திங்கள், 7 அக்டோபர், 2024

ஆடி அடங்கும் வாழ்க்கையடா - சுமைப் பொதிகள் - நடை நல்லது - பகுதி ஏழு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட சுரங்கப் பாதையில் யோகா ஓவியங்கள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


நடை நல்லது வரிசையில் இதோ இன்றைக்கு ஏழாம் பகுதி! பதிவுகளுக்கு முகநூலிலும் இங்கேயும் நீங்கள் அனைவரும் தரும் ஆதரவிற்கு மனம் நிறைந்த நன்றி. என்னதான் முகநூலில் ஒவ்வொரு தினமும் நடை நல்லது என்ற தலைப்பில் இந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டேன் என்றாலும், இங்கே, வலைப்பூவில் பகிர்ந்து கொள்வதில் இருக்கும் மகிழ்ச்சி அங்கே இல்லை என்பது என் எண்ணம்.  எனக்கான சேமிப்பாகவும், முகநூலில் இல்லாதவர்கள் படிக்க வசதியாகவும், நடை நல்லது பதிவுகள் இங்கேயும்!


ஆடி அடங்கும் வாழ்க்கையடா - வயிற்றுப் பிழைப்பு - 3 செப்டம்பர் 2024:



ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா என்ற பாடல் - அவ்வப்போது கேட்பதுண்டு.  என்னதான் நாம் பெரிய பிஸ்தா என்று ஆட்டம் போட்டாலும் கடைசியில் கிடைப்பது ஆறடி நிலம் மட்டுமே! ஒரு சிலருக்கு ஆறடி நிலமும் கிடையாது! ஒரு பானை சாம்பல் மட்டுமே மிச்சமாக இருக்கப் போகிறது - அதுவும் ஏதோ ஒரு நீர் நிலையில் கரைந்துபோக, நம்மைப் பற்றிய நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக காற்றில் கலந்து மறைந்து போகப் போகிறது! ஆனாலும் நாம் இருக்கும் வரை ஆடும் ஆட்டம் என்ன மாதிரியான ஆட்டம்! அதிலும் சிலரது ஆட்டம் பார்க்கும்போதே ஒரு பானை சாம்பல் எனக்கு நினைவுக்கு வந்து போகும்!  


எங்கள் வீட்டின் அருகே ஒரு காவல் நிலையம்.  அந்த காவல் நிலையம் கொஞ்சம் பிரபலமான ஒன்று. பல பெரிய புள்ளிகளை, வருமானத்திற்கு அதிகமாக பணம் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்தால் அங்கே தான் கொண்டு வருவார்கள்.  அப்படியானவர்களை அழைத்து வரும்போதும், அவர்களது உறவினர்கள் வரும் High End வாகனங்களை பார்க்கும்போதே பிரமிப்பாக இருக்கும்.  சாதாரணர்களால் அந்த வாகனங்களின் பெயர்களைக் கூட சரியாக உச்சரிக்க முடியாது! எனது அலுவலக நண்பர் ஒருவர் ”chசார் chசல்லே வாலி Gகாடி” என்பார் - அதாவது முகப்பில் நான்கு சக்கர வடிவங்கள் ஒன்றுக்குள் ஒன்றாக மாட்டி இருக்குமே அந்த வாகனம் - ஔடி (Audi) என்று உச்சரிக்க வேண்டுமே அந்த வாகனம் தான்! 


அதே காவல் நிலையத்தின் வாயிலில் ஒரு வாகனம் - பல ஆண்டுகளாக அங்கேயே கிடக்கிறது! இதுவரை அதற்கு எந்த வித விமோசனமும் கிடைக்கவில்லை. ஏதோ ஒரு விபத்தில் முற்றிலுமாக எரிந்து வெற்றுடலாக - வெறும் இரும்பாக மாறிய அந்த வாகனத்தினை Tow செய்து காவல் நிலையத்தின் வாயிலில் விட்டு விட்டார்கள்.  அங்கேயே பல வருடங்களாகக் கேட்பாரின்றி கிடக்கின்றது.  பயன்பட்ட போது எப்படியெல்லாம் அதன் உரிமையாளரை ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு அழைத்துச் செல்ல பயன்பட்டு இருக்கும், அதனை எப்படியெல்லாம் பயன்படுத்தி இருப்பார்கள் என்றெல்லாம் யோசனை தோன்றும் - எரிந்து போன அந்த பழைய வாகனத்தை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும்! இதுவும் ஆடி அடங்கிய ஒரு வாகனம் தானே - நமக்கும் ஒரு நாள் இப்படியான நிலை தானே என்று தோன்றும்.  கூடவே அந்த வாகனம் எரிந்த போது அதில் பயணித்தவர்கள் என்ன ஆனார்களோ என்ற படபடப்பும் வந்து போகும்!


