!


நேற்றைய பொழுதில் குடியிருப்பில் உள்ளவர்கள் இல்லத்திற்குச் சென்று குங்குமம் கொடுத்து அழைத்து வந்தேன்! எனக்கு பரிச்சயமே இல்லையெனினும் அங்கே வந்திருந்தவர்கள் சிலரிடமும் என்னை அறிமுகம் செய்து கொண்டு அவர்களையும் கொலுவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தேன்! இப்படித்தானே நம் வட்டமும் விரிவடையும் இல்லையா!


தலைப்பில் உள்ள பாடலை வெகு உற்சாகத்துடன் பாடிய இரு பெண்மணிகள் அப்படி என் அழைப்பை ஏற்று வந்தவர்கள் தான்! கும்பகோணத்திலிருந்து புதிதாக திருவரங்கத்திற்கு வந்திருப்பதாக சொன்னார்கள்! சற்றுநேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு தாம்பூலமும் தந்ததும்…


நான் ஒரு பாட்டு பாடிக்கட்டுமா? என்றார்!


ஆஹா! அதுக்கென்ன தாராளமா பாடுங்களேன்! என்றேன்!


Come O bulky stomach ganapathy! You r the Son of Shiva parvathi!. நீங்களே எழுதினதா? என்று கேட்டதும் இல்லை! யாரோ பாடினது! மனசில பதிஞ்சிடுச்சு! என்றார்! அந்தப் பாட்டில் இருந்த வரிகள் ஒவ்வொன்றும் அர்த்தமுள்ளதாகவும், ரசிக்கும்படியும் இருந்தது!


இந்தப் பாட்டைக் கேட்டதும் என் அம்மாவின் மாமாவான கோபாலன் மாமா தாத்தா தான் சட்டென்று நினைவுக்கு வந்தார்! எங்கள் திருமணத்தன்று மாலை நடைபெற்ற நலுங்கு அல்லது விளையாடல் எனும் நிகழ்வில் வெறும் எண்களை மட்டும் மையமாக வைத்து அன்று தாத்தா எழுதி பாடிய பாடல் ஒன்று மிகவும் அருமையாக இருந்தது!


One two three. ..

Four five six….

Six seven eight…. மாப்பிள்ளை ரொம்ப height…!


இந்த ஒரு வரி மட்டும் தான் இப்போது எனக்கு நினைவிருக்கிறது…:) தாத்தா பாடிய இந்தப் பாடலை பற்றி அவர்களிடமும் பகிர்ந்து கொண்டேன்! 


சமீபத்தில் கோவையில் நடைபெற்ற என் நாத்தனார் மகளின் திருமணத்தில் கூட சம்பந்தி மாமி உள்பட சம்பந்தி வீட்டார் கும்மிப்பாட்டுகள் பலவற்றை நோட்டில் எழுதி வைத்துக் கொண்டு பாடி ஆடினர்! அன்று சுவையான நிகழ்வாக இருந்தது! 


இப்படி பண்டிகைகளும் விழாக்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய பல நினைவுகளை மீட்டுத் தந்து மகிழ்ச்சியை கூட்டும்!


நவராத்திரி இரண்டாம் நாள் நிவேதனமாக பாரம்பரிய அரிசி வெல்லப் புட்டு செய்தேன். அம்பாள் எல்லோரையும் நல்லபடியாக வைத்திருக்கட்டும்.


*******


Golu contest - 5 அக்டோபர் 2024:



நவராத்திரி இரண்டாம் நாளான நேற்றைய பொழுதில் தொடர்ந்து வீட்டில் நிறையவே வேலைகள் இருந்தது! கொஞ்சம் திட்டமிடலுடன் எல்லாவற்றையும் செய்து முடித்தேன்! இதுபோன்ற நேரங்களில் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம்! என்னவரின் ஒத்துழைப்பு தான் இப்போது என் மிகப்பெரிய பலம்! 


காலையில் செளந்தர்யலஹரி பாராயணம் எங்கள் வீட்டில் என்றால் மாலை தோழி ஒருவர் வீட்டில் லலிதா சகஸ்ரநாம பாராயணம்! அன்றாடம் முடியவில்லை என்றாலும் பண்டிகை நேரங்களில் இதுபோன்று அக்கம்பக்கத்தினருடன் இணைந்து பஜனை செய்வது, பக்தி பாடல்கள் பாடுவது, பாராயணம் செய்வது போன்றவற்றில் ஈடுபடலாம்!

