வெள்ளி, 4 அக்டோபர், 2024

புறாவுக்கு தானியம் - Gகோல் மார்க்கெட் - நடை நல்லது - பகுதி ஆறு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட நவராத்திரி தொடக்கம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


நடை நல்லது வரிசையில் இதோ இன்றைக்கு ஆறாம் பகுதி! என்னதான் முகநூலில் ஒவ்வொரு தினமும் நடை நல்லது என்ற தலைப்பில் இந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டேன் என்றாலும், இங்கே, வலைப்பூவில் பகிர்ந்து கொள்வதில் இருக்கும் மகிழ்ச்சி அங்கே இல்லை என்பது என் எண்ணம்.  எனக்கான சேமிப்பாகவும், முகநூலில் இல்லாதவர்கள் படிக்க வசதியாகவும், நடை நல்லது பதிவுகள் இங்கேயும்!


புறாவுக்கு தானியம் - வயிற்றுப் பிழைப்பு - 1 செப்டம்பர் 2024:


முன்பெல்லாம் நம் ஊரில் புறாக்கள் பார்ப்பது அரிது. காக்கைகளும் குருவிகளும் தான் அதிகம் பார்க்கக் கிடைக்கும். ஆனால் இப்போது பல அடுக்குமாடிக் குடியிருப்புகளின் பிரச்சனைகளில் ஒன்றாகக் கருதப்படும் விஷயம் அதிக அளவில் இருக்கும் புறாக்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றால் உண்டாகும் என்று கருதப்படும் நோய்களும்.  ஆனால் தில்லி போன்ற வடக்கின் பெரு நகரங்களில் பல ஆண்டுகளாகவே புறாக்கள் உண்டு. 


ஒவ்வொரு சாலை சந்திப்பிலும் நூற்றுக்கணக்கில் புறாக்கள் இருப்பதையும் அவற்றுக்கு மனிதர்கள் தானியங்கள், குடிநீர் போன்றவற்றை தருவதையும் பார்க்க முடியும். மும்பையிலும் இந்த காட்சிகளை பார்க்க முடியும். ஒரு சில தமிழ் படங்களிலும் (நாயகன் படத்தில் கூட இப்படி ஒரு காட்சி உண்டு) இப்படியான காட்சிகளை பார்த்து இருக்கலாம். 


இங்கே இப்படியான சாலை சந்திப்புகளில் இருக்கும் புறாக்களுக்கு வீட்டில் இருந்தே தானியங்கள் கொண்டு வருபவர்கள் இருந்தாலும் அதே இடத்தில் தானியங்கள் விற்பனை செய்பவர்களிடம் வாங்கி புறாக்களுக்கு தருவதும் உண்டு. சின்னச் சின்ன தட்டுகளில் சோளம், கம்பு, கேழ்வரகு போன்றவற்றை கலந்தோ தனியாகவோ விற்பனை செய்வார்கள். அளவைப் பொறுத்து விலை பத்து, இருபது என விற்பனை நடக்கும். காலை, மாலை என இரு வேளைகளிலும் இப்படியானவர்களிடம் தானியங்களை வாங்கி புறாக்களுக்கு இடுவார்கள். பல சாலை சந்திப்பிலும் இப்படியான மனிதர்களுக்கு இது ஒரு வாழ்வாதாரம். தானியங்களை வாங்கி புறாக்களுக்கு போடுபவர்களுக்கு ஒரு பக்கம் புண்ணியம் கிடைக்கிறது என்றால் இன்னொரு பக்கம் ஒரு குடும்பத்திற்கு வாழ்வளித்த புண்ணியமும் கிடைக்கிறது. 


சின்னச் சின்ன விஷயங்களிலும் கூட ஏதோ ஒரு விதத்தில் சக மனிதனுக்கு நன்மை உண்டானால் நல்லது தானே. ஒரு சாலை சந்திப்பில் அமர்ந்திருந்த மூதாட்டியிடம் தானியம் வாங்கி புறாக்களுக்கு போட்டுவிட்டு அவரிடம் பேசியதில் சராசரியாக  நாற்பது ஐம்பது தட்டு வரை ஒவ்வொரு நாளும் விற்று விடுவேன் என்று புன்னகையுடன் சொன்னார். எனது தேவைகளை கிடைக்கும் பணத்தில் பூர்த்தி செய்து கொள்ள முடிகிறது. இதை விட வேறென்ன எனக்கு வேண்டும் மகனே என்கிறார் எதிரே இருக்கும் குருத்வாராவின் தங்கக் கோபுரத்தை நோக்கி கைகூப்பியபடி…..


