வியாழன், 3 அக்டோபர், 2024

நவராத்திரி தொடக்கம் - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட மாப்பிள்ளை அழைப்பு - நகர் வலம் மூன்று பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


நவராத்திரி இன்றைக்கு குதூகலத்துடன் ஆரம்பிக்கிறது.  சில வருடங்களாகவே எங்கள் இல்லத்தில் நவராத்திரி கொண்டாட்டங்கள் - கொலு, சுண்டல்/பரிசுப் பொருட்கள் விநியோகம், விருந்தினர் வருகை என மகிழ்ச்சியுடன் நடந்து வருகிறது.  ஒவ்வொரு வருடமும் நவராத்திரி சமயத்தில் எங்கள் வீட்டு கொலு நிகழ்வுகள் குறித்து எழுதுவதும், படங்கள் பகிர்ந்து கொள்வதும் தொடர்கிறது. இந்த வருடம் நவராத்திரி தொடங்கும் இந்த நாளில் நம் பக்கத்தில் திருமதி விஜி வெங்கடேஷ் நவராத்திரி குறித்த ஒரு பதிவு வெளியிடுகிறார் - ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.


******


நவராத்திரி :


பெண்களையும், பெண் குழந்தைகளையும் தேவி வடிவமாகவே பூஜிக்கும் தெய்வீக ராத்திரி;


கடவுள் முதல் காவலன் வரை, யானை முதல்  செட்டி பானை வரை, IT பார்க் முதல் ஜூராசிக் பார்க் வரை பொம்மைகள் அணிவகுக்கும் அற்புத ராத்திரி;


பாவாடை சட்டை,மணிமாலை, ஜிமிக்கி,பின்னல்,பூவோடு பூக்களாய் குழந்தைகள் மலரும் ராத்திரி;


ஜரிகைப்புடவை சரசரக்க பெண்கள்  தாம்பூலம் தருவதும் பெறுவதுமான மங்கல ராத்திரி;


அம்மன் மேல் பெண்களும் எதன் மேலும் குழந்தைகளும் இனிய பாட்டிசைக்கும் சங்கீத ராத்திரி;


பூஜை, நைவேத்தியம், கோலம் முதல் பரிசுப் பொருள், புது பொம்மை, அலங்காரம் வரை பெருமைகள்  அலைமோதும் அலப்பறை ராத்திரி;


சுண்டல் முதல் இனிப்பு வரை காபி முதல் ரஸ்னா வரை பெரு, சிறு கை மாறும் ரச(ருசிகர)மான ராத்திரி;


கிண்டல் முதல்  நையாண்டி வரை, புன் சிரிப்பு முதல் குபீர் சிரிப்பு வரை அண்டம் அதிரும் கலகல ராத்திரி;


ஆண்களை உள் அறையில் அமர வைத்து,  பெண்களை ஹால் முதல் வாசல் வரை அழைத்துப் போற்றும் அற்புத ராத்திரி;


பக்தி முதல் ஜாஸ் (Jazz) வரை கோலாட்டம் முதல் கும்மி வரை இசையும் அசைவும் தெருவெங்கும் நிறையும் கொண்டாட்ட ராத்திரி;


அனைத்தையும்  பார்த்தும் கேட்டும் அதிசயித்தும் ஆனந்தித்தும் அனுபவித்தும் பரவசமாய் அருளை அள்ளிச் சொரியும் அம்பாள்  ராத்திரி; அன்பால் அண்டமெல்லாம் காக்கும் அபிராமி ராத்திரி; அவள் புன்னகையால் புவனமெல்லாம் பூக்கும் புனித ராத்திரி! ஆன்மீக ராத்திரி; ஆனந்த ராத்திரி!