ஆடாதடா ஆடாதடா மனிதா என்ற பாடலும் நினைவுக்கு வந்து போகும்! எது தான் இந்த உலகத்தில் நிலை!


சுமைப் பொதிகள் - 4 செப்டம்பர் 2024:




இன்றைக்கு காலை நடைப்பயணத்தின் போது எடுத்த இரண்டு படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்…… இரண்டும் சொல்லும் செய்தி என்னவாக இருக்கும்…… எனக்குத் தோன்றியதை நான் எழுதுகிறேன். உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களை நீங்கள் எழுதுங்களேன்.   


முதல் படம் - வயிற்றுப் பிழைப்பு…. இழுத்துச் செல்வது மெத்தைகளுக்கான ஃபோம் - அதிக எடை இருக்காது என்று நாம் நினைத்தாலும் இந்தப் பெரியவர் வண்டியை இழுக்க கஷ்டப்படுவதிலிருந்தே நாம் நினைப்பது தவறென்று புரியும்.  இப்படியான சுமைகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வது தான் இவருக்கு சோறு போடும் தொழில்…… அதனால் இது தேவையான சுமை…… 


இரண்டாவது படம் - படத்தினைப் பார்த்தால் தனது வாழ்க்கையையே இந்த வண்டியில் தான் ஓட்டுகிறார் என்று தெரிகிறது. மொத்த உடமைகளையும் இப்படி வண்டியில் கட்டி வைத்துக் கொண்டு நாடோடி போல திரிபவரோ என்று தோன்றினாலும் இப்படியும் சுமக்கலாமா? என்ற கேள்வியும் மனதுக்குள் எழுகிறது. இரு சக்கர வாகனம் ஒன்றில் எத்தனை சுமைகள்?  இதில் பலதும் தேவையற்றவை என்றே எனது மனம் சொல்கிறது!  நாமும் இந்த வண்டியைப் போல தேவையற்ற சுமைகளை தொடர்ந்து சுமந்து கொண்டு புலம்பித் திரிகிறோம். தேவையற்ற சுமைகளை, அதனால் எந்தப் பலனும் இல்லை என்று தெரிந்தும் சுமந்து திரிகிறோம்.


மேலும் நடப்போம்…… மேலும் பேசுவோம்……


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

7 அக்டோபர் 2024


16 கருத்துகள்:

  1. இன்றைய வாசகம் சூப்பர். மிகவும் உண்மை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. ஒருமுறை கடற்கரைக்குச் சென்றபோது அங்கு ஓரமாய் இதேபோல நின்றிருந்த ஒரு காரை படம் எடுத்து நானும் இதே போல Feel செய்திருந்தேன்.  அது நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டது கண்டு மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. அவர்கள் பிசிகலாய் சுமைகள் சுமக்கிறார்கள்,.  பலபேர் மனதளவில் பல  தேவையற்ற சுமைகளையே சுமந்து கொண்டு திரிகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டது கண்டு மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை.

    நம்மை கவனிக்க நேரமில்லை என்று நினைத்தே நம் மன சுமைகளை அதிகப்படுத்திக் கொள்கிறோம். உண்மை.

    நடைப்பயிற்சியில் தங்கள் பார்வையில் பட்ட விஷயங்களின் எண்ணங்கள் நன்று. அந்த காரின் நிலை கண்டு மனதுக்குள் பதற்றம் வருகிறது. காரில் பயணித்தவர்கள் நலமுடன் இருக்க வேண்டும்.

    "ஆடி அடங்கும் வாழ்க்கையடா" என்ற பாடல் எனக்கும் மனதில் அடிக்கடி வரும். உண்மை தெரிந்தும் ஆசைகளின் விளைவாய், பந்தம் பாசம் போற்றவைகளை கட்டுப்படுத்த இயலவில்லை.