Gகோல் மார்க்கெட் - 2 செப்டம்பர் 2024:




என் வீடு அமைந்திருக்கும் பகுதியின் பெயர் Gகோல் மார்க்கெட் - அதென்ன Gகோல் மார்க்கெட்? Gகோல் என்றால் ஹிந்தியில் வட்ட வடிவம்! வட்ட வடிவமாக அமைக்கப்பட்ட ஒரு மார்க்கெட் தான் இந்த Gகோல் மார்க்கெட்! இந்தப் பகுதியில் இருக்கும் பழமையான கட்டிடங்களில் ஒன்றாக இருந்தது.  1921-ஆம் ஆண்டில் சில கடைகளும்,  சாலை சந்திப்பில் ஒரு வட்ட வடிவ மார்க்கெட்-உம் உருவாக்கப்பட்டதோடு அருகிலேயே வேறு வடிவங்களில் அழகிய கடைத்தெருவும் உருவாக்கப்பட்டது.  தில்லியின் பிரபலமான கன்னாட் ப்ளேஸ் கட்டுவதற்கு முன்னதாகவே ஒரு மாதிரியாக அமைக்கப்பட்ட கடைத்தெருவாகவும் இது இருக்கிறது.  மத்திய அரசு அலுவலகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பழைய தில்லியிலிருந்து புது தில்லிக்கு மாற்றப்பட்ட சமயத்தில் இங்கே அரசு அலுவலர்களுக்கான குடியிருப்புகள் கட்டியதோடு இந்த கடைத்தெருவும் கட்டப்பட்டது.  கொஞ்சம் கொஞ்சமாக இந்த கட்டிடம் வலுவிழந்து போனதோடு மாநகராட்சியின் அனுமதியின்றி பல மாறுதல்களும் இங்கே இருந்த கடைக்காரர்கள் செய்ய, மொத்தமாக அதன் பழமையையும் பொலிவையும் இழந்தது இந்த Gகோல் மார்க்கெட்.


ஒவ்வொரு நாளும் என் வீட்டிலிருந்து அலுவலகம் செல்லும்போதும், வீடு திரும்பும்போதும், நடைப்பயணங்களின் போதும் இந்தப் பகுதியைக் கடந்தே செல்ல வேண்டும். தில்லி வந்ததிலிருந்தே இந்த இடத்தினை பார்த்துக் கொண்டு இருக்கிறேன். ”எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்” என்கிற நகைச்சுவை காட்சியினைப் போலவே கொஞ்சம் கொஞ்சமாக அதன் பொலிவை இழந்து இன்றைக்கு இருக்கும் நிலையைப் பார்க்கும் போது வேதனை தான் மிஞ்சுகிறது.  ஒரு கட்டத்தில் இங்கே இருந்த கடைகளுக்கான வட்ட வடிவ கட்டிடம் முழுவதுமே பயன்பாட்டுக்கு ஏற்றதல்ல என்பதோடு ஆபத்தான நிலையில் இருக்கிறது என அங்கே இருந்த கடைகள் வேறு பகுதிகளுக்கு மாற்றினார்கள்.  மாநகராட்சி இங்கே இருக்கும் கட்டிடத்தினை அகற்றி அங்கே ஒரு அருங்காட்சியகம் அமைக்க ஏற்பாடுகள் செய்தபோது, அங்கே இருந்த கடைக்காரர்கள் வழக்கு தாக்கல் செய்ய, பல காலமாக தகரங்கள் கொண்டு மூடி வைக்கப்பட்டு இருக்கின்றது. சமீபத்தில் தான் வழக்கு அரசு தரப்பிற்கு சாதகமாக முடிவு ஆகியிருக்கிறது. 