நவராத்திரி நல்வாழ்த்துக்கள்💐💐🙏🏻🙏🏻


மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

3 அக்டோபர் 2024


10 கருத்துகள்:

  1. நவராத்திரி பற்றிய வர்ணனை அருமை.  இந்த வருடம் முதல் எங்கள் வீட்டிலும் நவராத்திரி கொலு கோலாகலத் துவக்கம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நவராத்திரி குறித்த விஜி அவர்களின் வர்ணனை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம். ஆஹா… (மரு)மகள் வந்த பிறகு நவராத்திரி கொலுவும் வைக்க ஆரம்பித்து இருப்பதற்கு வாழ்த்துகள். நல்ல விஷயம் தொடரட்டும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. அற்புத நவராத்ரி விஜி 👏👏

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி உஷா ஜி.

      நீக்கு
  3. நவதுர்கையின் கடாக்க்ஷம் பெருக 🙏

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி உஷா ஜி.

      நீக்கு
  4. நவராத்திரி வர்ணனை அருமை. நவராத்திரியே கொண்டாட்டம்தான். கோலாகலம் தான். எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

    நவராத்திரி ஆன்மீகத்தோடு, socialization, கற்பனை, கைத்திறன், பாட்டுத்திறன் என்று பல கலைகளையும் வளர்க்கும் மனதிற்கு இதம் தரும் கொண்டாட்டம்.

    மக்கள் மட்டும் யார் வீட்டில் என்ன தருகிறார்கள் நாம் என்ன கொடுக்க வேண்டும் என்ற சிந்தனைகள் ஒப்பீடுகள் இல்லாமல் கொண்டாடினால் நல்லது.

    என் தங்கை தன் வீட்டருகில் உள்ள குழந்தைகளைப் பாட்டு, நடனம் என்று கோயில் செய்வதற்குத் தயார்ப்படுத்தியிருக்கிறாள். என்னிடம் அதற்கு ஒரு முன்னுரை பேச வேண்டும் என்ன பேசலாம் என்று கேட்டாள் அப்போது நான் சொன்னது.

    சரஸ்வதி லஷ்மி, துர்கை. - கல்வி, செல்வம், வீரம். படிப்பறிவு கல்வி யறிவு அதையும் தாண்டி நல்ல சிந்திக்கும் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். (சரஸ்வதி). சிந்திக்கும் திறன் இல்லை என்றால் சரியான முடிவுகள் எடுப்பதில் சிரமம்
    ஏற்படும்.
    செல்வம் என்பது தேவைக்கு அது நிறைய இருந்தாலும் கஷ்டம் குறைவாக இருந்தாலும் மனம் கவலையில் செல்லும். அதைவிட நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற சிந்தனையை வளர்த்தல் (லக்ஷ்மி)

    இந்த இரண்டும் கிடைக்கப்பெற்றால் மனோதைரியம், in secured feeling இல்லாமல் வந்துவிடும் நம்மைக் காத்துக் கொள்ளும் தைரியம். இப்போதைய குழந்தைகளுக்கு நல்ல சிந்திக்கும் திறனுடன், உடல் நலனைக் கெடுக்கும் உணவை சாப்பிட்டுக் கெடுத்துக் கொள்ளாமல் மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால் மனோ தைரியம் வந்துவிடும் என்பதைச் சொல்வது போல் தான் இந்த மூன்றும் என்று சொல்லலாம் என்றே ந்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நவராத்திரி குறித்த தங்களது எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டது சிறப்பு கீதா ஜி. உண்மை தான் - பலரும் இதனை ஒரு போட்டியாக காண்பது சரியல்ல. கொண்டாட்டம் தேவை தான் ஆனால் ஒப்பீடு தேவையில்லை என்பதே எனது கருத்தும். தங்களது தங்கை பேசுவதற்கான முன்னுரையாக நீங்கள் எழுதியது நன்றாக இருக்கிறது. பாராட்டுகள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. நவராத்திரி பற்றிய கவிதை வரிகள் போன்ற உங்கள் வரிகள் வர்ணனை மிக அருமை

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விஜி அவர்கள் எழுதிய வரிகள் உங்களுக்கும் பிடித்திருந்ததால் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....