 

திருச்சியின் புகழ்பெற்ற நகைக்கடை ஒன்றும் லோக்கல் டிவி சேனலும் இணைந்து நடத்தும் Golu contest க்காக நேற்று எங்கள் இல்லத்துக்கு வந்திருந்தனர்! கொலுவை ஷூட் செய்து கொண்டு என்னிடம்  பேட்டியும் எடுத்தனர்! பதட்டம் ஏதுமின்றி மிகவும் நிதானமாக கேமிராவை ஃபோகஸ் செய்து பேசியதாக எனக்கு தோன்றியது!


சென்ற வருட கொலுவைப் போலவே இந்த வருட கொலுவுக்கும் மகள் ஒரு மண்பாத்திரத்தில் அழகாக பெயிண்ட் செய்து வைத்திருக்கிறாள்! மேலே அன்றாடம் பூக்களால் அலங்கரித்து வைக்கும் போது கொலுவுக்கு மேலும் அழகை கூட்டுகிறது! பண்டிகை என்றால் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் பங்களிப்பும் அதில் முக்கியமல்லவா! நவராத்திரி என்றாலே அதில் Creativityக்கு தனி இடம் உண்டு!


இங்கு திருவரங்கத்தில் வெயில் கொளுத்தி எடுக்கிறது! புழுக்கம் ஒருபுறம் வெயிலின் தாக்கம் மறுபுறம்! நேற்று மாலை தான் இடியுடன் கூடிய மழையை இறைவன் அருளினார்! இன்று இதோ இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் வெயிலின் உக்கிரம்! அடுக்களையிலிருந்து எப்போது வெளியே வருவோம் என்று இருக்கிறது!


இன்று தான் சுண்டல் நிவேதனம் துவங்கலாம் என்று பச்சைப்பயறு ஊறவைத்திருக்கிறேன்!


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

11 அக்டோபர் 2024

9 கருத்துகள்:

  1. அந்த அம்மன் பொம்மையும் கிருஷ்ணன் பொம்மையும் ரொம்ப காமன் போல..  பல வீடுகளில் பார்த்தேன்.  சுண்டல் கதைகள் சுவாரஸ்யம்.  ஸ்ரீரங்கத்தில் கொலு கான்டஸ்ட் ஷூட்டிங் வியப்பு.  நாம் நம் வீட்டில் கொலு வைத்திருப்பதை சொல்லி அழைக்க வேண்டுமா?

    பதிலளிநீக்கு
  2. ஒரு வீட்டில் ஒரு பெண் குழந்தை  'மாயே நீயே என்று ஒரு பாடல் பாடினாள்.  அது அவள் பாட்டு வாத்யார் தானே இயற்றிய பாடல் என்று தெரிந்தது.  நிறைய அப்படி இயற்றியிருக்கிறாராம்.

    பதிலளிநீக்கு
  3. லலிதா ஸஹஸ்ரநாம, சௌந்தர்யலஹரி பாராயணங்கள் சிறப்பு.  முழு ஈடுபாட்டுடன் செய்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  4. கொலு படங்கள் சிறப்பு.

    சுவாரஸ்யமான தகவல்கள் பேட்டி கொடுத்ததற்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. கொலு படங்கள் சூப்பர் ஆதி. பானை, ரோஷினி கலர் செய்ததா? நன்றாக இருக்கிறது.

    பாராயாணங்கள் சூப்பர்.

    அம்மன் அலங்காரம் வசீகரம்!

    கீதா

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை இன்றைய வாசகமும் நன்றாக உள்ளது.

    உங்கள் வீட்டு கொலு அழகாக இருக்கிறது. அம்மன் அலங்காரமும், தங்கள் மகளின் மண்பானை பாத்திர பெயிண்ட் அலங்காரமும் சூப்பராக உள்ளது. மகளுக்கும் உங்களுக்கும் நவராத்திரி சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள். தினமும் தேவி பாராயணங்கள் சொல்வதற்கு பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. //ஒவ்வொரு பண்டிகைகளும் விரதங்களும் நம்மை பக்குவப்படுத்துவது ஒருபுறம் என்றால் பலதரப்பட்ட மனிதர்களை சந்திக்க வைப்பதன் மூலம் நமக்குள் இருக்கும் சந்தோஷத்தையும் மன நிறைவையும் கூட மீட்டுத் தருகிறது என்று சொல்லலாம்!//

    ஆமாம், நீங்கள் சொல்வது உண்மை ஆதி.

    கொலு படங்கள் அழகு. கிருஷ்ணன் கையில் புல்லாங்க்குழல் எங்கே?
    சிறிய புல்லாங்குழல் அழகாய் விற்கிறது வாங்கி அவன் கையில் கொடுங்கள்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....