தற்போது அங்கே இருந்த கட்டிடம் இடிப்பதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. புதியதாக என்ன கட்டிடம் உருவாகப் போகிறது, பழமை பாதுகாக்கப்படுமா இல்லை மொத்தமாக வேறு வடிவில் ஏதேனும் ஒரு கட்டிடம் எழும்புமா என்ப்தையெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  ஆனாலும், தில்லியின் பழமையான கட்டிடங்களில் ஒன்றாக இருந்த Gகோல் மார்க்கெட் இனி இல்லை என ஆகப் போகிறது என்பது வேதனையான விஷயமாகவே எனக்குத் தோன்றுகிறது. இணையத்திலிருந்து எடுத்த பழைய நிழற்படம் ஒன்றும் சமீபத்தில் நடைப்பயணத்தின் போது எடுத்த நிழற்படம் ஒன்றும் சேர்த்திருக்கிறேன்.  கொஞ்சம் கொஞ்சமாக இடிபட்டுக் கொண்டிருக்கும் கட்டிடத்தைப் பார்க்கும் போது கொஞ்சம் வேதனையாகவே இருக்கிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை. 


மாற்றங்கள் ஒன்று மட்டுமே மாறாதது என்று மனதைத் தேற்றிக் கொண்டாலும், சில மாற்றங்கள் மனதுக்கு உகந்ததாக இல்லை என்பதும் நிதர்சனம்.


மேலும் நடப்போம்…… மேலும் பேசுவோம்……


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

4 அக்டோபர் 2024





 

25 கருத்துகள்:

  1. சென்னையில் எங்கள் ஏரியாவில் காக்கைகளை விட  புறாக்கள் இருக்கின்றன.  முன்னர் தளத்திலும் எழுதி இருந்தேன்.  காக்கைக்கு சோறு வைத்தால் புறா வந்து சாப்பிட்டு விடுகிறது!  காலையில் கிழக்குப் பக்கத்திலிருந்து மேற்குப் பக்கமாக கூட்டம் கூட்டமாகப் பறக்கும்.  மாலை அதே போலவே திரும்பும்.

    காக்கைகள் பித்ருக்கள் சரி....  புறாக்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சத்ருக்கள்? ஹாஹா... புறாக்களின் பிரச்சனை, (காக்காவும்தான்) க்க்கா போய்விடுவது, சிறு சிறு இறகுகள் (நுரையீரலுக்குக் கெடுதி), அதன் சப்தமைம் கூடாது என்கிறார்கள். நான் பால்கனி மற்றும் யுடிலிடி பகுதியில் ஸ்பைக்ஸ் போட்டதனால் எதுவும் வருவதில்லை. பலர் நெட் போடுகிறார்கள்.

      நீக்கு
    2. காக்கைகள் பித்ருக்கள், புறா ? ஹாஹா… நல்ல கேள்வி… அதற்கு நெல்லையில் பதிலும் ரைமிங் ஆக இருக்கிறது! முன்பு தமிழகத்தில் இத்தனை புறாக்கள் பார்த்ததில்லை. இப்போது அதிக அளவில் இருக்கிறது. எங்களது குடியிருப்பு வளாகத்திலும் புறா பிரச்சனை உண்டு ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
    3. புறாக்கள் மூலம் பல தொல்லைகள் இருப்பதை பலரும் தற்போது சொல்லி வருகிறார்கள். நெட் போடுவது, spikes வைப்பது என என்னென்ன முயற்சிகள் எடுத்தாலும் அவற்றின் வருகையை முற்றிலும் தடுக்க முடிவதில்லை நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. எல்லாவற்றையும் பழமையைக் காக்கிறேன் என்று வைத்துக் கொண்டால் முன்னேற்றமே இல்லாமல் போய்விடுமோ....  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாவற்றையும் பழமை என்று பாதுகாக்க வேண்டியதில்லை. அதற்கென சில நடைமுறைகள், வழிமுறைகள் வைத்துக்கொள்ளலாம். உதாரணத்திற்கு 100 வருடத்திற்கும் மேலான ஒரு சிறப்பு, நினைவு கட்டிடம் காட்டுகிறார்கள், வித்தியாசமான வடிவமைப்பில் இருக்கிறது என்றால் அதனை போற்றி பாதுகாக்கலாம். முன்னேற்றத்திற்கும் பழமையை பாதுகாப்பதற்கும் சம்பந்தம் இல்லை என்றே தோன்றுகிறது ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. நம் உயிருக்கு நமது உடலும் ஒரு வாடகைதானே..!

    இங்கும் நாங்கள் வந்ததிலிருந்து புறாக்களை யும், கழுகுகளையுந்தான் நிறைய பார்க்கிறேன். காக்கைகளை எப்போதும் பார்க்க இயலவில்லை. தி. லி, சென்னை, மதுரையில் கழுகுகளை, புறாக்களை இப்படி அருகில் நம் தலைக்கு மேல் பறந்து பார்த்ததில்லை.