    சுமைகள் படங்களைப் பற்றி நீங்கள் சொன்னது போலத்தான் நானும் யோசிக்கிறேன். அனைவரும் நலமுடன் இருக்கட்டும்.

    தங்களின் நடை நிறைய எண்ணங்களுடன் தொடரட்டும், அதன் மூலம் நாங்களும் பல எண்ணங்களை பகிர்ந்து கொள்வோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டது கண்டு மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. மனித வாழ்வின் நிதர்சனங்கள். அழகிய எழுத்து நடை. சங்கரலிங்கம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டது கண்டு மகிழ்ச்சி சங்கரலிங்கம் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. முதல் படத்தில் உள்ளது போன்ற ஒரு கார் இங்கு ஒரு கடை அருகில் (workshop) பார்த்தேன். ஏதோ ஒரு படத்தில் இப்படியான காரில் நடைபாதையருகில் நாடோடிகள் குடும்பம் நடத்துவது போன்ற காட்சி வரும். நான் இப்படியான காரைப் பார்த்ததும் எப்படியிருந்த நான் இப்படி ஆனேன்...உழைத்து உழைத்துத் தேய்ந்து போனாலும் கூடப் பரவாயில்லை இப்படி அடிபட்டு இப்படி ஆகவேண்டுமா என்று அந்தக் கார் நினைப்பது போல என் மனதில் எண்ணங்கள் ஓடும்.

    மனிதர்களும் அப்படித்தானே நினைப்பதுண்டு. உழைத்து தேய்ந்து உயிர் நீப்பதற்கும் அல்ப ஆயுசில் இப்படி விபத்துகளால், உடல் வேதனை, மருத்துவச் செலவு என்று மரணம் அடைவதற்கும் வித்தியாசம் உண்டே.

    மற்ற இரு படங்களும் இப்படத்தோடு தொடர்புபடுத்திப் பார்க்கும் எண்ணமும் வருகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டது கண்டு மகிழ்ச்சி கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. வாழ்வில் யாருக்குத்தான் சுமை இல்லை! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சுமை. உடலால் சுமப்பதை விட மனதில் ஏறி உட்கார்ந்து அழுத்தும் சுமைதான் நம் உயிரையே வாங்கிவிடும்!

    முதல் படத்தில் foam மெத்தை பாரம் இல்லை என்று நினைக்கமுடியாது ஜி. அதுவும் மிகவும் பாரமாகத்தான் இருக்கும். நகர்த்துவதற்கு எளிதாக இருக்கலாம் ஆனால் தூக்குவது இப்படி அடுக்கி வைத்து வண்டி ஓட்டுவது அதுவும் சைக்கிள் சிரமம்தான்.

    உழைப்பாளி அவருக்கு இது ஜீவனம்.

    இரண்டாவது படம் அதில் உள்ளே என்ன இருக்கு என்று தெரியவில்லையே ஜி. நடைபாதையில் வாழ்க்கை என்றால் குளிர், வெயில் எல்லாம் சமாளிக்க உதவும் கூடாரத் துணிகள், ஷீட்டுகள், என்று இருக்கலாம். ஆனால் ஒரு வேளை பழைய துணிகள் பொருட்கள் எடுத்துச் சென்று விற்கும் உழைப்பாளியாக இருக்குமோ என்ற சந்தேகவும் வருகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டது கண்டு மகிழ்ச்சி கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. வாசகம் அருமை.
    நடைபயணத்தில் பார்த்த காட்சிகள் கொடுத்த சிந்தனைகள் சிந்திக்க வைக்கிறது.
    எல்லாமே வயிற்றுக்கு தாண்டா இல்லாத கொடுமைதாண்டா பாடல் தான் நினைவுக்கு வருது பாரம் இழுக்கும் முதியவரை பார்க்கும் போது.

    பதிலளிநீக்கு
  9. இது நல்லாருக்கில்ல? வெறுமனே நடப்பது மட்டுமின்றி அதன்போது அவதானிக்கும் விடயங்களை வலைத்தளத்திலும் பகிர்ந்து கொள்வது கூடுதல் நன்மை தரும் விடயம். சில வாகனங்கள் பயன்பாட்டுக்கு உதவாமல் போகின்றன. சில வாகனங்கள் பயன்பாட்டுக்கு உதவாமல் ஆக்கப்படுகின்றன. எல்லாம் அதிகாரிகளுக்கே வெளிச்சம்!

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....