    இங்கும் புறாக்களுக்கு உணவளிக்கிறார்கள். அதுவும் அந்த நேரத்திற்காக எங்கிருந்தோ கூட்டமாக வந்து விடுகிறது.

    /தானியங்களை வாங்கி புறாக்களுக்கு போடுபவர்களுக்கு ஒரு பக்கம் புண்ணியம் கிடைக்கிறது என்றால் இன்னொரு பக்கம் ஒரு குடும்பத்திற்கு வாழ்வளித்த புண்ணியமும் கிடைக்கிறது. /

    உண்மை. பறவைகளுக்கு தானம் செய்வதோடு மட்டுமின்றி, ஒரு குடும்பத்திற்கும் உதவி செய்கிறோம். அழகாக சொன்னீர்கள். அந்த மூதாட்டியின் நம்பிக்கையும் போற்றத்தக்கது.

    நடை தொடருங்கள். பல நல்ல விஷயங்களும் நம்முடன் தொடரட்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. நல்லதை மட்டும் எடுத்துக் கொள்வோம், தீயதை விட்டுவிடுவோம். புறாக்களுக்கு உணவு அளிப்பதால் ஒரு குடும்பமும் பிழைக்கிறது என்பதால் அது நல்ல விஷயம் தானே.

      பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. புறாக்களுக்கு உணவு... பஹ்ரைனில் பல்வேறு பகுதிகளில் 5சாலையின் சந்திப்பு போன்று) புறாக்களுக்கு உணவிடும் பகுதி உண்டு. இதற்காகவே நான் மார்கெட்டில் 20 கிலோ மூட்டையாக தானியங்கள் வாங்கிவந்மு, நடைப்பயிற்சியின்போது அந்த இடத்தில் போடுவேன். ஒரு மூட்டை, ஒரு மாத்த்திற்கு வரும். சிலர் துவரை போன்ற தானியங்களும் போடுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புறாக்களுக்கு பொது இடங்கள், சாலை சந்திப்புகளில் உணவு அழிப்பது வடக்கில் பல இடங்களில் இருக்கிறது. நீங்களும் இப்படி உணவு அளித்திருப்பதை அறிந்து மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. இந்த நாட்டிலும் இப்பொழுது புறாக்கள் நிறைய இருக்கிறது ஜி.

    அரசுதான் இப்படி இறக்கி விட்டு இருக்கிறது.

    கட்டிடங்கள் அசுத்தமாகிறது மற்றபடி மக்கள் ஆர்வமாக உணவு போட்டு செல்கின்றார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தற்போது தாங்கள் வசிக்கும் அரபு நாட்டிலும் புறாக்கள் இருப்பது அறிந்தேன். பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே கண்டதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. சமீபத்தில் 'பைரி' என்றொரு திரைப்படம் பார்க்க நேர்ந்தது. நாகர்கோவிலின் ஒரு பகுதியான அருகுவிளை என்ற ஊரில் நடக்கும் புறாப் பந்தயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. தீவிர புறாப் பந்தய நாட்டத்தால் ஒரு இளைஞன் வாழ்க்கையை தொலைப்பதை காட்டியிருந்தார்கள்.

    (பைரி என்றால் புறாக்களை வேட்டையாடும் ஒரு ராஜாளி பறவை இனம்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப் படத்தைப் பார்த்தபிறகு, பத்மநாபன் அண்ணாச்சிக்கு, ஊரில் கோழிகள் பண்ணுகிற அலப்பரைகள் நினைவுக்கு வந்து எழுதணும்னு தோணலையா?

      நீக்கு
    2. நீங்கள் பார்த்த படம் குறித்த கருத்துரைக்கு நன்றி பத்மநாபன் அண்ணாச்சி. நானும் பார்க்க முடிந்தால் பார்க்கிறேன். பலர் இப்படித்தான் எதோ ஒன்றில் அதீத ஈடுபாடு கொண்டபின் அதற்காகவே தங்களது வாழ்க்கையை இழந்து விடுகிறார்கள்.

      தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
    3. நானும் சொல்லிக் கொண்டே இருக்கிறேன் நெல்லைத் தமிழன். ஆனால் எதோ ஒரு காரணம் சொல்லிக்கொண்டே இருக்கிறார் அவர். புதிதாக பூனை வேறு வளர்க்கிறார் 🙂 அதனால் நேரமே இல்லை என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

      தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. நேற்று கருத்து போடணும் என்று நினைத்து விட்டுப் போனது, வெங்கட்ஜி. பல காரணங்களால்.

    இங்கும் புறாக்களுக்கு சாலைகளில் உணவு அளிக்கிறார்கள். இங்கு எங்கள் வீட்டுப் பகுதியில் அவ்வளவாக வருவதில்லை. சாலை மரங்களில் இருக்கும். அவ்வப்போது அங்கும் இங்கும் பறந்து கொண்டே இருக்கும் காலையிலும் மாலையிலும். அங்குதான் உணவு அளிக்கிறார்கள் என்பதால் மொத்தக்கூட்டமும் அங்கேயே செட்டில்ட்!!! நான் நடைப்பயிற்சி செய்யும் பகுதிகள் அல்லது கடைகளுக்குச் செல்லும் பகுதிகள் என்று எப்பகுதிகளிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் அத்தனை இல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவாயில்லை. பல சமயங்களில் என்னாலும் பதிவுலகம் பக்கமே வர முடிவதில்லை. புறாக்களுக்கு உணவளிப்பது பல இடங்களில் இப்போது ஆரம்பித்து இருக்கிறது கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. பழமையான கட்டிடங்கள் இடிக்கப்படாமல் அதைப் பாதுகாத்துக் கொண்டே வேறு கட்டிடங்கள் கட்டலாம்தான் இப்போது இல்லாத தொழில்நுட்ப வசதிகளா என்ன? பழமையை அழகாகப் பாதுகாக்கலாம். ஆனால் என்னவோ அதைச் செய்யாமல் அதை இடித்து வேறு வடிவங்களாக மாற்றுகிறார்கள்.

    ஒரு சிலர் தங்களின் மூதாதையர் வாழ்ந்த வீட்டினை மிக அழகாகப் பராமரித்து தங்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்/.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழமையை பாதுகாப்பதுடன் புதுமையும் செய்து கொள்ளலாம் கீதா ஜி. இங்கேயும் சில வீடுகளில் அப்படித்தான் இருக்கிறது. வெளிப்புறத்தில் அப்படியே இருந்தாலும் உள்ளுக்குள் நிறைய மாற்றங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  9. ஒரு முறை தில்லியில் குதுப்மினார் சென்றுவிட்டு மெட்ரோ ரயில் ஸ்டேஷனுக்கு வரும் வழியில் ஒரு ஆட்டோகாரர் எங்களிடம் அனுமதி வாங்கிக் கொண்டு ரோடருகில் ஒரு இடத்தில் புறா தானியங்கள் வாங்கி அந்தப் புறாக்களுக்கு இட்டுக் கொடுத்து அது முடியும் வரை அதைப் பார்த்துக் கொண்டிருந்தோம். ஆங்காங்கே இப்படிப் புறாக்களுக்குத தானியம் உணவளித்தல் இருக்கிறது. இனி மெதுவாக கேரளத்தில் எங்கள் பாகங்களிலும் வருமாக இருக்கலாம்.

    பழைய இடங்களைப் பாதுகாத்தால் வரும் தலைமுறையினருக்குச் சில நல்ல தகவல்கள் சென்றடையும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேரளத்திலும் வரலாம்… கொஞ்சம் கொஞ்சமாக தென்னிந்தியாவிலும் இந்தப் பழக்கம் வர ஆரம்பித்து இருக்கிறது துளசிதரன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  11. வாசகம் அருமை.
    புறாக்களுக்கு முன்பு மசூதிகளில் போய் தானியங்களை வைத்து வருவார்கள். கோவில்களிலும் நிறைய இருக்கும்.
    மலேஷியாவில் பத்துமலை முருகன் கோவிலில் அதற்கு உணவு கொண்டு வந்து போடும் பழக்கம் உள்ளது.


    இங்கு உணவு வைத்து கொண்டு இருந்தோம். இப்போது பறவைகளுக்கு உணவு வைக்காதீர்கள் என்று சொல்கிறார்கள். (இங்கு)
    புறாக்களை கூட்டமாய் பார்ப்பதும் , அவை சட்டென்று பறப்பதை பார்ப்பதும் அழகு.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....